Thursday 19 April 2018

“கிஸ்டீரியா…”


கற்சுறா




குரல் அறுந்தே கிடந்ததுஒரு இரவல்ல. சீவியத்தின் சாமமெங்கும்
தொண்டைத் தண்ணி வற்றிப் போகுமளவுக்கு நிழல்களே ஊசலாடிக்
கொண்டிருந்தது. நிலவை முகில் மறைத்த வேளைகளெங்கும்
யாரையெல்லாம் மன்றாடினார்கள் என்பதனை இப்போது சொல்ல
முடிவதில்லை. மன்றாட்டங்களோடு மட்டுமே கழிந்த காலம் அது.

காலத்தை மீள் நிறுத்தி கதை சொல்லும் காலமா இதுஎன்று மனது
நினைக்கும் தருணங்களிலெல்லாம், இல்லைஇல்லவேயில்லை.
என்று அவரது மனது துருதுருத்து எப்பொழுதும் அதனை மறுத்துக்
கொண்டேயிருந்தது. தான் கண்டடைந்த எல்லாக் கதைகளையும்
அவரால் ஒருபொழுதும் சொல்லிவிடவே முடியாது. சொல்லப்பட்ட
கதைகளில் மட்டுமே வாழ்வு தடமிடுவதில்லை. சொல்லமுடியாத
கதைகளோடு கழியும் தனது சீவியத்தின் தண்டனைகளை அவர்
சாமங்களில் மட்டுமே இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு கடும் இரைச்சலோடு கூடிய மழையை அல்லது கசிந்துருகும் தார்
ஒட்டும் வெயிலை அல்லது கடும் பிறேக் ஒன்றைப் பிடித்தபடி
திடீரென்று நிறுத்தப்படும் ஒரு வாகனத்தை அல்லது நிறுத்தாமலேயே
வேகமாகப் போகின்ற ஒரு வாகனத்தை காணவேண்டிவரும்போது
சட்டென நிலை குலைந்து கால்கள் தடுமாறி விடுகிறது அவருக்கு.
அவர் தனக்குள் ஒழித்து வைத்திருக்கும் கதைகளை அவ்வப்போது
நடக்கும் இப்படியான சாதாரண நிகழ்வுகள் அந்தப் பொழுதுகளிலேயே
அவரை உடைத்து ஒரேயடியாக ஓட்டையாக்கிவிடுகின்றன. அவை
ஒவ்வொன்றும் அவருக்கு சாதாரண நிகழ்வுகளாக ஒருபொழுதும்
இருப்பதேயில்லை.

இப்படி வெறுமனே மிகவும் சாதாரணமாக, அன்றாடம் நடக்கின்ற
ஒவ்வொரு சிறிய செயற்பாடுகளையும் கண்டு இப்போது குலைபட்டுப்
போகும் அவரை எல்லோருமே அப்போதே கிஸ்டீரியா என்று
அழைத்தார்கள்.

அப்போதைக்கும் இப்போதைக்கும் இடைவெளி கிட்டத்தட்ட
முப்பத்தியொரு வருடங்களாக இருக்கின்றது. இந்த முப்பத்தியொரு
வருடங்களுக்குள்ளாக அவருடன் உருண்டோடிய கதைகளின் ஒரு
கதைதான் இது.

மிகைப்படுத்தப்பட்ட அல்லது கற்பனைக்குக் கூட ஒவ்வாத கதைகளைச்
எப்பொழுதும் சொல்லுவதே கிஸ்டீரியாவின்  இயல்பு. அதனைக்
கேட்பவர்கள் தங்கள் கொடுப்புக்குள் சிரித்துத் தன்னைப்  பழித்துக்
கொண்டிருக்கிறார்கள் என்பதனைப் பற்றி  ஒருபொழுதும் கொஞ்சமும்
கவலை கொள்ளாத முகம் கிஸ்டீரியாவினுடையது.
ஒவ்வொரு கதையையும் சொல்லும் போது மிக நிதானமாக தொடர்
சம்பவங்களை விபரித்துக் கொண்டிருக்கும் கிஸ்டீரியா அதன்
இடையிடையே தன் அனுபவமாக புகுத்தும் பாலியல் அபரீதக்
கதைகளைக் கேட்டுச் சிரிப்பதற்கென்றே அவனைச் சுற்றி எப்பொழுதும்
ஒரு கூட்டம் இருந்து கொண்டிருக்கும். அந்தக் கூட்டத்தின் கலகலப்பை
தன்னுடைய கதைகளால் அதிகரித்துக் கொண்டிருப்பான். அவன்
சொல்லுகின்ற பாலியல் கதைகளால் அப்போது அவனுக்கு உண்டான
காரணப் பெயர்தான் கிஸ்டீரியா.

இப்பொழுது கிஸ்டீரியாவுக்கு அறுபது வயதை நெருங்கிக்
கொண்டிருக்கும் தோற்றம். சலரோக வியாதி தொடக்கம் அனைத்து
வியாதிகளும் அவரது உடலில் தோன்றியிருக்கும் நிலையில்
அவற்றைச் சமநிலைப்படுத்த காலையும் மாலையும் தொடர்ந்து நடந்து
களைக்க வேண்டியிருக்கிறது. அவர் தனது மனதின் சமநிலையை
மட்டுமல்ல தனதுடலின் சமநிலையையும் குலைத்து நீண்ட
காலமாகிவிட்டது.

