Wednesday 26 December 2018

கனடியத் தமிழ் ஊடகங்களின் தேர்வும் மவுனமும்.- கற்சுறா

கனடாவில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பு- 48இல் வாசிக்கப்பட்ட கட்டுரை இது.

அங்கே வழங்கப்பட்ட குறிக்கப்பட்ட நேரத்திற்குள் விபரங்களுடன் மற்றும் உதாரணங்களுடன் பல விடயங்களை வெளிக்காட்ட முடியாது போய்விட்டது. இதுகுறித்த விளக்கங்களும் அப்படிச் சொல்லிவிட்டுப் போகவல்லது அல்ல. இங்கே குறிக்கப்பட்ட பத்திரிகைகளின் சில மாதிரிகளது ஆசிரியர் தலையங்கங்களை உங்கள் வாசிப்பிற்காக அதன் உள்ளார்ந்த அறிதலுக்காக பிரதி செய்து தந்திருக்கிறேன்.  சமூகம் சார்ந்த அக்கறையோடு தாம் நடத்தி வருவதாகச் சொல்லும் இந்தப் பத்திரிகைகள் எவ்வாறு தமக்குள்ளாக ஒரு பாசிச மனோநிலையைக் கொண்டு இயங்கின  என்பதனை அடையாளப்படுத்துவதற்காக  மட்டுமே இவற்றை இங்கே தருகிறேன்.

 அவற்றின் தொடர் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது. அவர்கள் எப்படி இந்த சமூகத்தை முட்டாளாக வைத்திருப்பதற்கு முயன்றிருக்கிறார்கள் என்பதனை நீங்கள் அவர்களது பத்திரிகைகளைத் தொடர்ச்சியாக வாசிக்க வேண்டும். ஒரு சமூக அக்கறையாளனுக்கு இந்தப்பித்தலாட்டத்தை விளங்கிக் கொள்வதற்கு எனது கட்டுரை கூடத் தேவையில்லை. சமூக அசைவியக்கத்தில் தம்மை ஒரு ஊடகவியலாளர்கள் எனச் சொல்லிவரும் இவர்கள், அந்தச் சொல்லுக்குரிய அர்த்தத்தை ஒருபோதும் புரிந்து கொண்டதே இல்லை. கனடியத் தமிழ்ச் சூழலில்  இயங்குகின்ற சமூக ஆர்வலர்கள் இந்தப் பத்திரிகைகளது – வானொலிகளது- தொலைக்காட்சிகளது போக்குகள் அதனை நிர்வகிக்கும் பித்தலாட்டக்காரர்களது பித்தலாட்டங்கள் குறித்த விரிவான பார்வை அவை குறித்த கருத்தாடல்களை எதாவது ஒரு தளத்தில் மேற்கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன். 

ஆனால் இந்த சமூகத்தைத் தொடர்ந்தும் முட்டாளாக வைத்திருப்பதற்கு துணை போகும் ஊடகவியலாளர்களும் எழுத்தாளர்களும் கலைஞர்களும் நிரம்பியிருக்கும் தேசத்தில் அது எவ்வகையில் சாத்தியம் என்று யோசிக்க முடிவதில்லை.  வெறும் வியாபார நோக்கம் கொண்டு அலையும் இந்த வகைப் பத்திரிகைகளை ஒருபொழுதும் யாரும்  தடை செய்யப் போவதில்லை. யாரும் கொழுத்திவிடப் போவதில்லை. யாரும் இல்லாது ஒழிக்கப் போவதில்லை. அவர்களாகக் கொழுத்தினால் அவர்களாகத்  தடை செய்தால் அவர்களாக இல்லாதொழித்தால் மட்டுமே அது நிகழும். மற்றப்படி இந்தச் சனம் முட்டாளாகும் வரை இவர்கள்தான் ஊடகவியலாளர்கள்.

நான் தருகின்ற இந்தப்பத்திரிகைகளது   ஆசிரியர் தலையங்கங்களை உதாரணத்திற்கு வாசித்துவிட்டு மீதியை வாசியுங்கள். எங்கேனும் ஒரு கண்காட்சி வைக்கமுடிந்தால் அல்லது இவை குறித்து நாட்கணக்கில் பேசமுடிந்தால் மீதியை என்னால் பகிர்ந்து கொள்ள முடியும். இந்தப் பத்திரிகைகள் வெளிவந்த காலங்களில் உலகெங்கும் என்ன நிகழ்வு நடைபெற்றது? ஈழத்தில் என்ன நடைபெற்றது?இவை எதனைக் கண்டு கொள்ளாது எதனை மட்டும் கண்டு கொண்டது? யாருக்காக இவை உழைத்தன? என்று நாம் விலாவாரியாகப் பேச வேண்டும். அதற்குரிய காலம் ஒன்று வராமலா போய்விடும். அங்கே நான் அதிகம் பேசத் தயாராக இருக்கிறேன்.
நன்றி
















































கனடியத் தமிழ் ஊடகங்களின் தேர்வும் மவுனமும்
கற்சுறா
கனடியத் தமிழ் ஊடகங்கள் என்பன ஒரு நீண்ட… காலவரலாற்றுப் பக்கத்தை உரித்தாகக் கொண்டவை.
