Monday, 24 November 2025

Editing & Ghostwriting சோபாசக்தியின் பித்தலாட்டம்- கற்சுறா

 




அண்மைக் காலமாக, மிகக் கடுமையாக சோபாசக்தியின் இலக்கியச் செயற்பாட்டுமுறையை நான் ஏன் எதிர்த்து வருகிறேன்?

கற்சுறா





சோபாசகத்தியின் இலக்கியச் செயற்பாட்டுமுறைக்கெதிராக  மிகக் கடுமையாக அண்மைக்காலத்தில் நான் எதிர்வினையாற்றி எழுதி வருகிறேன். அவ்வாறு தொடர்ந்து எழுதும் பொழுது, கூறியது கூறல் மிக அதிகமாக இடம்பெற வாய்ப்புள்ளது. அதற்கும் காரணம் நானல்ல அவரேதான் !


அவரது செயற்பாடுகளில் எந்த மாற்றத்தையும் அவர் நிகழ்த்தவில்லை. மீண்டும் மீண்டும்  ஒரேமாதிரியான வழிமுறைகளையே அவர் பின்பற்றித் தொடர்கிறார். அதனாலேயே தொடர்ந்தும் எழுதியதை எழுத வேண்டிய தேவை எனக்கும் வந்து விடுகிறது.


இதன் தொடர்ச்சியாக ,

அண்மையில் ரொரண்டோவில் நடைபெற்ற “லெய்டன் தீவு மண்டைதீவு படுகொலைகள்”- “படுபட்சி”  என்ற இரண்டு நூல்களின் வெளியீட்டுவிழாவில் நான் எனது சந்தேகத்தையும் விமர்சனத்தையும் தெரிவிக்கச் சென்றேன். அங்கே, அவர்களிடம் எனக்கொரு 5 நிமிடம் தருவீர்களா என்று கேட்டேன். இந்த இரண்டு நூல்களையும் சோபாசக்தியே எழுதியிருந்தார் என்பதை நான் அறிந்து கொண்டதன் அடிப்படையில் அமைந்த கருத்தைத் தெரிவிக்கவே சென்றேன். நான் தெரிவிக்க இருந்த கருத்தை எழுதியே சென்றேன். அவை வெறுமனே 4 நிமிடங்களும் 48 செக்கன்களுமாகும். ஆனால் அவர்கள் அதற்குச் சந்தர்ப்பம் தரமறுத்தார்கள். மறுத்ததற்கான காரணமாக அவர்கள் சொன்ன விடயம் இன்னும் வேடிக்கையானது. இலக்கியச் செயற்பாட்டிற்கு நேரெதிரான ஈழ இயக்க மனோபாவக் கருத்தாக இருந்தது அது . 


“இப்படி வாறவர் ஒவ்வொருவர் 5நிமிடம் 10நிமிடம் என்று கேட்பதற்காக நாங்கள் கூட்டம் நடத்தேலாது. நீங்கள் கூட்டம் நடத்துங்கள் அங்கே நீங்கள் பேசுங்கள். எங்களுக்கு ஒரு ஒழுங்கிருக்கிறது அந்த ஒழுங்கின் படி இருந்து பார்ப்பது என்றால் இருந்து பார்க்கலாம் இல்லையேல் நீங்கள் போகலாம். இதென்ன! வாறது எப்பையாவது இருந்துவிட்டு வாறது. அதிலையும் பேசோணும் என்றால் அது இங்கே சரிவராது என்பதுபோல் பேசினார். அதனைத் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருந்த எழுத்தாளர் பா. அ. ஜயகரன் அவர்கள்.


நான் விருப்பம் இல்லை என்று சொல்லவில்லை. வெளியே போவேன் என்றும் சொல்லவில்லை. இந்த முடிவினை அவர்கள் எடுக்கும் அரசியல் குறித்ததுதான் என்னுடைய கேள்வி. இது ஒரு பெரும் கூட்டுக் களவாணிச் செயற்பாடு என்று நான் அடையாளம் காட்டும் இடந்தான் இது.



 


இந்த இரண்டு நூல்களிலும் சோபாசக்தி அவர்கள் தன்னுடைய அரசியலை மட்டுமல்ல நாசூக்காக தன்னுடைய நயவஞ்சகத்தையும் பதிவிட்டுச் செல்லக்கூடும் என்ற சந்தேகம் எனக்கிருந்தது. ஏனெனில் அவருடைய பல இலக்கியச் செயற்பாடுகள் அவ்வாறுதான் வளர்ச்சியுற்றன. இதற்கு நான் ஏகப்பட்ட உதாரணங்களைச் சொல்ல முடியும்.


