Monday 12 April 2021

அது கற்பனைக் காலமல்ல….

கற்சுறா
அது கற்பனைக் காலமல்ல…. அது ஒரு கனாக்காலமுமல்ல…. எண்ணற்ற கற்பனைகளைக் கைவிட்ட காலத்தில் நாம் நுழையவைக்கப்பட்டோம். கண்மூடி விழிக்கும் போது நாங்கள் பிணங்களை எண்ணியபடியே வாழவேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. எத்தனை எத்தனை என எண்ணிக்கையைக் கணக்கிடும் நம் பலருக்கிடையில் பாரிய இடை வெளி இருந்தது.ஒவ்வொருவரும் கணக்கிடும் பிணங்களது எண்ணிக்கையின் இடைவெளியே அந்தக்காலத்தில் எங்களது சமூக நீதி அக்கறையினை - அதற்குள் இருந்த அரசியல் அறிவின் இடைவெளியை - துரோகி தியாகி மனநிலையின் அடையாளத்தை நிர்ணயித்திருந்தது. ஆம்... அது கற்பனைக் காலமல்ல…. அது ஒரு கனாக்காலமுமல்ல…. இன்று கதைப்பது போல் இலகுவாக முகத்திற்கு நேராய் நின்று முகம் முறித்து நினைத்ததைக் கதைத்துவிடும் காலமுல்ல அது. அந்தக் காலத்தில் முகம் முறித்து முகத்திற்கு நேராய்த் தன்னியல்பாய்ப் பேசத் தொடங்கியிருந்த சிலரில் தாயகம் ஆசிரியர் ஜோர்ஜ் குருசேவ் முக்கியமானவர். தாயகத்தின் இந்தச் செயற்பாடு குறித்து நீண்ட ஒரு உரையாடலைத் தொடங்க வேண்டும். அது தமிழ்ச் சமூகத்தின்- குறிப்பாக யுத்தகாலத் தமிழ்ச் சமூகத்தின் இயங்கு திசையில் தாயகம் பத்திரிகை என்ன தாக்கம் செலுத்தியது. ஒரு பத்திரிகையாக அது கொண்டிருந்த உணர் நிலை என்ன? தாயகத்தோடு உலகம் பூராவும் இருந்து சேர்ந்தியங்கி எழுதியவர்கள் யார்? ஒத்தாசையாக இருந்தவர்கள் யார்? - இடையூறு செய்தவர்கள் யார்? நீண்டகாலம் ஒத்தாசையாக இருந்து ஈழ யுத்தத்தின் இறுதிக் காலத்தில்- அதுவும் ஒரு இரவில் குத்துக்கரணம் அடித்து எதிர் நிலைப்பாட்டிற்கு மாறியவர்கள் யார்? அது ஏன் நிகழ்ந்தது? அதன் பின் அரசியல் உள் அரசியல் என்ன? என்றெல்லாம் உரையாடி நமது சமூகச் சிந்தனையின் உள்ளோட்டத்தை உரையாடலாக நடத்த பலர் எண்ணியிருந்தார்கள். அது இன்று வரை சாத்தியமாகவில்லை. ஜோர்ஜின் 3 மின் நூல் பதிவுகளுடன் இன்று இயலுமான அளவிலேனும் அது சாத்தியப்பட்டிருக்கிறது. பெரும் மகிழ்ச்சி. இதனை ஒழுங்கமைத்த பத்மநாதன் நல்லையா, கலா றஞசன் மற்றும் சேர்ந்தியங்கிய நண்பர்களுக்கு மிக்க நன்றி. இங்கே தாயகம் பத்திரிகை எனக்கு அறிமுகமான கதையைச் சிறிதாகச் சொல்லி “ அழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம்” என்ற கட்டுரை நூற்தொகுப்பின் உள்ளோட்டம் என்னவாக இருக்கிறது எனக் கூறத் தொடங்குகிறேன். 1991 பாரிஸ் இலக்கியச் சந்திப்பின் பின்னர் க.