Saturday 9 April 2022

சிவசேகரம் கவிதைகள்

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்.

கவிஞர் சிவசேகரம் அவர்களது கவிதைகள் குறித்துப் பேச நாம் அனைவரும் கூடியிருப்பதில் மகிழ்ச்சி.

கவிதைகள் குறித்துப் பேசுதல் என்பது இன்றைய சூழலில் மிகவும் பரிதாபகரமான ஒரு செயற்பாடு என்றே நினைக்கின்றேன். ஏனெனில் கவிதைகளை பார்த்து எழுதிய காலங்களோடு இன்று கவிதைகள் குறித்து எழுதியதையும் பார்த்து எழுதிவிடும் - பேசிவிடும் காலங்களில் நாம் வாழ்ந்து கொள்ள நேர்ந்திருக்கிறது. 

இந்த நிலையில் மிக நீண்ட காலமாகக் கவிதைச் சூழலில் தொடர்ந்து இயங்கியவரை- அந்தக் கவிதைக் காலத்தை தனது கருத்தியலாலும் எதிர்க்கருத்தியலாலும் அடையாளப்படுத்தியே நகர்ந்தவரை இன்று உரையாடலுக்குள்ளால் அண்மித்துக் கொள்கிறோம். 

நான் வியந்து அண்ணாந்து பார்த்த இந்தக் கவிஞரின் கவிதைகள் குறித்து இத்தனை நாள் கடந்து நான் ஒரு உரையாடலில் கலந்து கொள்வேன் என நான் ஒருபொழுதும் எண்ணியதில்லை. இந்தச் சந்தர்ப்பத்திற்காக உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள். 

ஆம்… நான் அண்ணாந்தே பார்த்தேன். 

ஆச்சரியத்துடன் கண்களை அகல விரித்து அப்போது அவரை அண்ணாந்து நோக்கினேன். 
அது யுத்த காலம். 

1992 ம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பில் அவரை நான் முதன் முதலில் கண்டேன். அங்கே அப்பொழுது “பெரு” நாட்டில் கைதாகப்பட்ட அபிமேல் குஸ்மானின் விடுதலை குறித்து ஐ.நாவிலிருந்து மனித உரிமைகள் சார்பாக உரையாற்ற வந்த பெண்மணி அவர்கள் தனது உரையை ஆற்றிக் கொண்டிருந்தார்.அவரது பேச்சின் முடிவில் அவரை நோக்கி “இன்று இலங்கையில் பிரபாகரனை இந்திய இராணுவம் கைது செய்திருந்தால் இதேபோல் அவரையும் விடுதலை செய்ய வேண்டும் என நாம் பின்னால் போக முடியுமா? இத்தனை மக்களின் படுகொலைக்குக் காரணமானவர்களை விடுதலை செய் என நாம் எவ்வகைப் புரிதலுடன் கேட்பது” எனக் கேட்டார். 

அப்போது எனக்கு 20களின் ஆரம்பம். இவர்தான் கவிஞர் சிவசேகரம் என அப்போது எனக்குத் தெரியாது. அவர் கவிஞர் என்றும் எனக்குத் தெரியாது. அன்றைய இலக்கியச் சந்திப்பின் அடுத்தடுத்த நிகழ்வுகளில் அருந்ததியின் “இரண்டாவது பிறப்பு” என்ற கவிதைத் தொகுதி குறித்து அவர் தனது விமர்சன உரையை ஆற்றும் போது, “இலக்கியப் பிழை இலக்கணப்பிழை எழுத்துப் பிழை. காற்தரிப்பு முற்றுப்புள்ளி முக்காற் தரிப்புப் பிழை என ஒவ்வொரு கவிதையிலும் இருக்கும் தரிப்புக் குறிப்புக்களின் தவறுகள் பற்றிச் சுட்டிக்காட்டி தயவு செய்து குறிகள் ஒன்றும் போடாது விடுங்கள். அல்லது போடத்தான் போகிறீர்கள் என்றால் சரியாகப் போடப் பழகுங்கள்” என்றார். 

இலக்கியச் சந்திப்பினைக் கண்காணிக்க அங்கு வந்திருந்த புலி உறுப்பினர்கள் மதிய உணவு இடைவேளையின் போது,அவரைச் சூழ்ந்து கொண்டனர். .

"நீங்கள் எப்படி அவ்வாறு கூறலாம்? அவ்வாறு பேசியிருக்கக் கூடாது என்றும் . நீங்கள் கூறிய வார்ததைகளுக்காக நீங்கள் மன்னிப்புக் கோரவேண்டும்” எனவும் அவரை வற்புறுத்திக் கேட்டனர். 

“நான் அவ்வாறு சொன்னதில் என்ன தவறு இருக்கிறது. அதுதான் என்கருத்து. எனது கருத்தில் மாற்றமில்லை” என்று கோபத்துடன் சொல்லி அதற்கான விளக்கங்களையும் கொடுத்து மறுத்தபடியே இருந்தார். 

