Thursday 23 April 2015

கவிதை - கற்சுறா


கற்சுறா



கதவின் சாயலில் திறந்து 

மூடியபடி இருந்த ஞாபகங்களை விட்டுவிட்டு 

மறைத்துக் கொண்டிருந்தது உள்ளே புகுந்து மறையும் வெளிச்சம். 

கறுப்பின் திரள் இறுகிய சுவரில் குந்தியிருந்த 

எனதுருவத்தின் உடலில் 

மெல்லிய கீறலாய் மாறி மாறி மோதியபடி இருந்தது ஒளிக்கற்று. 

இருளைக் குலைக்கும் கதவின் அசைவில் நினைவுகள் தடம்புரள 

ஏதாவது ஒரு நிமிடம் என் ஞாபகங்கள் என்னைக் கொன்றிருக்க 

வேண்டும். எப்பொழுதும் இரத்த வெறியுடன் கொலைக்கருவியாய் 

என்னுடனே உயிர்வாழும் ஞாபகம் 

ஒரு குழந்தையைப் போலவே அருகில் வந்தது. 

யாருக்கும் துன்பமில்லாத செல்லத்தனமான ஞாபகம் 

கதவினை விலக்கி விலத்திய விரல்களோடு 

ஒளிக்கற்றை இழுத்து 

என்முதுகில் விட்டு சவாரியே செய்தது. 

ஆனந்தம் பொங்க ஞாபகத்தை வளர்த்தெடுக்க வேண்டுமென 

எல்லோரும் என்னைக் கேட்டுக் கொண்டார்கள். 

காற்றிடை புகாத நெரிசலோடு 

பற்றைக் காடென வளர்ந்த ஞபகம் 

சிலிர்ப்பூட்டும் மேனியை அவ்வப்போது இடைநிறுத்தி 

தன்னுடைய இராட்சதப்பற்களால் கீறிக்கொண்டிருந்தது. 

நினைத்த பொழுதில் மோகித்தெழும் மேனிக்கு 

இருளையும் ஒளியையும் இடைஞ்சலாக்கியது. 

நிர்வாணத்தின் ஓட்டைகளை நிரப்பி 

சிதைவற்ற மேனியாக்கி பூசிக்கத் தொடங்கியது. 

...
இப்போது சித்திரவதைக்குத் தயார்.


No comments:

Post a Comment