Thursday 13 April 2017

Chapel சதுக்கம்

கற்சுறா


கதை
( புதிய சொல், ஜனவரி- மார்ச்)









சப்பல் சதுக்கத்தின் கீழ் இருந்த நீண்ட வளைவுப்பாதையூடாக சென்றால் மட்டுந்தான் தாம் செல்ல வேண்டிய பியூனரல் ஹோமிற்கு மிகவும் விரைவாகச் செல்லமுடியும் என்று சொல்லி லிடியா காரைச் சிரமப்பட்டு ஓட்டிக் கொண்டிருந்தாள். இரண்டு பக்கவாட்டிலும் ஓடிக் கொண்டிருக்கின்ற கார் இடைவெளிகளுக்குள் மாறி மாறித் தனது காரை புகுத்த முனையும் சந்தர்ப்பங்கள் அருகிலிருந்த துருவனுக்குப் பதட்டத்தை ஏற்படுத்தியது. அவள் ஸ்ரேயறிங்கில் கழுத்தை நீட்டிவைத்து தலையை இரண்டு பக்கமும் திருப்பித் திருப்பி காரினை ஓட்டிக் கொண்டிருந்தாள். லிடியாவின் இந்தளவு பதட்டத்திற்கு தானும் ஒரு காரணமே...என்று நினைத்தபடி பக்கத்து இருக்கையில் இருந்து அவளது கார் ஓட்டத்தை உன்னித்துக் கவனித்துக் கொண்டிருந்தான்.


பாதை நெடுகவும் வாகன நெரிசல்.  இத்தனை நெரிசலுக்குள்ளால் புகுந்து புகுந்து காரை ஓட்டிக் கொண்டிருப்பது ஒருபக்கம் புதினமாக இருந்தாலும் நெஞ்சில் பயம் அப்பிக் கொண்டே இருந்தது. வேகம் அதிகரித்த இடங்களிலும் வாகனத்தை விலத்தும் இடங்களிலும் அவனையறியாமல் காலை இறுக்கி நீட்டி, கைகளால் சீற்றை இறுக்கிப்பிடித்தபடி பயத்துடன் இருந்தான்.


சப்பல் சதுக்கத்தின் இருபக்கமும் நகரைவிட்டு வெளியேறுவதற்கும் உள்ளே வருவதற்குமான மிக அகன்ற பாதைகள்.  சதுக்கத்தின் மேல் பக்கமாகவும் கீழ்ப்பக்கமாகவும் இருந்த வளைவு நிலத்தில் நடுவே அமைக்கப்பட்டிருந்த றெஸ்ரோறன்டுகளில் மக்கள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தார்கள். அந்த றெஸ்ரோறன்டுகளைச் சுற்றி சிறிய மலைகளாய் ஏறியிறங்கும் வீதியின் இரண்டு பக்கங்களையும் ரசித்தபடி அவர்கள்  உணவருந்திக் கொண்டிருப்பதைப்பார்க்க எல்லோருக்குமே மனது ஒருகணம் மெய் மறந்துதான் போகும். ஆனால் இப்போதோ அவனுக்கு அது ரசிக்கக் கூடியதாக இருக்கவில்லை. இன்றைக்கென்று வளைந்து செல்லும் இந்தப் பாதையைத் தாண்டுவதற்கு அரைமணிநேரத்திற்கும் அதிகமாகவே பிடித்து விட்டது.


தன்னால் தான் நேரம் பிந்தியதையிட்டு “என்னை மன்னித்துக்கொள்” என்று ஒவ்வொரு நெருக்குவாரத்திலும் அவளுக்குச் சொல்லிக் கொள்ள வேண்டியதாகிவிட்டது. “மன்னித்துக்கொள்” என்ற வார்த்தையை இப்போது  அவன் எத்தனை தடவை சொன்னான் என்றுகூட ஞாபகம் இல்லை. அவ்வளவுக்கு அதிகமாகச் சொல்லிவிட்டான் என்பதும் அவனுக்குத்  தெரிந்திருந்தது.
இப்படித் தேவையற்று  மன்னிப்புக் கேட்பது, அதிகம் எரிச்சலைக் கொடுத்ததை அவள் முகம் காட்டியது. அதனை  அவன் உணர்ந்து கொண்டாலும் தனது தவறினை நிவர்த்தி செய்ய எத்தனை தரம் மன்னிப்புக் கேட்டாலும் பரவாயில்லை என்றே  தோன்றியது.


லிடியா தன்னை ஏற்ற வரும் பொழுது தான் காரில் ஏறுவதற்கான தயார் நிலையில் வெளியில் வந்து நின்றிருக்க வேண்டும். மாறாக வீட்டிற்கு அவள் வந்து அழைப்பு மணியை அழுத்தும் வரையிலும் தான் முகத்தைக் கூடக் கழுவாது வெறுமனே சாறத்தோடு நின்றதை நினைக்க அவனுக்கே இப்போது அவமானமாக இருந்தது. இந்த நேரத்தில் இப்படியொரு இடைஞ்சலை அவளுக்கு தான் ஏற்படுத்தியிருக்கக்கூடாது. ஆனாலும் பியூனரல் நிகழ்வில் தான் உரையாற்ற வேண்டியது முக்கியமானதாக இருந்ததனால்  அந்த உரையை எங்கிருந்து தொடங்கி எங்கு முடிப்பது என்றுதான் தன்னால் இன்னும் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தான்.

அவன் ஏற்கனவே தயார் படுத்தியிருந்த உரையை முதல் நாள் இரவு லிடியாவுக்கு வாசித்துக் காட்டியபோது அதனை அவள் முற்றாக நிராகரித்திருந்தாள். அந்த நேரத்திலிருந்து இன்று காலை வரையுமான நேரம் இன்னொரு உரையைத் தயார்படுத்தப் போதுமானதாக அவனுக்கிருக்கவில்லை.
ஒருவரின் மரணவீட்டில் உரையாற்றுவதற்கான உரையாக அதன் வடிவம் இருக்கவில்லையா? அல்லது  தகவல் பிழைகளைக் கொண்டிருந்ததா என்று கூட அவனால் முடிவு செய்ய முடியாமல் இருந்தது. “நீ இன்னொரு விதமாக முயற்சி செய்து பார்”  என்று வெறுமனே ஒருசாதாரண தமிழ் வாத்தியார் குரலில் அவள் சொல்லியதற்கான அர்த்தத்தை அவனால் அந்த முழு இரவிலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்போது தடுமாற்றம் கூடியவனாக இருந்தான். லிடியா முன்னால்  மெதுவாகச் செல்லும் ஒரு வாகனத்திற்கு சத்தமாக இழுத்து ஒரு கோர்னை அடித்தாள்.     உரைகுறித்த சிந்தனையில் கொஞ்சம் யோசித்துக் கொண்டிருந்த அவனை அது திடுக்கிட வைத்தது.


