Monday 12 January 2015

சதீஸ்....
பள்ளி நண்பனின் மரணம்.




என்னைவிட  10நாள் இளமையானவன்  என்னுடன் ஒன்றாய்ப் படித்தவன். ஆனலும் என்னைவிட எப்பொழுதும் பருமனில் இரண்டு மடங்குடையவன். அதனாலோ என்னவோ., எதுசார்ந்தும் என்னுடன் உரையாடும் போது தம்பி நீ திருந்து. தம்பி நீஉப்பிடிச் செய்யாதே என்று அதட்டிக் கொண்டே இருப்பான். அந்த அதட்டலில் ஒரு தந்தைக்கான பாசம் இருக்கும். ஒரு நண்பனை தந்தையாக உணரக்கூடியளவுக்கு எல்லோருக்கும் நெருங்கியிருப்பான்.


எப்படி மற்றய ஊர்களுக்கு பஸ் போக்குவரத்து மின்சாரம் எல்லாம் வந்து கனகாலத்தின் பின்எமது கிராமத்திற்கும் பஸ் போக்குவரத்தும் மின்சாரமும் கடைசியாக வந்தது போல் இயக்கங்களும் வந்து சேர்ந்தன ஒவ்வொரு இயக்கங்களோடும் ஒவ்வொருவர் அடையாளப்படுத்தப்பட்டபோது சதீஸ் விடுதலைப்புலிகளுடன் தன்னை அடையாளப்படுத்தினான். ஒரு தமிழ்த் தேசியவாதிக்குரிய அத்தனை குணங்களோடும் நாம் திரிந்த காலங்களில் பிடித்த சண்டைகள் ஏராளம். பதின்ம வயதுகளில் எதிரியும் நண்பனுமாக மாறி மாறி வாழ்ந்த காலங்களின் அனுபவங்கள் மிக அதிகமாகவே உண்டு.
1986 கடைசிக் காலங்களில் பல்கலைக்கழக மாணவன் விஜிதரன்  கடத்தல் குறித்த எதிர்ப்பு ஊர்வலங்களில் நாம் போட்ட கோசத்திற்கு எதிர்கோசம் போட்டு கோபத்தை உண்டாக்கிவிட்டவன்,  மறுநாள் காலை கிரிக்கட் விளையாட opening batsman ஆக அவனும் partner ஆக நானும்  நிற்போம். எப்படி சுழிபுரம் படுகொலையை தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தினர் செய்யவில்லை என்று அப்போது நம்பவைக்கப்பட்டேனோ  அதேபோல் விஜிதரனையும் புலிகள் கடத்தவில்லை என்று அவன் நம்பவைக்கப்பட்டான். அப்போது அவனுக்குத் தெரிந்த உண்மை எனக்குத் தெரியாதிருந்தது எனக்குத் தெரிந்த உண்மை அவனுக்குத் தெரியாது இருந்தது.

ஒரு முறை இருள்வெளி தொகுப்பினை எடுத்துவர லண்டன் சென்றிருந்த போது என்னை ஏற்றிக் கொண்டுபோய் எடுத்து வந்து வழியனுப்பிவிட்டவன். அப்பொழுதும் தம்பி உந்தமாதிரி வேலையள் ஒரு பிரியோசனமற்றது. நீங்கள் மாறவேண்டும் என்று எனக்கு ஒரு தந்தையைப்போல் புத்திமதி சொல்லிக் கொண்டே வந்தான். மற்றய முட்டாள்கள் போல் தலைமை தவறு விடவில்லை என்று நீ இன்னும் குழந்தை போல் திரும்பத் திரும்ப ஒன்றையே சொல்லிக் கொண்டிருக்கிறாய் என்று சொல்லிவிட்டு கதையை நிறுத்திவிட்டேன்.
கடந்த ஓகஸ்ட் மாதம் லண்டன் சென்று போன் அடித்தவுடன் உடனே ஓடிவந்தான். கண்ட நேரத்திலிருந்து எனக்குப் புத்திமதி சொன்னான். ஜெபாவிடம் உவன்ர போக்கு சரியில்லை என்று குறைப்பட்டான். 

