Thursday 11 July 2019

நெருப்பில் அமிழ்ந்து கொண்டு நீரை நெருங்குவது…


கற்சுறா



1. நீர்த்துப் போன அர்த்தங்களை கொண்டுழலும் வார்த்தைகளை விளங்கிக் கொள்ளல்.











“பார்வைகள் ஆயிரம். நோக்கம் ஒன்றே” என்று தமிழ்ப்பார்வை முதலாவது இதழின் ஆசிரியர் கருத்துப் பகுதியில் குறிப்பிட்டிருந்தார்கள். மற்றவர்களுடைய கருத்தைக்
செவிமடுக்கும்  மனநிலையை இழந்த சமூகமாக நமது சமூகம் நீண்ட காலமாக இருந்து வந்திருக்கிறது. இதற்கு உதாரணங்களைச் சொல்லி யாருக்கும் விளங்கப்படுத்தத் தேவையில்லை. 

கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக நமது சூழலில் வெளிவந்த
பெருவாரியான ஊடகங்களை எடுத்து ஆராய்ந்தால் அதனை எல்லோராலும் இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும்..

ஆனால் இன்றைய காலத்தில் இந்த இழிநிலை மெல்ல மாறிவருவதை உணரமுடிகிறது. இன்று இருக்கின்ற அளவுக்கு மீறிய ஊடக நிறுவனங்களது போட்டி மனப்பான்மை இதற்குரிய வாசலை ஓரளவுக்குத் திறந்துவிட்டிருக்கின்றது என்றாலும் “லாடன் கட்டிய குதிரைகள்” ஆக ரேஸில் ஓடுவதைப் பெரும்பாலான ஊடகங்கள் இன்றும் கூட கைவிடவில்லை..

ஒரு வெகுசனப்பத்திரிகையாக இருந்தாலும் வியாபார நோக்கம் குறித்ததாக இருந்தாலும் எதிர்க் கருத்துக்களுக்கும் மாற்றுக் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கும் பக்குவம் உள்ளதாகவும் விமர்சனங்களையும் எதிர் விமர்சனங்களையும் உள்வாங்கும் எண்ணம் கொண்டவர்களாகவும் தமிழ்ப்பார்வையினர் வரும் காலங்களில் இருப்பார்களா அல்லது இன்றிருக்கின்ற லாடன் கட்டிய குதிரைகளாக இருக்கும் அத்தனை ஊடகங்களைப் போலவும் சுரணைகெட்டுப் போய்விடுவார்களா என நாம் நோக்க வேண்டும்.

எனது இந்த எழுத்து வழமையான ஒரு தமிழ்ப் பார்வையாக இருக்காது என்பதனை முதலில் சொல்லிக் கொள்கிறேன்.

இங்கே “நீர்த்துப்போன அர்த்தங்களைக் கொண்டுழலும் வார்த்தைகள்” என்று நான் குறிப்பிட்டுச் சொல்லும் வார்த்தைகளை அதிகமாக நாம் மேற்சொன்ன ஊடகங்கள் வாயிலாகவும் அவை சொல்லிக் கொடுத்ததை அப்படியே சிந்திக்கும் மனநிலையில் நாமும் உச்சரித்துக் கொண்டிருக்கிறோம். அல்லது அந்தவகை ஊடகங்களால் நம்மை உச்சரிக்கச் “சொல்லி வைக்கப்படுகிறது”.


மிக நீண்டகாலமாக வலுவிழந்த வார்த்தைகளை அளவுக்கு
அதிகமாக, அதற்குரிய மதிப்பீடுகளை அளவிடமுடியாதபடி நாம் பாவித்து வருகிறோம். இப்படி வலுவிழந்த வார்த்தைகளில், அண்மையில் நாம் அதிகமாகப் பாவிக்கும்
வார்த்தைதான் “காணாமல் போனோர்” என்பது.

நமது ஈழயுத்தகாலத்தில் திட்டமிட்டுத் தொடங்கிய இந்தக் “காணாமல் ஆக்கப்பட்டவர்கள்” ஐப் பற்றிக் குழப்பமான உரையாடல்களை நாம் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக் கிறோம். நாம் நிகழ்த்திக்கொண்டிருக்கும் உரையாடல்கள் எவருக்கும் எந்தத் தெளிவையும் இதுவரை ஏற்படுத்திவிடவில்லை. இந்தத் தெளிவற்ற உரையாடல்களால் நாம் ஒருபோதும் அதற்குரிய
முடிவைக் கண்டடையப் போவதில்லை.


மிக நீண்ட காலமாக “ காணாமற்போனோர்” என்ற அடையாளச் சொல்லைப் பயன்படுத்திக் கொண்டே தமது உரையாடல்களைத் தொடர்ந்து வந்தவைதான் நமது தமிழ் ஊடகங்கள். அதனை மறுத்து “ இங்கே யாரும் தாமாகப் போய் எங்கும் ஒளித்திருக்கவில்லை. அனைவரும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொருவரால்
திட்டமிடப்பட்டே காணாமல் ஆக்கப்பட்டார்கள் “ என நாம் எழுதிக்காட்ட வேண்டியிருந்தது.

ஆனால் நமது சூழலில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மீதான கரிசனை என்பது நமது ஊடகங்களுக்கு 2009 ம் ஆண்டின் பின்னரே வருகிறது. இந்தக் கடைசிக் கரிசனை என்பதுதான் போலியானது. அது கடந்தகாலத்தில் தேசியஇனம் அல்லது தேசவிடுதலை
தேச மொழி மீதாக இருந்த போலியான விபரமற்ற பற்றுப் போன்றதே. விட்டுப் போக இருக்கும் ஒரு முதலீட்டின் பற்றிப்பிடிப்பாகச் செய்யப்படும் கடைசித் துருப்புக்களில்
ஒன்றாக இன்று இதனை அவர்கள் கையில் எடுக்கிறார்கள்.


அதன் தொடர்ச்சியாகத்தான் “ காணாமல் போனோர்” என்பதிலிருந்து “ காணாமல் ஆக்கப்பட்டவர்கள்” என்று மாறியது போல் “ காணாமல் ஆக்கப்பட்டோர்” என்ற சொல்லிருந்து கொஞ்சம் மாறி “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்” என்ற
சொல்லிற்கு இப்போது வந்திருக்கிறார்கள். உண்மையில் “காணாமல் ஆக்கப்பட்டவர்கள்” – “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்” என்ற இரண்டு வார்த்தைகளுக்கும் இடையில்
இவர்கள் கண்டு பிடிக்கும் அர்த்தம் அல்லது சொல்ல நினைக்கும் வித்தியாசம் அல்லது இரண்டு சொல்லுக்குமிடையிலான அழுத்தம் எதுவாக இருக்கும்?

 வெறுமனே ஆங்கில வார்த்தையிலிருந்து மொழிபெயர்ப்பதனால் வரும் வினை இது எனக் கடந்துபோய்விடமுடியாது. இது அப்பட்டமான சிந்தனைச் பிசிறல். கடந்த காலத்தில் “போரியல் அமைதி” என்றும் “களையெடுப்பு” என்றும் “தந்திரோபாயம்”
என்றும் பாவனைக்குக் கொண்டு வந்த தந்திர வார்த்தை போல்தான் இந்த “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்” என்பதுவும்.
இங்கே யாரும் யாரையும் மென்மையான முறையில் காணமால் ஆக்கவில்லை. அனைவரும் திட்டமிடப்பட்டு கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். அப்படிக் கொலை செய்யப் பட்டவர்களில் பலர் பலத்த சித்திரவதைக்குள்ளாகிக் கொலை செய்யப்பட்டார்கள். செய்யப்பட்ட சித்திரவதைகளும் சித்திரவதைக்குள்ளான உடல்களும் திட்டமிடப்பட்டு மறைக்கப்பட்டுள்ளன. இங்கே அரசு, அரச இராணுவம், அதனை
எதிர்த்துப் போராடிய போராட்டக்குழுக்கள் போராட்டக் குழுக்ளை எதிர்த்த போராட்டக் குழுக்கள் என்று யாருக்கும் வித்தியாசங்கள் இருக்கவில்லை.


ஈழவிடுதலை என்று ஆரம்பித்த அத்தனை இயக்கங்களும் தமிழ் இளைஞர்களையும்பொதுமக்களையும் காணாமல் ஆக்கியது. செய்யப்பட்ட அளவுகளில் தான் இவர்களிடையே வித்தியாசம் இருக்கும். மற்றப்படி அனைவரது கரங்களும் கொலைக்கரங்களே. இன்று பலர் சொல்வது போல் வெறுமனே “காணாமல்
ஆக்கப்பட்டவர்கள்” என்ற கதை 2009 யுத்த காலத்தில் மட்டும் நிகழ்ந்ததல்ல. தனியே முள்ளிவாய்க்காலில் மட்டும் வலிந்து இழுத்துக் கொண்டு போய்க் காணாமல்
ஆக்கவில்லை.

“ ஈழம் என்பது தேசம் அல்ல கதை” . கடந்த 40 வருடங்களாக அதற்குள் பல கதைகளிருக்கின்றன. அந்தக் கதைகளிற்குள் பல ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்குப் பொறுப்பானவர்கள்
வெவ்வேறு தரப்பானவர்கள். அந்த ஒவ்வொரு தரப்பானவர்களைப் பார்த்து ஒற்றைச் சொல்லைத்தன்னும் தனது பிள்ளைக்காகக் கேட்கமுடியாத தாய்மார்களின் மவுனக் கண்ணீரைக் கடந்து வந்தவர்கள் தான் நாங்கள். பேசமுடியாதிருந்த அந்தத தாய்மார்கள் குறித்து கரிசனையற்றிருந்த நாங்கள் “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்” என்ற ஒரு மந்திரச் சொல்லோடு இன்று நமது சமூகத்தில் நுழைவது போலித்தனமானது. இவ்வாறான எங்களுடைய போலி வார்த்தைகளால் உண்மையில் முள்ளிவாய்க்காலில் பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்மார்களுக்கும் ஒரு பதில் வார்த்தை கிடைக்கப் போவதில்லை. “காணாமல் ஆக்கப்பட்டவர்கள்” குறித்து நாம் பேச முற்படும் போது எமக்கு ஒரு விரிந்த மனது தேவை. இது தன்னுடைய பிள்ளையை
எங்கே என்று கேட்க முடியாது இன்றுவரை மவுனமாயிருந்த தாய்மார்களது மவுனத்தையும் அது உடைக்க வேண்டும். அந்தத் தாய்மார்கள் வடக்கிலிருந்து தெற்குவரை இன்னமும்
பரவித்தான் இருக்கிறார்கள். அவர்களை இன்னமும் தவிக்க விட்டு
அட்டவணைப்படுத்தப்பட்ட “காணாமல் ஆக்கப்பட்டோர்” குறித்து பேசுவதனால் ஒரு பிரியோசனமும் வரப்போவதில்லை. நாங்கள் பாதிப்பக்கத்தைத் தவிர்த்து விட்டுத்தான்
கோசம் போடுகிறோம். இதற்குப் பதிலே சொல்லத்தேவையில்லை என்று அரசும் இராணுவமும் நினைக்குபடி நாம் தொடர்ந்து செயற்படுவதில் அர்த்தமில்லை.


2009 இறுதியுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களது தொகை விபரம் பெயர் விபரம் உட்பட அனைத்து விபரங்களையும் வெளியிட வேண்டிய அவசியம் அந்த யுத்தத்தை நடத்திய அரச
நிர்வாகத்தின் முன்னுள்ள கட்டாயமான கடமை. அதற்கான முழுத்தகவல்களையும் அரச நிர்வாகத்தால் மிக இலகுவாகத் திரட்டிவிடமுடியும். ஆனால் இலங்கை அரச நிர்வாகத்திற்கு
அதனைச் செய்யத் தேவையற்றதாக இருக்கும் காரணம் எது என நாம் தான் சிந்திக்க வேண்டும்.

மாதக்கணக்காக பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்மார் கணவனைப் பறிகொடுத்த மனைவிமார்
வீதியில் இறங்கி இத்தனை போராட்டம் செய்தும் ஏன் பலனற்றுப் போய்க்கிடக்கிறது?

