Sunday 26 June 2016

chemical இம் Balance...


சிறுகதை

chemical இம் Balance...


க ற் சு றா








விடுதலையின் வீர புதல்வர்களாக நாங்கள் மாறிக் கொண்டிருந்தோம். நிக்கரகுவா புரட்சியாலும் சான்டினிஸ்டாப் புதல்விகளினாலும் முதல் முறையாக மானபங்கப்படுத்தப்பட்டோம். நீல நிற அரைக்காற்சட்டையுடனும் வெள்ளைச் சேட்டுடனும் வெறுங்கால்களால் நெருஞ்சித் தெருக்களில் விளையாடித்திரிந்த எங்களுக்கு சான்டினிஸ்டாப் புதல்விகளின் தோள்களில் இருந்த துப்பாக்கி வெட்கத்தைத் தந்தது. 

முதுகில் துப்பாக்கியுடன் தன்னுடைய குழந்தைக்குப் தாய்பால் கொடுத்துக் கொண்டிருந்த சான்டினிஸ்டாப் புதல்வி ஒருத்தியின் புகைப்படத்தைக் காட்டி தோழர் பொஸ்கோ எங்களை அவமானப்படுத்திக் கொண்டிருந்தார். அந்த வெட்கத்தில் மனம் குறுகிய நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் விடுதலையின் வீர புதல்வர்களாக மாறிக் கொண்டிருந்தோம். தோழர் பொஸ்கோ எங்களை வென்றுகொண்டிருந்தார். 

அது ஒரு இருள் கவிந்த பின் மாலை நேரம். தோழரின் கொட்டில் வீட்டில் பின்னால் இறக்கப்பட்ட பத்தியிற்குள் நாங்கள் தோழருடன் கதைத்துக் கொண்டிருந்தோம். சாக்குக் கட்டிலில் காலைமடித்து குந்திக் கொண்டிருந்த தோழர் எழும்பி கூரையில் தொங்கிய அரிக்கன் இலாம்பைக் கொழுத்தினார். இலாம்பு வெளிச்சம் தோழரை செம்மஞ்சள் நிறமாகக் காட்டிக் கொண்டிருந்தது. பரவசமான அந்தச் சூழல் எங்களுடைய இரத்தத்தைச் சூடேற்றியிருக்கவேண்டும். உடலின் ஒட்டுமொத்தக் குருதியும் தலைக்கு விர்ர்... என்று ஏறி ஒன்றாய்ச் செருக முன்மண்டையோடு; சாடையாக விறைத்தது. தலைக்குள் நீல நிறத் திரவம் ஒன்று ஓடித்திரிந்தது போல் இருந்தது. நாங்கள் கண்வெட்டாமல் தோழரையே பார்த்துக் கொண்டிருந்தோம். நாளை பார்க்கலாம் என்று எங்களை வழியனுப்பினார் தோழர். எங்களுக்கோ கண்களுக்கு வெளியிலும் செம்மஞ்சள் ஒளி பரவியிருந்தது.

மறுநாள் தோழரைச் சந்திக்க எங்களுக்கு இருந்த அவகாசம் மிகவும் நீண்டதாகவே தெரிந்தது. புலன்கள் அனைத்தும் இயக்கமற்று, இருண்டு போய்க்கிடந்தது மனது. மாலை ஐந்து மணிக்குத் திரும்பவும் தோழர் எங்களைச் சந்திப்பதாகச் சொல்லியிருந்தார். தெருக்களில் கருகிக் காய்த்த வெயிலை மீறிக் காடு கொஞ்சம் அசைந்தது. காட்டிற்குள் புழுதியை அள்ளிக் கொட்டியது காற்று. ஐந்து மணிக்குக் கூட வெயில் தணியவில்லை. காண்டாவன வெயில் கழுத்திற்குள் புழுதியை ஒட்டி வேர்வையாய் ஒழுகியது. 