உடலின் உன்னதத்தையோ இன்னொரு உடலின் வாழ்தலுக்கான
உரிமையையோ விளங்கிவிடாத இள வயதுகளின் செயல்களைக்
கொண்டு ஒருவரை இப்போதுபெட்டிகட்டி” “கட்டங்கட்டி
குறுக்கிவிடமுடியுமா? என்று என்னால் யோசிக்க முடிவதில்லை.
ஆனால் என்னை விட கிஸ்டீரியாவுடன் அதிகமான காலங்களில்
நெருக்கமாக இருந்தகே.எம். அவர்கள்கிஸ்டீரியாவின் மீதும் அவரது
ஆரம்பகால செயற்பாடுகள் மீதும் கடுமையான குற்றச்சாட்டுக்களை
இப்போது முன்வைக்கிறார். இன்றைக்கு எஞ்சி
உயிரோடிருக்கின்றவர்களில் ஒரு முக்கியமானவர் கிஸ்டீரியா.
கே. எம் அவர்கள்இதுசம்பந்தமாக கிஸ்டீரியாவை இதுவரையில்
மூன்று முறை சந்தித்திருக்கிறார். இருந்தும் அவர் எதிர்பார்ப்பது போல்
அவருக்குத் தெரியாத புதிதாக எந்தத் தகவலையும்
கிஸ்டீரியாவிடமிருந்து அவரால் பெற்றுக் கொள்ள முடியவேயில்லை.
கிஸ்டீரியா தன்னுடைய இயல்பாகச் சொல்லப்படும் வார்த்தைகளில்
கே. எம் அவர்கள்தொடர்ந்தும் குழம்பிப் போய்க்
கொண்டேயிருக்கிறார்.



கிஸ்டீரியா தனது வயோதிப காலத்தை வாழ்ந்து முடிக்க
ரொரன்டோவில், மார்க்கம் அன்ட் செப்பேட் சந்திப்பில் தென்கிழக்குப்
பக்கமாக அமைந்திருக்கும் ஏழு மாடிகளைக் கொண்ட முதியோர்
இல்லத்தில் இப்போது வாழ்ந்து வருகிறார். இங்கே வந்த பிற்பாடுதான்
கே. எம். அவர்களுக்கும் தொடர்ந்து அவரைச் சந்திக்க முடிகிறது. கே.
எம். அவர்களும் மார்க்கம் அன்ட் செப்பேட் சந்திப்பில் இருந்து கிழக்குப்
பக்கமாக மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இதே மாதிரியான
இன்னுமொரு முதியோர் இல்லமொன்றில் வசித்து வருகிறார்.
அவருக்கும் உடலில் ஆயிரம் வியாதிகள். மலம் போவதையோ சலம்
போவதையோ அவரால் உணர்ந்து கொள்ளமுடியாத நிலையில்
பம்பர்ஸ் கட்டிக்கொண்டுதான் வாழ்நாளைக் கழிக்க வேண்டிய நிலை
வந்திருக்கிறது அவருக்கு. உடலளவில் தைரியத்ததை இழந்தாலும்

மனதளவில் இழந்து விடாது கர்வம் பிடித்திருக்கும் வாழ்வு
அவருடையது.

கிஸ்டீரியா சம்பந்தப்பட்ட கதைகளை உண்மையோடு அறிந்து பதிவு
செய்யவேண்டும் என்பதுவே அவரது நீண்டகால நோக்கம்.
அதற்காகவே கிஸ்டீரியாவுக்கு தொடர்ந்து கரைச்சல் கொடுக்கிறார்.
கே.எம் அவர்கள் மீது இன்னமும் மரியாதை வைத்திருக்கும்
கிஸ்டீரியாவிற்கு இந்தக்கரைச்சலில் இருந்து விலத்திவிட ஒற்றைச்
சொல்லில்போடா பேயாஎன்று சொல்லிவிட வேண்டும் என மனம்
உன்னினாலும் சொல்லி மறுத்துவிட முடியாதிருக்கிறது. அதனால்தான்
பல நேரங்களில் பொறுமை இழந்து போனாலும் கிஸ்டீரியாவினால்
ஒருபொழுதும் அவரது முகத்தை முறித்து கதைத்துவிட விருப்பம்
இன்னமும் வரவில்லை.

இது சந்திப்பின் நான்காம் நாள். கிஸ்டீரியா தன் கதையின்
பின்பாதியை இப்போது சொல்லத் தொடங்கினார். கிஸ்டீரியா
சம்பந்தப்பட்ட மூன்றாவது கொலை அது.
1984ம் வருடம் துணுக்காய் பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் முன்
வைத்துக் கடத்தப்பட்டு அனிச்சயங்குளம் வெளிக்காட்டுச்
சுடலைக்குள்ளே வைத்து கொலை செய்யப்பட்ட சிங்கள மனுசி
ஒருத்தியினது கதையை இப்பொழுது விளக்கமாககே. எம்.
அவர்களுக்குச்சொல்லத் தொடங்கினார் கிஸ்டீரியா.
கதையைச் சொல்லத் தொடங்க முதல் கிஸ்டீரியா தனது முகத்தைக்
இரண்டு கைகளாலும் இறுகப் பொத்தினார். கிட்டத்தட்ட முப்பது
செக்கன்கள் வரையில் குனிந்தபடியே கண்களை மூடியிருந்தார். அந்த
முப்பது செக்கன்களில் அவர் தனது மனதைக் கட்டுப்படுத்தினாரா?
அல்லது இளகவிட்டாரா என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆனால்
கழுத்தில் இருக்கும் தசைநார்கள் இரண்டும் அப்போது

வெளித்தள்ளியபடி இருந்தது. மூடியிருந்த கைகளால் முகத்தை
வளித்தெடுத்து இரண்டு பெருவிரல்களிலும் தனது நாடியைத்
தாங்கிப்பிடித்தவண்ணம் கே.எம் அவர்களை அண்ணாந்து பார்த்தபடி
அவர் பேசத் தொடங்கினார்.