இவ்வாறுதான் கவிஞர் சிவசேகரம் அவர்களை முதலில் நான் நேரிடையாக அறிந்து கொண்டேன். கவிஞர் சிவசேகரம் அவர்களின் விம்பத்தை நான் அறிந்து கொள்ள இவை போதுமானவையாக இருந்தாலும், கவிஞர் பிரமிள் அவர்கள் தனது சிறப்பிதழில் வழங்கியிருந்த பேட்டி ஒன்றில் அவருடைய இளவயது அனுபவம் பற்றிப் பேசியபொழுதில், 

“ பாடசாலைக் காலத்தில் அவ்வப்பொழுது வகுப்பாசிரியர் கவிதை எழுதச் சொல்லுவார். ஒருமுறை மைதானம் பற்றிக் கவிதை எழுதச் சொல்லும் பொழுது நான் ஒரு கவிதையை எழுதிவிட்டு எழுதமுடியாதிருந்த மற்றய நண்பர்களுக்கும் எழுதிக் கொடுத்தேன். ஆனால் சிவசேகரம் என்ற மாணவன் மட்டும் தானே தனது கவிதையை எழுதினான்” எனப் பிரமிள் சொல்லியிருந்தார். அந்த சிவசேகரம் அவர்கள் இவர்தான் என ஊகித்துக் கொண்டேன். இவைதான் கவிஞர் சிவசேகரம் அவர்களை நான் அறிந்து கொள்ள உதவிய ஆரம்பகாலக் கதைகள். 

அவரது கவிதைத் தொகுதிகளில் நதிக்கரை மூங்கில் செப்பனிட்ட படிமங்கள்- மற்றும் தேவி எழுந்தாள் போன்றவற்றை நான் இலக்கியச் சந்திப்பின் புத்தக விற்பனைத் தளத்திலேயே வாங்கிய அனுபவம் உள்ளது. அவரது அந்த மூன்று கவிதைத் தொகுப்புக்களையும் வாசித்திருந்த எனக்கு இந்தத் தொகுப்பு மிகப்பெரும் ஆச்சரியத்தை உள்ளார உருவாக்கி விட்டிகிறது. 

சமூக நீதிசார்ந்து தனது கோபத்தையும் தனது ஆதங்கத்தையும் வாழ்காலம் பூராவும் எழுத்துக்களால் நிறைத்து இயங்கிவரும் ஒருவரது எழுத்துக்களை ஒட்டுமொத்தமாகத் தொகுத்து விடும் நிலையில் - நாம் வரலாற்றில் கடந்து வந்த சுவடுகளைப் படம் பிடித்து முன்காட்டி விடுகிறோம். 

அந்த வகையில் கவிஞர் சிவசேகரம் அவர்களது ஒட்டு மொத்தமான இந்தக் கவிதைத் தொகுப்பு மிக முக்கியமானது. கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதுமாகும். 

ஈழவிடுதலைக் காலத்தினை இன்னொரு தளத்தில் பதிவு செய்யும் இந்தத் தொகுப்பும் ஒரு வரலாற்று ஆவணம் என்பதனைக் கவனம் கொள்ளவும். இதனைத் தொகுத்து வெளியிட்டவர்களுக்குப் பாராட்டுக்கள். 

நமது வாழ்காலங்களில் பாதிக்கு மேற்பட்ட காலங்களை போராட்டம் என்ற பெயரில் நடைபெற்ற யுத்தங்களுக்கூடாகத்தான் நாம் கடந்து வந்திருக்கிறோம். ஒரு பகுதியினருக்கு அவை விடுதலைப் போராட்டம். இன்னொரு பகுதியினருக்கு அவை வெறும் யுத்தங்கள். இந்த யுத்தங்களைப் போலவேதான் நமக்கு சமாதானமும் இரு வேறு அர்த்தங்களை கொண்டிருந்தன. சமாதான காலங்களைக் கூட யுத்தத்தின் இன்னொரு வடிவமாகவே நாம் பலதடவைகள் கடந்து போயிருக்கிறோம்.. ஆக இந்த யுத்தவாழ்காலத்தில் சிவசேகரம் அவர்களது கவிதைகள் என்னதாக்கத்தைச் செயற்படுத்தி நகர்ந்திருக்கிறது என்பதனை நாம் கவனிப்பதே முக்கியமானது.


துரோகி எனத் தீர்த்து
அன்றொரு நாள் சுட்ட வெடி 
சுட்டவனைச் சுட்டது. 
சுடக்கண்டவனைச் சுட்டது. 
சுற்றி நின்றவனைச் சுட்டது. 

இப்படி அனைவரையும் சுட்ட வெடி இறுதியில் சும்மா இருந்தவனையும் சுட்டது. 

என்ற கவிதை வரிகளை ஈழவிடுதலைப் போராட்டம் என்ற பெயரில் நடைபெற்ற யுத்த காலங்களில் எல்லாம் நாம் திரும்பத்திரும்ப எழுதிக்கடந்திருக்கிறோம். 

ஒவ்வொருவராய்ச் சுட்டுசுட்டுச் சுடுகாடாய் மாறிய காலங்களிலெல்லாம் இந்தக் கவிதை வரிகளைத்தான் நாம் தொடர்ந்தும் பேசிக்கடந்தோம். 

நம்வாழ்காலத்தில் நாம்பேசிய கவிதை வரிகளில் அதிகம் பேசப்பட்ட கவிதை வரிகள் என்று அடையாளமிடக் கூடிய கவிதை வரிகள் இவை எனத்தான் நினைக்கிறேன். 

 “இராமனே இராவணனாய் 
தனது அரசிருக்கையில் முதுகுப்புறமாய் 
முகமூடிகளை மாற்றிக் கொண்டதை 
பார்க்க நேர்ந்த கண்கள்… 
இதயம் ஒருமுறை 
அதிர்ந்து நின்றது. 
சிறைப்பிடித்தது இராவணனல்ல. 
 இராமனேதான்.” 
 
என்ற செல்வியின் கவிதை வரிகளைப் போல்

 “முடியுமானவரை என் தடயங்களை அழித்து விட்டேன். நண்பர்களே உங்களிடம் எஞ்சியிருக்கும் எனது தடயங்களையும் அழித்து விடுங்கள்” 

என்ற சிவரமணியின் 
 “தோழர்களே விலங்குகளுக்கெல்லாம் 
விலங்கொன்றைச் செய்தபின் 
நாங்கள் பெறுவோம் 
விடுதலை ஒன்றை.” 

