Wednesday 28 December 2016

சோடாமூடி...

சிறுகதை 



கற்சுறா






பசுபதியின் கால்கள் அகன்று கிடந்த காட்சியை ஊரில் எல்லோருமே பார்க்க நேர்ந்திருந்தது. கட்டியிருந்த சாறம் அரையை விட்டு நழுவி கோணலாகி சிதிலமடைந்துபோய் கிடந்ததனால் தான் எல்லோருக்கும் அவனது கால்களினிடையை அப்போது கவனிக்க நேர்ந்தது. 
முழங்காலைக் கொஞ்சம் மடித்தபடி காலை விரித்தும் கைகளை முன்னம் பின்னமாக விசிறிக் கொண்டும் கன்னத்தை நிலத்தில் சரித்துக் கொண்டு ஒரு ஓட்டப்பந்தய வீரனைப் போல் விழுந்து கிடந்தான்.
குடியின் மயக்கத்தில் குப்புறக் கிடந்த பசுபதியின் வாயில் வழிந்திருந்த வாந்தியை நாயொன்று இழுத்துவைத்து நக்கியபோது "அடீக்" என்று சொல்லி நாயை விரட்டிவிடக்கூட அவனுக்கு இயலாமல் இருந்தது.
நாய் ஒன்று தன்னை நக்குவதினை உணர்ந்து கையைத் தூக்கி நாயைக் கலைக்கும் பொழுதும் அந்தக் கையையும் மீறி நாய் பயமின்றி அருகில் நின்று வாந்தியினை நக்கும் தைரியமும் பார்ப்பவர்களுக்கு  ஒரு கலை நேர்த்தியான நிகழ்வொன்றைப் பார்க்கும் பரவசம் கிடைத்திருக்கவேண்டும்.  இரண்டு செயல்களும் எவ்வித இடைஞ்சல்களுமின்றி ஒரே அசைவுகளில் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
பசுபதியின் வாழ்வை ஒரு நாய்வாழ்க்கை என்று சொல்பவர்கள் நிச்சயம் இந்தக் கலை நேர்த்தியான நிகழ்வினை  எக்கணமும் விளங்கிக் கொள்ள முடியாதவர்களாகவே இருந்தார்கள்.
கலைநேர்த்தியான கணங்களில் எழும் வாசனைகள் எப்பொழுதும் ஏன் வியர்த்துக் கசிந்த கமக்கட்டின் வாசனையை ஒத்ததாய் இருந்து விடுகிறது?
தமது கமக்கட்டின் வாசனையை கையால் தேய்த்தெடுத்து மூக்கில் வைத்து முகர்ந்து பரவசங்கொள்ளும் அத்தனை பேரும்  ஏனோ தெரியவில்லை பசுபதியைப் பார்த்து முகஞ்சுழித்தார்கள்.
உடலின் வாசனைகளைத் தவிர்த்து வேறு ஏதாவது இன்புறக்கூடிய வாசனை எங்கே  உண்டென்று யாரால் சொல்லமுடியும்?
பசுபதியின் உடலை இலையான்கள் பலவந்தமாக மொய்த்துக் கொண்டிருந்தன. அவனில் மொய்ப்பதைக் காட்டிலும் அவனது சறத்திலேதான் அதிகம் மொய்த்தன. மனிதர்களைக் காட்டிலும் இலையான்களுக்கு வாசனையைப் பிரித்தறியும் அறிவு கூடுதலாகத்தானே இருக்கிறது. போட்டியிட்டுப் பறக்கும் இலையான்கள் சறத்தினுள் புகுந்து புகுந்து வெளிவந்து கொண்டிருந்தன.
பசுபதி தெருவின் பக்கமாய் தண்ணி ஓடுவதற்காக வெட்டப்பட்டிருந்த பள்ளத்திற்கு அருகில் தெருப்பக்கம் கால்கள் கிடக்கும்படியே விழுந்திருக்கிறான். தலை பள்ளத்தின் சரிவில் கீழே பார்த்துக் கொண்டு கிடக்கிறது.
