Thursday 5 July 2018

“ஒரு பொம்மையின் வீடு”

கற்சுறா


ஒரு பொம்மையின் வீடு நாடகம் மனவெளி கலையாற்றுக் குழுவினரால் யூன் 30ம் திகதி இரு நிகழ்வுகளாக மேடையேற்றப்பட்டது. 150      வருடங்களுக்கு முன் டெனிஸ் மொழியில் ஹென்றி ஹிப்சன் அவர்களால் எழுதப்பட்ட நாடகத்தை ஆங்கிலம் வழியாக மொழிபெயர்த்து பி. விக்னேஸ்வரன் அவர்களால் நெறியாள்கை செய்யப்பட்டிருந்தது.

இந்த நாடகம் தொடர்பான  சிறிய சலசலப்பை ஒருவருடத்திற்கு முன்னரே அறிந்து கொண்டிருந்தேன் எனினும் கடந்த ஒரு மாதமாக இது சம்பந்தமான பலரது உரைகள் வீடியோ வடிவில் முக நூல் வழிவே வழமைபோல் வேகமடைந்து கொண்டது. நான் இங்கே வழமை போல் எனச் சொல்வதனை நீங்கள் கவனம் கொள்ள வேண்டும். உண்மையில் இன்று இருக்கின்ற தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு நிகழ்வின் முழு விபரத்தையும் வெளித் தெரியப்படுத்திக் கொள்வது மிக முக்கியமானதே. அது செலவீனமற்ற  பெறுமதியான ஒரு விளம்பரப்படுத்தும் வித்தையும் ரசிக்கக் கூடியதும் கூட.

ஆனால் பெறுமதியற்ற ஒரு நிகழ்வைக் கூட இந்த வகை விளம்பர வித்தை பலரை ஏமாற்றிவிட்ட சம்பவங்களை நான் பார்த்திருக்கிறேன். இந்த வகைச் செயற்பாட்டில் ஏமாந்து போன கடந்த காலங்களை நான் அப்போதைய காலங்களிலே பதிவும் செய்திருக்கிறேன்.


இந்த “ ஒரு பொம்மையின் வீடு” நாடகத்தையும் அப்படியொரு மனநிலையில் இருந்து தான்  தொடர்ந்து அவதானித்தபடி இருந்தேன். எனக்குத் தெரியும் மிக அதிகமான பொருட்செலவில் பணச் செலவில் மனித உழைப்புச் செலவில்  நிகழ்த்தப்படுகின்ற நாடகங்களை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல என்பது.

சீரிய நாடகத்திற்காக இயங்கும் ஒரு நாடக அமைப்பு மார்க்கம் தியேட்டரில் மட்டுமே நாடகம் போடுவோம் எனத் தொடர்ந்து அடம் பிடித்து நிற்பதனையிட்டு எனக்கு அதிருப்தியே இருந்து கொண்டிருக்கிறது. அது மிகவும் ஏமாற்றமாகத் தொடர்ந்தும் இருந்து கொண்டே இருக்கிறது. ஆனாலும்  அத்தகைய அடம் பிடிப்பில்  கர்வத்துடன் இருக்கும்  மனவெளி அமைப்பினர் கடந்த காலங்களில்  அந்தத் தியேட்டரினை பயன்படுத்தாமலேயே போடப்பட்ட சில நாடகங்கள் குறித்து நான் அதிகம் விசனமுற்றிருக்கிறேன். அந்த விசனம் அவர்களுக்கும் எனக்கும் இடையில் உரையாடல் விரிசலையே பல தடவை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த மாதிரியான நாடகங்களை மனவெளியின் மேடையில் பார்ப்பதற்கு நம்மில்  பலர் அங்கு வந்திருக்கவில்லை என்பதனை உடனேயே தெரியப்படுத்த வேண்டியிருந்தது. என்னளவில் அந்த அதிருப்தியை அவ்வப்போது தெரிவித்தபடியே இருந்தேன்.