உலகவரைபடம் கூட ஒழுங்காக அறிந்து கொள்ளமுடியாதுபோன எங்களால் நிக்கரக்குவா எங்கிருக்கிறது என்று அறிந்து கொள்ள முடியவில்லை. தகரைப் பற்றைகளும் காவிளாய்ச் செடிகளும் சூழ்ந்திருக்க  ஆமணக்கம் வேலிகளைக் கொண்ட வீடுகளும் தெருநாய்கள் படுத்துறங்கும் கிறவல் தெருக்களும் காய்ந்து போன குளங்களுமாய் இருந்த எங்களது ஊர் போலவே ஒரு ஊராய் நிக்கரகுவா கண்முன் தெரிந்தது. தோழர் பொஸ்கோ எங்களுக்காகக் காத்திருந்தார். 

அன்றிரவே தோழர் பொஸ்கோவுடன் எங்களது ஊரிலிருந்து அன்பரசி, ஆனந்தராணி, ஞானவடிவு என்று மூன்று பெண்கள் உட்பட மொத்தம் ஒன்பதுபேர் காணாமற்போயிருந்தார்கள்.
காணாமற் போயிருந்த அந்த ஒன்பது பேரில் தனித்த நால்வரது கதை மட்டுமே இது. மற்றய ஐந்து பேரும் என்ன ஆனார்கள் எங்கிருக்கிறார்கள் என்று இந்தக்கதைக்குள் நான் சொல்லவில்லை. ஆனால் மற்றய ஐந்து பேர் குறித்த சந்தேகமும் கரைச்சலும் என்னைப்போலவே உங்களுக்கும் எப்பொழுதும் இடையூறு பண்ணிய வண்ணம் இருக்கும் என்பது  தெரியும்.  இன்னொரு ஊரில் ஏதோ ஒரு தெருவில் நடந்த கதைகளில் அவை பதியப்படும் என்றே நம்புகிறேன். 

நாங்கள் எமது கதைகளை இன்னும் முழுதாய் எழுதத் தொடங்கவில்லை. அதற்குள் எமது கதாபாத்திரங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன.

இந்தக்கதையை நான் ஒரு பஸ் நிறுத்தத்தில் இருந்து தொடங்குகிறேன். இந்த பஸ் நிறுத்தம் ஊரின் ஒரு நடுப்பட்ட சந்தியில் இருக்கிறது. இது வெறுமனே பயணிகள் வந்து காத்திருந்து பஸ் ஏறி இறங்கும் ஓரு இடமாக மட்டும் அது இருந்து விடவில்லை. ஈழத்தின் எந்தத் தெருச் சந்தியும் அப்படியொரு "சும்மா" சந்தியில்லை என்பது உங்களுக்கே தெரியும். அவை பல கொலைகளைக் கண்ட கொலைகாரச்சந்திகளாகவே இருக்கும். அப்படியொரு சந்திதான் இந்த பஸ் நிறுத்தம் இருக்கும் சந்தியும். 

இந்தச் சந்தியின் ஒரு கரையில் ராமுவின் தேனீர்க்கடை இருக்கிறது. கடையின் பக்கத்தில் ஒரு பெரிய தேமா மரமும் கம்பியே இல்லாத தந்திக் கம்பம் ஒன்றும் எல்லோரது கண்ணிலும் படும். அதன் எதிர்த் திசையில்தான் இருக்கிறது இந்த பஸ் நிறுத்தம்.. பஸ் நிறுத்தத்தின்  உள்ளே யாரும் போவதில்லை. அது மழைக்குப் படுத்த ஆடுகளின் புழுக்கைகளால் எப்போதுமே நிறைந்துபோய்க் கிடக்கிறது. பின்பக்கம்தான் பெரியாஸ்பத்திரி. பஸ்ஸிற்காகக் காத்து நிற்பவர்கள் ஒன்று பெரியாஸ்பத்திரியின் வாசலிலோ அல்லது ராமுகடையின் வாசலிலோ தான் நிற்பார்கள். பஸ் றைவர் மாருக்கும் அது தெரியும். அவர்களை விட்டுவிட்டு ஒருபோதும் பஸ் போனது இல்லை.

