Tuesday 28 April 2015

வித்தைக்காரனின் விரல்.


கற்சுறா


மிகச்சிரமப்பட்டு
தொங்கிக் கொண்டிருக்கும் அந்தச் சட்டகத்திற்குள்
என்னைப் புகுத்துகிறாய்.

நாலு மூலைகளிலும் ஆணிகளால் மட்டுமே அறையப்பட்டிருக்கிறது அது.
ஒரு புகைப்படக் கலைஞனின் கைவிரலைப் பார்த்த கண்கள் என்னுடையது..

நீ மிரளாதே.

நான் உன்னைப் பார்க்கவில்லை.
ஒளிவில்லையைத் திறந்து மூடும் கணத்தில் அவன் என்னை வேறு எங்கும் பார்க்க விடவில்லை.
வில்லைக்குள் கண்கள் குவிய
உலகை கண்ணுக்குள் உருட்டும் அதிசயமாய் இருந்தான் அவன்.

தன்னுடைய விரலைக் காட்டி என்னைக் குவித்தான்.

அவனது சுட்டுவிரலை மட்டுமே நான் பார்த்தேன்.
அவன் விரலும் என் கண்ணும் சந்திக்கும் புள்ளியிலிருந்து தொடங்கியதுதான்
உனது அச்சம்.

நான் என்ன செய்ய?

என் கண்களைப் பார்த்து ஒழியாதே!
நீ புகுத்திய சட்டகத்தில் உள்ள கண்களல்ல
அவை
நாலு மூலைகளிலும் ஆணிகளால் மட்டுமே அறையப்பட்டிருக்கிறது.

4/28/2015

Thursday 23 April 2015

கவிதை- கற்சுறா

கிலிசு கெட்டழிகிறது ஒரு தேசம்




பலத்த புலன்கள் பரவ விட்டு
அகத்தின் விகாசிப்பு



மனப்பிராந்தியத்தின்
கரைமுழுதும் ஈரலிக்க
அண்ணாக்கில் உருளும்
வன்னிப் புழுதியின் வரட்சி


போரையும் கூடவே சாதியையும்
கொண்டுருளும் கூட்டத்தில்
அம்மணமாய் உலாவந்தேன்.


இப்போ;
எவனுக்கோ கிலிசு தட்டிப் பினாத்துகிறான்


ஊரெல்லாம் கூடிநிற்க
பிடிமண்ணில் நிறைகிறது
மீசைமுளைக்காத புதைகுழிகள்.


அள்ளி எடுக்கும் பிடிமண்ணில்
அவர்கள் தேசம் குறைகிறது


தேசமொன்றும் இல்லாத
வெறுமையின் தரிப்பிடத்தில்
அம்மணமாய் உறங்கி
அம்மணமாய் உயிர் கொள்வேன்.


03/09/1999

கவிதை கற்சுறா




வேலிகளாய் நிமிர்ந்தெழுந்தது
ஆமணக்கு.


வெட்ட, பால் வடியும்.
மீளத்துளிர்த்து பெருத்த காடாகும்
வெட்டிய அடிக்கட்டை.


ஊரின் தரை முட்ட
ஆமணக்கங் குஞ்சுகள்.


ஊருக்குத் தாய்த்திமிர்.


எல்லாம் பொய்யாக்கி,
புழுக்களை விதைத்தது,
இரவொன்றில் நுழைந்த
மரநாய்.


ராட்சதக் கவலை.


அரிப்பெடுத்த புழுக்கள்.
பிய்த்துக் கொடுத்த கம்புகளால்
எங்கள் தசைகளை சிதைத்து
எச்சரித்தது மரநாய்;.


கற்சுவர் எழுப்பிய புழுக்கள்
ஆமணக்கு
அழிந்து கருகிய
இருப்பை மறைக்க
மகிழ்ச்சி- மரநாய்க்கு.


மரநாயின் ஆர்ப்பரிப்பில்
ஆமணக்கின் நினைவைக்கூட
வைத்திருக்க முடியவில்லை
எம்மால்.


காய்ந்து,
போன சாக்கில் அள்ளிக் கொட்டும்
மண் தூவிய காற்று.
நாட்சரிவில் ஒரு முறை
வழி தவறியதாய்த்; திரும்பும் பஸ்.
நாட்டிலா? எங்கே?
எனக் கேட்கும் பெயருடன்
இன்னும் என்
பன்னாடை ஊர்.

இருள்வெளி
1998


கவிதை- கற்சுறா



பலமுறை தடவிப்பார்த்து

சலித்து விட்டது.



இடங்களை மாற்றி வைத்தல் முடியாது.



தனியே நான் மட்டும்

உருவி 

குறிகளை அழிக்க,

கால்களுக்கிடையில்

நீண்டு கிடந்தது

பூணூல் சுத்திய ஆண்குறி தனித்து.


எல்லோர் செயல்களையும் பார்த்து

வாய் பிளந்து போகும் எனக்கு,

வெட்கம் பட்டது

ஆச்சரியக்குறி அகற்றிய வசதி.



குறிகள் ஒழிந்து

முண்டத்தில் வெளிச்சம் பட

எல்லோருக்கும் வியப்பு.



கவட்டினுள் குறி

யாருக்குத்தெரியும்?


மேலதிக விளக்கத்திற்கு பசுவய்யா 107 கவிதைகள் பார்க்க அல்லது காற்சட்டையைக் கழட்டி குனிந்து பார்க்க.
எக்ஸில் 8
1998


கவிதை- கற்சுறா

கொலையும்
கொலைச்சிரிப்பில் கும்மாளமும்.
ஆணுறுப்பு அறுந்த வலி எனக்கு.



ஒவ்வொரு வெடித் தீர்விலும்
இறந்து கொண்டிருக்கிறேன்.




மௌனம் பொத்த
எனக்குள் சித்திரவதை
காயம் பட்டு,
உடல்
சீழ்வடிய நாறுகிறது



சாவு மணம்.



நுண்ணிய உணர்வுக் கனதி.


நிச்சயம்,
நாலு நாளாய் புழுத்தெறிக்க
மணத்த சாவு எனக்கு.


ஒரு இரவில்
அறுதலிகளாய்ப் போன
எனது பயல்களுடன் போய்ச் சேர,
எதாவதொரு தெருவில்
சாவு வரின் சுகம்

இந்த மண்ணை விட.






23/12/1997
சரிநிகர்

கவிதை - கற்சுறா


கற்சுறா



கதவின் சாயலில் திறந்து 

மூடியபடி இருந்த ஞாபகங்களை விட்டுவிட்டு 

மறைத்துக் கொண்டிருந்தது உள்ளே புகுந்து மறையும் வெளிச்சம். 

கறுப்பின் திரள் இறுகிய சுவரில் குந்தியிருந்த 

எனதுருவத்தின் உடலில் 

மெல்லிய கீறலாய் மாறி மாறி மோதியபடி இருந்தது ஒளிக்கற்று. 

இருளைக் குலைக்கும் கதவின் அசைவில் நினைவுகள் தடம்புரள 

ஏதாவது ஒரு நிமிடம் என் ஞாபகங்கள் என்னைக் கொன்றிருக்க 

வேண்டும். எப்பொழுதும் இரத்த வெறியுடன் கொலைக்கருவியாய் 

என்னுடனே உயிர்வாழும் ஞாபகம் 

ஒரு குழந்தையைப் போலவே அருகில் வந்தது. 

யாருக்கும் துன்பமில்லாத செல்லத்தனமான ஞாபகம் 

கதவினை விலக்கி விலத்திய விரல்களோடு 

ஒளிக்கற்றை இழுத்து 

என்முதுகில் விட்டு சவாரியே செய்தது. 

ஆனந்தம் பொங்க ஞாபகத்தை வளர்த்தெடுக்க வேண்டுமென 

எல்லோரும் என்னைக் கேட்டுக் கொண்டார்கள். 

காற்றிடை புகாத நெரிசலோடு 

பற்றைக் காடென வளர்ந்த ஞபகம் 

சிலிர்ப்பூட்டும் மேனியை அவ்வப்போது இடைநிறுத்தி 

தன்னுடைய இராட்சதப்பற்களால் கீறிக்கொண்டிருந்தது. 

நினைத்த பொழுதில் மோகித்தெழும் மேனிக்கு 

இருளையும் ஒளியையும் இடைஞ்சலாக்கியது. 

நிர்வாணத்தின் ஓட்டைகளை நிரப்பி 

சிதைவற்ற மேனியாக்கி பூசிக்கத் தொடங்கியது. 

...
இப்போது சித்திரவதைக்குத் தயார்.


Wednesday 22 April 2015

கவிதை - கற்சுறா


நீயும் ; எனக்குள் நீயும்.




கருந்திரள் செறிவும்
திரை மறைவில் ஒளிரும் இருளும்
சிதறிப் படிகிறது கால்களின் இடுக்கு.
நீர்ச்சருகை வலிந்து வலிந்து
கால் விரல்களில் உருவ
ஓடி வழிகிறது
குருவியின் கண் நீர்.


விரல்நுனி தீண்டும்
நீரில் நனைந்து
காய்கிறது உடற்தவிப்பு.
அலையோடு மோதும் மூச்சின் உரசலில்
பீறிடும் தீ நீர்.

கருந்திரளலை விலத்தி
படிகிறது உடற்பசை.
கால்களின் நடையிடுக்கில் தவழும் மோகக் குழியில்
வெப்பக் காற்றை  உள்ளும் வெளியுமென ஊதுவதில் நிறைகிறது
சரீரத்தின் பெரு மூச்சு. 



படங்கள்: நன்றி தமயந்தி



மிகைப்படுத்தப்பட்ட வரலாற்றில் தொலைந்து விட்ட வீரம். கையேந்தி நிற்கும் தமிழ்ப் பாசிசம்.



கற்சுறா







மிகவும் இறுக்கமான, கட்டுக்கோப்பான, இராணுவ பலம் பொருந்திய நீண்டகால வரலாறுடையதாக எண்ணப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கம் இலங்கை அரச இராணுவத்தால் கடந்த மேமாத நடுப்பகுதியல் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. விடுதலைப்புலிகள்  எக்காலத்திலும்  யாராலும் வெல்லப்படமுடியாத, அழிக்கமுடியாத ஒரு இயக்க வடிவமைப்பைக் கொண்டதாக எழுதப்பட்டுக் கொண்டிருந்த வரலாறை முறியடித்திருக்கிறது இலங்கை அரசு. கடந்த முப்பது வருட காலத்தில் அவ்வப்போதிருந்த அரசபடைகளால் யுத்தம் நடைபெற்றபோதும் விடுதலைப்புலிகளுடன் பெருஞ்சமர் புரிந்த போதும் பலத்த இழப்புக்களையும் வெற்றிகளையும் தோல்விகளையும் மாறிமாறி இருசாராரும் பெற்றுக்கொண்டனர்.
ப+நகரி இராணுவமுகாம் அழிப்பிலும் மாங்குளம் இராணுவமுகாம் அழிவிலும் ஆனையிறவு இராணுவமுகாம் தகர்ப்பிலும் இலங்கை இராணுவம் பெருவாரியான இராணுவத்தை இழந்திருந்தது. இந்த இராணுவமுகாம் அழிவுகளில்; புலிகள் அதிகமான இளைஞர்களைப் பலிகொடுத்து வெற்றியை ஈட்டினார்கள். ப+நகரியில் இறுதிநாள் மாத்திரம் ஆயிரத்தைத் தாண்டிய இளைஞர்கள் பலியாகினார்கள். இருந்தும் வன்னியில் பலத்த இடைஞ்சல் ஏற்படுத்திய இந்தவகை இராணுவமுகாம்களை அழித்ததை தமிழ் மக்கள் வெகுவிமரிசையாக உலகெங்கும் கொண்டாடினார்கள். ஆனையிறவு இராணுவமுகாம் தகர்ப்பு தமிழர்களது வரலாற்றில் மிகப்பெரிய வரலாறாகப் பதிவு செய்யப்படுமளவுக்கு உலகெங்கும் கொண்டாடப்பட்டது. இதற்குப் புலிகள் கொடுத்த விலை கொஞ்சமல்ல. ஏறத்தாள நான்கைந்து மாதங்கள் நடைபெற்ற மோதல் அது. இறுதியில் இயக்கச்சியிலிருந்து இராணுவமுகாமுக்குப் போன குடிநீர்த் தொடர்பைப் புலிகள் துண்டித்ததன் மூலம் இலகுவாக வெற்றியை ஈட்டினார்கள்.
இந்த இராணுவமுகாம்களைப் புலிகள் அழித்தொழித்ததை தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் முக்கிய கட்டங்களாக காட்சிப்படுத்திய அத்தனை தமிழ்ப்பத்திரிகைகளும் வீரவரலாறாகக் கொண்டாடின. இறந்து போன புலிகளது மறுபக்கம் எதுவும் தமிழ்ப்பத்திரிகைகளில் எங்கும் பதியப்பட்டதாக வரலாறு இல்லை. ஆனையிறவு இராணுவமுhகமிற்கு இறுதிக்கட்டங்களில் புலிகளின் தடுப்புமுகாம்களில் தண்டனைபெற்றுக் கொண்டிருந்தவர்கள் கூட கொண்டு செல்லப்பட்டார்கள். மாவிரர்களாக்கப்பட்டார்கள். மாவீரம் கொண்டாடிய பத்திரிகைகள் எதுவும் கொல்லப்பட்ட புலிகளது எண்ணிக்கையை ஒருபோதும் உண்மையாக எழுதியதில்லை. புலிகள் சொல்லும் கணக்கை இவர்கள் மீறியது கிடையாது. ஈழத்தில் நிலை அப்படியிருக்க புலம் பெயர்ந்;த நாட்டுப் பத்திரிகைகளோ அதை விஞ்சி நின்றன. பாரீஸ் ஈழநாடு ஈழமுரசு கனடா முழக்கம் போன்றவை கொல்லப்பட்ட இராணுவத்தின் எண்ணிக்கையை எவ்வளவு அதிகரிக்க முடியுமோ அவ்வளவு அதிகரித்து எழுதி தமது வியாபாரத்தைப் பெருக்கியது. யார் அதிக இராணுவ எண்ணிக்கையை எழுதுகிறார்களோ அதுவே அதிகம் வற்பனையாகும் பத்திரிகையாக இருக்கும் நிலையே தமிழர்களது நிலையானது. உண்மையான தகவல்களை நமது மக்கள்; ஒருபோதும் விரும்பியதில்லை. ஆதலினால் இந்தவகைப் பத்திரிகைகள் மிகப்பெறுமதி வாய்ந்ததாக இருந்தது அவர்களுக்கு. புலிகளின் பினாமியாகச் செயற்படும் ஈழமுரசை விட கொல்ப்பட்ட இராணுவ எண்ணிக்கையை அதிகமாக எழுதிய ஈழநாடு குகநாதன் பாரீஸ் புலிகளால் அப்போது மிரட்டப்பட்டார்.
ஈழத்திலிருந்து வெளிவரும் புலிகளது பத்திhகைகளாக இருந்தாலும் சரி கொழும்பிலிருந்து வரும் தமிழ்ப் பத்திரிகைகளாக இருந்தாலும் சரி புலம் பெயர்ந்த பத்திரிகைகள் என்றாலும் சரி தமிழர்களது வீரம் பற்றியும் தமிழினம் பற்றிய ஒரு மாயைத்தனமான மிகைப்படுத்திய கற்பனைக்கூடான எழுத்துமுறையை வளர்த்துக்கொண்டு வந்தது. தமிழர்கள் மீதான புனிதக் கதையாடலாக அது கொண்டிருந்தது. அது ஒவ்வொரு தமிழ் மனங்களிலும் மெல்ல மெல்ல இனவாதத்தைத் தூண்டி விட்டுக் கொண்டு வந்ததை  யாரும் கணக்கிடவில்லை.