அவை பற்றிக் கொண்ட கருத்துருவாக்கத்தின் சாயல்களை, நான் கவனித்துக் கொண்ட காலங்களில் நமது சமூகத்தில் ஒரு ஊடகத்திற்கு இருந்த அவசியத்தை அவை எந்த வகையில் பயனுள்ளதாக ஆக்கினார்கள்
என்று கவனித்துக் கொண்டிருந்தேன். ஆகையினால் என்னால் முடிந்தளவு இங்கு வெளிவந்துகொண்டிருந்த பத்திரிகைகளை சேகரிக்கத் தொடங்கினேன். முக்கிய கவனம் கொள்ளவேண்டிய நமது சமூக வரலாற்றின் பதிவுகளில் கனடியத் தமிழ்ப் பத்திரிகைகளிற்கு குறிப்பிட்டளவு இடம் உள்ளது என்பது எனது எண்ணம்.
சரி இனி விடையத்திற்கு வருகிறேன்.
தற்காலத்தில் கனடியத் தமிழ்ப் பத்திரிகைகள் என்றதும் இலவசப் பேப்பர்தானே என்று சொல்லி
நாம் அவற்றை முடிந்தளவிற்கு தொடர்ந்து எள்ளி நகையாடியவண்ணமே இருக்கிறோம்.
மா அரிப்பதற்கும் மீனைப் பொரித்துப் போடுவதற்கும் ஏன் குளிர் காலத்தில் சுவர் ஓட்டைகளை
அடைப்பதற்கும் கூட அவை பிரியோசனமற்றவை என்று அண்மையில் நானும் முக நூலில் ஒரு பதிவை எழுதியிருந்தேன்.
உண்மையில் அப்படித்தானா இருக்கின்றன அதிகமான அந்தப் பத்திரிகைகள்? ஒட்டுமொத்தக்
கனடியத் தமிழ்ச் சூழலில் நாம் ரொரன்டோவில் என்று பார்த்தாலே பத்திற்கும் அதிகமான பத்திரிகைகள்
தற்போது வந்து கொண்டிருக்கின்றன. அதிலும் வெளிவந்து நின்று போனவை அனைத்தையும் சேர்த்தால் எண்ணிக்கையளவில் இன்று வரை நாற்பதைத் தாண்டிய மகா கனமான சாதனையை அது
எட்டிவிட்டிருக்கிறது.
அறிவுக்கெட்டிய காலக்கணக்கில் ஈழத்தை விடவும் அதிகமான தமிழ்ப் பத்திரிகைகள்
ரொரண்டோவிலேயே வெளிவந்திருக்கிறது என்பதனை நீங்கள் கண்டுகொள்ளமுடியும்.
இப்படியொரு மிகப்பெரிய பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிற ரொரண்டோப் பத்திரிகைச் சூழலை
நான் மேற்சொன்னது போல் மா அரிப்பதற்கும் மீனைப் பொரித்துப் போடுவதற்கும் கூடப்
பிரியோசனமற்றவை என்று இலகுவாக நாம் அலட்சியப்படுத்திவிட்டுப் போய்விடமுடியுமா?
அது நியாயமானதாக இருக்குமா? என்று யோசிக்கவேண்டியிருக்கிறது.
கனடாவில் இருந்து பொதிகை, தாயகம், ஈழநாடு, ஈழமுரசு, முரசொலி, முழக்கம், நம்வீடு, விளம்பரம், சுதந்திரன்,செந்தாமரை, தங்க தீபம், அக்கினி,உலகத்தமிழர். தாய்வீடு, பூபாளம், முகவரி, வைகறை, இருசு, ஒருபேப்பர், மஞ்சரி, சூரியன் , உதயன்,கனடா உதயன், கனடா வீரகேசரி, சிகரம், நம்நாடு, ஆசீர்வாதம்,
நாயகன், தமிழர் செந்தாமரை.தமிழீழ அரசு, நாடுகடந்த தமிழீழ அரசு,புலத்தில், Tamilmirror , Monsoon Journal ,
The Srilanka Reporter, The Srlankan ANCHORMAN, the Ceylon times,ஆயுத எழுத்து, சக்தி,பரபரப்பு, கதிரொளி, ஈகுருவி,
நாளை, உரைமொழிவு, சமூக நீதிக்கானகுரல் , தீபம், தினத்தமிழ்,, தமிழ்த் தென்றல், துளசி, தூறல்,
வானவில், முதல்வர் வருகை, போன்ற எண்ணிக்கையற்ற பத்திரிகைகள் வந்திருக்கின்றன.
இதில் உரை மொழிவுப் பத்திரிகை தனியே முனைவர்களது ஆய்வுக்கட்டுரைகளையும் முனைவர்களாக
வருவதற்கு ஆய்வுக்கட்டுரைகளை எழுதிப்பழகுபவர்களுக்காகவும் வெளிவந்த இதழ்.
வானவில் இடது சாரிச் சிந்தனையில் செயலாற்றிய குறிப்பிட்ட சிலரால் சமூக அரசியற் கருத்துக்களை
வெளியிடும் ஒரு பத்திரிகையாகத் தற்போதும் வெளிவந்து கொண்டிருக்கிறது. என்பதனை மட்டும்
குறிப்பிட்டுக் கொண்டு
இத்தனை தொகை வகைமாதிரியான பத்திரிகைகளையும் கண்ட மண் இது. இந்த மண்ணில் வாழ்ந்த
மக்களுக்கு ஒரு வித பிரியோசனமும் இல்லாது இருந்தது என்று சொல்லி இவ்வளவு பத்திரிகைகளையும்
குப்பை எனச் சொன்னால் அந்தச் சொல் அவ்வளவு நேர்மையற்ற சொல்லாகவே அமைந்துவிடும்.
