Friday, 14 November 2025

இலக்கியப் பித்தலாட்டத்தின் தொடர் வளையங்கள்.

இலக்கியப் பித்தலாட்டத்தின் தொடர் வளையங்கள்.

கற்சுறா



8 நவம்பர் 2025 அன்று ரொரன்ரோவில் நடைபெற்ற “சோபாசக்தியின் இரண்டு புத்தக வெளியீடுகள்” இல் நான் குழப்பம் விழைவித்தேன் என்று சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக் குறித்து விபரமாக எழுதுவதற்கு, அதன் காட்சிப்பதிவுகள் வரும் வரை காத்திருந்தேன் தற்பொழுது “தடயத்தார்” அதனை பகிர்ந்திருக்கிறார்.


ஆக எனது இந்தப் பதிவைத் தொடர்ந்து வாசிக்க முதல் கீழே பின்னூட்டத்தில் இணைப்புத் தந்திருக்கிறேன். அதனை முழுமையாகக் கேளுங்கள்.


இந்த இரு புத்தகங்கள் குறித்து நான் ஏற்கனவே  மிகச்சிறியளவு விடயங்களை அறிந்திருந்தேன். அந்த அறிதலின் பெயரில் என்னுடைய கருத்தினை அங்கே தெரிவிக்க வேண்டும் என விரும்பினேன்.

இவர்களுடைய செய்ற்பாடுகள் புகலிட இலக்கியத்திற்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் ஆபத்து என நான் புரிந்து கொண்டதின் வெளிப்பாடாக, அதனைச் சொல்ல வேண்டும் என விரும்பியே அங்கு சென்றேன். 


அவர்களின் கூட்ட ஒழுங்கில் எனது கேள்வியை முன்வைக்க நான் எனக்கான நேரம் வரும்வரை காத்திருந்தேன்.  நான் அங்கே குழப்பம் விளைவிக்கவில்லை.   நேர விரையம் கருதி எனது கருத்தினை எழுத்திலேயே கொண்டு சென்றேன்.  எனக்கான நேரத்தை அவர்கள் தருவார்கள் என்றே நான்  நம்பினேன். 


அவ்வாறு நம்பியிருக்காவிட்டால், அதனை நான் போட்டோக் கொப்பி எடுத்து ஒவ்வொருவர் கையிலும் கொடுத்துவிட்டு வந்திருப்பேன். எனக்கு அது இன்னமும் சுலபமான விடயமாக இருந்திருக்கும் 


எழுதிக் கொண்டு சென்ற என்னுடைய குறிப்புவாசிக்க எடுக்கும் நேரம்  வெறுமனே 4நிமிடங்களும் 48 செக்கன்களும் மட்டுமேயானது. 


முதலாவது புத்தகம் வெளியிடப்பட்டு நன்றியுரை சொல்லும் வேளை அவர்கள் அடுத்த புத்தகத்தின் வெளிீட்டுக்கான செயற்பாட்டைத் தொடங்கியிருந்தார்கள். இடையில் ஒரு நிமிடமும்  யாரும் பேசிவிடக் கூடாது என்ற கரிசனை அவர்களிடம் மிதமாக இருந்தது. காலம் செல்வம் அவர்கள் நன்றியுரையில் நீண்ட அலட்டல் இருந்த இடத்தில் மறித்து ‘’ நீங்கள் நன்றியுரைதானே சொல்ல வந்தீர்கள் அதனைச் சொல்லுங்கள்.” என்று சொன்னேன். 

பின்பு செல்வம் அண்ணன் அவர்கள் பேச்சை முடித்தபோது படுபட்சி நாவல் வெளியீட்டினை அரம்பிக்கும் அறிவிப்பினை ப.அ. ஜயகரன் அவர்கள் சொல்ல வந்தார். அந்த இடத்தில் எனக்கு ஒரு கருத்துச் சொல்ல 5 நிமிடம் தரமுடியுமா எனக் கேட்டேன். 