 என்றெழுதிய வரிகளை நாம் கொண்டுதிரிவது போல்

 “மரணத்தைக் கண்டு நாம் அஞ்சுபவர்கள் அல்ல ஆனால் புதிய எஜமானர்களிற்காய் தெருக்களில் மரணிப்பதை நாம் வெறுக்கிறோம்” 

 என்ற செழியனின் வரிகளை நாம் காவித்திரிந்ததைப் போல் 

 சாத்தியப்பட்ட இடங்களிலெல்லாம் நாம் நினைவுபடுத்தத் தவறாத கவிதை வரிகள் கவிஞர் சிவசேகரத்தின் இந்த வரிகள். 

 பிட்டுக்கு மண்சுமந்த பிரானுக்கு விழுந்த அடியை நினைவிற் கொண்டு எழுதிப் பின் துரோகி எனத் தீர்த்து அன்றொரு நாள் சுட்ட வெடி ஈழமக்களின் அத்தனை துயரங்களுக்கும் அல்லல்களுக்கும் இறுதி அழிவுகளுக்கும் காரணமாய் ஆகி சும்மா இருந்தவர்களையும் துரத்தி அழித்த கதையை இந்த ஒரு கவிதையில் அன்றே அழகாக் குறிகாட்டிச் சொல்ல முடிந்தவர் யாரோ அவரே கவிஞர். 

 சுட்டவனைச் சுட்டு சுடக்கண்டவனைச் சுட்டு. இறுதியில் சும்மா இருந்தவனையும் சுட்டது. என்று முடிகிற இந்தக் கவிதையின் முழுவடிவத்தை நீங்கள் நூலில் வாசித்துக் கொள்ளுங்கள். 

 இந்த வகைக் கவிதை வரிகளைக் கொண்டு நமது சமூகத்தை அதன் வாழ்வியலை நாம் விளங்கிக் கொண்டு விடமுடியும். இவையெல்லாம் வெறுமனே வெறும் கவிதை வரிகளல்ல. 

ஒரு இனத்தின் படுகொலையின் மொழி. . 

 சமூக நீதியின் அத்தனை வாசற்கதவுகளையும் அடைத்து வைத்து விட்டு ஈழவிடுதலை என்ற பெயரில் அள்ளுப்பட்டுப் போன நமது சமூகத்தில் எதிர் விழைந்த வார்த்தைகள் இவை. இவற்றைத் தொடர்ந்து பேச - தொடர்ந்தும் பேச ஒரு மனவுறுதி வேண்டும். ஆனால் அந்த மனவுறுதி கொண்டவர்களையும் பொய்யுறுதியாக்கிப் புலம்பவைத்த கதையை 2000 இன் ஆரம்ப காலங்களில் இருந்து நாம் காண நேர்ந்ததுதானே. 

 ஆம், 2000 இன் காலங்கள் - - என்றிருந்த ஈழவிடுதலையை ஒன்றுமேயில்லாததாக்கியது. 

 அந்தக் காலம் -அதுவரை சமூகநீதியின் பக்கம் நின்ற மகான்கள் அனைவரையும் தடுமாற வைத்து.- தடம் புரள வைத்தது. இதற்குள் கவிஞர் சிவசேகரத்தின் கவிதைகள் எந்த இயல்பு நிலையைக் கொண்டு இயங்கியது எனப் பார்த்தலே சிறப்பு. அதுவே என் கடமை. 

 இந்தத் தொகுப்பில் அடையாளம் இடப்படும் அவரது ஆரம்பகாலக் கவிதைகளின் போக்கிலிருந்து நோக்கத் தொடங்குவோம். 

 “ஒவ்வொரு திருப்பமும் 
 பாதையதன் பொதுத் திசையைத் 
தனியே எடுத்துரையா 
 அவற்றின் ஒரு முழுமை 
அப் போக்கின் வழி கூறும் 
வரலாறும் அது அது போன்றே” 

 மலையகம் குறித்து எழுதிய “மலைப்பாதை” என்ற கவிதை இது. இந்தத் தொகுப்பின் முதற்கவிதை. சமூகத்தின் பாதையின் முழுமையில் அதன் வரலாறு தெரிந்துவிடும் என 1973 காலப்பகுதியிலேயே அவரால் சொல்லமுடிகிறது. 

 மக்களுக்கு அருகிலிலா அறிவும் அறிஞர்களும் தொலைவில் ஒளிர்கின்ற தாரகைகள் போன்றனவே என்று 1974இல் தூரத்தில் ஓளிர்கின்றவை அத்தனையும் ஒன்று சேர்ந்து ஒளிகொடுத்தாலும் புவிக்குப் பிரியோசனமில்லை என 

 மக்களைச் சாராத புத்திஜீவிகள் என்று சொல்லி குறியிட்டு விடுகிறார். 

 அடுத்து ஒரு கவிதையைப் பாருங்கள் 
கொம்பியூட்டருக்கு ஒரு கணக்கு” 
என்ற கவிதை
 கொம்பியூட்டர் மூலம் 
காரியங்கள் செய்கின்ற இந்த யுகத்தினிலா நீயும் இருக்கின்றாய்?”