இரவு நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து நிறையக் குடித்தோம். காலையில் எழுந்தேன் இருந்த இடத்தில் இருந்த படியே இருந்து நித்திரை கொண்டு கொண்டிருந்தான். மச்சான் உனக்கு மூச்சு விடுதலில் ஏதோ குறை உள்ளது கொண்டுபோய் டொக்டரிடம் காட்டு என்று சொன்னேன். அது அப்படித்தாண்டா மச்சான் அது ஒரு பிரச்சனையில்லை என்றான். காலையில்  வெளியில் வந்து அதிக நேரம் பேசினேன். எனது பிள்ளைகளுடன் குழந்தையாகி நின்று கதைத்தான்.
 குகன் என்ற இன்னொரு நண்பனை பற்றி, அவன் முள்ளி வாய்க்காலில் கடைசி நாளில் சரணடையாமலேயே தான் கைக்குண்டை இழுத்து மரணித்துப் போனது குறித்து எதிர் எதிராகவே பேசினோம். அவன் செய்தது சரி என்றான். நான் இல்லை என்றேன். அவன் விடுதலைப்புலிகளில் இணைந்ததே தவறு என்றேன். அது முடிந்த விடையம் என்றான். யுத்தம் கழிசடைத்தனமாகவே நடந்து முடிந்தது. இதில் தப்பிப்பதற்கான சந்தர்ப்பங்களை குகன் தன்னுடைய குடும்பம் சார்ந்தாவது தவறவிட்டிருக்கக் கூடாது.  என்றேன். தப்பித்திருந்தாலும் அவனை உயிருடன் விட்டிருக்கமாட்டான்கள் என்றான். இறுதிக்கட்டத்தில் சாத்தியங்களை எல்லோரைப் போலவும் அவனும் பற்றியிருக்க வேண்டுமென்றேன். அவனுக்கு முடிவு தெளிவாகத் தெரிந்திருந்தது என்றான். புலிகளின் உத்தியோகத்தாகள் பலர் சரணடைந்து தப்பியிருக்கிறார்களே, அதைப் போல் அவன் ஏன் முயற்சி செய்திருக்கக்கூடாது என்றேன். அவன் தன்னிலும் தான் இருந்த இடத்திலும் தெளிவாக இருந்தான் என்றான். என்னமோ தெரியாது குகன் மரணித்திருக்கக் கூடாது என்று மனம் விரும்புகிறது என்றேன்.  

அந்த நேரத்தில் குகனுடைய சகோதரன் என்னுடன் பேசும் போது “அண்ணா” சாகக் காரணமானவர்கள் நீங்கள்தானே என்றான். இல்லை… நீங்கள் தான் என்று அதனை நான் மாறி உங்களுக்குச் சொன்னால் நீங்கள் தாங்குவீர்களா என்றேன். தொண்டை அடைத்தது. நண்பர்களின் மரணத்தைத் தாங்க முடியாது மச்சான் என்றேன் சதீசிடம். இன்று சதீசனும் இல்லை.
ஒரு காலத்தில் ஓடி ஓடி எல்லோர் மீதும் கவனத்தை வைத்திருந்தவன். எல்லோருக்காகவும் உழைத்தவன் அண்மைக்காலமாக எல்லோராலும் கொஞ்சம் அன்னியப்பட்டிருந்தான்.  அவன் வாங்கியிருந்த வீட்டில் 90களின் ஆரம்பகாலத்தில் தங்கிச் செல்லாதவர்கள் இல்லை. ஒரு தந்தையாக இருந்து பலரைத் தாங்கியிருக்கிறான். பலருக்காக தூக்கமற்று இருந்திருக்கிறான். ஆனால் அவன் அந்தப்பலரால் கைவிடப்பட்டிருந்ததை அவன் பேச்சு மெதுவாகச் சொல்லியது.
தமிழ்த் தேசியவாதியாக இருந்து என்னைத் துரோகியாக்கிய பல ஊர்க்காரர்கள் சொந்தக்காரார்களை விட நண்பனாக தந்தையாக அன்பில் இருந்தவன் சதீஸ்.

46 வயது.
சாகிற வயதல்ல. 
நமது சமூகத்தில், ஒரு குடும்பத்தின் மூத்த பிள்ளை என்பவனுக்கு இதுதான் 
தனக்காக வாழ்கிற வயது.