ஈழத்தில் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் மாற்றுக்கருத்துக்கொண்ட பத்திரிகைகள் தொடக்கம் ஜனரஞ்சகப்பத்திரிகைகள் வரை தடைசெய்யப்பட்ட காலங்கள் இருந்தன. புலிகளது செய்தித் தாள்களும் புலிகளது சஞ்சிகைகளுமே மக்களின் வாசிப்புக்குக் கிடைக்கப்பெற்றன. அவற்றில் வருகின்ற புதினங்கள் மட்டுமே உண்மையாக இருந்தது அவர்களுக்கு. அதற்கு இயல்பாகப் பழக்கப்பட்ட மக்கள் புலம்பெயர்ந்த பின்னும் வெளியில் கிடைக்கக்கூடிய  எவ்வித செய்திகளையும் உள்வாங்க விருப்பமற்றுப் போனார்கள். புலிகள் மீதோ அல்லது ஈழவிடுதலைப்போராட்டம் மீதோ  சிறிய விமர்சனத்தை முன்வைப்பவர்கள் அவர்களின் அறிவுப்படி துரோகிகளது சார்பிலிருந்து வருபவையாக முதல்வார்த்தையிலேயே நிராகரிக்கப்பட்டன. ஆதலினால் மிகக் குறைந்தளவு வெளியுலக அறிவு என்பதையும் பெற்றுக்கொள்ள வசதியிருந்தும் அவர்களால் முடியவில்லை.
இவ்வகையான மந்தநிலைப்போக்கு இறுதியில் புலிகளின் அழிவைக் கூட நம்பமுடியாமல் திண்டாடும் ஒரு கையறுந்த நிலையை நமது மக்களுக்குக் கொடுத்து விட்டிருக்கிறது. கடந்த இரண்டுவருடமாக தொடரும் போரில் இதுவரையான புலிகளது செய்திகள் அல்லது அதன் சார்பு ஊடகங்களது செய்திகள் மே 17ந்திகதி நடைபெற்ற அவர்களது மானங்கெட்ட நிலையை ஊகித்துக் கொள்ளக்கூடியதான ஒரு வாசிப்பு நிலையக் கொடுக்கவில்லை. போர் ஆரம்பித்த மாவிலாற்றிலும் பின் மூதூர் சம்பூர் போன்ற இடங்களில் பாரிய இராணுவத்தோல்வியைச் சந்தித்த புலிகள் வழமைபோல தற்காலிக பின்வாங்கல் என்று தமது ஊடகங்களில் பொய் எழுதிக் கொண்டிருந்தன. கிழக்குமாகாணத்தை விட்டு முற்றாகப் புலிகள் துடைத்தெறியப்பட்டதை வரலாறு கொண்டாடிக் கொண்டிருந்தது. ஆனால் அநேகமானவர்கள் புலிகள் பதில்தாக்குதலுக்காகப் பின்வாங்குகிறார்கள் என்று நம்பிக் கொண்டிருந் தார்கள். புலிகளின் முரட்டுத்தனமான பிடிவாதத்தால் தமது வாழ்வை சீரழித்த மூதூர்மக்கள் முன்றுமாதகாலம் எந்த உணவுமின்றி இருப்பிடங்களை விட்டு யாரும் கண்டுகொள்ளாமல் தெருவில் நின்றார்கள்.
கிழக்குமாகாணத்தை விட்டு வன்னிப் பிரதேசத்திற்குள் மட்டும் முடங்கிய புலிகள் மீது இராணுவம் போர்தொடுக்கத் தயாராக இருந்தது. அப்போது கூட புலிகள் சுதாகரித்துக் கொள்ளவில்லை. புலிகளும் புலிகளின் ஊடகங்களும் தமது ஒவ்வொரு பின்னடைவையும் முற்போக்கானதாகவே மக்களிடம் பரப்புரை செய்தன. தாம் மிகத் தந்திரோபாயமானவர்கள் என்பதை மக்கள் நம்பும்படி அந்தவகைப் பரப்புரை அமைந்தது. புலிகள் வீரம் செறிந்தவர்கள். அவர்களுடைய பின்வாங்கல்கள் எல்லாமே அரசின் மீதான மிகப்பெரிய தாக்குதலுக்கானது என்று மக்கள் நம்பிக்கொண்டார்கள்.

வன்னிக்குள் இராணுவம் நுழைய நேர்ந்தால் இலங்கை பூராவும் இரத்த ஆறு ஓடும் என்று அர்த்தப்பட கிளிநொச்சியில் செப்படம்பர் 2008இல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழ்ச்செல்வன் அறிவித்திருந்ததை நாம் கவனிக்க வேண்டும்.
இவ்வாறு தமிழ்ச்செல்வன் சொன்னதையிட்டு தமிழ்ச்சமூகம் வெட்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மாறாக அவ்வாறானதொரு நிலை உருவாவதை தமிழ் மனங்கள் நியாயம் என்று நம்பியது. தமிழ் மக்களை சிங்கள இராணுவம் கொல்வதற்கு ஈடாக அப்பாவிச் சிங்கள மக்களை கொல்வது சரி என்பதாக நமது சமூகம் நம்பியது. கடந்தகாலத்தில் புலிகளால் அறந்தலாவையிலும் ஹபரணையிலும் ஹென்பார்மிலும் புலிகள் நடாத்திய படுகொலைகளில் அனுபவப்பட்ட சிங்கள அரசு இந்த யுத்தம் தொடங்குவதற்கு முன்னாடியே அதற்கான அத்தனை வழிகளையும் அடைத்துவிட்டது.

அவ்வப்போது பஸ்வண்டிகளில் வெடிக்கவைக்கப்பட்ட குண்டுகளைத் தவிர பாரிய அழிவுகளை புலிகள்; சிங்கள மக்கள் மீது ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது. புலிகளின் இந்தவகையான படுகொலைச் செயற்பாடுகளால் மிகவும் பாதிக்கப்பட்டுவந்தது தென்பகுதித் தமிழர்களே. புலிகளின் மிகத்துல்லியமாகப் பயிற்றுவிக்கப்பட்ட தற்கொலைக் குண்டுதாரிகள் இலங்கையின் பலபாகங்களிலும்  ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் என்று நம்பிய சிங்கள அரசு கொழும்பிலுள்ள தமிழர்களை முக்கியமாக இளைஞர்களை ஜுன் 2007இல் பலவந்தமாக வெளியேற்றியது. பின் கண்துடைப்பிற்காக மீளக் கொண்டுவந்தாலும் வெளியேற்றியது எத்தனைபேர் திரும்பக் கொண்டுவந்தது எத்தனைபேர் என்ற கணக்கு யாரிடமும் இல்லை. இந்தமாதிரியான செயற்பாடுகளினூடு கொழும்புத் தமிழர்களை முதல் முறையாக வடிகட்டியது இலங்கை அரசு. ஆனால் நமது தமிழப் பத்திரிகைகளோ அதன் ஆய்வாளர்களோ இதை ஒரு இனத்துவேசச் செயற்பாடு என்று வர்ணித்ததற்குப் பின்னால் மறந்துபோயினர்.

கிழக்கு மாகாணத்தை இராணுவம் கைப்பற்றிய வெற்றியின் பெருமிதத்துடன் வன்னிக்குள் மிகுந்த திட்டமிடலுடன் காலைவைத்தது. வவுனியாவிலிருந்து மடுவுக்கூடாக 27 மார்ச் 2007இல் முதல் தாக்குதலை மேற்கொண்ட இராணுத்தை புலிகள் தடுத்து நிறுத்த எடுத்த முயற்சிகள் மறுபடியும் தோல்வியைத் தழுவிக்கொண்டது. மடுவிலிருந்து பின்வாங்கிய புலிகள் மடுத் தேவாலயத்திலிருந்து மாதாவைத் தம்முடன் தூக்கிக் கொண்டு பின்வாங்கினார்கள். கிறிஸதவர்களது புனித தேவாலயமான மடுமாதா கோவில் வளாகத்துக்குள் யுத்தம் நடைபெற்று தேவாலயச் செயற்பாடுகள் முற்றாக இழந்த நிலையில் மாதாவைக் காப்பாற்றிக் கொண்டு போனதாக புலிகள் அறிவித்தார்கள். உலக அளவில் மதம் சார் பிரச்சனையாக மகிந்த அரசின்மீது இதனைத் திருப்பி விடலாம் என்று  புலிகள் மிகச் சின்னத்தனமாக நினைத்திருந்தார்கள். இந்தக் கொடுமைகளைப் பார்த்து யாழ் அடைக்கலமாதா  இரத்தக் கண்ணீர் விட்டதாகப் புலிகளது ஊடகங்கள் கதை பரப்பின.