கலாமோகன் மூலமாக முதன் முதலில் கையில் தாயகம் பத்திரிகை கிடைத்தது. அக்காலத்தில் பாரீஸ் தமிழ்க் கடைகளில் அதிகமாகக் கடைக்காரர்கள் தாமாகவே தடைசெய்து தமது தேசியத்தின் மீதான அதீத விசுவாசத்தைக் காட்டி நின்றாலும்- சில கடைகளில் அவை விற்கப்பட்டே வந்ததன. ஆனாலும் சிலகாலத்தில் அவையும் யாழ் தேச வழமைச் சட்டத்தின் பிரகாரம் பாரீசிலும் தடைசெய்யப்பட்டது. இருந்தும் எங்களில் ஒரு சிலருக்கு தபாலில் கிடைக்க அதன் அசிரியர் வழி செய்தார். தாயகம் வயசுக்கு வந்த பின்னால் கூட அனுப்பிவைத்தார். ஆனாலும் அப்போது தாயகத்தை கையில் வைத்திருக்கவோ பிரையாணங்களின் போது கொண்டு திரிந்து வாசிக்கவோ இருந்த அச்சத்தை இன்றுள்ளவர்களுக்குப் புரியும்படி சொல்லிவிட முடியாது, எங்கள் கையில் கிடைத்த பத்திரிகை இத்துப் பிய்ந்து போகும் அளவிற்கு பலரின் கை மாறி வாசிக்கப்பட்ட பத்திரிகையாக இருந்தது அது ஒன்றுதான். தடையையும் மீறி அதிகம் பேர் வாசித்துக் கொண்டார்கள் அதனால் தான் சொல்கிறேன். அது கற்பனைக் காலமல்ல…. அது ஒரு கனாக்காலமுமல்ல…. என்று. உணமையில் தாயகம் குறித்தோ அல்லது ஜோர்ஜ் குருசேவினது அரசியல் நிலைப்பாடு குறித்தோ புரிந்து கொள்ள தாயகத்தின் சில “ஏடிட்டோர் இயல்” பக்கங்களை நீங்கள் வாசிக்க முடிந்தால் அதனைக் கண்டடைந்து விட முடியும். 'ஏடு இட்டோர் இயல் நான் பொறுப்புணர்வோடு எழுதும் பக்கம். கியூறியஸ் ஜி நான் பொறுப்புணர்வு இல்லாமல் எழுதும் பக்கம்' என்று தாயகம் நண்பர்களுக்கு நான் நகைச்சுவையாகக் குறிப்பிடுவதுண்டு. என அண்மையில் ஜோர்ஜ் பதிவிட்டிருந்தார். ஆனால் அது நகைச் சுவை அல்ல. அதுவே உண்மை என்கிறேன் நான். கியூறியஸ் ஜியின் அறுசுவை - சமூகத்தில் இருக்கின்ற கதையாடல்களை நையாண்டிகளை தன்னனுபவத்தின் ஊடாகக் கண்டெடுத்து அதனூடாக அப்படியே நடப்பரசியலை கேலி செய்து பொருத்திவிடும் எழுத்து முறையாக அது இருப்பதனால் சில இடங்களில் அவரே சொல்வது போல் பொறுப்பற்ற தனமாகி விடும் சாத்தியங்கள் அவ்வப்போது வந்து விடுகிறன. அதிகமாக வாசிப்பிற்கு சுவாரிசயமாகவும் சிரிப்பிற்குரியதாகவும் இருந்து விடுவதும் அதனால் தான். என்றாலும் நமது சமூகம் கடந்து வந்த சூழலையும் விடுதலை அரசியலின் கருத்து நிலையையும் - அது மக்களின் வாழ்விற்குக் கொடுத்த ஒவ்வாமையையும் - அது எவ்வாறான நிலைக்குக் கொண்டு செல்லும் என்ற அறிவையும் தாயகத்தின் ஒவ்வொரு பக்கமும் விளங்கப்படுத்தியே சென்றது, சிறு குறிப்புகள் என்றால் என்ன... கவிதைகளாக இருந்தால் என்ன அதன் கடைசிப் பக்கத்தில் விளையாட்டாக வருகின்ற குறுக்கெழுத்துப் போட்டியாய் இருந்தலென்ன அதற்கான விளங்கப்படுத்தல் இருக்கும் என்றாலும் அவரால் பொறுப்புணர்வுடன் எழுதப்பட்ட அந்த “ஏடிட்டோர் இயல்” பக்கங்கள் தாயகத்தின் அடிப்படை நிலைப்பாட்டை நமக்கு உணர்த்தி நிற்பவை. இந்த அழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம் என்ற உரை 2013 ம் ஆண்டு நான் நிகழ்த்திய பன்முக வெளி நிகழ்வில் அவரால் வாசிக்கப்பட்ட உரை எனினும்.