இதேபோல்தான் இங்கிருக்கின்ற வானொலி தொலைக்காட்சி சேவைகளையும் நீங்கள் அக்கறை
கொள்ளவேண்டும். வானொலி தொலைக்காட்சி எனப்பார்த்தால் வணக்கம் FM – C.M.R. – CTR- TVI- CTBC-
கீதவாணி, வண்ணத்தமிழ், ஈஸ்ட் FM , தமிழ் வண் என்று பலவகை உண்டு. இங்கே நான் முக்கியமாக
பத்திரிகைகள் குறித்தே பேசுகிறேன். எனக்கு இருக்கின்ற நேர அளவில் இவை குறித்த விளக்கவுரையை சொல்லமுடியாது என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் ஒன்றைக் கவனம் கொள்ள வேண்டும். இன்றைக்கு வெளிவந்து கொண்டிருக்கும் இத்தனை
வகைப் பத்திரிகைகளும் கடைகளில் கொண்டுபோய் வைத்தவுடன் மிகக் குறுகிய நேரத்திலேயே
அவை முடிந்து விடுகின்றன.
சிறிய தமிழ்ப்பலசரக்குக் கடைகளில் பெரிய தமிழ் சுப்பர் மாக்கட்டுக்களில் தமிழ்க்குடும்ப வைத்திய நிலையங்களில் பார்மசிகளில் சாப்பாட்டுக் கடைகளில் என்று கொண்டுபோய் வைத்தாலும் அவை குறிப்பிட்ட மணிநேரத்தில் முடிவடைந்து விடுகின்றன.
இப்படி அவை உடனேயே தட்டுப்பாட்டு நிலைக்கு வருவது என்பது தனியே அவை இலவசப்பத்திரிகைகள் என்பதனால் மட்டுமல்ல. அதனைத் தாண்டி ஏதோ ஒன்று இருக்கின்றது என்பதனையாவது நீங்கள்
அறிந்து கொள்ள முயல வேண்டும். அவ்வகையான அறிதல் முயற்சியின் ஒரு வடிவமாகத்தான்
இந்தக் கட்டுரை தொடர்கிறது.
அந்த ஏதோ ஒன்று என்பது எது? என்பதே மிகப்பெரிய கேள்வி.
மிகவும் நீண்ட… நீள் பாதையில் இடர்களுடன் நடந்து செல்ல வற்புறுத்தப்பட்ட சமூகத்திற்கு…
தடம்மாறாதிருக்கப் பொருத்திய இறுக்கமான “கடிவாளம்” இந்தவகைப் பத்திரிகைகளிடமே இருந்தது.
ஒருவகையில் அவை இறுகப் பூட்டப்பட்ட கடிவாளமாய்த்தான் இவர்களுக்கு எப்போதும் இருந்தது.
அப்படி இருந்த போதும் இந்த மக்கள் நீண்டகாலமாக தமக்குப் பூட்டப்பட்டஅந்தக் கடிவாளத்தையே
வெகுவாக இரசித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதுவே யதார்த்தம்.
அவர்களின் இரசிப்புத் தன்மைக்கேற்றவாறான வார்த்தைகளை இந்தப்பத்திரிகைகள் தமது பக்கங்களில்
நிரப்பிக் கொண்டேயிருந்தன.
அதிலும் சுவாரிசயமான விடையம் என்னவென்றால் பத்திரிகைகள் கொண்டிருந்த கருத்தியல் மட்டுமல்ல
அவர்கள் பயன்படுத்தும் சொற்பிரையோகங்கள் மட்டுமல்ல தலையங்கத்திலிருந்து அதன் கீழே
எழுதப்படும் வாக்கியங்களில் கூட எந்தவித மாறுபாடுகளுமற்று எல்லாப் பத்தரிகைகளும் அதிகமாக ஒரேவிடையத்தையே எழுதிக்கொண்டிருந்த காலங்கள் இருக்கின்றன.
இந்தப் பத்திரிகைகளில் அதிகமானவற்றை நீங்கள் அருகருகே வைத்துப் பார்த்தீர்களானால்
அதிகமானவற்றிற்கு அதன் வடிவமைப்பிலும் எந்த மாற்றமும் இருக்காது.
ஏனெனில் அதிகமான வகை மாதிரிப் பத்திரிகைகளுக்கு வடிவமைப்பாளராக இருந்தவரே அதன் மையக் கருத்துக்களையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்த காலங்களை நான் கவனித்திருந்தேன்.
அப்படியிருக்கும் போது இந்தப் பத்திரிகைகளில் கருத்தளவில் நீங்கள் என்ன மாற்றத்தைக் கொண்டுவந்துவிடமுடியும் என நீங்களே யோசியுங்கள்.
இப்படிச் சாயல் ஒன்றாய் வருகின்ற பத்திரிகைகள் குறித்து
அவற்றை வாசிக்கின்ற வாசகர்களே “கொப்பி அன்ட் பேஸ்ட் ஜேர்னல்” என்று கிண்டலடித்தபோதும்
அவற்றைத் தமது வாசிப்பிற்காக தொடர்ந்து எடுத்துக் கொண்டேயிருந்தார்கள். வாசித்துக்
கொண்டேயிருந்தார்கள். இன்னமும் இருக்கிறார்கள். இந்த வாசிப்பிற்கான காரணமாக அந்த
“இறுகப் பூட்டப்பட்ட கடிவாளத்தையும்” அவர்கள் தம்மளவில் தொடர்ந்து ரசித்துக் கொண்டிருந்தார்கள்
என்பதனை விட வேறு என்ன இங்கு நான் புதிதாகச் சொல்லிவிடமுடியும்.