புகைப்படங்களைப் பிரசுரித்தன. ஆனால் அவர்களுக்குச் சாதகமாக அப்போதும் எதுவும் நடந்து விடவில்லை. யுத்தம் தனது கோரமுகத்துடன் பலவித குச்சொழுங்கைகளுக்குள்ளால் முன்னேறிக் கொண்டிருந்தது.
இராணுவம் முன்னெப்போதும் இல்லாதவாறு பல பிரிவுகளாகி பிரிவுகளின் பிரிவுகளாகி பலதிசைகளின் வழியே வன்னியின் உள் நுழைந்தன. விடத்தல் தீவுக்குள்ளால் வெள்ளாங்குளம் நோக்கி - பண்டிவிரிச்சானுக்கூடாக  மூன்றுமுறிப்பு வன்னிவிளாங்குளம் நோக்கி - பனங்காமத்திலிருந்து பாலையடி மல்லாவி நோக்கி - வன்னிவிளாங்குளமூடாக மாங்குளம் கண்டிவீதி நோக்கி நகர்வை நெறிப்படுத்தின. வன்னியின் கிழக்கில் நெடுங்கேணிய+டாக ஒலிமடு ஊடாக முல்லைத்தீவை நோக்கி நகர்ந்தன. பல்குழல் பீரங்கி மற்றும் வான்தாக்குதல் சகிதம் முன்னேறிய இராணுவம்  ஒவ்வொரு பிரதேசத்திலும் விடுதலைப் புலிகளின் எதிர்த் தாக்குதலை சிறிய அளவிலேனும் எதிர் கொண்டனர். விடுதலைப்புலிகளால்  இந்தவகைத் தாக்குதலுக்கு ஈடுகொடுக்கமுடியாது என்பது சாதாரணமக்களுக்கு இலகவாக விளங்கியது. ஆனால் தமது வீரம் செறிந்த தாக்குதலை தாம் இன்னும் தொடங்கவில்லை என்று விடுதலைப்புலிகளும் அவர்களது ஊடகங்களும் தெரிவித்துக் கொண்டன.
01-08-08இல் மல்லாவி நோக்கி முன்னேற முயன்ற சிறீலங்காப்படையினர் மீது விடுதலைப் புலிகள்  தீவிரமான முறியடிப்பத் தாக்குதலை நடாத்தி விரட்டி அடித்தனர் என்றும்  வெள்ளாங்குளம்  இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது பொய் என்றும் வெள்ளாங்குளம் கைப்பற்றியிருந்தால் அது இலங்கை இராணுவத்திற்குப் பெரிய வெற்றி என்றும் அதனை அவர்கள் பெரிதாகக் கொண்டாடியிருப்பார்கள் என்றும் சொல்லிய ஒரு பேப்பர் என்ற புலிகளின் பத்திரிகை  அப்படி அவர்கள் தம்பட்டம் அடிப்பது பொய் என்று எழுதியது. அதைவிட வன்னியில் வாழும் மக்கள் வீட்டுக்கு ஒருவரை விடுதலைப் போராட்டத்திற்கு வழங்கியுள்ளார்கள்  என்று புலிகள் கட்டாயப்படுத்திப் பிடித்துச் சென்ற பிள்ளைகளுக்குக் கணக்குச் சொல்லி  அவர்கள் சிறீலங்காப் படைகளை விரட்டி அடிக்கிற காலம் தானாக நெருங்கி வருகிறது என்று புலம் பெயர்ந்த மக்களுக்கு பொய் சொல்லியது.
ஆனால் விடுதலைப்புலிகளிற்கு தமது பலவீனம் நன்றாகவே தெரிந்திருந்தது. அதனால் தான் ஒவ்வொரு பிரதேசத்திலிருந்தும் பின்வாங்கும் போது  மக்களை தம்மோடு சேர்த்து கிளிநொச்சிக்குள் இழுத்துப் போனார்கள். மாறாக புலிகளின் ஊடகங்கள் அத்தனை இராணுவத்திற்கும் கிளிநொச்சியில் தான் புதை குழிகள் என்று அறிக்கை விட்டன. கிளிநொச்சி பற்றிய மிகப்பெரிய விம்பத்தை  ஊதிப்பெருக்கிவிட்டிருந்தார்கள் இருதரப்பினரும். புலிகள் கிளிநெச்சிப்பிரதேசத்தை கடைசிவரையும் விடமார்கள் என்பதே அத்தனை மக்களது நம்பிக்கையாக இருந்தது. ஆகக்குறைந்தளவு இருந்த அந்த நம்பிக்கையையும் புலிகள் 02 ஜனவரி 2009 இல் இராணுவத்திடம் கிளிநொச்சியை ஒப்படைத்து இல்லாமல் செய்தார்கள்.
27மார்ச்2007 பண்டிவிரிச்சானிற்கூடாக மிகப்பெரிய பலத்துடன் யுத்தத்தை தொடங்கிய இராணுவம் கிளிநொச்சியைக் கைப்பற்ற சரியாக இரண்டுவருடம் சென்றிருக்கிறது.  இதே காலத்தில் புலிகளின் நூறுவீதக் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களான மல்லாவி துணுக்காய் கல்விளான் மற்றும் முறிகண்டி பிரதேசத்தில்  கிளைமோர்த் தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்டது. 20-04-2008இல் மாங்குளம் மல்லாவி வீதியில் வெடித்த கிளைமோரில் கருணாரட்ணம் அடிகளார் கொல்லப்பட்டார். மே 2008இல் முறிகண்டி அக்கராயன் வீதியில் வைக்கப்பட்ட கிளைமோரில் குழந்தைகள் உட்பட 16 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.  இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினராலேயே இவை நடாத்தப்படுவதாக நமக்குச் சொல்லப்பட்டது. ஆனால் மிகப்பெரிய யுத்தத்தின்மூலம் மல்லாவி தென்பகுதியை இராணுவம் 24- 07 -2008இல்தான் வந்தடைகிறது. இதற்குள் சிறீலங்கா இராணுவத்திற்கு ஒரு படை மல்லாவியில் செயற்பட முடிவது என்பதை யார்தான் நம்பமுடியும்? யுத்தநிறுத்த காலத்தில் புலிகள் பேச்சுவார்த்தை மேசையில் ஜெனீவாவில் பேசிக்கொண்டிருந்த தருணங்களில் புலிகள் பொங்கி எழும் மக்கள் படை என்றும் எல்லாளன் படை என்றும் மாறுவேடத்தில் தாக்குதல் செய்ததை உலகம் பார்த்துக்கொண்டு இருந்தது.

ஆழ ஊடுருவும் படை என்பது புலிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இரகசியக் கொலைக்கான சொல்லாடல். புலிகள் எதைச் சொன்னாலும் எளிதாக நம்பிவிடும் மக்கள் இந்த ஆழ ஊடுருவும் படையின் இருப்பையும் நம்பினார்கள். மாற்று அரசியல் பேசக்கூட தமது பகுதியில் யாரையும் அனுமதித்த வரலாறு புலிகளிடம் இருந்ததில்லை. புலிகளின் இந்தக்கட்டுப்பாட்டுப் பகுதியில் புதிதாக யார் வந்தாலும் உடன் விசாரிக்கப்படுவார்கள். இப்படியிருக்க இராணுவம் ஆழ ஊடுருவும் படையை அனுப்பி கிளைமோர் வைக்கிறது. பொங்கி எழும் மக்கள் படை, எல்லாளன் படை தாக்குதல் செய்கிறது என்று புலிகள் மக்களுக்குப் பொய் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றிய போது அத்தனை இடம்பெயர்ந்த மக்களையும் அழைத்துக்கொண்டு புலிகள் முல்லைத்தீவின் கிழக்குப் பகுதி நோக்கி ஓடினார்கள் என்று நாம் சொல்லிவிடமுடியாது. கிளிநொச்சி புலிகளின் வெறும் பாசாங்கு நகரம். அங்கு அவர்களுக்கு எதுவுமில்லை. புலிகளது சிறைச்சாலைகள், பதுங்கு குழிகள், வதைமுகாம்கள், கடல்வழிப்பாதைகள் மற்றும் ஆயுதத் தொழிற்சாலை,இராணுவப்பயிற்சிச் சாலை, புலனாய்வுப் பாடசாலை, என்று அனைத்தும்  முல்லைத்தீவின் கிழக்குப் பகுதியான புதுக்குடியிருப்பைச் சுற்றித்தான் இருந்திக்கிறது. ஆக இவர்களுடைய கடைசி இருப்பிடத்தை நோக்கி அமல்ல மெல்லத் மக்கள் கொண்டுசெல்லப்பட்டார்கள் என்பதுதான் உண்மை. கிளிநொச்சியை புலிகள் மிக இலகுவாகக் கைவிட்டபின்னர் மக்கள் தெளிவடையத் தொடங்கினார்கள். அதுவரையும் மக்களுக்கு புலிகளிடம் இருந்த நம்பிக்கை சிதறியது. அதன்பின்னர் பனங்காமம் முன்றுமுறிப்பு, நட்டான் கண்டல், பாண்டியன்குளம், மல்லாவி துணுக்காய் போன்ற கண்டிவீதியின் மேற்குப் பகுதியிலிருந்து  இடம்பெயர்ந்தவர்கள் மெதுவாக இராணுவத்திடம் சரணடையத் தொடங்கினார்கள். அதனால் தான் அந்தப் பகுதி மக்கள் மற்றயவர்களுடன் ஒப்பிடும் போது பாதிப்புக் குறைவானவர்களாக குறைந்த அழிவுடன் தப்பியவர்களாக இருக்கிறார்கள். ஏப்ரல் 2008இல் மடுவைக் கைப்பற்றிய இராணுவம் கிளிநொச்சியைக் கைப்பற்றும் வரை ஒன்பதுமாதங்கள் மக்களின் இடைவிடாத அலைச்சல் நீடித்தது.  இந்த ஓட்டத்தில் மக்கள் களைப்புற்றதும் அறியாத புதுக்குடியிருப்பு பற்றிய அச்சமும் புலிகளது பலவீனத்தை விளங்கிக் கொண்டதுமான காரணங்களே அவர்களை இடையிலேயே  இராணுவத்திடம் சரணடைய வைத்தது.
மக்கள் சரணடையத் தொடங்கியதும்  புலிகளுக்கு தமது இருப்பின் மீது பயம் தொற்றியது. எப்படியாவது  தடுத்துவிடவேண்டும் என்பதில் கவனமானார்கள். சரணடைந்தவர்களை இராணுவம் இடைத்தங்கல் முகாம் ஒன்றில்வைத்திருந்த பின்னரே வவுனியாவில் அமைக்கப்பட்ட முகாம்களுக்கு அனுப்பியது.  அந்த முகாம்களை வதைமுகாம் என்றும் இராணுவத்தில் சரணடைபவர்கள் பாலியல் வல்லுறவு செய்யப்படுகிறார்கள், சித்திரவதை செய்யப்படுகிறார்கள் காணாமல் போகிறார்கள் என்று பரப்புரை செய்தார்கள். கடந்த முப்பது வருடகால யுத்தத்தில் இலங்கை இராணுவம் செய்த அட்டூழியங்களை தமிழ் மக்கள் அறிவார்கள். தாம் இராணுவத்திடம் போகும் போது என்னமாதிரியான சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டிவரும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் தொடர்ந்தும் மக்கள் சரணடைந்தபடியே இருந்தார்கள். இதில் தாம் தோற்றுப்போவதாக எண்ணிய புலிகள் இராணுவத்திடம் போக இருந்த மக்களைத் தடுத்தார்கள். முடியாத பட்சத்தில் சுட்டுத்தள்ளினார்கள் . அதையும் மீறி மக்கள் சரணடைந்தபடியே இருந்ததர்கள். புலிகள் மக்களை கவசமாகப் பாவிக்கிறார்கள்.

தப்பியோடுபவர்களைச் சுடுகிறார்கள் என்றும் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை விடுவிக்க வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகமும் ஐ.நா.வும் தமது அறிக்கையில் தெரிவித்தன. ஆனால் விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளரான பா.நடேசன் அவர்கள் மக்கள் போக விருப்பமில்லாது இருக்கிறார்கள். புலிகள் தான் மக்கள் - மக்கள் தான் புலிகள் என்று மறுப்பறிக்கை விட்டார். ஆனால் அவருடைய அறிக்கையையும் மீறி மக்கள் பெருவாரியாகத் தப்பி வெளியேறிக் கொண்டிருந்தனர்.