"நீ அவசரப்படாமல் ஓடு... இன்னும் நேரமிருக்கிறது" என்று அதட்டினான்.


“உனக்குத் தெரியாதா நாங்கள் ஆரம்பத்திலிருந்து நிற்க வேண்டியவர்கள் என்பது?" என்று உடனேயே மறுபதிலளித்தாள். அந்தப் பதிலில் அவன் கொஞ்சம் குற்றவுணர்வு பட்டாலும் அதனைப் பெரிதாக எடுக்காமல்’


“தெரியும்.... நான் சொல்வதைக் கேள்.  இப்படி அவசரப்பட்டு ஓடினால் நாங்களாகப் போகத் தேவையில்லை. அன்புலன்ஸ்காரர்கள் வந்து அவங்களாகவே எங்களை பியூனரல் ஹோமிற்கு கொண்டுபோய்விடுவார்கள்.” என்று கிண்டலும் பயமும் கலந்த தொனியில் எச்சரிக்கை செய்தான்.


“இருந்து என்ன செய்யப் போறாய்” என்று  அவள் வெடுக்கெனச் சொன்ன பதிலில் ஒரேயொரு அர்த்தம் மட்டும் இருப்பதாக தெரியப்படுத்தவில்லை என்பதை அவள் முகம் காட்டியது. அதற்குள் ஒரு இருபது வருடகால அனுபவம் தொங்கிக் கிடந்ததைத்தான் அவள் தெரியப்படுத்தியிருக்கவேண்டும் என்று புரிந்தது. வெவ்வேறு விதமாக வெளிக்காட்டி நிற்கும் அவளது வழமையான பதில்களை ஒரு வார்த்தைக்குள் அடக்கியிருந்தது அந்த வார்த்தை என்பதனை அவனால் சட்டென உணரக்கூடியதாக இருந்தது. மரணம் குறித்து உரையாடக்கூடிய ஒரு தருணம் இல்லை இது என்பதனை அவன் உணர்ந்திருந்ததால் இதனை அந்த இடத்திலேயே நிறுத்த யோசித்து,


உடனேயே  அதனைப் பகிடியாக்கி “க்ங்”என்று  வாயிற்குள் விழுங்கிய ஒரு சிறிய குறுஞ்சிரிப்பினைக் காட்டியபடி  கொஞ்சம் சீரியசான தோரணையில்,

“ இஞ்சே… ,  பகிடியை விட்டுட்டு, பியூனரல் ஹோமிற்குச் சென்றதும்  ஹோலுக்க உள்ள நுழைய முன்பு உன்னுடன் நான் கொஞ்சம் பேசவேண்டும். அதற்கு முதல் உன் பதட்டம் குறைய வேண்டும்.” எனச் சொன்னான். அந்தப் பதிலில் அவளின் அத்தனை கோபத்தையும் கரைத்து விடும் ஒருவித உருகிய தொனி இருந்தது. அந்த உருக்கத்தை அவன் வேண்டுமென்றே வரவழைத்துப் பேசினான்.


 “நான் பதட்டப்படவில்லை .இப்போதே பேசு... அங்கு போனவுடன் அதிக நேரம் வெளியில் நிற்கமுடியாது. நாங்கள் ஏற்கனவே பிந்தி விட்டோம்”. என்று இயல்பாக அவளுக்குரிய அவசரமும் கோபமும் தொனிக்கச் சொன்னாள்.


“நீ கார் ஓட்டும் போது நான் உன்னை அதிக தொந்தரவு செய்யக்கூடாது.  ஆனாலும் சொல்லுகிறேன். நீ மறுதலித்த உரையைத் தவிர்த்து என்னால் இன்னொரு உரையைத் தயார் செய்ய முடியவில்லை. ஆக நான் எதைப்பற்றிப் பேசுவது என்று இன்னும்  ஒரு நிலைப்பாட்டுக்கு வரமுடியவில்லை.”


உண்மையில் இதனைச் சொல்லும் போது அவன் அழுதிருக்க வேண்டும். இருவருக்கும் நெருங்கிய ஒருவரது மரணத்தில் அவரைப்பற்றி உரையாற்ற வேண்டிய பொறுப்பு இருவருக்கும் இருந்தும், அவரைப்பற்றிச் சொல்லவேண்டிய கதைகள் பல இருந்தும் எதையும் சொல்லமுடியாது தடுக்கும் நிலை குறித்து அவனுக்குக் கவலை அதிகமாக இருந்தது. ஆனாலும் லிடியாவை மீறி இவனால் தன்னிச்சையாக இயங்கமுடியாமல் இருப்பதனை தற்போதான் உணர்ந்திருந்தான்.


“இது ஒரு பிரச்சனையே இல்லை. பேசாமல் வா..   முதலில் அதனை நான் ஏன் மறுத்தேன் என்பதனைக் கண்டுபிடி. அதன் பின் நீ பேசவேண்டியது குறித்துச் சிந்திக்க உனக்கு ஒரு தடையும் இருக்காது.”  என்றாள்.
அவர்கள் இப்போது பியூனரல் ஹோமின் பின் வாசலுக்கு வந்து விட்டிருந்தார்கள். சனங்கள் ஓரளவுக்கு நிறைந்து நின்னறனர்.  வாசலில் நின்று  எந்த பெயருக்குரியவரிடம் செல்கிறீர்கள் என்று கேட்டு பிரித்து அடையாளப்படுத்தி அனுப்பிவைக்க ஒரு ஆணும் ஒருபெண்ணும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள். ஒருவர் சீன இனத்தைச் சேர்ந்தவர் மற்றய பெண் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக இருக்க வேண்டும். பார்ப்பதற்கு நல்ல உயரமாக இருந்தார். 


அவர்கள் உள் நுழைந்ததும் சிரித்து வரவேற்றபடி “நாம் நினைக்கிறோம் நீங்கள் மிஸ்டர் நா.......க…...ப…...லான் உடலைப் பார்வையிட வந்திருக்கிறீர்கள் என்று, அதற்கு நீங்கள் உள்ளே சென்று இந்த மண்டபத்தின் இடது பக்கம் திரும்பிச் செல்லவேண்டும்” என்று சொன்னார்கள். ஏனெனில் மற்றய மண்டபத்தில் ஒரு இத்தாலிக் காரருடைய மரணச்சடங்கு நடைபெறுகிறது அதற்குள்  சென்று யாரும் இடைஞ்சல் பண்ணக் கூடாது என்று மண்டபத்தினர் இவர்களை முன் வாசலிலேயே நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.


அவர்கள் சொன்னதை நினைக்க  துருவனுக்குச் சிரிப்பு வந்தது.

பார்த்தியா…? என்ன இருந்தாலும் நாகபாலன்  செத்த பின்னும் இடது பக்கம்தானே கிடக்கிறார்” என்று சொன்னான்.

