Thursday 11 July 2019

நெருப்பில் அமிழ்ந்து கொண்டு நீரை நெருங்குவது…


கற்சுறா



1. நீர்த்துப் போன அர்த்தங்களை கொண்டுழலும் வார்த்தைகளை விளங்கிக் கொள்ளல்.











“பார்வைகள் ஆயிரம். நோக்கம் ஒன்றே” என்று தமிழ்ப்பார்வை முதலாவது இதழின் ஆசிரியர் கருத்துப் பகுதியில் குறிப்பிட்டிருந்தார்கள். மற்றவர்களுடைய கருத்தைக்
செவிமடுக்கும்  மனநிலையை இழந்த சமூகமாக நமது சமூகம் நீண்ட காலமாக இருந்து வந்திருக்கிறது. இதற்கு உதாரணங்களைச் சொல்லி யாருக்கும் விளங்கப்படுத்தத் தேவையில்லை. 

கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக நமது சூழலில் வெளிவந்த
பெருவாரியான ஊடகங்களை எடுத்து ஆராய்ந்தால் அதனை எல்லோராலும் இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும்..

ஆனால் இன்றைய காலத்தில் இந்த இழிநிலை மெல்ல மாறிவருவதை உணரமுடிகிறது. இன்று இருக்கின்ற அளவுக்கு மீறிய ஊடக நிறுவனங்களது போட்டி மனப்பான்மை இதற்குரிய வாசலை ஓரளவுக்குத் திறந்துவிட்டிருக்கின்றது என்றாலும் “லாடன் கட்டிய குதிரைகள்” ஆக ரேஸில் ஓடுவதைப் பெரும்பாலான ஊடகங்கள் இன்றும் கூட கைவிடவில்லை..

ஒரு வெகுசனப்பத்திரிகையாக இருந்தாலும் வியாபார நோக்கம் குறித்ததாக இருந்தாலும் எதிர்க் கருத்துக்களுக்கும் மாற்றுக் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கும் பக்குவம் உள்ளதாகவும் விமர்சனங்களையும் எதிர் விமர்சனங்களையும் உள்வாங்கும் எண்ணம் கொண்டவர்களாகவும் தமிழ்ப்பார்வையினர் வரும் காலங்களில் இருப்பார்களா அல்லது இன்றிருக்கின்ற லாடன் கட்டிய குதிரைகளாக இருக்கும் அத்தனை ஊடகங்களைப் போலவும் சுரணைகெட்டுப் போய்விடுவார்களா என நாம் நோக்க வேண்டும்.

எனது இந்த எழுத்து வழமையான ஒரு தமிழ்ப் பார்வையாக இருக்காது என்பதனை முதலில் சொல்லிக் கொள்கிறேன்.

இங்கே “நீர்த்துப்போன அர்த்தங்களைக் கொண்டுழலும் வார்த்தைகள்” என்று நான் குறிப்பிட்டுச் சொல்லும் வார்த்தைகளை அதிகமாக நாம் மேற்சொன்ன ஊடகங்கள் வாயிலாகவும் அவை சொல்லிக் கொடுத்ததை அப்படியே சிந்திக்கும் மனநிலையில் நாமும் உச்சரித்துக் கொண்டிருக்கிறோம். அல்லது அந்தவகை ஊடகங்களால் நம்மை உச்சரிக்கச் “சொல்லி வைக்கப்படுகிறது”.


மிக நீண்டகாலமாக வலுவிழந்த வார்த்தைகளை அளவுக்கு
அதிகமாக, அதற்குரிய மதிப்பீடுகளை அளவிடமுடியாதபடி நாம் பாவித்து வருகிறோம். இப்படி வலுவிழந்த வார்த்தைகளில், அண்மையில் நாம் அதிகமாகப் பாவிக்கும்
வார்த்தைதான் “காணாமல் போனோர்” என்பது.

நமது ஈழயுத்தகாலத்தில் திட்டமிட்டுத் தொடங்கிய இந்தக் “காணாமல் ஆக்கப்பட்டவர்கள்” ஐப் பற்றிக் குழப்பமான உரையாடல்களை நாம் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக் கிறோம். நாம் நிகழ்த்திக்கொண்டிருக்கும் உரையாடல்கள் எவருக்கும் எந்தத் தெளிவையும் இதுவரை ஏற்படுத்திவிடவில்லை. இந்தத் தெளிவற்ற உரையாடல்களால் நாம் ஒருபோதும் அதற்குரிய
முடிவைக் கண்டடையப் போவதில்லை.


