Wednesday 26 December 2012


சங்கராச்சாரியார்

 கைது குறித்துக்

கவலை கொள்ளும் இந்துப் பாசிசம்.

-கற்சுறா



1.சங்கராச்சாரியார் கைது விபரம்.


காஞ்சி மடத்தின் 69வது மடாதிபதியான ஜெயேந்திர சரசுவதி சங்கராச்சாரியாரை தமிழகத்தின் அதிமுக அரசு சங்கரராமன் கொலைவழக்கில் நவம்பர்11ந் திகதி கைது செய்து வேலூர் சிறையில் அடைத்துள்ளது. காஞ்சி மடத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் நிர்வாகியான சங்கராராமன் கடந்த செப்படம்பர் மாதம் 3ந் திகதி கோயிலில் வைத்துக் கொலை செய்யப்பட்டிருந்தார். இக்கொலையை முன்நின்று நாடாத்தி முடித்த முதல் குற்றவாளியாக காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்.

கி.மு. 482 இல் ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்ட காமகோடி மடம்  ஜெயேந்திரருக்கு முன் காஞ்சிப்பெரியவர் என்று அழைக்கப்படும் சிறீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்பவரது  தலைமையில் நடைபெற்று வந்துகொண்டிருந்தது. 1994 ஜனவரியில் அவரின் இறப்பிற்குப் பின் தற்போதைய ஜெயேந்திரர் என்பவரே மடத்தின் பொறுப்பை ஏற்று நிர்வகித்து வந்தார்.

கொலைசெய்யப்பட்ட சங்கரராமன் அவர்கள் சீறீ சந்திரசேகரேந்திரரிடம் உதவியாளராக இருந்தவர். அவரிடம் மிகுந்த பற்று வைத்திருந்தவர். மடத்தில் ஜெயேந்திரரின் நடவடிக்கைகள் மடத்திற்கு எதிரான நிலையிலிருந்ததை அவர் பலதடவை சுட்டிக்காட்டி வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சங்கரராமனின் மீது அதிருப்தி கொண்ட ஜெயேந்திரர் தமிழகத்தின் தாதாக்களுடன் தொடர்புவைத்து இக்கொலையை செய்துள்ளார் என அரசதரப்பு விவாதங்கள் சொல்கின்றன. தொடர்ச்சியான குற்ற விசாரணையில் மேலும் பல கொலைகளுக்கும் வன்முறைகளுக்கும் சங்கராச்சாரியார் அவர்களுக்கும் தொடர்புள்ளதாக தெரியவந்துள்ளது என்று பொலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையில் சங்கராச்சாரியார் அவர்கள் தனக்கு ஜாமீன் கேட்டு இரண்டு முறை வழக்குத் தாக்குதல் செய்துள்ளார். ஆனால் கோட் அதனை நிராகரித்துள்ளது. பொலீஸ் தரப்பு மேலும் சில நாட்கள் சங்கராச்சாரியாரை தமது காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டபோது அதையும் கோட் மறுத்துள்ளது.

இதற்கிடையில் பொலீஸ் தரப்பு சங்கராச்சாரியார் அவர்களுக்கும் இக்கொலைக்கும் சம்பந்தமுள்ளதற்கு தம்மிடம் போதுமான ஆதாரம் உள்ளதாகச் சொல்கிறது. இதற்கிடையில் இந்தியத் திரைப்பட போர்முலாவில் உள்ளதுபோல் போலீசிடம் அப்ரூவராகிய சங்கராச்சாரியருடன் கொலைத் தொடர்பில் ஈடுபட்ட அப்பு என்ற தாதாவின் மிகநெருங்கிய உதவியாளனான கதிரவன் என்கிற குற்றவாளி தான் சொன்ன கருத்து பொய் என்றும் மறுகணம் அவை உண்மை என்பதுமாக  மாறி மாறி வாக்குமூலம் கொடுத்துக் கொண்டிருக்க, கொலையில் ஈடுபட்டதாக சில பொய்ச் சாட்சிகள் சரண் அடைந்து வழக்கை திசைதிருப்ப முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. இந்தக் கூட்டுச்சதியையே காரணங்காட்டி அரசதரப்பு ஜெயேந்திரர் மீதான ஜாமீனை மூன்று தடவை மறுத்துள்ளது.  இதற்கிடையில் கொலைக் குற்றவாளியாகக் கைதாகியிருக்கும் சங்கராச்சாரியார் தனது பூசை முறைகளை நேரந்தவறாது செய்து கொள்ள   வேலூரிலும் சரி பொலீஸ் காவலிலும் சரி வசதிபண்ணிக் கொடுக்கிறது அரசு. மறுபக்கம் சங்கராச்சாரியார் மீதான குற்றவழக்கில் மேலும் யாரைக் கைது செய்யலாம் என்று தோண்டித் திரிகிறது