அதற்குப் பதில் அளித்த ப. அ. ஜயகரன் அவர்கள் உடனேயே 


“இப்படி வாறவர் ஒவ்வொருவர் 5நிமிடம் 10நிமிடம் என்று கேட்பதற்காக நாங்கள் கூட்டம் நடத்தேலாது. நீங்கள் கூட்டம் நடத்துங்கள் அங்கே நீங்கள் பேசுங்கள் என்றார். எங்களுக்கு ஒரு ஒழுங்கிருக்கிறது அந்த ஒழுங்கின் படி இருந்து பார்ப்பது என்றால் இருந்து பார்க்கலாம் இல்லையேல் நீங்கள் போகலாம். இதென்ன! வாறது எப்பையாவது இருந்துவிட்டு வாறது. அதிலையும் பேசோணும் என்றால் அது இங்கே சரிவராது என்பதுபோல் பேசினார். 


நான் சொல்லச் சென்ற விடயம் இன்று நம்மிடையே இயங்கும் இந்த  இலக்கியச்  சமூகம் ஆபத்தான நிலைக்குச் செல்லுகிறது என்று நான் உணர்ந்ததன் அடிப்படையில் அதனை  அடையாளம் காட்டிச் செல்ல மட்டுந்தான். 


அதற்கு அவர்கள் சந்தர்ப்பம் தரவில்லை. நீங்கள் தராது விட்டால் நான் சண்டை செய்வேன் என்றோ எனக்கு நீங்கள் கட்டாயம் தரத்தான் வேணும் என்றோ இல்லையேல் இதில் இரக்கமாட்டேன் என்றோ நான் பேசவேயில்லை. நான் நினைக்கவேயில்லை. அதன் மவுனமாக கூட்டம் முடியும் வரை இருந்தேன். நான் குழப்பம் விளைவிக்கவில்லை. ஆனால் இப்பொழுது அவ்வாறு சந்தர்ப்பம் தராது விட்டது மிக நல்லது என்றே நினைக்கிறேன்.


நான் என்ன சொல்ல வேண்டும் என நினைத்தேனோ அதனை படுபட்சி நாவல் எழுதியவராகச் சொல்லப்பட்ட டிலுக்ஸன் என்ற இளைஞன் சொல்லிவிட்டார். அது ஒரு வகையில் எனக்கு நிம்மதியானதுதான். 

ஆனால் அவரது உரை பற்றியும் அதன் பின்னால் இருக்கும் ஆபத்துப் பற்றியும் ப. அ. ஜயகரன் போன்றவர்களுக்கோ செல்வம் அண்ணன் போன்றவர்களுக்கோ எந்தச் சிக்கலுமில்லை என்பதும் அந்த ஆபத்து விளங்கவில்லை என்பதும் நாம் கவனிக்கவேண்டியது. இவர்களுக்கு இது வெறும் விழாக்கள். வெறும் அங்கீகாரங்கள். இவை எதுவும் நம்மை வழிநடத்தப் போவதில்லை.


ஒன்றின் சுயத்தை அழித்து, அதனைக் காயடித்து ஒன்றுமற்றதாக்கிவிடும் சூனியமாக்கிவிடும்  ஒரு செயற்பாட்டை கொஞ்சக்காலமாகச் சோபாசக்தியும் அவர் கூட்டாளி கருப்பு நீலகண்டனும் செய்து கொண்டிருக்கிறார்கள். இதனை நாம் சிலர் வெளிப்படையாக அடையாளம் காட்டிவருகிறோம். அதற்கான ஆதாரத்தை முன்வைத்திருக்கிறோம்.


கருப்பு நீலகண்டனின் வியாபாரப் புத்திக்கு  புகலிடத்திலிருந்து பலர் பலியாகியிருக்கிறார்கள். நான் எனக்கான அனுபவத்தை வெளிப்படையாகவே பதிவு செய்து கொண்டிருக்கிறேன். பலரால் தமது அனுபவத்தைப் பொதுவில் சொல்ல முடியாதிருக்கிறது. அவர்களின் குரலாகவும் நான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த அயோக்கியத்தனத்தை ஒழித்துக் கட்டும் வரை ஓயக் கூடாது எனச் செயற்படுகிறேன். இந்தச் செயற்பாட்டின் ஒரு தருணமாகவே நான் இந்தக் கூட்டத்திற்குச் சென்றேன்.


அந்தக் கூட்ட முடிவில் நான் எனது பதிவில் எழுதியதற்காக ப. அ. ஜயகரன் அவர்கள் தனது முகநூலில் எழுதிய பதிவு இது.