 எனப் பேசிப் பின்

"கொம்பியூட்டர் வழிகாட்ட 

விண்கலங்கள் சஞ்சரிக்கும் விண்வெளியின் கீழே தான் 

மானுடத்தின் பாதியினர் சுட்டெரிக்கும் வெய்யிலிலே 

செருப்பின்றி நடக்கின்றார் 

கொம்பியூட்டர் மொழிபெயர்த்து 

அச்சடித்துத் தருகின்ற

இந்த யுகத்தில் தான் 

பேரெழுதத் தெரியாமல் மானுடத்தின் பாதியினர் 

கைநாட்டுப் போடுகிறார் 

கொழுப்புக் கரைவதற்கும் 

கொம்பியூட்டர் துணைபோகும் கோளமிதன் மேலே தான்

 மானுடத்தின் பாதியினர் 

நிறையாத வயிற்றுடனே நித்திரைக்குப் போகின்றார் 

காலிற் செருப்பற்ற கைநாட்டுப் போடுகிற 

அரைவயிற்றுக் கூட்டத்தார் 

அனல்கக்கிக் குண்டெறிய வழிகாட்டும் கொம்பியூட்டர் கொண்டு தமை ஆள்பவரை மோத முனைவதெலாம் மடமையெனில் 

வெல்லுகிறார் எவ்வாறு? விளக்கிடுமா கொம்பியூட்டர்?"


என்று முடிகிறது.



 இந்த வகைக் கவிதைகள் கதைகளாகவும் விபரிப்புக்களாகவும்  இருக்கின்றன என்கிறார்கள். இந்த உரைமொழிக் கவிதைகைள் போல் பலர் எழுதிவருவதாகவும் சொல்கிறார்கள். பலரால் எழுத முடிவதாகவும் எண்ணி எழுதுகிறார்கள்.  ஆனால் உண்மை அதுவல்ல. 

அவர்களிலிருந்து சிவசேகரம் அவர்கள் பேசும் அரசியல் அவற்றை உடைத்து வெளிக் கொள்ளும் உள்ளகப் பார்வை என்பவையே இந்தப் போலிக் கவிஞர்களிலிருந்து அவரை நிச்சயம் வேறுபடுத்தும். ஒரு கவிஞராகத் தனித்து அடையாளம் இடும் புள்ளியும் அதுவே. 

 மேலுள்ள இந்தக் கவிதையை நீங்கள் முழுவதுமாக வாசிக்கும் வேளையில் இந்த மொழிமுறையைப் போல் இன்றும் எழுதிவரும் பலரை நீங்கள் நினைவு கொள்ள நேரிடும். இந்த வகை முறைமையை சிலர் ஆற்றுகைத் தன்மை என்கிறார்கள். வாய்மொழித் தன்மை என்கிறார்கள். அது ஒவ்வொரு கவிதையிலும் கவிஞர் சிவசேகரம் அவர்கள் பேசும் அரசியலைப் பேசாது கடந்து விடும் தந்திரம். 

 இன்னொரு வகையினர் 

"அதிகமாக அவரது கவிதைகளில் காணப்படும் அரசியற் கருத்துக்களை மட்டும் பலர் பேசுகிகறார்கள். அவரது கவிதையின் அழகியலும் பேசவேண்டியதுதான்"

 என்கிறார்கள். 

அரசியலைப் பேசுவதே அழகியல்தான் என்கிறேன் நான். 

 இன்று கவிதை எழுதுபவர்கள் பலர் தமது கவிதைகளை வேறு மொழியில் மொழி பெயர்ப்பதற்கு இலகுவாக மொழி பெயர்ப்பாளர்களின் மொழி அறிவிற்கும் கவிதை அறிவிற்கும் ஏற்றாற்போலான  எழுத்துக்களைக் கவிதைகள் என எழுதப்பட்டுவரும் சூழலில்
 “மானுடத்தின் பாதியினர் நிறையாத வயிற்றுடனே நித்திரைக்குப் போகின்றார்” என மக்களின் பாடு பற்றிய அக்கறையில் கறாரான அரசியலைப் பேசிவிடும் மொழி அவருள் சிந்தனையாய் இருக்கிறது. .

அப்படிப் பேசிவிடும் கறாரானஅரசியற்பதிவுக் கவிதைகள் சிலவற்றை நான் கீழே கோடிடுகிறேன்.

 மாவலியின் மார்கழியில் என்ற கவிதையில் யாழ் நகரில் அரச வாகனங்களின் ஓடுகையை மாவலி நீர் ஓடுகையுடன் ஒப்பிடும் கவிஞரது அரசியற்பார்வை மிக முக்கியமானது. 

 1983 காலத்தில் எழுதிய இந்தக் கவிதை

 “அரசாங்க வாகனங்கள் ராப்பகலாய் ஓடும் யாழ்ப்பாண வீதிகளில் 
வீதிக் கரையோரம் நேற்றிரவு நின்றவனோ 
 இன்று மதகடியில் இல்லையெனில்
 வாய்க்காலில் பிணமாக 
 ஒன்றாயோ துண்டாயோ. 

 ஊர் தேயும் ஆனாலும் வாகனங்கள் வீதிவழி விரைந்தோடும்” 

 என்கிறார். 


"என் மண் என் மண்’ணென்று எப்போதும் நீ சொல்வாய் 
 கோடேறி வழக்குரைப்பாய் 
 மண்ணுக்கும் நீருக்கும் வேலி மதிற்சுவர் எழுப்பி வாராமல் நீ மறிப்பாய் இப்போதோ 
‘இது நம் மண்’ என்கின்றாய்
 ‘எழுக’ என ஆர்ப்பரிக்கின்றாய். 
 நன்று ஒரு சிறு கேள்வி. 
 நீ கூறும் ‘நம் மண்’ 
இது ஆண்டோய்ந்த பரம்பரையார் மீண்டொருகால் ஆளவர வேண்டி 
நமை வேள்வியிலே ஆடாகப் பலியிடவும் 
அந்நியருக் கெல்லாமே அடமானம் வைத்திருந்து 
அவர் தயவில் ஆளுதற்கு ஆசையுறும் மண்ணாமோ? 