சனத்தோடு நிற்பதற்குப் பிடிக்காமல் பஸ் நிறுத்தத்திற்கு அருகில் கிடந்த கல்லுக்கும்பியில் நா.வையும் அவனின் மனிசியும் கருணையும் பஸ்ஸிற்காகக் காத்து நிற்கிறார்கள். காலைவெயில் சூடு கொஞ்சம் இதமாக இருந்தது. ஆஸ்பத்திரியின் முன்விறாந்தையில் கட்டியிருந்த பெரிய தண்டவாளத் துண்டில் கறுப்பன் ஒரு சிறிய இரும்புக் கம்பியால் ஒன்பது முறை அடித்தான். பஸ் வர எப்படியும் பத்து மணியாகும். ஆஸ்பத்திரியின் வாசற் பக்கமிருந்து இயக்கனும் அவனது மனிசியும்  சந்திக்கு வந்தார்கள். இயக்கனைப் பார்த்த கருணைக்குத் "திக்" என்றது.




இயக்கனை இந்தத் தருணத்தில் பார்க்க நேர்ந்தது ஒரு தற்செயலான விடையம்  எனினும் மனம் ஒரு நிலைப்படவில்லை. கால்கள் மனதைவிடவும் இடறின. முடிந்தவரை சந்தித்துக் கொள்வதைத் தவிர்த்தாலும் சந்தர்ப்பங்கள் இடக்குமுடக்காய் வந்துதான் விடுகிறது. 
அவனுக்கும் தங்களுக்குமான இடைவெளியை பெரிதாக்க நினைத்தும் முடியாமல் இருந்தது. அவன் இவர்களது அசைவுகள் ஒவ்வொன்றையும் சிறிது தூரத்திலிருந்தே உற்று நோக்கியபடி இருந்தான்.  

நீண்டகாலத்தின் பின் பார்ப்பதாலோ என்னவோ சரியாக இளைத்து ஒடுங்கிப் போயிருந்தது போல் இருந்தது அவனது உடல். நாலுமுழ வேட்டியும் வெள்ளைச் சேட்டும் அணிந்து நெற்றியில் சந்தனப் பொட்டு ஒன்றை பெரிதாக வைத்திருந்தான். அவனது கையை இறுகப்பற்றியபடி  தாங்கிப்பிடித்துக் கொண்டிருந்தாள்  மனைவி. மனைவியின் தோளில் சரிந்து போய் நின்ற இயக்கன் மறு கையால் பல்லுக்குள் எதையோ தோண்டிக் கொண்டிருந்தான்.

நீண்டகாலத்துப் பழிவாங்கும் உணர்வு அவனைப்போலவே இவர்களுக்கும் தொண்டை வரை வந்திருந்தது. இயக்கனைக் கண்டதும் அவர்களுடைய உதடுகள் வரண்டுபோய் குரலும் இறுகியிருந்தது. 

மரவள்ளிக்குழையை மட்டும் தின்று வயிறு உப்பியிருந்த ஒரு ஆட்டின் குரல் போல் அது கரகரத்துப் போய் இறுகியிருந்தது. அவர்கள் பேசுவதே அவர்களுக்குக் கேட்கவில்லை. ஆனால் கருணையின் குரலைக் கேட்ட இயக்கன் அந்தப் பக்கம் தனது தலையைத் திருப்பி 
டோய்... என்று பெலத்துக் கத்தினான்.

டோய் "நாயளே. நீங்களெல்லாம் மனிசரோடா. விசர்பிடித்த நாய்களே" என்று திரும்பவும்  உரத்துக் கூக்குரலிட்டான்.. அவனுக்கு விசர் கூடிவிட்டிருந்தது

அவனது கத்தல் காட்டுக்கத்தல் போன்று வரண்டு போய் இருந்தது. அது திடுமென அவர்களிடம் கொஞ்சம் பீதியை ஏற்படுத்தியது. இருந்தும் அவர்கள் அவன் இருக்கின்ற  பக்கம் திரும்பவில்லை. அவனைக் கவனியாது இருப்பது போல் இருந்தார்கள். நா.வையின் மனிசிக்குச் சீ... என்றிருந்தது.