"நானும் பின்பக்கமாக நின்று அவளின் முதுகுத்தண்டில் எட்டிக் காலால்
உதைத்தேன். சாம்பல் தூறிக்கிடந்த நிலத்தில் குப்புற விழுந்தாள். குப்புறக்
கிடந்த அவளின் தலைமயிர்களுக்குள்ளால் சாம்பல் புழுதி புகைபோன்று
மேலெழுந்தது. கைகளையும் கால்களையும் நீள் கயிற்றில்
கட்டிவைத்திருந்தபடியால் ஒவ்வொருமுறை உதையும்போதும் அவள்
நிலத்தில் விழுந்து எழும்பிக் கொண்டிருந்தாள். ஆனால் நான் உதைந்த
இந்தமுறை மட்டுந்தான் அவளால் எழுந்திருக்கவே முடியவில்லை.
சாம்பல் பரவிக் கிடந்த நிலத்தில் கால்களை விரித்து முட்டுக்காலில்
ஊன்றியபடி குப்புறக்கிடந்தாள். கைகள் மட்டும் முதுகுப்பக்கமாகக்
கயிற்றில் இழுபட்டுத் தொங்கிக் கொண்டிருந்தன."

என்று சம்பவம் குறித்து அவர் சொல்லத் தொடங்கிய விதம்கே. எம்.
அவர்களுக்குகொஞ்சம் சங்கடத்தைக் கொடுத்திருக்கத்தான் வேண்டும்.
அவரால் அதனைச் சரிவரக் கிரகித்துக் கொள்ளமுடியவில்லை.

தனது பாணியில் கதையைச் சொல்லத் தொடங்கியது சரியாக
இருந்ததாகவே இப்போதும் கிஸ்டீரியா நினைக்கிறார். பழக்கப்பட்டுப்
போன கதை கேட்கும் முறையிலிருந்துகே.எம் .அவர்களாலும்
மாறமுடியாதிருந்தது. மிக அதிகமாகவே குழம்பிப் போனார்.
பதட்டப்பட்ட கண்கள் வெள்ளேந்தியாக கிஸ்டீரியாவை நோக்கி
நேரெதிராகத் திரும்பியிருந்தன. அந்தவிதமான பார்வையை

கிஸ்டீரியாவும் கவனித்தார். சொல்லப்பட்ட வார்த்தைகளிலிருந்து
எந்தக் குறிப்பையும் எடுத்துவிடக்கூடிய காலஅவகாசம் கே.எம்.
அவர்களுக்குப் போதாமல் இருந்தது.

அதனை திசைதிருப்பும் விதமாகத்தான் அவர் கிஸ்டீரியாவை
இடைமறித்து உடனே கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார்.

"அவளுக்கு கிட்டத்தட்ட எத்தனை வயது இருந்திருக்கும்?"

சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் அப்போது அவளைப்பார்க்க
எனது பெரியமாமியின் சாயல் இருந்ததால் ஒரு முப்பத்தெட்டு நாற்பது
வயது மதிக்கலாம். என்று நினைக்கிறேன். என்றார் கிஸ்டீரியா.

"எதற்காக அவளை நீங்கள் கடத்தினீர்கள்?"

"அவள் ஒரு சி..டி."

அவள் சி..டி. என்பதனை நீங்கள் எவ்வாறு அடையாளம்
கண்டுகொண்டீர்கள்?”

"அவள் சிங்களத்தி..."

ஒவ்வொரு கேள்விக்கும் உரிய பதிலைச் சொல்ல இடையில் அதிக
நேரத்தை எடுத்துக் கொண்டார் கிஸ்டீரியா.

கிஸ்டீரியாவிற்கு பதில் சொல்வதில் இருக்கின்ற நெருக்கடி
என்னவென்றால் சொல்லுகின்ற பதிலை எந்தக் காலத்தில் வைத்துச்
சொல்வது என்பதுதான். முடிந்தவரை பதட்டமில்லாது கதை நடந்த
அன்றைய காலத்தில் வைத்தே இந்தக் கேள்விகளுக்கு பதில்
சொல்லிக் கொண்டிருந்தார்.

சிங்களத்திலே உங்களிடம் அவள் பேசினாளா?”

இல்லை அவள் யாருடனும் எதுவும் பேசவேயில்லை.”

இந்தக் கேள்விகளினூடுகே.எம்.அவர்கள்ஒவ்வொரு தடவையும்
தன்னைச் சுதாகரித்துக் கொண்டேயிருந்தார். கிஸ்டீரியாவைக் கதை
சொல்ல விடுவதிலும் பார்க்க கேள்விகளால் தனக்குத்
தேவையானவற்றை எடுத்துக் கொள்வது கே.எம். அவர்களுக்கு
இலகுவாக இருந்தது.

அப்போ எப்படி அவள் சிங்களத்தி என்று உங்களுக்குத் தெரியும்?”

அப்ப எண்பது எண்பத்திரண்டில சிங்களத்திகளே அங்கு தேங்காய்
விற்பதற்காக லொறியில் வருவார்கள். அப்பிடித்தான் அவள் லொறியில்
தேங்காய் விற்பவளாக வந்தவள்.”

தேங்காய் வாங்கியவர்கள் யாரிடமாவது அவள் சிங்களத்தில்
பேசினாளா?”

இல்லை. ஆரம்பத்தில் பேசினாளாம். பின்பு எதுவுமே பேசவில்லையாம்.”
அதுதான் ஏன்?”

அவள் ஊமை மாதிரி நடித்தாள்.”

அதை எப்படி நீங்கள் கண்டு பிடித்தீர்கள்?”

அவள் இவ்வளவு அடிக்குப் பிறகும் வாய்திறக்கவில்லை.”

எத்தனை நாட்களாகக் கட்டி வைத்திருந்தீர்கள்?”

தொடர்ந்து மூன்று நாட்கள்.”

அந்த மூன்று நாட்களும் உங்களுடன் எதுவும் பேசவில்லையா?”
இல்லை.”

என்ன சாப்பாடு கொடுத்தீர்கள்?”

றோஸ்பாணும் பிளேன்ரீயும்.”

ம்... அதனை விரும்பிச் சாப்பிட்டாளா?”