உண்மையில் இந்தத் தமிழ்ப் பத்திரிகைகளைப் போலவே வேறு மொழிகளிலும் அநேகமான பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றனதான். கேரள மொழியாயினும் சரி ஹிந்தி மொழியிலாயினும் இத்தாலிய
சீன மொழிகளிலும் இவ்வகைப் பத்திரிகைகள் வருவதனை நாம் கவனிக்க முடியும். இந்தத்
தமிழ்ப்பத்திரிகைகள் செய்கின்ற இதே செயற்பாட்டை அவர்களும்தான் செய்து கொண்டேயிருக்கிறார்கள்.
இந்தச் செயற்பாடு தழிழ்ச் சூழலில் மட்டுமல்ல எனக் கதை சொல்லியவர்களையும் நான்
கவனித்திருக்கிறேன்.






வியாபாரச் சூழலில் இப்படியொரு பத்திரிகையைத்தான் நீ எதிர் கொள்ள வேண்டும். அப்படியில்லாமல்
நூறுவீதம் சரியான பத்திரிகையைத் தொடர்ச்சியாகக் கொண்டு வரமுடியாது. என்று சொல்லியவர்கள்
பலரையும் நான் கண்டிருக்கிறேன்.
சமரசங்களற்ற பத்திரிகை என ஒன்றைக் கொண்டு வரவே முடியாது என்றார்கள்.
இங்கே தான் நான் ஒரு தெளிவான விடையத்தைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும்.
நமது தமிழ்ச் சூழலில் வெளிவந்து கொண்டிருக்கின்ற இந்தப் பத்திரிகைகள் ஒருபக்கம் தமது வியாபாரம்
அதற்கான விளம்பரம் என்று செயற்படுகின்ற அதே நேரம் நமது நாட்டின் தீவிரஅரசியலுடனான
கருத்துரைப்பையும் நிகழ்த்தினார்கள். அந்தக் கருத்துரைப்பு ஒவ்வொன்றும் பல நூறு கொலைகளுடன் சம்பந்தப்பட்டுக் கொண்டேயிருந்தது. அதில் முக்கிய கருத்துரைப்பாக இந்தப் பத்திரிகைகளது ஒவ்வொரு
ஆசிரியர் தலையங்கங்களையும் நீங்கள் உற்றுக் கவனிப்பீர்களானால் அவை வழிநடாத்தும் அரசியலை
நீங்கள் விளங்கிக் கொள்ள முடியும்.
இங்கே கேவலமான விடையம் என்னவென்றால் பெரும்பாலான பத்திரிகைகளது ஆசிரியர்
தலையங்கங்களில் கருத்தளவில் ஒரு பெரிய வேறுபாட்டையும் நீங்கள் காணமுடியாது என்பதுதான்.
மற்றய சமூகத்தினரது அன்றாட வாழ்வைப் போல் நமது சமூகத்தின் கடந்த காலம் இருந்திருக்கவில்லை.
நமது சமூகம் கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக அதி பயங்கரமான யுத்த சூழலுக்குள் வாழ்ந்து கொண்டிருந்தது.
நாட்டிற்குள் வாழ்ந்து கொண்டிருந்த வேறுபட்ட சமூகத்திற்குள்ளும் சுமூகமான உறவை
ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக திட்டமிடப்பட்டு இனவாதிகளாலும் மொழி வெறியர்களாலும் மதவெறியர்களாலும் உருவாக்கிவிடப்பட்ட துவேசங்களால் அவர்கள் தமக்குள்ளாக பிளவுபட்டுப்
போயிருந்தார்கள்.
அப்படிப் பிளவுபட்டுப் போயிருந்த சூழலை தம்மளவில் ஒருவிதமான விமர்சனப்பார்வையுமற்று
ஒரேமாதிரியான கருத்தைத் தெரிவிக்கும் லாடன் கட்டிய குதிரைகளாக வலம் வந்து
கொண்டிருந்தவைதான் அதிகமான இந்தக் கனடியத் தமிழ்ப் பத்திரிகைகள்.
ஆனால் பாருங்கள் இந்த லாடன் கட்டிய குதிரைகளாக ஓடுவதற்கு ஈழத்தில் முன்னெப்போதோ வெளிவந்த சுதந்திரன் ஈழநாடு ஈழமுரசு முரசொலி போன்ற அடையாளங்கள் இவர்களுக்குத் தேவைப்பட்டது.
எழுதுவதும் பேசுவதும் மொள்ளமாரித்தனம் பெயர் சுதந்திரன்
பீ தின்கிற நாய்க்கு முத்துமாலை என்று பெயர்.
சரி… இப்படி நான் சொல்லிக் கொண்டிருப்பதற்கான நியாயப்பாடு என்ன எங்கெல்லாம் அப்படிச் சொல்லியிருக்கிறார்கள் என்றும் நான் உங்களுக்கு உதாரணங்களைக் காட்டிவிடத்தான் வேண்டும்.
எனக்கு இந்த உரை நிகழ்த்தி முடிக்கப்பட்டபின் மீதமாக நேரம் இருப்பின் உங்களுக்கு அவற்றை
வாசித்துக் காட்டிவிடமுடியும். அல்லது அவற்றை மிகவிரைவில் நான் எனது தளத்தில் பதிவேற்றி
விடுகிறேன்.