“செத்தவன் குண்டி வடக்கே போனால் என்ன? தெற்கே போனால் என்ன?  இதுக்க உன்ர இடது வேற, பேசாமல் வா”  என்று சத்தமற்று  வாயிற்குள்ளால் குசுகுசுத்துத் திட்டினாள். அவர்கள் உள்ளே நுழைந்ததும் நாகபாலனின் மனைவியின் சிணுங்கல் அழுகை  ஓலமாக மாறியது.


சாம்பிராணி வாசமும் திருவாசகத்தின்  ஓதலும் ஒரு  புதிய வகை உணர்வு  ஒன்றை உடலுக்குள்ளால் பரவவிட்டது. மின் விளக்குகள் மெல்லிய வெளிச்சத்தில் குறைக்கப்பட்டு இருந்தன. அங்கிருந்த பலரை இவர்களுக்குப் பெரிதாகத் தெரிந்திருக்கவில்லை.  இருவரையும் கண்டுவிட்டு எழுந்த நாகபாலனின் மனைவியின் அழுகையை அவதானித்த அவர்கள் கொஞ்சம் அதிசயமாகவே பார்த்தார்கள்.


லிடியாவும் துருவனும் நாகபாலனின் தலைமாட்டில் நின்றார்கள்.  அவரது மூத்தமகள் அவர்கள் எதிரிலிருந்து அவரது பெட்டியில் கைவைத்து விசும்பிக் கொண்டு நின்றாள். நன்றாக அழுது களைத்திருக்கிறாள். நாகபாலனின் மனைவியால் எழுந்து நிற்க முடியவில்லை. முன்னால் கதிரையில் அமர்ந்திருந்த அவரின் தலையை வேறொருத்தி தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அவள் யாரென்று அடையாளம் காணமுடியவில்லை. அவருடைய இனஞ்சனம் மண்டபம் முழுவதும் நிறைந்து விட்டிருந்தனர். யாராலும்  இனம் காணமுடியாதபடி நாகபாலனுக்கு வெள்ளைக்கார மேக்கப் போட்டு அவரது உண்மையான உருவத்தையே மாற்றிவிட்டிருந்தார்கள் பியூனரல் ஹோம்காரர்கள்.


திருவாசகம் பாடிக்கொண்டிருந்த அந்த உருக்கமான மனிதர் இப்பொழுது பாடுவதை இடைநிறுத்திவிட்டு கொஞ்சம் ஓய்வு எடுத்தார். மரணச் சடங்கை நடத்திக் கொண்டிருக்கும் பாவனை அவரது அசைவுகள் ஒவ்வொன்றிலும் தெரிந்தது. அவரது ஓய்வில் அடுத்த நிகழ்விற்கான தயாரிப்பின் முனைப்புத் தெரிந்தது.


இருவராலும் அதிக நேரம் நாகபாலனின் அருகில் நிற்கமுடியவில்லை. பிரேதத்தைப் பார்வையிட வந்தவர்களுக்கு இடம் கொடுத்து வெளியில் வந்தார்கள்.  வெள்ளையும் கறுப்புமாக உடைகளை அணிந்தபடி உள் விறாந்தாவில் சிறுவர்கள் சிலர் நின்றார்கள். அவர்களது முகங்கள் நாகபாலனது உறவினரது பிள்ளைகளாக இருப்பது போல் தெரிந்தது. அங்கே வைக்கப்பட்டிருந்த துண்டுப்பிரசுரங்களை வருபவர்களுக்குக் கொடுப்பதும் திரும்ப அதனை அடுக்கி உரிய இடத்தில் வைப்பதுமாக துடிப்பாக நின்று கொண்டிருந்தார்கள்.


“உரைகள் ஆற்றத் தொடங்கும் வரை வா ரீ றூமில் இருந்து விட்டு வருவோம்” என்று மெல்ல அவளை அழைத்துப் போனான் துருவன். அந்த றூமிற்குள்ளும் அவர்களுக்குத் தெரிந்தவர்கள் என்று யாரும் இருக்கவில்லை. கிட்டத் தட்ட பழக்கப்படாத ஒரு சமூகத்திற்குள் தவறி வந்து விட்டதாக ஒரு உணர்வு வந்து கொண்டேயிருந்தது.


துருவனின் முகம் காய்ந்து கறுத்திருந்தது. இந்தத் தருணங்களில் அவனுக்கு எதைச் சொல்லியும் விளங்கப்படுத்தி விடமுடியாது என்பது லிடியாவுக்குத் தெரிந்திருந்தது. அதனால் அவளுக்குப் பெருமளவில் அமைதியைக் கடைப்பிடிக்கவேண்டியிருந்தது. அது கொஞ்சம் கஸ்டமாகவே இருந்தது அவளுக்கு.


கோப்பியை ஊற்றி எடுத்துக் கொண்டு போய் சுவர்க்கரையோரமாக இருந்த கதிரையில் இருவரும் அமர்ந்தார்கள்.

“நாகபாலனைப்பற்றி, நான் என்ன சொல்ல வேண்டும் என்று நீ நினைக்கிறாய்?”என்று திடீரெனக் கேட்டுப் பேச்சைத் திரும்பத் தொடங்கினான்.

இந்த இடத்திலில் இருந்து அவனுக்கு எதையும் விளங்கப்படுத்த விருப்பமின்றி இருந்தாலும் அவனுடைய கேள்விக்கு பதில் அவளையும் மீறி வந்தது.


“நீ என்னவேண்டும் என்றாலும் பேசு. ஆனால் மரணம் என்பது இலகுவாக எதையும் தூய்மைப்படுத்திவிடக் கூடிய செயற்பாடு இல்லை என்பதனை நீ மனதில் வைத்துக் கொள்”. என்றாள்.

இதை அறிவுறுத்தலா அதிகார உறுக்கலா என்று சிந்திக்க முடியவில்லை. ஆனால் அவளது கதையை மறுத்துவிட வேண்டும் என்பது மட்டும் அவனது மனதுக்கு அப்பொழுது துருத்திக் கொண்டு இருந்தது. தன்னுடைய தனிப்பட்ட பழிவாங்கும் கதைகளாக அவள் தொடர்ந்தும் அவரை மறுத்துப் பேசிக் கொண்டிருப்பது அவனால் ஏற்கக் கூடியதாக இருக்கவில்லை என்பதனால் ஏற்பட்ட துருத்தல் அது. அதனால் அவளை மறுத்து மறுத்துப் பேசிக் கொள்ள வேண்டிய நிலைக்கு ஒருபக்கம் அவளே அவனை நிர்ப்பந்தித்துக் கொண்டிருந்தாள்.


“மரணவீடுகளில் வந்து யாரையும் காயப்படுத்தும் விதமாக நாம் சம்பந்தமில்லாது எதையாவது சொல்லிவிட்டு போகத் தேவையில்லைத்தானே”. என்று கேட்டுவிட்டான்.