இல்லை. அவள் சாப்பிட மறுத்தாள்.”

நீங்கள் சாப்பிடச் சொல்லிக் கட்டாயப்படுத்தவில்லையா?”

கட்டாயப்படுத்தினோம். அடித்தும் பார்த்தோம். அவள் சாப்பிடவில்லை.”

ம்...”

நீங்கள் சொல்வது எதாவது ஒன்றேனும் அவளுக்கு விளங்கியிருந்ததா?”

தெரியாது.”

அதனை நீங்கள் அறிய ஏன் முற்படவில்லை?”

சிங்களம் தெரிந்த ஒரு தோழரைக் கூட்டிவந்து பேசவைத்தோம்.”

நீங்கள் கூட்டி வந்த தோழருக்கு நன்றாகச் சிங்களம் தெரிந்திருந்தது
என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?”

அவர் நிக்கரவட்டியாத் தாக்குதலுக்குப் போய்வந்தவர். அவருக்கு
நன்றாகச் சிங்களம் பேசத்தெரியும்.”

அவள் அவருடனாவது பேசினாளா?”

இல்லை. அவரை அவள் நிமிர்ந்தே பார்க்கவில்லை. அவள் களைத்துப்
போயிருந்தாள் என்று நினைக்கிறேன். அப்போ கண்களைத்
திறக்கமுடியாமல் இருந்தாள். இரத்தம் காய்ந்து அவளது கண்களை
ஒட்டவைத்திருந்தது.” 

அவர் பேசியதை அவள் விளங்கிக் கொண்டாளா?”

தெரியாது.”

அவள் காது கேட்கக் கூடியவளா?”

தெரியாது.”

உங்கள் தோழர் வந்து போனதையாவது அவள் உணர்ந்து கொண்டாளா?”

தெரியாது.”

கே.எம். தனது இரண்டு சொண்டையும் உள்ளுக்குள் இறுக்கி மடித்துக்
கொண்டு தலையை பக்கம்பக்கமாக ஆட்டினார்.  கே.எம்.அவர்கள்.
தன்னுடைய பதில்களில் திருப்தியடையவில்லைப் போலிருந்தது
என்பதனை அந்தத் தலையாட்டு கிஸ்டீரியாவிற்கு உணர்த்தியது.

நான் என்ன செய்யமுடியும் எனக்குத் தெரிந்ததை நான் சொல்கிறேன்.
அவ்வளவுதான். நானே அவளைக் கட்டி வைத்திருந்த கொட்டிலுக்குக்
கடைசி நாள்தான் போனேன். அப்போதே அவள் அரை மயக்கத்தில்
இருந்தாள். நான் போனபோது அவளைப் பிடித்து மூன்று
நாட்களாகியிருந்தன
என்றார் கிஸ்டீரியா.

கே.எம்மின் தலையாட்டு அவருக்கு ஒரு அரியண்ட எரிச்சலைக்
கொடுத்தது. அதனால்தான் அந்தச் சம்பவத்தின் விளக்கவுரையை
மேலும் தெளிவு படுத்த வேண்டியிருந்தது.

அதுநாள்வரை அவள் பேசினாளா? அல்லது உண்மையிலேயே ஊமையா
என்று எனக்குத் தெரியாது. அவளைப்பிடித்தது ஒருத்தன். இந்தக்
கொட்டில்வளவிற்குள் கொண்டு வந்தது வேறு ஒருத்தன்.அதுவரை
சாப்பாடு தண்ணி கொடுத்தான்களா என்றே எனக்குத் தெரியாது.”  என்று
அவரை நிமிந்து பார்க்காமலேயே தொடந்து சொல்லிக்
கொண்டிருந்தார்.

மூன்று நாலுபேர் சொல்ல வேண்டிய பதிலைத் தனியொருவனாகத்
தான் மட்டும் இப்ப முப்பத்தியொரு வருடம் கழித்து சொல்லிக்
கொண்டிருப்பது மிகுந்த கவலையளித்தது. இந்தச் சம்பவத்தின்
நாலிலொருபகுதியைத்தான் தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்
என்பதுவோ இது ஒரு முழுமையற்ற பதிவு என்பதனையோ கே.எம்.
அவர்கள் விளங்கிக் கொள்ளப் போவதேயில்லை.

அந்தக் கொட்டில்வளவு நடுக்காட்டிற்குள் இருப்பதுபோல் தோன்றியது.
சுற்றிவர முள்ளுப்பத்தைகள். வளவின் வேலிக்கு அடையாளமாக
வெட்டிய பற்றைகளைக் கொண்டேஅக்கிள்போட்டிருந்தார்கள்.
வைபோசாகப் பிடித்த காணி என்பது அந்த அக்கிளில் தெரிந்தது.
வளவிற்குள்ளும் முளைத்தால் முளைக்கட்டும் என்று சோளனையும்
கவுப்பியையும் விதைத்திருந்தார்கள். அது அங்கொரு கொஞ்சம்
இங்கொரு கொஞ்சம் என முளைத்திருந்தது. கொட்டில் வரையும் ஒரு
ஒற்றையடிப்பாதை இருந்ததே நடக்க நடக்கத்தான் தெரிந்தது. சுற்றிவர
வீடுகளே இல்லை. அவ்வளவிற்குக் காடுபத்திய வளவு அது. சிறியான்
குரங்குகளின் பாய்சலும் விளையாட்டும் மரக் கிளைகளை உலுப்பிக்
கொண்டிருந்தன. புல்லுக்கும் நோகாமல் அசுமாத்தமும் தெரியாமல்
அசைவேயற்று நடக்கின்ற சிறியான் குரங்குகள் இத்தனை உலுப்பு
உலுப்புவது அன்று என்னமோ அதிசயமாகவே இருந்தது.
கிஸ்டீரியாவுக்கு பழைய ஞாபகங்கள் வந்து போயின.