எப்படிஇந்த அரசு இத்தனை போராட்டங்களையும் தட்டிக் கழிக்கிறது?  சர்வதேச சமூகம் என்ன கவனத்தை எடுத்தது? ஏன் கவனமற்று இருக்கிறது? என்று எல்லாம் நாம் பேசியாக வேண்டும்.

இந்த “ வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்” என்ற சொல்லிற்குள் இருக்கும் அரசியல் எது? அந்தச் சொல்லை இவ்வளவு காலமும் நாம் ஏன் பாவனையில் கொள்ளாது தவிர்த்தோம்?


யாருடைய நலனுக்காக, யாரைக் காப்பாற்றுவதற்காக இந்தச் சொல் பாவனைக்கு வந்தது? என்று அதனைப் பாவிக்கும் எந்த ஊடகங்களும் இன்றுவரை கேள்வி எழுப்பியது இல்லை என்பது
இன்னொருவகை அதிகார ஒத்து ஊதுதலே. எவ்வாறு துரோகி- தியாகி என்ற மனநிலையில் எவ்வித விமர்சனப் பார்வையுமற்று சொன்ன சொல் பிள்ளைகளாக இருந்த நமது ஊடகங்கள்,
போர்த் தந்திரோபாபயம் , போரியல் அமைதி, தந்ரோபாயப் பின் வாங்கல், காட்டிக் கொடுப்பு,கூட்டிக் கொடுப்பு, என்று சொல்லிவந்த செய்து வந்த அத்தனை முட்டாள் தனத்திற்கும் விளக்கம்
அளித்துக் கொண்டிருந்த நமது ஊடகங்களின் புதிய தொடர் கண்டு பிடிப்புத் தான் இந்த “வலிந்து காணாமல் போனோர்” என்பது. இந்தச் சொல்லைக் கொண்டு இந்த ஊடகங்களினால் எந்த ஒரு
புதிய அத்தியாயத்தையும் தொடங்க முடியாது இருப்பதுதான் மிக முக்கியமான விடையம்.


ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்பது நமது போராட்ட சூழலிலும் நமது யுத்த சூழலிலும் மிக நீண்ட கால வரலாற்றுக் கதையுடையது. அது அத்தனை இயக்கங்களதும்
சமூகவிரோதி ஒழிப்பிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுஅனைத்து இயக்கங்களினதும் உட்கட்சிப் புரட்சி, இயக்க மோதல், அதன் நீட்சியான சகோதரப்படுகொலை, அனைத்து இயக்கங்களது வதை
முகாம்களது வரலாறு, இலங்கை இராணுவமுகாமினது வரலாறு, அரச புலனாய்வு வரலாறு என்று நீண்டு இறுதி யுத்தம் வரை செல்ல வேண்டும். இந்தக் கணக்கெடுப்பில் நாம் முழுமையாக
ஈடுபட்டால் மட்டுமே இது குறித்துப் பேசத் தகுதியானவர்களாவோம்.

நமது சமூகத்திற்குள் இந்தவகைக் கணக்கெடுப்பை நிகழ்த்துவது இயலாத காரியமல்ல. காணாமல் ஆக்கப்ட்டோர் குறித்த தகவலை ஒட்டு மொத்தமாகத் திரட்டுவதற்கு நாம் ஒருபோதும் முன்றின்றதில்லை.

காணாமல் ஆக்கப்பட்டோர் மீதான கரிசனை நம்மில் பலருக்கு 2009இன் பின்னரே உருவாகிறது. இது அடிப்படையில் மிகத் தவறானது. இந்தத் தவறு அரசை ஒரு பொழுதும் நிர்ப்பந்திக்கப்
போதுமானதாக இருக்கப் போவதில்லை. அரசின் மிலேச்சதிகாரமான இன்னுமொரு செயற்பாட்டிற்கே அது வழி வகுக்கும். மற்றயபடி இது தற்காலத்தில் யாருடையதோ  அதிகார – வியாபாரத் தேவைக்காகப்
பேசப்படும் ஒரு சொல்லாக அந்தச் சொல் அர்த்தம் இழந்து போகும்.அதனால் ஒரு வித பிரியோசனமும் எவருக்கும் இருக்கப் போவதில்லை.

 எந்தவொரு சொல்லையும் நாம் பாவிக்கத் தொடங்குமுன் அதன் ஆழ்மன அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையேல் ஏற்கனவே மதிப்பிழந்து போன சொற்களை பாவித்து நாம்  நமது சமூகத்தின் சீவியத் திறனை அழித்தது போல் நிகழ்ந்து விடும் அபாயம் இருக்கிறது. அதில் நாம் அதிக கவனமாக இருக்க வேண்டும்.

அதனால் தான் சொல்கிறேன் வக்கிர எண்ணத்துடன் நமது மனதை நெருப்பிற்குள் புதைத்து வைத்துக் கொண்டு நீர் பற்றிக் கருத்துரைப்பதில் என்ன நன்மை நிகழ்ந்து விடப்
போகிறது? தொடர்ந்து பேசுவோம்.


நன்றி
தமிழ்ப் பார்வை (கனடா)

Sunday 16 June 2019

சாதியால் சுட்ட வடு- கற்சுறா

 
 

“நினைவழியா வடுக்கள்”

சிவா சின்னப்பொடி அவர்களது நூல்  குறித்து…
வெளியீடு: விடியல் பதிப்பகம்
 
 
 
 
தீயினால் சுட்ட வடு ஆறும்
நாவினால் சுட்ட வடு ஆறும்
நடுத்தெருவில் இழுத்து வந்து
நாய் போல சுட்ட வடுஆறும்
ஆறாது
சாதியால் சுட்ட வடு.
 
என்று சாதியின் வடுக் குறித்து எழுதியும் பேசியும் வருகிறோம். இப்போது சிவா சின்னப்பொடி அவர்களது “நினைவழியா வடுக்கள்” என்ற நூலின் அத்தனை பக்கங்களிலும் அது துல்லியமாகத் தெரிந்து விடுகிறது.
 ஈழத்தில் சாதியால் தீண்டிய வடுக்கள் ஒவ்வொரு தெருவிலும் ஆறாது ஆழமாய்ப் பதிந்து போய்க் கிடக்கிறன. பிரதானமாக தமிழர்களது கலாசாரப் பூமி என்றவாறாக ஆதிக்கசாதிகளால் அடையாளம் இடப்படும் யாழ்ப்பாண மண்ணில் அதன் வடுக்கள் அதிகமாகத்தான் இருக்கின்றன.
சாதி வெறி என்பதனை எந்தத் தருணத்திலும் ஆதிக்க சாதிகளால் விட்டுக் கொடுக்க முடியாது என்பதற்கு உதாரணமாக  இறுதி யுத்தத்தின் பின் “மெனிக் பார்ம்” முகாமில் தாழ்த்தப்பட்டவர்களோடு சேர்ந்து இருக்கமுடியாது, சேர்ந்து சமையல் செய்ய முடியாது  என்று தனிப்பிரிவு கேட்டு சண்டையிட்ட சாதிவெறி கொண்டவர்களது ஆக்கினையைக் குறிப்பிட்டுச் செல்லிவிடமுடியும்.
மரணத்திற்குள் வாழ்ந்து மரணத்திற்குள்ளே வாழ்வைத் தொலைத்தாலும் சாதி காப்பாற்றும் சமூகம் நம்முடைய சமூகம் என்பதற்கு இதைவிட வேறு என்ன வியாக்கியானத்தைச் சொல்லிவிடமுடியும்.
இந்த நூலில் சிவா சின்னப்பொடி அவர்கள் தன்னுடைய வாழ்தலில் தான் நேரடியாக அனுபவித்த கொடுமைகளையும் தன்னுடைய முன்னோர்கள் அனுபவித்த கொடுமைகளையும்  தனது பாட்டனுக்கூடாகவும் தனது தாய் தந்தையருக்கூடாகவும் கேட்டு அறிந்து இந்த ஈழத்தமிழ்ச் சமூகத்திற்குமுன் பதிவு செய்திருக்கிறார். இற்றைக்கு 70, 80 வருடங்களுக்கு முன்னர் எப்படியான சாதியக் கொடுமைகள் இருந்தன. தனது முன்னோர்கள் எப்படியான துன்பங்களையெல்லாம் அனுபவித்தார்கள் என்று சொல்வதுடன்  கொடுமைகளில் இருந்து மூர்க்கத்துடன்  மீண்டுவர என்னவெல்லாம் செய்ய வேண்டியிருந்தது என எழுதிச் செல்கிறார்.
தாழ்த்தப்பட்டவர்கள் என அடையாளம் இடப்பட்டவர்கள் கோவில்களில் உள் நுழையக் கூடாது  கிணற்றில் தண்ணீர் அள்ளக் கூடாது பாடசாலைகளில் ஒன்றாக இருக்ககூடாது என்றும் தேனீர்சாலைகளில்  தனிக்குவளை வைத்தும் தமது வீடுகளில் அழுக்குகளைச் சுத்தம் செய்ய வைத்தும் தமது பிணங்களைக் காவ வைத்தும் யாழ்ப்பாணத் தேச வழமைச் சட்டம் வைத்திருந்த  இந்தக் ஆதிக்க சாதிக்கூட்டம், தாம் புலம்பெயர்ந்த போது இம்மியும் பிசகாது தம்முடன் சாதியையும்  காவிக் கொண்டு போனவர்கள்.  இப்போது ஈழத்தில் தமது காணிக்குள்ளும் தமது ஊருக்குள்ளும் புதுப் புதுக் கோவில்களைக் கட்டியபடி அதே ஆதிக்க மனநிலையோடு  ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். முன்பு கோவில்களைக் கொண்டு எப்படி தமது அதிகாரத்தை முன்னிறுத்தியிருந்தனரோ அதனை மறந்து விடாது முன்நிறுத்த  இன்னொரு வியூகம் அமைக்கின்றனர்.
ஈழயுத்தகாலத்தில் கூட சிதிலமடையாது சாதி மனோபாவத்தை உள்ளாரப் பாதுகாத்திருந்த அதிகார வர்க்கம் மீளத் தன்னுடைய அதிகாரத்தை மெல்ல மெல்ல ஆலயங்களுக்குள்ளால் தக்கபடி வடிவமைத்துவிடத் தயார் செய்து கொண்டிருக்கிறது.
சில மாதங்களின் முன்னர் ஈழத்தின் கோயில்களின் தேரினை ஒடுக்கப்பட்டவர்கள் தொட்டு இழுத்துவிடக் விடக் கூடாது என்ற சண்டையில் இராணுவத்தைக் கொண்டு இழுத்த கதையையும் இயந்திரத்தைக் கொண்டு இழுத்த கதையையும் நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.
 