இதனைப் புரிந்து கொள்வதற்கு, முதலில் அவர் வழிநடத்திச் செல்லும் கருப்புப் பிரதிகள் என்ற பதிப்பகத்தின் புகலிட வெளியீடுகள் மற்றும் அவர்களது விற்பனைத்தளம் பற்றி நீங்கள் கவனம் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். சோபாசக்தியின் நூல்களும் சோபாசக்தி எழுதிக் கொடுத்த நூல்களும் அல்லது சோபாசக்தியின் சகோதரி அல்லது அவர்களது கூலிப்படையினரின் நூல்களுமாகவே அவை அதிகமாக இருக்கும். இவைதாண்டி கருப்புப் பிரதிகளுக்கூடாக பதிப்பிக்கப்பட்ட வேறு புகலிடப் பதிப்பகங்களின் நூல்களை அடையாளம் காட்டுவார்கள். அவை சோபாசக்தியின் மன ஒப்புதலுக்குள்ளாகாத நூல்கள். அவை வெறுமனே கருப்பு நீலகண்டனின் வியாபார நோக்கம் சார்ந்தவை. கனடாவிலிருக்கும் வடலி பதிப்பகம். நோர்வே உயிர்மெய் பதிப்பகம் என்பவை இதற்குள் முக்கியமானவையாக அடங்கும்.  இவர்களுக்கு கருப்புப் பிரதிகளின் செயற்பாடுகள் குறித்துப் பூரண விளக்கமிருந்தும் எதிர்கொள்ளத் திராணியற்றவர்கள். அதனால் கருப்புப் பிரதிகள் பதிப்பகம் அனைத்துச் சிக்கல்களையும் மவுனமாகக் கடந்து போய்விடுவார்கள். அதற்கான காரணங்கள் வேறு வேறு. நானோ அதனை அம்பலப்படுத்தி வேரோடு அழிக்க வேண்டும் என நினைக்கும் காரணம் வேறு.





அது யாதெனில், 



ஈழ யுத்தகாலத்தில்  வெளிவந்த புகலிடச் சஞ்சிகைகள் மட்டுமல்ல, சில தொகுப்புக்கள் கூட போட்டோக் கொப்பி வடிவத்திலேயேதான் வெளிவந்தன.  புகலிடத்தில் தமிழ்நாட்டைவிடவும் தரமான வடிவத்தில் அச்சக வேலையைச் செய்யக் கூடிய நாட்டிலிருந்து கொண்டு போட்டோக் கொப்பியில் சஞ்சிகைகளையும் நூல்களையும் வெளியீடு செய்ததற்கு ஒரே காரணம் அகதிவாழ்வின் பணவசதியற்ற நிலை மட்டுமல்ல, இங்கிருந்து வேறு இடங்களுக்கு பத்தகங்களை அனுப்பச் செலவாகும் போஸ்டல் செலவும் சம்பந்தப்பட்டதுதான்.


அவற்றையும் முடிந்தவரை தாம் வெளியிட்ட சஞ்சிகைகளையும்   உலகெங்கும் அனுப்பிக் கொண்டுதானிருந்தார்கள். யுத்தம் இறுக்கமடைந்த காலங்களில் ஈழத்திலுள்ள நம் உறவுகளுடன் கூட  தொடர்பாடலறுந்த காலந்தான் அது. அக்காலங்களில் நாம் அதிகம் ஆறுதலடைந்தது தமிழ்நாட்டு இலக்கியத் தொடர்புகளால் மட்டுமே!



அவ்வாறான ஒரு தொடர்பினால்த்தான் நாம் க.கலாமோகனின் நிஷ்டை சிறுகதைத் தொகுப்பினை தமிழ்நாட்டில் 1999 காலத்தில் "யாதுமாகி" லெனா  குமார் அவர்களின்  உதவியினால் வெளிக் கொண்டுவந்தோம். அப்பொழுது எங்களுக்கு அது ஒரு பெருமுயற்சி.



