Tuesday 17 March 2015

மட்டக்களப்பில் சாதீயம்.

கற்சுறா

மூன்றாவது கண் இதழுக்கான பதில்.

களுதாவளையில் நாலாம் குறிச்சியிலிருந்து 
ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகநல அமைப்புக்கள் இணைந்து 
துண்டுப்பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. 
சேவினை என்ற பெயரில்
 கோயிலுக்கும்  மரணச் சடங்ககளுக்கும் 

'பறைமேளம் அடிக்க வரமாட்டோம்' 

என்று அறிவிக்கும் துண்டுப்பிரசுரம் அச்சமூகத்தின் முன்னேற்றம் கருதி விளக்கமளித்துள்ளது. 
இத்துண்டுப்பிரசுரத்தினைப் பிரசுரித்த மட்டக்களப்பிலிருந்து வரும் மூன்றாவது கண்  (ஆடி2003- மடல்3) 
என்னும் இதழ் 
அதற்கான தமது கருத்துப் பகிர்வையும் வெளியிட்டுள்ளது. 

அவைகுறித்த எமது பர்வையை கீழே தருகிறோம்.



துண்டுப்பிரசுரத்திலிருந்து...


சமூக நல அமைப்புக்கள் ஒன்றாய் இணைந்து விடுக்கும் உருக்கமானதும் அன்பானதுமானதுமான வேண்டுகோள்.
மதிப்பக்குரிய ஆலய பரிபாலன சபையோர்களே சமூக நல அபிவிருத்தி அமைப்புக்களே கௌரவ உறுப்பினர்களே!
ஐயா,
களுதாவளை 4ம் குறிச்சியிலிருந்துதங்களின் கிராமத்திற்கு ஆலய மரணச் சடங்குகளுக்கு சேவினை செய்ய வரகின்ற சமூகத்தின்எதிர்கால சுய கௌரவ தன்மான சமூக அபிவிரத்தியை மையமாகக் கொண்ட அதன் நல அமைப்புக ;களாகிய நாங்கள் சேவினை என்ற போர்வையில் சீரழியும் சமூகச் சிதைவைத் தடுத்து சமூக சமரச முன்னேற்றம் பேண தங்களின் ஆதரவை வேண்டி நிக்கிறோம்.
பறைமேளம் அடிப்பத தற்காலத்தின் தேவைக்கு அத்தியா வசியமான பயன்பாடள்ள ஒரு செயற்பாடல்ல. இது சமூகத்தின் மேன்மையையோ ச5க சமத்துவத்தை யோபுகழையோ ஈட்டுவதுமில்லை.மற்றவரால் மதிக்கப்ப டுவதமில்லை. மாறாக போதை தலைக்கேறிய கும்மாளக் கூத்தாக  சமூகத்தை இழிவுபடுத்தும் செயலாக அமைவ தோடு இதைச் செய்வோர் தீண்டத்தகாதவராக மனித நேயமின்றி ஒதுக்கப்பட்டும் சாதி வேற்றுமை தாழ்வு மனப்பாங்கு விதைக்கப்பட்டும் கல்வி பொருளாதார  வீழ்ச்சியை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
இத்அதாழிலில் ஈடுபடுவோர் விரைவில் மதுவுக்க அடிமையாக்கப்பட்டு இழிவான செயல்களில் இறங்குகின்றனர். இது சுற்றுப் புறச் சூழலுக்கும் மாணவ சமூகத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அத்தோடு பாடசாலை செல்லும் மாணவர்களை இதில் ஈடுபடுத்துவதால் அவர்கள் கல்வியை இடைநிறுத்த வேண்டியவர்களாக நிர்ப்பந்திக் கப்பட்டு வலிந்து மதுவுக்கு அடிமைப்படுத்தப் பட்டவர்களாக ஆக்கப்பட்ட சமூகத்தில் சீர் கெட்ட  துர் நடத்தை கொண்டவிச்க்கும்பலாக மாற்றப்படுகின்னர்.  இவர்களால் இச் சமூகமே அவமானப் படவேண்டியநிலை எற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
எனவே இச்சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் மூடக் கொள்கை நிறைந்த செயற்பாட்டிலிருந்து நீங்கி யதார்த்த உலகில் சமத்துவம் பேண வழி சமையுங்கள்.
பிறர் பிள்ளை தலை தடவ தன் பிள்ளை தானே வளரும்.
தயவு செய்த இளம் சந்ததியினராகிய நாங்கள் அறிவித்ததை ஏற்று உங்கள் கிராமத்திற்கு பறை மேளம் அடிப்பதற்காக எவரையும் அழைத்துச் செல்ல வரவேண்டாம்.அனுமதிக்கவும் வேண்டாம் என அன்பாய் அறியத் தருகிறோம்.
சமூகத்தின் விடிவிற்காக தங்கள் ஆதரவு மலரட்டும்.