கடந்த காலத்தில் வெளிவந்த அத்தனை தாயகத்தின் மைய அரசியற் பார்வையும் அதுதான் என நான் கருதுகிறேன். அதன் இன்னொரு வடிவம் தான் அந்தக் கட்டுரை. ஈழத் தமிழர்களது அரசியல் மாற்றங்கள் அதிகாரச் செயற்பாடுகள் எல்லாம் யாழ் மைய அதிகாரச் சிந்தனையோடே எப்பொழுதும் நகர்த்தப்பட்டது என்பதனை ஜோர்ஜ் பல இடங்களில் கோடிட்டு வந்திருக்கிறார். தன்னுடைய அதிகாரத் திமிருக்காக மற்றயவர்களைப் பலிகொடுத்து அழித்து விட்டு யாழ்ப்பாணம் தன்னைப் பாதிக்கப்பட்ட பட்டியலில் சேர்த்துக் கொள்வது வேடிக்கையானது. எனக் கூறி, எத்தனை அழிவுகள் கண்டபின்னாலும் தன்னுடைய ஆதிக்க மனோபாவத்தை அழிக்க மறுத்து நிற்கும் யாழ்ப்பாணியத்தின் பாகப் பிரிவுகளை தரம் பிரித்து எழுதிய கட்டுரை தான் அது. யாழ்ப்பாணியத்தின் கொலைவெறிச் சிந்தனை அழியும் வரைக்கும் இந்தச் சமூகத்திற்கு மீட்சியில்லை என்ற இந்த நூலின் கருத்து நிலையை தாயகத்தின் நீண்ட தொடரோட்டத்தின் ஒவ்வொரு பொழுதிலும் நினைவூட்டியே வந்திருக்கிறார். அதன் சில பகுதிகளை மட்டும் இங்கு அடையாளம் காட்டிச் செல்கிறேன். எல்லாத் தாயகத்தின் பக்கங்களிலும் இருந்து இந்தக் கட்டுரைக்குப் பொருந்தும் படியாக அதிக விடயங்களைச் சுட்டிக் காட்ட முடியும் ஆனாலும் சில பகுதிகளை கையில் கிடைத்த தாயகம் பிரதிகளை மட்டும் கொண்டு விளங்கப்படுத்த கிறேன். 1992ம் ஆண்டு களின் ஆரம்பத்தில் வெளிவந்த தாயகத்தில் கனடாவிலும் “யாழ்” தேசவழமைச் சட்டம்... என்ற ஏடு இட்டோர் இயல் பக்கத்தில் “இதுவரை காலமும் தாயகம் சொல்லி வந்த விடயங்கள் இன்று ஆதார பூர்வமாக நிரூபுிக்கப்பட்டுள்ளன..”என்று தொடங்குகிறது. இங்கு புலிகளது கனடாக் கிளைச் செயற்பாட்டாளர்களால் ஒரு வியாபாரப் போட்டிக்காக துப்பாக்கிப் பிரையோகம் நிகழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பாக தனது கருத்தைப் பதிவ செய்கிறார். “இது அரசியல் விடயமல்ல வெறும் வியாபார விடயம் தானே என்று கொலை முயற்சியாளர்களின் ஆதரவாளர்கள் கூற முயல்வதும் தெரிகிறது. ஒருவேளை பேச்சுக்குப் இவ்வாறு இருந்தாலும் கூட அதுதான் இங்கே முக்கியமாகின்றது.” “இந்தத் துப்பாக்கி தாயகம் போன்ற புலிகளின் நடவடிக்கைகளை விமர்சிப்பவர்களுக்கு எதிராகத் திரும்பியிருந்தால் புலிகளின் ஆதரவாளர்கள் அதை நியாயப்படுத்தியிருப்பார்கள். சாதாரணமானவர்களும் அவர்களைப்பற்றித் தெரியும்தானே பிறகேன் விமர்சித்தார்கள் என்று தங்களுக்கு நியாயம் கூறியிருக்கலாம்,” “ஆனால் இந்தத் துப்பாக்கி எந்தவித அரசியற் சர்ச்சைகளுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல் ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சியை தனிப்பட்ட ஆர்வத்துடன் செய்து கொண்டிருக்கும் ஒருவர் மீது திருப்பப்பட்டது பல வழிகளில் தமிழ் மக்களைச் சிந்திக்கத் தூண்டியே ஆக வேண்டும்.” “இதுவரை அரசியல் கருத்து மோதல்கள் தான் துரோகிகள் என்ற