மூன்று நாட்களாக இரவுக்குளிரைப் போக்க விறகு கட்டையைக்
கொட்டிலுக்குள்ளேயே எரித்திருந்தார்கள். நெருப்பிற்குமுன்னால்
நிலத்தில் முழங்கால்கள் முட்டும் படி அவளது கைகளைக் கட்டித்
தொங்கவிட்டிருந்தார்கள். மூன்று நாட்களாக எரித்த சாம்பல் அவளின்
கால்களின் கீழேதான் பரவிக் கிடந்தது. சற்று நிமிடம் நிதானித்து
பழைய கதையை யோசித்துக் கொண்டிருந்த கிஸ்டீரியா மீண்டும்
பேசத் தொடங்கினார்.

ஒருகட்டத்தில் இனி உவள வச்சிருந்து நாம மினக்கடமுடியாஎன்று
சொன்னான் தளையன். தளையன் சொல்வதை நாங்கள் யாரும் அங்கே
மறுப்பதற்கில்லை. ஜேர்மனிலிருந்து திரும்பிவந்து இந்திய றெயினிங்
முடித்து வந்தவன் அவன். அதனால் எங்கள் எல்லோருக்கும் அவன்
மீது மிகுந்த மரியாதை இருந்தது. தளையன் சரியான கறுப்பு
என்றாலும் ஜேர்மனில் இருந்து திரும்பி வந்ததால் அவனை நாங்கள்
ஒரு வெள்ளைக்காரனைப் போலவே அனுசரித்தோம்.” என்றார்
கிஸ்டீரியா.

ஆனால் இவ்வளவையும் கேட்ட கே.எம். எவ்வித பதட்டமும்
அவசரமும் இல்லாது

நீங்கள் அவளை வைத்திருந்த காலங்களில் என்ன தகவலைப்
பெற்றீர்கள்?”
என்று கேட்டார்.

கிஸ்டீரியாவிடம் அதற்கு ஒரு பதிலும் இல்லை என்பதும் கே.எம்.இற்குத்
தெரிந்திருந்தது. அதனால்தான் உடனேயே தன்னைச் சுதாகரித்தபடி

சரி...என்ன தகவலைப் பெற்றுவிடலாம் என்று எண்ணி நீங்கள் அவளைக்
கடத்தினீர்கள்
எனக் கேட்டார்.

அவளை நாங்கள் கடத்தியதற்கும் இன்று தான் கே.எம்முடன்
கதைத்துக்கொண்டிருப்பதற்கும் முப்பத்தியொரு ஆண்டுகள்
இடைவெளியிருந்தது. இதையே இருபது ஆண்டுகளுக்கு முன்
கேட்டிருந்தால் ஒருபதிலும் போன ஆண்டு கேட்டிருந்தால் வேறு
ஒருபதிலும் சொல்லியிருக்கவேண்டிய கேள்விக்கு நான் என்ன பதிலை
இப்போது சொல்ல? என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

ஆனால்கே.எம். அவர்கள்ஒவ்வொரு கேள்விகளுக்கூடாகவும் ஒரு
அடிமட்டத்தை வைத்து அளந்து தன்னைக் கோணர் பண்ணுவதை
கிஸ்டீரியா உணர்ந்து கொண்டேயிருந்தார்.
ஆனால் கேள்வி கேட்கப்படும் போது அந்த ஒரு கேள்வி முப்பத்தியொரு
பதில்களால் நிரப்பப்படக்கூடியவை என்பதை தனது ஆசானான கே.எம்.
மிற்கு எப்படித் தெரியாதிருந்தது என்பதுதான் அவருக்கு மிகுந்த
கவலையளித்தது.

கே.எம். அவர்கள்அவரையொரு விசாரணைக் கைதியை
விசாரிப்பதுபோல் விசாரித்துக் கொண்டிருந்தார். இப்போது
கிஸ்டீரியாவின் கால்களின் கீழே சாம்பல் கொட்டியிருக்கவில்லை.
கார்ப்பெட் போட்ட தரையில் அவர் இருந்தார். “கே.எம்.அவர்கள்
கொஞ்சம் உயரத்தில் சோபாவில் இருந்தார். விசாரணைதான்
அப்பொழுதும் இப்பொழுதும் ஓரே வடிவமாய் இருந்தது.

பதிலேயற்ற கேள்விகளால் தொடரப்படும் விசாரணைகளால் எதையும்
விசாரணையாளர் புதிதாக அறிந்து கொள்ளப் போவதில்லை.
விசாரணையாளரால் எடுக்கப்பட்ட முடிவில் இருந்து எழுப்பப்படும்
ஒரு கேள்விக்குக் கூட சரியான பதிலைக் எந்தக் கைதியும்
சொல்லிவிடப்போவதேயில்லை.
இன்றைய கேள்விகளை விடவும் மிக மோசமான கேள்விகளால்
அவள் மீதான விசாரணையை அப்போது நாங்கள் மேற்கொண்டோம்.

அந்த மோசமான கேள்விகளில் இருந்தே நாம் எதையும் அப்போது
பெற்று விடவில்லை. என்று நினைத்து கிஸ்டீரியா குனிந்திருந்து
சிரித்தார்.

விசாரணையாளர் தனது செயலுக்கு அதிகமான வீரியத்தைக்
கொடுப்பதற்கு மட்டுமே அவ்வகையான கேள்விகள் உகந்தவையாக
இருக்கும். நாங்கள் அந்தச் சிங்களத்தியிடம் கேட்ட கேள்விகளிலும்
விட மிகப் பலவீனமான கேள்விகளையே கே.எம் இப்போது தன்னிடம்
கேட்டுக் கொண்டிருப்பதாக கிஸ்டீரியா ஒரு பக்கம் நினைத்துச்
சிரித்தார்.

