Sunday 29 November 2015

"SPECIAL CAMP" இல் தமிழர்கள்


பாலன் தோழரின் நூல் குறித்த நிகழ்வு

கனடா- ரொரன்ரோ

கற்சுறா

எதையும் இலகுவாகக் கடந்து போய்விடலாம் என்பது இனிவருங்காலங்களில் பெருத்த சாத்தியமாகாது என்றே எண்ணுகிறேன். எங்களது பழி எங்களை ஒருபொழுதும் நிம்மதியாகப் படுத்துறங்க வைக்கப்போவதில்லை. நாங்கள் இறைதூதர்கள் என்ற கனவும் விடுதலையின் புதல்வர்கள் என்ற கனவும் மட்டும் சமூகத்தின் அடுத்த நகர்வுக்குப் போதுமானதாக ஒருபோதும் இருந்துவிடாது.
நமது சமூகத்தின் பெயரில் நமது தேசத்தின் பெயரில் நாங்கள் செய்த அநியாயங்களை எங்களுக்குள் நினைத்து, அதற்காக ஒருதுளியும் வெட்கப்படாமல் அந்தக் குற்ற உணர்வில் நாங்கள் குறிகிப் போகாமல் அதன் காரணத்தினை மிக விசாலமாக எங்களுக்குள் விவாதிக்காமல் எதிர்காலத்தில் நாம் ஒரு அங்குலமும் நகரமுடியாது என்றே எண்ணுகிறேன்.
இன்று கனடாவில் நடைபெற்ற பாலன் தோழர் அவர்களது சிறப்புமுகாம் நூல் அறிமுகக் கூட்டத்திற்குச் சென்றேன். நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வை நடாத்திய நண்பர்களுக்கு நன்றிகள். நாம் நமது இலக்கியக் கூட்டங்களில் நமது அரசியற்கூட்டங்களில் காணாத முகங்கள் நிறையவே வந்திருந்தனர். மிகச் சந்தோசமாக இருந்தது.
நிகழ்வில் பாலன் தோழர் தனது நூலில் குறிப்பிட்ட அந்த சிறப்பு வதைமுகாமில் இருந்து வந்த நண்பர் மார்க் அன்ரனி,  உசா( நாடுகடந்த தமிழீழம் பிரதிநிதி) ஜோன் ஆர்கியூ(அம்னெஸ்டி இன்னடர் நசனல் கனடா), பேராசிரியர் சேரன், இந்திய அகதி முகாமில் நீண்டகாலம் இருந்த நண்பர் கணன் சுவாமி, அதே முகாம்களில் சிலகாலம் இருந்த நண்பர் த. அகிலன் என்போர் சிறப்புரை ஆற்றினார்கள். மிக அதிகமான தகவல்கள், இந்திய சிறப்பு முகாம்களின் கொடுமைகள் என்பன அவர்கள் பேச்சின் மூலம் வெளிக் கொண்டுவந்தார்கள்.