முத்திரையைப் பலருக்குக் கொடுத்து கொலைகளை நியாயப்படுத்தி ஆதரவு கொடுக்க இங்கும் வைத்திருக்கிறது.” “இதில் வெறும் வியாபாரப் பிரச்சனை ஒன்றுக்கே துப்பாக்கி தூக்கியதானது புலிகளை விமர்சிப்பவர்களுக்கு எதிராகத்தான் துப்பாக்கிகள் உயரும் என்பதல்ல. சாதாரண மக்களுக்கும் எதிராக - சிறிய பிரச்சனைகளுக்கும் துப்பாக்கி தான் தீர்வு என்ற புலிகளின் மனநோயினை வெளிப்படையாகக் காட்டி நிற்கிறது.” என்று எழுதுகிறார். ஜனநாயகத் தமிழ்த் தலைமைகள் என்ற பதிவில் கூட்டணியின் நிலைப்பாடு குறித்து அது மக்களிடத்தில் பங்காற்ற முடியாத நிலையை விளக்க வரும் ஜோர்ஜ் … தனக்கு ஆபத்து என்று வரும் போது தனது பொறுப்பை மறந்து அதே யாழ்ப்பாணப் பாணியில் தப்பி ஓடி ஒதுங்குவதாகக் குற்றம் சாட்டுகிறார். “தமிழ் மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளை இழந்து பொறி ஒன்றிற்குள் சிக்கியிருக்கின்ற வேளையில் பேசாமல் விட்டால் இனி எப்போது தமிழ் மக்களுக்காக இவர்கள் பேசப் போகிறார்கள்?” “எல்லாம் தீர்ந்து இனித் தமிழ் மக்களை யார் ஆளலாம் என்ற போட்டி வரும் போதா?” “தமிழ் மக்கள் அல்லல் படும் போது ஒதுங்கிக் கொண்டு தலைமைப் பதவி கிடைக்கும் என்று நம்பும் போது மட்டும் அரசியல் நடத்த வேண்டும் என்று கருதினால் இவ்வாறான தலைமைகளை மக்கள் தூக்கி எறிவது தவிர்க்கமுடியாதது.” “இதில் சிந்திப்பதற்கு ஒன்றுண்டு. முன்பு கூட்டணி உச்சக்கட்டத்தில் நின்ற போது கூட்டணி அல்லாதவர்கள் கொல்லப்பட்டார்கள். தாக்கப்பட்டார்கள். துரையப்பாவைச் சுட்டதை மறைமுகமாக வரவேற்ற அதே கூட்டணியே பகிரங்கமாக வரமுடியாமல்போய் நிற்கிறது. இது நாளை புலிகளுக்கும் நடக்கலாம்.” எனச் சொல்லிப் போகும் ஜோர்ஜ் இறுதியில் “ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டதாகக் கூறுகின்ற இந்த அமைப்புகள் சரியான ஒரு பொது வேலைத் திட்டத்தின் கீழ் தமிழ் மக்களுக்கான தீர்வை முன்வைக்கும் போது அது குறைந்த பட்சம் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட தமிழர் பிரதிநிதிகளின் கோரிக்கையாகக் கருதப்பட்டு விலிமை பெறும்.” “சுயநலமும் கால்வாரல்களும் தமிழ் மக்களுக்குப் பயன்தரா. ஜனநாயகவழியில் தங்களுக்கான தீர்வு கிடைக்காவிட்டால் வன்முறையில் மக்கள் நாட்டங் கொள்வது இன்றைய உலகில் தவிர்க்க முடியாததாகிவிட்டது.” “தங்கள் போக்குகளையும் இந்த “ஜனநாயக” அமைப்புகள் மாற்றிக் கொள்ளாவிட்டால் காலப் போக்கில் அவர்களை வைத்துச் சதுரங்கம் ஆடுகின்ற சக்திகளால் மட்டுமன்றி மக்களாலும் தூக்கி எறியப்படுவது நிச்சயம் என்பது மாத்திரமல்ல. மக்களைப் புலிகள் பக்கம் தள்ளி புலிகளின் கரங்களைப் பலப்படுத்தி- நியாயப்படுத்தி புலிகளின் கையில் மக்களைப் பலி கொடுத்து விடுகின்ற பழிக்கும் ஆளாக நேரிடும்” என முடிக்கிறார். கிட்டத்தட்ட 20 