தன்னைச் சம்பந்தம் இல்லாது பேசுபவளாகச் சொன்னதையிட்டு அவளுக்கு புழுத்தகோபம் வரும் என்பது துருவனுக்கு நன்றாகத் தெரியும். அவளைக் கோபப்படுத்த வேண்டும் என்பது அவனுக்கு அப்போது தேவையாய் இருந்தது.


“உண்மைதான். நீ சொல்லுவது முற்றிலும் சரியானது.  அப்படியாயின் நீ எதையும் பேசாமல் விடுவதே சிறந்தது என்று உனக்குத் தோன்றவில்லையா?” என்றாள்.

“என்ன சொல்கிறாய்?” என்றுஅதிர்ச்சிப்பட்டான் துருவன்.

 “உன்னை இந்தக்கணத்தில் வைத்து என்னால் குழப்பிவிடமுடியாது. நீ அமைதி கொள். இன்று இரவு நாம் இதுகுறித்துப் பேசுவோம்.”


“அதற்கு முதல் இன்னும் சிறிது நேரத்தில் நான் உரையாற்றியாக வேண்டும். நான் என்ன பேசவேண்டும் என்று நீ நினைக்கின்றாய் என்பதனையாவது சொல்.”


“வாழ்வையும் மரணத்தையும் பிரித்து வேறு வேறாய்ப் பார்க்கின்ற ஒருவனால் பேசும் பேச்சுக் குறித்து எனக்கு அக்கறை துளியும் இல்லை.”


“எனக்குத் தெரியும்  அவரால் நல்ல ஒரு இடதுசாரியாகக் கடைசி வரை வாழமுடியவில்லை என்பது. ஆனால் குறைந்த பட்சம் அவர் அதனை விரும்பினார்.”


“இஞ்சே பார் துரு… அவர் ஒரு இடதுசாரியாக இருக்கவில்லை என்பது மட்டுமில்லை. நான் உனக்கு சில விடையங்களைச் சொல்ல இன்னும் மிக அதிகமான நேரம்  இருக்கிறது.”


“தாம் விரும்புகின்ற  ஆதரிக்கின்ற கருத்துக்களோடு கடைசிவரை  ஒருவரால் இறுதிவரை வாழ்ந்து முடிக்க முடியாமல் இருப்பது அவர்கள் குற்றம் மட்டுமில்லைத்தானே. அவர்களுக்கும் குடும்பம் உறவினர்கள் என்று ஒரு பெரிய வட்டம் சுற்றியிருக்கிறது.”


“நீ என்னை மிக அதிகமாக கோபப்படுத்தலாம் என்று நினைக்காதே. நான் கோபத்திலும் நிதானமாக முடிவுகளை எடுக்க நீண்ட நாட்களுக்கு முன்னர் பழகிவிட்டேன்.”

“நீ என்ன சொல்கிறாய்?”


“நீ இப்போது  என்ன பேசுவது  என்பதனை மட்டும் யோசி என்று சொல்கிறேன்.”
“அதனை நீதான் குழப்பி சிதறடித்துவிட்டாய்.”


“இன்று நீ தவறிழைத்து விடக்கூடாது என்று ஒரு சிறிய விருப்பம் எனக்குள் இன்னமும் இருக்கிறது.”

இருவரது தர்க்கங்களும் சத்தங்களால் உயர்ந்து கொண்டே போனது.  இந்தத் தர்க்கங்கள் எந்த இடத்திலும் சிறிதளவும் ஒட்டிக்கொள்ளமுடியாதவையாகவே இருந்தன.

தன்னைத் தவறிழைக்கிறாய் என்று குற்றம் சுமத்திய பின் அவனால் இதற்கு மேல் அங்கிருக்க முடியவில்லை. அதற்குள் இருந்து கொண்டு குரலை உயர்த்திஅவளோடு சண்டையிட அவனால் முடியவில்லை.


“நான் வெளியில் போய் நிற்கிறேன்” என்று சொல்லியபடி எழும்பியவனை மேல் கண்ணால் நிமிர்ந்து பார்த்தாள். அவளது கையோ குடித்து முடிந்து போன கோப்பிக் கப்பை மெதுவாக இறுக்கமாய் நசித்துக் கொண்டிருந்தது. தன்னுடைய கப்போடு சேர்த்து அவளுடையதையும் வாங்கிக் குப்பைக் கூடையில் இட்டான்.  அவள் தன்மீதிருந்த ஆத்திரத்தை அதுவரை கோப்பிக் கப்பில் இறக்கிக் கொண்டிருந்ததை அவன் அப்போது உணர்ந்தான். வழமைபோல லிடியா மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறாள் என்பதனை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.


நேரம் எட்டுமணியை நெருங்கிக் கொண்டிருந்தது.

“நான்  உள்ளே ஹோலுக்குள் போகிறேன்” என்று எழுந்தவளை சுற்றியிருந்தவர்கள் அந்த நேரம் விசித்திரமாய்த்தான் பார்த்தார்கள். அவர்களுக்கு லிடியாவை முன்பின் தெரிந்திருக்கவில்லை.

எழும்பிப் போன லிடியா இப்போது நாகபாலனின் மனைவியின் அருகில் இருந்து அவளைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.  சாம்பிராணியின் வாசம் இப்போது இன்னமும் தூக்கலாக வந்து கொண்டிருந்தது.  பிரேதத்தின் வாசனையே  சாம்பிராணி வாசமாகத்தான் பொதுவாக  மரணவீடுகளில் மாறிவிட்டிருக்கிறது. அழுகையும் விசும்பலும் கொஞ்சம் குறைந்திருந்த இந்தக் கணத்தில் உயர்ந்த கறுத்த நீள்குடும்பி வைத்த ஒருவர் எழும்பி மைக் இருக்கும் இடத்திற்கு வந்தார். இதுவரை பட்டினத்தார் பாடலையும் திருவாசகத்தையும் மாறிமாறிப் பாடிக் கொண்டிருந்த அந்த  மெல்லிய  மொட்டை மனிதர் தனது மைக்கை அவரிடம் கொடுத்துவிட்டு சற்று விலத்தி நின்றார். அவர் ஒதுங்கி நின்றதனைப் பார்க்கும் போது ஓரளவிற்கு வேலை முடிந்த நேரத்திற்கு தான் வந்து விட்டதனைச் சொல்வதாக இருந்தது.


இப்போது மைக்கின் முன் வந்து நின்ற அந்த நீள்குடும்பி மனிதர் எந்தவொரு சொல்லையும் உச்சரிக்கத் தொடங்கும் முதலே அழத் தொடங்கிவிட்டார். பின் சிறிது அமைதி. அதிக நேரம் அமைதிக்காக அவர் எடுத்துக் கொள்ளவில்லை உடனேயே தொண்டையை சிறிது செருமிச் சரிப்படுத்திக் கொண்டு,

“திரு நாகபாலன் என்ற என் அன்பிற்குரிய எனது மைத்துனர் ஊருக்கு என்றும் நாகத்தார். எனக்கு  அவர்  அன்பு அத்தார்.”

