-கற்சுறா-




தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம் சாதியக் கலவரத்தால் தீக்கிரையாகியிருக்கிறது. கலப்புத் திருமணத்தால் கொதித்தெழுந்த வன்னியச் சாதி வெறியர்கள்  ஆதிதிராவிடர்களின் இலட்சக்கணக்கான சொத்துக்களையும் அழித்து இருப்பிடமில்லாமல் ஆயிரக்கணக்கான மக்களை வாழ வழியற்றவர்களாக்கித் தெருவில் விட்டிருக்கிறார்கள். இது நடைபெற்றது 1800களில் அல்ல. இன்று. அதாவது 2012களில். வன்னிய சாதிப் பெண்களைக் கலப்புத் திருமணம் செய்பவர்களை வெட்டுங்கடா… வன்னியசங்கத் தலைவர் நான் சொல்கிறேன் என்று காடுவெட்டிக்குரு என்கிற வன்னியசங்கத் தலைவன் கடந்தமாதம் அறைகூவியிருக்கிறான். அதன் பிரதிபலிப்பு இன்று ஒரு ஊரையே நாசம் பண்ணியிருக்கிறது.  

சாதிவிடுதலைக்காகப் போராடிய அம்பேத்கரும், பூலேயும் ,பெரியாரும், ரெட்டைமலை சீனிவாசனும் வாழ்ந்த பூமியில் சாதி அறிக்கைவடிவில் அரங்கேறுகிறது. கொங்கு கவுண்டர்கள் தமது சாதிக்குள் வேறுசாதியார் திருமணம் செய்யக்கூடாது என்று அறிக்கை தயரித்திருக்கிறார்கள். இன்று வன்னியர் கலப்புத்திருமணத்திற்கு எதிராக மாநாடு போடுகிறார்கள் – ஊரைக் கொழுத்துகிறார்கள். இவர்களின் தலைவரான பாட்டாளி மக்கள் கட்சித் தலைவரான ராமதாசுக்கு விடுதலைச்சிறுத்தைக் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அம்பேத்கார் விருது வழங்குகிறார்.

ராமதாசோ ஈழத்தில் வன்னியில் யுத்தம் நடந்து கொண்டிருக்கும் போது வன்னிமக்கள் அழிவில் அகப்பட்டிருக்கும்போது ஐயோ! அங்கே அழிவதெல்லாம் தன்னுடைய சாதிக்காரர் என்று ஈழத்தைப் பற்றி அறியாமலேயே முட்டாள்தனமான சாதிவெறி பேசி ஓலமிட்டார். இதையெல்லாம் பார்த்துக்கொண்டும் அதற்குள்ளே வாழ்ந்து கொண்டும் நாமெல்லோருமே தமிழர்கள் என்றும், அடித்து நொருக்குவேன் என்றும் கர்ச்சிக்கிறார் தன்னைச் செந்தமிழன் எனச்சொல்லும் சீமான். சாதியக் கொலைகளை தமதுகாலடிகளில் நடாத்திக்கொண்டு ஈழத்தமிழர்களுக்காக கண்ணீர் சிந்துவதாகச் சொல்லும் மானங்கெட்டவர்கள் இந்தத் தமிழக அரசியல்வாதிகள். ஈழத்தமிழர்களது அக்கறைக்கு இவர்களுக்கு பணமும் பதவியுமன்றி வேறு எதுவும் காரணமாக ஒருபோதும் இருந்ததில்லை.

தமிழகத்தின் சாதிக்கொடுமையின் கோரங்களைக் கொண்டதல்ல நமது ஈழத்துச் சூழல் என்றாலும் சாதிச் சண்டைகளும் சாதியப் பாகுபாடுகளும் கடந்த யுத்தச் சூழலாலும் கூட அழிந்து விடவில்லை. தக்க முறையில் அவை பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறதை பல சம்பவங்கள் நினைவுபடுத்தி நிற்கின்றன.
கடந்த ஏப்பிரல் மாதம் செல்வநாயகம் அவர்களது நினைவு தினத்தில் ரெலோ எம்பியான சிவாஜிலிங்கம் அவர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ராஜதுரை அவர்களை நோக்கி அடே சக்கிலிய நாயே என்று இழிவுபடுத்தியது ஒன்றும் சாதாரணமான விடையமல்ல. மேலே சொன்ன தமிழகத்துச் சாதிவெறி அரசியல்வாதிகளுக்கு நிகரானதே இதுவும். தமது அரசியல் முரண்பாடுகளுக்கு சாதியை முன்வைத்து இழிவுபடுத்தும் இந்த அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் பாடுபடுபவர்கள் என்று சொல்வது மிகக் கொடுமையானது. ஒருபுறம் சக்கிலியா பறையா என்று சாதி சொல்வதும் மறுபுறம் நாம் தமிழர்கள் என்பதும்…, நாம் எல்லோரும் ஒன்று என்பதும் மகா முட்டாள்தனமல்லவா? வெளிப்படையான முரண்பாடல்லவா?
கடந்த ஏப்பிரல் 7ந்திகதி வீரகேசரியில் வந்த அறிவித்தல் ஒன்று சைவ வேளாளர் சமூகநல சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டத்தின் அறிவுறுத்தலைத் தாங்கி வந்திருக்கிறது. சைவ வேளாளர்களது நலன் காக்கவும் அவர்களது சந்ததியின் நலனுக்காகவும் ஆக்கபூர்வமான வேலைகளைச் செய்ய உறுதி பூண்டுள்ளதாகச் சொல்லும் அந்த அறிவித்தல் தமது அமைப்பு  1982ம் ஆண்டுக்குப் பின் 30வருடங்களாகச் செயற்படாமல் இருந்தது எனவும் சொல்லி தற்போது புனரமைக்கப்படுகிறது எனவும் சொல்கிறது.