உண்மையில் தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு முகாமில் மட்டுமல்ல எந்த நாட்டுச் சிறப்பு முகாமில் யார் இ\ருந்தாலும் அவர்களை விடுதலை செய்யக் கோருவது மட்டுமல்ல நமது தேசத்துஅரச சிறைகளில், உலக வதைமுகாம்களில் உள்ள கைதிகளையும் விடுதலை செய்யக் கோருவது நமக்கு முன்னுள்ள முக்கிய பணி.
இந்த விடையத்தில்  அதே சிறப்பு முகாமில் எட்டுவருடங்களாக தனது வாழ்க்கையைக் கழித்து சித்திரவதைகளை அனுபவித்த பாலன் தோழரது மனம் அதன் முற்றுகையை அதனது முடிவைக் கோருகிறது. இது மிகவும் வரவேற்கப்படவேண்டியது. பாலன் தோழர் தனக்குள்ளால் அந்த முகாமின் தடயங்களை நமக்குத் தெரிவிக்கிறார்.
இன்றைய பேச்சாளர்களது பேச்சிலிருந்து எனக்கென்னவோ இந்த முகாமில் இருப்பவர்கள் பெரிய பாக்கியவான்கள் என்றே என்னால் நினைக்க முடிந்தது. அந்தச் சிறப்புமுகாமில் எவ்வித வன்முறைகள் நிகழ்கின்றன இந்திய அரசு அவர்களுக்கு என்ன செய்கிறது என்ன செய்யவில்லை என்ற தகவல்களோடு அங்கே எத்தனை பேர் வாழ்கிறார்கள் அவர்கள் எவ்விதம் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விபரங்களை அறியும் மிக அதிகமான புகைப்படங்கள் அங்கே வைக்கப்பட்டிருந்தன. அங்கே வாழ்பவர்களுடன் வெளியிலிருந்து மற்றவர்கள் தொடர்புகளை ஏற்படுத்தக் கூடிய வசதிகளும் இருக்கிறது என்பதையும் அறிய முடிந்தது.
ஆனால் பாருங்கள் நண்பர்களே உலகில் உள்ள எந்த வதைமுகாம்களையும் விட, மிக மோசமானதாகச் சுட்டப்படும் குவான்டநாமோ வதைமுகாமையும் விட மோசமான ஒரு வதைமுகாமை நமது ஈழத்தமிழினம்( ஆம் ஈழத்தமிழினமே) துணுக்காயில் வைத்திருந்தது. இது ஈழத்தமிழர்கள் அத்தனை பேருக்கும் தெரியும்.
உலகில் உள்ள வதைமுகாம்கள் எல்லாம் நிலத்திற்கு மேலே வைத்திருக்க நமது தேசமோ நிலத்திற்குக் கீழே வைத்திருந்தது. இன்றைய நிகழ்வில் பேசிய நண்பன் அகிலன் தமிழகத்தில் தன்னை வைத்திருந்த முகாமின் கூரையில் ஒரு  ஓட்டை இருந்தது என்றார். ஆனால் அவர் முன்னர் வாழ்ந்த வன்னியில் ஓட்டையே அற்ற வதை முகாம் ஒன்று இருந்தது. (மன்னிக்கவேண்டும் அகிலன்)அது துணுக்காயில் இருந்தது. அது பதின்மூன்று நிலக்கீழ் அகழிகளைக் கொண்டது. அங்கே மூன்று ஆண்டுகளாக ஒரு நாளுக்குமுன்நூறுபேருக்கக் குறையாமல் அவை எப்போதும் நிறைந்திருந்தன என்பது வரலாறு. அங்கே இருந்து தப்பியவர்கள் ஒரு சிலரே. அந்த வதைமுகாம் குறித்த படங்கள் யார் கையிலும் இல்லை. அவர்களுக்கு என்ன நடந்தன என்பது யாருக்கும் தெரியாதவை. வெறும் கதைகளாக மட்டுமே அவை எம்மிடம் உள்ளன. இறுதிவரை அது மர்ம வதைமுகாமாகவே இருந்தது. அதுகுறித்து அங்கிருந்த கைதிகளும் அந்த ஊர் மக்களுமே அறிவார்கள்.
ஈழத்துக் கவிஞர் செல்வி உட்பட பல முக்கியமானவர்கள் அங்குதான் இருந்து கொல்லப்பட்டார்கள் என்ற தகவல்கள் தப்பியவர்கள் மூலம் மட்டும் நமது இனத்திற்குக் கிடைத்த எஞ்சிய தகவல்கள். மூன்றாண்டு காலத்தில் ஏறக்குறை ஐயாயிரம் பேர் அங்கு வைத்து காவுகொள்ளப்பட்டவர்கள் என்பது ஒருகணிப்பாக இருக்கிறது.

இன்னும் தன்னைப்பற்றிய கணிப்பீட்டினை தன்னளவில் கூட செய்யமுடியாத ஒரு இனமாக நமது இனம் இருப்பதால் உண்மைகள் இலகுவில் கண்டடையமுடியாதவைதான்.