 
- நினைவழியா வடுக்கள் எனும் இந்த நூலில் தான் கல்விகற்ற ஆரம்பப் பாடசாலையில் சாதிவெறிபிடித்த ஆசிரியர்களால் தான்பட்ட துன்பங்களை விபரித்திருக்கும் சிவா சின்னப்பொடி அவர்கள் அதிலிருந்து தப்புவதற்காக கந்த முருகேசனிடம் கல்விகற்கப் போகிறார். அதனால் சாதிவெறியர்களிடமிருந்து கந்த முருகேசனார் வாங்கும் வசவுகள் துன்பங்கள் பற்றி விபரிக்கிறார். கந்த முருகேசனரின் தெளிவும் சமூக அக்கறையும் சாதிய விடுதலைக்கான முன்முனைப்பும் தனக்குள் விதை விடும் அளவிற்கான அறிவுரைகளும் தனது சிந்தனையில் மாற்றத்தைக் கொண்டு வந்ததில் முக்கியமான தருணம் என்று சொல்கிறார்.
 - கந்த முருகேசனாரின் திண்ணைப்பள்ளிக்குச் சென்ற சிறுவனான சிவா சின்னப் பொடி பின்னர் அரச பாடசாலையில் சேர்கிறார். அங்கே  சாதிய வெறிக்குள் தினமும் முகம் கொடுக்க ஏற்படுகிறது. தந்தைக்கிருந்த சாதிய விடுதலைக்கான கருத்துத் தெளிவு மற்றும் அவர் சார்ந்து இயங்கிய நண்பர்கள் தோழர்களது சிந்தனைகளால் இயல்பாக அவருக்குள் ஏற்படும் எதிர்ப்புணர்வு அவரைப் பள்ளியில் இருந்து கலைக்க வைக்கிறது. படிப்பதற்காக ஏங்கும் ஒரு சிறுவனாக இருக்கும் அவர் சாதியவெறிகொண்ட ஆசிரியர்களால் மக்கோனாவுக்கு( சிறுவர் சீர்திருத்தப்பள்ளி இருக்கும் இடம்) அனுப்ப பொலீசில் பிடித்துக் கொடுக்கப்படுகிறார்.  பின் விடுதலையாகிய போதும் படிப்பதற்குப் பாடசாலைகள்  மறுக்கப்படுகின்றன.
- ஒருமுறை தனது தங்கை பிறக்க இருந்த காலத்தில் தந்தையுடன் இணுவில் ஆஸ்பத்திரிக்குச் செல்கிறார். இணுவிலில்  ஒரு சாப்பாட்டுக்கடையில் சாப்பிட்டு கைகழுவப்  போன இடத்தில் தந்தையின் கையிலிருந்த மரமேறிய தழும்பைப் பார்த்து விட்டு  ஒரு ஆதிக்க சாதி வெறியன் “நீ என்ன கீழ்சாதியா?” எனக் கூச்சலிட்டு முதலாளியுடன் சேர்ந்து அடித்து வதை செய்த பின் தந்தைக்கும் மகனுக்குமான தண்டனையாக  மிகப்பெரிய தொகை விறகைக் கொத்தி அடுக்கும்படி செய்கிறார்கள். அந்த வதையினை அவர் எழுதியிருக்கும் வரிகள் ஈழத்தின் சாதிவெறிநிலம் எரிந்து சாம்பலாகவே வேண்டும் அது எக்காலத்திலும் மீளவே கூடாது என எண்ணத் தோன்றும். நீங்கள் அனைவரும்( உங்களில் யாராவது சாதி வெறியராக இருந்தால் கூட) கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் இது எனச் சொல்லிக் கொள்கிறேன்.
 - இயல்பிலேயே கலை ஆர்வம் கொண்ட தமது சமூகத்திற்குள் பிளவுகளை ஏற்படுத்தி சகோதரச் சண்டைகளை சகோதரக் கொலைகளை திட்டமிட்டு  உருவாக்கிவிட்ட ஆதிக்கசாதிகளின் வஞ்சனையைத் துல்லியமாகக் குறிப்பிடுகிறார். 
-தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்கள் வாழும் வீடுகள் ஆதிக்க சாதிகளின் தரத்துக்கு இருக்கக் கூடாது என்ற யாழ் தேச வழமைச் சட்டத்தை மீறி தனது சமூகம் எப்படியான போராட்டங்களை நடத்தியது. மேற்சட்டை போடுவதற்கான உரிமையை எப்படித் தனது சமூகம் போராடிப் பெற்றது எனக்  “கல்வீட்டுப் போராட்டம்” “மேற்சட்டைப்  போராட்டம்” என்பவற்றை விளக்கிச் செல்கிறார்.
 - சாதிரீதியாக ஒடுக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்காக ஆதிக்கசாதிகள் எவ்வகையான நூதனமான வேலைகளை பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் பதியப்படும் வேளைகளில் செய்தார்கள் என்பதனை விளக்கிச் செல்லும் சிவா. சாதி என்று குறிப்பிடப்பட்ட இடத்தில் இலங்கை  நாடாளுமன்றத்தில் சமூகக் குறைபாட்டுச் சட்டம் கொண்டுவரப்பட்ட பின்பு தேசிய இனம் என்று மாற்றப்பட்டது.  இந்த மாற்றம் வந்த பின்பு அதில் இலங்கைத் தமிழர் என்று எழுதப்பட்டிருந்தால் மேல் சாதியினர் என்றும் இலங்கைத் தமிழ் என்று எழுதப்பட்டிருந்தால்  அது இடை நிலைச் சாதி என்றும்இலங்கைத் தமிழன் என எழுதப்பட்டிருந்தால்  அது சாதிரீதியாக ஒடுக்கப்பட்டவர்களைக் குறிக்கும் என்றும் அப்போது இருந்த ஆதிக்க வெறியின்  தந்திர விளங்கப்படுத்தலை அவர் தெளிவுறச் சொல்கிறார். இது ஒரு மிக முக்கியமான பதிவு என நான் கருதுகிறேன். ஆதிக்க சாதித் திமிர் என்பது எப்படி ஒவ்வொரு நுண்ணிய தளங்களிலும் சட்டங்களையும் சமூக விழுமியங்களையும் கேலிக் கூத்தாக்கி மேவி நின்று வெறியாடியது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
- அதனை விடவும் வெள்ளாள நிலக்கிழார் வீட்டுப் பெண்களுக்கு அவர்களது தாய்வீட்டில் அடிமை வேலைசெய்து வந்த ( நான் சேவகம் என்ற சொல்லைத் தவிர்க்கிறேன்) நளவர் சமூகத்துப் பெண் ஒருவரையும் பள்ளர் சமூகத்துப் பெண் ஒருவரையும் கோவியர் சாதிப் பெண் ஒருவரையும் சீதன வரிசையில் சேர்த்துவிடும் நிலைதான் இருந்தது என்பதைச் சொல்வதோடு சாதிய சமூகத்தில் ஒரு ஆதிக்க சாதியினது  மரண ஊர்வலம் என்பதும் அப்பட்டமான அடிமை முறையின் வெளிப்பாடாக இருப்பதனையும் சுட்டிக்காட்டுகிறார்.
இன்றும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் எச்சம்,விட்டுவிலகிவிட முடியாதபடி சொச்சமாக, மரணவீடுகளில் சாதியை ஒரு அடையாளமாகவேனும் நிகழ்த்திவிட வேண்டியிருப்பதனை நாம் கண்டு வருகிறோம் தானே.
-யாழ்ப்பாணத்து பாடசாலைகளிலும் ரியூசன் சென்டர்களிலும் நடைபெறும் உரையாடல்களில் ஒடுக்கப்பட்ட மாணவர்களினைப் பிரித்துச் சொல்லும் குறியீடாக சோடியம்(Na) என்றும் பொஸ்பரஸ்(P) என்றும் இருக்கும் கேவலமான நடைமுறையை அவர் குறிப்பிடுகிறார். நளவன் என்றோ பள்ளன் என்றோ வெளிப்படையாகச் சொல்ல முடியாத சூழலில் இந்தக் குறியீட்டுச் சொல்லைக் கொண்டு அடையாளம் இட்டுவிடும் நிலையினை அந்த யாழ்ப்பாண இளையசமூகம் கைக்கொண்ட தந்திரம் அசிங்கமானது.
 
-சாதிய சமூகமான ஈழத்தமிழ்ச் சமூகம், அதிலும் இறுக்கமான சாதிய வெறியுடன்  காலந்தள்ளிய யாழ்ப்பாண சமூகத்தின் அரசியல் கட்சிகளாக இருந்த தமிழரசுக்கட்சியும் தமிழ்க் காங்கிரசும் எப்படி தமது வாக்குகளுக்காக  இரண்டு பிரிவாகவே தமிழ் சமூகத்தை கண்கொண்டு பார்த்தார்கள் என்பதனை அனைத்து விளங்கப்படுத்தல்களுடனும் சொல்லிவரும் சிவா சின்னப்பொடி இடது சாரிச் கொள்கைகளுடன் இயங்கிய பலரது செயற்பாடுகளாலும் சிந்தனை முறையாலும் பல மாற்றங்களை முன்நகர்த்த முடிந்தது எனச் சொல்கிறார். அதில் பொன். கந்தையா அவர்களது பல செயற்பாடுகளை முன்நிறுத்தும் அவர் கல்வியில் முன்னேறுவதன் மூலமே ஆதிக்க சாதித் திமிரை அடித்து நொருக்க முடியும் என  அறை கூவி நின்றவர்களாக கந்தமுருகேசனாரையும் பொன். கந்தையா அவர்களையும் அடையாளமிடுகிறார்.
-பொன். கந்தையா அவர்களது மேடைப் பேச்சு ஒன்றைப்பற்றிக் குறிப்பிடும் இடம் முக்கியமானது. 
“ உங்களுடைய பூட்டன் மாரிடம் ஒரே ஒரு நாலுமுழ வேட்டி இருந்தது. அதன்  ஒரு பகுதியைக் கிழித்து கோவணமாகக் கட்டிவிட்டு மீதியை உடுத்திக் கொண்டார்கள். உங்கள் பூட்டிமாரிடம் ஒரேயொரு புடவை இருந்தது. மற்றப் பெண்கள் அணியும் உள்டபாவாடையோ மற்ற எதுவுமே அவர்களிடம்  இருக்கவில்லை. அந்தச் சேலையை அவர்கள் தமது மானத்தை மறைக்க உடம்பில் சுற்றிக் கொண்டார்கள். மாதக் கணக்காக வருடக்கணக்காக அந்த ஒற்றைத் துணியைத்தான் அவர்கள் கட்டிக்கொண்டு திரிந்தார்கள். அவர்கள் தொட்டால் தண்ணீர் அழுக்காகிவிடும் என்று கிணறுகளிலும் குளங்களிலும் தண்ணிர் அள்ளத் தடை விதித்தார்கள். அதனால் அவர்கள் அழுக்காக இருந்தார்கள். அவர்களைப் பார்த்து ஊத்தையர்கள் என்றார்கள். மழை வந்தால் தான் அவர்களது உடம்பில் தண்ணீர் படும் என்ற நிலை அவர்கள் காலத்தில் இருந்தது.
உங்களுடைய தாத்தாமாரிடம் 2 வேட்டிகள் இருந்தன. தனியான கோவணங்கள் கூட இருந்தன. உங்கள் பாட்டிமாரிடம் 2 சேலைகள் இருந்தன. ஆனால் அவர்களிடம் சால்வைகளோ ரவிக்கைகளோ இருக்கவில்லை. ஏனென்றால் அவற்றை அணியத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கும் கிணறுகளிலும் குளங்களிலும் தண்ணீர் அள்ளவும் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அவர்கள் தங்களுக்கென்று தண்ணீர் அள்ள துரவுகளைத் தோண்டினார்கள். இந்த நிலைமை உங்களுடைய அப்பாக்களின் காலத்திலும் இருந்தது.
இன்று உங்களிடம் பல வேட்டிகளும் சேலைகளும் சால்வைகளும் ரவிக்கைகளும் பாவாடைகளும்கூட இருக்கின்றன. கிணறுகள் நீங்கள் கட்டியிருக்கிறீர்கள். இவையெல்லாம் உங்களுக்குக் கிடைத்த சலுகைகளோ வரப்பிரசாதங்களோ அல்ல. இவையெல்லாம்  உங்களுடைய நீண்ட போராட்டத்தால் உழைப்பால் உங்களுக்குக் கிடைத்தவை.”
என்ற  அறிவுறுத்தல் பொன். கந்தையா அவர்களுடையதுஎனச் சொல்லும் சிவா, ஒடுக்கப்பட்டவர்கள் பொருளாதாரமும் கல்வியும் பெற்றுவிடவேண்டும். அப்போதுதான் சரிநிகர் சமானமாக சமூகத்தில் நிலைகொள்ளக் கைகொடுக்கும் என்பதனைத் தெளிவுபடுத்தியவர் அவர் என்கிறார்.
 