இவ்வாறானதொரு எண்ணப்பாட்டில்த் தான் இந்த 19வது  அரங்காடல் நிகழ்வையும் அவதானித்தபடி இருந்தேன். கடந்த சில வருடங்களாக ரொரன்டோ நாடகச் சூழல் குறித்து இருந்த அயர்ச்சியே  இந்த 19வது அரங்காடல் நிகழ்வைப் பகிர்ந்து கொள்ள இருந்த  ஐயம் ஆக இருந்தது.

கடந்த 18வது அரங்காடலின் ஒத்திகைகளைப் பார்த்து விட்டு தரமான நாடக அளிக்கைகள் நடைபெற இருப்பதாயும் அதனை அனைவரும் பார்க்க வாருங்கள் என்ற தமது கருத்துரைப்பினை வீடியோ வடிவில் முன்கூட்டியே  பதிவு செய்தவர்களது கருத்தின் மீதான ஐயமே அது.
நாடக அளிக்கையின் எந்தத் தார்ப்பரியங்களையும் விளங்கிக் கொள்ள முடியாத, நாடகத்தின் விளங்கப்படுத்தல்களை  உள்ளார அறிந்து கொள்ளமுடியாத நாடகங்களை நிகழ்த்தி எம்மை ஏறுமாறாக்கிய பல நெறியாளர்களை இந்த ரொரண்டோ நாடக உலகு இன்னமும் தாங்கிக் கொண்டே இருக்கிறது.


இந்தச் செல் நெறியைக் குழப்பி நாடக அளிக்கையில் பன்முக வாசல்களை ஒருமித்துத் திறந்திவிட்டிருக்கும் ஒரு பொம்மையின் வீடு என்ற அளிக்கை குறித்து நாம் விலாவரியாகப் பேசவேண்டும்.


ஒரு நாடக அளிக்கைக்குத் தேவையான வாசல்களை மட்டும் திறந்து விடக் கூடிய அரங்க அமைப்பைத் தெரிவு செய்வதில் இருந்து அந்த அமைப்பை நகர்த்தும் சிறிய உத்திகளைக் கையாளும் விதம் என்று கச்சிதமான அசைவுகளுடன் நகர்த்தப்பட்டுக் கொண்டிருந்த உடல் பொருள் ஒளி இசை என்று அனைத்தையும் நீங்கள் கண்ணிமைக்கும் கணத்தில் தவறவிட்டுவிடக்கூடியபடி எம்மைக் கட்டி வைத்திருந்த கணங்களை நீங்கள் கவனித்திருக்க வேண்டும். கண்ணிமைத்திருந்தால் தவற நீங்கள் விட்டிருக்க வேண்டும். இப்படித் தவற விடக்கூடிய கணங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட நெறியாள்கையினை  முக்கியமாக நீங்கள் அனைவரும் கவனம் கொள்ளவே வேண்டும்.

எமக்குத் தெரியும் “துன்முகி” என்றும் “கங்கு” என்றும் “யார் இட்ட தீ” என்றும் நம்மை உருக்குலைத்த நாடக அளிக்கைகளைக் கண்டு உண்மையில் வெதும்பித்தானே போயிருந்தோம். ஒரு தரம் மிக்க அளிக்கை அரங்கினைப் பயன்படுத்தி இவ்வாறான நாடகங்களையும் அமைக்கமுடியும் என்று காட்டிய துன்பியல் நிகழ்வுகளைக் கடந்த காலங்களில் கண்டு வெதும்பியிருந்தவர்களில் நானும் ஒருவன். அந்த வகையில் இந்த முறை “ஒரு பொம்மையின் வீடு” அளிக்கையை அரங்கில் பார்த்து விட்டு  அடைந்த நிம்மதி என்னவென்றால் இனிவரும் காலங்கிளில் கங்குவையோ துன்முகியையோ யார் இட்ட தீ போன்ற எதனையும் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை என்பதுவே அந்த நிம்மதி. மனவெளி அரங்காடல் அமைப்பிற்கு இருக்கின்ற தெரிவு கூட இனிவரும் காலங்களில் இந்த “ஒரு பொம்மையின் வீடு” நாடகத்தைத்  தாண்டிய தெரிவாகவே இருக்கவேண்டும் என்பது மிப்பெரிய நிம்மதி.