அதற்கு முன்னர், 1980களின் பிற்பகுதியிருந்து புகலிட நாடுகளில் வெளிவந்த பத்திரிகைகள் சிறு சஞ்சிகைகள், மற்றும் இலக்கியக் கலந்துரையாடல்கள் என்று ஒரு பெருஞ்செயற்பாடு நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஈழம் யுத்தத்தாலும் மனிதஉரிமைமிறல்களாலும் ஆட்கொண்டிருந்த நேரம். அதற்கெதிரான குரலை வெளிப்படையாகச் சொல்லும் பலத்தை புகலிடத்தில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்தவை இந்தப் பத்திரிகைகளும் சிறு சஞ்சிகைகளும் இலக்கியக் கூட்டங்களுமே. இவையெல்லாம் பெருங்கூட்டுச் செயற்பாடு.  இவைகளை நாம் மட்டுந்தான் நிகழ்த்தினோம் என்று இன்றுவரை யாரும் தன்னிச்சையாக உரிமை கோரி நின்றதில்லை. தற்குறித்தனமாகத் தன் அடையாளம் காட்டி யாரும் நின்றதில்லை


இந்தச் செயற்பாட்டிற்குள்ளேதான் எத்தனையோ எழுத்தாளர்கள், ஓவியர்கள் பெண்ணியச் செயற்பாட்டாளர்கள், நடிகர்கள் தோன்றினார்கள். அவர்கள் இன்றும் தொடர்ந்து  செயற்பட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் சேர்ந்தியங்கிய அமைப்புக்கள் வேறுவேறாகலாம். அதனைத் தற்குறித்தனமாக அவர்களில் யாரும் அடையாளமிடுவதில்லை. இந்தவகைச்   செயற்பாடுகளுக்கு தங்கள் தங்கள் மாதச் சம்பளங்களை இழந்தவர்கள். தங்கள் அடையாளங்களை முன்நிறுத்தவோ தம்மைச் சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காக எழுதிவந்த எழுத்துக்களோ- சமூகச் செயற்பாடுகளோ அல்ல அவை. குரல் அறுபட்டு தொண்டைத் தண்ணி வற்றிவிடும் அளவுக்கு புகலிடத்திலும் மரண அச்சுறுத்தல் வாசல்வரை வந்திருந்த காலத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள் மற்றும் செயற்பாடுகள். இதற்கு ஒவ்வொரு தனிப்பட்டவர்களின் துணிச்சல் மட்டுமே இதற்கு ஆதாரம் என்றாலும் அவர்கள் யாருமே தனிப்பட்ட முறையில் தன்னுடையதாக ஒருபோதும்  சொந்தம் கொண்டாடுவதில்லை. இதனைச் சோபாசகத்தி புரிந்து கொள்ள வேண்டும்.


 அந்தக் காலத்தில் ரொரண்டோவில் மிகத் தீவிரமாக இயங்கியவர்கள் தேடகம் அமைப்பினர். அப்போது அவர்கள் இளைஞர்கள். அவர்கள் காட்டிய தீவிரச் செயற்பாடுதான் புகலிடம் எங்கிலும் ஒரு உத்வேகத்தை ஊட்டியது. அவர்களிலும் ஒரு சிலரே அந்த உத்வேகத்திற்கு முன்நின்றிருப்பார்கள். ஆனால் அவர்கள் யாராவது தம்மை மட்டும் முன்நிறுத்தி எப்போதாவது அடையாளம் காட்டினார்களா? அந்தச் செயற்பாடு "தேடகம்" என்ற ஒரு பெரும் அடையாளத்துடன்தான் கணிப்பிடவும் அடையாளம் காட்டவும் வைக்கப்பட்டிருக்கிறது. அதற்குள்ளும் "சோபாசக்திகள்" ஆரம்பம் முதல் இருக்காமலா விட்டிருப்பார்கள்? கட்டாயம் இருந்திருப்பார்கள். இப்போதும் இருப்பார்கள். ஆனால் தேடகம் என்ற செயற்பாட்டிற்குள் அவர்கள் ஒருபொழுதும் தம்மைத் தற்குறியாக முன்நிறுத்தமுடியாது. இதனையும் சோபாசக்தி விளங்கிக் கொள்ள வேண்டும்.


நீண்டகாலமாகச் செயற்பட்டவந்த இலக்கியச் சந்திப்பின் தொடர்ச்சியையும் அதன் பொது அடையாளத்தையும் தனக்குரியதாக மாற்றித் தமிழ்நாட்டினருக்கு அடையாளம் காட்ட வெளியிடப்பட்ட இமிழ் என்ற தொகுப்பு முழுக்க முழுக்கத் தற்குறித்தனமானது. அதற்குத் தன் கைவசம் வைத்திருக்கும் கருப்புப் பிரதிகள் பதிப்பகத்தைக் கொண்டு எந்தக் கூச்சமுமில்லாது வெளிக்கொண்டுவந்தது மிக மிக அசிங்கம் கொண்ட செயல். இதுபோன்ற செயல்களை அவர் இனியாவது கைவிட வேண்டும். எல்லாப் பொது அசைவையும் தன்னோடு மட்டும் இணைத்துப் பார்க்கும் மனநிலை என்பது ஒரு நோய். அதற்கு அவர் மருந்துதான் முதலில் எடுக்க வேண்டும்.


