Saturday 4 August 2018

இன்னுமொரு விளக்கமளிப்பு.



13வது ரொரன்டோ  சர்வதேச தமிழ்க் குறும்படவிழா குறித்து…

கற்சுறா







13வது ரொரன்டோ  சர்வதேச தமிழ்க் குறும்படவிழா குறித்தும் அதில் திரையிடப்பட்ட இப்படிக்குக் காதல்எனும் குறந் திரைப்படம் குறித்த அதிருப்தியையும் நான் எனது முகநூலில் பதிவாக இட்டபோது இப்படித்தான் எழுதியிருந்தேன்.

நடந்தது என்ன?

ரொரன்டோ 13வது குறுந்திரைப்படவிழா வின் திரைப்படத் தெரிவுக்குழுவினர் திருவாய் மலந்தருள வேண்டும்." இப்படிக்குக் காதல்" உங்கள் தொிவில் இருந்ததா? இல்லையா? நிகழ்வு அமைப்புக் குழுவின் உறுப்பினர் ஒருவருடனும் தெரிவுக்குழு உறுப்பினர்களுடனும் நிகழ்வு நிறைவு பெற்று முடிந்ததன் பின் உரையாடினேன். இன்னமும் நீங்கள் பொது வெளியில் பதில் சொல்லவில்லை. இப்படியொரு கருத்துள்ள திரையிடலை எப்படி வெளியிட முன்வந்தீர்கள்? நீங்கள் பேசுகின்ற அரசியலில் எங்கே வழுக்கியது? இந்தத் திரையிடலை சமூக க்கறையாளர்கள் எனத் தம்மைச் சொல்பவர்கள். பல பெண்ணியவாதிகள் எனத் தம்மைச் சொல்பவர்கள் எழுத்தாளர்கள் எனத் தம்மைச் சொல்பவர்கள் என்று ஆயிரம் அர்த்தமுடையோர் இருந்து பார்த்த அரங்கு அது. இன்று 5வது நாள். யாராவது தமதுகருத்தினைத் தெரிவிப்பார்கள் என்று காத்திருந்தேன். இந்த 5வது நாள் கேட்கிறேன் உண்மையில் நடந்தது என்ன? pride week முடிந்து ஒருமாதமும் முடியாத நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது ஏன்? தெரிவுக்குழுவின் மூலகர்த்தாக்கள் பதில் சொல்லத்தானே வேண்டும்.”

என்னுடைய  இந்தக் கேள்வி யாரைநோக்கியதோ அதில் முக்கியமானவர்களில் ஒருவராக இருந்த எனது நண்பர் கிருத்திகனை நோக்கியதாகவும் அது இருந்தது.  அதனால் நான் இந்தக் குறிப்பினை எழுதிய 5வது நாள் 

கற்சுறா.. விமர்சகர் விருது வழங்கும் குழுவில் இருந்த என்னிடமும் இதே கேள்வியைக் கேட்டிருந்தீர்கள். நானும், பொதுவெளியில் எழுதுவதாய்ச் சொன்னேன். ஆக, மேலுள்ள கேள்வியை எனக்கானதாயும் கருதிக் கொள்கிறேன்.

மேற்படி படம் குறித்து முகநூலில் சிறு குறிப்புகள் எழுதிச சண்டை பிடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. விரிவாக எழுதவேண்டும் என்பது என் அவா. ஆகையினால் ஒரு நீண்ட கட்டுரையாக எழுதிக்கொண்டிருக்கிறேன். அதன் தலைப்பு இப்படியாக இருக்கிறதுதமிழில் தற்பாலீர்ப்புடையோர் பற்றிய குறும்படங்களைத் தடை செய்யவேண்டும்”.

உரையாடுவோம்

என்றவாறாக பதில் குறிப்பு ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.
உண்மையில் நான் முகநூலில் சிறுகுறிப்பு எழுதிச் சண்டையிடுவதாக அவர் நினைத்திருக்கும் எண்ணத்தினை விளங்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என எண்ணியிருந்தேன். ஆனாலும் அவர் எழுதத் தொடங்கிய கட்டுரையினை வழிமறித்துவிடக் கூடாது என்பதற்காக நான் இத்தனை நாள் காத்துக்கிடக்க வேண்டியிருந்தது. தற்போது அவர் தான் எழுதியிருக்கும் கட்டுரையினைப் பதிந்திருக்கிறார்.
அதனை நீங்கள் இந்த இணைப்பில் வாசித்துக் கொள்ள முடியும்.
https://kiruthikan.com/2018/08/04/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-gay-lesbian-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A/
ஆக, இது எனது பதிலுக்கான நேரம்.