-புலம்பெயர்ந்த சூழலில் எவ்வாறு சாதிய ரீதியாக பிள்ளைகள் பெற்றோர்களால் அடையாளப்படுத்தப்பட்டு பிளவினை வளர்க்கிறார்கள். அதனை எதிர்த்த பிள்ளைகளைத் துன்புறுத்தியபோது சிறைவாசம் அனுபவித்த பெற்றோர்கள் என்று பிரான்சில் பலகதைள் இருப்பதாகச் சொல்லுகிறார். நமது கனடாவில் கூட  இதுக்கு ஒன்றும் குறைச்சலே இல்லை.
“மாதிரி யாழ்ப்பாணம்” என்று அடையாளம் இடப்பட்ட கனடாவில் எப்படியிருக்கும் என்பதனை உதாரணங்களுடன் நான் சொல்லத் தேவையில்லை. அழுக்கூறிய சாதியின் சகல சிறகுகளும் ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு மனத்திலும் ஆழப்பரவித்தான் இருக்கிறது.
நீண்ட காலத்தின் பின் தீண்டாமை குறித்து எழுதி வெளியான ஒரு நூல் இது. மிக அதிகமான தகவல்களையும் வலிகளையும் கூறும் நூலாக இருக்கிறது. அனைவராலும் கட்டாயம் கவனத்துக்குட்படுத்தப்பட வேண்டிய நூலாகவும் இருக்கிறது. இந்த நூல் குறித்து நாம் அதிகம் பேசவேண்டும். முதலில் அனைவரும் வாசிக்க வேண்டும். கனடாவில் இதற்கான ஒரு கலந்துரையாடலை யாராவது நிகழ்த்த வேண்டும். அங்கே நாம் இதுகுறித்து இன்னமும் அதிகமாகப் பேசமுடியும் என்று நினைக்கிறேன்.
இறுதியாக, நான் நினைக்கும் இன்னொரு தகவலையும் இந்த இடத்தில் பின் செருகலாகச் சொல்லிவிட வேண்டும்.
 
 
 
 
நான் சிவா சின்னப் பொடி அவர்களை மிக நீண்டகாலமாக அறிந்து வைத்திருக்கிறேன். ஐரோப்பாவில் அவரது செயற்பாடுகள் குறித்து அறிந்த போது அவர்தான் ஈழவிடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் திவாகரன் என்றழைக்கப்பட்டவர் என அறிந்ததும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.அப்போது அவர் பாரிசின் ஈழமுரசு பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். அவர் இருந்த இடம் எமக்குத் தோதான இடமாக  ஒருபொழுதும் இருந்ததில்லை. அது நமக்கு நேரெதிர்ப் புள்ளியில் இருந்தது.
இந்த நூலின் “என்னுரை” யில் அவர் “காக்கை வன்னியன் முதல் கதிர் காமர் வரை என்ற தொடர்களை மிகக் குறுகிய காலத்தில் எழுதிய நான் இந்த நூலை எழுதுவதற்கு 13 வருடங்கள் பிடித்திருக்கிறது” எனக்குறிப்பிடுகிறார்.
அவர் கை பற்றிக் கொண்டிருந்த அரசியல் நிலைப்பாடும் அவர் செயற்பட்டுக் கொண்டிருந்த எழுத்துச் சூழலும் சிந்தித்து எழுத வேண்டியதும் பொறுப்புடன் எழுத வேண்டியதுமானதாக இருந்ததில்லை. எழுதப்பட்டதும் இல்லை என்பது எனது கருத்து. அப்போது பலர் “லலித் முதல் சந்திரிகா வரை”  , “அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை” , “இமயமலை முதல் ஈழம் வரை”“அவர் முதல் இவர் வரை” என்று தமக்குரிய அரசியலுடன்  எழுதிக் கொண்டுதான் இருந்தார்கள். இப்போது “மாவிலாறு முதல் முள்ளிவாய்க்கால்” வரை என்று கதை  எழுதத் தொடங்கவில்லையா? அப்படித்தான்.
இந்த மாதிரியான எழுத்து முறைகளுக்கு  நாம் தகவல் திரட்ட வேண்டிய எந்த அவசியமும் இல்லை. எமக்கு என்ன சொல்ல வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிடலுடன் தெரிகிறது. அதனை வாசிக்கும் கூட்டமும் யார் என்பது கண்முன்னால் தெரிகிறது.அவர்களது அறிவின் அல்லது சிந்தனையின் எல்லை தெரிகிறது. இங்கே யாரும் நேரம் செலவிடத் தேவையில்லை. தகவல் தேடத் தேவையில்லை. ஒரு இரவில் பத்திரிகை அச்சிற்குப் போகமுதல்  எழுதிவிடக் கூடியவை இவை. அவற்றை எழுதுவதால் பணமும் கிடைக்கிறது என்றால் என்ன கவலை இருந்து விடப் போகிறது.
“ காக்கை வன்னியன் முதல் கதிர்காமர் வரை” என்ற தகவலை ஈழமுரசு வாசகர்களுக்கு நீங்கள்  எழுதித்தான் ஆக வேண்டுமா? அத்தனை வாசகர்களும் அந்தக் கதையைத்தானே தினமும் உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைச் சிந்திக்க வைக்க வேண்டிய எழுத்துத் தான் அப்போது தேவைப்பட்டது. அதனை ஈழமுரசுப் பத்திரிகையில் இருந்து நீங்கள் ஒருபொழுதும் எழுதிவிட முடியாது.அப்போது நீங்களும் எழுதும் சிந்தனையில் இருக்கவில்லை. நீங்கள் குறிப்பிட்டுக் கொண்டிருந்த  தமிழத் தேசியம் என்பது அல்லது தமிழர்கள் என்பது அல்லது தமிழினம் என்பது ஒன்று அல்ல அது சாதியாகவும் பிரதேசமாகவும் ஊர்களாகவும் வெறியூட்டப்பட்டுப் பிளவுண்டு  நீண்டகாலமாகக் கிடக்கிறது. அந்தப் பிளவினை  நீங்கள் பேசிக்கொண்டிருந்த தமிழ்த் தேசியம் என்பது கருத்தியல் ரீதியாக ஒருபோதும் உடைத்துவிடவில்லை. புரிதலை உருவாக்கவில்லை.
தீண்டாமைக்கெதிராக “கந்தன் கருணை”  என்ற நாடகத்தை எழுதிய என்.கே. ரகுநாதன் அவர்கள்  அப்போது “துப்பாக்கி நிழலில் சாதி மறைந்து கிடக்கிறது” என்று சொன்னார். நீங்கள் யாருமே அப்போது அதனை விளங்கிக் கொள்ளவில்லை. அதனை யாழ்ப்பாணத்தில் வட்டுக் கோட்டை சங்கரத்தையில் 1998ம் ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்ற சாதிக்கலவரம் மீள விளங்கப்படுத்தியது.ஆனால் நீங்கள் யாருமே அதுகுறித்துப் பேச முனையவில்லை. நீங்கள் பேசிவந்த தமிழ்த் தேசியத்திற்குப் பங்கம் வந்து விடும் என்று நீங்கள் நினைத்திருக்கலாம்.
நமது சமூகத்தில் உள்ளார ஊறிக்கிடக்கும் சாதிய அசிங்கம் குறித்துப் பேசினால் தேசிய விடுதலைப் போராட்டத்திற்குப் பங்கம் விளைந்து விடும் என்று நீங்கள் நினைத்துக் காத்திருந்த மவுனங்கள் எவ்விதத்திலும் பிரியோசனமற்றவை. அவை சாதிவெறியின் அத்துமீறலை இன்னொரு தளத்தில்  நிகழ்த்திக் காட்டியே தீரும். அதற்கான செயற்பாடுகள் எவை என்பது மிக முக்கியமான கேள்வி.
நீங்கள் பேசிக் கொண்டிருந்த தமிழ்த் தேசியத்தை உங்களுடன் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தவர்களே உங்களை சாதிரீதியாக அவமதித்த கதைகள் அனுபவமாக உங்களுக்கிருக்கின்றன. அவற்றை இப்போது நூலில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவற்றை நீங்கள் அப்போதே அம்பலப்படுத்தியிருக்க வேண்டும்.
பெரியார் சொல்வது போல்
நமது மொழி சாதிகாப்பாற்றும் மொழி
நமது காலாசாரம் சாதிகாப்பாற்றும் கலாசாரம்
நமது பண்பாடு சாதி காப்பாற்றும் பண்பாடு.
என்றிருக்கும் போது நமது தேசியம் மட்டும் என்ன
அதுவும் சாதி காப்பாற்றும் தேசியம்தானே.
ஈழம் என்றால் என்ன தமிழீழம் என்றால் என்ன. சாதிரீதியாக இருக்கும் பிரிவுகள் அந்தப் பிரிவுகளுடன் அரங்கேறும் வெறிகளைத் துடையாது நாம் அனைவரும் ஒன்றான இனம் என்று அடையாளப்படுத்துவதை ஒருபொழுதும் ஏற்றுக் கொள்ள முடியாது. உங்கள் நூலை முன்வைத்து நாம் இதனைப் பேசத்தான் வேண்டும் தோழர்.
இத்தனை தகவலை இப்போதாவது எழுதியதற்கு மிக்க நன்றி.
கற்சுறா
நன்றி- தமிழ்ப்பார்வை கனடா( யூன் 2019)

Wednesday 10 April 2019

குறிப்பு:தோழர் சண் அவர்களது 6ம் ஆண்டின் நினைவுப் பகிர்தல்.


தோழர் சண் அவர்களது 6ம் ஆண்டின் நினைவுப் பகிர்தல்.

 

“நினைவு கொள்ளலும் சண் தாண்டிச் சென்ற தடயங்களைப் புரிந்து கொள்ளலும்”

என்றவாறாக சண் குறித்துப் பேசுவதற்கு 7ஏப்ரல் 2019இல் நாம் கூடியிருந்தோம்.

நிகழ்வின் பேச்சாளர்களாக தோழர் இரா. சீவரத்தினம், தோழர். பாக்கியநாதன் முருகேசு, தோழி உசா(சறோஜினி பொன்னம்பலம்), தோழர் நேசன், பாதர் சேவியர்  ஆகியோர் பங்கு கொண்டார்கள். நிகழ்வின் ஆரம்ப உரையை நான் நிகழ்த்தினேன். எனது உரையை இக்குறிப்பின் இறுதியில் பதிவிடுகிறேன்.

நிகழ்வில் பேசிய மற்றயவர்களது உரையிலும் மிக முக்கியமானது என நான் கருதுபவற்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்கிறேன். அனைவரது உரைகளும் வீடியோ வடிவில் விரைவில் பதிவேற்றப்படும். அதில் உரைகளை முழுமையாக நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
 

முதலில் பேசிய சீவரத்தினம் அவர்கள் சண்குறித்து தனக்குத் தெரிந்த கதைகளையும் கேட்ட கதைகளையும் விபரித்தார். தோழர் சண் அவர்கள் சிறிய வயதில் தான் கல்விகற்ற  பாடசாலையான விக்கினேஸ்வராக்  கல்லூரியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களை வாங்கில்களில் இருந்து கல்வி பயிலக் கூடாது என இருந்த அக்கிரமத்தை எதிர்த்து “ அப்படியெனில் யாருமே வாங்குகளில் இருக்கக் கூடாது” என அனைத்து வாங்கில்களையும் உடைத்தவர் என்ற தகவலைக் குறிப்பிட்டுச் சொன்னார்.

அடுத்துப் பேசிய பாக்கியநாதன் அவர்கள் காந்தியத்தில் சந்ததியாரின் தொடர்பில் இணைந்த சண் அவர்கள் காந்தியத்தின் கொள்கைகளின் ஈர்ப்பில் இணைந்து கொண்டவர் என்றும் காந்தியத்தின் செயற்பாடுகளில் மிகுந்த சிரத்தையுடன் செயற்பட்டவர் என்றும் கூறி காந்தியம் என்பதும் அதில் சந்ததியார் டேவிட் ஐயா, டாக்டர் ராஜசுந்தரம் போன்றவர்கள் குறித்தும் விபரமாகப் பேசினார்.

அடுத்துப் பேசிய  தோழர் சண் அவர்களின்  சகோதரியான உசா அக்கா அவர்கள்  பேசிய போது தானும் தோழர் சண் அவர்களும்  இவ்வாறு இருப்பதற்கு தமது பெற்றோரின் முன்னுதாரணம் என்பதைச் சொல்லி தனது வாழ்வில் எவ்வளவு எளிமையாக வாழ முடியுமோ அவ்வளவு எளிதாக வாழ்ந்தவர்   அவர். என்பதற்குப் பல உதாரணங்களைச் சொன்னார்.  ஈழவிடுதலை அரசியலில் தோழர் உமாமகேஸ்வரனுடன் உரையாடிவிட்டு அவரிடம் அரசியல் தெளிவு இல்லை என்பதை உடனடியாகவே தனக்குச் சொன்னவர் என்றார்.