மிக நீண்ட காலமாக “ காணாமற்போனோர்” என்ற அடையாளச் சொல்லைப் பயன்படுத்திக் கொண்டே தமது உரையாடல்களைத் தொடர்ந்து வந்தவைதான் நமது தமிழ் ஊடகங்கள். அதனை மறுத்து “ இங்கே யாரும் தாமாகப் போய் எங்கும் ஒளித்திருக்கவில்லை. அனைவரும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொருவரால்
திட்டமிடப்பட்டே காணாமல் ஆக்கப்பட்டார்கள் “ என நாம் எழுதிக்காட்ட வேண்டியிருந்தது.

ஆனால் நமது சூழலில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மீதான கரிசனை என்பது நமது ஊடகங்களுக்கு 2009 ம் ஆண்டின் பின்னரே வருகிறது. இந்தக் கடைசிக் கரிசனை என்பதுதான் போலியானது. அது கடந்தகாலத்தில் தேசியஇனம் அல்லது தேசவிடுதலை
தேச மொழி மீதாக இருந்த போலியான விபரமற்ற பற்றுப் போன்றதே. விட்டுப் போக இருக்கும் ஒரு முதலீட்டின் பற்றிப்பிடிப்பாகச் செய்யப்படும் கடைசித் துருப்புக்களில்
ஒன்றாக இன்று இதனை அவர்கள் கையில் எடுக்கிறார்கள்.


அதன் தொடர்ச்சியாகத்தான் “ காணாமல் போனோர்” என்பதிலிருந்து “ காணாமல் ஆக்கப்பட்டவர்கள்” என்று மாறியது போல் “ காணாமல் ஆக்கப்பட்டோர்” என்ற சொல்லிருந்து கொஞ்சம் மாறி “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்” என்ற
சொல்லிற்கு இப்போது வந்திருக்கிறார்கள். உண்மையில் “காணாமல் ஆக்கப்பட்டவர்கள்” – “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்” என்ற இரண்டு வார்த்தைகளுக்கும் இடையில்
இவர்கள் கண்டு பிடிக்கும் அர்த்தம் அல்லது சொல்ல நினைக்கும் வித்தியாசம் அல்லது இரண்டு சொல்லுக்குமிடையிலான அழுத்தம் எதுவாக இருக்கும்?

 வெறுமனே ஆங்கில வார்த்தையிலிருந்து மொழிபெயர்ப்பதனால் வரும் வினை இது எனக் கடந்துபோய்விடமுடியாது. இது அப்பட்டமான சிந்தனைச் பிசிறல். கடந்த காலத்தில் “போரியல் அமைதி” என்றும் “களையெடுப்பு” என்றும் “தந்திரோபாயம்”
என்றும் பாவனைக்குக் கொண்டு வந்த தந்திர வார்த்தை போல்தான் இந்த “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்” என்பதுவும்.
இங்கே யாரும் யாரையும் மென்மையான முறையில் காணமால் ஆக்கவில்லை. அனைவரும் திட்டமிடப்பட்டு கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். அப்படிக் கொலை செய்யப் பட்டவர்களில் பலர் பலத்த சித்திரவதைக்குள்ளாகிக் கொலை செய்யப்பட்டார்கள். செய்யப்பட்ட சித்திரவதைகளும் சித்திரவதைக்குள்ளான உடல்களும் திட்டமிடப்பட்டு மறைக்கப்பட்டுள்ளன. இங்கே அரசு, அரச இராணுவம், அதனை
எதிர்த்துப் போராடிய போராட்டக்குழுக்கள் போராட்டக் குழுக்ளை எதிர்த்த போராட்டக் குழுக்கள் என்று யாருக்கும் வித்தியாசங்கள் இருக்கவில்லை.


ஈழவிடுதலை என்று ஆரம்பித்த அத்தனை இயக்கங்களும் தமிழ் இளைஞர்களையும்பொதுமக்களையும் காணாமல் ஆக்கியது. செய்யப்பட்ட அளவுகளில் தான் இவர்களிடையே வித்தியாசம் இருக்கும். மற்றப்படி அனைவரது கரங்களும் கொலைக்கரங்களே. இன்று பலர் சொல்வது போல் வெறுமனே “காணாமல்
ஆக்கப்பட்டவர்கள்” என்ற கதை 2009 யுத்த காலத்தில் மட்டும் நிகழ்ந்ததல்ல. தனியே முள்ளிவாய்க்காலில் மட்டும் வலிந்து இழுத்துக் கொண்டு போய்க் காணாமல்
ஆக்கவில்லை.