வருடங்களின் முன் அவர் சொல்லி வைத்தபடி இறுதியில் நேர்ந்ததும் அதுதானே. என இன்று வந்து நாம் கணக்கைச் சுட்டிக் காட்டுவதில் என்ன பிழை? இன்னொரு இடத்தில் எங்கே தலைவர்கள் என்ற தலைப்பிட்டு எழுதியதில் “இன்றைய சூழலில் சிங்கள மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை புலிகள் மேற்கொள்ளும் வேளையில் தமிழர்கள் பிரச்சனையைத் தீர்ப்பதை விடப் புலிகளை அழிப்பதை அரசு முதன்மையானதாக கொண்டிருப்பது குறித்து சிங்கள மக்களும் அலட்டிக் கொள்ள மாட்டார்கள்.” என எழுதிய ஜோர்ஜ் “அரசிற்கு யுத்த வெற்றி பல வழிகளில் நன்மையையே உருவாக்கும்” எனவும். “புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கட்சியான விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட காலத்தில் அவர்கள் அரசியல் என்று கருதி வந்த விடயங்களுக்கும் ஜனநாயகத்திற்கம் எந்த சம்பந்தமும் இல்லை.” “சுயாதீனமான இடப்பெயர்வு உரிமையை மறுக்கின்ற பாஸ் திட்டம் - மக்களை மிரட்டிப் பணம் பறிக்கின்ற கப்பம் மற்றும் வரி முறைகள்- மக்கள் மேல் உளவு பார்க்கின்ற செயற்பாடுகள்- வேறெந்த செய்திகளையும் உள்ளே வர விடாமல் மறுக்கின்ற பிரச்சாரங்கள் என்பனதான் இந்த அரசியற் கட்சியால் மேற் கொள்ளப்பட்டு வந்தன. எனவே இந்தப் பணி நிறுத்தப்பட்டதால் பெரும் இழப்பு என யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.” எனச் சொல்லி “ஆரம்ப காலத்தில் அரசியல் பற்றி ஆழ்ந்து சிந்தித்தவர்கள் கொல்லப்பட்டு மீதிப்பேர் வெளியேறிவிட இராணுவச் சிந்தனையே இன்றுவரை வளர்க்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனையிறவு யுத்தத்தில் மடிந்த குழந்தைகள் முதல் இன்று யுத்தமுனையில் நிற்பவர்கள் வரை அரசியல் புகட்டப்பட முன் ஆயுதங்கள் திணிக்கப்பட்டவர்களே” என்றும் “அரசியல்ரீதியாக வளர்த்துக் கொள்ளாமல் முற்று முழுதான இராணுவ அமைப்பாக்கும் பொழுது இராணுவ ரீதியாக அழிக்கப்பட்டால் அரசியல் ரீதியான எதிர்காலம் மட்டுமல்ல முழுமையான எதிர்காலமே இல்லாமல் போய்விடலாம். இதை ஆதரவாளர்கள் மறுக்கக் கூடும். அந்தச் சூழ்நிலையில் சர்வதேச ரீதியாக எந்த ஆதரவும் இன்றி தனிமைப் பட வேண்டிய நிலை ஏற்படும். மக்களின் எதிர்காலமும் சூனியம் ஆகிவிடக் கூடும்.” என்றும் எழுதியிருக்கிறார். தாயகத்தின் முதலாவது ஏடு இட்டோர் இயலில் ஏன் உண்மையைத் தேடி என்று எழுதும் பொழுது,.. தமிழைப் பாதுகாக்க அல்லது கலையை வளர்க்க என்றெல்லாம் எம்மை ஏமாற்றிக் கொள்ளும் முயற்சி இல்லை. அதேநேரம் எழுத்து வியாபாரம் செய்யும் நோக்கமும் இல்லை. “ஜனநாயக நாட்டில் கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம் போல் உண்மையான கருத்துக்களை அறிந்து கொள்ளவும் சுதந்திரம் உண்டு.” “கருத்துச் சுதந்திரத்தைச் சற்று அதிகமாகப் பாவித்த சில