அடுத்ததாகப் பேசியவர் பாதர் சேவியர். தனது 91 வயதிலும்      இந்த நிகழ்விற்கு வருகை தந்தது அனைவருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அவர் பேசியவை மறதிகளுடன் கூடியவை என்பதனை பலர் தெரிவித்தார்கள். 
 

இறுதியாக நேசனது உரை. கடந்த 38 வருடங்களுக்கு முன்னமே தனக்கு சண் அவர்களைத் தெரிந்திருந்தது. அவர் தன்னலம் அற்றவர். அதற்கு உதாரணமாக  ஈழ அரசியலில் ஈடுபட்ட காரணத்தால் சிறை சென்ற சண் சிறையிலிருந்து வந்த பின் தனது வங்கிக் கணக்கில்   இருந்த ஒரு தொகைப்  பணத்தினை எடுத்து ஒரு பகுதியை ஈழவிடுதலைப் போராட்ட அமைப்பிற்கும் மற்றய இன்னொரு பகுதியை காந்தியத்தில் இருந்து செயற்பட்டு அதன் பின் மிக வறுமையில் சாப்பாட்டுக்கும் வழியற்று இருந்த மாணிக்கம்  என்றொருவருக்குக் கொடுத்துவிட்டு வெறுங்கையுடன் இந்தியா சென்றவர் தோழர் சண் என்பதனைக் குறிப்பிட்டுச் சொன்னார்.

அதனைத் தொடர்ந்து சபையிலிருந்தவர்கள் தமது கருத்தினைத் தெரிவித்தார்கள்.  டேவிற்சன், மித்திரன், மகேஸ்வரராஜா, தவபாலன், ஜயகரன், ஜோர்ஜ் குருசேவ், திலீபன், குமரன் லோகன், மதி ஆகியோர் தமக்குத் தெரிந்த சண் குறித்துக் கருத்தினைப் பதிவு செய்தார்கள்.  அதில் திலீபன் அவர்களால் சிறு குழப்பம் ஏற்பட்டு  குமரன் லோகனின் கருத்துப்பகிர்வு இடையில் நின்றது. நிகழ்வின் ஏற்பாட்டாளர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் அந்தச் சங்கடத்திற்காக குமரன் அவர்களிடம் நான் அனைவர் சார்பாகவும் மன்னிப்புக் கோருகிறேன்.
 

இந்த நிகழ்வினை நடத்துவதற்கு மண்டப உதவி வழங்கிய ஹீரோ கேற்றிங் குமார் அண்ணைக்கும் நிகழ்வினை வீடியோப் பதிவு செய்து தந்த குமார் அவர்களுக்கும் பகைப்படம் எடுத்துத் தந்த குணசீலன் அவர்களுக்கும் நிகழ்வினை Live இல் உடனடியாகவே வெளியிட்டுக் கொண்டிருந்த கிருபா கந்தையா அவர்களுக்கும் மிக்க நன்றிகள்.
 
 

6வருடத்தின் பின் தோழர் சண் அவர்களது மறைவிற்குப் பின் நிகழ்த்தப்பட்ட ஒரு நினைவு பகிர்வு நிகழ்வு இது. நாம் அதிகமாக முரண்படுவதற்கும் அதனை எதிர் கொள்வதற்கும் உள்ளும் புறமும் இருக்கும் தர்க்க நியாய அநியாயங்கள் குறித்துப் பேசுவதற்கும் நம்மிடம் அதிக விடயங்கள் இருப்பதாகவே எண்ணியிருக்கும் நிலையில் இப்படியொரு குழப்பம் நடந்திருக்கக் கூடாதது. ஆனாலும் ரொரண்டோ சூழலில்  வாழ்த்துக்களையும் புகழுரைகளையும் மட்டுமே பார்த்தும் கேட்டும் வந்த கண்ணும் காதும் நீண்ட காலத்தின் பின் ஒரு முரணை உணர்ந்தது. அந்த முரண் ஆரோக்கியமாக விவாதிக்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்.

 

கீழே இனி வருவது எனது ஆரம்ப உரை.


சண்முகலிங்கம் அவர்களது 6ம் ஆண்டு நினைவினை நிறுத்திப் பேசுவதற்கு நாம் கூடியிருக்கிறோம்.  இன்று தான் நமது இன்னொரு தோழர் சண் என அழைக்கப்படும் சண்முகநாதன்  சின்னத்தம்பிஅவர்கள் மறைந்த நாள். தோழர் சண்முநாதன் குறித்துப் பேசுவதற்கும் நமக்கு அதிக விடையங்கள் இருக்கின்றன. பல்வேறு தளங்களில் அவருடன் சேர்ந்து வேலை செய்த பலர் இங்கிருக்கிறார்கள்.அவர்களும் அதனைக் கருத்தில் எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

சண்முகலிங்கம்  அவர்கள் மறைந்து ஆறு வருடங்கள். நான் ஏற்கனவே சொன்னது போல இந்த சமூகம் கைவிடப்பட முடியாத பலரைக் கைவிட்டே வந்திருக்கிறது. நமது தமிழ் இலக்கிய அரசியற்ச் சூழலில் சண் அண்ணாவினது  பங்கு – செயற்பாடு அது ஈழத்தில் என்றாலும் சரி கனடாவில் என்றாலும் சரி தகுந்த முறையில் கவனம் கொண்டு பதியப்படவில்லை என்ற ஒரு கவலை நம்மில் பலருக்கு இருந்து கொண்டே இருந்தது. தொடர்ச்சியாக நண்பர்களிடத்தில் அதுகுறித்துப் பேசிவந்த பின் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வே இது.

 “தோழர் சண்”

ஆம் இப்போது தோழர் சண் என்றே அழைக்கத் தொடங்குகிறேன். அவர் நம்மில் அனைவருக்கும் தோழனாகவும் இருந்தார். நம் பலரது இடர்களில் ஒரு தந்தையாக இருந்திருக்கிறார். நான் அனுபவித்தது போல் அந்த தந்தைக்குரிய தார்ப்பரியத்தை இங்குள்ள பலர் அவரிடமிருந்து அனுபவித்திருக்கக் கூடும்.

ஆனாலும் அவரை நாம் எல்லோரும் சண் அண்ணா என்றே அன்போடு அழைத்திருக்கிறோம். அவர்  எல்லோருக்கும் எப்போதும் உவப்பானவராக இருந்திருக்கவில்லை. அவர் வழமையாகப் பேசும் ஒருவித கரடுமுரடான உரையாடல் மொழிப்பாவனை அவரைப் பலரிடம் இருந்து விலக்கி வைத்திருக்கிறது.

இறுதிக்காலத்தில் அவருடைய ஈழ அரசியல் நிலைப்பாடும் அவருடன் நெருங்கியிருந்த பல நண்பர்களதும் அரசியற் செயற்பாட்டாளர்களதும் நிலைப்பாடும் வேறு வேறானது என்பதுவும் அவருடன் சேர்ந்து பழகிய பல நண்பர்களை அவரிடம் இருந்து விலக வைத்ததாகவே  நான் எண்ணுகிறேன்.

இதில் உங்களில் பலருக்கு வேறு கருத்து இருக்கக் கூடும்.

ஒருவர் இறந்து போனவுடன் கடவுளாக்குவதும் மெல்ல மெல்ல மகாத்மாவாக்குவதும் பொதுவக நடைபெறுகின்ற செயல் எனினும்  நமது இலக்கிய  அரசியற் சூழலிலும் இப்போது அது இயல்பாக வந்துவிடுகிற செயற்பாடாகிவிட்டது. ஈழத்தில் யுத்தத்தில் இறந்து போனவுடன் லெப்பினன்ட் அல்லது கப்டன் பதவிகள் வழங்குவது  போலான ஒரு நடைமுறையாக இலக்கியச் சூழலிலிலும் வந்து விட்டது என்பது கொஞ்சம் அருவருப்பானதுதான்.

இங்கே  அப்படியில்லாது சண்குறித்த நமது அனுபவங்களையும் நினைவுகளையும் மீட்டிப் பேசுவதற்கே நாம் கூடியிருக்கிறோம். தோழர் சண்ணோடு எங்கே உடன்பட்டோம் எங்கே முரண்பட்டோம் எங்கே சந்தோசமாக இருந்தோம் எங்கே சண்டை பிடித்தோம். எப்படி வேலை செய்தோம். உண்மையில் சண் அண்ணா என்ற அடையாளம் எது என்று நாங்கள் பேசுவோம்.

ஈழத்தில் தோழர் சண் அவர்களது செயற்பாடுகளையும் அவருடனான அனுபவங்களையும் குறிப்பிட்டுச் சொல்வதற்கும் கனடாவில் அவரது செயற்பாடுகளைப் பற்றிச் சொல்வதற்கும் எல்லோருக்கும் பல நினைவுகள் இருக்கும். அது உடன்பாடானதாக இருந்தாலும் முரண்பாடானதாக இருந்தாலும் அவற்றை நீங்கள் பேச வேண்டும்.

அதற்கு முதல்

இங்கே சண் குறித்து அனுபவங்களைப் பேசுவதற்கு  இருப்பவர்களை அறியத் தருகிறேன். முதலாவது தோழர் சீரட்ணம் அண்ணா. இரண்டாவது பாதர் சேவியர். அடுத்து தோழி  உசா அக்கா. தோழர் பாக்கியநாதன் முருகேசு தோழர் நேசன்.

 

ஒருகாலகட்டத்தில் சமூக அசைவியக்கத்திற்காக தீவிரமாகத் தனது வாழ்நாளைத் தொலைத்த ஒருவர், கனடாவிற்குப் புலம் பெயர்ந்த பின்னாலும் அனைத்து வித இலக்கிய அரசியல் நாடகச் செயல் முறைகளுக்கும் தன்னால் முடிந்தளவு தொண்டாற்றிய ஒருவரை அவருடைய மரணத்தின் பின் நாம் கவனத்தில் கொள்ளாது கருத்திற்கும் எடுக்காது கடந்து  செல்லும் ஒரு தன்மை ஆரோக்கியமானதல்ல எனக் கருதுகிறேன்.

இது குறித்து பல நண்பர்களுடன் நீண்ட காலமாகப் பேசியிருக்கிறேன். ரொரண்டோ தமிழ்ச் சூழலில் அவரது அன்றாடச் செயற்பாடுகளை நான் கவனித்து வந்திருக்கிறேன். அவருக்கு ஈழ அரசியலில் இருந்த அனுபவங்கள் அவர் சேர்ந்தியங்கிய அமைப்புக்கள்  அந்த அமைப்புக்கள் குறித்திருந்த விமர்சனங்கள் அனைத்தையும் எந்த சமரசமும் இன்றி  எந்த மறைப்புக்களும் இன்றி நேர்படப் பேசிவிடக் கூடியவர். எப்பொழுதும்  தமது முன்னேற்றங்களையும் தமது வருமானங்களையும் தமது இருப்புக்களையும் கருத்தில் கொண்டு நடமாடுபவர்களால் ஒருபோதும் அருகில் செல்லமுடியாதவர்களில் அவரும் ஒருவர் என்பது எனது அபிப்பிராயம்.

அவரது  இறந்த உடலை வைத்துக் கூட யாரும்  தமது வியாபாரம் பண்ணமுடியாதபடித்தான் அவரது வாழ்வு இருந்தது.

சண் அண்ணாவை நான் கண்ட நாளிலிருந்து  நீங்கள் உங்கள் வாழ்வைப் பதிவு செய்யுங்கள் என கேட்டு ஒரு மணிநேரம் வீடியோப் பதிவு பண்ணியிருக்கிறேன். எனது ஒழுங்கீனத்தின் காரணமாக அது உடனடியாக கையில் கிடைத்துக் கொள்ளவில்லை. கிடைத்தால் அது ஒரு முக்கிய பதிவாக இருக்கும்.