நோய் முற்றியுள்ள சோபாசக்தி தொடர்ந்து செய்துவரும் இலக்கியப் புராடுத்தனங்கள் அருவருக்கத்தக்கது, ஆபத்தானது, என்று உணர்வதால் இதனை நான் உட்படப் பலர் பொதுவெளியில் அம்பலப்படுத்தத் தொடங்கியுள்ளோம்.


கருப்புப் பிரதிகள் என்ற தமிழ்நாட்டுப் பதிப்பகத்தையும் பாரீசில் ஆக்கட்டி என்ற சஞ்சிகையையும் வழிநடத்திக் கொண்டு புகலிட இலக்கியத்தின் அத்தனை விழுமியங்களையும் மழுங்கடித்து தன் அடையாளத்துடன் முன்நிறுத்த முனைகிறார் என்பதனை நான் தொடர்ந்தும் அடையாளம் காட்டியே வருகிறேன்.


அவரது ஆரம்பகாலச் சிறுகதைகள் ஒன்றிரண்டைத் தவிர்த்து தமிழ் நாட்டில் உறவை ஏற்படுத்தியபின் எழுதிய சிறுகதைகளோ, நாவல்களோ எல்லாமே தமிழ்நாட்டு வாசகர்களை நோக்காக் கொண்டு வியாபார ரீதியில் எழுதப்பட்டவை என்பதனை அவர் குறித்து எழுதிய அதிகமான கட்டுரைகளில் விளக்கமாக அடையாளம் காட்டியிருக்கிறேன்.


ஈழ அரசியல் நிலைப்பாடுகளையோ அதன் மொழி மற்றும் வாழ்வியல்களையோ ஓரளவு புரிதலாகக் கூட அறியமுடியாதபடியே அங்குள்ள இலக்கியப் பேராசிரியர்களும் ஈழ அரசியலை முன்னெடுக்கும் அரசியல்வாதிகளும்  இருக்கும் இடத்தில்   தமிழ்நாட்டு வாசகர்கள் பாவந்தானே? அவ்வாறு பாவப்பட்ட வாசகர்களை நோக்கிக் கோர்த்துக்கட்டும் கதைகளை எழுதுகிறார் என்று நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அவர் இலக்கியத்தை நேசிக்கும் - விரும்பும் ஒருவராக இருந்தால், அதுவே நோக்காக இருந்தால் அவரால் இவ்றான ஒரு செயற்பாட்டை ஒருபொழுதிலும்  செய்ய முடியாது. எதை அழித்தாலும் யாருடைய அடையாளத்தை மழுங்கடித்தாலும் தன் அடையாளத்தை முன்நிறுத்துவதே அவரது நோக்கமா இருக்கிறது அவருக்கு. அதற்காகவே அவர் மிகவும் திட்டமிடுகிறார்.


அந்தத் திட்டமிடலின் இன்னொரு வடிவந்தான் இன்று  மற்றவர்களுக்குக் கதை எழுதிக் கொடுப்பது. சிறுகதையின் தேடலுக்குரிய தேவைக்குரிய எந்த அரிய புரிதலுமற்று அங்கங்கே கேள்விப்பட்டதை பொதுவெளியில் பேசப்படுவதைக் கோர்த்துக்கட்டி தமிழ்நாட்டவர்க்கு விற்று வந்தவரால் ஒரு கட்டத்தில் அதனையும் மேற்கொண்டு தொடரமுடியாது போய்விட்டது. ஆகையினால் மற்றவர்களின் கதைகளைக் கேட்டு அவர்களுக்காகக் கதை மற்றும் நாவல், கவிதை  மட்டுமல்ல தன்வரலாறு  கூட எழுதும் ஒரு செயற்பாட்டைத் தொடங்கியிருக்கிறார்.


அந்த வகையில்

 “நான் இதுவரை 'குழந்தைப் போராளி', 'அகாலம்', 'தனுஜா', 'படுபட்சி' என நான்கு நூல்களை 'எடிட்' செய்திருக்கிறேன்.” என்று சொல்கிறார் சோபாசக்தி. 