தேவையற்ற பதில்களுக்காககே.எம். அவர்கள்நீண்ட நேரம் காத்துக்
கொண்டிருப்பது கிஸ்டீரியாவுக்கு பெருத்த அயர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒரே இடத்தில் தொடர்ந்து அசைவற்று இருந்ததினால் அவருக்கு கால்
விறைத்திருக்கவேண்டும். சுவரில் சாய்ந்தபடி இருந்து கொண்டே
காலை நீட்டி மெல்ல உதறினார்.

அரைமணிநேரம் காலை மடித்திருந்ததுக்கே உமக்குக் கால்
விறைக்கிறதா? மூன்றுநாட்கள் தொடர்ந்து கால்களையும் கைகளையும்
கட்டிவைத்தால் மட்டும் விறைக்காதா?”
என்று கேட்டார்கே.எம் அவர்கள்.”

கிஸ்டீரியா அதற்கு எதையும் பதிலாகச் சொல்லவில்லை. காலை
நீட்டி இடுப்பைச் சுவர்ப்பக்கமாக இழுத்து நிமிர்ந்திருந்து கொண்டு,
நீங்கள் என்னிடம் மேலதிகமாகக் கேட்கவேண்டியிருக்கும்
கேள்விகளைத் தொடர்ந்து கேளுங்கள் தோழர்
என நிமிர்ந்து அவரது முகத்தைப் பார்த்தபடி சொன்னார்.

கிஸ்டீரியாவின் இந்த வார்த்தையைக் கேட்டு கே.எம். ஒரு செக்கன்
திகைத்துத்தான் போனார். அவரது அந்தத் திகைப்பின் இடையே
சிறிதும் நேரம் விடாது,

நீங்கள் என்னை மன்னிக்கோணும், உங்களிடம் இருந்து நான்
ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் தோழர்
எனச் சொல்லி,

வதைகளை வடிவமைத்தவர்கள் யார் தோழர்?”
என்று மிகவும் பக்குவமாக மரியாதையாக கே.எம் அவர்களைப்
பார்த்துக் கேட்டார் கிஸ்டீரியா.

வகைவகையான மனித வதைகளை நமக்குக் கற்பித்தவர்கள் யார்?

இதன் தொடக்கம் எங்கிருந்தது என்பதையாவது எனக்குச்
சொல்வீர்களா?”
என்று தயவாகக் கேட்டார்.

கே.எம் தொடர்ந்து மௌவுனமாக இருந்தார். கிஸ்டீரியாவிடம் இருந்து
இந்தச்சிறயளவு கேள்வியைக் கூட அவர் எதிர்கொண்டதில்லை.

இராணுவ வடிவமைப்பில் இராணுவச் சிந்தனையில் நமது மனமும்
அணுகுமுறைச் செயற்பாடும் உருவாகத் தொடங்கிய போதே
வதைமுறைச் சிந்தனையும் அதனுடன் வெளித்தோன்றி விடுகிற
தல்லவா? அந்த வதைமுறையை நாங்கள் அப்போது புதிதாக
யாரிடமிருந்தும் கற்கவேண்டியிருக்கவில்லை. அது எங்கள்
எல்லோருக்குள்ளும் உள்ளேயே இருந்திருந்தது அல்லவா?”
என்று கேட்டார் கிஸ்டீரியா.

இதனை உற்று அவதானிப்பது போல்.தலையைக்குனிந்து
கேட்டுக்கொண்டிருந்தார் கே.எம். அவர்கள்.

அந்த மௌவுனத்தின் பின்னும் கே.எம் அவர்களிடமிருந்து அதற்குப்
பதில் வரவே வராது என்று தெரியும் கிஸ்டீரியாவிற்கு. அதனால்
அவரே தொடர்ந்து கதையைச் சொல்லத்தயாரானார்..

நாங்கள் அவளை இரவு சுடப் போகிறோம். இனிவைத்திருக்க முடியாது
என்று தளையன் ஒரேயடியாகச் சொல்லிவிட்டான். சுடுவதற்கு
கொண்டு செல்வதற்கு முன், தளையன் வெளியில் போய்விட்டான்.
குட்டான் சிவாதாசனும் நானும் தான் தனியே அந்தக்
கொட்டில்வளவில் இருந்தோம். திடீரென அவளின் பாவடையைக்
கிளப்பி,
டேய் கிஸ்டீரியா இஞ்ச இவளின்ர சாமானைப் பார்என்று எனக்குக்
காட்டினான் சிவா.
அதனைப் பார்க்கும் போது எனக்கு என்ன மனநிலை இருந்தது என்று
உங்களால் ஒருபொழுதும் சொல்லிவிடமுடியாது. இண்டைக்கு அது
நடந்து முப்பத்தியொரு வருசம்.”
இதனைச் சொல்லும் பொழுது கிஸ்டீரியாவிற்கு தொண்டை
கரகரத்தது.
கொஞ்சக்காலத்திற்கு முன் றெஸ்ரோறன்டில இறைச்சி
வெட்டிக்கொண்டிருந்த ஒரு சின்னப்பொடியன்ஐயா இஞ்ச வாங்க
எண்டு கூப்பிட்டு, “நீங்களும் இன்னமும் கலியாணம் கட்டேல்ல,
இப்பயே அறுபதத்தாண்டுது உங்களுக்கு, இனியும் கட்டப் போறேல்ல.
இண்டுவரைக்கும் நீங்கள் ஒரு சாமானையும் பாத்திருக்கமாட்டியள்.
பொம்புளையளின்ர சாமான் எப்படியிருக்குமெண்டு தெரியுமா?”

என்று சொல்லிப்போட்டு மேசையில் கிடந்த மாட்டிறச்சியில ஓங்கி
கத்தியால ஒரு கொத்துக் கொத்தி அந்தக் கத்தி நுனியாலேயே
கொத்திய இறைச்சியின் பிளவை விரித்துக்காட்டினான்

இப்படித்தான்”. ஐயா, சரியா இப்புடித்தான் ஐயா அந்தச் சாமான்
இருக்கும்வேணுமெண்டா இதப்பாத்து இண்டைக்கு ஒருக்கால்
கையில அடியுங்கோஎண்டான்.

