Sunday 4 November 2018

படம் போடமுடியாத கவிதைகள்... கற்சுறா

1.        1.கேள்விச்சாவி


நிபந்தனைகள் நீங்கலாக இருக்க வேண்டிய கேள்விகள் குறித்து மட்டுமே நிரப்பப் படவேண்டிய இடைவெளிகளைக் கொண்டிருக்கும் படிவத்தில் நினைத்ததை எழுதமுடியாதிருக்கிறது.

கோர்வையாய் காலில் மாட்டியிருக்கும் நிபந்தனைகளை அறுத்துவிடாது ஒற்றைக் கேள்வியைத்தன்னும் நகர்ந்து ஓட முடியவில்லை.

உன்னுடைய அறைச் சாவியையும் என்னிடம் ஒழிக்காதே.

எனது கேள்வியல்ல அது.

பொருந்தியிருந்த கதவினையும் திறக்க முடியாச் சாவி எங்கே  இருந்தென்ன?

முன் நுழையும் துவாரத்தினூடு விரியும் வெளியினை சாவியிடம் கேள்.

விரித்து வெளியைத் திறந்து நுழையும் காட்சிகளை
ஓரமாய் இருந்துதான்  கண்கொள்ள வேண்டும்.

இன்னொரு வழியில்  சொல்லக்  காத்திருக்கும் கேள்வியில்  எழுந்த
 துவாரத்தை மறைத்து நிற்கும் உன் விரல்களை எடுத்து என் பிடரியில் செருகு.

மறுகையால் என்னையும் இழுத்து உள்ளே விடு.

இடைவெளிகளை நிரப்ப உனக்கு சாவியே போதும்.

நிபந்தனைகளாலான கேள்விகளை துவாரத்துள் செருகாதே.

வெளியேறமுடியாத் துவாரத்தை

படிவத்தின் இடைவெளிகளில் நினைத்ததை

இன்னொரு அறையில் சாவியை

சாவியின் சாயலில் இருக்கும் கேள்வியை

எழுத முடியாது போனதை
நீ அறிந்தே இருக்க வேண்டும்.










2.        2. சமகாலம்

பிரேதப் பரிசோதனையில் தெளிவற்றிருந்த தகவலை
ஊர்ஜிதப்படுத்த வேண்டியிருந்தது.

மான் கொம்புகளின் வளைவுகளை
தலைகீழாகச் செருகியிருந்த பாவனையில்
ஆடைகள் கீழே வழுவிய வண்ணம் இருந்தன.

பிணத்தின் ஆடைகளில் இன்னமும் இரத்தம் கசிந்தபடியே இருந்ததில்
தெளிவற்ற சோதனை.

காயம் பட்ட இடமென்று அடையாளம் சொல்லமுடியாத நிலையில்
உடலை மேலும் கீழுமாக மாறி மாறி அறுக்க வேண்டியிருந்தது.

உட்காயத் தேடல்.

நிகழ்ந்த சாவிலிருந்து தேடிய காயம் இன்னமும் பிடிபடாத வெளிக்காயமாயிருந்தது.

வேண்டியிருந்த காலத்தின் பரிசோதனை நாற்பதா? அறுபதா?

அதற்குள் ஆட்டம் தொடங்கியிருந்தது.

நெளிவும் வளைவும் உடலை விடவும்
மூச்செறிந்து முனகிச் செல்லும் வார்த்தைகளுக்குள்
பிணம் கைவிட்டுத் தொலைந்தது.

பரிசோதனையைத் தொடங்க மீண்டும் வரிசையில் பிணங்கள்.

பிணங்களைக் கைவிட்டு தெளிவுறும் சமகாலம்.

குறி சொல்லி, குணம் சொல்லி
தலைகீழாய்த் தொங்கவிட்டு அவிழ்த்துவிடும் நிர்வாணம்.











3.        3. “மூனா”

வேலிக்குள் நுழையா மாட்டின் குறி
எதேச்சையானதல்ல.

உடலில் பச்சை குத்துவதைப் போல்
குத்துவதல்ல மாட்டுக் குறி.

காலை குறுக்கிட்டுக் கிடத்தி காய்ச்சிய சூட்டுக் கோலால் சுடும் குறியில்
மயிர் மணம்.

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.

அடையாளத்தை அழித்து இன்னொரு மாடாய்
நிகழ்த்திக் காட்ட
கள்ள மாட்டுக்கு எத்தனை சூடாம்?

வேலிக்குள் நுழையா மாட்டின் குறி
எதேச்சையானதல்ல.

காட்டெருமையின் சாயலில் உருமாறும்
கள்ளமாட்டின் குறி ஊரெங்கும் தெரியும்

நல்ல மாட்டிற்கு ?

வேலிக்குள் நுழையா மாட்டின் குறி
எதேச்சையானதல்ல.

நுழையும் வேலியும் எதேச்சையானதல்ல.

காலை குறுக்கிட்டுக் கிடத்தி காய்ச்சிய சூட்டுக் கோலால்
கள்ள மாட்டின் பானாவை மறைக்க
கோடிழுத்து மடக்கி மேலிழுத்து வளைத்து
மூனா எழுதும் போது எழுப்பிய மாட்டின் அலறலில்
முழுப்பெயரும் வாழுவதில்லை.

வேலிக்குள் நுழையா மாட்டின் குறி

எதேச்சையானதல்ல.