என்று கேட்கும் வரிகளின் இறுதியில் 
 அடியடியாய் முடியாண்டோர் 
நீண்டநெடு வரலாற்றின் 
குடுமிபிடிச் சண்டைகளிற் குருதியினாற் சேறான 
செம்மண்ணோ எம் மண்ணோ 
 நீ கூறும் மண் அதனை உழுபவனின் மண்ணென்றால் 
அவனுக்கே சேரட்டும் 
முன்னாலே நிற்கின்ற ஆண்டைகளின் பங்கென்ன?"

 என்று முடிகிறது. 
ஆம் "முன்னாலே நிற்கின்ற ஆண்டைகளின் பங்கென்ன?" 

இது நாம் இந்தக் கவிதைக்கும் அப்பால் தொடர்ந்தும் தொடர்ந்தும் கேட்கவேண்டிய  வினாவாக இருக்கின்றது. ஆண்ட பரம்பரைக் கனவினைத் தகர்த்து விட ஊடறுத்து நிற்கும் ஒரு அரசியற் பதிவு  இந்தக் கவிதை.

 
11.11

கார்த்திகை வசந்தத்தின் 
காகிதச் செம்மலரின் 
 விதைக்ககூடில்லாப் பிளாஸ்ற்றிக் கருவட்டம்
 மகரந்தஞ் சிந்தாது
 பசுமையாய் நீளும் வாடாத உயிரற்ற காம்பு 
 பொத்தான் குழிகளுட் புதையக் 
காசுதின்னி உண்டியல் ஏப்பம் ஒலிக்கும் 
 பயண அலுப்பில் வரிசையாய் வரிசையாய்க் 
கற்றூண் மேற்சாயும் பொப்பி வளையங்கள் 
உலகெல்லாம் ஆண்ட பரம்பரையின் 
வாரிசுகள் தலைதாழ்த்தும் நிமிஷம் மௌனமாய் நகரும் 

என நகர்ந்து 
 ஆண்ட பரம்பரைக்காய் ஆயுதங்கள் ஏந்தி 
மாண்ட படையினரை மனதில் நினைவோமா 
 ஆயுதமே ஏந்தாமல் மாள இருக்கின்ற மானுடரை நினைவோமா

என முடிகிறது.

நினைவேந்தலின் பின்னால் இருக்கின்ற அரசியலை வெளிப்படையாகவே விமர்சிக்கின்ற கவிதை இது. 

ஆண்ட பரம்பரைக்காய் ஆயுதங்கள் ஏந்தி மாண்ட படையினரை மனதில் நினைவோமா ஆயுதமே ஏந்தாமல் மாள இருக்கின்ற மானுடரை நினைவோமா என 1989இலேயே கேள்விக்குட்படுத்தியவர் என்பதில் நாம் பெருமைப்பட்டேயாகவேண்டும். 

ஆனால் நமக்கு காலத்தில் வாய்த்த கவிஞர்களது வாய்ச் சொற்களோ கடந்த நாற்பது வருடங்களாக தமிழ்த்தேசிய சேடமிழுத்த வார்த்தைகளையே அதிகமாகக் கொண்டிருந்தன. சில இடத்தில் தவறி விழும் வார்த்தைகளில் அவர்கள் தங்களையே தொலைக்க வேண்டியிருந்தது. சில இடத்தில் நாங்கள் எதற்குள்ளும் இல்லையென்று அதனை மறுத்து  தலையாட்ட  முடியாமல் அந்தக் காலத்தில் எல்லாம் வேறு எதையெதையோ எழுதித் தொலைக்க வேண்டியிருந்ருந்தது அவர்களுக்கு. 

 ஆனால் தன்னுடைய கருத்தியலை மற்றும் சமூகம் மீதான விமர்சனத்தைக் காலம் பூராவும் தனது கவிதைக்கூடாகத் தொடர்ந்து அச்சமேயற்று வெளிப்படுத்தி வந்தவர் கவிஞர் சிவசேகரம் அவர்கள். 

 அப்படியிருக்க இவரது கவிதைகளைத் தொகுத்த நண்பர்கள் தொகுப்பு வெளிக் கொண்டு வந்த காரணம் குறித்துப் பேசும்பொழு சிவசேகரம் அவர்களை இந்த சமூகம் மறந்து விட்டது என்கிறார்கள். நினைவு கொள்ளத் தவறுகிறது என்கிறார்கள். 

அது ஏன் என்றும் நாம் கணக்குக் கொள்ள வேண்டும். கடந்த காலம் முழுவதும் அழுகிய தமிழ்த் தேசிய அரசியலுக்குள் கலைஞர்களும் கவிஞர்களும் அவர்களோடு ஒட்டியிருந்த சிறு சஞ்சிகைகளும் சமூகச் செயற்பாடுடைய மாற்றுக் கருத்துடையவர்களும் கூட அள்ளுப்பட்டுப் போய் நின்றால் எப்படித்தான் அதன் எதிர்த் திசையில் இயங்கும் சிவசேகரம் அவர்களது எழுத்துக்களை நியாயப்படுத்திப் பேசுவது? கண்டு கொண்டு உரையாடுவது? 