பச்சையும் மஞ்சளுமான செடிகளால் கலந்திருந்த பள்ளத்தின் பற்றைக்குள் மட்டக்களப்பு வெள்ளைக் கோட்டுச் சறத்துடனும்  "ஆம்கட்" பனியனுடன் அவன் விழுந்து கிடப்பது மிக மிக அழகாக இருந்தது.
அந்த அழகை ரசிப்பதற்கு மட்டும் அங்கே யாரும் தயாரில்லாது இருந்தார்கள்.
அழகை ரசிப்பதற்குரிய மனநிலையின் சாத்தியம் அங்கிருந்தவர்களிடம் குறைந்து கொண்டே போனது.
பாதி பழுத்துப்போன பூவரசம் இலைகளையோ அல்லது நீரற்றுக் காய்ந்துபோய் வெடித்துப் பிளந்திருந்த குளத்து நிலங்களையோ  அல்லது அதற்குள் காய்ந்து  கருவாடாய்ப்போன  மீன்குஞ்சுகளைக் கிளறிக் கொத்தும் கொக்குகளையோ மட்டுமில்லை தமது குழந்தைகள் தவழ்ந்து அளையும் மண்குவியல்களையும்  அவர்களால் வீணீர் ஒழுக கிளறிக் கொட்டும் வார்த்தைகளையும் கூட ரசிப்பதற்குரியதாக  அவர்கள்  இருக்கவில்லை.
அவர்களிடம் ரசனை உட்பட எல்லாம் மாறிக் கொண்டே இருந்தது.  சாப்பாட்டுக் கடையின் பின்பக்கம் நின்று சேற்றுக்குள் உழன்று திரியும் புண்விழுந்த பன்றிகளின் அருகில் செல்பவர்கள் கூட தவறியும் பசுபதியின் அருகில் செல்வதில்லை.
சறத்தைத் தொடைவரையும் தூக்கிவிட்டுக் கொண்டு தன்னுடைய இரண்டு கைகளையும் விரித்து குஞ்சானை நடுவில் வைத்து மத்தைக் கடைவது போல் கசக்கிக் கொண்டிருக்கும் பசுபதியின் அருகில் அவர்கள் போவதே இல்லை.
சொறிந்து சொறிந்து அவனது தோல் தடித்துப் பெருத்திருந்தது. கவட்டிற்குள் கையை வைத்து ஆசைதீரச் சொறியும் போது அவனை மீறி எழும் கேவல் அவர்களுக்கு அதிகம் ஆத்திரத்தை மூட்டியது.
பசுபதியின் மீது தீராக் கொதிநிலை கொண்டிருந்தார்கள் அவர்கள்.
காலையில் தேனீருக்காகக் கொதிக்கவைக்கப்பட்ட நீரைப் போல் மாலையிலும் கொதித்துக் கொண்டேயிருந்தார்கள். அந்தக் கொதிப்பு பசுபதிமீதே தொடர்ந்தும் கொதித்தது.
"ஒரு இடி வந்து அவனது தலையில் விழுந்து விடாதா ?"
"அவன் எங்கயாவது ஆற்றிலோ அல்லது ஒரு குளத்திலோ  போய் விழுந்து  செத்துத் தொலைக்கமாட்டானா"
என்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் கூட்டத்திற்கு  ஏனோ தெரியவில்லை அவனைக் கருணைக் கொலை செய்துவிட  இல்லிப்பேலும் துணிவில்லாமல் இருந்தது.
மரணத்தின் காவுதடியை கைகளில் பொத்திக் கொண்டே திரிந்தான் பசுபதி.  மறைத்து வைக்கமுடியாத அளவில் வலி அவனது உடலைத் தின்று கொண்டிருந்தது. அவனுக்குத்  தன்னுடைய தீய்ந்து போன உடலை மறைத்துக் கொள்ள வேண்டும் என்ற அக்கறையும் அப்போது இல்லாது போயிருந்தது என்றே தோன்றுகிறது.