நானோ இல்லை. இல்லை.  ஆனைக் கோடாரி தொடக்கம் வயல்மாதா வரை இந்த அசிங்கம் இருக்கிறது என்பதனைச் சொல்லிக் கொள்கிறேன். அவற்றின் தொடர்ச்சியாக ஆகிதம், ஆண்பால் ஊலகு, இருசி, இருள் மிதக்கும் பொய்கை, ஈழத்தில் சாதியம்:இருப்பும் தகர்ப்பும்,  உங்களில் யாராவது முதல் கல்லை  எறியட்டும், குழந்தைப் போராளி, கொரோனா வீட்டுக் கதைகள், சாவுகளால் பிரபலமான ஊர், என்று தொடரும் கருப்புப் பிரதிகளின் அத்தனை புகலிடப் பிரதிகளிலும் சோபாசக்தியின் எழுத்து இருக்கிறது என்கிறேன். அதனால்த்தான் இந்த வெளியீடுகள் குறித்து நாம் அதிகம் சந்தேகம் கொள்ள வேண்டியுமிருக்கிறது. இந்த நூல்களின் எழுத்து அசைவுக்குள் கட்டாயம்  சோபாசக்தியின்  Editing & Ghostwriting செயற்பாடு நிச்சயம் இருக்கிறது. அதனால் அவற்றின் மீதான சுய அடையாளம் பற்றிய தேடல் இன்னும் வலிமை பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.


வயல்மாதாவில் நடந்தேறிய கேசை  ( case)நாம் கணக்கில் கொண்டால் இது நன்றாகப் புலப்படும். தன் ஊரிலுள்ள கிருத்தவ மக்களின் ஊடாக கத்தோலிக்கப் பாதிரிகளிடமிருந்து புத்தக வெளியீட்டிற்கான பணத்தைப் பெற்றுக் கொண்ட டானியல் ஜெயந்தன், அந்த ஊரில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைச் சொந்தப் பெயர்களுடன் அடையாளமிட்டு எழுதியிருக்கிறார் என்று சொல்லி அதே ஊரைச் சேர்ந்த, நூலிற்குப் பணம் கொடுத்த கிருத்தவர்கள் நூலைக் கொழுத்துகிறார்கள். ஜெயந்தனின் உண்மையான மனதிற்கும் புத்தகம் வெளியிடும்பொழுது புகுத்தப்பட்ட மனதிற்கும் பெரும் இடைவெளி இருந்ததை பலரும் புரிந்து கொண்டார்கள். அதனால்த்தான் ஜெயந்தன் போன்றவர்களை சோபாசக்தி வளர்க்கும் செம்மறிகள் என்று நான் தொடர்ந்தும் அடையாளம் காட்டுகிறேன். நிச்சயம் வயல்மாதாவிற்கு சோபா சக்தியே Ghostwriting செய்திருக்கிறார் என்பது எனது நிலைப்பாடு. இங்கே ஜெயந்தனின் சுயத்தையே அழித்திருக்கிறார் சோபாசக்தி.



இதற்கு இன்னும் மேலே போய் டானியல் அன்ரனி என்ற ஜெயந்தனின் தந்தை பற்றிய புத்தகத்தை கருப்புப்பிரதிகள் பதிப்பகம்  தொகுத்த போது மகன் ஜெயந்தன் இணைத்துக் கொடுத்த கே. எஸ் சிவகுமாரன் அவர்களது கட்டுரையையும் டானியல் அன்ரனியி கட்டுரை என இணைத்து சோபா சக்தி அவர்கள் அதற்கும் சேர்த்து முன்னுரை எழுதியிருந்ததனை அருண்மொழிவர்மன் வெளிக்காட்டியிருந்தார். ஒரு பொறுப்புணர்வும் இல்லாத தற்குறிச் செயற்பாடுகளைக் கொண்டவர்கள் இவர்கள். டானியல் அன்ரனியின் வரலாறு சோபாசக்திக்குத் தெரியாதிருப்பது ஒரு பெரிய சேதமில்லை. ஆனால் மகனுக்குமா தெரியாது போனது?. அதனைப் பதிப்பித்த பதிப்பகத்திற்குமா தெரியாது? இதற்கெல்லாம்  ஒரு மன்னிப்புமில்லை. மயிருமில்லை. இதுதான் இவர்களது இலக்கியச் செயற்பாட்டு அணுகுமுறை. ஆனால் இன்றுவரை அந்தப் பத்தகத்தைக் கருப்புப் பிரதிகள் மட்டுமல்ல உலகம் பூராவும் பலர் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். எதற்கும் வெட்கப்படாதவர்கள். மானரோசமற்வர்கள்.