சரி,
இப்படியான மாதிரிப் பத்திரிகைகளிற்குள் நாம் அரிதட்டித் - துளைத்து நுழையும் போது நமக்கு
“பத்திரிகை” களாக பெயர்சொல்லக் கூடியளவுக்கு எஞ்சியிருப்பது தாயகம், தாய் வீடு. சக்தி,வைகறை,
தேசியம் நீதிக்கான நமது குரல் போன்ற சில மாதிரிப் பத்திரிகைகளே. நான் இங்கே இரண்டு மூன்று வெளியீடுகளுடன் நின்று போனவை பற்றி விளக்கமாக எதையும் சொல்லிவிடவில்லை.
இந்தப் பத்திரிகைகளுக்கும் நான் மேற்சொன்ன வகைமாதிரிப் பத்திதிரிகைகளுக்கும் இருக்கும்
வேறுபாடுகள் குறித்து நாம் கட்டாயம் நோக்க வேண்டும்.
முதலில்,
ஒரு சமூகம் வெவ்வேறு வகைமாதிரியான கருத்தாடல்களையும் வெவ்வேறு வகைமாதிரியான
முரண்பாடுகளையும் எதிர்க் கதையாடல்களையும் கொண்டிருந்து அதனை சீர்குலைத்துப்
பார்ப்பதனூடாகத்தான் அந்தச் சமூகம் தன்னுடைய அசைவியக்கத்தை கண்டடைய முடிந்திருக்கிறது.
ஒவ்வொரு சமூகமும் தன்னுடைய வளர்ச்சியை இந்தவகைச் செயற்பாடுகளால் தான் கடந்து வளர்ந்து தாண்டியிருக்கிறது என்றே நினைக்கிறேன்.நமது தமிழ்ச் சூழலும் முடியுமானவரை இப்படியான வாத எதிர்வாதங்களுக்கூடாகத்தான் கடந்து வந்திருக்கிறது
ஆனால் நமது புலம் பெயர் தமிழ்ச் சூழலில் உருவான இந்த வகை ஊடகங்கள் என்பவை தற்காலத்தில்
எப்படியான கருத்து நிலையை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள்? என்று நோக்க வேண்டும்.
தனது சமூகத்தின் அசைவியக்கத்தை நிகழ்த்துவதற்கான ஒரு சிறு குறிப்பைத் தன்னும் எழுதிய
அல்லது உரைத்த ஊடகங்கள் என்று நாம் அடையாளமிடப்படக் கூடியவை எவை எனப்பார்க்க வேண்டும்.
ஒருமுறை பாரீஸ் ஈழநாடு பத்திரிகை ஆசிரியர் குகநாதன் அவர்களுக்கு அப்போதிருந்த
விடுதலைப்புலிகள் “நாய் பார்க்கிற வேலையை நாய் பார்க் கோணும் கழுதை பார்க்கற வேலையை
கழுதை பார்க்கோணும்” என்பதாக எச்சரிக்கை ஒன்றை விடுத்தார்கள்.
அதற்கான காரணம் என்னவென்றால் அப்போதிருந்த விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட ஈழமுரசு பத்திரிகையில் புலிகளது தாக்குதல் குறித்த தகவல்களை வெளியிடுவதற்கு முதல் நாளே குகநாதனின்
ஈழநாட்டில் புலிகளது தாக்குதல் குறித்து வெளிவந்து விடும். அதிலும் ஈழமுரசுப் பத்திரிகையில்
வெளியிடப்படும் இறந்த இராணுவத்தின் எண்ணிக்கையை விட பன்மடங்கு அதிகமாக குகநாதனின்
ஈழநாட்டில் எழுதப்பட்டுவிடும். இதனால் குலையுண்டு போன புலிகள் , நாய் கழுதைக் கதையை
அப்போது குகநாதனுக்கு சொல்ல நேர்ந்தது.
ஈழநாடு குகநாதனையே விஞ்சி நிற்கும் ஆசிரியர்கள் நடத்துகின்ற பத்திரிகைகள் நிறைந்த ரொரன்டோவில் ஒற்றைக் கைவிரல் விட்டு எண்ணக் கூடியளவு பத்திரிகைகளே சமூகம் சார்ந்து ஓரளவு விவாதத்திற்கு சில அடிகளை எடுத்துக் கொடுத்தன. ஆனால் அவை நம்பத்தகுந்த முழுமையான தாக்கத்தைக் கொடுக்க
முடியாதவையாகவே இருந்தன. தம்மளவில் தணிக்கைக்குள்ளாகித்தான் அவர்களால்
தொடர்ந்து இயங்க முடிந்திருக்கிறது.
ஒரு கருத்திற்கு எதிர்க்கருத்து வேண்டாம் தம்மோடு அண்மித்திருக்கிற இரண்டாம் கருத்து… அல்லது
அடுத்த திசையில் இருக்கிற மூன்றாம் கருத்து என்பதையே அதிகமான இடங்களில் எழுதமுடியாத
பத்திரிகைகளாக இவை தொடர்ந்து இருப்பது என்பது அவர்கள் வெளிக் கொண்டு வருகின்ற
பத்திரிகைகளை என்னால் ஒரு “பத்திரிகை” என்று அழைக்கமுடியாதிருப்பதின் கவலையையும்
நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.