காலையின் இளவெயில் மறைந்து  வெக்கை கனக்கத் தொடங்கியது. வெயிலின் தகதகப்பில் கொஞ்சம் உடலை அசைத்தான் பசுபதி. தன்னருகில் அதிகம் பேர் சுற்றி நிற்கிறார்கள் என்ற தோரணையில் தூசண வார்த்தைகளைக் கொட்டிச் சத்தமிட்டான். அவனைச்சுற்றி இப்போது இரண்டு மூன்று நாய்களும் கொள்ளை இலையான்களும் கூடிநின்றன.
பசுபதியின் குஞ்சாமணியால் சிதழ் வடிந்து கொண்டிருந்தது. சிதழை ஒற்றியெடுக்க அவன் தனது குஞ்சானை பழைய துணிகாளால் சுற்றியிருந்தான். அது காய்ந்து கறுத்த ஒரு வாழைப் பொத்தியைப் போல் தொங்கிச் சரிந்து கிடந்தது.
தெருவைக்கடந்து போகின்ற ஒவ்வொருவரும் பசுபதியின்  கவட்டுக்குள் ஒருமுறை தமது கண்களை எறிந்துஅளந்து விட்டுத்தான்  "ஊத்த நாய்" என்று திட்டியபடி முகத்தைத் திருப்பினார்கள்.
பேத்தியாச்சி மட்டும் அவனருகில் சென்று அவனது சறத்தை இழுத்துச் சரி செய்து விட்டு
" பார் ... பசுபதின்ர வாய்க் கொழுப்பு சீலையால வடியுது"
என்று பேசிக் காறித் துப்பினாள். அவள் துப்பிய துப்பல் சத்தத்திற்கு பசுபதியை நக்கிக் கொண்டிருந்த நாய் கொஞ்சம் பயந்து  போய் தனது இரண்டு காலையும்  பின்வைத்து விட்டு மீண்டும் அதே இடத்தில் நின்று நக்கியது. 
எல்லோரது முகஞ்சுழிப்பையும் விலத்தி அருகில் சென்று பசுபதியை அருட்டி எழுப்ப ஒரு வேசைமனம் வேண்டும். உயிர் அறுந்து போய்விடக்கூடிய தருணத்தை உடல்களால் நீவிவிட முடியாத நிலங்களாகவே உலகெங்கும் நிலங்கள் பரவிக்கிடக்கிறது. அப்படி நீவிவிட முடியாத ஒரு துண்டுக் காணிதான் இந்தப் பற்றைக் காட்டுக் கடையடியும்.
இந்தத் துண்டுக் கடையடியில் ஒரு வேசையாய் கொஞ்சக் காலத்தில் உறுமாறிக் கொண்டவள்தான் பேத்தியாச்சி.
எட்டி நின்றுகூட யாரும்  என்னவென்று பார்க்காத இடத்தில் கிட்டநின்று பசுபதியைப் புரட்டிப்பார்த்தவள் அவள்தான்.
இன்று அவனுக்கு மடாவெறி. ஒரு சொல்லைக் கூட உச்சரிக்க முடியாது மயங்கிப் போய்க் கிடந்தான்.
பசுபதி விழுந்து கிடக்கும் கோலம் அளவுகணக்கில்லாமல் கசிப்புக் குடித்திருக்கிறான் என்று உணர்ந்து கொள்ளப் போதுமானதாக இருந்தது அவளுக்கு.  இந்த முறையும் சொக்கரின் வீட்டிற்குள் புகுந்து வாளியோடு கொண்டுவந்து பச்சைத் தண்ணியைக் குடிப்பது போல் குடித்திருக்க வேண்டும்.
"பசுபதிக்கு வெறி முறிய எப்படியும் ரெண்டுநாளாகும். இக்கணம் இப்புடியே கிடந்தானெண்டா அவண்ட குஞ்சானில புழுத்தான் மொய்க்கும்"
என்று புறுபுறுத்த பேத்தியாச்சி மலத்தியோன் பவுடரைத் தண்ணில கரைத்துக் கொண்டுவந்து அவனைச் சுற்றித் தெளித்தாள்.