இராணுவத்திடம் பாதுகாப்புக் கருதி சரணடைந்த மக்களை பொலநறுவைக்கு கூட்டிப்போய் வைத்து  அவர்களுடைய சிறுநீரகம் இருதயம் நுரையீரல் போன்றவற்றை அறுத்தெடுப்பதாகவும், அதனைப் பாதிரியார் ஒருவர் பார்த்து படமெடுத்ததாகவும் சொல்லி புகைப்பட ஆதாரங்களுடன் புலிகளி;ன் ஊடகங்களில் மிகப்பெரிய பொய்யைக் கட்டி விட்டார்கள். புலம் பெயர் புலி ஆதரவாளர்கள் அதனை ஐ.நா வரையும் கொண்டு போனார்கள். இந்தியாவின் ஆதிக்குடிகள்  மற்றும் தலித்துக்கள் பற்றிய கட்டுரையில் இருந்து திருடப்பட்ட படங்கள் அவை. புலிகளின் இந்த ஏமாற்றை அநேக ஊடகங்கள் உடனேயே அம்பலப்படுத்தியதுடன் அவை எங்கிருந்து திருடப்பட்ட படங்கள் என்பதனையும் வெளிக்காட்டின.
தமது சொந்த நிலங்களில் நிம்மதியாக வாழ விரும்பும் மக்களை புலிகளின் மனித கேடையங்கள் என்று பிரச்சாரமிட்டு வதைமுகாம்களுக்குள் முடக்க முயற்சிக்கும் சிறிலங்காவின் திட்டத்திற்கு மனித நேயத்தினை மதிக்கும் நாடுகள் துணைபோக்ககூடாது என்றும் நல்னபுரி நிலையம் என்று பெயரிட்ட வதைமுகாம்களில் நடைபெறும் கொடூரங்கள் நன்கு அம்பலமாகியுள்ள நிலையில் தமிழர்கள் ஏன் அங்கு போவதனை விரும்பப் போகின்றனர் என்றும் பெப்ரவரி 2009 இல் அறிக்கையிட்ட  பா. நடேசன் அவர்கள்  அதே இலங்கை இராணுவத்திடம்  கேவலமான முறையில் மே 17ந்திகதி சரணடையச்சென்றார். ஹிட்லரிலும் பார்க்ககமிகக் கொடிய அரக்கனை காட்டு மிராண்டியைப்போல மக்களைக் கொலை செய்கின்ற  ஒரு மனிதனை - அந்த மனிதனோடு சேர்ந்து ஒரு சிங்கள இனத்தை நாங்கள் எதிர் கொண்டு நிற்கிறோம் என்று சொன்ன புலிகளின் போர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோகி அவர்கள் - அவுஸ்ரேலிய காட்டுத்தீயில் இறந்தோருக்காக கதறிய உலகு சிங்களக் காட்டுமிராண்டியிடம் கொலைபடும் எமது மக்களுக்காக கவலைகூடப்படவில்லை. என்று கோபம் கொண்ட யோகி அவர்கள் அதே சிங்கள காட்டுமிராண்டி இராணுவதிடம் தானும் தனது சக பொறுப்பாளர்களும் மட்டும் எப்படிச் சரணடைய முடிந்தது?
இங்கே நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விடையம் ஒன்று இருக்கிறது. உலகில் மிகவும் இறுக்கமான ஒழுங்கையும் இராணுவக்கட்டுக்கோப்பையும் உறுதியையும் கொண்ட ஒரு இயக்கமாக விடுதலைப்புலிகள் அமைப்பு இருந்ததாக எல்லோராலும் நம்பவைக்கப்பட்டிருந்தது. தலைமைப்பீடத்தின் மீது அதிக விசுவாசமாக ஒவ்வொரு உறுப்பினர்களும் உருவாக்கப்பட்டார்கள். இயக்கத்திற்கு துரோகம் இழைப்பது மரணதண்டனைக்குரிய குற்றம். எதிரியிடம் பிடிபடும் போது சைனட் அருந்தி மரணிப்பது  கட்டாயமானது. மீறியவர்களுக்கு பின் மரணதண்டனை வழங்கியதும் தண்டனை அனுபவித்ததும் நாம் கண்ட வரலாறு. My Dautre Is Terrorist என்ற ஆவணப்படத்தில் இரண்டு பெண்புலிகளும் தலமை சொல்லும் எதையும் நாம் நிறைவேற்றத் தயாராய் இருக்கிறோம் எனவும் துரோகம் இழைப்பவர்கள் கொல்லப்படவேண்டியவர்கள் எனவும் சொல்கிறார்கள். இதுதான் விடுதலைப்புலிகளுடைய கட்டுக்கோப்பு.
விடுதலைப்புலிகள் தமது கட்டுக் கோப்பு என்பதை மிக இரகசியமாக ஒவ்வொரு உறுப்பினர்களின் பிடரிக்குள்ளும் ஒழித்துவைத்த துப்பாக்கியினூடே கொண்டு சென்றார்கள். தனிப்பட்ட ஒவ்வொருவர் மீதும் கண்காணிப்பை உருவாக்கியதினூடு எப்போதும் ஒரு அச்சத்தை மரணபயத்தை வைத்திருப்பதனூடு தமக்குக் கீழ் ஒரு தேவையற்ற ஒழுங்கை கடைப்பிடிக்க வைத்தார்கள். விடுதலைப் புலிகளின் படை வீரர்கள் கரும்புலியாகப் போய் மரணித்துவிட ஆசைப்படுபவர்களாக, அதற்குமுதல்நாள் தலைவருடன் எடுக்கும் புகைப்படத்தில் சிரித்துக் கொண்டு நிற்கும் மனநிலை எப்படி ஊட்டப்பட்டது. இப்படி விடுதலைப் புலிகளின் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் மரணத்தைத் துச்சமாக மதிக்கப்பழக்கிய தலைமை, ஏன் தான் மட்டும் வெள்ளைத் துணியை நம்பி இராணுவத்திடம் சரணடையத் துடித்தது. வாழ்தலின் ஆசை ஏன் அவர்களை மட்டும் பற்றிக் கொண்டது? எப்படி எதிரியின் முன்னால் தாம் மட்டும் சைனற் அடிக்காமல் சரணடைய வேண்டிவந்தது? தமது பல்லாயிரம் உறுப்பினர்களை பச்சைப் பாலகர்களை சைனற் அடித்து சாக வைத்த தலைமை, தான் மட்டும் சரணடைந்தது ஏன்? அவர்களுக்கு வாழ்தலில் ஆசை தமது உயிரின் மீதான ஆசை என்பதெல்லாம் ஏன்? நாம் இவற்றிற்கான விடையை யாரிடம் கேட்பது?


கடந்த மே 17ந் திகதி  புலிகளின் முக்கிய தளபதிகள் இராணுவத்திடம் சரணடைந்து புலித் தலைமை அழிக்கப்பட்டு விட்டதன் பின் புலிகள் ஒருபோதும் யாராலும் வெற்றி கொள்ள முடியாதவர்கள். அவர்கள் வீரம் செறிந்தவர்கள் என்று சொன்ன  அநேகர் மௌனித்துப் போனார்கள்.  யார் அடுத்த தலைவர் என்பது அவர்களிடம் இருக்கும் மிக முக்கியமான கேள்வி. விடுதலைப் புலிகள் என்பதன் பெயரில் தொடர்ச்சியான ஒரு இருப்பு என்பது இனிச் சாத்தியமானதா? மறவர் குலம், வீரமரணம், மாவீரம் என்ற சொற்பதங்கள் நம்மிடையே மிகவும் கேலிக்கூத்தானதாகி விட்டிருக்கிறது. பிறந்த குழந்தை இறந்து பிறந்தால் வாளால் கீறிப் புதைக்கும் மனநிலை யாரிடம் இனிவரும்? ஈழத்தில் விடுதலைப்புலிகள் என்பது பெயருக்குக் கூட உச்சரிக்கப்படமுடியாதபடி அது கேவலமான முறையில் அழிக்கப்பட்டிருக்கிறது. தனது அழிவுக்குப் பின் அதனைக் கொண்டு நடாத்த யாரையும் உருவாக்கிவிடவில்லை அதன் தலைமை.

புலம் பெயர்ந்த தேசங்களில் இருக்கும் புலிகளிற்குள் பிளவு வந்து விட்டது. இங்கு வரும் வருமானங்களை யார் கணக்கிடுவது என்பதில் மிகப்பெரிய சிக்கல் அவர்களுக்கு. இந்தச் சண்டையே முற்றி தமது தலைவன் உயிருடன் இருக்கிறான் என்றும் சிலர் இல்லை என்றும் சண்டையிட வேண்டி வருகிறது. புலிகளின் முக்கிய செயற்பாட்டாளரான பாதிரியார் இம்மானுவேல் அவர்கள் சண்டையை இடைமறித்து இருசாராருக்கும் இணக்கம் வேண்ட இடையில் நிற்க வேண்டி வருகிறது. தமிழ் மக்களிடம் நாம் ஒற்றுமையோடு இருந்து அடுத்த கட்டத்தை கண்டறிவோம் என்று  தமிழ்மக்களிடம் கையேந்துகிறார் புலிகளின் கடைசி முகவர் குமரன் பத்மநாதன்.
இது எல்லாம் போக, விடுதலைப் புலிகள் என்பது ஈழத்து அரசியற் சூழலில் இனி எவ்வாறான நிலையில் ஈடுபடப் போகிறது என்பது நமக்கு முக்கியமானது. எஞ்சியிருக்கின்ற புலிகள் - பத்மநாதன் போன்றவர்கள் தாம் இனி ஜனநாயக வழியில் போராடப் போவதாகவும் மிகுதித் தமிழ்க் கட்சிகளுடன் கலந்துரையாடி ஒரு இணக்கத்திற்கு வர இருப்பதாகவும் சொல்லியிருப்பது நல்லதாக இருந்தாலும் அது சாத்தியமானதா என்பதையும் யோசிக்க வேண்டும். விடுதலைப்புலிகள் என்பது புலம் பெயர்ந்த நாடுகளிலும் மற்றும் இலங்கை இந்தியா போன்ற நாடுகளிலும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகவே இருக்கிறது. அந்தப் பயங்கரவாத இயக்கம் ஒரு கொடிய யுத்தத்தின் மூலம் அழிக்கப்பட்டிருக்கிறது. இறுதி யுத்தத்தில் தமிழர்களும் சிங்கள இளைஞர்களும் பெருவாரியாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடந்த முப்பது வருடத்தில் சமாதான முயற்சிகள் பேச்சுவார்த்தைகள் மூலம் புலிகள் தமிழர்களுக்கான ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்ள நிறையவே சந்தர்ப்பங்கள் இருந்தன. 1987இல் வடகிழக்கு மாகாணசபைத் தேர்தலில் விடுதலைப் புலிகள் பங்கு பற்றினால் தாம் நிபந்தனையற்று விலத்துவதாக அத்தனை தமிழ்க்கட்சிகளும் அறிவித்தம் புலிகள் மறுத்திருந்தனர். புலிகளின் வரலாற்றில் ஒரு ஜனநாயகப் போக்கு என்பது மருந்துக்கும் இருக்கவில்லை. அவர்களால் தமிழ் சமூகத்திற்குள் ஜனநாயக முறைப்படி இயங்குவது என்பது எக்காலத்திலும் முடியாத காரியம். கடவுளிற்கு சமமமாக வழிபட்ட தலைவன் கேவலமான முறையில் இறந்த பின்னர் இனி யாரையும் நம்ப அந்த மக்கள் தயாராய் இருக்கமாட்டார்கள். ஆதலினால் விடுதலைப்புலிகள் என்ற  ஒரு அமைப்பு  தமிழ் மக்களது பிரச்சனை பற்றிப் பேசுவது  அவர்களுக்குள் அரசியல் வேலை செய்வது என்பதன் சாத்தியம் மிகக் குறைவே.
இந்த இறுதி யுத்தத்திலும் அத்தனை தமிழ்மக்களின் படுகொலையைத் தடுத்துவிட புலிகளுக்கே மிகஅதிகமான சந்தர்ப்பம் இருந்தது. அப்படி இருந்தும் இறுதிவரை அந்த அழிவை அவர்கள் கணக்கெடுக்கவில்லை. தமது மடியில் இறுகியதும், தமது உயிருக்கு ஆபத்து நெருங்கியதுமே அவர்கள் தமது ஆயுதத்தை மௌனிப்பதாக அறிவித்தார்கள். தாம் சரணடைவதாக அறிவித்தார்கள். குறைந்தபட்சம் கிளிநொச்சியை விட்டுப் போகும் போதாவது இதனைத் தெரிவித்திருக்கலாம். அவர்கள் செய்யவில்லை. மிகப் பெரிய அழிவுக்குப்பின் இறுதித் தருணத்தில் மட்டும் தமது சரணடைவைத் தெரிவித்தார்கள். ஆனால் இலங்கை அரசு நம்பவைத்துக் கழுத்தறுத்தது.  பேசவரச் சொல்லிவிட்டு சுட்டுத்தள்ளினார்கள் என்றும் சரணடைந்தவர்களைக் காட்டுமிராண்டிகள் போல் சுட்டது என்றும் புலிகள் தமது ஊடகங்களில் கோபம் கொள்கிறார்கள். இந்தக் கோபம் உண்மையில் அவர்களுக்கு வருவது நியாயமானதல்ல. விமலேசுவரனை பேசிவிட்டு விடுவதாகச் சொன்னவர்கள் உடலைத்தான் தந்தார்கள். பேசுவோம் கொஞ்சம் பொறுங்கள் என்ற சிறீசபாரத்தினத்தை ஒரு வினாடியில்; பேசாமல் செய்தார்கள். இப்படி நம்பவைத்துக் கழுத்தறுத்த சந்தர்ப்பங்கள் புலிகளிடம் காலாகாலத்திற்கும் நிறையவே இருந்தன. அதனால் இதற்கெதிராக புலிகள் சார்பிலிருந்து யார் செய்யும் கண்டனங்களும் எந்தப் பிரியோசனத்தையும் தருவதாக இல்லை.