 அவரை மறத்தல் என்பதல்ல பேசாது தவிர்த்தல் என்பதே நடைபெற்றது. அண்மையில் அவரது கவிதைத் தொகுப்புக்குறித்த உரையாடலில் அவர் பேசியதையே நீங்கள் நினைவு கொள்ள வேண்டும் எனக் கேட்கிறேன்.

" புலம் பெயர்ந்த இலக்கியவாதிகள் பலர் தமிழீழத் தேசியக் கனவிலிருந்து விடுபட்டால் நல்ல வழிக்கு வருவார்கள்" என்றவாறாகப் பேசியிருந்ததையும் நீங்கள் கவனத்திற் கொள்ளவேண்டும் எனக் கேட்கின்றேன். 

யாரும் அவரை மறக்கவில்லை. குறிக்கப்பட்ட கடந்த கால வரலாறுக்குள் உங்களால் அவரைக் கொண்டு காவமுடியாது இருந்தது என்பதே இங்கு முக்கியமானது. இப்பொழுது அந்தச் சந்தர்ப்பம் மீண்டு வந்தது மகிழ்ச்சியானது.  கொண்டாடப்படவேண்டியது.

 தன் வாழ்காலத்தில் அவர் ஒவ்வொரு காலப்பகுதியிலும் இடம்பெற்ற சம்பவங்களிற்கும் நினைவுகளுக்காகவும் என தனது விமர்சனப் பார்வையை கவிதை வாழ்வாகச் செலவழித்த கவிஞர், 

 வடக்கில் இந்திய அமைதிப்படையின் இருப்புப் பற்றி- வடக்கில் அன்னையர் முன்னணியினரின் ஆர்ப்பாட்டம் பற்றி- உலகப் போரில் மரித்த படையினர் பற்றி- சாதிய எதிர்ப்பபுப் போராட்ட நினைவு பற்றி- தென்னாபிரிக்க மக்கள் எழுச்சி பற்றி- - சுற்றாடல் பற்றி- பிரேமதாசாவின் படுகொலை பற்றி- - 1989 இல் அரச படைகள் கொன்ற இளைஞர்களின் பிணங்கள் களனி ஆற்றில் மிதந்தது பற்றி- வடக்கில் நடைபெற்ற அரசியற் கொலைகள் பற்றி- கே.ஏ. சுப்ரமணியம் நினைவு பற்றி- ராஜினி திராணகமவின் கொலையை வெறுத்தது பற்றி- நெல்சன் மன்டெலாவின் விடுதலை பற்றி- சிலேயில் பினோஷெயின் அடக்குமுறை பற்றி- 1966 இல் உருவான தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தைப் பற்றி- துருக்கிய குர்திஸ்தான் கவிஞர் றபீக் ஸபியின் கவிதையின் ஆங்கில வழித் தமிழாக்கம் பற்றி- பம்பாயில் இனக் கலவரம் வலுக்கையில் முகூர்த்தம் சரியில்லை என்று பிரதமர் நரசிம்மராவ் அங்கு போவதைத் தவிர்த்தது பற்றி- விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை வடக்கிலிருந்து விரட்டியது பற்றி- 9/11 நியூ யோர்க் இரட்டைக் கோபுரத் தாக்குதல் பற்றி-இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் 2002 இற் செய்த புரிந்துணர்வு உடன்படிக்கை பற்றி-2004 டிசெம்பர் சுனாமி பற்றி-ரவிராஜின் தயார் அழுகை பற்றி- என அத்தனை பற்றிகளையும் எழுதிவந்த கவிஞர் சிவசேகரம் அவர்களை தமிழ்த் தேசியப் பித்தேறி நின்ற காலங்களில் நீங்கள் எவ்வாறுதான் நினைவுக்குள் இழுத்துச் சென்று விட முடியும்.?

 எல்லாமே சூனியமான இக்காலத்திலாவது நாம் அவரை உள்வாங்க முடிந்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியான விடயம். 

 ஆனாலும் எனக்கிருக்கிற குறை என்னவென்றால் 2000இன் காலங்கள் வரை அத்தனை பற்றியும் அடையாளமிட்டு எழுதிய கவிஞர் அவர்கள்2000இன் பின் காலங்களில் மட்டும் காலத்தின் விபரம் பற்றி எழுதாமல் கடந்து விடுகிறார். இந்தக் காலத்தில் கவிஞர் சிவசேகரம் அவர்கள் எழுதாது விட்ட கவிதைகளை நான் தொடர்ந்தும் தேடுகிறேன்.

அரசியல் பிரக்ஞை உள்ள எல்லாக் கவிஞர்களும் எழுத்தாளர்களும் சமூக ஆர்வலர்களும் ஏன் மாற்றுக் கருத்தாளர்களும் கூட  அதிகமாகச் சறுக்கிய காலங்கள் அவையாகத்தான் இருக்கின்றன. 

 பலி என்ற கவிதை இராணுவ ஆட்சேர்ப்புப் பற்றியது. இது 1998 இல் கவிஞர் எழுதியது.