எனினும் நாம் இழைத்த அதே குற்றங்களை இன்னொரு பகுதி இன்று நமக்கு வேறு ஒரு தளத்தில் செய்கிறது. ஆனால் நாம் அவர்களை இலகுவாகக் குற்றம் சாட்டுகிறோம். அவர்களை நோக்கிக் கையை நீட்டுகிறோம் எந்த வெட்கமும் இன்றி.
நாம் செய்த குற்றங்களை நாம் மறந்து விட்டோமா? நமது இனம் துணுக்காயில் மட்டுமல்ல முள்ளிவாய்க்கால் வரை ஓடியபோதும் விசுவமடு வட்டுவாகல் ( நன்றி அகிலன்) வரை அதீத வதைமுகாம்களை வைத்திருந்தனர். அங்கே அடைக்கப்பட்டவர்கள் யாருமே மீண்டதாக வரலாறு இல்லை.
தான் செய்த குற்றத்திற்குரிய பாவமன்னிப்பினை தனக்குள் நிகழ்த்தாதவன் மற்றவனுடைய பாவத்தைப் பற்றிப் பேச தகுதியற்றவனாகிறான் என்று நான் தெரிவித்தபோது. தயவு செய்து இந்த நிகழ்வு குறித்து உரையாடுவது முக்கியம் நாம் அதற்குள் இருந்தே நமது கருத்துக்களைத் தெரிவிக்க முற்படுவோம் என்று தலைவர் தொடக்கம் அங்கிருந்தவர்கள் பலர் கருத்துக்களைத் தெரிவித்த்தார்கள்.
பலர் பழயதைப் பற்றி ஏன் பேசவேண்டும். அவை முடிந்து போனவை. அதுபற்றி ஏன் இன்று பேசவேண்டும் என்றும் கருத்து வெளியிட்டார்கள். எனக்கு இதுவே மிக மிக ஆபத்தானது எனத் தோன்றுகிறது. ஒரு ஈழத்தமிழனாய் குவான்டநாமோ சிறை குறித்து பேசமுன் நாசிகளின் வதைமுகாம்கள் குறித்துப் பேசமுன் எனக்கு ஈழத்தமிழன் வைத்திருந்த துணுக்காய் வதைமுகாம் பற்றி பேசவேண்டும் என்றே கருதுகிறேன். அப்படியொரு வதைமுகாமை வைத்திருந்ததற்காக முதலில் தன்னளவில் அவன் வருந்தவேண்டும் என்றே விரும்புகிறேன். 

தான் இழைத்த தவறில் இருந்து தன்னை விடுவிக்க இந்த சமூகம் தயாராக இல்லாத போது எந்த சமூகத்திற்கான விடுதலையையும் அதனால் ஒருபோதும் பூரணமாக விளங்கிக் கொள்ளவே முடியாது. அது போலியானது . அது ஆபத்து நிறைந்தது. தன்னுடைய வரலாற்றிலிருந்து தன்னுடைய அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாத இனமாகப் போய்விட்டது நமது இனம். 

இது தனக்கு இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்கும் போது தனக்குள் அசிங்கமான சித்திரவதை முகாம்களையும் கொடூரமான சிறைச்சாலைகளையும் திரும்பவும் உருவாக்கக் காத்திருக்கும் என்ற சந்தேகம் வந்துகொண்டேயிருக்கிறது. 

தமிழகத்துச் சிறப்பு முகாம் முடிவு அல்லது மூடு என்ற பாலன் தோழரது  வேண்டுகோளை அழுகிய தமிழ்த்தேசியம்  தன்கையில் எடுத்தால் அது தோற்றே போகும். அப்படியே தொடரும்போது அது அங்கு வதைபடும் மக்கள் மீதான கருணையற்ற செயலாகவே அமையும். அதை மட்டுமாவது விளங்கிக் கொள்ளுங்கள் நண்பர்களே.

நிகழ்வு முடிந்து வெளியில் வரும் போது என்னுடன் சிலர் பேசினார்கள். ஆனால் அங்கு என்னுடன் பேசிய உசா அவர்கள் தனக்குத் துணுக்காய் வதைமுகாம் பற்றி தெரியாது. நான் அறியவேயில்லை தம்பி எனச் சொன்னதே இன்னும் பயமாக இருந்தது.
இந்த நூலை எழுதிப் பதிவுசெய்த பாலன் தோழருக்கும் நிகழ்வை நடாத்தியவர்களுக்கும் உரையாற்றிய நண்பர்களுக்கும் மிகுந்த நன்றிகள்
.

Tuesday 17 November 2015

பக்கத்தின் பக்கம் - பாரீசில் சாரு

கற்சுறா

சாரு என்ற அயோக்கியனைப்பற்றி என்வாழ்நாளில்  ஒருபோதும் எழுதக்கூடாது என்றே எண்ணுவேன். அது ஒரு வெட்கக் கேடான விடையமாகவே எனக்கு எப்போதும் இருக்கும்.  