வீரகேசரிப் பத்திரிகை ஒரு சாதி வெறிகொண்ட பத்திரிகை அதற்கு இவற்றைப் பிரசுரிப்பதில் எந்த அவமானமும் இருப்பதில்லை. ஒருபுறம் தமிழத்தேசியம் பேசும் பத்திரிகை மறுபுறம் சாதி விளம்பரங்களை வெளியிடும். யாழ் இந்து உயர்குல வேளாள மாப்பிள்ளை தேடும் விளம்பரங்களால் அது ஒரு சொட்டுக் கவலையும் கொள்வதில்லை. அதற்குத் தமிழ்த் தேசியப்பத்திரிகை என்று அடையாளம் வேறு.

மறுபுறம் விடுதலைப்புலிகளது தலைவரை கேவலப்படுத்தவேண்டும் என்பதற்கு அவர் சார்ந்த சாதியை முன்நிறுத்தித் திட்டுவதும் படங்களை வெட்டி ஒட்டுவதும் மிக அதிகமாகவே இணையத்தளங்களில் நடைபெறுகிறது. இதுதான் அப்பட்டமான சாதி வெறி.

இப்போது நான் கேட்கிறேன் தமிழர்கள் என்றும் தமிழ் அடையாளம் என்றும் நாம் தமிழர் என்றும் ஒற்றையாக எங்களை அடையாளப்படுத்திவிட முடியுமா? நாம் பேசும் தமிழ்த் தேசியம் என்பதும் தமிழ் விடுதலை எனபதும் ஒரு அர்த்தத்தைக் குறிக்கிறதா? சாதியால் பிளவுபட்டு வெறிகொண்டு அலையும் ஒரு கூட்டம் வெறுமனே அதுபேசும் மொழியால் ஒன்றுபட்டுவிடமுடியுமா? நாம் பேசுகின்ற மொழி எப்படி எங்களுக்குள் வெறியாக வளர்ந்தது? இப்படி ஆயிரம் கேள்விகளை நாம் எங்களுக்குள் கேட்டுக்கொள்ளவேண்டும். தமிழகத்துச் சாதி வெறி அரசியல்வாதிகளிலிருந்து நாம் அந்நியமாகவேண்டும்.

தருமபுரிச் சாதிவெறியாட்டத்தினைப்பற்றி எழுதும் போது தமிழ்ச்சமூகத்தினைத் துண்டு துண்டாக உடைத்தால் மட்டுமே சாதி ஒழிப்புச் சாத்தியம் என்று என்னுடைய நண்பர் ஒருவர் எழுதினார் மிகவும் நூறுவீதம் சரியான பார்வை அது. சமூகத்தை மட்டுமல்ல தமிழையும் சிதைக்கவேண்டும் என்று நான் சொன்னேன்.  நமது மொழி சாதி காப்பாற்றும் மொழி. சாதியால் கட்டுண்ட மொழியைச் சிதைக்காமல் சாதி ஒழியவேண்டும் என்பதில் எந்த ஞாயமும் இல்லை. சாதியத்தை உள்ளகப் பாதுகாத்துக் கொண்டு, மூடி வளர்ந்த நமது தேசியத்தில் ஆசையை வைத்துக் கொண்டு சாதி ஒழிப்புக் குறித்து ஆராய்வதில் அர்த்தமில்லை.   நமது மொழி வன்மம் கொண்ட மொழி. கடவாய் எச்சில் வழிய வெறிகொண்டு அலையும் மொழி. அது அழிந்தே போகவேண்டும். அதனால் முதல் அழிவது சாதியே.

விடுதலைப் போராட்டம் வீறுகொண்டெழுந்த காலத்தில் சாதி பற்றிப் பேசுவது தவறு என்றும் தமிழ்த்தேசியப் போராட்ட காலங்களில் யாரும் சாதி பார்ப்பதில்லை, சாதி ஒழிந்து விட்டது. என்றும் விடுதலைப்புலிகள் சாதியை ஒழித்துவிட்டார்கள் என்றும் எத்தனையோ பேர் எவ்வளவோ பேசினார்கள். அந்தக்காலத்தில்தான் என்.கே ரகுநாதன் அவர்கள் துப்பாக்கி நிழலில் சாதி மறைந்து கிடக்கிறது என்று கூறினார்.