அவரை எழுதுங்கள் எனக் கேட்டு எனது மற்றது சிற்றிதழில் நான் ஒரு கட்டுரை எழுதவைத்துப் பிரசுரித்திருக்கிறேன். அவர் எழுத்தாற்றல் என்று நாம் சொல்லுகின்ற ஒரு அசைவில் எழுதக் கூடியவரல்ல. அந்தக் கட்டுரையின் பின்னால் அவர் தொடர்ந்து அதிகம் எழுதினார். அவர் எழுதியவைகள் என்னிடம் இருக்கின்றன. உண்மையில் அவருடன் இருந்து அவை திருத்தப்பட்டிருக்க வேண்டும். அவருக்கு பெரிய அளவில் தட்டச்சுச் செய்யத் தெரியாது. அதனால் மிக அதிகமான எழுத்து வசனப் பிழைகளுடன் அவை இருக்கின்றன. ஆனால் அதில் பலவகைப்பட்ட தகவல்கள் அதிகமாக இருக்கின்றன.

தான் வாழ்ந்து கடந்த பாதைகளை தன் நுனிநாவில் வைத்திருக்கும் திறமை கொண்டவர். சாதாரணமாக ஈழத்தின் அத்தனை தெருக்களிலும் நடந்து திரிந்தலைந்த வாழ்வைக் கொண்டதை அவரது ஒவ்வொரு உரையாடலிலும் எல்லோரும் அறிந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு ஊரிலும் வாழ்ந்தவர்களில்  ஒரு பத்துப் பேரையாவது அவரால் பெயர் சொல்ல முடிந்திருக்கும் அனுபவம் பெற்றவர். ஒவ்வொரு ஊரினது அடையாளங்களையும் வாழ்வு முறையையும் அவரால் வியாக்கியானம் பண்ணமுடிந்திருக்கும் அனுபவம் மிக முக்கியமானது.

தனது இளவயதில் மலையக மக்களுடன் சிங்கள மக்களுடன் எல்லாம் வேலை செய்த அனுபவம் அவருக்கு இருக்கிறது. அது குறித்து இங்கு பேச இருப்பவர்கள் பேசுவார்கள்.

கனடாவில் சிங்கள தமிழ் உறவு ஒன்றை நல்லமுறையில் உருவாக்க வேண்டும் என முன்நின்று உழைத்தவர்களில் அவர் ஒருவர். கனடிய இலக்கிய முயற்சிகளிலும் சரி நாடக மற்றும் அரசியற் செயற்பாடுகளிலும் அவரது பங்கு மிக அதிகமாக இருந்த சந்தர்ப்பங்களை இங்கு வந்திருப்பவர்கள் தெரிவிப்பார்கள் என்றே எண்ணுகிறேன்.

 

குறிப்பிட்டவர்களது உரை முடிந்த பின்னால் கலந்துரையாடல் இடம்பெறும் அதில்  உங்களுக்கு இருக்கும் கருத்துக்களை நீங்கள் பேசலாம்.

பேச்சாளர்கள் தமக்குரிய நேரமாக  அதிகமாகப் பத்து நிமிடமே எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். கலந்துரையாடலில் பேசுபவர்கள்  மிகச்சுருக்கமாக தெளிவுறப் பேசுவதன் மூலம் நேர விரையத்தையும் புரிந்து கொள்ளலின் வீரியத்தையும் முன்நிறுத்த முடியும். அவற்றைக் கருத்தில் கொண்டு நிகழ்வின் முதல் உரையைக் கேட்கத் தொடங்குவோம்.

நன்றி.

 

 

Thursday 28 March 2019

அதற்கு வேறு பெயர் கொண்டு அழையுங்கள்...


2 இரண்டு:

கற்சுறா
 


 

கடந்த இரண்டு மாதங்களாக ஜெயமோகன் அவர்களின் ஒரு வீடியோ உரையிலிருந்து ஈழத்துக் கவிதைகள் ஈழ இலக்கிய வழித்தடங்கள் குறித்த பதிவுகளுக்காக அதிகம் கோபப்பட்டு எதிர்ப்பினைத் தொடர்ந்து தெரிவித்தபடி இருக்கிறோம். அந்த வகையில் நமது கருத்துக்கள் மற்றும் அவை குறித்து வந்த மறுவினைகள் பற்றி தொடர்ந்து உரையாடியபடி இருக்கிறோம். அப்படியான தொடரில் இடையில் எழுதப்படும் ஒரு குறிப்பே இது. இதனை நீங்கள் ஜெயமோகன் அவர்களுக்காக கோடு ஏறி நிற்கும் கருணாகரனுக்கும் அனோஜன் பாலகிருஸ்ணனுக்குமான ஒரு பதில் என நினைத்தாலும் பரவாயில்லை.

 

பல்லவி


நமக்கு மத்தியில் தற்போது தோன்றியிருக்கும் குட்டி ஜெயமோகன்கள் தமது பிதா உதிர்த்த வார்த்தைகளுக்கான ஞானம் தேடி நாலாறுபுறமும் அலைந்தபடி இருக்கிறார்கள். அவர்களும் அதற்காக தமது பிதா உதிர்த்த வார்த்தைகளையே  தொடர்ந்தும் உதிர்த்துக் கொண்டு திரிகிறார்கள். நமக்கோ அவை அயர்ச்சி ஏற்படுத்துகின்றன. ஒரு சங்கிலித் தொடர் போல பிதாவின் கைபிடித்து அவுஸ்ரேலியா பாரீஸ் லண்டன் கனடா என்று குட்டி மோகன்கள் சூழ்ந்து வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். மவுனமாகவும் பெரிய அலப்பறையாகவும் கேட்கும் அந்தத் தொடர் இரைச்சல் எங்களைத் தொந்தரவு பண்ணியபடிதான்  இருக்கிறது. அந்தத் தொந்தரவில் இருந்து  விடுபட நாமும் மறுத்தான் எழுதித்தான் ஆக வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருக்கிறோம்.

 

 

அனுபல்லவி


குட்டி மோகன்களது இறுதிவாதமாக  ஈழ இலக்கியத்தின் அழகியல் – அரசியல் பார்வையை முன் கொண்டு வந்தாலும் தமது பிதாவைப் போல் எழுதத் தெரியாதவர்கள். ஆகக் குறைந்தது வருடத்திற்கு ஒரு கதை கூட எழுத முடியாதவர்கள். தமது பிதாவைப் போல் பட்டியல் போட முடியாதவர்கள். தமது எழுத்தாளர்களில் தரமானவர்களை அடையாளம் காணத் தெரியாதவர்கள். தமது பிதா அடையாளம் இட்ட பின்புதான் அவர்கள் கொண்டு திரிகிறார்கள் என்றவாறான வார்த்தைகளையே முன்வைக்கும் ஒருபுறம், தவறைச் சுட்டிக்காட்ட பண்பான எழுத்து வேண்டும். தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் காலாகாலமாக உறவிருக்கிறது. ஈழத்திலிருந்து போன அனைத்து வகையினரையும் தக்கபடி மதித்து வரவேற்றார்கள் அவர்கள். அவர்களை மானங்கெடப் பேசக்கூடாது என்பதாக இன்னொருபுறம் கட்டளையிடுகிறார்கள். அது குறித்து நாம் ஏற்கனவே எழுதிவிட்டதாயினும்  திரும்பவும் ஒருமுறை சரணம் பாடிச் சொல்ல வேண்டியேயுள்ளது.

 

சரணம்


இது குறித்து எழுதும் போது எனது வாழ்வு முறைக் காலங்களில் இருந்தே எழுதுகிறேன்.  ஈழம் என்பது தேசமல்ல. அது கதைகளால் கட்டப்ட்டது எனச் சொல்லிவருகிறேன். அது கடந்த நாற்பது வருடங்களாக ஒரு பின்னிய யுத்தத்திற்குள் கிடந்தது.  வாழ்வியலை எழுதுதல் என்பது ஈழத்தில் யுத்தத்தை எழுதுதலாகவே இருந்தது.  யுத்தத்தைப் போராட்டம் என்று நம்பியிருந்த காலங்களில் எழுந்த இலக்கியப் பிரதிகளில் ஆயுதங்களும் ஆயுதத்தின் நுனியில் பூக்களும் பூத்திருந்ததை நான் வாசித்திருக்கிறேன். அப்போது தோன்றிய பிரதிகள் அதிகமாகப் பல்கலைக் கழகத்திலிருந்து தோன்றியிருந்தன. அவையே அந்தக்காலத்தின் இலக்கியப் பிரதிகளது அந்தஸ்தைப் பெற்றன. இன்னொருபக்கம் சாதிய அடக்குமுறைக்குள் இருந்து வெளித் தோன்றிய பிரதிகள் போராட்டத்தில் தோன்றி முன்துருத்தி நின்ற ஆயுதத்திற்குள் மெல்ல மறைக்கப்பட்டன. இலக்கியச் சூழல் என்பதும் போருக்குள்தான் இருந்தது.

அந்தப் போருக்குள் இருந்தும்  பலர் எழுதத் தொடங்கினார்கள்.  “ எனது ஜப்பானியத் தோழி ஆரி மக்ஸமோட்டோவை அணைத்து முத்தமிட்டுக் கொண்டிருந்தபோதுதான் யாழ்ப்பாணத்தில் முதன்முறையாகக் குண்டு வெடித்தது.” என்று வ.ஐ. ச. ஜெயபாலன் எழுதியிருந்த வார்த்தைகளைக் கடந்துதான் போரின் காலத்தை நீங்கள் அறிய முடியும். அதற்குள் இருந்துதான் செல்வி, சிவரமணி, போன்றவர்கள் எழுதத் தொடங்குகிறார்கள். இங்கே செல்விக்கும் சிவரமணிக்குமே எழுத்தின் தார்ப்பரியத்தில் வேறுபாடு உண்டு. செல்வி நாடகத்துறையைத் தன்னுடைய வாழ்வாக்குகிறார். சிவரமணி கவிதையில் வாழ்கிறார். ஆனால் எழுதிய கவிதை ஒன்றுக்காக புலிகளால் கடத்தப்பட்டுக் கொல்லப்படுகிறார் செல்வி. தன்னுடைய கவிதைகளைக் கொழுத்திவிட்டு தானும் கொழுத்தி மரணித்துப்  போகிறார் சிவரமணி. இந்தக் கதைக்குள்ளாக  நுழைந்துதான் நீங்கள் அந்தக் காலத்தின் கவிதைகளை விளங்கிக் கொள்ளமுடியும். கவிதைகளின் அரசியலை விளங்கிக் கொள்ள முடியும்.

ஏறத்தாழ 20 வருடங்களின் முன்பு இளவாலை விஜேந்திரனது  “நிறமற்றுப்போன கனவுகள்” கவிதைத் தொகுப்பினை விமர்சித்து நான் பேசிய போது. இளவாலை விஜேந்திரனை ஒரு கவிஞராக என்னால் அடையாளப்படுத்தமுடியாது எனவும் அவருடைய கவிதைகள் சேரனுடைய கவிதைகளைப்  போல் எழுதப்பட்டவை. சேரனது கவிதைகளைப் போலப் பார்த்து  எழுதப்பட்ட மாதிரியானது. ஒரு போலிக் கவிதை என்று குறிப்பிட்டேன்.