என்று சொல்லிக் கொண்டு ஒரு இரங்கல் உரையைத் தொடங்கினார். அவர் கையில் வைத்து இருக்கும் பேப்பர் குறிப்பினைப் பார்த்தால் அவர்தான்  அடுத்து வருகின்ற உரையாற்றும் நிகழ்வை நடாத்த இருப்பவராகத் தெரிந்தார். அவரை மட்டுப்பிடித்த துருவன்  உடனே வெளியில் வந்து வாசலில் நின்ற உறவினர் பொடியன் ஒருவனிடம் சொல்லி துருவன் என்ற பெயருக்குரிய ஆளது பெயரை உரையாற்ற அழைக்க வேண்டாம் அவர் இங்கு இல்லை என்று சொல்லி அனுப்பிவிட்டு உடனேயே வெளியில் வந்து லிடியாவின் கார் அருகில் நின்றான்.


இன்றைய நிகழ்வில் தான் உரையாற்றாமல் விடுவது ஒரு பிரச்சனையே  இல்லை ஆனால் இந்த ஒரு காரணத்திற்காக நான் லிடியாவுடன் மிக அசிங்கமான சண்டையையும் தொடர் கோபத்தையும் தோற்றுவிக்க வேண்டி வரப் போகின்ற  நிலையை யோசிக்க அவனது மனம் குழம்பிக் கொண்டே இருந்தது. மறுபக்கம் விட்டேத்தியாகிவிட்ட தருணம் ஒன்றில் தவித்துப் போய் இருப்பதாக மனம் இருந்தது. காற்று லோசாக பாதங்களின் கீழாகவே பறந்தது. இந்தக் கணத்தைக் கடக்க அவன் பெரும்பாடு பட்டுக் கொண்டிருந்தான்.


உண்மையில் நாகபாலனை லிடியாவிற்குத்தான் துருவனைவிட மிக அதிகமாக தெரியும். அவளுக்கு இயக்கத்தில் சித்தாந்த வகுப்புக்களை நடாத்தியவரே அவர்தான். அப்போது அவர் எல்லோராலும் தோழர் சித்தர் என்று அழைக்கப்பட்டுக்கொண்டிருந்தார்.


இப்போது பார்க்கின்ற மொட்டந் தலையோ மழித்த முகமோ அல்ல அப்போது அவருக்கு. ,இளந்தாடி இறுக்கமான பேச்சு, உலகத் தரவுகள் எல்லாம் புள்ளிவிபரங்களாக இருக்கும் விரல் நுனிகள், தலையில் தொப்பி, மூக்கில் மிதக்கும் கண்ணாடி என்று  வசீகரமான ஒரு தமிழ் விஜயவீராவாக அந்தக் காலத்தில் தோற்றம் கொண்டிருந்தவர் அவர்.


பாடசாலையில் நடைபெற்றுக் கொண்டிருந்த  இயக்கத்தின் ஒரு கூட்டத்தில் லிடியா உரையாற்றிக் கொண்டிருந்தாள்.  மற்றய எல்லா இயக்கக்காரரும் இவர்களுடைய பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டிருந்த காலம் அது.


“இங்கே குமுதினிப்படகில் குருதிநீர் சிந்திய மக்களும் அங்கே அநுராதபுரம் ஹபரணையில் குருதிநீர் சிந்திய மக்களும் அப்பாவி மக்களே! அப்படியாயின் அங்கிருந்து இங்கு வந்த அந்தக் கொலைஞர்களுக்கும் இங்கிருந்து அங்கு சென்ற இந்தக் கொலைஞர்களுக்கும் என்ன வித்தியாசம்?”

 என்று சத்தமாகக் கேள்வி எழுப்பி பேசிய தைரியத்தை அப்போதே அவளுக்கு உருவாக்கிவிட்டவர் தோழர் சித்தர்தான். இப்போது நினைக்க எல்லாம் ரசிக்கக் கூடியதாக மட்டுந்தான் இருக்கிறது. மாற்றம் நிறையவே வந்துவிட்டிருக்கிறது. எல்லா இடத்திலும் மாற்றம் வந்து என்ன…! லிடியாவில் தான் ஒருமாற்றமும் இல்லை. அதே உணர்ச்சிவசப்படுதல். அல்லது உடனே ஒரு சண்டை. பின்பு ஒரு விலகல். நீண்ட மவுனம் இதுதான் அவள். இது எல்லாவற்றிற்குள்ளும் ஒழிந்திருப்பது ஒன்றேயொன்றுதான் என்று ஒருபோதும் சொல்லிவிடவே முடியாத வடிவம் அது.


பியூனரல் முடியும் நேரத்தில் எதுவுமே தவறாக நடந்துவிடவில்லை என்ற ஒரு மிதப்பு முகத்தில் தெரிய “என்ன கிளம்புவமாடா?” என்று  கேட்டபடி துருவன் நின்ற இடத்திற்கே வந்தாள்.

தலையை மட்டும் ஆட்டியபடி காரில் ஏறினான்.  கார் மெல்ல எந்தச் சலனமும் இல்லாமல் பிரதானதெருவை அடைந்து ஓடத் தொடங்கியது. அவனது மனமோ இப்போது மிகுந்த சலனத்திற்குள்ளானது. கண்களை மூடிச் சீட்டில் சாய்ந்தான். லிடியா எதிலிருந்து மீண்டும் பேச்சைத் தொடங்குவாள் என்று எண்ணமுடியாமல் இருந்தது அவனுக்கு. தான் நிகழ்த்தமுடியாது போன உரையிலிருந்தா? அல்லது நாகபாலன் ஒரு உண்மையான இடதுசாரியில்லாது சிதைந்து போனார் என்பதிலிருந்தா? என்று யோசித்தக் கொண்டிருந்தது மனது. சிறிதுதூரம் கூட கார் சென்றிருக்காது.


“விசையா அக்கா பாவமடா... தலையில தண்ணிய வாத்திற்று வந்திருக்கிறா. தலையைக்கூட ஒழுங்காத் துடைக்கேல்ல” என்றாள்.

“பிரேதம் எடுக்கமுதல் ஒருத்தரும் முழுகிறேல்ல இவ ஏன் இப்பிடி முழுகினவா எண்டு தெரியேல்ல.” என்று தொடர்ந்தாள். பிரேதம் எடுக்கமுதல் முழுகிறது அல்லது முழுகாமல் விடுற சம்பிரதாயம் எல்லாம் லிடியாவுக்கு ஒரு பிரச்சனையே இல்லை. ஏன் இப்படிப் பேச்சைத்  தொடங்கிறாள் என்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் மூடிய கண்ணைத் திறக்கவில்லை அதனால் அதற்குரிய பதிலை அவனுக்குச் சொல்லவேண்டியிருக்கவில்லை.


இப்போது சப்பல் சதுக்கத்தின் மேல்வீதியால் சென்றுகொண்டிருந்த காரினை சுற்றிவளைத்து திரும்பக் கொண்டுவந்து வீதிக்கரையில் இருந்த ஒரு பார்க்கிங்கில் நிறுத்தினாள். 