போலீஸ்படை. பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள், கொலை மிரட்டல்கள் என்று ஜெயேந்திரர் மீது குற்றப்பத்திரிகைத்தாக்கல் அதிகரித்த வண்ணமேயுள்ளன. ஆனால் சங்கராச்சாரியரை கைது செய்தது இந்தியாவுக்கு ஏற்பட்ட அவமானம், இந்துக்களுக்கு ஏற்பட்ட அவமானம் என்கிறது இந்துத்துவக் கட்சிகளான பாரதிய ஜனதாக் கட்சி மற்றும் வி~;வ இந்து பரிசத் ஆகியன. சங்கராச்சாரியாரை விடுதலை செய் என்று வடக்கில் அத்வானி, வாஜ்பேய், ஆர். வெங்கட்ரமணன் என்று இந்திய முன்னால் தலைவர்கள் எல்லாம் உண்ணாவிரதமும் வழி மறிப்புப் போராட்டம் நடாத்துகிறார்கள். சங்கராச்சாரியாருக்காக வழக்காட முன்வந்திருப்பவர் இந்தியப் பெரும் கிரிமினல் லோயர் ராம்ஜெத்மலானி அவர்கள்( இவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளுக்காக வழக்காடியவர்)
இவைதான் சங்கராச்சாரியார் கைது தொடர்பாக நம்முன் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள்.

வெளிக்கிளம்பும் இந்து மதவெறி




இந்த நிகழ்வுகளிலிருந்து நாம் இங்கே கவனம் குவிக்கும் விடையம் என்னவென்றால். சங்கராச்சாரியார் கைதுசெய்யப்பட்ட சம்பவங்களுக்குள் இந்துமதவாதம் என்ற மிகப்பெரிய நச்சுக்கொடி எவ்வளவு தூரம் தன் அலகை விரித்துக் கொள்கிறது என்பதுதான்.அதனைத் தெரிந்து கொள்வதன் மூலம் காஞ்சி மடாதிபதி என்கிற ஒற்றை மனிதனுக்குள் இந்தியாவின் மதவாத அரசியல் எப்படி ஒழிந்து கொண்டிருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.

சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டவுடன் இந்திய இந்து மதவாத அமைப்புக்களான ஆர்.எஸ். எஸ்., பா.ஜ.க., வி~;வ இந்து பரி~த், தமிழ்நாடு பிராமணர் சங்கம் போன்ற அமைப்புக்கள் கோபங்கொண்டெழுந்து தமது கண்டனங்களை வெளியிட்டன. காஞ்சி மடாதிபதி கைது ஒரு தனிப்பட்ட இந்து மதத் தலைவருக்கு நேர்ந்த அவமானமாகக் கருதாமல் இந்து மதத்தின் மீதே தொடுக்கப்பட்ட தாக்குதலாகக் கருதுகிறோம் என்றார்கள். அவரைச் சிறையில் அடைத்து ஒரு குற்றவாளி போல் பார்க்காது சிறையில் அடைக்குமுன் அவரது அந்தஸ்து குடும்பப் பின்னணி,கல்வித் தகுதி பற்றிப் பார்க்க வேண்டும் என்றார்கள். இதற்கு மேல் வாஜ்பேயி, அத்வானி( முன்னாள் பிரதமர்கள்) முரளி மனோகர் ஜோஷி தலைமையில் மூன்று நாட்கள் உண்ணா விரதம்- மறியல் போராட்டம்  நடாத்தினார்கள். விஷ்வ இந்துபரிஷத் சார்பில் டில்லியில் சாமியார்கள் பேரணிநடைபெற்றது. இதுவடக்கில்.