"விறுமசத்தி ..."
"என்னடா ராத்திரி சொக்கற்ற செத்தையைப் பிரிச்சிட்டீயோடா நாயே..."
என்று கத்திக் கத்தி மலத்தீயோன் தண்ணியை அவனைச் சுற்றித் தெளித்தாள்.
இலையான்களது இரைச்சல் குறைந்தது. சில மலத்தியோனுக்குள் செத்து விழுந்தன.
பொழுது சாய்ந்தால் சொக்கற்ற கசிப்பு இல்லாமல் ஒரு இம்மியும் நகரமுடியாத பேத்தியாச்சிக்கு பசுபதியின்  செய்ல்மீது இந்தமுறை கோபம்  வந்து விட்டிருந்தது.
"வாளியோட குடிச்சா செத்துப் போவாயடா புழுத்தி" என்று சத்தமிட்டபடி எழும்பினாள்.
அவளுக்கு உதடுகளும் கறுத்துத்  குரலும் தடித்திருந்தது. பசுபதி பாதி செத்துப் போயிருந்தான்.
அவளுக்கு தண்ணியடிக்கவேண்டும் போல இருந்தது.
வழமையா பொழுது சாயேக்கிள்ளதான்  சொக்கற்ற வளவுக்கிள்ள கால்வைக்கிற பேத்தி இந்த மத்தியான நேரத்தில வாறதைக் கண்டு சொக்கர் ஒருபக்கம் நெளிந்தார்.  ஓத்தப் பலகையை திறந்து வைத்தபடி வாசலில் சண்டிக்கட்டோடு நின்றவர் மெல்ல சறத்தை அவிட்டு விட்டு அவளை வரவேற்றார்.
சொக்கரும் காய்ச்சியெடுத்த ஒறிஜினல் இல்லாமல் ,ஆஸ்பத்திரியில் நெருப்புத்தண்ணி கொஞ்சம் வாங்கி வந்து வினாகிரி தேசிக்காய்ப்புளி  எல்லாம் விட்டு ஒரு கலவை செய்து வெட்டிரும்பு என்ற திடீர் கசிப்பு ஒன்றைத் தயாரித்து இரவு வியாபாரத்திற்கு தயாராய் வைத்திருந்த பொழுது இவ்வளவு நேரத்தோட வரும் பேத்தியை அவர் எதிர்பார்க்கவில்லை. மத்தியானம் இரண்டுமணிக்கு பேத்தியாச்சிக்கு இது உகந்த சாமான் இல்லை என்பதால் வந்த நெளிவுதான் அவரது நெளிவு.
உள்ளே வந்து குந்தில் சாய்ந்து காலை நீட்டி விரித்துக் கொண்டு இருந்தவளின் அருகில் ஒரு சிரட்டைச் சில்லில் பெரிய உப்புக்கல்லு இரண்டைப் போட்டுக் கொண்டு வந்து வைத்தார். அருகில் தான் செய்திருந்த வெண்டிரும்பையும் ஒரு கிளாசில் ஊற்றி வைத்தார்.
உப்புக்கல்லை எடுத்து நாக்கில் இரண்டு தேய் தேய்த்துவிட்டு வெட்டிரும்பை எடுத்து பக்கென்று அடித்தாள். வெயிலின் வீக்கத்தில் பச்சையாக அடித்த வெட்டிரும்பு அவளின் முகத்தை இன்னும் வெளிறப்பண்ணியது. சொக்கருக்கு நாக்கு விறைத்தது.
தலையை அவிட்டு விரித்து விட்டு விறைத்துப் போன  தலையை ஒரு உலுப்பு உலுப்பினாள். மனசுக்குள் இன்னொரு மனசு ஊர்ந்து நகர்ந்து விறைக்கப்பண்ணிக் கொண்டிருந்தது. சொக்கர் அவளின் அருகில் சென்று குந்தியபடி  தலையைச் சரித்து தன் மடியில் கிடத்தினார்.