அதனால்தான் சொல்கிறேன்  கருப்புப்பிரதிகளாக திடீர் திடீரென வெளிவந்த அண்மைக்கால புகலிட எழுத்தாளர்களின் தொகுப்புக்களின் பின்னால்  சோபாவின் Editing & Ghostwriting  என்பது இருந்தேயிருக்கிறது என்று எனக்கு சந்தேகம் இருக்கிறது. சோபாசக்தி அவ்வாறு செய்யாதுவிடில் அவை கருப்புப் பிரதிகள் வெளியீடாக கடைசி வரையும் வந்திருக்க முடியாது.  அதனால்தான் ஒவ்வொருவர் சுயத்தையும் அழித்து இவர்கள் தொடர்ந்து செயற்படுகிறார்கள் என்று திரும்பத் திரும்பச்  சொல்லுகிறேன்.


சோபாசக்தியின் Editing & தமிழிலக்கியம் என்ற  முகநூல் பதிவிற்கு பின்னூட்டம் இட்ட பலர்  தாங்களும் பலருக்கு எடிட்டிங் செய்து கொடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளார்கள். கவிதைகளைக் கூடச் செய்து கொடுத்ததாகச் சொல்லியுள்ளார்கள். இதைவிடக் கேவலம் என்னதான் இருந்துவிடும்? தமிழ்நாட்டில் சி. மோகன் அவர்கள்  Ghostwriting ஐத் தொழிலாகவே செய்து வருகிறார் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆக ஒரு இலக்கியத்திற்கான சுயம் என்பது இங்கே எதுவாக இருக்கிறது? (இந்த அயோக்கியர்கள் இலக்கியத்திற்கு ஏன் சுயம் என்றும் கேட்க முன்வருவார்கள்.)



நாம் சிறிதுகாலம் முன் நோக்கிப் பார்த்தால், தமிழ் இலக்கியத்தில் பிரேம்- ரமேஷ் என்ற இரட்டை எழுத்தாளர்களது இலக்கியத்தை விளங்கிக் கொள்ள முடியும். இவர்கள் இருவருமே இணைந்து பெருந்தொகுப்புக்களை எழுதினார்கள். அங்கே எழுத்தில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்தது என்பது உண்மையே . 


ஆனால் அவர்கள் ஒரு கட்டத்தில் பிளவுபட்டவுடன் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள் எழுத்திற்கும் இலக்கிய உலகத்திற்கும்  எவ்வளவு அசிங்கமானவையாக இருந்தன? அந்த எழுத்துகளை உரிமையாக்குவதற்கு இருவரும் சண்டை செய்தார்களா இல்லையா?. ஒருபடி மேலே சென்று தன் கூட வாழந்த மாலதி மைத்திரியின் கவிதைகளையே  நானே எழுதிக் கொடுத்தேன் என்றார் ரமேஷ். இவற்றையெல்லாம்  Editing & Ghostwriting என்ற தேவையிலிருந்து எப்படிக் கணக்கிடுவது?


அதனைவிடவும் டானியல் என்றும் ஜீவா என்றும் எனக்கு வேறு புனைபெயர்கள் இருக்கின்றன என எஸ்.பொ. அவர்கள் சொல்லி வந்ததாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த வார்த்தைகளின் பின்னால் கே. டானியல் அவர்களதும் டொமினிக் ஜீவா அவர்களதும் சுயத்தை நாம் எப்படி மதிப்பிடுவது? அந்த எழுத்துக்களுக்கும் சேர்த்து எஸ்.பொ.வைத்தானே நாம் கொண்டாட வேண்டும். ரமேஷ்- பிரேதன் கூறிய கூற்றின் படி மாலதி மைத்திரியின் கவிதைகளை இனி எவ்வாறு நாம் அணுகுவது?