ஈழத்துச் சூழலில் கவிதை எழுதுவதும் கவிதைத் தொகுதிகள் வெளிவருவதும் மிக வேகமாக நடந்து வரும் செயற்பாடாக போய்விட்டது என்றும் இங்கே கவிதை எழுதுவது என்பது மிக இலகுவான முயற்சியாக இனங்காணப்பட்டுள்ளது. ஏனெனில் எல்லோரும் தமக்கு பிடித்தமான தமக்கு முன்னிருக்கிறவர்களைப் பார்த்து எழுதிவிடும் நிலைதான் அதற்குக் காரணம் என்று சொல்லியிருந்தேன். அந்தத் தொகுப்பில் இருக்கிற 55 கவிதைகளில் தேசத்தை இழந்து விட்டு, இருக்கிற இடத்தையும் ஏற்றுக் கொள்ளாது தத்தளிக்கிற கவிதைகளாகவே அநேகமானவை இருக்கின்றன. இத்தன்மை ஒரு எல்லைக்கு அப்புறம் வாசிப்பில் அலுப்பை உண்டு பண்ணுகிறது. என்று சொல்லியிருந்தேன்.. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன் எழுதிய கட்டுரை என்ற படியால் இன்று எடுத்து அந்த உரையைப் பார்க்க எனக்கே அலுப்பை உண்டு பண்ணுகிறது. ஆனாலும் உங்கள் பிதா  இன்று வந்து புதிதாகச் சொல்வது போல் அல்ல அது. நாம் எமக்குள்ளேயே நிரகரிப்புக்களையும் உடன்பாடுகளையும் உருவாக்கியிருக்கிறோம். உங்கள் பிதா சொல்வது போலான அரசியல் கூச்சல்கள் என்பவற்றை நாங்களே ஒருபோதும் அருகில் வைத்து வாழ்ந்ததில்லை. அவற்றைத் தேடித் தேடி தமிழகத்தில் பலர் பதிப்பித்தபோதும் அந்தப் பதிப்புக்களையும் நாம் நிராகரித்து நகைத்திருக்கிறோம்.

இளவாலை விஜேந்திரனைப் போல்தான் கனடாவில் வாழ்ந்த திருமாவளவன் அவர்களையும்  ஒரு கவிஞராக என்னால் அடையாளப்படுத்த முடிவதில்லை. பல நிகழ்வுகளில் இதனைத் தெரிவித்திருக்கிறேன். அவர் கட்டுக்கட்டாக எழுதி மூன்று தொகுப்புக்களை வெளியிட்டபோதும் அவை பிரியோசனமற்றவை. காலத்தால் நிலைக்காதவை எனச் சொல்லியிருக்கிறேன். திருமாவளவன் அவர்களுக்கும் நேரடியாக அதனைச் சொல்லியுள்ளேன். திருமாவளவன் தொடர்ந்து பனியையும் தனது வேலைத் தளத்தையும் விட்டுப் பிரிந்திருக்கிற வீட்டையும் பற்றி எழுதிக் கொண்டிருந்தார். புலம்பெயர் கவிதை என்று தமிழ்நாட்டுக்காரர் தன்னைக் கொண்டாட எதை எழுத வேண்டுமோ அதனை எழுதிக் கொண்டிருந்தவர் அவர். திருமாவளவனைப் போல் பலர் எழுதினார்கள். இன்றையசூழலில் எழுதப்படும் கவிதைகளில் எழுதியவரது பெயரை நீக்கிவிட்டால் யார் எழுதியது எனச் சொல்ல முடியாது போய்விடும் சூழல்தானே இருக்கிறது எனச் சொல்லியுள்ளேன். ஆனால் திருமாவளவனோ  அந்த எழுத்து முறையையும் தாண்டி  கவிஞர் சேரனைப் போல் குறுந்தாடி வைத்து கன்னத்தில் கைவைத்து புகைப்படம் எடுத்து பிரசுரித்த ஒரு இலக்கியப்  போலி என்று கிடைத்த இடமெல்லாம் எள்ளி நகையாடியிருக்கிறேன்.

இன்று அவர் மரணித்துவிட்டார். மரணத்தின் பின் ஒருவரைக் கடவுளாக்குவதுமாதிரியான சனாதன வேலையை நான் செய்ய மாட்டேன். அவர் உயிருடன் இருக்கும் போது எவ்வாறான கருத்தை முன்வைத்தேனோ அதனைத்தான் இப்போதும் முன்வைக்கிறேன். அவர் நிகழ்த்தியிருந்த ஒரு கவிதா நிகழ்வினை ஒரே மாதிரியான ஆடை அணிந்து ஒரே மாதிரியான முக பாவனையுடன் ஒரேமாதிரியான ஒலி நயத்துடன் கவிதா நிகழ்வை நிகழ்த்தியிருந்தார்கள். அது சரவணபவான் ஹோட்டல் தொழிலாளர்கள் போல் இருப்பதனை எனக்கு ஞாபகப்படுத்துகிறது என எழுதியிருந்தேன்.  அப்படித்தான் நமது தமிழ்க் கவிதைச் சூழலின் நிகழ்வுகள் பொதுவாக அரங்கேறுகின்றன.

 கவிதையின் வரிகளை இரண்டுதடவை வாசிக்கும் நிலையினை யார்தான் வாசித்துக் காட்டினார்களோ தெரியாது . ஏதாவது சில வார்த்தைகளை  ஒருவித ஒலி நயத்துடன் வாசித்து விடுவதால் அது கவிதை என  நம்பிவிடும் சூழல் ஈழத்தில் மட்டுமல்ல தமிழ் நாட்டிலும் அதிகமாக இருக்கிறது. அதிலும் அந்த வார்த்தைகளை  இழுத்து இழுத்து இரண்டு தடவை வாசிப்பதால்  தானோ என்னவோ அந்த ஓசையை தூரத்தில் இருந்து வருகின்ற ஒரு இராணுவ வண்டியின் தொடர் இரைச்சலை ஒத்திருக்கிறது என நான் பதிவு செய்திருக்கிறேன்.  இந்த வகை நோய் ஈழத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் முற்றிவிட்டுள்ள நோய்தான். இதற்கு மருந்தற்றுத்தான் போய்விட்டது.

அடுத்து “மிஞ்சும் ஒரு கவிதை” என்று பசுவய்யா எனும் சுந்தரராமசாமி அவர்கள் தனது  “107 கவிதைகள்” என்ற தொகுப்பின் பின் அட்டையில் ஒரு கவிதை செய்து காட்டியிருப்பார். கண்மூடித்தனமாகப் பசுவய்யா என வாயைப் பிளந்து திரிபவர்களுக்கு அது ஒரு பொருட்டாகவே இருக்காது. ஆனால் கவிதைத் தேடல் உள்ளவனுக்கு உடனடியாக அந்த  “மந்திர” வித்தை புரிந்து கொண்டு விடும்.  கவிஞன் (தான்)என்பவன் ஒரு புதிர் என்பதாக போலியாக கவிதை ஒன்றைச் செய்து காட்டியிருந்தார். அது ஒரு முட்டாள்தனமான  விளங்கப்படுத்தல்.  அதிலும் அந்தப்   பசுவய்யா அவர்கள்  தொகுப்பின் முன்னுரையாக எழுதிய உரையினை வாசிக்கும் ஒருவர் அதில் கவிதைக்கு செய்யப்பட்ட பட்டுக் குஞ்சம் குறித்து கோபப்படாமல் இருக்கமுடியாது. தனது கவிதைகளுக்கு எப்படி குறிகளை அகற்றினேன். ஆச்சரியக்குறியை மட்டும் அகற்றமுடியாது போனது என்றபடி அந்த உரை போகும். இந்தமாதிரியான கவிதைப் பித்தலாட்டங்கள் குறித்து 20வருடங்களுக்கு முன்பே  எழுதியவர்கள் நாங்கள்.( பார்க்க :எக்ஸில்- 7, May 1999)
 
 
 

 
 
இன்னொன்று, 2004 இல் “மற்றது” இதழின் தலையங்கத்தில்

“வன்முறை அரசியலைக் காவி நிற்கிறது ஈழத்து இலக்கியம்.

இந்தியப் பார்ப்பனீய அரசியலுடன் மெல்ல மெல்லக் கைகோர்க்கிறது புலம்பெயர் இலக்கியம்.

எழுதப்படும் வரலாறுகளோ எழுதப்படுவோரது வாரலாறுகளாக மட்டும் நிரப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது.

வார்த்தைகள் எங்கிலும் மிக நுணுக்கமாய்ப் புதைந்து கிடக்கிறது யாழ்ப்பாண மையவாதம்.

அதன் தொடரோட்டமாய் புகலிடத்திலும் கொண்டோடப்படுகிறது சமயமும் சாதியமும்.

என்று எழுதியிருந்தோம்.

இவை எல்லாம் நான் சார்ந்து இயங்கிய செயற்பாடுகளின் தரவுகள். இதைத் தாண்டி ஈழத்திலிருந்தும் மற்றய புலம்பெயர் சூழலில் இருந்தும் எழுதப்பட்ட குரல்களை நாம் திரட்டி எடுத்தால் இன்னும் எத்தனை மடங்கு வரும்.

இப்படி ஈழத்திலிருந்து அல்லது புலம்பெயர் சூழலிலிருந்து எழுதப்பட்ட எதையும்  வாசிக்காது. ஈழம் பற்றிய தேடல் இல்லாது, தன்னைத் தொழுது இருப்பவர்கள் யாரைத் தனக்கு ஜாடை காட்டுகிறார்களோ அதை மட்டும் வாசித்து அவர்களை மட்டுமே தரமானது என அடையாளப்படுத்துவதற்கு எதற்கு  உங்கள் பிதா? அதனை நீங்களே செய்யலாமே.

உதாரணமாக நீங்களே  விதந்தோதுகிற உங்கள் பிதாவால் எழுதப்பட்ட “மறுபக்கத்தின் குரல்” என்ற கட்டுரை காலம் இதழில் பிரசுரமாகியிருந்தது. அதில்

“அனார், ஆழியாள், பஹீமா ஜகான் ஆகியோரை ஈழக்கவிதையின் முக்கியமான குரல்களாக  நான் அடையாளம் காண்கிறேன் என்கிறார்.  இச்சொற்களின் கவித்துவம் அளிக்கும் புத்துணர்ச்சியும் ஒளிவிடும் துயரமும் கவிதை என்ற வடிவத்தின் சாத்தியங்களை என்னுள் மீண்டும் புதிப்பித்தன” என்கிறார். இந்த மூன்று பெண் கவிஞர்களின் பொதுக் கூறுகளாக போரையும் இடம் பெயர்தலையும் கூறுகிறார்.

அந்தக் கூறு கெட்ட உங்கள் பிதாவிற்கு நீங்கள் சொல்ல வேண்டியது  கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக போரும் இடம் பெயர்தலும் தான் ஈழத்தின் அதிக கவிதைகளில் அதுவும் ஆண்கவிஞர்கள் பெண் கவிஞர்கள் என்ற பேதமின்றி இடம் பிடித்தன. ஆனாலும் போருக்குள் பேசிய கதைகளும் இடம்பெயர்தலுக்குள் மாறிய கதைகளும் சிலரை வேறு திசையில் கொண்டு போய் வைத்தது. பலரை ஒரு திசையில் தள்ளியது.

அரசியல் கூச்சல்கள் ஒலிக்கும் ஈழத்தின் திண்ணைகளுக்கப்பாலிருந்து மவுனம் கனத்த விம்மல்கள் போல வீணையதிர்வுகள் போல அனாரினதும் ஆழியாழினதும் பஹீமாஜகானினதும்  கவிதைகளைக் குறிப்பிடுகிறார். பாருங்கள், கவிதைகளை அடையாளப்படுத்தும் திறனாய்வை. இது உங்கள் பிதவாவுக்குத் தேவையான ஆய்வா? இதனை ஒரு கட்டுரையாக ஒரு ஆய்வாக நீங்கள் கொண்டு அலையலாமா? நீங்கள் அதனை எங்களுக்கும் முன்மொழியலாமா?நீங்கள்  கொஞ்சம் யோசிக்க வேண்டும் சகோதரங்களே!. உங்கள் பிதா என்பதற்காக எம்மையும் அவருக்குத் தொண்டூழியம் செய்யவேண்டும் என நீங்கள் நிர்ப்பந்திப்பதனை இனியாவது கைவிட வேண்டும்.

இன்னுமொரு "காலம்" இதழில் சேரனது கவிதைகள் குறித்து உங்கள் பிதாவால் வழங்கப்பட்ட உரை இது.