காந்தி சேவா இறைளர் கழகம்
வளர்மதி சனசமூக நிலையம்
ஸ்ரீகற்பகப் பிள்ளையார் முத்துமாரியம்மன் பரிபாலன சபை

-------------


இந்தத் துண்டுப்பிரசுரம் குறித்து மூன்றாவது கண்  இதழில் அதன் ஆசிரியர் குழுவாகிய உள்ளுர் அறிவுச் செயற்பாட்டுக் குழு
( சி. ஜெயசங்கர், து.கௌரீஸ்வரன்)இது குறித்து தமது கருத்துக்களைப் பின் வருமாறு பதிவு செய்துள்ளது.


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள களுதாவளை என்னும் ஊரில் காலம் காலமாக வாழ்ந்து வரும் பறைமேளம் வாசிப்பதை தமது தொழிலாகக் கொண்ட சமூகத்தவரின் இளந் தலைமுறையினர் தமது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பறை மேளம் வாசிப்பதற்குத் தடை விதித்துள்ளதுடன் இச்செய்கைக்கு எதிராக பின்வரும் துண்டுப் பிரசரத்தினையும் வெளியிட்டுள்ளார்கள். இளந் தலைமுறையினரின் இத்தகைய செயற்பாடு குறித்து எமது கருத்துக்களை மூன்றாவது கண் உள்ளுர் அறவுச் செயற்பாட்டுக் குழுவினராகிய நாம் இம்மடலில் தெரிவித்துக் கொள்வதுடன் மேற்படி விடையம் சம்பந்தமாக வாசகர்களாகிய உங்கள் கருத்துக்களையும் எதித்பார்த்துள்ளோம். 
தமிழர் சமூகம் சாதி, தொழில் வர்க்கம், பிரதேசம், பால் வயது மதம் எனப் பல்வேறு வேறுபாடுகளுடாக ஏற்றத்தாழ்வுகளினுடாக கட்டமைக்கப்பட்ட சமூகமாக விளங்கி வருகின்றது. இத்தகைய வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் கால ஓட்டத்தில் ஒவ்வொரு கட்டங்களிலும் மனிதர்களாலேயே உருவாக்கப்பட்டு அர்த்தம் கற்பிக்கப்பட்டு வந்துள்ளது என்பது பிரதான விடயமாகும். எனவே இயற்கையில் இத்தகைய வேறுபாடுகளோ ஏற்றத்தாழ்வுகளோ இன்றி வாழ்ந்த மனிதர்களிடையே கால ஓட்டத்தில் மனிதரே உருவாக்கிய ஏற்றத்தாழ்வுகளை மனிதர்களே மாற்ற வேண்டியது முக்கிய விடயமாகும். எதுவும் நிலையானவை அல்ல அவை மாறவேண்டியவை முக்கியமாக இவை மனிதராலேயே மாற்றப்படவேண்டியவை.
இவ்வாறு எமது சமூகத்தில் சாதி,பால் வர்க்கம் பிரதேசம்,மதம், வயது எனப் பல்வேறு வகையில் நிலவிவரும் வேறுபாடுகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் இருப்பதனை அங்கிகரித்தல் என்பது மானுடநேயத்திற்கு முரணான சமூக முரண்பாடுகளுக்கும் அழிவுகளுக்குமே வழிவகுக்கும் என்பதை இன்றைய வரலாற்றின் யதார்த்த அனுபவங்கள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன.
இத்தகைய நிலையில் எம்மிடையே உள்ள வேறுபாடுகளிடையே நிலவும் ஏற்றத் தாழ்வுகளை இல்லாதுகளையும் செயற்பாடாக வேறுபாடுகளை வேற்றுமையான அடையாளங்களை மறந்து கைவிட்டு பொது அடையாளத்திற்கு அல்லது மாற்று அடையாளங்களை உருவாக்கிக் கொள்ளுதல் என்பது தீர்வாக அமையாது என்பதனை நாம் பிரதானமாக கவனத்தில் எடுத்தல் வேண்டும். குறிப்பாக சாதி அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகள் உள்ள நிலையில் தாழ்ந்த சாதியினர் என்போர் தமது சாதிய அடையாளங்களை துறந்து இன்னொரு சாதியின் அடையாளத்திற்குள் தம்மை போர்த்திக் கொள்வது என்பது ஏற்கனவே இருந்த ஏற்றத்தாழ்வுகளை விடவும் ஒரு சமூகத்தின் அடையாளத்தையே இல்லாதொழிக்கும் மிகப்பெரும் வன்முறையாக அமைவது குறிப்பிட வேண்டியதாகும். 