ஈழவிடுதலைபோராட்டத்தின் நடுப்பகுதிவரை மிகக் கவனமாக ஒவ்வொரு தேசிய விடுதலைப் போராட்ட இயக்கங்களும் சாதியைக் கையாண்டன. தமது கொள்கைப் பிரிப்பிற்கேற்ப அவர்கள் செயற்பாடுகள் இருந்தன. அதனை அவர்கள் தமது தலமை செயற்படுத்தியதோ இல்லையோ முடிந்தவரை கீழ்மட்ட உறுப்பினர்கள் கற்றுக் கொள்ளும் விதமாக செயற்பாடுகள் இருந்தன. இதில் விடுதலைப்புலிகள் எப்போதும் மாறுபட்டேயிருந்தனர்.

மற்றய இயக்கங்களைஅவர்கள் அழிக்கும் வரையில் அல்லது உள்வாங்கும் வரையில் சமூகத்தின் பிற விடையங்களில் அவர்கள் தமது பிற்போக்குத்தனத்தை முடிந்தவரை காப்பாற்றினார்கள். முஸ்லீம் இனங்களாக இருந்தாலும் சரி கிழக்கிலங்கை மக்களாக இருந்தாலும் சரி. அல்லது மலையக மக்கள் குறித்த அக்கறையாக இருந்தாலும் சரி அவர்கள் இரண்டாம் தரப் பிரஜைகள் என்ற நிலையையும் மீறி தம்முடன் இருப்பதற்கு தகுதியற்றவர்களாக அவர்களை வகுத்துக் கொண்டார்கள். அதிலும் சிங்களமக்களை தமக்கு முற்றிலும் எதிரானவர்களாகச் சித்தரித்து அழித்துமுடிக்கவேண்டியவர்கள் என்ற நாசிய சிந்தனையை அவர்கள் உருவாக்கியிருந்தார்கள்.





இதில் எந்தவிதத்திலும் மாறுபட்ட மதிப்பீட்டையும் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது கொண்டிருக்கவில்லை. அதற்குச் சமாந்தரமாகவே அவர்கள் செயற்பாடும் சிந்தனையும் இருந்தது. அவர்கள் மற்றய இயக்கங்களை அழித்ததற்குச் சொன்ன காரணங்களே உது பள்ளரின் இயக்கம், நளவரின் இயக்கம், உவங்கள் கள்ளர்கள் அழிக்கப்படவேண்டியவங்கள் என்பதே.  தமக்கு ஆட்பலம் தேவைப்படும் போதே விடுதலைப்புலிகள் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் மற்றய பிரதேச இளைஞர்கள் மீதும் அக்கறைகொள்ளத்தொடங்கினார்கள்.

யாழ்ப்பாணத்தவர்களும் சாதியப்படிநிலையில் உயர்ந்த்தவர்களாக இருந்தவர்களும் மெதுவாகக் கழன்றுகொண்டிருந்த காலம் அது. அப்போதுகூட சாதியம் குறித்த மிக கறாரான பார்வை விடுதலைப்புலி;களிடம் இருந்ததில்லை. செயற்பாடுகள் இருந்ததில்லை. வெறுமனே ஆட்பலத்தை எடுக்க முன்வைத்த மிக அடிமட்டமான கதையாடல்களே அவர்களிடமிருந்தன. இந்தச் செயற்பாடுகளையே இன்று பலர் ஈவெரா பெரியாரின் செயற்பாடுகளுடனும் அம்பேத்காரின் சட்டக்கோவையுடனும் ஒப்பிடுகிறார்கள்.

கருத்தியலில் மாற்றமற்ற இராணுவத்திற்கான வெறும் உடற்பலம் மட்டுமே கருத்திற்கொண்ட மிகக் கீழ்தரமான சிந்தனையை மனித இனத்தின் மேன்மையை முன்னிறுத்திய பகுத்தறிவுகொண்ட பெரியார்  கருத்தியலுடன் ஒப்பிடுவது வெறும் கயமைத்தனம்.

ஒருகாலத்தில் கடவுள் இல்லை என்கிறவனையெல்லாம் வெட்டு வெட்டு என்று தொண்டரடிப்பொடியாரும் கடவுள் இல்லை என்கிறவன் பெண்டாட்டியோடு நான் படுக்கணும் என்று திருஞானசம்பந்தனும் பாடினாங்களாம். இவங்களே அப்போதைய மதக்கொலைகள் நடைபெறுவதற்கு முக்கிய காரணங்களாக இருந்தாங்கள். இன்று சாதிக்கொலைகளுக்கு இந்தச் சாதி வெறி அரசியல்வாதிகளே காரணமாக இருக்கிறான்கள்.

உண்மையில் ஈழவிடுதலைப்போரும் சாதியமும் என்ற மிகப்பெரிய உரையாடல் ஒன்றை நாம் தொடங்கவேண்டும். ஈழவிடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றியவர்களும் கடந்த 30வருடங்களில் போராட்டம் என்பதை உன்னிப்பாகக் கவனித்தவர்களும் அதற்குள் சாதி எப்படிக் காப்பாற்றப்பட்டு வந்தது என்பதை எழுதியாகவேண்டும்.