“சேரனின் கவிதைகளை தமிழில் எழுதப்பட்ட புரட்சிக் கவிதைகளாக நான் காண்கிறேன். இன்னும் குறிப்பான வார்த்தைகளில் சொல்வதானால் பாரதிக்குப் பின் தமிழில் தீவிரமான புரட்சிக் கவிதைகளை எழுதியவராக சேரனை அடையாளப்படுத்த விரும்புகிறேன்-அவரது அனைத்துப் பலவீனங்களுடனும்.(ஜெயமோகன் , காலம்-31)

இங்கே எழுதப்பட்ட அனைத்துப்பக்கங்களிலும் அவர் புரட்சி என அடையாளப்படுத்துவது இனவிடுதலை குறித்தது மட்டுமாயிருக்கிறது. இவர் ஈழத்தில் பரவியிருந்த சாதீயப் புரட்சி குறித்தும் வர்க்கப்பபுரட்சி குறித்தும் எழுதிய கவிதைகளையோ கவிஞர்களையோ யாரும் அவருக்கு அடையாளம் காட்டவில்லை. சுபத்திரன் பற்றியோ அல்லது சாருமதி பற்றியோ அவர் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. குட்டி மோகன்களுக்கும் அதனைத் தெரிவிக்கும் வக்கும் இல்லை.வழியும் இல்லை. உண்மையில்  எப்படி மறுபக்கத்தின் குரல் என்ற கட்டுரையில் அந்த மூவரை விடவும் வேறு யாரையும் அறிந்திராத போக்கில் எழுதினாரோ அப்படித்தான் எழுந்தமானமாக கருத்தைச் சொல்லிவிடுகிறார் இங்கும். அவர் எதை எழுதினாலும் பிரசுரிக்கவும் அதனை வாழ்வாகவும் வரலாறாகவும் கொண்டாடிவிடும் நிலையில் கருணாகரன்கள் உலகெங்கும் இருப்பதாக அவர் நினைக்கிறார். அந்த நினைப்புத்தான்  அவருக்கு அண்மையில் அந்த மேடைப்பேச்சையும் பேச வைத்தது.

இதில் ஜெயமோகனுக்கான வழக்கில்  அவருக்காக கருத்துச் சொல்ல முன்வந்தவர்களில் அதிகம் இரக்கம் கொள்ள கீழிறங்கி சேவகம் செய்யும் மனநிலையில் மன்றாடுபவர் கருணாகரன் ஒருவரே. ஈழ இலக்கியத்தின் அரியண்டம் அவர். அவ்வாறான நிலையை கருணாகரன் அனைத்துத் தளங்களிலும்  தொடர்ந்தும் எடுக்கிறார். அதனையே தனது முன்வரைபாக வரைபவர். அவர் ஜெயமோகனுக்காக எழுதிய பக்கம் பக்கமான மன்றாட்டத்தின் ஒரு இடத்தில்

ஜெயமோகன் தெரிவித்த கருத்துகளிலும் வார்த்தைப் பிரயோகங்களிலும்  தவறுண்டு என்பதை அவரே பின்னர் உணர்ந்திருக்கக்கூடும். அல்லது அதை நாம் அவருக்கு சொல்லும் முறையினால் உணர்த்தியிருக்கலாம். இலக்கியத்தினதும் விமர்சனத்தினதும் பண்பும் பணியும் அதுதான். அது கூச்சலிட்டு எதையும் நிறுவ முயற்சிப்பதில்லை. பகைமை கொண்டு எதிர்ப்பதல்ல. அப்படிக் கூச்சலை அது பலமான ஆயுதம் என்று நம்பினால் அது பலவீனத்தின் வெளிப்பாடேயாகும். முட்டாள்தனத்தின் அடையாளமே.”
என்கிறார்.

ஒரு அயோக்கியத்தனமான  கருத்தினை மறுதலிக்க இன்னொரு முட்டாள்தனத்தை பயன்படுத்துகிறோம் என்று கடந்து போங்கள் கருணாகரன். இவ்வளவு ஆழத்திற்கு இறங்கி நீங்கள் கை அலசத் தேவையேயில்லை. ஜெயமோகன் அவர்கள் பேசிய மேடைப் பேச்சின் அசிங்கத்தை விட பண்பும் இல்லாத பணியையும் தெரியாத அந்தப் பேச்சை விட நாம் பேசுவது ஒன்றும் தரக்குறைவானது அல்ல. ஜெயமோகன் உதிர்த்தால் தேவவாக்கு நாம் பேசினால் பண்பற்றது என நினைக்கும் உங்களது மனோபாவம் கெடுதியானது கருணாகரன்.

சோபாசக்தி, குணா கவியழகன், தமிழ்நதி எனப் பலரையும் அதிகமாக அறிந்திருப்பதும் ஈழத்தையும் விட தமிழ்நாட்டில்தான். இவர்களுடைய எழுத்துகளுக்குக் கூடுதலான மதிப்பளித்திருப்பதும் தமிழ்நாட்டில்தான். அண்மையில் கூட தமிழ்நதிக்கு விகடன் விருது கிடைத்திருந்தது. விகடன் விருது ஒன்றும் பெரிய புக்கர் விருது இல்லைத்தான். ஆனால் பொதுக்கவனிப்பை உண்டாக்கவல்லது. இப்பொழுது புதிதாக எழுத வந்திருக்கும் சாதனாவை இனங்கண்டு சாரு நிவேதிதா சாதனாவின் கதைகளுக்கு முன்னுரை எழுதுகிறார்.”

என்கிறார். கருணாகரன்.

இதில் கருணாகரன் குறிப்பிட்டவர்கள் யாரையும்  அவர்கள் தாமாக அறியவில்லை. இவர்கள்தான் தாமாக அங்கு சென்றவர்கள். அல்லது செல்ல வைக்கப்பட்டவர்கள். வருடாவருடம் தமிழ்நாட்டின் புத்தகச் சந்தைக்காக எழுதிக் கொண்டு போய்ப் பதிப்பிக்கும் ஒரு இலக்கிய அரசியலைத் தான் நீங்கள் குறிப்பிடுபவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது இலக்கிய எழுத்துக்களை இன்றுள்ள தமிழகத்துச் சூழலில் நன்றாக விற்று விட முடியும் என்பதும் அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. இதையெல்லாம் ஒரு அந்தஸ்து என்று கொண்டு வந்து முன்வைக்கும் உங்களை என்னத்தால் நாம் அடித்துத் துரத்துவது?

ஒரு கதை எழுதிவிட்டால் தமிழ்நாட்டுச் சஞ்சிகையில் வெளிவந்தால் அதனை அந்தஸ்து என்று நினைப்பது ஒருவித மனநோய். 10கவிதை எழுதிவிட்டால் அதனைத் தமிழ் நாட்டில் ஒரு பதிப்பகம் புத்தகமாக்கிவிடத் தயாராய் இருக்கிறது.அடுத்த புத்தகச் சந்தையில் அதனை விற்றுவிடலாம் என்று நினைப்பதற்கு நீங்கள் வேறு பெயர் சொல்லி அழைக்க வேண்டும். உங்களுக்குத் தெரியும் அண்மைக் காலமாக காலச்சுவடு எத்தனை புலம்பெயர்ந்தவர்களது புத்தகத்தை வெளியிட்டது? ஈழத்திலிருந்து எத்தனை பேரது புத்தகங்களை வெளியிட்டது? என கணக்குப்பாருங்கள். அவற்றின் தரங்களைக் கணக்குப் பாருங்கள். எழுதியவனுக்கும் தெரியாது தான் என்ன எழுதினேன் என்று பதிப்பித்தவனுக்கும் தெரியாது என்ன பதிப்பித்தேன் என்று. இப்படியான ஒரு நோயிற்கு மீண்டும் சொல்கிறேன் நீங்கள் வேறு பெயர் கொண்டு அழையுங்கள்.

இந்த மனநிலை தவறானது என “பெயல் மணக்கும் பொழுது” கவிதைத் தொகுதியைக் வெளியிட்ட அ.மங்கைக்கும் அப்போதே பதில் எழுதி “புலம்பெயர்ந்தோர் கவிதைகள்” தொகுத்து வெளியிட்ட ப. திருநாவுக்கரசு அவர்களுக்கும் நமது எதிர்ப்பினைத் தெரிவித்திருக்கிறோம். இது குறித்து  ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.

அதனை விடவும் காலாகாலமாக தமிழ்க் கவிதைகளை மொழிபெயர்க்கும் அரசியல் குறித்து நான் பேசிவருகிறேன். அண்மையில் “THEN THERE WERE NO WITNESSES” என்ற  பெயரில் பா. அகிலனின் கவிதைகள் கீதா சுகுமாரனால் மொழிபெயர்க்கப்பட்டு ரொரன்டோவில் வெளியிடப்பட்டது. அதேநாளில் வெளியிடப்பட்ட அவரது இன்னொரு  நூலான   “அம்மை” எனும் கவிதைத் தொகுதியில் இருக்கும் 50 கவிதைகளுக்கு 34 பக்கத்தில் கீதா சுகுமாரனால் விளக்கம் எழுதப்பட்டிருக்கிறது. உண்மையில் அகிலனுக்கு நிகழ்ந்த மிகப்பெரிய பலவீனம் இது. ஆனாலும் இதற்குள் இருக்கும் அரசியல் பெரிது. இது ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட இலக்கிய அரசியற் செயற்பாடு. இதுதான் பொதுவாக மொழிபெயர்ப்பின் அரசியலாக மாறுகிறது. இந்த வகைமுறையை நிராகரிப்பது  தேவையான ஒன்று. அதற்காகத்தான் பெயர்கப்படமுடியாத மொழி என நாம் ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை இருப்பதனை ஒரு படைப்பாக எழுதினேன்.(மற்றது இதழ்- 2004) .
இன்று சோபாசக்தியின் படைப்புக்கள் மொழிபெயர்க்கப்பட சோபாசக்தியே கொண்டலைவதை நீங்களே பார்த்திருப்பீர்கள். இது ஒரு நிறுவனம் சார்ந்த இலக்கியச் செயற்பாடு. இதற்குள் சமூகம் சார்ந்த கலைஞனுக்கு வேலை இருக்காது.

 
மேலும்  ஜெயமோகனைக் கேள்வி கேட்பவர்கள் வருடத்திற்கு ஒரு கதை கூட எழுத முடியாதவர்கள் என்று சொல்கிறார் நண்பர் அனோஜன். உண்மையில் வருடத்திற்கு ஒரு கதை எழுதும் விசாவில் வந்தவர்களல்ல நாங்கள். நம்மில் பலர் இலக்கியத் தொழிலாளர்களல்ல கும்பம் கும்பமாய் எழுதுவதற்கு!  அல்லது நோய் குணமாவதற்கு எழுத்தை மருந்தாகப் பாவித்து வருபவர்களுமல்ல என்பதனை அனோஜனுக்குத் தெரியப்படுத்துகிறேன்.

இறுதியாக,

உங்கள் பிதாவினது வாசற்பக்கம் நாம் தலை வைத்துப் படுத்ததில்லை. அந்த மேடைப் பேச்சில் அவர் காறி உமிழ்ந்த வார்த்தைகள் அநாகரிகமானவை என்று சொல்கிறோம்.  கிருமி நாசினி அடித்துக் கொல்ல வேண்டும் எனச் சொன்ன அவரது அதி உன்னத நகைச் சுவை குறித்தது அல்ல அது. அதன் முன்னரும் அதன் பின்னரும் அவர் பேசிய வார்த்தைகளை  குட்டி மோகன்களான நீங்கள் திரும்பவும் செவி மடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். அறிவற்ற திமிர்தனம் கொண்ட அந்த வார்த்தைகளுக்கான பதில் வார்த்தைகளை நாமும் தொடர்ந்து எழுதுகிறோம். இதற்குமேலும் உங்களால் விளங்கிக் கொள்ள முடியாது போகும் என நாம் நினைக்கவில்லை. ஆகக் குறைந்தது இனிவருங்காலங்களிலாவது உங்கள் பிதா ஈழம் குறித்து எதையாவது எழுதினால்  வாங்கி வாசித்துத் திருத்திக் கொடுங்கள். உங்களுக்கும் நேரம் மிச்சம் எங்களுக்கும் நேரம் மிச்சம். பிதாவின் எழுத்தில் நீங்கள் கைவைப்பது ஒன்றும் தப்பான செயல் இல்லை. தோளுக்கு மிஞ்சினால் தோழன் தானே.