யுத்தத்தின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் பிரதேசம் சுடுகாடாய் மாறியிருந்தது. அரச இராணுவம் மிகக் கொடூரமான முறையில் எஞ்சியிருந்த மக்களை அழித்திருக்கிறது. மக்களே புலிகள் புலிகளே மக்கள் என்ற புலிகளின் பொய்யான கோசத்தை தனக்குச் சாதகமாக்கி இறுதியுத்தத்தில் பேரழிவை நடாத்தியிருக்கிறது. உலகின் எந்த மூலையிலும் இப்படி ஒரு அழிவை தான் பார்த்திருக்கவில்லை என்று பான்கிமூன் சொல்லுமளவுக்கு அங்கு யுத்தம் தாண்டவம் ஆடியிருக்கிறது. புலிகளின் சரணடைவுக்குப் பின் அங்கு எஞ்சியிருந்த காயம்பட்டவர்கள், அங்கவீனர்கள் எங்கே என்பதும் அவர்கள் எப்படிக் கொல்லப்பட்டார்கள் என்பதும் எல்லோருக்கும் அறிந்த பொய்யாகிக் கிடக்கிறது. யுத்தத்தில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் பெண்போராளிகளது  உடல்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு  எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. நாம் இவற்றைச் செய்தது விடுதலைப் புலிகளா அல்லது இராணுவமா என்று நாங்கள் விவாதம் நடாத்திக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இந்த யுத்தத்தில் பங்குபற்றிய இருசாராரும் இதைச் செய்யமாட்டார்கள் என்று அடித்துச் சத்தியம் செய்ய முடியாமல்  இருபகுதியினரும் செய்த மகோன்னதத் தவறுகள் நமது கண்முன் விரிந்து கிடக்கிறது. யுத்தத்தில் பங்கு கொண்ட அனேக இராணுவச்சிப்பாய்களிக் கைகளில் புகைப்படக் கமராக்கள் இருந்திருக்கின்றன. இலங்கை அரசு இதைத் திட்டமிட்டே அனுமதித்திருக்கிறது. இலங்கை அரச அனுமதி பெற்ற புகைப்படங்களைவிட நமக்கு இன்னும் அதிக அதிர்ச்சியூட்டும் படங்கள் .இந்தச் சிப்பாய்கள் மூலம் இனிவரும் காலங்களில் வந்து சேரப்போகின்றன என்பது மட்டும் உண்மை. அவற்றைக் கூட புலிகள் எடுத்தார்களா அல்லது இராணும் எடுத்ததா என்று நாம் பேசிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.  இராணுவம் வீசிய எறிகணைகளில் அங்கங்களை இழந்து துடித்தக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு துணியெடுத்துக்கட்ட ஆளில்லாமல் இருந்த தருணங்களில் புலிகள்  புகைப்படமும் வீடியோவும் எடுத்துப் புலம் பெயர்ந்தவர்களுக்குச் சுடச்சுட அனுப்பிக் கொண்டிருந்தவர்கள்தான். இவர்களது கட்டுப்பட்டிலிருந்த வங்காலையில் மிகத் துயரமான வங்காலைப்படுகொலை என்று பெயர்பெற்ற குழந்தைகளின் கழுத்தறுத்துக் கட்டித்தூக்கிய புகைப்படத்தையும் நாம் புலிகளின் ஊடகங்களில் பார்த்து வந்தவர்கள்தானே. ஆக யார்செய்தாலென்ன இந்த அழிவுகளுக்கும் அவலங்களுக்கும் நாமும் பலவகையில் பொறுப்புச் சொல்லியாக வேண்டும்.
இராணுவத்தினால் கடந்த யுத்தத்தின் இறுதி நாட்களான மே 16,17 களில் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து  ஐ.நா உட்பட அத்தனை மனித உரிமை அமைப்புக்களும் கேள்விக்கணைகளைத் தொடுத்தும் இலங்கை அரசு பதில் சொல்ல மறுக்கிறது. வெற்றியின் பெருமிதப்பில் அனைத்தையும் நிராகரித்துவிட்டு திமிரோடு நிற்கிறது இலங்கை அரசு.   கடந்த முப்பது வருடமாக பாசிசவலயத்துள் வாழ்ந்து பழகிய ஈழத்தமிழினம் மே 17 புலிகளின் அழிவுக்குப்பின் அடுத்தகட்டம் நகரமுடியாமல் நிற்கிறது, புலிகளற்ற தமிழ் சமூகம் சிங்கள இனத்தால் முழுமையாக விழுங்கப்பட்டு விடும் என்று அனைத்து ஊடகங்களும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. ஏதாவதொருவகையில் தமது அடையாளத்தை உருவாக்குவதுடன் ஈழத்தமிழர்களது அரசியல் வாழ்வில் மீளப் புகுந்து விட புலம் பெயர் புலிகள் விடாமுயற்சி செய்கிறார்கள்.ஆனால் ஈழத்தமிழர்களின் சார்பில் இனிப் பேசவரும் யாரும் புலிகளது அடையாளத்துடனோ அல்லது அதன் நிழலாகவோ இருக்கமுடியாது என்பதுதான் உண்மை.


நன்றி
2009 உயிர்மெய்

Tuesday 21 April 2015

ஐஞ்சியேத்துக்கு உதவாத கழிவிரக்கமும் உணர்ச்சிவசப்படுதலும். படிவ அட்டவணைக்கூடாக அடையாளப்படுத்தும் குறைந்தபட்ச நியாயம்.


கற்சுறா






கனடாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும் புலிகளைத் தடைசெய்துள்ளது. இந்தியாவில் புலிகள் மீது தடைகள் இருப்பதும் இல்லாமலிருப்பதுமாகவே தோற்றமளித்து வருகின்றது. இந்தத் தடைகளும்  பின் உருவாகும் தடைநீக்கங்களும் தமிழ் மக்களைப் பொறுத்தளவில் ஒன்றும் புதிய விடையமல்ல. இலங்கையிலும் புலிகள் மீதான இந்தத் தடைகள் அவ்வப்போது தோன்றி மறைவனதான். தடையும் தடைசெய்தவர்களோடு தேன்நிலவும் கொண்டாடிய ஞபகங்கள் விடுதலைப்புலிகளுக்கும் ஏராளம் உண்டு.

விடுதலைப்புலிகளை இந்த நாடுகள் தமது தேசங்களில் பயங்கவாத அமைப்பாகக் கருதி அவற்றைத் தடை செய்துள்ளன. இதனை விடுதலைப்புலிகள் மறுப்பதற்கு அப்பால் விடுதலைப் புலிகளை அவர்களது அதீத வன்முறைப் போக்கை பாசிசச் செயற்பாடுகளை நிராகரித்து வந்தவர்கள் விமர்சித்தவர்கள் பலர் புலிகளின் மீதான தடை தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடு என்பதாகவும் தமிழ் மக்களது விடுதலையைப் பின்னுக்குத் தள்ளும்  செயற்பாடு என்பதாகவும் சொல்லிவருகிறார்கள். இங்கே சொல்லப்படும் காரணங்கள் - பிரச்சனைகள்  அளவிலே கூடக் குறைய என்பதை விட எல்லோருமே புலிகள் மீதான தடை தவறு என்பதாகவோ கருதுகிறார்கள். கனடிய அரசோ அல்லது ஐரோப்பிய ஒன்றியமோ தமது நலன்களுக்காவே, தமது ஏகாதிபத்திய சிந்தனையின் வாயிலாகவே தடைசெய்துள்ளது. தமிழ்மக்களின் நலன் அவர்களுக்கு முக்கியமில்லை. அண்மைக்காலத்தில்  புலிகளை அம்பலப்படுத்திய மனித உரிமைகள் கண்காணிப்பு அறிக்கையோ அல்லது இங்குள்ள ஜனநாயகத்தை விரும்பும் மாற்றுக்கருத்தாளர்களது குரலோ இவர்களது தடைக்கு உதவவில்லை. இது எப்பவோ இந்த அரசுகளால் எடுக்கப்பட்ட முடிவு. என்ற விளக்கங்களோடு புலிகள் மீதான தடை பிரியோசனமற்றது என்பதாக நமக்கிடையே நிறையக் கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன.

புலி என்கின்ற அமைப்பு  தமிழ் மக்களுடைய விடுதலையை வேண்டி செயற்படுகின்ற ஒரு அமைப்பல்ல. தமிழ்மக்கள் என்று பொதுவாக சொல்லிவரும் கருத்தாடலும் உண்மையானதல்ல. என்ற எனது நிலைப்பாடே இதுகுறித்து எழுதவைத்துள்ளது.

இதைச்சொன்னவுடன் மிக இலகுவாக கன்னை பிரித்து இவன் அவனுடன் சேர்ந்து விட்டான். அல்லது  இவன் அவன்ர ஆள். என்று ஒற்றைவரியில் விலத்திவிட எனது நண்பர்களுக்கு மிகமிக இலகுவாக இருக்கும். அப்படியான எனது நண்பர்கள் தயவுசெய்து இந்த இடத்திலேயே நிறுத்தி நேராக படிவ அட்டவணையை நிரப்ப செல்லுங்கள்.

1. விடுதலைப் புலிகள் ஒருபோதும் நேசக்கரங்களை நீட்டி கருத்து வேற்றுமை மாற்றுக்கருத்துரிமை பற்றி விவாதித்தவர்கள் கிடையாது. தமது அதீத வன்முறையின் மூலம்  மாற்றுக் கருத்தாளர்களை மற்றைய விடுதலைப் போராட்டக் குழுக்களை அழித்தொழித்தவர்கள். இந்த  அழித்தொழிப்புக் குறித்து வெறும் வரலாற்று பதிவாக மட்டும் எண்ணிக் கொள்பவர்கள் அல்லது தற்போது எழுதிக் கொள்பவர்கள் அல்லது கேட்டுக் கொள்பவர்கள் யாருமே அதன் உள்ளார்ந்த வன்மம் குறித்துப் புரிந்து கொள்ள முடியாதவர்கள். இப்போது புரிந்து கொள்ள முடியாதவர்கள் இனி ஒருபோதும் புரிந்து கொள்ளப் போவதில்லை.அதன் ஒவ்வொரு அலகையும் பட்டுணர்ந்தவர்கள் பார்த்துணர்ந்தவர்கள் நாங்கள். இங்கே மற்றவர்களுக்கான விளங்கப்படுத்தல்களுக்குள் நான் நுழையவில்லை. அது எனது தேவையுமில்லை.

2. விடுதலைப் புலிகள் புலம் பெயர் சூழலில் தமது இருப்பைத் தக்கபடி -தாம் நினைத்தபடி-தக்கவைத்துக் கொண்டவர்கள். வெறுமனே மக்களிடம் பணம் பெற்று அவர்கள் தமது நிலையை வலுப்படுத்திக் கொண்டவர்களல்ல. அவர்கள் வெளிநாட்டு மக்கள் கொடுக்கும் பணத்தில் மட்டும்  தமது யுத்தத்தை வளர்த்துக் கொண்டவர்களுமல்ல என்பது எவருக்கும் இலகுவாகப் புரிவது. மக்கள் கடைகள் கட்டுவது பெரிய வியாபார நிலையங்கள் ஸ்தாபிப்பது என்பது தொடங்கி ஆட்கடத்தல் தூள் கடத்தல் என்று சர்வதேச மாபியா வேலைகள் முழுக்கச் செய்பவர்கள் அவர்கள். அப்படி நீண்டகால பணம் பெறும் சூழலை உருவாக்கும் நிலையை எப்பவோ தொடங்கி விட்டார்கள். (ஒரு இயக்கத்தை நடாத்த என்ன வேலைகளும் செய்யலாம். எத்தனை கொலைகளும் செய்யலாம். என்று பேசிக் கொள்ளும் வழமையான யாழ்ப்பாணிய சிந்தனையுள்ளவர்கள் தயவு செய்து பொறுத்துக் கொள்க) ஆனாலும் இறுதிவரை மக்களிடம் என்ன அடாவடி காட்டி அச்சுறுத்திப் பணம் பெற முடியுமோ அவர்கள் செய்து கொண்டுதான் இருந்தார்கள். அவர்களுடைய மக்கள் போராட்டம் என்பது என்ன வழியிலாவது மக்களை அச்சுறுத்தி  தமது செயற்பாடுகளை முன்னிறுத்துகிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும். இந்த அனுபவம் அண்மைக்காலங்கள் வரை அனைவரும் உணர்ந்திருப்பர். புலிகளை விமர்சிப்பவர்கள் கொலை செய்யப்படுவது, கடத்திக் கொண்டுபோய்த் தாக்கப்படுவது. என்று அவர்களது மரபுவழிப் போர் ஈழத்தில் நடைபெறுவது போலவே புலம் பெயர்ந்த நாடுகளிலும் குறைவின்றி நடந்தது. ஐரோப்பாவில்  சபாலிங்கத்தின் கொலை நமக்குத் தெரிவித்தது என்ன? ஈழத்தில் உள்ளது போல் எத்தனை பேர் வெளிநாடுகளில் புலிகளின் அண்டக்கிறவுண்ட் குண்டர்களால் தாக்கப்பட்டு மிரட்டப்பட்டுள்ளார்கள்? சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்கள். என்பதை நாம் கணக்கெடுத்துப் பார்த்தால் தெரியும்.


3. புலிகள் என்பது இன்று ஈழத்து மக்களுக்காகப் போராடும் ஒரு அமைப்பு என்ற ஒரு மாயையின் பின்னால் அதனுடைய கொடூர முகம் ஒரு நேர் கோட்டில் மக்களைப் புதைகுழியில் தோண்டிப்புதைத்துக் கொண்டிருக்கிறது என்பதும். தன்னுடைய இருப்பினைத் தக்கவைக்க ஈழத்து மக்களில் அது எத்தனை பேரைப் பலிகொடுக்கவும் தயாராய் இருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஈழத்தில் பிளவுபட்டுப் போயுள்ள  கிழக்கில் தன்னுடைய இலக்குத் தவறிவிட்டதைப் புலிகள் உணர்ந்து கொண்டுவிட்டார்கள். அதிலிருந்து மீளமுடியாத புலிகள் தம்மை நியாயப்படுத்த இன்றுவரை எத்தனை கொலைகள் செய்துள்ளார்கள். இந்தக் கொலைகள் அதாவது வடக்கிலும் சரி கிழக்கிலும் சரி தெற்கிலும் சரி தினம் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் மக்கள் யாருடைய நலன்களுக்காக கொல்லப்படுகிறார்கள் என்பதை நாம் கணக்குப்பண்ண வேண்டும்.