“வா உந்தக் கோப்பிக் கடையில் கொஞ்ச நேரம் இருந்து கதைப்பம்” என்றாள்.

லிடியாவின் இந்தமாதிரியான அதிசயக் குணங்கள் அவள் மீது அவனுக்கு ஒருபொழுதும் அளவுகடந்த கோபம் எற்படுத்தியதில்லை. ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு என்று வெளிக்கிட்ட எத்தனையோ பேர்  வாழ்வைத் தொலைத்துவிட்டு யாருடனும் எதுவுமே பேசாமலே தமக்குள் உறைந்து போயிருக்கும் போது இவள் மட்டும் இவ்வளவு காலமும் இந்தச் சூழலுக்குள் மாறிமாறி இழுபட்டுத்திரிவது என்பது சிறிய விடையமல்ல என்பதனை அவன் ஒவ்வொரு பொழுதிலும் உணர்ந்திருக்கிறான்.


கோப்பிக்கடையில் சனநெருக்கடி கூடுதலாகவே இருந்தது. உதிர்காலத்தின் ஆரம்பகாலம் மெல்லிய குளிரோடு வெயில் நன்றாக எறித்துக் கொண்டிருந்தது. கடையின் வெளிவிறாந்தையில் இருந்தால் இதமாக இருக்கும் என்று அமர்ந்தார்கள். சுற்றிவர றெஸ்ரோறன்றுகளாக இருந்தாலும் அத்தனையும் சனங்களால் நிரம்பியிருந்தது. வீதிக்கரையோரங்களில் நடந்து செல்லும் மனிதர்களுக்கும் குறையற்று தொடர்ந்து   நடந்து கடந்து கொண்டிருந்தார்கள். லிடியாவிற்கு மனித முகங்களைப் பார்த்துக் கொண்டிருக்கப் பிடிக்கும் என்பது துருவனுக்குத் தெரியும். சன நெருக்கமும் சனத்தின் சத்தமும் இல்லாது இருப்பது தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கைதியாக இருப்பதான உணர்வே தனக்கு எப்போதும் ஏற்படுவதாக அவள் அடிக்கடி சொல்லியிருக்கிறாள்.

“இதில இரு” என்று ஒரு மேசையைக் காட்டி இருந்தாள்.

“சுத்திவரச் சனங்களால் நிறைஞ்ச  இந்த மேசை கிடைச்சதுக்கு நாம் சந்தோசப்படோணும்.” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, இடுப்பு நிறைய பேனைகளையும் ஓப்பினர்களையும் கொழுவியபடி வெயிட்டர் வந்து ஓடர் எடுத்துச் சென்றாள். பம்பரம் போல் சுழன்று கொண்டு மஜிக் செய்பவர்களைப் போல் அத்தனை வெயிட்டர்களும் அந்த ரெஸ்ரோறன்றிற்குள் சுற்றித் திரிந்தார்கள். எத்தனை மனிதர்களது விதம் விதமான உடலசைவுகள். மனித இரைச்சல்கள். துருவன் மெய்மறந்து போயிருந்தான்.

அவனது தலையில் தட்டி “டேய் என்ன! என்னைப் புடிச்சுத் தின்னவேண்டும் என்று கோபமாக இருக்கிறாயா?” என்று கேட்டாள்.

மெல்லிதாக முகத்தைச் சுழித்து, இல்லை என மறுத்தான்.

அவனால் சில விடையங்கள் சரிவர விளங்காமல் புரிந்து கொள்ளாமல் எப்படிக் கோபப்படுவது?  என்று சொல்வதைப் போல் இருந்தது அந்தச் சுழிப்பு.

“உன்னைப்போல் நாகத்தாருடன் நான் அதிகம் நெருங்கியிருக்கவில்லை. அவர் மீது எப்போதும் எனக்கு மிகுந்த மதிப்பு இருக்கிறது.” என்றான். அதற்குள் அவன் தனது கோப்பியினை இரண்டுமுறை குடித்திருந்தான்.

பெருமூச்சு ஒன்றைத் தன்னையறியாமல் விட்டவள்,
“ எனக்கும் அவர் மீது மிகுந்த மதிப்பு இருக்கிறது துரு” ஆனால்… என்று இழுத்தபடி தலையை வெறுப்பாய் ஆட்டினாள். அவள் தனது கோப்பியினை இன்னும் குடிக்கத் தொடங்கியிருக்கவில்லை. துருவனிடம் இருந்த இயல்பு நிலை அவளிடம் சிறிதும் இல்லாது இருந்தது. அவள் இழுத்துச் சொன்ன “ஆனால்…” என்ற வார்த்தைக்குப்பின்னால் இருக்கின்ற அர்த்தங்களை அவனால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அவளை உற்றுப் பார்த்தான் துருவன்.

“ஒரு குறுந்தாடியும் வைத்து கண்ணாடியும் அணிந்தால் மட்டும் போதாது புரட்சி செய்வதற்கு! அவர்கள் அப்படித்தான் நம்பினார்கள். அவர்கள் பின்னால் நாங்கள் சென்றோம். நாங்கள் என்பது வெறும் எண்ணிக்கையல்ல. எத்தனையோ மனிதர்களது வாழ்வு அது. அதில் ஒது துரும்பளவாவது பிரியோசனப்பட்டதா என்று யோசி.” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே


“நீ நடந்து முடிந்தவை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறாய்.” என்றான் குறுக்கிட்டு.


“எதுவும் முடிந்து விடவில்லை துரு… எல்லாமே தொடர்ந்து கொண்டிருக்கிறது. நான் முடிந்தவை பற்றி எதையுமே பேசவில்லை.”


“இப்படி மரணச் சடங்கில் வைத்து நீ அவரை அவமானப்படுத்துவது அழகல்ல.”


“தெரியும். ஆனால் மரணங்களால் பாவங்களைக் கழுவிவிடமுடியாது என்று உனக்குத் தெரியும்தானே.”


“அவரை இவ்வளவு தூரத்திற்கு நீ வெறுக்க வேண்டியதில்லை..”


“நான் அவரை வெறுக்கிறேன் என்றால் அவருடைய பியூனரலுக்கே வந்திருக்கமாட்டன். நான் அவரை ஒருபொழுதும் வெறுத்ததில்லை. அது அவருக்கும் நன்றாகத் தெரியும். ஆனால் ஒரு சமூகப் புரட்சிக்காரனுக்கு முக்கியம், முதல் குண்டைத் தனது குடும்பத்திற்குள் வைக்கத் துணிவிருக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் தன் முன்னுள்ள சமூகத்திற்குள் அதனை வைக்க வெளிக்கிட வேண்டும். எமது புரட்சிக்காரர்களுக்கோ அந்தத் துணிவு ஒருபோதும் இருந்ததில்லை. தமது குடும்பங்களை தீட்டுப்படாது நல்லபடி பாதுகாத்துக் கொண்டு ஊரான் வீட்டில் புரட்சித் தீ பாடம் நடாத்தியவர்கள்தான் அதிகமான நமது புரட்சிவாதிகள். அதைவிடவும் தம்மளவில்  கூட மாற மனமற்றவர்கள் அவர்கள்.”