அவன் எழுதும் பலவற்றை பார்க்க நேரிடும் போது மிக அதிகமான கோபம் தோன்றிவிடும். அவை மிக அதிகமான பொய்களால் நிறைந்திருக்கும். அந்தப் பொய்யை அறியாத யாரோ சிலருக்காக எந்த வெட்கமும் இல்லாது எவ்வித குற்ற உணர்வும் இல்லாது அவன் அவற்றை எழுதியிருப்பான். அவன் எதற்காக எ\ழுதுகிறான் என்று எப்போதோ அவனுக்கு அருகில் இருந்தவர்கள் சிலர் கண்டுபிடிப்பார்கள். அவர்களுக்கும் அது வெட்கமாய் இருக்கும். 

அந்த அயோக்கியனால் இலக்கியம் என்ற மிகப்பெரிய சுத்துமாத்தினால் மிக இலகுவாக ஏமாற்றப்பட்டவர்களாக அவர்கள் இருந்தவர்கள். அப்படியானவர்களில் நானும் எனது பாரீஸ் நண்பர்கள் சிலரும் அடக்கம். அந்த ஏமாற்றத்துடனும் வெட்கத்துடனும்தான் அவன் குறித்து எழுதவே வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். இதை கட்டாயம் எழுத வேண்டும் என எண்ணி எழுதவில்லை. இப்படியே விட்டால் பிற்காலத்தில் சிலவற்றை சம்பவங்களை மறந்து போவேன் என்ற காரணத்தால் நேரம் வரும் வேளைகளில் பதிந்து வைக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறேன். அவ்வளவுதான்
இதனை எழுது என்று கரைச்சல் தந்த நண்பர்களுக்கு நன்றிகள்.


கதை 1

கதையின் தொடக்கத்தில் நான் முடிவை எழுதுகிறேன்.

பாரீசில் அவன் எங்களுடன் சில காலங்கள் இருந்துவிட்டு அன்று தமிழ்நாடு திரும்புகிறான்.

பாரிசில் இருந்த காலங்களில் அதிகமான நாட்களை அதிகமான நாட்கள் என்ன அவ்வளவு காலமும் எனது வீட்டிலேயே தங்கி நின்றான். அவன் வந்த ஆரம்ப காலங்களில் ஒரு இலக்கிய சேவகனுக்கு எழுத்தாளனுக்கு அப்படியிருக்கின்ற எமது நண்பனுக்கு தோழனுக்கு என்று நாம் என்னவெல்லாம் செய்வோமோ அவற்றையெல்லாம் மனசாரச் செய்தோம். ஆள்மாறி ஆள் மாறி அவனைத் தாங்கினோம். நண்பன் சோபா,  சுகன், ஸ்ராலின்  தேவதாஸ் என்று பாரீஸில் அவனைத் தாங்கிப் பிடிக்காத நண்பர்கள் இல்லை. போகும் வரும் இடங்களில் படம் எடுக்க வேண்டும் என்று நண்பன் சுகன் ஒரு கமராவைக்கூட  யாரோ ஒருவரிடம் கடன் வாங்கி அவன் கையில் கொடுத்தான். சில வேளைகளில் அருகில் நாம் இல்லாது இருந்தால் தனியே அந்தரிக்கப்படாது என்று அவனது கையில் நானும் சோபாவும் 200பிராங்கும் கொடுத்தோம். அதிகமான இடங்களை மறைந்த தோழர் புஸ்பராசாவின் காரிலும் எனது காரிலும் அவனை ஏற்றித் திரிந்து காண்பித்தோம். அற்புதமான பாரீஸ் நகரின் அத்தனை அழகையும் அவ|னுக்கு இவ்வாறுதான் காட்டினோம் என்றே நினைக்கிறேன்.