4. இப்போதுகனடிய அரசும் ஐரோப்பிய ஒன்றியமும் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் மீளவும் சேர்த்துள்ளது. விடுதலைப்புலிகளின் மீதான இந்தத் தடை தவறானது. ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் எதிரானது. ஏகாதிபத்திய அரசுகள் தமது நலன்களுக்காக இதனைச் செய்கிறது. புலிகள் மீதான கேள்விகளை முன்வைப்பதற்கு தமிழ்மக்களுக்கு மட்டுமே உரிமையுண்டு தமிழ் மக்களின் விடுதலைக்கு இது தடையாகும். புலிகளே மக்களின் விடுதலைக்கு குரல் கொடுக்கும் கடைசிப் புள்ளி. அதன் மீதான இந்தத் தடை மக்களின் விடுதலையை பின்நோக்கி நகர்த்துகிறது. ஏகாதிபத்திய அரசுகள் ஏற்படுத்திய இந்தத் தடையின் நோக்கம் தவறானது. இந்தத் தடை புலிகளின் எதிரிகளுக்கு மட்டுமே சந்தோசமானது. மற்றப்படி மக்களுக்கு எதிரானது. இது ஈழத்து மக்களுக்கு மட்டுமல்ல வெளிநாடுகளில் வாழுகின்ற ஒவ்வொரு தமிழ்மக்களுக்கும் எதிரானது, பாதிப்பை உண்டு பண்ணக்கூடியது என்று பல முனைகளில் புலிகளின் தடைகள் குறித்து வந்திருக்கின்ற கருத்துக்களை என்னால் தனித்தனியே உடைக்க முடியும். ஒட்டுமொத்த தமிழ் மக்கள் யார்? அவர்களின் விடுதலை என்பது எது? எப்படி புலிகள் மட்டுமே மக்களில் கடைசிக் குரலானார்கள்?புலிகளின் எதிரிகள் அல்லது புல்லுருவிகள் என்பவர்கள் யார்யார்? ஏன் புலிகள் பற்றிய இருப்பை தமிழ் மக்கள் மட்டுமே தீர் மானிக்க  முடியும்?என்று தனித்தனி அலகுகளில் இதனை எழுதிவிட முடியும். அது அல்ல எனது நோக்கம்.

5. புலிகளை ஏகாதிபத்திய அரசு தனது நலன்களுக்காக தடை செய்கிறது. அது தவறான செயற்பாடு என்றே வைத்துக் nhகள்வோம். இதே ஏகாதிபத்திய அரசு புலிகளைத் தடை செய்யாது இருந்தால் சரியாகுமா? தடைசெய்யாமலிருந்தால் அது ஏகாதிபத்திய நலன் சார்ந்ததாக இருக்காதா? ஏகாதிபத்திய அரசு புலிகளைத் தடை செய்வதற்கும் தடைசெய்யாமல் இருப்பதற்கும் இடையில் தமிழ் மக்கள் தமது விடுதலையில் பெறக்கூடிய இலாபங்கள் என்ன? - இங்கே தமிழ் மக்களின் விடுதலை என்பது புலிகளின் இலபங்களாகிப் போன நிலையை விளங்கிக் கொள்ள வேண்டும். -என்பதைச் சொல்ல வேண்டும்.  கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் மற்றய வெளிநாடுகளிலும் புலிகளின் வன்முறை என்பது கட்டுக்குள் அடங்காத முறையில் அத்துமீறிப் போய்க் கொண்டிருந்தது என்பதை நாம் பல சந்தர்ப்பங்களில் சொல்லி வந்திருக்கிறோம். புலிகளின் மீதான இந்தத் தடை புலிகளைப் பாதிக்குதோ இல்லையோ புலிகளுக்கு வருமானம் வருமோ அல்லது குறையுமோ என்பது பற்றிய ஆய்விற்கு அப்பால் புலிகளின் சண்டித்தனத்திற்கு ஒரு ஆப்பு என்பதை யாரும் இல்லை என்று சொல்லமாட்டார்கள். சண்டித்தனமற்ற புலிகளாக இருந்து பழக்கப்படாதவர்கள் அவர்கள். ஈழத்தில் மிகவும் இலகுவான முறையில் சாதாரண ஒருவிடையத்திற்கு மக்களாக இருந்து எதாவது ஒரு கேள்வியை புலிகளின் நடவடிக்கைகள் குறித்து கேள்வி கேட்டால் அந்த நபர் அடுத்த கணம் நடமாடக் கூடிய ஒரு சூழல்  இருக்கின்றது என்று யாரும் கூறிவிட முடியுமா? புலிகளை எதிர்த்து வாயளவில் ஒரு சொல்லைத்தானும் சொல்லி விட முடியாத ஒரு வாழ்நிலையைத்தானே ஈழத்தில் புலிகள் வழமையாக்கி விட்டிருக்கிறார்கள். அப்படியொரு நிலையை புகலிடம் தேடிவந்த நாடுகளிலும் புலிகள் நடைமுறையில் வைத்திருந்தார்கள். இப்போதும் கூட வைத்திருக்கிறார்கள். அநேகமான தமிழர்களின் புகலிட நாடுகளில் விடுதலைப் புலிகளின் கொடி பறக்கும் பெரிய வாசஸ்தலங்கள் இயங்கிக் கொண்டுதான் இருந்தது. அந்தக் கொடிகளின் கீழ் புகலிட நாடுகளில் வதிக்கும் தமிழர்களின் குடும்பப் பிரச்சனைகள் தொடக்கம் கப்பம் வாங்குவது வரை எல்லாவிதமான  யாழ்தேசவழமைச்சட்டங்களையும் புலிகள் நடைமுறையில் வைத்திருந்தார்கள். இந்தவகை நடைமுறைக்கு பாதிப்பை உண்டுபண்ணியுள்ளது தற்போதைய புலிகள் மீதான தடை.  புலிகளின் தடை குறித்து நாம் சந்தோசமடைவது அல்லது தடையை விரும்புவது இந்த ஒரே விடையம் குறித்தே.


6. மக்களுக்கான கருத்துச் சொல்லும்  அனைத்து வாசல் கதவுகளையும் இந்த நாடுகளிலும் முழுதாக அடைத்து விட்டவர்கள் புலிகள். அதனால்தான் அனைத்து வியாபரிகளும் பத்திரிகையாளர்களும் புலிகளை அண்டிப்பிழைக்கும் நிலையில் இருக்கிறார்கள். என்ன நடக்குமோ என்று பயமுறுகின்ற மனோநிலையிலேயே  புலிகளின் தடைகள் குறித்து எழுதி தமது புலி விசுவாசத்தை புலிகளுக்கு முந்தி வெளிக்காட்டுகிறார்கள். இவர்கள் ஈழமக்கள் குறித்து அக்கறைப்படுபவதாகச் சொல்லிக் கொள்வது எல்லாம் தமது வியாபார நலன் நோக்கியதாகவே இருக்கிறது. புலிகள் மீதான விமர்சனத்தை முன்வைப்பவர்கள் குறித்து  புலி எதிர்ப்பாளர்கள்- துரோகிகள்- புல்லுருவிகள் என்ற பதங்களை இவர்கள் பாவிப்பதனூடாக தமது தீவிரபுலி விசுவாசத்தைக் காட்டி விடுகிறார்கள். இதன் மூலம் இவர்கள் அடைய நினைப்பது தமிழ் மக்களின் விடுதலையை அல்ல.

7. புலிகளின் தடையை ஆதரிப்பதால் அல்லது தடை தேவை என்பதால் நாம் எந்தப் பேயுடனும் சேர தயாராய் உள்ளோம் என்று நீங்கள்; குற்றஞ் சாட்ட முடியும். ஈழத்தில் புலிகளின் சிந்தனையை அழிக்காமல் ஜனநாயகம் பற்றியோ சுதந்திரம் பற்றியோ அல்லது தேசியம் பற்றியோ நாம் பேசிவிட முடியாது. புலிகள் இவை எல்லாவற்றையும் மற்றவர்களுக்கு மறுத்து வந்த தொடர்ச்சி நமது வரலாறாகிவிட்டதை நாம் அறிவோம். இங்கே நான் புலிகளின் சிந்தனை என்று சொல்லிக் கொள்வது குறித்து கவனிக்க வேண்டும். புலிகளும் புலிகளின் சிந்தனையில் யார் இருந்தாலும் நமது எதிர்ப்பு பொதுவானதே. இதில் நீ ஏன் ஈபிஆர்எல்எவ் இனது வன்முறையை எதிர்க்கவில்லை எப்போதும் புலிகள் பற்றி மட்டும் பேசுகிறாய் என்று கேட்டால் என்ன பதில் சொல்லிவிட முடியும்?

8. கனடாவிலும் ஐரோப்பாவிலும் புலம்பெயர்ந்த மக்கள் கூடுதலாக இருப்பவர்கள். இவர்களை கொம்புசீவி விடுவதும் இன்னுமொரு யுத்தம் வரும் அது கடைசி யுத்தம்  என்று கதை விட்டு பணம் பறிப்பதும் புலிகள் தொடர்ந்து செய்து வருவது.ஆனையிறவு யுத்தம் பற்றிய அனுபவம் எல்லோருக்கும் இருக்கும். புலிகளால் தமது படையளவிலோ அல்லது சமூக சூழல் காரணமாகவோ இனியொரு பெரிய யுத்தம்தொடங்கமுடியாத நிலையை மக்களுக்குச் சொல்லிக் கொள்ளப் போவதில்லை. யுத்தமற்ற நிலையில் எந்தத் தமிழ் மக்களுக்கும் புலிகள் வேண்டாதவர்களாகிவிடுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அப்படியொரு நிலையில் அடுத்த கட்டம் என்ன என்பதும் புலிகளுக்கு தெரியாது. அதனால் அந்த நிலையை அவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். குறைந்த பட்சம் புலிகள் அரசு ஒப்பந்தம்  நடைமுறைப்படுத்தினாலே புலிகள் தேவையற்றவர்கள் என்று வந்து விடும்நிலை தான் உண்டு. இந்த நிலையை அவர்கள் ஒருபோதும் சாத்தியப்படுத்தப் போதில்லை. அப்படியொரு நிலை தோன்றக்கூடிய அபாய நிலையில்தான் அல்லப்பிட்டி வங்காலை மக்களின் படுகொலைகள் புலிகளை தமிழ் மக்களிடத்தில் தூக்கிநிறுத்தியது. இதை எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறார்கள் என்று சிந்திக்க மக்களிடம் கொண்டுசெல்ல இன்று யாரும் இல்லை. வெறுமனே உணர்ச்சி வசப்படலிலும் கழிவிரக்கத்திலும் கரைகிறது தமிழ்ப் புத்திசீவிகளின் காலம். இலங்கை அரசோ மற்றும் கருணா அமைப்பினரோ மற்றய மாற்று விடுதலை அமைப்பு என்று சொல்பவர்களோ இந்தப் படுகொலைகளைச் செய்துவிடக் கூடிய தேவையின் சாத்தியம் குறித்து நாம் பேசவேண்டும். அவர்கள் செய்ய முடியாதவர்கள் என்பதல்ல. ஆனால் இந்தமாதிரிப் படுகொலைகள் செய்பவர்களது அரசியல் பின்னணி குறித்து ஆய்வு செய்ய ஆகக் குறைந்தளவு ஒரு பீ~;மரோ கோகர்ணனோ தயாரில்லை.

9. புலிகளிடம் தகுந்தளவு ஊடகபலம் இருக்கிறது. அதைவிஞ்சி புலிகளை வைத்து வியாபாரம் பண்ணுபவர்களிடமும் இருக்கிறது.  தமிழ் மக்களை எந்தவழியிலும் உணர்ச்சி கொள்ள வைப்பதற்கு இவை போதும். இந்த ஊடகங்களைத் தாண்டி நமது மாற்றுச் சிந்தனையாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் சிந்திப்பதில்லை. இன்றைய திருகோணமலையில் நடாத்திய தேவையற்ற விளையாட்டுக் குட்டியுத்தத்தின் தொடர்ச்சி இன்றுவரை எத்தனை தமிழர்களைப் பலியெடுத்து விட்டுள்ளது. தினமும் புலிகளின் குரங்குச் சேட்டையால் ஒவ்வொரு ஊர்களிலும் அப்பாவி மக்கள் பலியெடுக்கப்படுகிறார்கள். சமாதான காலத்தின் ஆரம்பகாலத்தில் புலிகள் மக்கள் படையை உருவாக்கியதன் பின்னணியைப் புரிந்து கொள்ள வேண்டும். பொதுமக்களப் பிடித்து ஆயுதப்பயிற்சி அழித்து விடுவதன் மூலம் தமது படைப்பலத்தைக் கூட்டலாம்  என்று புலிகள் நினைப்பதைவிட மொத்த மக்களையும் மக்களை இராணுவத்தின் எதிரியாக்கிவிடுவதன் மூலம் தமது இருப்பை தொடர்ச்சியாகப் பேணமுடியும் என்பதுவும் யுத்தமற்ற காலத்தில் மக்கள் இராணுவத்துடன் ஐக்கியமாகிடும் தன்மைகள் அதிகமாக உண்டு என்பதை புலிகள் பலசந்தர்ப்பத்தில் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.  அதைத் தடுக்கும் முயற்சியே புலிகளின் மக்கள் படை. அதில் புலிகள் வெற்றியும் அடைந்துள்ளார்கள்.