இத்துடன் தாழ்ந்த சாதி என்பவர் தமது மெலெழுந்தவாரியான அடையாளங்களை கைவிடல், துறத்தல் என்பது உண்மையில் அச்சாதியின் அடையாளத்தை இல்லாது ஒழித்து சமத்துவ நிலையை உருவாக்கிவிடும் என்பது குழந்தைத்தனமான எண்ணமே என்பதில் தவறில்லை.எமது சமுதாயத்தில் ஒரு மனிதர் தனது சாதி அடையாளங்களை பேணிவருகின்றாரோ  இல்லையோ எப்படியாவது அவர் என்ன சாதியைச் சேர்ந்தவர் என்பது தோலுரிக்கப்பட்டு கண்டுகொள்ளப்பட்டிருப்பதனை நாம் யதார்த்த ப+ர்வமாக அறியமுடியும். எனவே ஒரு மனிதர் தனது சாதிய அடையாளங்களை அதாவது தொழில் முறைகளை மறைத்துக் கொள்ள முற்படுவது என்பத அவர்களது சாதிய அடக்கு முறையை இல்லா தொழிப்பதற்கான தீர்வாகாது என்பது நிரூபணமாகிறது.
இத்தகைய பின்புலத்தில் பல்வேறு வித்தியாசங்கள் வேற்றுமைகளுடன் விளங்கும் நமது சமூகத்தில் ஒவ்வொரு சமூகத்தவரும் தமது அடையாளங்களை மறைக்காமல் தமது தொழில் சார்ந்த சாதிய அடையாளங்களை விட்டுக் கொடுக்காமல் இழக்காமல் தமது அடையாளங்களின் தனித்துவங்களைப் பேணியவாறு சுயமரியாதையுடன் வாழ வேண்டியது அவசியமானது என்பதுடன் இந்தப் பன்மைத்துவமான வேறுபாடுகளிடையே எவ்வித ஏற்றத் தாழ்வுகள் இருத்தல் கூடாது என்பதையும் வலியுறுத்தி பன்மைத்துவமான அடையாளங்களை தன்னகத்தே கொண்டு விளங்கும் ஒவ்வொரு சமூகப் பிரிவினரும் மனிதர்கள் என்ற அடிப்படையில் ஒருவருக் கொருவர் சமமானவர்கள். ஏற்றத்தாழ்வற்றவர்கள் என்பதனை நிலை நிறுத்தும் கருத்தியல் ரீதியான நடைமுறைகளை உருவாக்கும் நோக்கிலேயே உள்ளுர் அறிவுச்செயற்பாட்டுக் குழுவினராகிய நாம் தெளிவான சிந்தனையுடன் செயற்பட்டுவருகின்றோம். மேற்படி பன்மத்துவங்களை அங்கீகரிக்கும் ஏற்றத்தாழ்வற்ற சமுதாய முறையினையே இன்று உலகம் ப+ராகவும் முக்கிய இடம் பெற்று வரும் ஓரங்கட்டப்பட்டோர்  பற்றிய பார்வை தலித்துக்கள் பற்றி பார்வைகளின் அடிப்படைக் கருத்தாக வலியுறுத்தப்பட்டு வருகின்றன என்பது இவ்விடத்தில் குறிப்பிடவேண்டியது.
மேற்படியான யதார்த்த அனுபவங்களின் பின் புலத்தில் நின்று இந்தத் துண்டுப் பிரசுரத்தில் வலியுறுத்தப்படும் விடையங்களை நோக்கும் போது பறை மேளம் வாசிப்பதை விடுத்தால் அச்சமூகத்தின் மீதான அடக்குமுறைகள் பாரபட்சங்கள் நீங்கிவிடும்என்று எள்ளளவேனும் நம்ப முடியாது தமது அடையாளமான பறை மேளத்தைக் கைவிட்டு வாழும் ஒவ்வொ மனிதரும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் தனது சாதி இனங்காணப்பட்டு தாக்கப்படுவார் என்பது சொல்லித் தெரியவேண்டியது ஒன்றல்ல.
மாறாக அடக்கு முறைகளுக்குப் பயந்து மாயையான சமத்துவத்தை எதிர்பார்த்து  தமது அடையாளங்களை இழந்து வாழ முற்படுதல் என்பது அச்சமூகத்தவரின் ஒவ்வொரு மனிதர்களின் சுய பலத்தையும் ஆழுமையையும் அடியோடு இல்லாதொழித்துவிட்டு இரண்டும் கெட்டான் நிலையில் தத்தளிக்கும் திரிசங்கு நிலைக்கே அச்சமூகத்தினைச் சார்ந்தஒவ்வொரு மனிதருக்கும் எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என்பது நிட்சயமானது.