அன்று அவன் தமிழ்நாடு திரும்பும் நாள். முதல் நாள் நண்பர் அரவிந் அப்பாத்துரை வீட்டில் நிகழ்ந்த பார்ட்டியில் பங்கு கொள்கிறோம்.  அதிகாலை வரை அப்பாத்துரையின் வீட்டிலிருந்து அவனை கிளப்பிக் கொண்டுவர முடியவில்லை. கடந்த சில தினங்களாக அவன் தந்த துன்பம் எம்மை சந்தேகம் கொள்ள வைத்தது. அவனை எப்படியாவது  அனுப்பித்தொலைக்க வேண்டும் என்பதே எல்லோரது நோக்கமும். நண்பர் அரவிந் அப்பாத்துரையும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். அவரும் தனது தந்தை சுகவீனமாக இருக்கிறார் அவருக்கு கொடுத்து விடும்படி அன்றிரவு 2000பிராங் பணத்தையும் அன்று அவனிடம் கொடுத்திருந்தார்.
அதிகாலை எனது வீட்டிற்கு வந்து படுத்தவன் எழுந்திருக்கவேயில்லை ஒரு கிழமையாக செய்த சொப்பிங் பொருட்கள் ஹோல் எங்கும் பரவியிருக்கிறது. எதையும் சூட்கேசுக்குள் அடுக்கவில்லை. மதியம் விமான நிலையத்தில் நிற்க வேண்டும். நான் உடனேயே சோபாவுக்கு போன் பண்ணினேன். என்னால் சமாளிக்க முடியவில்லை. உடனே நீ வா என்றேன். அரை மணி நேரத்தில் சோபா வந்தான். தன்னை ஒரு மணி நேரத்திற்குள் 1000 பக்கங்களை  எழுதச் சொல்லுங்கள் எழுதித் தருகிறேன் என்னால் இவற்றை அடுக்க முடியாது என்றான் சாரு. நாம் மனதிற்குள் சிரித்தோம். இங்கேயே நின்று விடுவானோ என்று எமக்கு மேலதிகமாகப் பயம் பிடித்தது. இல்லை சாரு எப்படியும் பைகளை அடுக்க வேண்டும் என வற்புறுத்தி சோபா சொல்லி அடுக்கினான். நான் பிறேம் ரமேசுக்கும் மாலதி தாபிதாவுக்கும் கொஞ்ச பொருட்கள் வாங்கிக் கொடுத்தேன். வாங்கும் போது இவன் மீது வந்த சந்தேகத்தில் எதையெல்லாம் அவர்களுக்கு வாங்கினேனோ அதையெல்லாத்தையும் இவனுக்கும் வாங்கினேன். எல்லாவற்றையும் அடுக்கி எடுத்துக் கொண்டுவிமான நிலையம் புறப்பட்டோம். சுகன் தான் கடன் வாங்கிய கமரா எங்கே என்றான் அதனை எனது வீட்டில் வைத்துவிட்டதாகச் சொன்னான். விமான நிலையத்தில் சூட்கேசுகளைக் கொடுத்ததும் ஓவர் லக்கேஜ் என்றார்கள். உடனேயே நாங்கள் பைகளில் வெயிட்டின் அளவைக் குறைப்பதற்காக பைகளைப்பிரித்து பொருட்களைக் குறைத்தோம். சந்தையில் வாங்கிய பச்சைமிளகாய் உட்பட அதற்குள் இருந்தது.  அப்படியான பல பொருட்களை எடுக்க வேண்டிவந்தது. அதற்குள் ஒளித்து மறைத்த சுகனது கமராவையும் எடுத்துவிட்டு அனுப்பினோம்.
இமிக்கிறேசன் அதிகாரிகளைக் கடந்து அவன் கையைக் காட்டிச் சென்றதும் இந்தமுறை ஆள்மாறி வந்திட்டுது அடுத்தமுறை எப்படியாவது ஸீரோ டிகிரி எழுதியவனைக் கூப்பிட வேண்டும் என்றான் சோபாசக்தி.
தமிழ்நாடு சென்று பிரேம் றமேசினது பொருட்களையோ அல்லது அரவிந் அப்பாத்துரையின் பணத்தையோ அவன் கொடுக்கவேயில்லை.
அவன் தொடர்ந்தும் எங்களைப்பற்றி தவறாகவே எண்ணிவைத்திருக்கிறான். 

கதை2 
நேரம் கிடைக்கும் போது



Saturday 7 November 2015

தராசில் கவிதை.



அப்பா…
என்னப்பா – எங்கேயப்பா?

காணும் பொத்தும்.

உமது மூளையை தராசிலிட்டால்
மறுதட்டில் எது?
நிறுத்தமுடியாது
மேலும் கீழும்.

சீசோ அப்- பன் சோ.

இல்லை-யப்பா
விரலால் நாக்கைப் பொத்தி
முன்னால் நிற்பவனது
கண்ணையும் பொத்தும்.

தராசில் வைத்தால் ஆடவேணாமா கவிதை?

கற்சுறா