நா.வை தலையைக் குனிந்தபடி பஸ் நிறுத்தத்தின்  பக்கத்திலுள்ள சுவரில் முதுகை வைத்துக் கொண்டு குந்தியிருந்து தனது மனைவியுடன்  பேசிக் கொண்டிருந்தான். அவன் இருந்த நிலையினைப்பார்க்க  ஏற்கனவே இயக்கன் அங்கு வந்ததை அவனும் பார்த்திருந்தது தெரிந்தது.
யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என்று நினைத்த இயக்கன் தனது நாக்கை உள்ளுக்குள் வளைத்து அவர்களை நோக்கி உரத்த விசில் ஒன்றை அடித்தான்.

இயக்கனுடைய விசில் இந்தமுறை நா.வையனையே குறி வைத்தது. நா.வை அதனைப் பொருட்படுத்தாது அவனுடைய மனிசியுடன் மிக முக்கியமான கதை ஒன்றைக் கதைப்பது போல் பாசாங்கு செய்து நிலத்திலிருந்த சல்லிக் கல்லை விரலால் கிளறிக் கொண்டு இருந்தான். 
நாவையின் மனிசிக்கு  பெறுமாதம் கிட்டியிருந்தது. அவளால் இருக்க முடியாது. கையை நாரிக்கு முண்டு கொடுத்துக் கொண்டு நா.வையின் முன்னால் நின்று அவன் சொல்வதைக்  கேட்டுக் கொண்டிருந்தாள். நா.வையின் மனிசிக்கு இயக்கனைத் தெரியாது. இயக்கனின் மனிசிக்கும் இவர்களைத் தெரியாது. 

இப்போதுதான் பயணிகள் கொஞ்சம் கொஞ்சமாக பஸ்கோல்ட்டிற்கு வந்து சேர்ந்து கொண்டிருந்தனர்.  இன்னும் வழமையான நெரிசலுக்குரிய சனம் வந்து சேரவேயில்லை.  
இயக்கன் திரும்பவும் பெரிய விசில் ஒன்றை அடித்தான். இயக்கனின் மனைவி அவன் வாயைப் பொத்தி இரண்டாவது விசிலை அடிப்பதை நிறுத்திவிட்டு அவனை இழுத்து அருகில் இருந்த மரக்குற்றியில்  இருத்தினாள். இயக்கன் முதலில் கெம்பி எழுந்தவன் பின்பு அமைதியாக அந்தக் மரக்குற்றியில் இருந்தான். பஸ் வரும் வரை அவன் எழும்பவில்லை. சத்தமும் போடவில்லை.
மனைவியின் அதட்டலுக்குப் பயந்து போய் இருத்திவிட்ட அதே குற்றியில் தலையைக் குனிந்து தன்னுடைய கவட்டைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த சந்தனப் பொட்டும் நாலுமுழ வேட்டியும்  அவனுக்கு கொஞ்சமும் பொருந்திவரவேயில்லை.  ஒரு புரட்சிக்காரன் தோற்றுப் போகக் கூடிய புள்ளியாய் அந்தப் பொட்டு இருந்தது. 