அத்தோடு அக்கடிதத்தில் கூறப்பட்டபடி பறைமேளம் வாசிப்பவர்களால் சமூகத்தில் மதுப் பழக்கம் உருவாகிறது, குழந்தைகள் சிறுவயதிலேயே மதுவருந்தப் பழகிவிடுகிறார்கள் என்பதும் ஏற்கமுடியாத கருத்தாக வேயுள்ளது. மது அருந்துவது என்பது இன்று எமது சமுதா யத்தின் பொதவான பிரச்சனையாக சகல மட்டத்திலும் நிலவி வரும்போது தனியே பறைமேளக் காரர்களிடம் மட்டும் இருக்கிறது எனக்கூறுவது பொது நியாயமற்ற கூற்றாகவே இருக்கிறது.
இத்துடன் பறைமேளத்தினைக் காலம் காலமாகப் பேணிவரும் கலைஞர்களைக் காணும்போது அவர்களில் முக்கியமானவர்கள் தொழிலுக்காகச் செய்தல் என்பதற்கும் மேலாக கலை அழகியல் உணர்வினை அதிகம் உட்கொண்ட அனுபவத்துடன் அதில் லயித்தவர்களாகவே மிகுந்த பண்புள்ளவர்களாக தமது கலைத் தொழிலைப் பேணிவருவதை அறிய முடியும்.
ஆகவே இன்று தமிழ் அடையாளம் பற்றியும் தமிழின் தொன்மை பற்றியும் பேசமுற்படும் நாம் வரலாற்று தொல்பொருள் ஆராய்ச்சிகளின் படியும் மானுடவியல் சமூகவியல் ஆய்வுகளின் படியும் தமிழர் சமூகத்தின் ப+ர்விகம் பறையர் சமூகத்திலிருந்தே ஆரம்பமாகியுள்ளது என்ற தற்கால ஆராய்ச்சி உண்மைகளை மனதில் இருத்திக் கொண்டு பறையர் சமூகத்தினர் தமது அடையாளம் இழக்காத வகையில் மனிதர்கள் என்ற வகையில் தமது தனித்துவங்களைப் பேணியபடி சுயமரியாதையுடனும் சுயபலங்களுடனும் வாழ்வதற்கான கருத்தியல் நிலையினையும், செயற்பாட்டு  முறைகளையும் உருவாக்குவது அவசியமாகும். குறிப்பாக தமிழ் அடையாளம் என்றும், தமிழரின் பாரம்பரியக் கலைகள் என்றும் கூறியபடி இக்கலைகளை அழியாது காக்க வேண்டும் என வெறும் வாய்ப் பேச்சாக மட்டும் சொல்லிக் கொண்டிருக்கும் நாம் உண்மையில் எந்தளவிற்கு இது குறித்த நடைமுறை ரீதியில் சாத்தியப்படக்கூடிய ஆக்க ப+ர்வமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றோம் என்பது பற்றி எம்மை நாமே கேள்வி கேட்க வேண்டியுள்ளது.
அதாவது ஒரு புறம் பறை மேளக் கலையைப் பேணி எமது தனித்துவத்தைக் காக்க வேணும் என்று கூறிக்கொண்டு மறுபுறம் அதைப் பேணிவரும் சமூகத்தவரை இழிவுபடுத்தும் வாழ்க்கை முறைகளை அங்கீகரித்துக் கொண்டிருக்கின்றோம். இவ்வாறு இபடிப்பது தேவாரம், இடிப்பது சிவன் கோயில் என்றபடி நம்மிற் பலர் ஈடுபடுவதன் விளைவுதான் மேற்படி இளந் தலைமுறையினரது செயற்பாட்டிற்கு அடிப்படையாக இருக்கின்றது என்கின்ற கசப்பான உண்மையை நாம் அனைவரும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும். 
எனவே மேற்படி துண்டுப் பிரசுரத்தில் கூறப்பட்டுள்ள முடிவிற்கு அச்சமூகத்தவரின் இளந்தலைமுறையினர் வந்தமைக்கான பொறுப்பாளிகள் ஒவ்வொரு தமிழ் பிரசைகளுமாவர் என்பதைக் கருத்திற்கொண்டு எமது தமிழர் சமூகத்தின் பன்மைத்துவமான அடையாளங்கள் யாவும் உயர்ந்தது, தாழ்ந்தது, மேலானது, கீழானது என்று மனிதத்துவத்திற்கு முரணாக நோக்கப்படாது மாறாக பன்மைத்துவமான அடையாளங்கள் அனைத்தும் வித்தியாசங்களாக, சமத்துவமாகப் பார்க்கப்படும், பார்க்கின்ற மானுட நேயம் கொண்ட கருத்தியலை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.
இத்தகைய கருத்தியல் நடைமுறைகள் இடம் பெறும் போது மேற்படி கடிதங்களோ பிரசுரங்களோ வருவதற்கு இடமிருக்காது என்பது எமது அசையாத நம்பிக்கையாகும்.