தமிழகத்தில் இருக்கும் ஆர் எஸ்.எஸ். ப.ஜ.க. அமைப்புக்கள் சங்கராச்சாரியார் கைதான தினத்தைக் கருப்பு தினமாக அறிவித்தார்கள். அவ்வமைப்புக்கள், முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களுக்கெதிரான கோசங்களுடனும் துவேசச் சொற்களுடனும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டன. இந்து மதத்தின் ஆணிவேரை அசைக்த் தொடங்குகிறது திராவிடக்கட்சிகள் என்றார்கள். சங்கராச்சாரியாரை விடுதலை செய்யாவிட்டால் நாடுதழுவிய மனிதச்சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்தார்கள். அதற்கு இந்துமதத்தவரை ஆதரவு தரும்படி அறிக்கை விட்டார்கள்.
விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக்சிங்கால் டிசம்பர் 1ந் திகதிவேலூர் சிறையில் ஜெயேந்திரரைச் சந்தித்தார். இந்துமதத்தில் சந்நியாசிகளுக்கு சோதனை ஏற்படுவது புதிதல்ல என்றும், ஏற்கனவே மாத்மாகாந்தி கொலை வழக்கில் ஆர்.எஸ்.எஸ். முக்கிய தலைவரைக் கைது செய்தார்கள். அன்று முதல் இன்றுரை சோதனை தொடர்கிறது என்றார்.டிசம்பர் 6ந்திகதி உமாபாரதி வேலூரில் ஜெயேந்திரரைச் சந்தித்தார்.
தமிழ்நாடு பிராமணசங்கத் தலைவர் நாராயணன் இது இந்துக்களுக்கு ஏற்பட்ட அவமானம் காஞ்சி மடத்தின் உன்னத நிலைக்கு ஏற்பட்ட இழிவு என்று கூறி தாம் வீதிக்கு வந்து போராடத்தயார் என்று கோபம் கொண்டார்.
இங்கே நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும் சங்கராச்சரியார் கைது குறித்து இந்தியாவிலோ அல்லது உலகிலோ எவ்வித மனித உரிமைகள் அமைப்புக்களோ பொதுநல அமைப்புக்களோ எவ்வித மறுப்பையும் வெளியிடவி;ல்லை. வெறுமனே இந்து மதவாதிகளின் பாசிசக் குரல்கள் தான் சங்கராச்சாரியார் கைதுமீது தமது எதிர்ப்பைக் காட்டி நிற்கின்றன.
இவ்வாறு சங்கராச்சாரியார் கைது தொடர்பாக தமது ஒட்டுமொத்த எதிர்ப்பைக் காட்டிவரும் இந்த அமைப்புக்களின் அரசியல் பின்னணி எவை என்பதையும் இந்த அமைப்பக்கள் சார்ந்து பேசவரும் நபர்கள் யார் என்பதையும் நாம் இனம் காணவேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பு இந்தியா முழுவதும் இந்து மதத்திற்குரியது. இந்து மதம் என்பதே இந்தியமதம். இந்து என்பதே இந்தியா என்ற ஒற்றைத் தேசியத்தைக் கட்டியெழுப்பி ஏனைய மதத்தினரை விலக்கி, இந்துத்துவ துவேச நினைவுகளுடன் 1925இல் கட்டி எழுப்ப்பட்ட ஒரு பாசிச அமைப்பு ஆகும். ஆர்.எஸ்.எஸ். இன் ஸ்தாபகரான பி.எஸ். மூஞ்சே  இத்தாலி சென்று முசோலினியைச் சந்தித்து அதன் பாசிசக் கூறுகளை அப்படியே உள்வாங்கிக் கொண்டு வந்து அதன் போக்கிலேயே ஆர்.எஸ்.எஸ். என்பதை அமைப்பாக்கியவர். கோட்சே என்பவன் ஆர்.எஸ்.எஸ் இன் வழிகாட்டலிலேயே காந்தியைச் சுட்டவன். இந்த அமைப்பிலிருந்து உருக்கி வார்க்ப்பட்ட செல்லப்பிள்ளை அமைப்புத்தான் இன்றைய பா.ஜ.க என்பது. அதன் வழிபாட்டில் உதிர்த்தெழுந்தவர்கள்தான் அத்வானியும் வாஜ்பேயும் முரளி மனோகர் ஜோஷியும்.  இவர்கள்தானே பாபர்மசூதி இடிக்கப்பட்ட போது கடப்பாரையுடன் போய் நேரடிக் கரசேவை செய்தவர்கள்.

இப்படிப்பட்ட இந்து மதவாதிகளினதும் இந்து மதவாதக் கட்சிகள் மீதானதும் அக்றை சங்கராச்சாரியாரின் விடுதலை எனில், இவ்விடுதலை மூலம் இவர்கள் அடைய நினைப்பது எதனை? இவர்களது அக்கறை எமக்குமுன்  எதைக்  கொண்டுவந்து நிறுத்தும்?

இந்துக்களுக்கும் இந்து அல்லாதவர்களுக்கும் இடையில் இங்கு ஒரு பாரதப்போர் நடாத்தப்படவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அறிக்கை விட்டுக்கொண்டிருந்த கூட்டங்களில் வாஜ்பேயி நேரிடையாகப் பங்குபற்றினார்.

நான் ஒரு ஆர்.எஸ்.எஸ். உறுப்பினன் என்பதில் பெருமையடைகிறேன் நாளை நான் பிரதமராக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால் ஒரு ஆர்.எஸ்.எஸ். உறுப்பினாக இருக்கும் உரிமையை யாரும் பறித்துவிட முடியாது. என்று அறிக்கைவிட்டவர் வாஜ்பேயி.