முதலில் நான் எழுதிச் செல்லும் கருத்து நிலை முகநூலில் சிறுகுறிப்பெழுதிச் சண்டைபிடிப்பதாக இருப்பதாக இருக்கும்  எண்ணப்பாடு குறித்து விளக்கம் சொல்லியே ஆக வேண்டும்.
பொதுவாக நான் எழுதும் எழுத்துக்களில் எனது நண்பர்கள் எழுதக் கூடிய எழுத்துக்களை வார்த்தைகளை அல்லது அர்த்தங்களை என்னால் பயன்படுத்த முடிவதில்லை. அவர்களால் எழுதமுடிந்த அந்த எழுத்துக்களை  அந்த வார்த்தைகளை அந்த அர்த்தங்களை நான் தவிர்த்துக் கொள்வதால் தானோ என்னமோ எனது எழுத்து அதிகமான தருணங்களில் கரடுமுரடான கடுமையான வார்த்தைப் பிரையோகங்களை மட்டும் கொண்டதாக மற்றவர்களது மனதினைப் புண்படுத்திவிடக் கூடியதாக பலருக்கு உவப்பற்றதாக  உடனடி வாசிப்பில்  தோன்றிவிடுகிறது.

ஒரு கருத்தைத் தெரிவிக்கும் போது வழமையான மங்கிய எழுத்துப் பாணி  எனக்குக் கைகூடுவதில்லை. எனக்கு முக நூல்  தளம் ஒரு கதையாடலை  அல்லது எதிர்க்தையாடலை அதன் தகமைக்குள்ளாக நிகழ்த்தக் கூடியதான தளமாக எனக்கு விட்டுத்தந்திருக்கிறது. நீங்கள் பார்த்தீர்களானால் பெரும்பாலும் எனது முகநூல் தளம் எனது கருத்துக் களமாகவே இருக்கும். அதில் என்னால் முடிந்தளவு கதையாடலை நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறேன்.  அது சிலருக்கு இடையூறாக மனதைப் புண்படுத்தும் படியாக அல்லது கிருத்திகன் சொல்வதுபோல் சண்டையாக நோக்கப்பட்டு விடுகிறது. இதற்கு நான் எந்தப் பிராயச் சித்தமும் செய்யமுடியாதவனாக இருக்கிறேன். வலிந்து முயற்சித்தும் எனக்கு அந்த எழுத்துமுறை கைகூடிவருகிறதேயில்லை.

சரி இனி விடையத்திற்கு வருகிறேன்.

“இப்படிக்குக் காதல்” என்ற குறுந்திரைப்படம் திரையிடப்பட்டதின் விளக்கப்பாடு அதன் ஏற்பாட்டாளர்களால் சரிவரப் புரிந்து கொள்ளப்படாமல் இருப்பது மட்டுமல்ல அந்தத் தெரிவுக்குழுவினரது விளக்கத்தின் போதாமை குறித்துமானது என்பதனை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன்.

“தற்பாலுறவு” குறித்தான நமது  புரிந்துணர்வும் அவர்களது உரிமை குறித்தான செயற்பாடுகளும் மதிப்பீடுகளும்  நமது பொதுச் சூழலுக்குள் எவ்வகையான விளங்கிக் கொள்ளலுக்குள் அகப்பட்டிருக்கிறது என்பதனையும் சிற்றிலக்கியச் சூழலில் மிகத் தீவிரமாக நாம் பேசிவருபவை. அந்தத் தீவிரத்தின் தொடர்ச்சியாகவே இந்தத் திரையிடல் குறித்தும் பேசுகிறேன். இங்கே சண்டையொன்றுமில்லை என்பதனை கிருத்திகன் விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் நான் கேட்டுக் கொள்ளுகின்றேன்.