ஒரு இனத்தின் அழிப்பை அந்த இனத்தின் எதிராளி மட்டும் அழிக்கத் தேவையில்லை அது தனக்குள்ளாகவும்
அழியும் என்பதனைக் காட்டுவதற்கு இந்தப்பத்திரிகைகளை நீங்கள் உதாரணமாக எடுக்கலாம். நான்
மேற் சொன்ன கடும் வியாபாரப் பத்திரிகைகளில் இருந்து பின்னர் சொன்ன வகைமாதிரிப் பத்திரிகைகளில்
நமது சமூகம் குறித்த கரிசனையின் பால் நின்று சமூகத்தின் மீதான எதிர்கதையாடல்களை நிகழ்த்தியவை
என்று எதனை நீங்கள் கண்டடைவீர்கள்? அல்லது லாடன் கட்டப்பட்ட குதிரைகளாக ஒரே திசையில் ஓடிக்கொண்டிருக்கும் சமூகத்தை மறுத்து எதிர்த் திசை என ஒரு திசையும் இருக்கின்றது என சமூகத்திற்கு
கொடுத்த பத்திரிகை எது என நீங்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
இங்கே நான் சொன்ன முழு வியாபாரப் பத்திரிகைச் சூழலில் இருந்து விலகி தற்போது வெளிவந்து
கொண்டிருக்கும் மாதிரிப்பத்திரிகைகளில் அனைவரும் வாசிப்பதற்கு அளவுக்கு அதிகமான
விடையங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
வாழ்க்கையை நல்லபடி… அதாவது கரைச்சல் இல்லாமல் வாழ்வதற்கும் வாழும் கலைஞர்களையும் வாழ்ந்து முடித்த கலைஞர்களையும் நினைவு கூர்வதாயும் ஈழத்துக் களநிலவரங்களை நேரடி ரிப்போட்டாய் “கவர் ஸ்டோரி” எழுதாமலும் அவை வெளிவந்து கொண்டிருக்கிறன என்பது ஒருபக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும்,
இன்னொருபக்கம் ஒரு நல்லபிள்ளைகளாய் அவை வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் நாங்களோ இரு என்றால் இருக்கும் எழும்பு என்றால் எழும்பும் ஒடி விளையாடு என்றால்
ஓடிவிளையாடும் ஒரு குழந்தையை குழந்தை என அழைப்பதில்லை. அது பொம்மை.
நாங்கள் ஏன் பொம்மைகளோடு காலந்தள்ள வேண்டும்? எங்களுக்கு ஏன் பொம்மைகள்
தேவைப்படுகின்றன? யாருடைய நலன்களுக்காக நாங்கள் தொடர்ந்து பொம்மைகளைக்
காவுகிறோம்? என்பதனை நீங்கள்தான் யோசிக்க வேண்டும்.
இந்த மாற்று பத்திரிகைகளது ஆசிரியர் தலையங்கள் அதிகம் சமூகம் சார்ந்த கரிசனையோடு
எழுதப்படுவதாகத் தோன்றினாலும் அவை தம்முடைய நிலைப்பாட்டை எந்த இடத்திலும் பிடிகுடுப்பதில்லை. பிடிகொடுக்கமுடியாத தலையங்கத்தை எழுதுவதில் சிறப்பான இடம் இந்தப் பத்திரிகைகளுக்கே
கொடுக்கப்பட வேண்டும் .
நான் மேற்சொன்ன முழுநேர வியாபார வகைப் பத்திரிகைகள் தமது ஆசிரியர் தலையங்கத்திலேயே தாம் யாருடைய பிரதிநிதிகள் என்பதனைப் பிடி கொடுத்து விடுவார்கள். அவர்களுடைய தேர்வு என்பது மிக அழுகிப் போன அதிகார நலன்களைக் காவக் கூடிய மாற்றுச் சிந்தனைகளை மழுங்கடிக்கக் கூடிய வகையினதாகவே எப்போதும் இருக்கும். ஆனால் நான் கீழே சொன்ன வகை மாதிரியான பத்திரிகைகளின்
கருத்துருவாக்கத்தை நீங்கள் கையும் மெய்யுமாக பிடித்துவிடமுடியாது.
கைநழுவிப் போய்விடக் கூடியதாக அவர்கள் எழுதும் ஆசிரியக் கருத்துரைப்புக்கள் சமூக
அசைவியக்கத்தினைக் காலை வாருபவை. அவர்களது மவுனம் என்பதனை எளிதில்
கண்டுபிடித்து விடமுடியாதது. அது கள்ள மவுனத்திற்கு ஒப்பானது. ஆனால் ஒரு சமூகக் கரிசனையாளரால்
அதனை இலகுவாகக் கண்டுபிடித்துவிடமுடியும்.
ஆனாலும் இந்த வகைமாதிரியான பத்திரிகைகள் எப்போது கிடைக்கும் எனக் காத்திருப்பவர்களை
எனக்குத் தெரியும். அது வெளிவரும் காலங்களில் அதனை வாசிக்காது விடுபவர்கள் மிகுந்த
கவலையுறுகிறார்கள் என்பதும் நான் அறிவேன். ஆனால் அப்படியிருப்பவர்களது சிந்தனையை அவர்கள் சார்ந்திருக்கும் கருத்துக்களை இந்தப் பத்திரிகைகள் பத்திரிகை ஒருபோதும் குலைத்துப் போடுவதில்லை.
அது அவர்களுடைய வேலையுமல்ல.
நமது சமூகம் ஒரு புதிய விடையத்தை அதன் பற்றாக்குறையை மாற்றுச் சிந்தனையைக் கண்டு
கொள்வதற்குரிய வாசல்களை உண்மையில் இங்கிருக்கின்ற இந்த வகைப் பத்திரிகைககள்
திறந்து விடவேண்டும். அப்படியான ஒரு சாவியை இன்றைக்கிருக்கின்ற எந்தப்பத்திரிகை கையில்
வைத்திருக்கிறது எனக் கேட்கிறேன்.






