Saturday 3 February 2018

நண்பன் செழியனது மரணம்....

கற்சுறா


ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியின் செயற்பாட்டாளனாய் பங்கெடுத்த போதும் அதன் அனுபவத்தை ஒரு மனிதனின் நாட்குறிப்பாய் எழுதியிருந்தபோதும் பெயரளவில் அறிந்திருந்த செழியன் குழந்தைகளிடம் பொய்களைக் கூறாதீர்கள் என்ற கவிதைத் தொகுப்பை அவர் வெளிக் கொண்டு வந்திருந்த போதுதான் மிக நெருக்கமாகினேன். 

ஈழவிடுதலைப்  போரளியாக இருந்த ஒருவன் எப்படித் தன் குழந்தைகளுக்கு உண்மைகளைச் சொல்ல முடியும் என்று யோசித்தேன். நான்தானே பழிவாங்கும்  எழுத்துக்களையே எழுதிப்பழகியவன். சவுக்கந்தோப்பிலும் சுழிபுரத்திலும் அசோகா விடுதியிலும் நாம் செய்த செயல்களை எப்படி எங்கள் குழந்தைகளுக்குச் சொல்லமுடியும் என்று மறுத்து ஒரு கவிதையை எழுதினேன். ஆனால் அது செழியனை வந்து சேர்ந்திருக்காது.

ஆனால்  80களில் நான் வியப்போடு அறிந்திருந்த செழியனை 2000த்தில் நான் கனடாவில் நேரே சந்தித்தேன். அப்போது அவர் “பெருங்கதையாடல்” என்ற ஒரு நாடகத்தை எழுதி அதுரொரன்டோவில் பெரிய புடுங்குப்பாடுகளுக்குள் சிக்கிக் கிடந்தது. கனடாவின் நாடக வளர்ச்சி பெரும் வியப்படைய வைத்த காலம் அது. கனடிய நாடகச் சூழல் சார்ந்து நாளை நாடகப் பட்டறையின் செயற்பாட்டாளர் பா. அ. ஜயகரனையும்  மனவெளி சார்பாக செழியனையும் நான் எக்ஸில் இதழுக்காக உரையாடல் ஒன்றை எடுத்திருந்தேன்.
அதில் தனது பெருங்கதையாடல் நாடகம் பற்றி செழியன் சொன்னது இதுதான்…



“பெருங்கதையாடல் எனது முதல் நாடகம். தொடர்ச்சியான நாடக இயக்கத்துக்காக கனடாவில் இயங்கிக் கொண்டிருக்கிற மனவெளி கலையாற்றுக் குழுவினர் புதிய நாடகப் பிரதியாளர்களை உருவாக்குகின்ற தமது எண்ணங்களுடன் என்னை அணுகினர். இந்த முயற்சி எனக்கு முதலில் பிரமிப்பாகத்தான் இருந்தது. எனக்கு இது சாத்தியமானதாய்ப் படவும் இல்லை. மனவெளி கலையாற்றுக் குழுவினர் தங்கள் முயற்சியை மட்டும் கைவிடவில்லை. அளவுக்கு அதிகமாகவே முயற்சி எடுத்துக் கொண்டார்கள். வேறு வழி எனக்கு இனி இல்லை என்று புரிந்து கொண்டபோது இதுவரை எழுதப்பட்ட நாடகங்களில் நின்றும் வேறு பட்டு புதிய கருப்பொருளில் இது அமைய வேண்டும் என்ற ஆர்வமும் அக்கறையும் எனக்கு ஏற்பட்டது. அச்சமயத்தில் உளவியலில் எனக்குப் பார்க்கக் கிடைத்த ஒரு ஆய்வையே அடிப்படையாக வைத்து பெருங்கதையாடலை எழுத ஆரம்பித்தேன். எழுதத் தொடங்கிய பின்னர்  என்னுடைய வாழ்க்கை அனுபவங்கள் பலவற்றை இதில்  இணைக்க முடிந்தது. அந்த அனுபவங்கள் நீங்கள் பார்க்கின்றபோது உங்களுடைய அனுபவங்களாய் இருக்கும். நான் எழுத விரும்புகின்ற நாடகங்கள் தமிழில் இதுவரை சொல்டலப்படாத பொருளைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதில் அதிசிரத்தையாயுள்ளேன். பெருங்கதையாடல் மட்டுமல்ல அதற்குப்பின்னர் எழுதிய “ வேருக்குள் பெய்யும் மழை” மற்றும் இன்னமும் மேடை ஏற்றப்படாத “ஓரடி முன்னால்” “ஒன்றும் ஒன்றும்” நாடகங்களையும் நான் அப்படித்தான் கருதுகிறேன். பெருங்கதையாடல் நாடகம் கனடா இலக்கியச் சூழலைப் பாதித்தது என்பது உண்மைதான். இந்த நாடகம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அங்கதம் தேவைதான் ஆனால் ஒரு மெசேச்சும் இல்லை மாற்றுக் கருத்திற்காக வேலை செய்பவர்களிற்கு எதிரான கருத்தை இந்த நாடகம் வெளிப்படுத்துகிறது. பெருங்கதையாடல் ஒரு Bull shit.  இதனை மேடை ஏற்றியதன் மூலம் மனவெளி தீவிர நாடகப் போக்கிலிருந்து தவறிவிட்டது. ஞானம் லம்பேட்டின் நாடகத்தைத் தாக்குவதற்காக மேடையேற்றப்பட்ட நாடகமே இது.  நவீனங்களுக்கு எதிரானது இந்த நாடகம் என்று உணர்ச்சிவசப்பட்டு சர்ச்சைப்பட்டார்களே தவிர எழுத்து வடிவில் அறிவு பூர்வமாக  எந்த எதிர் விமர்சனங்களும் இன்று வரை முன்வைக்கப்படவில்லை. ஏன் இந்த உணர்ச்சி வசப்பட்ட சர்ச்சை? என்று கேட்டால் அதற்குப் பதில் இவர்கள் நாடகத்தினைத் தவறவிட்டுவிட்டார்கள் என்பதாகும். ஏன் தவறவிட்டார்கள் என்பதை  அவர்களால் மட்டுமே கூறமுடியும். இதற்கு மாறாக நாடகத்தைப் புரிந்து கொண்டு சிலாகித்துப் பேசியவர்களும் எழுதியவர்களும் அதிகம்.”
இப்படித்தான்  உரையாடிக் கொண்டிருந்தார் அந்தச் செழியன்.