பேத்தியாச்சிக்கும் சொக்கருக்கும் இடையேயான உறவு இன்று நேற்று வந்த உறவல்ல. பேத்தியாச்சி ஒரு பழைய சங்கீத ரீச்சர். நத்தார் காலத்தில் கரோல் போவது ரீச்சரின் குறூப்தான். கரோல் போற காலமெல்லாம் குறூப்பில் கிறிஸ்மஸ் தாத்தாவாய் வருவது சொக்கர்தான். நல்ல குரல் வளமுள்ளவர். கம்பருடைய பாட்டுக்களைப் பாடிக் கொண்டு கடைக்குப் போறவருக்கு  முதல் காப்போத்தல் கசிப்பை இலவசமாகக் கொடுத்து பின் பாதிப் போத்தலையும் இலவசமாகக் கொடுத்துவிடக் கூடிய ஒரு இலக்கிய ரசிகன். அப்படியொரு இலக்கிய ரசனையுடன் உருவான காதல்தான்  சங்கீதரீச்சருடன் அவருக்கு வந்த காதல்.
இருட்டினாப்பிறகு காப்போத்தல் கசிப்பும் கையில் எடுத்துக் கொண்டு சறத்தின் தலப்பை இழுத்துக் கமக்கட்டுக்குள் செருகியபடி
"நிலங்களை உழுவது போல் ... உள்ளத்தை உழுங்கள் என்று...  உலக பிதா சொன்ன போது.... உழவர்கள்... தொழிலாளர்... ஊராரின் எண்ணமதில்... யேசு ஒன்றாகப் பதிந்துவிட்டார்.... "
என்று உச்ச ஸ்தாயில் சொக்கர் பாடிக்கொண்டு சங்கீத ரீச்சரிட்டப் போகும் போதே  அனைவருக்கும் தெரியும்  நத்தாருக்கு நாள் கிட்டுகிறது என்பது.
சொக்கரின் மடியில் தலை வைத்திருந்தவள் அவரின் கையை எடுத்து தனது பிடரிக்குள் நுணாவ விட்டபடி
"நேற்றுக் கசிப்பக் களவு கொடுத்திட்டியா?" என்று கேட்டாள்.
"எப்பன் கக்கூசுக்குப் போட்டு வாறதுக்க வாளியோட கவிட்டுக் குடிச்சிட்டான் பசுபதி". என்றார்
"அவன்ட சாமான் எல்லாம் அழுகீற்று. வலி தாங்கேலாமத்தான் செய்யுறான்"
அதுக்கு...?
"கடையடிக்குப் பின்னால பள்ளத்தில விழுந்து கிடக்கிறான்"
"ம்"
"என்னத்த "ம்" கொட்டுறாய்.? நீ பாரன்... இக்கணம் அவன்ர சாமனத்தூக்கிச் செருகின அத்தின புனாக்களுக்கும் அழுகத்தான் போகுது. அப்ப தெரியுமடா யார் வேசை எண்டு" என்று  சொல்லி நறுமினாள்.


அவனைப்  போய்ப்பார்க்க வேண்டும் என்று சொக்கருக்குத் தோன்றவில்லை.
சற்று நேரத்தில் சொக்கரின் மடியில் கண்ணயர்ந்து போனாள்.
பொழுதுபட்டதும் போத்தல் நிறைய வெட்டிரும்பை வாங்கி  அரைக்குள் சொருகிக்கொண்டு போய் பசுபதிக்குப் பருக்கினாள். வாயை விரித்து கொடுப்புக்குள்ளால் போத்தலைத் தள்ளி தலையை நிமிர்த்திப் பிடித்தாள். வெட்டிரும்பு மெல்ல மெல்ல உள்ளே இறங்கியது.