தேசாபிமானம் பாசா அபிமானம் என்பவை எல்லாம் ஒரு சமூகத்தினை படுகுழியில் தள்ளக் கூடியது
என்று சொன்ன கருத்துக்களை தாங்கிய பத்திரிகைகள் எமது மொத்தத் தமிழ்ச் சூழலுக்கும் பழக்கமானது.
ஆனால் பாருங்கள் கடந்த முப்பது வருசத்திற்கும் மேலாக தேசம் தேசியம் தேசாபிமானம் துரோகம்
ஒட்டுக்குழு தொங்குதசை காட்டிக் கொடுப்பு கள்ளத் தொடர்பு என எந்தச் சொற்களுக்கும் உள்ளார
இருக்கும் ஆழ்மன அர்த்தங்களை கண்டு கொள்ள முடியாமல் அப்படியே கொப்பி அன்ட் பேஸ்ற்
பண்ணுகின்ற அதிகமான பத்திரிகைகளை இன்னமும் நாம் பத்திரிகைகள் என்று அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த இழிச் சிந்தனை நிலையில் ஒரு சமூகம் தொடந்து வாழ நிர்ப்பந்திக்கப்படுவது என்பதனை ஒருபோதும் ஏற்கமுடியாதது.
இங்கு நமது சூழலில் வெளிவந்த அதிகமான பத்திரிகைகளை நீங்கள் வாசித்துப்பாருங்கள்.
பல இடங்களில் பல காலங்களில் எமக்கு அவை சோர்வை ஏற்படுத்திய வண்ணமே இருந்திருக்கின்றன.
ஒரு பத்திரிகைக்கு இருக்க வேண்டிய உத்வேகத்தை ஒரு முரட்டுப் பிடிவாதத்தை பாதியில் பாதியாவது
இந்த பத்திரிகைகளிடம் காணமுடியாதிருப்பதில் நாம் அயர்ச்சியடையாமல் இருக்கமுடியாது.
எப்படி இந்தப் பத்திரிகைகள் உருவாகின? எந்தக்காலத்தில் உருவாகின. இலவசப்பத்திரிகைகளாக
எப்போது மாறின? இவை எப்படி யார் பணத்தில் தொடர்ந்து வெளிவந்த வண்ணமுள்ளன? ஒரு பத்திரிகை
வெளிவரத் தேவையான பணம் தற்போதைய கனடிய நிலவரத்தில் எவ்வளவு? இந்தப்பத்திரிகைகளது
விளம்பரப் பெறுமானத் தொகை எவ்வளவு? என்பது எல்லாம் நீங்கள் கணக்குப் பார்த்துக் கொண்டால்
தான் இந்தப்பத்திரிகைகளது தொடர் வருகை குறித்தும் அதன் அரசியல் செயற்பாடுகள் குறித்தும்
கணக்கிட்டுக் கொள்ளும் அதே நேரம் , அந்தப் பத்திரிகைகள் எதனைத் தமது கருத்தாகத் தேர்வு
செய்கிறது எதில் மவுனம் கடைப்பிடிக்கிறது என நீங்கள் விளங்கிக் கொள்ள முடியும்.
இங்கே அரசியல் என்றதும் நீங்கள் நடப்பில் இருக்கின்ற கனடிய இலங்கைப் பராளுமன்ற அரசியலை
மட்டும் கருத்தில் கொள்ளக் கூடாது. நமது தமிழ்க் கடைகளில் விற்கப்படுகின்ற அரிசி மீன் வகைகள்
தொடக்கம் இங்கே தற்கொலை செய்து கொள்ளும் அல்லது அடித்துக் கொல்லப்படும் தமிழ்ப் பெண்கள்
வரை அரசியல் என்பது நீண்டு கிடக்கிறது. இவைகுறித்தெல்லாம் இந்தப்பத்திரிகைகள் தமது காலங்களில் எவ்வகையான கவனம் செலுத்தின என்பதனை நீங்கள் கவனித்துக் கொள்ளவேண்டும்.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பிற்பாடு இந்தப் பத்திரிகைகளுக்கு பெரியதொரு நெருக்கடி நிலை
உருவானது. இந்த நெருக்கடி நிலையை விளங்கிக் கொண்ட ஒரு சில பத்திரிகைகள் தன்மானச்
சிங்கங்களாய் தமது செயற்பாட்டைஎடனடியாக நிறுத்திக் கொண்டன. அதில் முழக்கத்திற்கு முதலிடம். முரசொலிக்கு இரண்டாம் இடம்.
அதன்பின்னும் தொடரும் பத்திரிகைகள் ஈழத்தின் தெருக்களில் நடைபெறும் சண்டித்தனத்தனங்களுக்கும்
குடும்பச் சண்டைகளுக்கும் யுத்தத்தின் பின்னால் எழுந்த வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கும் தமது
அறிவற்ற தேசியத்தின் வழி நின்று விளக்கவுரைகள் எழுதின. அவற்றிற்கு ரொரன்டோவில் நடக்கின்ற
தமிழ்மக்களது கொலைகள் குறித்து அக்கறையில்லை. அவைகுறித்துப் பேசியது இல்லை.
அவற்றிற்கு ஒரு விளக்கவுரை எழுதியதில்லை.