அப்போது செழியனை நான் எடுத்த படங்களில் ஒன்றிற்குள் நமது நண்பருடன் சேர்ந்து அதற்குள் ஒரு ஆயுதத்தைச் செருகிஅவருடைய மொழியில் "அடுத்த காட்சிக்கு தயார்" என எழுதினோம்.  இது அப்போதைய நாடகத்தையும்  அதன் அரசியலையும் சேர்த்துப் பேசுவது போல் இருந்தது. செழியனுக்கும் நமக்கும் அது ரசிக்கக் கூடியதாகவே அப்போது இருந்தது.



இந்த 2000ம் ஆண்டில் நான் பார்த்து வியந்த செழியனை நான் பின்பு ஒருபோதும் காணவில்லை. பின்பு ஒருகட்டத்தில் நான் நான் கவிதை எழுதுவதை நிறுத்தப் போகிறேன் என்றார். ஏதோ கார் ஓடுவதை நிறுத்துவது போல்  கவிதை எழுதுவதை நிறுத்தினார் அவர்.

அவருடைய வானத்தைப் பிளந்த கதை வந்த போது, இது யாருடைய வானத்தை பிளந்தது என வினவினேன். நமது கேள்விகள் செல்லாக் கேள்விகள் என்பது அவருக்குத் தெரியும். பதில் சொல்லத் தேவையற்றவை என்பதில் தெளிவானவர். பகிடியாக எதையாவது சொல்லுவார்.அதனைப் பதிலாக நாம் எடுத்தாலும் சரி விட்டாலும் சரி அவர் அப்படித்தான் இருந்தார்.

ஒருகாலத்தில் நாம் பார்த்து வியந்த செழியன் ஏன் இப்படியானார்? எங்கே அந்தத் தவறு நடந்தது? நாம் பேசியே ஆகவேண்டும். செழியனின் மரணம் ஒரு மரணத்தைப் போல் கடந்துபோக வேண்டுமா?
அவர் குறித்து நான் பேச வேண்டியவை இன்னமும் இருக்கின்றது.
ஈழவிடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராக இருந்தவர். எழுத்தாழுமை கொண்டவர். சமூக அக்கறையோடு செயற்பட்டு வந்தவர் தன்னைக் கடைசிக் காலங்களில் தானே சீரழித்தது பற்றி நாம் பேசியே ஆக வேண்டும் நண்பர்களே…

இறுதியாக...
நான் எனக்கு மிக நெருங்கியவரை “நீ” என்றே  விழிப்பேன்.
நான் பழகிய செழியனுக்கு அந்த உரிமையோடு சொல்கிறேன் “சனியனே நீ செய்தது கொஞ்சமும் சரியில்லை”
மிக அதிகமான நண்பர்களை தவிக்கவிட்டுச் சென்றிருக்கிறாய் என்பதாவது உனக்குத் தெரிய வேண்டும்.