2011ம் ஆண்டு என்று நினைக்கிறேன்   ரொரண்டோ தமிழ் வானொலியான “சிரிபிசி” வானொலியில் ரொரண்டோ மாநகரத் தேர்தல் குறித்து வந்த விளம்பரம் ஒன்று தற்பாலுறவினைக் கொச்சைப்படுத்தி சிமிதர்மானுக்கெதிராக செய்யப்பட்டிருந்ததினை எதிர்த்து போராட்டம் செய்தவர்கள் நாங்கள். கடந்த இரண்டு பன்முக வெளி நிகழ்வுகளில் சினேகிதன் அமைப்பு நண்பர்களது உரையாடல் இடம்பெறச் செய்து தற்பாலுறவு குறித்த புரிதலை முடிந்தளவுக்கு உள்வாங்கி உரையாடலை நிகழ்த்தியவர்கள். மறதிக்கெதிரான நினைவின் போராட்டத்திலும் அவர்கள் பங்குபற்றி தற்பாலுறவு குறித்த உரையாடலை அதன் வெளியை நமது பொதுச் சூழலுக்குள்ளும் விளங்கிக் கொள்ள முன்னெடுத்தவர்கள் நாங்கள். 

இப்படியிருக்க  13வது குறும்படவிழாவிலே அதற்கெதிரான ஒரு கருத்து நிலை கொண்ட குறுந்திரைப்படத்தைத் திரையிடும் நிலை ஏன் தோன்றியது என்பதுவே எனது கேள்வியாக இருந்தது.

அந்தத் திரையிடலின் தெரிவுக்குழுவில் இருந்த எனது நண்பர்களான அருண்மொழிவர்மனும் கிருத்திகனும் இந்தத் திரைப்படம் குறித்த கருத்து நிலையை அதன் விளக்கவுரையை ஏன் ஏற்பாட்டாளர்களுக்குத் தெரிவிக்கமுடியாமல் இருந்தது என்பதே எனது கேள்வியாக இருக்கிறது. 

அதனையும் தாண்டி உங்கள் இருவருக்கும் திரையிடலின் பின் அங்கு உரையாற்ற போதியளவு நேரம் -இடம் கிடைத்தது. இப்படிக்குக் காதல் திரைப்படம் திரையிட்டு முடிந்தவுடன் அந்தத் திரையிடலுக்குக் கிடைத்த கரகோசம் ஏன் உங்களுக்கு அங்கே கோபத்தையோ எரிச்சலையோ ஊட்டவில்லை  என்பதுவே எனது கேள்வியாக இருக்கிறது. 

அந்த கரகோசத்தைக்  கேட்டவுடனாவது அந்த அரங்கில் இருந்தவர்களுக்காவது பதில் சொல்ல வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை என்பதுவே எனது கேள்வியாக இருக்கிறது.

சிமிதர்மானுக்கு எதிராகவும் தற்பாலுறவுக்கு எதிராகவும் தமிழர் கலாசாரம் பண்பாடு என்று அடையாளமிட்டு கொச்சையான விளம்பரத்தைப் பிரசுரித்த சிரிபிசி வானொலியின் நிர்வாகியும் அந்த அரங்கத்தில் இருந்தார். அங்கே நீங்கள் ஏன் மவுனமாக இருந்தீர்கள் என்பதே எனது கேள்வியாக இருக்கிறது.

திரும்பவும் சொல்கிறேன் அந்த அரங்கத்தில் பெண்ணியவாதிகள் எனத் தம்மைச் சொல்பவர்கள் எழுத்தாளர்கள் எனத் தம்மைச் சொல்பவர்கள்  பத்திரிகையாளர்கள் எனத் தம்மைச் சொல்பவர்கள் பதிப்பகத்தார் எனத் தம்மைச் சொல்பவர்கள் என்று ஆயிரம் அர்த்தமுடையோர் இருந்த  அரங்கு அது. அந்த அரங்கு இப்படியான ஒரு திரைப்படத்திற்கு பலத்த கரகோசம் வழங்கிவிட்டு மவுனமாகக் கடந்து போனது ஆபத்து நிறைந்ததாக ஏன் அப்போது உங்களுக்குத் தோன்றவில்லை என்பதே எனது கேள்வியாக இருக்கிறது.

திரையிடல் முடிந்த பின்னர் இதுகுறித்து ஒருபதிவினையும் அல்லது ஒரு கருத்துக் குறிப்பினையும் கூட நீங்கள் எழுதிவிடாதபோது உங்களைப் போல் ஓர் பரந்த வாசிப்பறிவற்ற நான் அது குறித்து எழுத வேண்டி ஏற்பட்டது எனக்குப் பெரு வருத்தந்தான்.