அந்த வெற்றியின் வெளிப்பாடுதான் முல்லைத்தீவு 61 பெண்கள் படுகொலை. இவ்வளவு யுத்த காலத்திலும் புலிகள் தமது படையணிகளை தோற்றுவித்து பயிற்சி அளித்தவர்கள்தான். யுத்தம் என்று தொடங்கி ஈழத்தின் அனைத்துப் பகுதியிலும் பரவலான யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஒரு வெட்டை வெளியில் அத்தனை தொகை இளம் பெண்களுக்கு பயிற்சி அழித்ததை புலிகளின் தற்கால இராணுவ தந்திரோபாயம் என்று சொல்லாமல் வெறென்ன சொல்வது. ஆகக் குறைந்தளவு விமானத் தாக்குதலுக்கு தப்பிக் கொள்ளும் பங்கர் கூட இல்லாது றெயினிங் கொடுத்தவர்கள் எனில் புலிகள் இந்த விடையங்களில் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். புலிகள் தமது பலவீனங்களின் பின்னால் தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் முஸ்லீம் மக்களையும் கொன்றுகுவித்த சம்பவங்கள் தான் இருக்கின்றது. தாம் தோற்றுப் போக வேண்டிய சந்தர்ப்பம் வந்தால் தாம் முழு இலங்கையையும் அழித்துவிடுவதாக அண்மைக் காலங்களில் அறிக்கை விட்டவர்களல்லவா அவர்கள். இதன்பின்பும் மக்களைப்பற்றி அவர்களின் அழிவைப்பற்றி புலிகளுக்கு அக்றை இருப்பதாகச் சொல்பவர்கள், புலிகளின் தடை ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் எதிரானது என்று சொல்லிக் கொள்பவர்கள் குறித்து ஐயமே மேலோங்கி நிற்கிறது.  கடந்த 10 நாட்களில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுளார்கள். ஆனால் இங்கே தமிழ்த்திருமனங்கள்  எல்லாம் பலாலிக்கு ஃபிளைற் அடிச்ச கனவு கலையாது,  வாழும் வரை போராடு... நமது வெற்றியின் நாளை சரித்திரம் சொல்லும் என்று பாடிக்கொண்டிருக்கிறது. அங்கே அப்பாவி மக்கள்  விளையாட்டுப் பொருளாகி புலிகளின் சுயநலத்திற்காய் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். புலிகளோ நமது தமிழ் மக்களின் கழிவிரக்க மனோநிலையை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் தமது தோல்வியை மறைக்க எவ்வகையிலும் மனிதக் குரூரக் கொலைகளைச் செய்து படமாக்கிவிட்டு மக்களிடம் தாம் கொண்டிருக்கும் ஊடகபலத்திற்கூடாக முன்வைத்து தமது இருப்பின் தேவையை சொல்லிவிடுகிறார்கள். நமது புத்திசீவிகளின் சிந்தனையும் புலிகளின் ஊடகத்தையே பார்த்துக் கவலைகொண்டுவருகிறார்கள். தமது தோல்வியின் ஒவ்வொரு கட்டத்திலும் புலிகள் இதனைச் செய்கிறார்கள். மக்களும் இதனை நம்புகிறார்கள். புலிகளின் பினாமி இராணுவ ஆய்வாளர்களும் பினாமிப் புத்திஜீவிகளும் புலிகள் பாலாலிக்கு விமானத்தாக்குதல் செய்தது புலம் பெயர்ந்த தமிழர்களுக்குக் கிடைத்த நற்செய்தி என்று கதைசொல்லிக் கொண்டிருக்கும் நேரம் இலங்கைஇராணுவம் அல்லைப்பிட்டியிலும் முல்லைத்தீவிலும் குண்டு பொழிந்து கொண்டிருக்கிறது. புலிகளின் அர்த்தமற்ற ஆசைகளுக்கும் அதீத அடாடடித்தனங்களுக்கும் வெற்றிகரமான பின்வாங்கல்களுக்கும் அல்லது அண்டன்பாலசிங்கம் சொன்னது போல் பிரபா சிந்தனைக்கும் உள்ளே இன்று ஆயிரம் வன்னிக்குழந்தைகள் சிங்களக் குழந்தைகள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். புலம்பெயர்ந்த புத்திசீவிகளோ அந்தக்குழந்தைகளின் வாழ்வில் தமது அரசியல் விஞ்ஞாபனம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

10. நமது தமிழ் சமூகத்தின் எதிர்கால  நிலை குறித்து எழுதிவரும் அநேகர் நமது சிந்தனைக்கு அப்பால் கற்பனாமுறையில் உள்ள சொர்க்கம் ஒன்றைப் படைக்க புலிகள் திருந்த வேண்டும் என்கிறார்கள். புலிகளை எதிர்க்க இலங்கை அரசுக்கோ இந்திய அரசுக்கோ ஐரோப்பிய அரசுக்கோ தகுதியில்லை  அதற்கான முழுத் தகுதியும் இலங்கைத் தமிழ் மக்களுக்கேயுண்டு என்கிறார்கள். புலிகளின் செயற்பாடு இலங்கைத் தமிழ் மக்களுக்குள் மட்டும் நின்று செயற்பட்டால் இந்த விவாதம் சரியானது. புலிகள் என்பது மிகப்பெரிய நச்சுவலை. இதற்குள் இருக்கின்ற முகம் பன்முகமானது. யசூசி அகாசி கிளிநொச்சிக்கு அடிக்கடி வந்துபோகிறார். உலகநாடுகள் கிளிநொச்சியில் ஒருங்கிணையுது என்றால், புலிகள் தமிழ்மக்களின் விடுதலைக்காகப் போராடும் அமைப்பு என்று இன்னும் சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. புலிகள் திருந்த வேண்டும் என்று நாம் கனாக் காணுவதிலும் அர்த்தமில்லை. புலிகளுக்கான இந்தியத்தடை இன்றும் தொடருகிறது என்றால் அது ரஜீவ் காந்தி கொலை தொடர்பானது. ஐரோப்பாவிலும் அமெரிக்கா கனடா போன்றவற்றிலும் தடைசெய்யப்பட்டதற்கு இங்குள்ள தமிழர்களின் அழுத்தம் ஒருகாரணமில்லை என்று தட்டையாகச் சொல்லிவிடமுடியாது. முன்னைய காலங்களை விட இந்த அழுத்தங்கள் மிகவும்பலமடங்காகியிருப்பதும் கவனிக்க வேண்டும். பன்முகமாகியிருப்பதை நோக்க வேண்டும். வெறுமனே ஐயோ புலிகளைத் தடைசெய்துவிட்டார்கள் நாம்தான் அதற்கு குரல் கொடுக்க வேண்டும் என்றும் நாம் ஜனநாயக வாதிகளாக இருக்கிறோம் அதனால் அனைத்தையும் கண்டிக்க வேண்டும் என்று நினைத்து புலிகள்  மாற்று விடுதலை இயக்கங்களை அழித்தது கண்டிக்கப்படவேண்டியது. மாற்று விடுலை இயக்கங்கள் மக்களை அழித்தால் அது கண்டிக்கப்படவேண்டியது. புலிகள் மக்கiளைக் கொன்றால் அது கண்டிக்கப்பட வேண்டியது. புலிகளை கனடிய அரசு தடைசெய்தால் அது கண்டிக்கப்பட வேண்டியது. என்று புனித ஜனநாகவாதியாக இருப்பவர்களுக்கு நாம் ஒன்றையும் சொல்லிவிடப் போதில்லை. இருந்து விட்டுப் போகட்டும். புலிகள் ரஜீவ் காந்தியைக் கொண்டால் ஆதரிப்போம் இந்திய அரசு பிரபாகரனைக் கொன்றாலும் ஆதரிப்போம். புலிகள் சந்திரிகாவைக் கொன்றாலும் ஆதரிப்போம். என்று. மாறிச் சொல்லிக் கொண்டிருப்பவர்களும் இவர்கள்தான். இந்த வாய்ப்பாட்டு முறையில் வாழ்வது தானே நமது பண்பாடு. இங்கே பொதுப்புத்தியென்ன புத்திஜீவிதம் என்ன எல்லாத்திற்குள்ளும் எஞ்சிக்கிடப்பது தமிழத்தேசியமும் யாழ்ப்பாணியமும் தானே.

புலிகளைத் தடைசெய்தது தவறு. புலிகளைத் தடை செய்தது மொத்த தமிழ் மக்களுக்குமான பாதிப்பு.புலித் தடை என்பது, தனிப்பட்ட புலியை மட்டும் குறிப்பாக தடை செய்யவில்லை. மாறாக தமிழ் மக்களின் நியாயமான உரிமையையும் மறுதலிக்கின்றது. என்பவர்கள் கீழேயுள்ள கேள்விகளுக்கு ஆம் அல்லது இல்லை என்று மட்டும் சொல்லுங்கள். ஒவ்வொன்றுக்கும் 10 புள்ளிகள். ஆகக் குறைந்தது பரீட்சையில்  ளு சித்தி எடுத்தாலே நீங்கள் சொல்வது சரியாகிவிடும். நாங்களும் உங்களுடன் சேர்ந்து கோசம் போட வருகிறோம்.
   

   


நன்றி " நம்மொழி" இதழ்
2006


Monday 20 April 2015

அவர்களால் கண்டடைய முடியாத பரவசம் ஒன்றிருக்கிறது.


கற்சுறா




எனது கவிதையை நானே மீளப் புணருகையில் கிடைக்கும் இன்பத்தின்கொள்ளளவு என்ன? ஒரு கவிதையை எழுதுவதும் அதை இன்னொரு தருணத்தில் வாசிப்பதிலும் இருக்கின்ற பரவசம் என்பது ஒன்றாவதில்லை. அது வேறொரு பெயரில் இருக்கும் கவிதையைத் திரும்பப் பார்த்து எழுதுவதற்கு ஒப்பாகும்.


எண்ணற்ற கவிஞர்களுடன் வாழும் கவிதைகளில் இன்னமும் கவிதை குறித்து எழுதிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. ஆனால் எழுத்துக்களில் கவிதை ஒழிந்துகொண்டே ஓடுகிறது ஆங்காங்கே வழியும் சில ததும்பல்களுடன்.


1980களிலிருந்து கிறீஸ் பூதங்களைப்பார்த்த, இந்தா பிள்ளையைப் பிடி இந்த பிள்ளையப் பிடி என்று மல்லாகத்தில் அலைந்த மோகினிப்பிசாசுகளைக் கண்ட கண்களால்தான் நாம்  நமது கவிஞர்களையும் காண்கிறோம். அதனால் எமக்குப் பெரிய ஆச்சரியங்களை அவர்கள் விட்டுவைக்கவில்லை. ஆனால் ஒரு தமிழகத்துக்கார வாசகன்அல்லது வாசகியால் கிறீஸ்பூதத்தை தன் மனதளவிலோ அல்லது புலனளவிலோ புரிந்த கொள்ளவே முடியாதபோது ஈழத்துக் கவிதை அலகை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்? ஆனால் பாருங்கள் ஈழத்தில் வாழ்கின்ற கவிஞனைவிட தமிழகத்து ஆய்வாளர்களுக்கும் அவர்களது பதிப்பகத்தார்களுக்கும் புலம்பெயர்ந்த ஈழத்து கவிஞர்கள் உலகத்தை மாய்க்கின்றவர்களாகத் தெரிகிறார்கள். உன்னதமானவர்களாகத் தெரிகிறார்கள். வாழும் காலநிலை அரசியல் நெருக்கடிகள் என்று எதையும் அருகிருந்து உணராதவர்கள்  பரதேசம் போய் பழஞ்சீலையைக் கிழித்தாலும் பாடிப்பெருவழி கடந்ததாய் எடுத்துரைக்கிறார்கள். பாவம் கணக்கு வழக்குகளுக்குள்ளேயே கவிதையை நெறுத்தெடுக்கிறார்கள்.



1.
யுத்தம் எப்போதும் நிர்வாணத்தை நோக்கியே அசையும். யுத்தத்தில் வெல்வதிலும் தோற்பதிலும் அதிகம் தரிசிக்க முடிவது நிர்வாணமே. இராணுவச்சிப்பாய்க்கு நிர்வாணம் குறித்து இருக்கும் அக்கறைக்கும் அவனால் சிறைப்பிடிக்கப்பட்ட போர்க்கைதிக்கு இருக்கும் அக்கறைக்கும் பெரிய வேறுபாடுகள் இருப்பதில்லலை.  இரண்டுக்கும் உயிரில் இருக்கும் அச்சத்தைப்போலவே ஆசையைப் போலவே நிர்வாணத்திலும் அச்சமிருக்கிறது. ஆசையிருக்கிறது. ஒன்றையொன்று வெற்றி கொள்வதில்தான் அதன் இருப்பிடம் மாறுபடுகிறது.