 


கூட்டம் மிக நேர்த்தியாக நடந்துகொண்டிருந்தது. அதைக் குழப்பும் வகையில் கற்சுறா நடந்துகொண்ட முறை என்னால் மட்டுமல்லாமல் சபையோரினாலும் ஏற்றுக்கொள்ள முடியாதிருந்தது. கூட்டத்திற்கு தலைமை தாங்கியவன் என்ற வகையில் இந்த நிலைமையை ஒழுங்குக்குள் கொண்டுவரவேண்டிய அவசியம் இருந்தது.”

 என்கிறார்.

5நிமிடம் பேசத் தருவீர்களா? என்று ஒரு கூட்டத்தில் கேட்பது, அதுவும் உங்கள் செயற்பாட்டிற்கு நேரெதிரான ஒருவிடயம் குறித்துக் கேள்வி எழுப்ப முனைந்தது தவறேயில்லை என்பதே என்கருத்து.

ஆனால் நீங்கள் இவ்வளவு அயோக்கியர்களாக இருப்பீர்கள் என்று நான் அன்று வரை நான் சிறிதும் சிந்திக்கவேயில்லை.

இந்தக் கூட்டத்தின் முடிவு வரை மட்டுமல்ல அதன் பின்னான 40 நிமிடங்கள் அங்கே வந்திருந்த நண்பர்களோடு பலதும் பேசி - உரையாடியே நான் வெளியே வந்தேன். அதன்பின்பும் அங்கே நீங்களும் மற்றும் நண்பர்களும் நின்றீர்கள்.

ஆக உங்களுக்கு மண்டபத்தில் நேரமின்மை ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை.  

அண்மையாக நடந்த முகநூல்  உரையாடலில் இனிவரும் காலங்களில் மண்டப நேரத்தைக் கணக்கிட்டு அதிகளவான நேரப்பதிவினை மேற்கொள்ள வேண்டும் என ஒரு நண்பர் ஏதோ நேரமின்மையால்  கலந்துரையாடலுக்கு நேரம் கொடுக்கப்படவில்லை என்ற தொனியில் எழுதியிருந்தார். அதற்கான ஒரு சிறு விளக்கமே இது.


சரி  கூட்டம் முடிந்தபின்பாவது சபையோருக்கான கருத்துச் சொல்லும் உரிமையை நீங்கள் வழங்கியிருக்க  வேண்டும். 

அதனை நீங்கள் செய்யவில்லை.

கூட்டத்திற்கு வந்தவன் என்ற அடிப்படையில் நீங்கள் நேர்மையான செயற்பாட்டாளர்களாக இருந்தால், இப்போது உன் கருத்தைச் சொல்லு எனக் கேட்டிருப்பீர்கள். உங்கள் நோக்கம் மிகவும் மோசடியான நோக்கம்.

உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும் நீங்கள் செய்யும் தவறு.

அதனாலேயே நீங்கள் உரையாடலுக்கான நேரத்தை யாருக்கும் வழங்கவில்லை.

இங்கே நீங்களல்ல நான் எதிர் கொள்ளும் நேரடியான நாசகாரர்கள்.

ஒரு மிகப்பெரிய இலக்கியத் திருட்டையும் இதுவரையான புகலிட இலக்கியச் செயற்பாட்டையும் சிலர் நாசம் செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு நீங்கள் துணையாய் இருக்கிறீர்கள். 

நீங்கள் இதனைத் தெரிந்தே செய்கிறீர்கள். 

நீங்கள் பெறமுனையும் சில அங்கீகாரங்களுக்காக உங்கள் மவுனம் எல்லை மீறி அவர்களுக்குக் காவலரண்களாக இருக்கிறது.

இதுவும் மிகப்பெரிய ஆபத்து.

உங்களிடம் வெளிப்படையாகக்  கேட்கிறேன்.

சில மாதங்களுக்கு முன் 118 பெண்கள் கையெழுத்திட்டு “சோபாசக்தியின் பாலியல் சுரண்டல்களுக்கெதிரான கண்டன அறிக்கை” ஒன்று வெளிவந்ததல்லவா?

அது குறித்து நீங்கள் என்ன மதிப்பீடு கொண்டிருந்தீர்கள்?

அதில் ஒரு திருநங்கை தன்னை எவ்வளவு துஸ்பிரையோகம் செய்தார் சோபாசக்தி என்றும் பதியப்பட்டிருக்கிறது.