“ ஈழம் என்பது தேசம் அல்ல கதை” . கடந்த 40 வருடங்களாக அதற்குள் பல கதைகளிருக்கின்றன. அந்தக் கதைகளிற்குள் பல ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்குப் பொறுப்பானவர்கள்
வெவ்வேறு தரப்பானவர்கள். அந்த ஒவ்வொரு தரப்பானவர்களைப் பார்த்து ஒற்றைச் சொல்லைத்தன்னும் தனது பிள்ளைக்காகக் கேட்கமுடியாத தாய்மார்களின் மவுனக் கண்ணீரைக் கடந்து வந்தவர்கள் தான் நாங்கள். பேசமுடியாதிருந்த அந்தத தாய்மார்கள் குறித்து கரிசனையற்றிருந்த நாங்கள் “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்” என்ற ஒரு மந்திரச் சொல்லோடு இன்று நமது சமூகத்தில் நுழைவது போலித்தனமானது. இவ்வாறான எங்களுடைய போலி வார்த்தைகளால் உண்மையில் முள்ளிவாய்க்காலில் பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்மார்களுக்கும் ஒரு பதில் வார்த்தை கிடைக்கப் போவதில்லை. “காணாமல் ஆக்கப்பட்டவர்கள்” குறித்து நாம் பேச முற்படும் போது எமக்கு ஒரு விரிந்த மனது தேவை. இது தன்னுடைய பிள்ளையை
எங்கே என்று கேட்க முடியாது இன்றுவரை மவுனமாயிருந்த தாய்மார்களது மவுனத்தையும் அது உடைக்க வேண்டும். அந்தத் தாய்மார்கள் வடக்கிலிருந்து தெற்குவரை இன்னமும்
பரவித்தான் இருக்கிறார்கள். அவர்களை இன்னமும் தவிக்க விட்டு
அட்டவணைப்படுத்தப்பட்ட “காணாமல் ஆக்கப்பட்டோர்” குறித்து பேசுவதனால் ஒரு பிரியோசனமும் வரப்போவதில்லை. நாங்கள் பாதிப்பக்கத்தைத் தவிர்த்து விட்டுத்தான்
கோசம் போடுகிறோம். இதற்குப் பதிலே சொல்லத்தேவையில்லை என்று அரசும் இராணுவமும் நினைக்குபடி நாம் தொடர்ந்து செயற்படுவதில் அர்த்தமில்லை.


2009 இறுதியுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களது தொகை விபரம் பெயர் விபரம் உட்பட அனைத்து விபரங்களையும் வெளியிட வேண்டிய அவசியம் அந்த யுத்தத்தை நடத்திய அரச
நிர்வாகத்தின் முன்னுள்ள கட்டாயமான கடமை. அதற்கான முழுத்தகவல்களையும் அரச நிர்வாகத்தால் மிக இலகுவாகத் திரட்டிவிடமுடியும். ஆனால் இலங்கை அரச நிர்வாகத்திற்கு
அதனைச் செய்யத் தேவையற்றதாக இருக்கும் காரணம் எது என நாம் தான் சிந்திக்க வேண்டும்.

மாதக்கணக்காக பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்மார் கணவனைப் பறிகொடுத்த மனைவிமார்
வீதியில் இறங்கி இத்தனை போராட்டம் செய்தும் ஏன் பலனற்றுப் போய்க்கிடக்கிறது?

எப்படிஇந்த அரசு இத்தனை போராட்டங்களையும் தட்டிக் கழிக்கிறது?  சர்வதேச சமூகம் என்ன கவனத்தை எடுத்தது? ஏன் கவனமற்று இருக்கிறது? என்று எல்லாம் நாம் பேசியாக வேண்டும்.

இந்த “ வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்” என்ற சொல்லிற்குள் இருக்கும் அரசியல் எது? அந்தச் சொல்லை இவ்வளவு காலமும் நாம் ஏன் பாவனையில் கொள்ளாது தவிர்த்தோம்?