தியாகிகள் மின்கம்பங்களில் துரோகிகளாகத் தொங்கிய நிலையும் எமது ஜனநாயக நாட்டில் உண்டு. துப்பாக்கி முனையில் எம்மவர்கள் மீது “உண்மை” திணிக்கப்பட்டு வருவது கண்கூடு,” “சில பலம் வாய்ந்தவர்களுக்குப் பயந்தோ எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவோ அவர்களைச் சார்ந்து நிற்கும் எண்ணமும் இல்லை.” என்று தெளிவாககத்தான் எழுதப்பட்டள்ளது. நிலைமை இப்படியிருக்க பத்திரிகை விற்றுக் கொண்டிருந்த காலத்தில் புலிகள் தொலைபேசியில் மிரட்டியதால் அவர் திடீரெனப் புலி எதிர்ப்பாளராக மாறினார் என்று காலம் பத்திரிகை ஆசிரியர் செல்வம் அவர்களால் கூறப்பட்ட கருத்தை நீங்கள் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும். என இந்த இடத்திலும் பதிவு செய்கிறேன். “தாயகம் பத்திரிகை ஒரு நடுநிலைப் பத்திரிகை என்று நாம் சொல்வதில்லை.அதே சமயம் எந்தவொரு அரசியல் அமைப்பிற்கும்ஆதரவாக நாம் பிரச்சாரம் செய்வதில்லை. எமது சமூகத்தின் நல்வாழ்விற்குக் குந்தகமாக இருக்கும் எந்த சக்தியையும் விருப்பு வெறுப்பின்றி விமர்சிப்பதில் இருந்தும் நாம் ஓயப் போவதில்லை.” என்று தன்னுடைய நிலைப்பாட்டை எழுதிய பின்னாலும் இத்துப் போன தமிழ்த் தேசிய ஆதரவு கொண்டலைவோர் அதன் கருத்தியலை வெறும் புலி எதிர்ப்பாகக் குறுக்கிக் காட்டவே இன்னமும் முனைகின்றனர். அதுவே அவர்களுக்கு வசதியும் கூட. நான் ஏன் இவ்வளவு பதிவுகளையும் வாசித்தக் காட்டினேன் என்றால் இவ்வாறு யுத்தகாலத்தில் எழுதிய எழுத்துக்கள் யுத்தம் முடிந்த கையோடு தன்னுடைய கருத்து நிலைப்பாடு என்னவாக வந்தடைந்திருக்கிறது. அதற்கான மைய எண்ணக்கரு என்னவாக இருந்திருக்கிறது என்று அடையாளம் காட்டிவிடக் கூடிய பெருங்கட்டுரை தான் இந்த அழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம் என்ற கட்டுரை. கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வது என்பது யாழ்ப்பாணச் சிந்தனையில் இருப்பதேயில்லை. தமிழ் அரசியல் வாதிகளது சிந்தனைப் போக்கு சிறுவர் படையில் சேர்த்தல் தேர்தல் கால வாக்களிப்புக் கூத்து நாடு கடந்த அரசு என எண்ணற்ற பிற்போக்குத் தனங்களுக்கு புத்திசாலி முகாம் பூசி தன்னை உருவாக்கியவர்களையும் அழித்து தன்னையும் அழிக்கும் யாழ்ப்பாணத்து பிராங்கென்ஸ்டைன் பற்றியும் நம் இனத்தின் புத்திஜீவிகள் எனபவர்கள் மந்தைப் புத்தி ஜீவிகளாக இருக்கும் நிலை மற்றும் இன அழிப்பு என்றால் என்ன? என எண்ணற்ற விடயங்களைப் பேசி நிற்கிறது இந்தக் கட்டுரை. இவை எல்லாம் எற்கனவே சுட்டுக் கொண்டிருந்த அந்தந்தக் காலங்களில் சுடச்சுடப் பேசிய விடயங்கள் தான் என்றாலும் சுட்டழிந்து போன பின்னால் நாங்கள் எவ்வாறு மீளவேண்டும் எனவும் சில கருத்துக்களைச் சொல்லியுள்ளார். அவற்றையும் நீங்கள் வாசித்து அறிந்து கொள்ளுங்கள். நன்றி.