சி.ஜெயசங்கர்
து. கௌரிஸ்வரன்


                                                 --------------------


மேற்படி துண்டுப் பிரசுரத்தினையும் அதற்கான பதில் கட்டுரை எழுதியிருக்கும், தம்மை உள்ளுர் அறிவுச் செயற்பாட்டுக் குழுவாக இனங்காட்டும் இந்த மூன்றாவது கண் இதழாசிரியர்களின் பார்வையையும் முன்நிறுத்தி மற்றது இதழ் சார்பாக நமது கருத்துரையை முன்வைக்கிறோம்.

மூன்றாவது கண் இதழாசிரியர்கள் மேற்படி துண்டுப்பிரசுரத்தினையோ அல்லது அவர்களது உணர்வுகளையோ புரிந்து கொள்ள முடியாமல் வழமையான பொதுப் புத்தி மட்டம் சார்ந்த கருத்து நிலையில் இருந்து இம்மியும் பிசகாது இப்பிரச்சனையைப் பார்த்துள்ளார்கள்.

இவர்களின் சிந்தனையாக, எண்ணக்கருவாக, பொதுவாக எல்லா வரிகளிலும் அழுத்தமாகி மையக்கருத்தாய் இருப்பது, பறையர்கள் பறையடித்தலைக் கைவிடக் கூடாது, .நாங்கள் உங்களை மனிசராக மதிக்கிறோம், உங்கள் தொழில் பறை அடிப்பதுவே, நீங்கள் காலம் பூராவும் பறையை அடியுங்கள். என்பதுவே.

இத்துண்டுப்பரசுரத்தில் உள்ள இளம் சந்ததியினரின் எல்லாவகையான கோரிக்கைகளும் மிகக் கவனமாகக் காயடிக்கப்பட்டு வேறு வேறு கோணத்தில் பதில் சொல்லி திசை திருப்பியுள்ளார்கள்.

குறிப்பாக சாதி அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகள் உள்ள நிலையில் தாழ்ந்த சாதியினர் என்போர் தமது சாதிய அடையாளங்களை துறந்து இன்னொரு சாதியின் அடையாளத்திற்குள் தம்மை போர்த்திக் கொள்வது என்பது ஏற்கனவே இருந்த ஏற்றத்தாழ்வுகளை விடவும் ஒரு சமூகத்தின் அடையாளத்தையே இல்லாதொழிக்கும் மிகப்பெரும் வன்முறையாக அமைவது  குறிப்பிட வேண்டியதாகும் என்கிறார்கள்.

ஒரு மனிதர் தனது சாதிய அடையாளங்களை அதாவது தொழில்முறைகளை மறைத்துக் கொள்ள முற்படுவது என்பது அவர்களது சாதிய அடக்கு முறையை இல்லாதொழிப்பதற்கான தீர்வாகாது என்பது நிரூபணமாகிறது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.  இங்கே இவர்கள் சொல்லும் வன்முறையற்ற சமூக அடையாளம் எதுவாக இருக்கிறது?

பறையர்கள்  பறையை அடித்துக் கொண்டு, அல்லது தாழ்த்தப்பட்ட மக்கள் தாம் செய்து வரும் தொழிலைச் செய்து கொண்டு எவ்வித சுய சிந்தனையோ கல்வியறிவோ இல்லாது ஒருவித எதிர்ப்புணர்வும் இன்றி ஆதிக்க சாதியினர் சொல்லுகின்ற எல்லா அடிமாட்டு வேலைகளுக்கும் ஆமாப் போட்டுக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தால் அது வன்முறையற்ற சமூகமாக இருக்கும் என்பது தானே, இவர்களது கோரிக்கை.

துண்டுப்பிரசுரம் மிகத் தெளிவான முறையில் தமது சமூப் பிரச்சனைகளை முன்னிறுத்தியுள்ளது. அவர்கள் தமது சாதிய அடையாளமான பறை அடித்தலைக் கைவிடுவதல் என்பதற்கூடாக  சமூக முன்னேற்றம் பற்றியும் சமூகப் பாதுகாப்புப் பற்றியும் அக்கறைப் படுவதற்கப்பால் வேறு ஒன்றையும் கூற வரவில்லை.
அந்த அக்கறை நிலை கொஞ்சமும் இன்றி ஆதிக்க சாதிக் கருத்து நிலையிலிருந்து தமது கருத்தை முன்வைத்துள்ளார்கள். அதைவிட ஒரு ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மனிதர்கள் தாம் ஒடுக்கப்படும் நிலையிலிருந்து தப்பித்தலுக்காக அதை நிலை நிறுத்தும் தொழிலைக் கைவிடுவது என்பதும் அதனை மறுப்பது என்பதும் ஏன் இவர்களுக்கு ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறது?
பறை மேளம் வாசிப்பதை விடுத்தால் அச்சமூகத்தின் மீதான அடக்குமுறைகள் பாரபட்சங்கள் நீங்கிவிடும் என்று எள்ளளவேனும் நம்ப முடியாது. தமது அடையாளமான பறை மேளத்தைக் கைவிட்டு வாழும் ஒவ்வொ மனிதரும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் தனது சாதி இனங்காணப்பட்டு தாக்கப்படுவார் என்பது சொல்லித் தெரியவேண்டியது ஒன்றல்ல.என்கிறார்கள்.

இங்கே அறிவுச் செயற்பாட்டுக் குழு வலியுறுத்தும் முக்கியமான விடையம் எது? பறையர்கள் பறை மேளம் அடிப்பதைக் கைவிடக் கூடாது. அப்படி நீ கைவிட்டு ஒதுங்கி னாலும் உன் சாதி அழியாது. பறையைக் கை விட்டாலும் நீ பறையர் சமூகம் தான்.அதனால் பறை மேளம் அடிப்பதைக் கைவிடாதே என்றுதானே இவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

மது அருந்துவது என்பது இன்று எமது சமுதாயத்தின் பொதுவான பிரச்சனையாக சகல மட்டத்திலும் நிலவி வரும்போது தனியே பறைமேளக்காரர்களிடம் மட்டும் இருக்கிறது எனக்கூறுவது பொது நியாயமற்ற கூற்றாகவே இருக்கிறது.என்கிறார்கள். இது ஒரு அப்பட்டமான சாதித் திமிருடன் கூறப்படும் கருத்து.

பறை மேளம் அடிப்பதற்காகச் செல்பவர்கள் எவ்வளவு இலகுவாக மதுவிற்கு அடிமையாகிறார்கள் என்பது நாம் கண்டு அனுபவித்தது. பொதுவாக ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகத்தில் இருக்கும் அசுத்தமான வேலைகளைச் செய்வதற்கு நிர்ப்பந்திக் கப்பட்டவர்கள்( மலம் அள்ளுதல், செத்த பிணத்திற்கு சவரம் செய்தல், அழுக்குத் துணிதோய்த்தல், செத்தவர்களின் வீட்டு வாசலில் இருந்து 3,4 நாடகள் மேளம் அடித்தல்) இந்தத் தொழில்களைச் செய்யும் போது உச்ச போதையில் தானே இருக்கவேண்டும். இதைவிட பாடசாலை செல்லும் சிறுவர்கள் பொதுவாக இத்தொழிலில் ஈடுபடுத்தப்படுவதால் இளவயதிலேயே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள். உயர்சாதிக்காரர்களால் குடிப்பழக்கத்திற்கு உட்படுத்தப் படுகிறார்கள். இதனால் அவர்களது கல்வி பாழடிக்கப் படுகிறது.

 இந்த அப்பட்டமான உண்மையை உள்ளுர் அறிவுச் செயற்பாட்டுக்குழு கண்டுகொள்ளாது இருப்பது என்பது அவர்களின் சிந்தனை உயர்சாதி மனோபாவம் சார்ந்து இருப்பதையே காட்டுகிறது.

பறைமேளத்தினைக் காலம் காலமாகப் பேணிவரும் கலைஞர் களைக் காணும்போது அவர்களில் முக்கியமானவர்கள் தொழிலுக்காகச் செய்தல் என்பதற்கும் மேலாக கலை அழகியல் உணர்வினை அதிகம் உட்கொண்ட அனுபவத்து டன் அதில் லயித்தவர்களாகவே மிகுந்த பண்புள்ளவர்களாக தமது கலைத் தொழிலைப் பேணிவருவதை அறிய முடியும்.

இங்கே பறை மேளம் அடிப்பவர்கள் கலைஞர்கள், பறைமே ளம் ஒருகலைச் சாதனம், அதற்கு ஒரு அழகியல் இருப்பது எல்லாமே உண்மைதான். ஆனால் அதைஅடித்து வருபவர்கள்

தாங்கள் அதற்காகவே அடிமைப்படுத்தப்படுகிறார்கள் என்று உணரும் போது, அதிலிருந்து விடுபட எண்ணும் போது அந்த உணர்வை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பறை மேளம் காக்கப்படவேண்டும் அழியவிடக்கூடாது எல்லாம் உண்மை தான். அதனை சமூகத்தின் சகல தளத்தி லும் பாதுகாக்க முன்வரவேண்டும்.

 சகல தரப்பினரும்  அதனைப்பழகி தாங்கள் தாங்கள் தங்களது ஊரின் செத்தவீட்டு முற்றங்களில் இருந்து அடிக்க முன்வரவேண்டும்.

தமது பிள்ளைகளுக்கும் பழக்கவேண்டும்.

பாடசாலையில் கல்வித்திட்டத்தில் பறைமேளம் பழகுவதை கட்டாய பாடமாக்க வேண்டும்.

அதன் முதன்மை கருதி திருமண வீடுகளிலும் தமது கொண்டாட்ட தினங்களிலும் பாவனைக் குட்படுத்த வேண்டும்.

அதைவிடுத்து நீதான் அடிக்கவேண்டும். அதிலிருந்து ஒதுங்குதல் கூடாது. ஒதுங்கினாலும் சாதி அழியாது என்று பூச்சண்டி காட்டக் கூடாது. இது வெறும் சாதியத் திமிர்.
அதைவிட குழந்தைகள் சின்னவயதில் செத்தவீடுகளுக்கு பறைளேம் அடிக்க வருவதால் குடியில் மூழ்கி கல்வியில் பாழாய்ப் போகிறார்கள் என்று துண்டுப்பிரசுரத்தில் மிகவும் கவலைப்பட்டுச் சொல்லியுள்ள பிரச்சனைக்கு இவர்கள் பதில் சொல்லாமல் மழுப்பியுள்ளார்கள்.

இறுதியாக,
 எமது தமிழர் சமூகத்தின் பன்மைத்துவமான அடையாளங்கள் யாவும் உயர்ந்தது, தாழ்ந்தது, மேலானது, கீழானது என்று மனிதத்துவத்திற்கு முரணாக நோக்கப்படாது மாறாக பன்மைத்துவமான அடையாளங்கள் அனைத்தும் வித்தியாசங்களாக, சமத்துவமாகப் பார்க்கப்படும், பார்க்கின்ற மானுட நேயம் கொண்ட கருத்தியலை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். இத்தகைய கருத்தியல் நடைமுறைகள் இடம் பெறும் போது மேற்படி கடிதங்களோ பிரசுரங்களோ வருவதற்கு இடமிருக்காது என்பது எமது அசையாத நம்பிக்கையாகும்.
என்று இந்த அறிவுச் செயற்பாட்டுக்குழு குறிப்பிட்டதிலிருந்து இவர்களுக்கு இப்படியான எதிர்ப்புக் குரல்கள் வெளிவருவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதிருக்கின்றது என்பது தெளிவாகிறது.

மூன்றாவது கண் அறிவுச் செயற்பாட்டுக்குழுவின் இத்தகைய வெளிப்பாட்டை மற்றது இதழ் வன்மையாகக் கண்டிக்கின்றது. தாழ்த்தப்பட்டவர்கள் தமது அறிதலில் இருந்து தமது எதிர்ப்புணர்வை வெளிக்கொண்டு வருவது,

சமூகத்தின் அடையாளப்படுத்தப்பட்ட சாதிப்படிநிலைகளை உயர்சாதிக்கான சேவை என்ற கழிசடை மனோநிலையை கேள்விக்குள்ளாக்குவது என்பன இன்று முன்னெடுக்க வேண்டியதொன்று. அது எந்த நிலையிலாயினும் சரி.

இலக்கிய வடிவிலோ நாடக வடிவிலோ அல்லது துண்டுப்பிரசுர வடிவிலோ இயலுமானவரை எதிர்ப்புணர்வை வெளிக் கொண்டு வரவேண்டும். இன்று இந்த இளைஞர்களின் துண்டுப்பிரசுரத்தினை முன்னெடுத்து அதற்கான முழு ஆதரவையும் வழங்கி அவர்கள் நிலையிலிருந்து போராட்டத்தைத் தொடங்க வேண்டும்.
இதற்கூடாக கடந்த காலத்தில் இதே களுதாவளையில்தான் சவரத் தொழிலாளிகள் தாங்கள் இறந்த பிணங்களுக்கு இனிச் சவரம் செய்ய வரமாட்டோம்  என்று கூறியிருந்ததும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


மற்றது இதழ்2003




Sunday 8 March 2015

கி.பி. அரவிந்தனிற்கு.... அஞ்சலிகள்.


கற்சுறா...

இயற்கை, எத்தனை வழிமறிப்புக்களையும் மீறி.தன் இலக்கை அடையும் அதில் மரணமும் ஒன்றே.
இலக்கியமும் இயக்கமுரண்பாடுபோலவே நீண்ட பகையையும் தொடர் கோபத்தையும் உள்ளடக்கித் தொடர்கிறது. நாம் வாழ்வது என்பது எப்படி இயல்பானதோ அதேபோல் மரணமும் இயல்பானது. ஆனால் மரணம் என்பது வாழ்வின் முடிவல்ல.
அதனால் வாழும் போது முரண்பாடு கொண்டு கருத்து வேறுபாடு கொண்டு வாழ்ந்தவர்களில் ஒருவர் மரணித்த போதும். அந்த முரண்பாட்டை நேரடியாகப் பேசுபவனிடம் அறம் இருக்கிறது என்று நினைப்பவன் நான். எனினும் எவருடைய மரணமும் ஈடு செய்ய முடியாதது என்றபோது எல்லோருக்கும் அது கவலையளிக்கிறது.
அந்தவகையில் கி.பி. அரவிந்தனது மரணம் என்னையும் பாதிப்பிற்குள்ளாக்கியிருக்கிறது. 
ஒரு இயக்ககாரனாய் ஒரு இலக்கியகாரனாய் அவரை நான் அறிந்து வைத்திருக்கிறேன். இது இரண்டிற்கும் அவர் தன் வாழ்நாளைத் தொலைத்திருக்கிறார் என்றும் அறிந்திருக்கிறேன்.
ஆனாலும் அவரை நெருக்கமாக அறிந்த காலங்களில் அருகில் சென்று விடாமல் கொஞ்சம் தள்ளியே இருந்து விடும்படியான கோபத்தை அவர் தந்து கொண்டிருந்தார்.
ஆம். அன்றைய அரசியற் செயற்பாடுகளும் இலக்கியச் செயற்பாடுகளும் பலரை இப்படித் தள்ளியே வைத்திருக்கின்றது. “மௌனம்” இதழ் வந்த காலங்களில் அநாமிகன்(முகிலன்) அண்ணாவுடன் சில நாட்கள் நெருக்கமாகப் பழகியபோதும் கி.பி. அரவிந்தன் அவர்களைக் கிட்ட அணுகியதில்லை. மௌனம் இதழ் அதன் இலக்கிய வடிவமைப்பு பலரை உற்சாகப்படுத்தியது. அதில் நானும் ஒருவன்.
கி.பியின் “முகங்கொள்” கவிதைத் தொகுப்பை 1992 இலக்கியச் சந்திப்பில் வாங்கியதாக ஞாபகம். அதில் பாரீசில் ஒரு அறையில் பலர் வாழும் அகதிகளின் வாழ்வு குறித்த பதிவு என நினைக்கிறேன். (கையில் புத்தகம் இல்லை நினைவில் உள்ளது மட்டும்)
கறிக்கு வதக்கிய வெங்காயம்/
சொக்ஸ்/
கோமணம்/
குசு/
குழைந்து வரும் காற்று,/
என்று பதிவிட்டிருப்பார்.
அங்குதான் தோழர் அருந்ததி அவர்களின் இரண்டாவது பிறப்பு கவிதைத் தொகுதியும் வாங்கினேன். வாங்கிய பின்தான் தோழர் சிவசேகரம் அவர்கள் இரண்டாவது பிறப்பை விமர்சனத்திற்கெடுத்து முற்றுப்புள்ளி அரைக்காற் மாத்திரை பிழை என்று சொல்லிக் கொண்டிருந்தார். டாக்குத்தர்மார் மாறித் தந்த மாத்திரைகளில் தப்பிய எங்களுக்கு தோழர் சிவசேகரத்தின் மாத்திரைகளில் தப்பமுடியாமல் இருந்தது. அருந்ததி தாடியைத் தடவிக் கொண்டிருந்தார்.
கி.பி. அவர்கள் நீண்ட காலத்தின் பின் “கனவின் மீதி” என்று ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டார்.
அது ஈழத்தின் யுத்தகாலம். அவர் ஒரு திசை. நாம் ஒரு திசை. அந்தக் கவிதைத் தொகுதி அவர்மீது என்றுமில்லாத கோபத்தைத் தந்தது. பாதிக்கனவு முன்பு பலருக்கு லண்டன் போவது என்று இருந்தது என்றும் இப்போ திரும்ப நாட்டிற்குப் போகும் கனவே தன்னுடைய மீதிக் கனவு என்றது அந்தத் தொகுப்பு.
அவருடைய இயக்கவாழ்வுக்கும் இலக்கிய வாழ்வுக்கும் உள்மனது எப்போதும் ஒரு கவுரவத்தைக் கொடுத்துக் கொண்டே இருந்தது. நம்மில் எத்தனையோபேர் ஒரு இயக்கத்திலும் ஈடுபடாமல், ஒரு சண்டைக்குள்ளும் மாட்டாமல், ஒரு இராணுவத்தையும் காணாமல் ஈழ அரசியல் பண்ணும் போது அதற்குள் வாழ்ந்து தன்வாழ்வைக் கொடுத்தவர் என்று அறியும் போது இயல்பாய் ஒரு மதிப்பை மனது கொடுத்துக்கொண்டெ இருந்தது. ஆனால் நடக்கும் ஈழ அரசியற் சூதிற்குள் அவர் தன்ன உட்தள்ளியிருந்தார். அதனாலே அவருக்கு அந்த மாதிரி எழுதத் தோன்றியிருக்கும்.  திரும்ப ஊருக்குப் போகும் கனவை தனது மீதிக் கனவாகக் கற்பனை பண்ணியபோது கட்டுக்கடங்கா கோபம் வந்தது. அந்தக்கோபத்தில் அவர்மீது எறியும் ஒரு கல்லாக ஒரு கவிதை எழுதினேன்.

திடப்பட்டுப் போனோம்
வெகுவாய்,
செக்கல் இருட்டில்
கனவுகளை மெய்ப்பித்து.

எம்மீது பழி போடாதிருக்க
பாதிக் கனவை காண்பித்து
தவறினோம்.

அச்சாப் பிள்;ளைகள்.

மீதிக் கனவில்
தின்று,
புணர்ந்து,
குடித்து,
கவிதை எழுதி,
குழந்தைகளிடம் காண்பிக்க
இன்னும் இன்னுமாய் சாகுபடி.

சொன்னா குறை நினைக்க வேண்டாம்.

சொகுசாய் படுத்துறங்கி
சுதிபட்ட பூனை
நெரிபட்டு நெருப்பில் விழ
துடிக்குமா? சொல்.

பின் எதுக்காய்,
கனவும்...
கவிதையும்...
மயிரும்...
மீதியும்...

படு.

மல்லாந்த படுக்கை.

கால்விரிய
பதம்பார்த்து
குறி தள்ளும் நாயே!

தெருக்கரையில்
இன்னும் கறள் ஏறாக் கோதுகளின்
துலங்கல் திடுக்கிட்டு
தூக்கம் கலைகிறது.

தொடர் தூக்கம்
இசைவு
அறுந்து போனால்
கனவொன்று வருமா?
கழுதாய்!

இது அவர்மீது நான் எழுதிய இரண்டாவது விமர்சனக்கவிதை. அவர் எப்போதும் போல இப்போதும் என்னால் மிக நெருங்கமுடியாதவராகவே இருக்கிறார். ஆனால் இப்போது இப்படி எழுதமுடியாது. இரத்தம் முன்பு போல அல்ல நிறம் மாறுகிறது.
கி.பி. அரவிந்தனுக்கு எனது இரங்கல் அஞ்சலிகள்.

யுத்தம் தந்த அச்சமும் ஒவ்வொருத்தர் மீதான மறைகொலை முகமும் பீதியையும் சந்தேகத்தையும் கொண்டிருந்த காலங்கள் இலக்கியத்தைத் தின்று கொண்டிருந்தன.