மலத்தியோனையும் மேவி இலைகள் வதங்கிய மணமும் இலையான்களின் மணமும் புழுக்களை இறக்கியிருந்தன. பசுபதியின் உயிர் குறைந்து கொண்டிருந்தது கையில் அவளுக்குத் தெரிந்தது.
பருக்கி முடித்த வெறும் போத்தலை எடுத்து  அரைக்குள் திரும்பவும் சொருகிக் கொண்டு இருட்டோடையே சொக்கரின் வீட்டிற்குள் போன பேத்தியாச்சி நாலைந்து நாளாய் வெளியில் வரவேயில்லை.
உப்புக்கல்லைத் தேய்த்துத் தேய்த்து வெட்டிரும்பைக் குடித்துக் கொண்டிருந்தாள்.
அறை முழுவதும் வியர்த்துக் கசிந்த கமக்கட்டின் வாசனை பரவியிருந்தது.
*****



எனது அன்பான  வர்சா....
இதனை உனக்குத் தனியாகவே எழுதவேண்டியிருக்கிறது.
மனித உடலின் பாலியல் சார்ந்த கதைகளை சொல்ல நேரும் போது ஒவ்வொரு வார்த்தைகளுக்கிடையிலும் ஒழுக்கத்தின் தடைக்கற்களைத் தாண்டித்தாண்டியே எழுதவேண்டி இருக்கிறது. பரிபூரணமாகச் சொல்லப்பட்ட பாலியல் கதைகளை வெறும் காமக் கதைகளாகவும் காமக் கூத்துக்களாகவும் அன்றாடம் வாசித்துக் கொண்டிருப்பவர்களே ஒருபக்கம் ஒழுக்கவாதிகளாக என்னைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  ஒழுக்கம் சொற்களால் கூட நிர்ப்பந்திக்கப்படுவதில்லை என்பதை அவர்கள் ஒருபோதும் அறியப் போவதில்லை. காமத்தின் சொற்தினுசுகளால் உடலின் உறுப்புக்களைச் சாமத்தில் கேலி செய்வதைப் போலவே காலையிலும் அவர்கள் கேலி செய்கிறார்கள். அவர்களால் இனி இதனைச் சீர் செய்யவே முடியாது. அதனால் தான் இதற்குள் என்னால் சொல்லமுடியாது போன ஒரு தகவலை உனக்கு மட்டும் சொல்லுகிறேன் கேள்...

கமத்தில் சிறுபோகம் விதைத்திருந்த காலம் அது.
 பன்றிக் காவல் காப்பதற்கு சென்றுவந்த காலங்களில்  காவற் கொட்டிலுக்கு ஒரு நாள் சங்கீத ரீச்சரை நானும் வரவழைத்திருந்தேன்.
 காவற்கொட்டிலில்  கட்டியிருந்த வரிச்சுக் கட்டிலில்  நான்  சங்கீத ரீச்சரைக் கிடத்தியிருந்தேன். நேரம் அதிகாலை இரண்டு மணி இருக்கும். வயலுக்கு தண்ணீர் கட்ட வந்திருந்தவர்களது சண்டையும் கலகலப்பும் முழுக்கவும் ஓய்ந்திருந்தது. இரண்டு ஊமத்தங்குருவிகளது சத்தம் மட்டும் தூரத்தில் கேட்டுக் கொண்டிருந்தது.  கொழுத்தி வைத்திருந்த கை லாம்பையும் எரிந்து கொண்டிருந்த அடுப்பையும் ஏற்கனவே அணைத்து விட்டிருந்தேன். வயலை இருள் மூடியிருந்தது.  இருளுக்குள் யாராவது வருகிறார்களா என்று உற்றுப் பார்க்க முடியாமல் கண்ணுக்குள் வலைபோன்றதொரு தினுசு ஒன்று ஓடிக்கொண்டு இருந்தது. நெஞ்சு கனத்தது. வழியிலிருந்த பெரிய பாலைமரத்தின் அடியிலிருந்து யாரோ என்னை நோக்கி வருவதாக ஒரு நிழல் தெரிந்தது. இருளுக்குள்  இருந்து  ஒரு அசைவுகளையும் என்னால் சரிவரக் கணக்கிடமுடியவில்லை. 