இங்கே  “குழந்தைப் போராளி”, “அகாலம்”  “தனுஜா” போன்ற நூல்களை செய்து கொடுத்த சோபாசக்தி அவர்கள் கையும் களவுமாக மாட்டியது “படுபட்சி” என்ற நூலுக்கு இழைத்த அநீதியில் தான். “படுபட்சி” யின் ஆசிரியராகக் காட்டப்பட்ட டிலுக்ஜன் என்ற  இளைஞனும் அவர் தந்தையும்  ரொரண்டோ வெளியீட்டில் பேசிய பேச்சுக்களே அதற்குச் சிறந்த உதாரணங்கள். அந்தச் சிறுவனிற்கு திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை. அதற்காக அவர் ஒரு திரைப்பிரதி எழுதியிருக்கிறார். அதனை புலம்பெயர் தமிழர்களிடம் காண்பித்து புரொடியூசர்களயும் டைரக்ரர்களையும்  அணுகிக் கதை சொல்லியிருக்கிறார். பலரிடம் கதை சொல்லியும்  ஏமாற்றம் அடைந்த டிலுக்ஸன் அவர்களுக்கு ஒரு இடத்தில் லெனின் சிவம் அவர்களின் தொடர்பு கிடைக்கிறது. (லெனின் சிவமே சோபாவின் ரூபா படம் எடுத்தவர்.)லெனினிடம்  பிரதியைக் காட்டும் போது திருப்திவரவில்லை. பல திருத்தங்களைத் திரும்பத் திரும்பச் செய்யச் சொல்லியுள்ளார் லெனின். அப்போது ஒரு இடத்தில் இதனை முழுமையாக்க ஒருவரை அறிமுகப்படுத்துகிறேன் எனச் சொல்லி சோபாசக்தியை டிலுக்ஸனுக்கு அறிமுகப்படுத்திவிடுகிறார் லெனின். சோபாசக்தி என்றால் ஒரு பெண் என நினைத்திருந்த டிலுக்ஸனுக்கு அது ஒரு ஆண் எனத் தெரிய வருகிறது. அப்போது அமெரிக்காவிலிருந்த டிலுக்ஸனைத் தேடிச் சென்று பேசியபின் அவரின் மட்டக்களப்பு ஊருக்குச் சென்று அவரின் பிரதி சொன்ன இடங்களைப் பார்வையிட்டு அவரது பிரதியைப் புனைவாக்கி பிரதிக்கு டிலுக்ஸன் வைத்திருந்த “பேப்பர் பிளேன்” என்ற பெயரையும் மாற்றி "படுபட்சி" என்று பெயரிட்டு கருப்புப் பிரதிகள் வெளியீடாகக் கையில் கொடுத்திருக்கிறார் சோபாசக்தி. படுபட்சி என்றால் தனக்கு என்னவென்றே தெரியாது என்றும் அதன் விளக்கத்தையும் அவரிடமே கேட்டுத் தெரிந்து கொண்டேன் என்று ஒரு அப்பாவியாகத் தெரிவித்தார் டிலுக்ஸன். 

அங்கே அவரது தந்தையோ மேதகு பிரபாகரனுக்கு நாம் அனைவரும் இணைந்து இதிகாசம் ஒன்றை எழுத வேண்டும் எனச் சபையை நோக்கிக் கோரிக்கை வைத்துக் கேட்டுக் கொண்டதையும் இந்தப் படுபட்சிச் செயற்பாட்டுடன் இணைத்துப் பாருங்கள்


இவ்வாறு எழுதப்பட்ட இந்தப் புனைவை தமிழ்த் தேசியத்தின் பெயரில் முன்நிறுத்தி ஒரு திரைப்படமாகச் செயற்படுத்த முனைந்திருக்கிறார் சோபாசக்தி. எவ்வாறு தமிழகத்தின் பதிப்பகங்களால் பதிப்பிக்க முற்படும் ஈழ புகலிட எழுத்தாளர்களின் கதைகளில் அவலங்கள் போதாது என்று சொல்லித் திருத்தி எழுதிக் கொண்டுவா என்று அனுப்பும் போது சுயத்தை அழித்து மீண்டும் எழுதிக் கொடுக்கிறார்களோ அதேபோன்று எழுதிமுடிக்கப்பட்ட புனைவு இது. ஒரு சுயமாக எழுதத் தொடங்கும் ஒருவரைக் காயடித்து மடைமாற்றி தன் வியாபாரத்தைப் புகுத்தும் குப்பைத்தனத்திற்கு “எடிட்டிங்” என்று பெயர். அதற்கு இன்னும் இன்னும் வேறு பெயர் யோசித்துக் கொண்டிருக்கிறாராம் என்கிறார் சோபாசக்தி.


மிகவும் கவலையான விடயம் என்னவெனில் புஸ்பராணி அக்கா அண்மையில்  மறைந்து விட்டார். ஈழவிடுதலைப் போரில் அதிகம் காயம் பட்ட பெண்களில் அவரும் ஒருவர். ஆனால் அவருடைய வாழ்வை சோபாசக்தி தன்னுடைய இலாபத்திற்குப் பாவித்திருக்கிறார் என்றால் அது இன்னும் மிகவும் மோசமான விடயமே. படுபட்சி  நூலுக்குச் சோபாசக்தி அவர்கள் செய்திருக்கும் புராடுத்தனம் அப்பட்டமாக வெளிப்பட்டதின் தொடர்ச்சியாக தனுஜா என்ற நூலையும் அகாலம் என்ற நூலையும் நாம் மேலும் கேள்விக்குட்படுத்தியே ஆகவேண்டும்.


