Wednesday 11 January 2017

முன்நூறில்1½


 

உலோகத்தின் எழுத்துக்கள்.2



கற்சுறா






வியாக்கியானங்களைக் கைவிட்ட அல்லது கவனிக்கத் தவறிய தருணத்திலிருந்துதான் நான் எனது ஆட்டத்தை ஆரம்பித்தேன். இருக்கைகளில் இருந்து எழுந்து ஓடிவிடாதபடி கண்களை நோக்கிக் குவிந்திருக்கும்   பிரம்பின் நுனியை கண்களால் தட்டியபோதே வியாக்கி யானம் தொடங்கியது.

நினைத்துக் கொள்.

சல்லிக் கற்களால் இறுக்கப்பட்டிருந்த தெருவின் நடு வாசலை நீ அப்போது நெருங்கியிருந்தாய். மிக அதிகமாக உனக்கு எதையும் நான் ஞாபகப்படுத்தப் போவதில்லை. தெருவின் தொடக்கத்தில் கூட நின்றிருக்க வேண்டிய தேவையற்ற காலத்தில் நடு வாசல் தெருவில் நீ ஏன் நின்றாய்?


இப்போதும் நினைவுகள் மங்கிச் செல்லும் வயதில்லை உனக்கு.
இது கேள்வியல்ல.


எனது கண்களை நீ அப்போது கவனித்திருக்கமாட்டாய். மடியில் கிடத்தியிருக்கும் கொலையுண்ட யேசுவின் உடலை நோக்கிய மாதாவின் கண்கள் அவை. 

கருணையற்ற காலத்தின் பழியை உனது கால்களில் கண்டேன். கண்களே சொல்லாத கதையை உனது கால்கள் சொல்லியது எனக்கு.


நான் கண்டேன்.


பரிவற்ற உதறலை உனது கால்களில் இருந்து அறிந்தே நான் எனது வியாக்கியானத்தை  அப்போது நிறுத்தினேன்.


பழையகுடியிருப்பிற்கு மட்டுமல்ல வன்னியின் அத்தனை குடியிருப்பையும் சென்றடையும் வழிகளைவிடவும் அதற்குள் நுழைய தனித்தே ஒரு காட்டுவழி இருப்பதையும் நீங்கள் அறிவீர்கள். 

இராணுவத்தின் வளைப்புக்களில் இருந்து குடிபெயர நாங்கள் நழுவும் பாதைகளாய் இருந்தன அவை. பெருவழிபிடித்து அங்கே வந்தவர்கள் யாருமே காட்டுவழிப் பாதையினை ஒருபோதும் அறிந்திலர். 

நீங்கள் அறிவீர்கள்.


வகிடு பிரித்து நடுவாசல் தெருவில் நின்று நீயேதான் அவர்களுக்குக் களம் பிரித்தாய். இரக்கமேயற்ற அந்த இரவு குறித்து நினைவை மறைத்துக் கொள்ள முடியவில்லை. 

இன்னமும் உனது கால்கள் என்கனவுகளில் தெரிகிறது.

வெறுமனே உருளைக்கிழங்குச் சோற்றுடன் சோறு தின்றுகொண்டிருந்த கோப்பைக்குள்ளேயே அவர்களது தலைகளையே நீ அறுத்துப் புதைத்த இரவு அது.  

அவர்களது இறுதிக் கணங்களின் வார்த்தைகளை நீங்கள் கேட்டிருக்க ஞாயமில்லை. இரந்து நின்ற உடல்களின் வார்த்தைகள் உருக்குலைந்தவை. வெறும் வார்த்தைகளையே கடவுளாய் எண்ணிய தருணங்களை மிதித்துப் புதைத்தீர்.

பழையகுடியிருப்பிலிருந்து பிரேதங்களை எடுத்துச் செல்ல யாருக்கும் மனமில்லை.

அவர்களின் இறுதிவார்த்தைகளையாவது நீ சொல்.



வார்தையே கடவுள்.