என்ர கண்ணுக்கு அப்படியே குட்டான் சிவதாசனப்பார்த்தமாதிரியே
இருந்தான் அவன்.”

கே.எம். அவர்களிடம் ஒரு அசுமாத்தமும் தெரியவில்லை.

தளையன்பிக்-அப்ட்றக்கை எடுத்துவரப் போயிருந்தான். அப்போது
இரவு 1 மணியைத் தாண்டியிருந்தது. அவளின் கையில் கட்டியிருந்த
கயிற்றை கத்தியால் அறுத்தான் சிவா. அவள் குப்புற சாம்பலுக்குள்
விழுந்தாள். அவளது கைகளும் கால்களும் செயலிழந்து போனவை
போல் பலமிழந்து கிடந்தன. மூச்சு வந்து போய்க்கொண்டு இருந்ததைப்
பார்த்தே உயிருடன் இருப்பது தெரிந்தது. வெளியில் மழை மெதுவாகப்
பெய்யத் தொடங்கியிருந்தது. திரும்பி வந்த தளையன் மிகுந்த
ரென்சனில் இருந்தான். இந்த மழைக்கு விறகுகட்டைகள் நனைந்து
போய் இருக்கும் என்று சிவா என்னிடம் காதுக்குள் மெதுவாகவே
சொன்னான்.”
என்றார்.

நானும் சிவாவும் அவளை பின் பெட்டிக்குள் ஏற்ற தளையன்
வாகனத்தை மிக வேகமாக எடுத்தான். சில்லுகள் நான்கும்
சுற்றியடித்துப் புறப்பட்டது. நாங்கள் பற்றிப்பிடிக்க வாகனத்தில் எதுவும்
இருக்கவில்லை. கால்களை நீட்டி பெட்டியில் அமத்திக்கொண்டு
முதுகை மறுமுனையில் பின்னால் சாய்த்து இறுக்கிக் கொண்டேன்.

சிவாவின் இரண்டு கைகளும் அவளது முலையை இறுக்கிப்பிடித்தபடி
இருந்ததன. அவளின் தலைமாட்டில் அவன் இருந்தபடியால் அது
அவனுக்கு வசதியாக இருந்திருக்க வேண்டும்
என்றார்.

கே.எம் அவர்கள் இப்போது கதையைக் கேட்கின்ற பொறுமையை
இழந்திருந்தார் என்பதை உணர்ந்தாலும் இன்றோடு இந்த
அரியண்டத்தை முடித்துவிட விரும்பினார் கிஸ்டீரியா. அதனால்தான்
கதையை வேண்டுமென்றே மிகவும் இறுக்கமாகவும் செறிவாகவும்
சொல்லிக் கொண்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து கேட்பதற்குப் பொறுமையிழந்த கே.எம். அவர்கள்.
இதற்குள் நீர் தொடர்ந்து உம்மை மட்டும் புனிதனாக்கிக் கொண்டே
வருகிறீர். நீர் செய்த ஊத்தைச் செயல்களையும் சொல்லும். நீர்
ஒண்டும் தெரியாத சூசைப்பிள்ளையில்லைத்தானே.”
என்று கிண்டலடித்தார்.

இந்தச் சம்பவத்தைப் பொறுத்தளவில் சம்பந்தப்பட்ட மிக
முக்கியமானவர்களில் குட்டான் சிவதாசனும் தளையனும் இன்று
உயிரோடு இல்லை என்பது உங்களுக்குத் தெரியும் தோழர்.
விரும்பியோ விரும்பாமலோ சம்பவம் குறித்த நபர்களை மாற்றி
மாற்றித்தான் நான் கதையே சொல்ல வேண்டியிருக்கிறது. இப்ப என்ன
எல்லாவற்றையும் நான்தான் முன்னின்று செய்தேன் என்று சொல்லி
குற்றத்தை முழுவதுமாக என்தலையில் புதைத்துவிட்டு உங்களிடம்
இருந்து என்னால் விலகிச் சென்று விடமுடியும். அப்படி நான்
செய்யப்போவதில்லை. உண்மையில் இந்தக் கொலைக்கு நாங்கள்
மூவர் மட்டுமா காரணமாக இருக்க முடியும்.? இல்லைத்தானே…”

என்று சொல்லி முடிப்பதற்குள் இருக்கையை விட்டு எழுந்தார் கே.எம்.
அவர்கள்.

அந்த நேரத்தில் நமது சமூகத்தின் பலத்த ஆதரவுடன்தானே மிக
அதிகமான கொலைகள் நடந்தேறின. கொலைகள் மக்கள்
மயப்பட்டிருந்தன என்பதனை நீங்கள் ஒருபோதும் மறுக்கமுடியாது
என்று கிஸ்டீரியா சொன்னார்.

நீங்கள் செய்த லூசுத் தனத்திற்கும் முட்டாள்தனமான செயலுக்கும்
இப்ப வந்து எனக்கென்ன விஞ்ஞான விளக்கம் தருகிறீரா நீர்?”
என்று எகிறினார் கே.எம்.

நீங்கள் கதையை முழுவதுமாகக் கேட்பதற்குப் பின்நிற்கிறீர்கள்.
உங்களைப் போன்றவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் முடிவுகளுக்காக
எமது கதைகளை உருமாற்றமுடியாது தோழர். இந்தக் கதை நடந்த
காலத்தில் நீங்கள் இந்தியாவில் இருந்தீர்கள். அந்தக் காலத்தை
உங்களால் ஒருபோதும் கற்பனை பண்ணிப் பார்க்கவே முடியாது.”