இதற்கு முன்னர் பி. விக்னேஸ்வரன் அவர்களது நாடகங்கள் எதனையும்  நான் பார்த்தது இல்லை. நான் கனடா வந்த காலங்களில் அவரது நாடகங்கள் மேடை ஏறவில்லை. அவர் ஊடகம் ஊடகம் என படு பழுவுடன் இருந்த காலங்களாக இருந்தன அவை. அந்தக்காலங்கள் மிக அநியாயமானவை என அவரே தனது முக நூலில் இப்போது பதிவு செய்திருந்தார். அந்தக் காலங்கள் அவருக்கு இருண்ட காலமாகவே இருந்திருக்கிறது. பி. விக்னேஸ்வரன் அவர்கள் இனிவரும் காலங்களைத்  தக்கன பயன்படுத்துவார் என்றே நினைக்கிறேன். அதுவே எமது விருப்பமும்.

இந்த “ஒரு பொம்மையின் வீடு” நாடகத்தை குழந்தை ம. சண்முகலிங்கம் “ஒரு பாவையின் வீடு” என்று மேடையேற்றியிருக்கிறார் எனவும் சீனாவில் கூட பலதடவை பரவலாக மேடையேற்றப்பட்டது எனவும் திரையில் அது காட்சியாக இருக்கிறது எனவும் இங்கே விக்னேஸ்வரனின் நெறியாள்கைக்கு ஒரு வேலையும் இல்லை எனவும் இருக்கின்ற கருத்துக்களையும் நான் கேட்கின்றேன்.

இப்படித்தான் இங்கே “கருஞ்சுழி”யும் மேடையேற்றப்பட்டது.  வ. ஆறுமுகத்தினது “கருஞ்சுழி” நாடகத்தினை இந்தியாவிலும் பாரீசிலும் ஆறுமுகம் அவர்கள் மேடையேற்றினார். நான் கனடா வந்திருந்த காலங்களில் அவரது கருஞ்சுழி அளிக்கையைப் பார்த்திருக்கிறேன்.  எமது சூழலுக்கு பலதடவை மேடையேற்றப்பட்ட நாடக அளிக்கைகள் தான் இன்னமும் தேவைப்படுகின்றன. மிகக் காத்திரமாக பாரிய உழைப்பில் 2000ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் கருஞ்சுழியினை மேடையேற்றிய ஞானம் லம்பேட் அவர்களை தற்போது இந்த நாடகச் சூழலுக்குள் நாம் காண்பதேயில்லை. இன்னொரு தளத்தில் ஞானம் லம்பேட் அவர்களும் பி.விக்னேஸ்வரன் போலவே இருக்கிறார். நாடகத்தினை தம் மனவளத்தில் கொண்டலைபவர்கள் இப்படி ஊடகம் என்று சொல்லி இருண்ட காலத்திற்குள் உழன்று போவதில் எனக்கு உவப்பில்லை.

பி.விக்னேஸ்வரன் அவர்கள் இந்த "ஒருபொம்மையின் வீடு"நாடகத்தை நமக்குத் தந்திருப்பதுபோல் ஞானம் லம்பேட் அவர்களிடம் இருந்தும் ஒரு காத்திரமான படைப்பு ஒன்று  வரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டு “ஒரு பொம்மையின் வீடு” நாடகத்தில் பங்காற்றிய அனைத்துக் கலைஞர்களுக்கும் மனவெளி நாடக அமைப்பிற்கும் மிகுந்த அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  


இங்கு கடந்த காலங்களில் இருந்த அளிக்கைகளில் சிதிலமடைந்த மனதை உருக்கிவிட்டிருக்கிறது. ஒரு அரங்க அளிக்கை குறித்ததொரு படிப்பினையாகவும் நம்மவர்கள் இந்த “ஒரு பொம்மையின் ஒரு வீடு” நாடகத்தினைப் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ள வேண்டியுமிருக்கிறது.