பின்னாலுள்ள வயலுக்கு போபவர்கள் அதிகமாகப் பக்கத்திலிருக்கிற தெருவைப் பாவிப்பதில்லை. வயலைச் சுற்றியிருக்கிற தெரு அதிகமான நேரங்களில் சகதியாக சேறும் பள்ளமுமாக தொட்டச்சிணுங்கி செடிகளால் நிறைந்து   போய் இருக்கும்.  இருட்டில் நம்பிக் காலை வைக்கமுடியாத ஒழுங்கைகள் அவை. அதனால்  என்னுடைய வயலுக்குள்ளாலேதான் எல்லோரும் தங்களது போக்குவரத்தை வைத்திருந்தார்கள்.  காவற்கொட்டிலில் தனியே படுத்திருக்கின்ற பல நேரங்களில் அடிக்கடி பலர்  வருவது எனக்கு ஒருபக்கம் பிராக்காவே இருந்தது. ஆனால் இன்று அது பாரிய இடைஞ்சல் கொடுத்தது.  டோச் லைட்டை எடுத்து வயலைச் சுற்றிவர அடித்தேன். யாருடைய அசுமாத்தங்களும் இல்லை. வெளிச்சத்தின் குவியம் பட்ட இடங்களெல்லாம் ஆள் நடமாட்டம் இல்லை. தூரத்தில் தண்ணியின் சத்தம் மெல்லச் சலசலத்துக் கேட்டுக் கொண்டிருந்தது. டோச் லைட் வெளிச்சத்தை நிறுத்திவிட்டு  வரிச்சுக் கட்டிலில் படுத்திருந்த சங்கீத ரீச்சரின் மேலே சரிந்து கட்டிப்பிடித்தேன். ரீச்சர் என்னை அணைத்து இறுக்கினாள். வரிச்சுக் கட்டில் அறுகின்ற சத்தம்  போட்டது. மெல்ல எழுப்பி வந்து கொட்டிலின் அருகிலிருந்த வயல் வரம்பில் படுத்தோம். நீண்ட நேரத்தின் பின் திரும்பவும் தண்ணிச் சத்தம் அதே போல் மெல்லச் சலசலத்துக் கேட்டுக் கொண்டிருந்தது. வரம்பில் போட்டிருந்த உரப்பையின் மீது எழும்பிக் குந்திக் கொண்டிருந்த ரீச்சர் திடீரென என்னை மூத்தரம் பெய் என்று வற்புறுத்தினாள். அந்த  நேரம்  எனக்கோ மூத்திரம் வரக் கஸ்டப்பட்டது. இருந்தும் முக்கி முக்கி வரவழைத்தேன். பெய்த மூத்திரத்தைக் கையால் ஏந்தி எனது குஞ்சானை உரஞ்சிக் கழுவிவிட்டாள் . நானோ வெளிச்சம் வயலில் படமுதல் ரீச்சரைக் கொண்டுபோய் சொக்கர் வீட்டு வாசலில் விட்டுவிட்டு வந்தேன்.
இப்ப பார் வர்சா... இந்த அழுகல் நோய் எனக்கு வராமல் பசுபதிக்கு மட்டும் வந்து அவனைப் பாடாய்ப் படுத்தி இறந்து போகிறான். இதற்கான ஒழுக்கவிதி ஒரு மூத்திரத்தில் தானே இருந்துவிடுகிறது...
 அது பேத்தியாச்சிக்குத் தெரிந்தது போல் ஏன் அங்கேயிருந்த மற்றவர்களுக்குத் தெரியாது போனது?

என்று நீ கேட்கும் கேள்விக்கு என்னால் பதில் விளக்கவுரை எழுதமுடியாமலேயுள்ளது. மன்னித்துக் கொள். 

நன்றி மகுடம் இதழ்11