“ஒருவருடைய சில நடவடிக்கைகளை மட்டும் வைத்து நீ ஒட்டுமொத்த வாழ்வையும் சிதறித்துவிடமுடியாது. அப்படிப் பார்த்தால் உனக்கு நேர்மையானவர்கள் என்று யாருமே கடைசியில்  மிஞ்ச மாட்டார்கள். எல்லாரும் ஒரு வகையில் பலகீனமானவர்கள்தான்”

“அவருடைய தனிப்பட்ட நேர்மையைப்பற்றியே நான் எதையும் சொல்லவில்லை. அவருடைய தனிப்பட்ட நேர்மை நேர்மையின்மை குறித்து எனக்கு அக்கறையே இல்லை. அவர் மற்றவர்கள் குறித்து அல்லது சமூகம் குறித்து பேசும்போதுதான் எனக்குச் சிக்கல் வருகிறது.”


“இந்தச் சமூகத்திற்காக ஒரு குறிப்பிட்ட காலங்களில்அவர்கள் தம்மைத் தியாகம் செய்தவர்கள். அதையெல்லாம் நீ குறைத்து மதிப்பிடமுடியாது.”


“என்ன தியாகம்? இங்கேபார். அவர்களை நம்பிப் பின்னால் போன எங்களுக்கு எதைக் கற்பித்தார்கள். எங்களக் கடைசியில் எங்க கொண்டுபோய் விட்டார்கள் என்பது பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறன். இவர்கள் மீது வைத்த நம்பிக்கையில் எத்தனை குடும்பம் தெருவிற்கு வந்தது எண்டு தெரியுமா உனக்கு? டேய்… நீ என்ன நான் சொல்லுற ஒண்டையும் கடைசிவரை விளங்கிக் கொள்ளவே கூடாது என்றா இருக்கிறாய்?” எனக் கேட்டாள்.

“இல்லை நான் சொல்வதனை நீதான் புரிந்து கொள்ள மறுக்கிறாய்.” என்றான்


“இஞ்ச கொஞ்சம் நிப்பாட்டுறியா? இங்க வெளிநாட்டுக்கு வந்தவுடன அவர முதல் முதல் கண்ட போது ஒண்டு கேட்டன்.  தோழர் உங்கள நம்பிக் கடைசிவரை இருந்த இருநூற்றிச் சொச்சப் பொடியள ஏன் தோழர் அவங்களிட்டக் கொடுத்தனீங்கள்.? என்று கேட்டன். உடன அவர் கேட்டது என்ன தெரியுமா? எனக்கு இந்தக் கதை எப்பிடித் தெரியும் எண்டு கேட்டார். அந்தப் பொடியள அவங்களிட்ட கொடுக்கிறதுக்கு என்ன உரிமை உங்களுக்கு இருந்தது? என்று கேட்டன். இத நீ என்னட்டக் கேட்கிறதுக்கு உனக்கென்ன உரிமை இருக்கெண்டு திருப்பிக் கேட்டார். உங்கள நம்பி இருந்த பொடியளின்ர உயிரக் கொடுத்திட்டு நீங்கள்  இங்கு வர எப்புடி உங்களுக்கு மனம் வந்தது.? அவங்கள அவங்கட தாய் தேப்பனிட்ட விட்டிட்டு வந்திருக்கலாம் எல்லோ எண்டு கேட்டன். கொதித்துப் போய்  எழும்பி நிண்ட அவர் “நீ உன்ர சாதிப் புத்தியக் காட்டிறாய். வெளில போடி” என்றார். அண்டைக்கு விசையாக்கா இல்லாட்டி அவர் என்னை வீட்டை விட்டுத் துரத்தியிருப்பார்.  கொஞ்ச நேரத்துக்குப் பிறகு  வந்து தன்னை மன்னித்துக் கொள்ளும்படி கெஞ்சினார். நான் என்னத்தச் சொல்ல. விடுங்க தோழர் எண்டு சொல்லிப் போட்டு விசையாக்காவுடன் குசினிக்குள்ளேயே இருந்து பேசிவிட்டு வந்தன்.”

துருவனால் நம்ப முடியாமல் இருந்தது. இயக்கத்தின் சென்றல் கமிட்டி மெம்பராய் இருந்தவர். சமூக வீஞ்ஞானக் கல்வி வட்டத்தினை நடாத்தியவர் இப்படிச் சொல்லியிருப்பார் என்று நினைத்துப் பார்க்கக் கஸ்டமாகத்தான் இருந்தது.  ஆச்சரியப்பட்டுப் போயிருந்தான் அவன்.


 சரி…இதுவரை உவங்கள் செய்ததெல்லாத்தையும் விடு. இஞ்சபார் துரு… இப்ப…. கொஞ்சக்காலமாக “முன்னாள் போராளிகள்”, “முன்னாள் போராளிகள்” என்று அவர்களில் அக்கறையாக இருப்பதாக எழுதிக் கொண்டிருந்தார்கள். உனக்கு  ஞாபகம் இருக்கா?

“ம் … தெரியும் காசும் சேர்த்து அனுப்பினார்கள்”

என்ன மொக்கன்களாடா உவங்கள்?

“டேய்… முன்னாள் போராளிகள் என்ன திடீரென இப்ப புதிசா முளைச்ச ஆட்களாடா?”  இந்தப் போராட்டம் தொடங்கின காலத்தில இருந்தே அவர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள்.” எல்லா இயக்கத்திலயும் இருந்தும் திரும்பி வீட்டிற்கு வந்தவர்கள் எல்லாருமே “முன்னாள் போராளிகள்” தானே ஏன் இவர்களும் நாங்களும் முன்னாள் போராளிகள் தானே.

முதல்ல போராளிகள் என்றாலே  போரில அடிபட்டுச் சாகோணும் திரும்பி வரக்கூடாது எண்டுறதுதான்டா எங்கட ஆக்களின்ர கணக்கு. அப்பிடித் திரும்பி வந்து வீட்டில் இருந்த எத்தனை பேரைச் சுட்டுக் கொண்டிருப்பாங்கள். இதனைச் சொல்லும் போது லிடியா தனது தலையைச் சிலுப்பிச் சிலுப்பி சுற்றிச் சுழற்றிச் சொல்லிக் கொண்டிருந்ததை துருவன் வியப்புடன் கவனித்துக் கொண்டிருந்தான்.