2.
நிழலை நகர்த்தி 
உயர்த்தியது 
சூரியன்.
நிழல் குளிர
சூடு பட்ட இடத்தில் 
வெளிச்சம்.
வெளிச்சத்தில் சூடற்று
குளிர்ந்து போன 
நிழலுக்குள்
ஒழிவதென்ன
விளையாட்டு?






3.
நனைந்து கிடந்த ஆற்றின் வாசலில்
இராணுவக் கோடு.
அவனைப் போலவே 
ஊர்ர்ர்ந்து போன ஓணானில் ஒட்டியது பயம்.
காட்டை வழி மறித்து ஊருக்குள் ஓடியது
இராணுவநதி.

சலசலவும் கிறுகிறுவும்
சரீரம் முழுதும்
பரவ
ஆற்றின் திசை நோக்கி அகலும்
உயிர்சதை.

ஆறு வழி வந்த
ஒரு இராணுவத் தாக்குதலில்
இருந்து தப்புவது-

மரணத்திற்கும் வாழ்வுக்கும்
இடையில்
எத்தனை நிமிடம்?








இந்தக்கவிதைகள் ஒரு தமிழக வாசகனுக்கு அல்லது கவிதை விமர்சகனுக்கு எவ்வித சலனத்தைக் கொடுக்கும்? நமது மொழியை அவர்களால் விளங்கிக் கொள்ள முடிந்ததா? எப்பொழுதும் தன்மீதான அதீத கவனக்குவிப்பைக் கொண்ட ஒரு அரசியல்வாதியைப் போன்ற தமிழகத்து எழுத்தாளன் புரிந்து கொள்ளும் முறை நம்மைப் போன்றதல்ல. அது வேறு.


இப்பொழுது ஒரு ஈழத்துத் தமிழ்க் கவிதை ஈழத்தவனுக்கு வாசிப்பில் கிடைக்கும் அனுபவத்திற்கும் தமிழகத்துக்காரனுக்கு கிடைக்கும் அனுபவத்திற்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. நமது மொழியும் பாடுகளும் அதன் பரவசங்களும் வேறு. அது தமிழகத்து இலக்கிய முதலைகளால் கண்டடைய முடியாதது. எப்படி கவிதை மொழிபெயர்ப்பாளர்கள் தமது வசதிக்குரிய கவிதைகளை மொழி பெயர்த்தார்களோ அNதுபோலவே தமது வசதிவாய்ப்புக்குரிய புலம்பெயர்ந்தவர்களது கவிதைகளையே பொருள் கொள்ளுகிறார்கள்.

உண்மையில் பாலஸ்தீனியக் கவிதைகள் என்றும் நிக்கரகுவாக் கவிதைகள் ரசியக் கவிதைகள் என்றும் நாம் தமிழில் வாசித்தவைகள் அந்தப் பிரதேசங்களை அவர்களின் படிப்பினைகளை எங்களால் பூரணமாக உள்வாங்கக் கூடியனவாக இருந்தனவா? உண்மையில் அவை பாலஸ்தீனக் கவிதைகள் என்று அடையாளப்படுத்த முடியுமா?  தமிழ் மார்க்சியர்களால் தமக்கு ஏற்ற கவிதைகளே மொழிபெயர்க்கப்பட்டு அவை பாலஸ்தீனக் கவிதைகள் என்ற பெயரில் வெளிவந்தன. உண்மையில் அவை பாலஸ்தீனக் கவிதைகளல்ல. பாலஸ்தீன அரசியல் கவிதைகள். மேலும் ஈழத்துத் தமிழ்க்கவிதை என்று மாற்றுமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டவைகள் மட்டும் அல்லவே ஈழத்துக் கவிதைகள். தனியே மரணத்துள் வாழ்வோம் தொகுப்பு மட்டுதானா ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்? இந்த மாதிரியான மொழிபெயர்ப்புக்கள் மாற்று மொழிகளில் மொழிபெயர்ப்பவர்களின் அரசியலைப் பொறுத்தே அவை தெரிவு செய்யப்படும். அவை கவிதை குறித்தான அக்கறையின் நிமித்தம் ஒருபொழுதும் செய்யப்படுவதில்லை.

அரை நூற்றாண்டு காலம் பொதுவான வாழ்க்கையை இழந்த ஒரு சமூகத்தின் மொழியை விளங்கிக் கொள்ளல் என்பது அந்த சமூகத்தாலேயே முடியாதபோது அதற்கு வெளியிருந்து பராக்குப்பார்த்த சமூகத்தால் விளங்குதல் சாத்தியமி;லலை. ஆனால் என்னமோ ஒரு ஈழத்து புலம் பெயர்ந்த எழுத்தாளனுக்கு தமிழகத்து பஞ்சவர்ணக்கிளி தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இன்று அதிகமாக தன்னை எழுதுதலை விடுத்து தமிழகத்து ஆசாமிகளுக்கு கதை எழுதிக் காலத்தைத் தள்ளுகிறார்கள் ஈழத்து எழுத்தாளர்கள்.

இதற்குள் நமக்கு பரீட்சாத்தக் கவிதைகள் வேறு எழுதித் தருகிறார்கள் எமது கவிஞர்கள்.  கவிதை எழுதுதல் என்பதற்குள் எதற்கு பரீட்சாத்தக் கவிதை? நமது கவிஞர்கள் என்ன நாசாவிலா வேலை செய்கிறார்கள்?

"உரையாடல்"1

நண்பர் திருமாவளவன்  முகநூலில் என்னிடம் கேட்ட ஒரு கேள்வியும் பதிலும்.


திருமாவளவன் கேட்கிறார்.

மிகநல்ல பதிவு. வாழ்த்துக்கள். இதற்கப்பால் நண்பரிடம் எனக்கொரு கேள்வியுண்டு. நீங்கள் போற்றுகின்ற பாலு மகேந்திரா, பிரமிள் போன்றவர்கள் தமிழ்நாட்டின் அங்கீகாரத்தால் போற்றப்பட்டவர்கள். இவர்கள் இருவரும் இலங்கைக்குள் கட்டுண்டிருந்தால் இன்று அறியப்படாமலே போயிருப்பார்கள். பிரமிளுக்கு எழுத்து பத்திரிகையும் அதுசார்ந்த நன்பர்களும் தான் அவருக்கு களம். தன்னை அடையாளப்படுத்திக்கொண்டபின் முரன்பட்டது வேறுவிடையம். ஆனால் தமிழ்நாட்டின் அங்கிகாரமாகவே அவர்கள் விளங்கினர். இதுதான் யதார்த்தம். இதை ஏற்றுக்கொண்டு பாரட்டுகிற நீங்க, தமிழ்நாட்டில் தங்கள் படைப்புகளை பதிவு செய்யும் சமகால படைப்பாளிகளை சாடுவதுதான் ஏன்? காழ்புணர்வு எனக் கொள்ளலாமா?


கற்சுறா சொல்கிறார்

அவர்களால் கண்டடைய முடியாத பரவசம் ஒன்றிருக்கிறது.
என்னிடம் முதன் முதலாக இரண்டு நண்பர்கள் கேள்வி கேட்டிருந்ததார்கள். அதற்குநான் உடனடியாகப் பதில் அளித்திருந்தேன். அதனை இங்கு பதிவிடுகிறேன்.
இது காத்திருந்த கேள்வி திருமாவளவன்.
பிரமிளும் பாலுமகேந்திராவும் இலங்கைக்குள் கட்டுண்டிருந்தால் இன்று அறியப்படாமலே போயிருப்பார்கள். என நீங்கள் சொல்வது மிகத் தவறு. அவர்கள் எதற்குள்ளும் கட்டுண்டு போகாதவர்கள்.


பிரமிள் எழுத்துக்காகவே வாழ்ந்து மரித்தவர். நீங்கள் சொல்வது போல் அவர் எழுத்தை தன் வாழ்வாய் எண்ணிய காலங்களில் இலக்கிய அவா கொண்டலைந்த இளைய வயதுகளில் கிடைத்தவர்கள் தமிழக இலக்கியவாதிகள்.
ஆனால் அந்த இலக்கியவாதிகளது புனிதங்களை உடைத்து இலக்கியம் என்பதன் பொருள் கொள்ளலை கவிதையிலும் சரி கதைகளிலும் சரி ஒரு வீரியத்துடன் நிகழ்த்திக் காட்டியவர் பிரேமிள். உண்மையில் பிரேமிள் தமிழகத்தில் வாழ்ந்திரா விட்டால் அவருடைய எழுத்தியக்கம் இன்னும் அதிகமானதாக இருந்திருக்கும். வியக்கும் வகையில் இருந்திருக்கும். என்பதுவே எனது எண்ணம்.


பாலுமகேந்திரா குறித்து நான் அதிகம் சொல்லக் கூடாது. என்னைப் பொறுத்தளவில் அவர் தமிழகத்துக் குரியவரல்ல. தமிழகம் காட்டிய சினிமாவைப் புறக்கணித்துத் தான் அதிக சினிமாவை உருவாக்கியவர். இந்த இருவரையும் தமிழகம் வளர்க்கவில்லை என்பதுதான் உண்மை. அவர்களுடைய ஆழுமையில் ஆக்கிரோசத்தில் அவர்கள் உரு மாறினார்கள். தமிழகம் அவர்களை முடக்கியிருந்தது.

பின் ஈழத்தை விட்டகன்ற கவலையில் , குற்ற உணர்வில் ஈழமக்களுக்கென தேசியகீதத்தை எழுதினார் பிரமிள். தமிழகத்துத் தம்பி என உசுப்பேத்திக் கொண்டலைந்த சீமானை தனது தத்துப் பிள்ளையாக அறிவித்தார் பாலு மகேந்திரா.

ஆனால் பிரமிளும் பாலுமகேந்திராவும் தமது கலைத்துவச் செயற்பாட்டில் தீவிரமாக இருந்தவர்கள். அதற்காக தமது வாழ்நாளை அர்ப்பணித்தவர்கள்.

ஆனால் பெரும்பாலான நமது தற்போதைய ஈழத்து இலக்கியவாதிகள் போன்று தமிழ் நாட்டை மையப்படுத்திய இலக்கிய வியாபாரத்தையும் தமிழகத்து இலக்கிய புருசர்களது அங்கீகாரத்தையும் வேண்டி நின்றவர்களல்ல. அவர்களை தமது படைப்புக்களால் மிதித்து மேவியவர்கள்.

நமக்குள் வாழும் அப்படி ஒருவரை நீங்கள் சொல்லுங்கள் திருமாவளவன்? ஒரு கவிஞன் ஓவியனாய் சிற்பக் கலைஞனாய் நாடக எழுத்தாளனாய் கட்டுரையாளனாய் வாழ்ந்து முடித்த ஒரு ஈழத்து எழுத்தாளனைச் சொல்லுங்கள்?


நம்மவர்கள் எழுதிய கதைகளுக்கு ஜெயமோகனும் கவிதைகளுக்கு வெங்கட்சாமிநாதனும்தானே இன்னும் முன்னுரை விளக்கம் எழுதவேண்டியிருக்கிறது.


தமிழ்நாட்டில் படைப்புக்களைப் பதிவு செய்வதில் யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை திருமாவளவன். அங்கு வருகின்ற பத்திரிகைகளில் எழுதுவதும் யாருக்கும் கவலையில்லை. ஆனால் நம்மவர்களது எழுத்துக்களை விளங்காமலே புகழுவதும் அதற்கு விளக்கமளிப்பதும் அது என்ன குப்பை என்றாலும் அதனை பதிப்பித்துக் காசாக்குவதும் தானே அவர்களது தற்போதைய நிலவரம்.


இதில் ஈழத்துப் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் அவர்களிடம் வெட்கமற்று மண்டியிட்டுக் கிடக்கிறார்கள் என்பதுதான் எனது கோபம். இது காழ்ப்புணர்வல்ல. அவர்கள் உங்களுக்குத் தருகின்ற விருதுகளும் அவர்களுக்கு நீங்கள் திருப்பிக் கொடுக்கின்ற விருதுகளும் இலக்கிய உலகில் அநாதரவானவை.  அவை தற்கால சிலம்பல்கள்.


இறுதியாக, நான் மதிக்கின்ற கலைஞர்கள் நீங்கள் குறிப்பிட்ட இருவர் மட்டுமல்ல என்பதனை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.தமிழகத்தின் இலக்கிய வெளியில் அகப்படாது 1960களிலே பெருந்தீயை வைத்த எஸ்.பொ. மற்றும் புலம்பெயர்ந்து நமக்கிடையில் இலக்கிய ஊழியக்காரராய் வாழும் கலாமோகன் ,சுகன். போன்றோர் என்றைக்கும் எனது பொக்கிசங்களே.