ஒரு சமூக அக்கறையாளர்களாக அவை குறித்து நீங்கள் என்ன கவனம் கொண்டீர்கள்.?

அந்த பெண்கள்  ஒரு பொருட்டேயல்ல என்கிறீர்களா?

அந்த அறிக்கயை இந்த சமூகத்தில் கணக்கில் கொள்ளத் தேவையில்லை என்கிறீர்களா?

சோபாசக்தி செய்ததாக இந்தப் பெண்கள் சொல்வதெல்லாம் பொய் என்கிறீர்களா?

சோபாசக்தியும் அவர் கூட்டாளி கருப்பு நீலகண்டனும் இந்ப் புகலிட இலக்கியச் சூழலிற்கு இழைத்து வரும் அயோக்கியத் தனங்கள் பற்றி உங்களுக்கு ஒரு கரிசனையும் இல்லை என்கிறீர்களா?

ஒவ்வொருவரின் சுயத்தையும் அழித்து  அவர்கள் பெயரில் கதை சொல்லியாக உருமாறும் சோபாசக்தி பற்றியோ அதனைத் தனது வியாபாரத்திற்குப் பணன்படுத்தும் நீலகண்டன் பற்றியோ உங்களுக்கு எந்தக் காிசனையும் இல்லை என்கிறீர்களா?

சோபாசக்தியின் இலக்கிய மோசடி பற்றிப் பலர் வெளிப்படையாக எழுதியும் உங்களில் அந்த கரிசனை ஏற்படாததற்கு என்ன காரணம்?

உண்மையில் நீங்கள் யார்?

நீங்கள் புத்தகம் வெளியிடுவதும் மைக் முன் நின்று பேசுவதும் எதற்காக?

சமூகம் பற்றிய அக்கறை கொள்வதாகச் சொல்லிவரும் நீங்கள் அதற்கெதிராகவே செயற்படும் நிலை ஏன் உருவாகிறது?

உண்மையில்

நீங்கள் யார்?

நீங்கள் யார்?

நிங்கள் யார்?



நான் கேட்பது எனக்காக அல்ல.  கடந்து வந்த பாதையில் இது எனக்குப் புதிதுமல்ல. ஏற்கனவே நன்றாகப் பழக்கப்பட்ட ஒரு விடயம் இது. அதனால் நான் தெளிவாக இருந்தேன். 

இப்பொழுது உங்களை எனக்கு நன்றாகவே தெரிகிறது.

நீங்கள் ஆபத்தானவர்கள்.

இந்தப் படுபட்சி என்ற நாவலின் பின்னணி குறித்து இன்னும் அதிகம் தேடுகிறோம்.

சோபாசக்தியும் அவர் கூட்டாளி நீலகண்டனும்  இந்த இலக்கியத் திருட்டை நிறுத்தும் வரை இது குறித்து வெளிப்படையாகவே பேச வேண்டியிருக்கிறது.

நான் தொடர்ந்து பேசுவேன்.

புகலிட இலக்கியத்திற்கு ஆபத்தானவர்கள் இவர்கள் மட்டுமல்ல கண்மூடித்தனமாக இவர்களைக் கொண்டாடும் உங்களைப் போன்ற துப்புக்கெட்ட இலக்கியப் பிழைப்புவாதிகளுந்தான்.

நமது புகலிட இலக்கியம் எங்கே செல்கிறது என்பதனை இந்த வீடியோக்களை முழுமையாகக் கேளுங்கள். பித்தலாட்டக்காரர்கள் இருப்பதும் வாழ்வதும் அரசியலில் மட்டுமல்ல என்பதனைப் பரிந்து கொள்வீர்கள்.

அனைத்துக் காட்சிப் பதிவுகளையும்  பின்னூட்டத்தில் பகிர்கிறேன். நன்றி தடயத்தார்.

கற்சுறா


No comments:

Post a Comment

Editing & Ghostwriting சோபாசக்தியின் பித்தலாட்டம்- கற்சுறா

  அண்மைக் காலமாக, மிகக் கடுமையாக சோபாசக்தியின் இலக்கியச் செயற்பாட்டுமுறையை நான் ஏன் எதிர்த்து வருகிறேன்? கற்சுறா சோபாசகத்தியின் இலக்கியச் செ...