" ஆடும் பலி தந்தோம்
 காசு பணம் தந்தோம் கட்டிடவும் துணி தந்தோம் 
உரக்க உடுக்கடித்துப் பூசாரி கூவுகிறான்
 “தின்பண்டங் கொண்டு வா திரவவகை கொண்டு வா” 
லட்சக்கணக்கான மானிடரின் உடலங்கள் வெட்டி வழிந்த வெங்குருதி குடக்கணக்காய் கொட்டிக் கறுத்த தரை மீது நின்றபடி 
பறை ஒலி போல் வேட்டதிர அழுகை ஒலி சங்கூத 
வெறியோடிச் சிவப்பான விழிகள் கனல் கக்க 
உடுக்கடித்துப் பூசாரி உரு ஆடிக் கூவுகிறான் 
“கோழிகளும் ஆடுகளும் கொண்டு பசி தீருவதோ 
சாராயம் கள்ளருந்தித் தாகம் தணிகுவதோ 
பத்தாயிரம் உயிர்கள் பலி கேட்கும் தெய்வமிது
 ரத்தத்தைக் கொண்டுவா நரபலியைக் கொண்டு வா 
கிழடுபட்ட தசை வேண்டாம் .
 இளைய தலைமுறையின் இனிய தசை கொண்டு வா 
பட்டம் பதவி பல அதிகாரம் பணமுடையோர் 
பெற்றெடுத்த பிள்ளைகளின் ஊளைத் தசை வேண்டாம் 
சிங்களத்தின் ஏழைகளின் சிறுவர்களைக்கொண்டு வா 
பச்சை கறுப்போடு பழுப்பாடை அணிவித்து 
ஒட்ட முடி நறுக்கித் தொப்பி தலைக்கேற்றி 
சப்பாத்துக் கால்களுடன் போர்ச் சாமி சந்நிதியில் 
வெட்டிச் சரிக்கப் பத்தாயிரம் புதல்வர் 
கட்டி இறுகக் கயிற்றால் பிணைத்தெனினும் 
கட்டாயமாய் எனது களத்தினுக்குக் கொண்டு வா."

 என்று சொல்கிறது இந்தக் கவிதை. 

 ஆனால் "இந்தமண் எங்களின்  சொந்தமண்" என்பதை அவர் மாற்றியது போல் மேலுள்ள அவரது கவிதைகளை மாற்றி எழுதிக் கேட்கிறேன் நான்.

"ஏழைத் தமிழர்களின் பாலகரைக் கொண்டு வா. 
பஞ்சம் பசியோடு 
வன்னியிலே பள்ளிக்குச் செல்ல வரும் பாலகரை இடையில் மறி. 
ஊன் குருடு செவிடு என்று கைநழுவ விட்டுடாதே. 
கேட்பதற்கே நாதியற்ற நாய்கள் அவை. 
கயிற்றால் பிணைத்தெனினும் 
கட்டாயமாய் களத்திற்குக் கொண்டுவா. 
இரவிரவாய் சூடடடித்த சுணைமொய்க்க 
பகல்தூக்கத்தில் அப்பன் படுத்திருப்பான் 
அவனை எழுப்பாதே. 
அடிவளவில் உழுந்தறுக்கும் அவன் மகளை அப்படியே ஏற்றிவிடு. பிடியிலிருந்து தப்பிக்க 
கலியாணம் கட்டி வைப்பார் கலங்காதே.
.மணமுடிப்பின் இறுதிவரை காத்திருந்து இழுத்து வா. 
ஒன்றுக்கு இரண்டாகும். 
ஒர் நொடியில் நஞ்சருந்த யோசிப்பார். 
நஞ்சருந்தி வருஞ்சாவில் நாடு வருமா என்று கேள். 
சாவுதான் சாவு. அங்க வந்து சாவன் எனச் சொல்."

என்று  அவருக்கு அருகிலிருந்த தமிழ்ப்பகுதியில்  பிள்ளை பிடிப்புப் பற்றி தெரிந்தும் எழுதிவிட முடியாது போனது என்பது அவரின் மிகப் பெரிய சிந்தனை வீழ்ச்சி.. 

ஆனாலும் அவர் தனது கவிதையில் சொல்வது போல்

 “ஒன்றைப் பற்றி நான் சொன்னால் அது இன்னொன்றைப் பற்றியதாய் இருக்கிறது”. என நினைத்து அதனைச் சொல்லும் போது இதனையும் சொன்னார் என நினைத்து விட்டுக்  கடந்து போகலாம். 

 ஆனால் முடியாது.

 பின் 2006 இல் எழுதப்பட்ட போராளித் தோழருக்கு என்ற கவிதையைப் பாருங்கள்.

 அந்த யுத்த காலத்தில் அதனை மக்களுடைய போராட்டமாக மாற்றும் படிபுலிகளிடம் மன்றாடுகிறது இந்தக் கவிதை.

 “போராளித் தோழரே கொஞ்சம் பொறும் உமது பயணத்தை மக்களுடன் பகிரும் உமது பாதையை மக்களுடையதாக்கும் நீர் சுமக்கும் பணியின் கனம் இலகுவாகட்டும் எதிரி மேலும் மேலும் தனிமைப்பட நேருகிற போது வெற்றி உம்முடையதாய் மட்டுமன்றி எம்முடையதாய் மட்டுமன்றி எல்லா மக்களுடையதாயும் அமையும்” எனக் கெஞ்சுகிறார். 

 அதன் பின்
2007 இல் எழுதப்பட்ட இந்தக் கவிதையினைப் பாருங்கள்

 பயங்கரவாதியாக இருத்தல் பற்றி ஒரு சிந்தனை

 பயங்கரவாதம் பற்றி ஊடகவியலாளர் பொலிஸ் மேலதிகாரியிடம் உரையாடலாக இருக்கும் கவிதை இது.