ஏனெனில் அவர்களது வருமானத்தில் அவர்கள் எழுதும் விளக்கவுரை நிச்சயம் பாதி வருமானத்தை
கால்வாரி விடும் அதில் கைவைக்கும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
தம்மளவில் ஒரு விவாதத்தைத் தன்னும் தமது சமூகத்திற்காக தொடங்கிவிட முடியாத ஊடகங்கள்தான்
இவை. நமது சமூகம் ஒரு புதிய தேடலில் புதிய சிந்தனையை அல்லது ஒரு புதிய விளக்கத்தை
உருவாக்கிக் கொள்ள இந்த ஊடகங்கள் ஒருபோதும் முயலுவதில்லை. அடிப்படையில் பின்தங்கிய
சமூகமாக நமது சமூகத்தைத் தொடர்ந்து வைத்துக்கொள்ள இந்த ஊடகங்கள் எவ்வகையில்
செயற்படமுடியுமோ அப்படியே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் இங்கு வருகின்ற
பத்திரிகைகள் என்று சொல்லப்படுபவைகளுக்கோ வானொலிகள் தொலைக்காட்சிகள் என்று சொல்லப்படுபவைகளுக்கோ எந்த வித்தியாசங்களும் இல்லை.
இந்தப் பிழைப்பு மனநிலையிலிருந்து விலகி வெளிவந்த பத்திரிகைகள் என்று எதனை அறுதியிட்டுச் சொல்லமுடியும் என நாம் பார்க்கத்தான் வேண்டும்.
ஒரு பத்திரிகை தன்னுடைய கருத்து நிலை குறித்த தெளிவான நிலைப்பாட்டை அறுதியிட்டுத்
தெரிவிக்க வேண்டும். அதற்காக அது தனது இருப்பைக்கூடத் தொலைக்கக் கூடிய அளவில்
சமூகத்தை உலுப்பிவிட வேண்டும். ஒரு மெதுவடையை மென்னுகின்ற நிலையில் இருக்கின்ற
ஊடகங்கள் காலத்தால் அழிந்து போகக் கூடியவை. அது தான்வாழும் காலத்தில் தன்னிலையில்
உயிர்வாழும் ஆனால் வரலாற்றில் அது வாழ்வதில்லை.
இந்தக் கனடிய மண்ணில் பிழைப்பு மனநிலையில் இருந்து விலகி அறுதியிட்ட தன்னுடைய கருத்தை
அத்தனை எதிர்ப்புகளிடையேயும் சொல்லிவந்த பத்திரிகையாகவும் ஒட்டுமொத்த சமூகமும்
அதுசார்ந்திருந்த ஊடகங்களும் ஓடிய பாதையில் இடைமறித்து நின்று இல்லை நீங்கள் ஓடும்
பாதை சரியானது இல்லை என்பதைச் சொன்ன ஒரு பத்திரிகை தாயகம் மட்டுமே என்பது எனது
கருத்து. இறுகப் பூட்டப்பட்ட கடிவாளத்தை கழற்றி எறிந்து கனடியத் தமிழ்ச் சமூகம் தன்னுடைய
சிந்தனையை மாற்ற வேண்டும் இல்லையேல் அது புலம் பெயர்ந்த சமூகம் அல்ல. அது புலன்
பெயர்ந்த சமூகமே என்று நையாண்டி செய்து எழுதியது தாயகம். இன்று யுத்தம் முடிந்தது.
இதை எழுதாதே அதை எழுதாதே என்ற கட்டுப்பாடுகள் இல்லாத சூழல் இன்று. ஆனால் இன்றைக்குக்
கூட ஒரு விவாதத்தைத் தன்னகத்தில் தொடங்க முடியத பத்திரிகைகளாக வெளிவந்து கொண்டிருக்கும்
நிலையில் 1990 இல். தேசியம் இனவாதம் என்று எடிட்டோரியல் எழுதியது தாயகம். ஈழத்தின் கொலைக் காலாச்சாரத்தை காவிக் கொண்டிருப்பது யாழ்ப்பாண மையவாதம் என்று அந்தப் பத்திரிகை
அப்பட்டமாக தனது எடிட்டோரியலை எழுதியது. அது எழுதியகாலம் 1989காலப்பகுதி. உண்மையைத்
தேடி தாயகம் ஏன் வருகின்றது என முதலாவது இதழில் எழுதிய கருத்தை தனது இறுதி இதழ்வரை
கொண்டிருந்தது அந்தப் பத்திரிகை. என்பதனைக் கவனிக்க வேண்டும்.

















ஆனாலும் இதே தாயக ஆசிரியர் தான் பின்னர் பூபாளம் பத்திரிகையைத் தொடங்கிய, … காலத்தின்
மாற்றத்தைக் கவனியாது போய் காலாவதியாகிப் போனதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.
இன்றைக்கு வெளிவந்து கொண்டிருக்கும் பத்திரிகைகள் அப்படியொரு தீர்க்கமான உரையாடலை முரண்பாடுகளுடன் கூடிய விவாதங்களைத் தொடங்கவேண்டும். இறுக்காமான யுத்தகாலப்பகுதியில்
சுதந்திரன் உதயன் போன்றபத்திரிகைகளில் எழுதப்பட்ட மிகப் பிற்போக்குத் தனமான உரைகளின்
இன்னொரு மாதிரியான வடிவத்தை இப்போதும் நீங்கள் எழுதிக் கொண்டிருக்கமுடியாது. அதனை
நாங்களும் வாசித்துக் கொண்டிருக்கமுடியாது என்பதனைக் கூறிக் கொண்டு இதனை முடிவு செய்கிறேன்.
இது குறித்து உங்கள் மேலதிமான கேள்விகளினூடு இன்னமும் சில தகவல்களை நான் உங்களுடன்
பரிமாறிக் கொள்ள முடியும் எனக் கூறி நிறைவு செய்கிறேன்.