ஒரு புரட்சிகாரனாய் இயக்கத்தில் வந்து சேர்ந்த போது மிகவும் மரியாதையான தோழர் பொஸ்கோவின் ஞாபகமாக தனக்கு பொஸ்கோ என்று பெயரிடச் சொன்னபோது. காம்ப் பொறுப்பாளர்தான் பொஸ்கோ என்று ஏற்கனவே நாலைந்து பேர் இருக்கிறார்கள் . அவர்களுக்கே சின்ன பொஸ்கோ பெரிய பொஸ்கோ என்று கூப்பிட வேண்டியிருக்கிறது எனச் சொல்லி இயக்கன் என்று அவனுக்குப் பெயரிட்டார். இயக்கனின் உண்மையான பெயர் சேனாதிராசா. இப்போது இயக்கனின் மனிசியைத் தவிர வேறு யாருக்கும் சேனாதிராசா என்றால் தெரியாது. ஊரிலுள்ள குஞ்சு குருமன்களுக்கும் இயக்கன் என்றால் தெரியும். விசரன் என்றாலும் இயக்கன் தான் என்று தெரியும். ஆனால் சேனாதிராசாவை யாருக்கும் தெரியாது. 


சேனாதிராசா, நா.வை. கருணைநாதன், ஆன்பரசி, ஆனந்தராணி, ஞானவடிவு,  காசி, தேவரூபன் என்று எட்டுப் பேரை தோழர் பொஸ்கோ இயக்கத்திற்கு அனுப்பத் தயார்படுத்தினார். 

ஈழத்தின் கரையிலிருந்து இந்தியக்கரைவரை பயணம் எவ்வளவு ஆபத்து நிறைந்தது. வள்ளம் எவ்வளவு வேகமாகப் போகும்.  எவ்வாறு வள்ளத்தில் இருக்கவேண்டும். ரெயினிங்காம் எப்படி இருக்கும் என்பதோடு ஒவ்வொரு பயிற்சிகளின் விபரமும் அதன் கஸ்டங்களையும் சொல்லி தேசவிடுதலைக்காக நாம் அர்ப்பணிக்கும் வாழ்வு இது என்பதைத் தெளிவுபடுத்தி விடுதலையின் வேள்விக்கான பயணத்திற்கு தருணம் பார்த்தார்.

கிளிநொச்சியிலிருந்து வந்த தேவிகாஸ் வீடியோ நிறுவனத்தினர் அப்போது "உல்லாசப்பறவைகள்' திரைப்படத்தை விதானையார் வீட்டு முற்றத்தில் திரையிட்ட இரவு சரியான தருணமாக உருவாக்கப்பட்டு அனைவரும் அங்கு வரவழைக்கப்பட்டார்கள். ஆனால் அன்று அந்த எட்டுப் பேருடன் பொஸ்கோ தோழரின் கடைசித் தம்பி கிளியனும் ஒன்பதாவது ஆளாய்ச் சேர்ந்து கொண்டான். தோழரால் மறுக்கமுடியவில்லை. 

"நானும் வீட்டில் இல்லாமல் இருக்கிறேன், 
நீயும் இயக்கத்திற்கு வந்தால் நல்லாயிருக்காது, 
அம்மாவுக்கு அருகில் நீதான் இருக்க வேண்டும்." 
என்று சிறிய புத்திமதி ஒன்றைச் சாட்டுக்குச் சொல்லிப்பார்த்தார். 

அந்த இருட்டிற்குள்ளும் தெளிவாய் மறுத்தான் கிளியன். மேற்கொண்டு எதுவும் தோழர் பொஸ்கோவால் பேசமுடியவில்லை. ஒன்பது பேரையும் அழைத்துக் கொண்டு பாலியாற்றங்கரையைப் பிடித்து நடக்கத் தொடங்கினார். உல்லாசப்பறவைகள் படம் முடிய இன்னும் இரண்டுமணி நேரம் இருந்தது. அதற்குள் நாங்கள் ஊரைக்கடந்து விடலாம் என்றார் தோழர். பகல் வெக்கை காட்டுக்குள் அடங்கிக் கிடந்தது. சேட்டைக் கழற்றி கையில் சுற்றிக் கொண்டு தோழரின் பின்னால் நடந்தார்கள்.