தற்போது கிருத்திகன் அவர்கள் எழுதியிருக்கும் கட்டுரையில் பெயர் குறிப்பிடப்படாத நபர் சொன்னதாக சொல்லப்படும் இரண்டு கருத்துக்களையும் நானே அவருக்குச் சொன்னேன். அவர் ஏனோ எனது பெயரை மறந்துவிட்டார்.

“‘Gay & Lesbian உறவென்பது பேரன்பிலிருந்து வருவதல்லவா?’ என்றார் ஒரு நண்பர். எல்லா உறவுகளுமே பேரன்பிலிருந்துதான் வரவேண்டும் என மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். ‘Pride Toronto இப்பத்தான் முடிஞ்சது. அதுக்கிடேல இந்தப் படத்தைப் போடுகிறான்கள். இவங்கள் என்னத்தை வாசிச்சு, என்னத்தை எழுதிஎன்றார் இன்னுமொருவர். Pride Parade என்னவிதமான அரசியலிலிருந்து எங்கு வந்து நிற்கிறது என்பதை யாராவது கவனத்திற் கொண்டோமாவென்றால், இல்லை என்பதே பதில்” என கிருத்திகன் தனது கட்டுரையில் குறீப்பிட்டிருக்கிறார்..

தற்பாலுறவாளர்களுக்கிடையில் இருப்பது அன்பல்ல அது பேரன்பு என்பது எனது கருத்து. அன்பிலிருந்து பிரித்துக் காட்ட எனக்கு அந்தச் சொல் தேவையானதாக இருந்தது. ஆம் அது பேரன்புதான். எனக்குச் சந்தேகமேயில்லை. அன்பு அளவில் சிறியதல்ல. ஆனால்  அன்பிலிருந்து பிறிதானதே பேரன்பு. தற்பாலுறவு பேரன்புக்குரியதானதாகவே நான் அடையாளமிடுவேன். அது பிரிந்து தான் நிற்கிறது. இது குறித்து வேண்டுமெனில் நாம் இன்னமும் உரையாடுவோம்.

அடுத்து   Pride Parade  குறித்த பதிவு.
இதனை நான் எனது முகநூலிலும் எழுதியிருக்கிறேன் (மேலே இருக்கும் பதிவினை வாசிக்க) ஏன் நான்தான் சொன்னேன்  என்பதனைத் தவிர்த்தார் என்று தெரியவில்லை அது அவரது சுதந்திரம். பெயரைத் தவிர்த்தலின் அரசியலில் எனக்கு ஏற்கனவே பல அனுபவம் இருப்பதினால் இதனை இங்கு சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது. மற்றப்படி ஏதுமில்லை. 

ஆனால் அவர் சொல்லும் அரசியல் அல்லது ஆயிரம் அரசியல் அந்தப் Pride Parade இல்  இருக்கட்டும். அது ஒரு கொண்டாட்டமாக இருக்கட்டும். நமது சினேகிதர்கள் சொல்வது போல் அது ஒரு கொடியேற்றமாகவே இருக்கட்டும். கருத்தளவில் அதன் அண்மையில் கூட நமது சூழலில் இயங்குபவர்களால் செல்லமுடியாதிருப்பதை என்னவென்பது? 

முடிந்து ஒருமாதம் கூட செல்லவில்லை அதற்குள் இப்படியொரு நிகழ்வா என்று நான்தான் சொன்னேன். இதில் என்ன தவறு இருக்கிறது? Pride Parade இற்குள் இருக்கும் அரசியல் அது உள்வாங்கும் கருத்தியல் அல்லது முன்நிறுத்தும் சிந்தனைகள் நாம் பேசவேண்டியதுதான். அதற்கு நாம் மட்டும் பேசினால்போதாது. அதுகுறித்த உரையாடல் மிகுந்த விரிவான தளத்தில் பேசப்பட வேண்டியது.

ஆனால் இங்கு நான் முன் வைத்த பிரச்சனை அதுவல்ல. அந்தத் திரையிடல் குறிதிருந்த உங்களது மவுனம் குறித்ததே என்பதனை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். சிற்றிலக்கியச் சூழலில் இயங்கும் உங்கள் அக்கறையின் பாற்பட்டதே என்பதனையும் நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். எனக் கூறிக் கொண்டு இந்த விளக்கவுரையை நிறுத்துகிறேன்.
நன்றி.