ப.ஜ.க.வுக்கும் ஆர்.எஸ்.எஸ்.க்கும் இடையிலான உறவு வரலாற்று ரீதியானது. உடைக்க இயலாதது. அறக்கோட்பாடுகளின் அடிப்படையிலானது என்று அத்வானி முழங்கினார்.

முழு இந்தியாவுக்கென ஒற்றை இந்துமத மொழி ஒன்றை உருவாக்க வேண்டும். வேத உபநிடதங்களை கல்வித்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று சொல்லிவரும் தீவிர இந்துத்துவவாதியான  முரளி மனோகர் ஜோசிக்கு (இவர் ஜெயேந்திரரை வேலூர் சிறையில் போய்ப் பார்த்து வந்தவர்) ப.ஜ.க. கூட்டமைப்பில் கல்வியமைச்சர் பதவிகொடுக்கப்பட்டது.

இந்த அமைப்புக்களின் வழிவந்த மேற்சொன்ன நபர்கள்தான் இந்தியாவை இந்துப் பாசிசமாக உருவக்க முயற்சி செய்துகொண்டிருப்பவர்கள். இவர்கள் அரசியலில் இருப்பதும் தலைமை தாங்குவதும்  இந்து மதவெறியை ஊட்டி வளர்த்து இந்துப் பாசிசத்தை இந்தியா முழுவதும் பரப்பவேண்டும் என்பதற்காகவே தான்.

இதன் அடிப்படையில்தான் அவர்களுக்கு சங்கராச்சாரியரின் கைது கோபம் கொள்ள வைத்திருக்கிறது. சங்கராச்சாரியார் கைது அவர்களை அவமானங்கொள்ளச் செய்திருக்கிறது. இந்துக்களுக்கு செய்த துரோகம் என்று எண்ணவைத்திருக்கிறது. ஆனால் சங்கராச்சாரியார் என்ற இந்து மடாதிபதித் தலைவர் செய்த கொலை அவர்களை எவ்விதக் கவலையும் கொள்ள வைக்கவில்லை. அவமானம் கொள்ள வைக்கவில்லை. வெக்கப்பட வைக்கவில்லை. அதுபற்றி அவர்கள் பேசாதிருப்பது என்பது, மாறாக கொலைகளும் பாலியல் வன்முறைகளும் இந்து மதத்துடன் நெருக்கியதாகவே அவர்களை உணரவைக்கிறது. இந்து மதத்தின் மூலம் அவர்களுக்கு சங்கராச்சாரியாரின் குற்றச் செயற்பாடுகள் நியாயத்தை வழங்குவதாக  இருக்கிறது.

சரி இவ்வளவு பாசிசக் கூறுகளுடனும் வன்முறை மனோநிலையுடனும் இருக்கின்ற இந்து மதவாதிகள் சங்கராச்சாரியாரின் கைது குறித்து பலத்த கண்டனங்களை வெளியிடுகிறார்கள், உண்ணாவிரதம் இருக்கிறார்கள் எனில் இந்த சங்கராச்சாரியார் யார்? இவரின் வேலைத்திட்டம் என்ன இந்த வன்முறையாளர்களுக்கும் சங்ஙராச்சாரியாருக்குமான உறவு எங்கே தொடங்குகிறது? என்று நாம் யோசிக்க வேண்டும். கடவுள் , மடம் , ஆதீனம் என்ற பெயர்களில் படர்ந்து வரும் இந்துமதம் என்ற நச்சுக் கொடி வேரோடு பிடுங்கப்படவேண்டும். அதற்கு சங்கராச்சாரியாரின் கைது பெரிய துணையாயிருக்கும்.

இந்து மதத்தின் பெயரில் நடைபெற்ற அழிவுகளும் கொலைகளும் எமக்கு வரலாற்றில் பாடமாய் முன்நிற்கும் போது சங்கராச்சாரியார் இன்று கொலைக்குற்றத்தில் கைதாகியதின் பின்னர் இந்துப்பாசிசவாதிகளின் மேற்படி கூற்றுக்கள் இந்து மதத்தின் கொடு முகத்தை இன்னொரு முறை நமக்குக் காட்டி நம்மீது அச்சமூட்டி நிற்கின்றன. ஆனாலும் தமிழ்நாட்டு மக்களிடம் சங்கராச்சாரியரின் கைது குறித்து  ஓரளவு தெளிவான பார்வை இருப்பதும், கைதுக்கு ஆதரவுக்குரல் இருப்பதும்  மிகவும் கவனிக்கப்பட வேண்டியது. இது பெரியாரின் சிந்தனைகள் மக்களிடத்தில் ஏற்படுத்தியிருக்கும் - பாதிப்பின் விளைவாகும்.

-அறிதுயில்

No comments:

Post a Comment