அந்தக் காலத்தின் சாமமெங்கும் தொண்டைத் தண்ணி வற்றிப்
பேகுமளவுக்கு எப்பொழுதும் எம்கண்முன்னே நிழல்களே ஊசலாடிக்
கொண்டிருந்தன. நிலவை முகில் மறைத்த வேளைகளெங்கும் நாங்கள்
யாரையெல்லாம் மன்றாடினோம் என்பதனை இப்போது சொல்ல
முடிவதில்லை. மன்றாட்டங்களோடு மட்டுமே கழிந்த காலம் அது.
உங்களால் ஒருபோதும் அதனைக் கற்பனை பண்ணிப் பார்க்கமுடியாது.
முப்பத்தியொருவருசத்துக்குப்பிறகு வந்திருந்து இப்ப கேள்வி மட்டுமே
உங்களால் கேட்கமுடியும். அதற்குரிய பதில்கள் உங்களுக்கு உகந்ததாக
இல்லாதிருப்பதற்கு நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்
என்றார் கிஸ்டீரியா.

கே.எம் அவர்கள் அருகிருந்த ஜன்னல் கரையோரம் நின்றபடி
தெருவைப்பார்த்துக் கொண்டிருந்தார். சனப்பழக்கம் குறைவான தெரு
அது. அங்கே தொடர்ந்து பார்ப்பதற்கு எதுவுமேயில்லை என்றாலும்
அவர் தலையை அசையாது பார்த்துக்கொண்டேயிருந்தார்

அவருக்கு கிஸ்டீரியாவை நேரெதிர் பார்ப்பதற்கு இயலாமல் இருந்தது. சில
மணித்துளிகள் கழித்து கிஸ்டீரியா கதையைச் சொல்லத்
தொடங்கினார்.

தளையன் அனிச்சயங்குளச் சுடலையையும் தாண்டி நீண்ட தூரம்
காட்டிற்குள் சென்று. “பிக்-அப் ட்றக் நிறுத்திவிட்டு எங்களையும்
இறங்கும்படி சொன்னான். கையிலும் காலிலுமாகப்பிடித்து அவளை
நாங்கள் கீழே இறக்கினோம். அவளின் இறுதி முடிவு குறித்து நாம்
எங்களுக்குள் எதையும் பேசிக் கொண்டதேயில்லை. தளையனும்
எங்களிடம் கேட்டதுமில்லை. வார்த்தைகளுக்கு அங்கே
அவசியமேயிருக்கவில்லை. சிதறிக்கிடக்கும் வீரைக்கட்டைகளையும்
பாலைக்கட்டைகளையும் குவித்தோம். மேலிருந்த கட்டைகளில் மட்டு
மெல்ல ஈரம் ஊறியிருந்தன.”
என்றார்.

மனம் பதைக்கும் முகத் தொனி தெரிய கே.எம். அவர்கள் திரும்ப
வந்து தனது இருக்கையில் இருந்தார். இருந்த இருப்பும் சாயலும், இது
குறித்து கேள்விகள் எதையும் தான் இனிக் கேட்கப் போவதில்லை
என்பதை உணர்த்தியது.

ஈரம் படர்ந்திருந்த புல் நிலத்தில் அவளை இருத்தியிருந்தோம்.
நிமிரிந்திருக்க முடியாதவளாய் சரிந்து நிலத்தில் விழுந்தாள்.
அதற்குள்ளாக கொஞ்சம் தள்ளி இருட்டில் நின்ற வேட்டைக்கார
முத்துமாணிக்கத்தை தளையன் கூட்டிவந்திருந்தான். அவருக்கு காது
சரிவரக் கேட்காது. எல்லாவற்றையும் நாம் கைப்பாசையால் தான்
அசைத்துக் காட்ட வேண்டும். ஆனால் அந்த நேரம் தனது
கட்டுத்துவக்குடன் அவர் தயாராக நின்ற நிலை தளையன் அவருக்கு
 ஏற்கனவே எல்லாவற்றையும் சொல்லியிருப்பதனை எமக்கு
உணர்த்தியது.

கையை உயர்த்தி எங்ளைப் போய் வானில் ஏறும்படி சைகை செய்தார்
அவர். எங்களுக்கு வானில் ஏறியிருக்க மனமிருக்கவில்லை. மீண்டும்
ஒருமுறை உள்ளுக்க ஏறுங்கோ என்று கையால் காட்டினார்.

டேய்கட்டுத்துவக்கு பக்கத்தால பிரிஞ்சால் நீங்களும்
போயிருவியளடா. உள்ளுக்க ஏறி இருங்கோடா
என்று கத்தினான் தளையன். ஏறி மூன்று செக்கனில் முதல் வெடி
தீர்ந்தது.

தனது மனக் கட்டுப்பாட்டையும் குலைத்துக்கொண்ட கே.எம். இப்ப
அந்த வேட்டைக்கார முத்துமாணிக்கம் எங்க இருக்கிறார் என்று
தெரியுமா என ஒரு கேள்வியை மீண்டும் கேட்டார்.

இப்ப இரண்டாயிரத்து எட்டில கருணாரத்தினம் அடிகளார் கிளைமோர்
தாக்குதல்ல செத்தார் தெரியுமா? சரியா அதே இடத்தில அப்ப
இந்தியன் ஆமிக்கு கிளைமோர் வைக்கிறதுக்காகக் கூட்டிக்கொண்டு
போனவங்கள். இவருக்கு காது கேட்காதுதானே மாறி ஏதோ விளங்கி
ஆமி வரமுதலே அமத்திப் போட்டார்."

"வேணுமெண்டுதான் அவரச்சாகடிச்சிட்டாங்கள் என்று சனம் சொல்லுது. உண்மையா நடந்தது
என்னவென்று தெரியாது. ஆனால் அதில் அவர் செத்துப் போனார்
என்றார் கிஸ்டீரியா.

அப்ப, அவரும் செத்துட்டாராசரி.”

நன்றி புதியசொல்