யாருடைய நலனுக்காக, யாரைக் காப்பாற்றுவதற்காக இந்தச் சொல் பாவனைக்கு வந்தது? என்று அதனைப் பாவிக்கும் எந்த ஊடகங்களும் இன்றுவரை கேள்வி எழுப்பியது இல்லை என்பது
இன்னொருவகை அதிகார ஒத்து ஊதுதலே. எவ்வாறு துரோகி- தியாகி என்ற மனநிலையில் எவ்வித விமர்சனப் பார்வையுமற்று சொன்ன சொல் பிள்ளைகளாக இருந்த நமது ஊடகங்கள்,
போர்த் தந்திரோபாபயம் , போரியல் அமைதி, தந்ரோபாயப் பின் வாங்கல், காட்டிக் கொடுப்பு,கூட்டிக் கொடுப்பு, என்று சொல்லிவந்த செய்து வந்த அத்தனை முட்டாள் தனத்திற்கும் விளக்கம்
அளித்துக் கொண்டிருந்த நமது ஊடகங்களின் புதிய தொடர் கண்டு பிடிப்புத் தான் இந்த “வலிந்து காணாமல் போனோர்” என்பது. இந்தச் சொல்லைக் கொண்டு இந்த ஊடகங்களினால் எந்த ஒரு
புதிய அத்தியாயத்தையும் தொடங்க முடியாது இருப்பதுதான் மிக முக்கியமான விடையம்.


ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்பது நமது போராட்ட சூழலிலும் நமது யுத்த சூழலிலும் மிக நீண்ட கால வரலாற்றுக் கதையுடையது. அது அத்தனை இயக்கங்களதும்
சமூகவிரோதி ஒழிப்பிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுஅனைத்து இயக்கங்களினதும் உட்கட்சிப் புரட்சி, இயக்க மோதல், அதன் நீட்சியான சகோதரப்படுகொலை, அனைத்து இயக்கங்களது வதை
முகாம்களது வரலாறு, இலங்கை இராணுவமுகாமினது வரலாறு, அரச புலனாய்வு வரலாறு என்று நீண்டு இறுதி யுத்தம் வரை செல்ல வேண்டும். இந்தக் கணக்கெடுப்பில் நாம் முழுமையாக
ஈடுபட்டால் மட்டுமே இது குறித்துப் பேசத் தகுதியானவர்களாவோம்.

நமது சமூகத்திற்குள் இந்தவகைக் கணக்கெடுப்பை நிகழ்த்துவது இயலாத காரியமல்ல. காணாமல் ஆக்கப்ட்டோர் குறித்த தகவலை ஒட்டு மொத்தமாகத் திரட்டுவதற்கு நாம் ஒருபோதும் முன்றின்றதில்லை.

காணாமல் ஆக்கப்பட்டோர் மீதான கரிசனை நம்மில் பலருக்கு 2009இன் பின்னரே உருவாகிறது. இது அடிப்படையில் மிகத் தவறானது. இந்தத் தவறு அரசை ஒரு பொழுதும் நிர்ப்பந்திக்கப்
போதுமானதாக இருக்கப் போவதில்லை. அரசின் மிலேச்சதிகாரமான இன்னுமொரு செயற்பாட்டிற்கே அது வழி வகுக்கும். மற்றயபடி இது தற்காலத்தில் யாருடையதோ  அதிகார – வியாபாரத் தேவைக்காகப்
பேசப்படும் ஒரு சொல்லாக அந்தச் சொல் அர்த்தம் இழந்து போகும்.அதனால் ஒரு வித பிரியோசனமும் எவருக்கும் இருக்கப் போவதில்லை.

 எந்தவொரு சொல்லையும் நாம் பாவிக்கத் தொடங்குமுன் அதன் ஆழ்மன அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையேல் ஏற்கனவே மதிப்பிழந்து போன சொற்களை பாவித்து நாம்  நமது சமூகத்தின் சீவியத் திறனை அழித்தது போல் நிகழ்ந்து விடும் அபாயம் இருக்கிறது. அதில் நாம் அதிக கவனமாக இருக்க வேண்டும்.

அதனால் தான் சொல்கிறேன் வக்கிர எண்ணத்துடன் நமது மனதை நெருப்பிற்குள் புதைத்து வைத்துக் கொண்டு நீர் பற்றிக் கருத்துரைப்பதில் என்ன நன்மை நிகழ்ந்து விடப்
போகிறது? தொடர்ந்து பேசுவோம்.


நன்றி
தமிழ்ப் பார்வை (கனடா)