“உனக்கு நிறைய விடையம் தெரியாது. இயக்கம் எங்களக் கை விட்ட உடன என்ர குடும்பமும் என்னைக் கைவிட்டு ஊரும் கைவிட்டுட்டுது. இயக்கம் இல்லாம போனாப்பிறகு அதுக்கங்கால என்ன செய்யுறது எண்டு எனக்குத் தெரியேல்ல. இயக்கத்தில இருந்த ரவி...   நாகத்தாருக்கு நல்லாத் தெரியும். கடைசிவரை அவற்ற பொடிக்காட்டாய் இருந்தவன் அவன். அவன் தான் என்னைக் கலியாணம் கட்டினான். அதுக்குப் பிறகு என்ர வாழ்க்கையே மாறிச்சுது. ஆனா கலியாணம் முடிஞ்சு எட்டு மாசத்தில அவன் வைச்சிருந்த மிளகாய்த் தோட்டத்துக்கயே படுத்திருந்து தண்ணியள்ளப்போன இடத்தில வைச்சு அவனச் சுட்டாங்கள். ஏன்சுட்டாங்கள்? ஒருகாரணமும் இல்லை. முன்னாள் போராளிகளை இந்நாள் போராளிகள் சுட்டாங்கள். யாரு கேட்டான் நியாயம்?  உனக்குத் தெரியாது அப்ப சவத்த தூக்கக் கூட யாரும் வரேல்ல.”

துருவனுக்கு இதனை அவளது வாயிலிருந்து கேட்பது மிகவும் கஸ்டமாக இருந்தது. இயக்கம் இருந்த காலத்திலேயே இயக்கத்தை விட்டு இங்கு வந்தவன் அவன். நடந்த பல கதைகளை அவனாலும் அறிந்திருக்க முடியவில்லை. அவளது முகத்தைப் பார்ப்பதற்குச் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தான்.

“என்ர  மகள் ஆசாவுக்கு அப்பனத் தெரியாது. அவள் பிறக்கேக்க அவன் இல்ல. உனக்குத் தெரியுமாடா? இந்த வெளிநாட்டுக்கு வந்திராட்டி அந்த சமூகத்திற்கு நான் ஒரு வேசை. ஆக  முன்னாள் போராளிகள் இந்த சமூகத்திற்கு எப்பவும் தேவையில்லாத ஆக்கள். இதில இப்ப மட்டுமென்ன முன்னாள் போராளிகள்பற்றி புடுங்கின அக்கறை? இவங்களுக்கிருந்த இந்த அக்கறையெல்லாம் பொய்தானேடா…?”

 சாதரணமாய் இந்த இடத்தில் அவளுக்குக் கண்ணீர் வந்திருக்கோணும். அவளுக்கு அது வரவில்லை.

“இவ்வளத்தையும் நான் அவரிட்ட கேட்டுச் சண்டை புடிச்சனான். அதை விளங்கிக் கொள்ளுற அறிவில அவர் இருக்கேல்ல. அவருக்கு தான் எப்பவும் சமூகத்திற்கப் புத்தி சொல்லுற ஒரு அறிவாளியா இருக்கோணும் எண்டுறதுதான்.”

“முந்தி ஒரு காலத்தில அவர் எங்களுக்கு சமூக விஞ்ஞான வகுப்பெடுத்த காலத்தில மதங்கள் பற்றி சாதிய சடங்குகள் பற்றி புரட்சி தீ பறக்க பேசிய எவ்வளவு பேச்சை மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்திருப்போம். அந்தப் பேச்சக் கேட்டதுக்குப் பின்னால் தங்கட  வாழ்க்கையை முற்றாக மாற்றியமைத்த எத்தனை பெண்கள எனக்குத் தெரியும். ஆனா பார். அதனச் சொல்லிக் கொடுத்த இவர் தன்ர தாயின்ர செத்தவீட்டில பழுத்த ஒரு பிராமணிக்குமுன்னால் மேலில பூணூலும் விரல்ல தெற்பையையும் போட்டுக் கொண்டிருந்து தாயிற்கு கடமை செய்யுறார். இவராடா புரட்சியாளன்? யாரை ஏமாற்றுறான்கள்.?

அவரிட்ட என்னைப் போல் ஏமாந்து போனவர்தான் உந்த விசையாக்காவும். அவர கலியாணம் கட்டினாப்பிறகு அவாவ இண்டு வரைக்கும் வெளியால எங்கயாவது  நீ கண்டிருக்கிறியோ?”

அவனால் இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. விசையா அக்காவுடன் அவ்வளவு நெருக்கம் இல்லை. இயக்கத்திலும் இரண்டொருதடவை கண்டிருக்கிறான். பிறகு இங்கு வந்த பழக்கம் தான். என்றாலும் “அது விசையாக்காவில்தானே பிழை” என்றான்.

 “எண்பதுகளில அவவின்ர தைரியம் எங்களுக்குள்ள ஒருதருக்கும் இல்ல. தட்டந் தனிய முல்லைத்தீவு ரவுணில இருந்து யாழ்ப்பாணத்திற்கு சைக்கிளில போற ஆளடா அவா. . அவவின்ர அவ்வளவு தைரியத்தையும் திண்டான் உவன். 

மன்னித்துக் கொள் துரு. "உவன்" எண்டு திட்டாட்டி இரவைக்கு என்னால நிம்மதியாப் படுக்கேலாது. உனக்குத் தெரியாது உவனள் என்னை இயக்கத்திற்கு கொண்டு போகாட்டி நான் கூட வேற ஆள்.”

லிடியா இவ்வளவையும் சொல்லிமுடியும் வரை எந்தவித பெரிய இடையூறுமற்று துருவன் கேட்டுக் கொண்டேயிருந்தான். தன்னுடைய உணர்ச்சியை அடக்குவதற்காக சுட்டுவிரலால் தன்னுடைய நெற்றியைத் தேய்த்துக் கொண்டே அனைத்தையும் சொல்லிக் கொண்டிருந்தாள். சித்தரில் இருக்கிற கோபத்தைவிட அவரது குழப்பமான பக்கங்களை துருவன் இன்னமும் அறிந்து கொள்ளாமல் இருப்பதையிட்டே அதிக கோபம் வந்தது அவளுக்கு.
“இப்பவுந்தான் யோசிக்கிறன் இந்த நம்மட அம்பலப்பெருமாள் குளத்தில ஒரு முப்பது வீடுதான் மொத்தமாய் இருக்கும். இதுக்க ஏன் இவங்கள் வந்தாங்கள். எங்கிருந்து வந்தாங்கள்? எங்கள ஏன் இயக்கத்தில சேர்த்தாங்கள் எங்கள மட்டும் திருத்திப்போட்டு இவங்கள் ஏன் இன்னுந் திருந்தயில்ல எண்டு இப்பவும் தான் எனக்கு விளங்குதில்லயடா…” என்று நெற்றியைத் தேய்த்துக் கொண்டிருக்கும் போது
கோப்பி குடித்த பில் 13.75 காசு என்று சுழன்று கொண்டு திரிந்த வெயிட்டர் கொண்டு வந்து வைத்தாள்.