ஆனாலும் சோபாசக்தியின் கூட்டுக்களவாணிகள் இந்த மோசடித்தனத்தை  Editing & Ghostwriting என்று விவாதங்கள் முன்வைத்தாலும் உள்ளே யிருப்பது பித்தலாட்டம். ஒன்றின் சுயத்தை அழிப்பதும் அவற்றைத் தம்முடன் இணைத்து வியாபாரமாக்குவதுந்தான். இன்றைய கையாலாகாத்தனத்தில் சோபாசக்தி செய்து வரும் பெரும் மோசடி இது. இதற்கு அவர் தனது கூட்டாளி கருப்பு பிரதிகள் நீலகண்டனையும் தன்னுடைய கூலிப்படைகளையும் நன்கு பயன்படுத்திக் கொள்கிறார்.


அந்தவகையில்தான் 51வது இலக்கியச் சந்திப்பிற்காகத் தொகுக்கப்பட்ட மலரை தனட பெயருடன் அடையாளம் காட்டி நின்றார் சோபாசக்தி . ஒரு கூட்டு உழைப்பாக வரவேண்டிய செய்றபாட்டை தன்னோடு அடையாளம் காட்டிய தற்குறி மனநிலை புகலிடம் ஒருபொழுதும் பார்த்ததில்லை.


இது கடந்தகாலப் புகலிட இலக்கியச் செயற்பாட்டிற்கு ஏற்படும் அசிங்கம்.

மற்றும் ஆபத்து. இந்த ஆபத்தையும் அசிங்கத்தையும் புரிந்து கொண்ட நாள் முதல் இதனை அடியோடு அம்பலப்படுத்தி அழித்துவிடவேண்டும் என்று செயற்படுகிறேன். ஆனால் தற்புகழை மட்டும்குறியாய் எண்ணிச் செயற்படும் பலர் இந்தச் செயற்பாட்டிற்கு  ஆதரவு வழங்கிக் கொண்டேயிருக்கிறார்கள். 

நாளை ஒன்றேயொன்றுதான் உங்களை நோக்கி நாங்கள் கேட்போம்

1.நீங்கள் வெளியிடும்(உங்களின் பெயரில்) இத்தனை புத்தகங்களையும் யார் எழுதித் தந்தார்கள்?


2.உங்கள் பெயரின் முன்பு கவிஞர் என்றும் சிறுகதையாளர் என்றும் நாவலாசிரியர் என்றும் தன்வரலாறு எழுதியவர் என்றும் அடையாளம் இட்டு “கொப்பிறைற்” கேட்பதற்கு உங்களுக்குத் தார்மீக உரிமையுள்ளதா?


3.உங்கள் எல்லோருடைய பெயரும் சோபாசக்தியின் இன்னொரு புனைபெயராக உள்ளதா? இல்லையா?


சுயமரியாதையோடு எழுதுங்கள்.

உங்கள் எழுத்துக்கு உயிர் நீங்கள் என்பதனை முழுமனதோடு சொல்ல முனையுங்கள்.

வியாபாரமாவதும் புகழப்படுவதும் மட்டும் எழுத்தின் நோக்கமல்ல என்பதனை நீங்கள் இனியாவது உணர வேண்டும்.




புகலிட இலக்கியத்திற்காகவும் அதன் அரசியல் நிலைப்பாடுகளுக்காகவும் தம் வாழ்வைத் தொலைத்தவர்கள் பலர் எந்தச் சலனமும் இல்லாது கண்முன்னே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தத் தற்குறிகளோடு பொருத சிறிதும் மனமில்லை. அவர்களது மவுனம் ஒருபொழுதும் சோபாசக்தி போன்றவர்களது தற்குறித்தனத்தை ஆதரித்து நிற்பதாகாது. நான் அப்படியானவனல்ல. நான் களைத்துவிடுவேன் என்று சோபாசக்தி போன்றவர்கள் நம்பினால் அவர்களுக்கு ஏமாற்றமே.

(தொடரும்)


No comments:

Post a Comment

Editing & Ghostwriting சோபாசக்தியின் பித்தலாட்டம்- கற்சுறா

  அண்மைக் காலமாக, மிகக் கடுமையாக சோபாசக்தியின் இலக்கியச் செயற்பாட்டுமுறையை நான் ஏன் எதிர்த்து வருகிறேன்? கற்சுறா சோபாசகத்தியின் இலக்கியச் செ...