 “பொலிஸ் படையின் முன்னோ ராணுவத்தின் முன்னோ எதிர்ப்படுகிற எவரும் பால் வயது வேறுபாடின்றிப் பயங்கரவாதியாகக் கருதப்படலாமெனின் பயங்கரவாதியாகக் கருதக்கூடிய எவரும் பால் வயது வேறுபாடின்றிப் பயங்கரவாதியாகவே இருப்பது சற்றுப் பாதுகாப்பானது” 

சொல்கிறது. 
 இதற்குள் தான் வன்னியில் அந்தக் காலத்தின் பிள்ளைபிடிப்பின் கதையை நீங்கள் பொருத்திப் பார்க்க வேண்டும். 
2000ம் ஆண்டிலிருந்து 2009 காலம் வரை பால்யவது வேறுபாடின்றி யுத்தத்திற்காக வன்னியில் களவாடப்பட்ட குழந்தைகளிமீதான வன்முறையை மழுங்கடித்து அதன் கதையை இந்தக் கவிதை புனிதமாக்கிறது என்று சொல்கிறேன். 

இன்றுவரை அவர் பேசி வந்த அரசியலுக்கு இது மிகவும் முரணானது. அவரது மானிட விழுமியச்  சிந்தனை மழுங்கிய இடமும்  இதுதான்.
 
2008இல் எழுதிய சிலந்தி பற்றி ஒரு சிந்தனை என்ற கவிதை. 

மாயவித்தைக்குள்ளால் தனது இதே சிந்தனையைபொதுமைப்படுத்த முனைகிறதனை நீங்கள் வளங்கிக் கொள்ள முடியும். 

 “எந்தவொரு பூச்சிக்கும் 
ஏதோ ஒரு சிலந்தியால் ஆபத்துக் காத்திருக்கிறது
 சிலந்தியைப் பிடித்துத் தின்னுகிற பறவையுடன் 
அல்லது பல்லியுடன் சினேகிதம் பிடித்தால் 
ஒருவேளை சிலந்திகளை இல்லாதொழிக்கலாம் 
ஆனாற் பறவையோ பல்லியோ 
சிலந்தி கிடையாத போது பூச்சிகளைப் 
பிடித்துத் தின்னாதென்று உத்தரவாதம் இல்லை 
எனவே பூச்சி பூச்சியாகவும் சிலந்தி சிலந்தியாகவும் உள்ளவரை
 பூச்சி சிலந்தியிடஞ் சிக்காமலிருப்பதற்கு உரிய உபாயங்களைத் தேடி அறிவது போதுமானது 
சிலந்தி பற்றிய மற்றைய ஆய்வுகளைச் சிலந்தியால் ஆபத்தில்லாதவர்கள் செய்து கொள்ளட்டும்.” 

என எழுதியிருக்கிறார். 

அன்றய யுத்த காலத்தை உன்னிப்பாகக் கவனித்து உள்வாங்கியிருப்பவர்களால் இந்தக் கவிதையின் அழகியல் தந்திரத்தை உற்று நோக்கிவிட முடியும்.அக்காலத்தில் நடந்த எல்லாவகை அயோக்கியத் தனங்களுக்கும் அறிவு முலாம் பூசுகிறது இந்த வரிகள்.

அதன் தொடர்ச்சியாய் எல்லாமே முடிந்து போன காலத்தில் 2010 இல் எழுதப்பட்ட ஒரு கவிதையோடு இந்த உரையை முடிக்கிறேன்.

 “எப்போது புறப்பட்டிருந்தாலும் இப்போதுள்ள இடத்திற்கே வந்துசேர்ந்திருப்பார்கள் அப்போதே புறப்பட அனுமதித்திருந்தால் பலர் இப்போதும் உயிரோடு இருந்திருப்பார்கள்.” 
எனச் சொல்லும் கவிஞர் இடையில் சிலகாலம் தடுமாறிய இடம் நாம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். 

அது வரையான  அனைத்து அட்டூழியத்தினையும் கண்கொண்டு பார்த்திருந்த கவிஞர், 2010இல் இந்த வார்தைகளைச் சொல்வதற்கு காத்திருக்க வேண்டியிருந்து.
 இந்த வார்த்தைகளுக்காக நாம் ஏன் இவ்வளவு காலமும் கவிஞர் சிவசேகரம் அவர்களைக் காவித் திரிவான் எனக் கேட்டுக் கொள்ள வேண்டியிக்கிறது. 

 நம் வாழ்காலத்தில்கிடைத்த கவிஞர்களில் சமரசமற்ற கவிஞர் என்ற அடையாளத்தை அவருக்குத்தான் கொடுக்கமுடியும். என்றாலும் இந்த ஒரு கவிஞனுக்குள் இந்தத் தடம் புரள்வு நிகழ்ந்திருக்கவே கூடாது.

 எனினும் முன்னெப்போதையும் விட 2000ம் ஆண்டின் காலத்தில் அனைவருக்கும் ஈழவிடுதலை என்பதே திசைமாறி தடம்மாறிய காலமாகியது. அந்தக் காலத்தில் சிவசேகரம் அவர்கள் எழுதிய கவிதைகளை நாம் தனித்து எடுத்து நோக்க வேண்டும். 

அவ்வாறு நோக்குவோமாயின் அதுவே ஈழ அரசியலில் இலக்கியத்தில் கலை உலகில் அனைத்தையும்- அனைவரையும் தடம்மாற்றி இடம் மாற வைத்த இடம் போல் சிவசேகரம் அவர்களையும்  தடுமாற வைத்ததை நாம் கணக்கிட முடியும்.

இந்த இடத்தை மிகத் துல்லியமாக அளவிடாது கடப்பது என்பதும் இன்னொரு போர்க்குற்றம் எனச் சொல்லி… 

 இதனை நிறைவு செய்கிறேன். 

 நன்றி அனைவருக்கும்.

ரொரண்டோவில் "தேடகம்" அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்ட 
"சிவசேகரம் கவிதைகள்" என்ற நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை.