Tuesday 29 September 2015

என்.கே ரகுநாதனுடன் இருத்தலும் உரைத்தலும்.

 நிகழ்வு குறித்த சிறு பதிவு:

கற்சுறா



ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி என்ற ரகுநாதன் அவர்களது தன்வரலாற்று நூலை முன்வைத்து அவருடன் இருந்து ஒரு உரையாடலை தேடகம் அமைப்பினர் 27 செப்டம்பர்2015இல் 
நாடாத்தினார்கள். 


நிகழ்வினை தோழர் சீவரத்தினம் அவர்கள் தலைமை தாங்கி நடாத்தினார். ரகுநாதன் ஐயா அவர்கள் தனது உடல் நிலை சரியில்லாத நிலையிலும் கூட்டம் முடியும்வரை அமர்ந்திருந்தார்.

தொடர்ந்து எம்.சியின் மகன் சந்திரபோஸ், க.நவம், பாக்கியநாதன், பேராதரன், யோகராஜா ஆகியோர் உரையாற்றினார்கள்.







அவர் தும்பளை சிவப்பிரகாச வித்தியாசாலையில் கல்வி கற்ற போதுதான் ஒரு போராளியாக மாறினார் என்றும் மற்றப் பிள்ளைகளுடன் சேர்க்காமல் பின்வாங்கிலில் அதுவும் தனிவாங்கிலில் இருந்து கல்வி பயில வைக்கப்பட்டவர் அந்தப்பாடசாலையில் அதிவிசேட சித்தி எய்தி எல்லாப் பிள்ளைகளைவிடவும் சிறந்த மாணவன் என்ற தகமையைப் பெற்றார் என்று தனக்குத் தெரிந்த ரகுநாதன் குறித்து ஞாபகக்குறிப்புக்களை சந்திரபோஸ் அவர்கள் சொல்லிச் சென்றார்.


ஒடுக்கப்பட்ட மக்களது வரலாற்று ஆவணங்களாக, தமிழ்நாட்டில், பாமாவின்கருக்கு,’  கே.. குணசேகரனின்வடு,’  ராஜ்கௌதமனின்சிலுவைராஜ் சரித்திரம்,’ என்பவை முதற்கொண்டு, இன்னும் பல தன்வரலாற்று நூல்கள் வெளிவரத் துவங்கியுள்ளன.



ஈழத்தைப் பொறுத்தவரை, கடந்த ஐம்பதுகளின் ஆரம்பத்தில் வதிரியைச் சேர்ந்த கா. சூரன் எழுதியசூரன் சுயசரிதை,’  2001இல் டொமினிக் ஜீவா எழுதியஎழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்,’  2004இல் என்.கே. ரகுநாதன் எழுதியஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி,’  2005இல் இலங்கையன் செல்வரத்தினம் எழுதியவாழ்வும் வடுவும்,’  2011இல் தெணியான் எழுதியஇன்னும் சொல்லாதவை,’  அதேயாண்டில் யோகரட்ணம் எழுதியதீண்டாமைக் கொடுமைகளும் தீமூட்டிய நாட்களும்,’  2013இல் தெணியான் எழுதிய இன்னொன்றானபூச்சியம் பூச்சியமல்லஎன்பன ஒடுக்கப்பட்டோரது தன்வரலாற்று நூல்கள் என்ற தகவலோடு
சாதி என்பது இன்னும் அழிந்து விடவில்லை ஈழயுத்தகாலத்தில் எப்படி ஈழத்தில் சாதி காப்பாற்றப்பட்டது. வெளிநாடுகளில் இன்னமும் எப்படி சாதி காப்பாற்றப்படுகிறது  என்று அதிகமான சப்பவங்களைப் பட்டியலிட்டு க.நவம் அவர்கள் பேசினார்.




கையைக் காலை அடித்து முறிக்கும் கூட்டத்திற்குள் இருந்து மிகத் துணிவாக கந்தன் கருணை என்ற நாடகத்தை எழுதியவர். தாய் நாவலில் வந்த பெலகேயாவின் பாத்திரத்தோடு தனது தாய் வள்ளியை ஒப்பிடும் ரகுநாதன் அவர்களின் மனம் மிக அற்புதமானது என்றும் இந்த நாவல் மற்றய இலக்கிய நயம் கொண்ட கதைகளைப் போல் வாசிக்க முடியாது. இது எங்களது வலிகளைச் சொன்னகதை. எங்களது அசிங்கங்களைச் சொன்ன கதை என்றும் பேராதரன் குறிப்பிட்டு ஆசியாவின் முதல்தரமான நூலகம் எங்களிடம் இருந்தது. அங்கு தான் அதன் கோடியில்தான் இடுப்பில் காவோலை கட்டிக் கொண்டு ஒரு சமூகம் தனது சமூகத்தையே தெருவில் நடக்கவைத்து அவமானப்படுத்தியது. இந்த அசிங்கங்களைக் கொண்ட சமூகத்திற்கு ஆசியாவின் முதற்தரமான நூலகம் இருந்தாலென்ன எரித்தலென்ன என்று தார்மீகக் கோபத்துடன் பேசினார்.





ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் கதை என்ற அருமையான பெயர் கொண்ட நாவல் என்று தனது பேச்சைத் தொடங்கிய பாக்கியநாதன் அவர்கள்.கிழக்குக் கடற்கரையிலிருந்து தொண்டமானாறுவரையான பகுதியில் வராத்துப்பளை தொடங்கி சந்தாதோட்டம், மாயக்கை,சுளகுகட்டி,அல்லாய் வடக்கு, அல்வாய் தெற்கு, வேர்குத்தி, வதிரி, கொற்றாவத்தை, நவிண்டில், சமரபாகு, இலந்தைக்காடு தொண்டைமானாறு வரையான 3மைல் அகலமும் 10மைல் நீளமும் உள்ள வரண்ட எதுவுித பயிர்களும் வளர்கமுடியாத கட்டாந்தரைப்பிரதேசங்களில் இந்தத் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். வாழத் திணிக்கப்பட்டார்கள். இங்குள்ள மக்களின் கதைகளைச் சொன்ன ரகுநாதன் அவர்கள். தனியே இரண்டு மூன்று கிராமங்களை மட்டும் தனது நாவலில் முன்நிறுத்தி கதையை முடித்துள்ளார். என்று குறிப்பிட்டார்.




ரகுநாதன் என்ற ஒரு போராளி இந்த நாவலில் தவறிப் போனார் என்று தனது உரையைத் தொடங்கிய யோகராஜா நாவல் முழுவதும் வாசிக்கும் போது ரகுநாதன் என்ற போராளி தொலைந்து விட்டான் என்றும் அவருடைய வாழ்வில் மிகப் பெரிய சாதனையாக இருந்தது அவருடைய கலப்புத் திருமணம். அதைச் செய்யத் துணிந்த ரகுநாதன் தன்னுடைய தன் வரலாற்று நூலில் அதுகுறித்து மொனமாகக் கடந்து போயிருப்பது மிகவும் கவலைக்குரியது. ரகுநாதன் அவருடைய சாதிக்காரர்களால் திருமணத்தின் பின் ஒதுக்கிவைக்கப்பட்டார். அதிலிருந்து தன்னை மீட்பதற்காக அதனைக் குறிப்பிடாது இந்த நாவலை எழுதியிருக்கிறாரோ என்று என்னைச் சந்தேகப்படவைக்கின்றது. என்றும் குறிப்பிட்டு ரகுநாதனின் மைத்துனர் பசுபதியின் கவிதைகளை நினைவு கூர்ந்து உரையாற்றினார்.




நிகழ்வின் இறுதியில் ரகுநாதனின் மகன் ஜெயா இந்த நிகழ்வு, உடல்நலம் குன்றியிருக்கும் தன்னுடைய தந்தைக்கு கொஞ்சம் உற்சாகத்தைக் கொடுக்கும் அவரைத் திரும்பவும் எழுதத் தூண்டும் என்று குறிப்பிட்டு நிகழ்வை நடாத்திய தேடகம் அமைப்பினருக்கு நன்றி தெரிவித்தார்.








கலந்துரையாடலின் பின்னர் ஓவியர் றஸ்மியினால் வரையப்பட்ட ரகுநாதன் அவர்களது ஓவியத்தை ரகுநாதன் அவர்களிடம்  தேடகம் அமைப்பினர் சார்பில் தோழர் மாற்கு அவர்கள் கையளித்தார்.


ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி
வெளியீடு: உயிர்மெய்/ கருப்புப் பிரதிகள்.
Kaptein Linges 9a
6006 Aalesund
Norway
email: banu.nor@gmail.com