போய் நாலைந்து வருசத்தின் பின் நா.வையும் கிளியனும் இயக்கனும் கருணையும்தான் இந்தியாவில் இருந்து ஒன்றாகத் திரும்பியவர்கள். நேவிக்காரர்களின் கெடுபிடிகள் அதிகமாய் இருந்ததால் ஓட்டி வள்ளத்தை சில இடங்களில் வேகத்தைக் கூட்டியும் சில இடங்களில் வேகத்தைக் குறைத்தும் ஓட்டிக் கொண்டிருந்தார்.

எல்லோருக்கும் உள்ளாரப் பயம் பிடித்து இருந்தது. எந்தப் பிரச்சனையும் இல்லாமல் போய்ச் சேரவேண்டும் என்பது ஒரு வகைப் பிரார்த்தனையாகவே எல்லோருக்கும் இருந்தது. 

இயக்கன் தூரத்தில் தெரியும் வெளிச்சங்களைக் கண்டவுடன் 

"கர்த்தரே காப்பாற்றும்" என்றும்,

 "கர்த்தரே எம்மை எமது அன்னையிடம் கொண்டுபோய்ச் சேரும்" என்றும் 

பிரார்த்தனை செய்து கொண்டிருந்தான். பயத்தினை மறக்க மாறி மாறி சினிமாப்பாடல்களைப் பாடினான். இயக்கனுடன் சேர்ந்து எல்லோரும் பாடினார்கள்.

நிலவை முகில்கள் மறைத்து விட்டிருந்தது. கடலை இருள் மேவியிருந்தது.  ஓட்டி வேகத்தை இன்னும் கொஞ்சம்  கூட்டப் போவதாகச் சொன்னார். 

அலைக்கு அலை தாவியது வள்ளம். 

குண்டி வள்ளத்தில் எழும்பிக் குத்தியது. கரை தெரிகிறது என்று சொன்னார்.

ஓட்டி. ஓட்டிக்குத் தெரிந்த கரையை யாராலும்  அனுமானிக்க முடியவில்லை. 

உப்பு ஊறிக் காய்ந்திருந்த உதடுகளை நாவால் நனைத்து நிம்மதிப் பெருமூச்சு விட்ட நா.வை எழும்பி கரையைக் கூர்ந்து தேடினான்..

நிலவிலிருந்து முகில்கள் மெதுவாக விலத்த கடல் கொஞ்சம் வெளித்தது..

வெளித்த இருளில் திரும்பிப் பார்த்தபோது வள்ளத்திலிருந்த கிளியனைக் காணவில்லை. 

கண்களைக் கசக்கி விரித்து நன்றாகப் பார்த்தான் நா.வை.  

கருணைக்கும் இயக்கனுக்கும் இடையில் கயிறு ஒன்றைப் பற்றியபடி இருந்த  கிளியனைக் காணவில்லை. 

இயக்கன் இருந்த இடத்திலிருந்து தொடர்ந்து பாடிக் கொண்டே இருந்தான். 

இயக்கனை உலுப்பி "எங்கடா கிளியன்" "எங்கடா கிளியன்" என்று கத்தினான் நா.வை. 

இயக்கனிடமிருந்து எந்தவித பதிலுமில்லை. 

அவன் நா.வையின் கேள்வியைக் கவனியாது தொடர்ந்து பாடினான். 

"மணவினைகள் யாருடனோ மயாவனின் விதிவலைகள். விதிவகையை முடிவு செய்யும் வசந்தகால... நீரலைகள்..." என்று விடாமல் பாடிக்கொண்டே வந்தான். இயக்கனுக்கு விறுமம் பிடித்தது போலிருந்தது. கழுத்தைச் சுற்றி நரம்புகள் தெரிய பாட்டை மட்டும் தொடர்ந்து பாடினான். 

ஓட்டி கரையை நெருங்கும் வரை வேகத்தைக் குறைக்கவில்லை. வள்ளத்தில் பாரம் குறைந்திருந்ததை ஓட்டியும் உணர்ந்திருந்தார்.

கரையை வந்தடைந்ததும் நா.வைக்கு தலை சுற்றியது. ஒரு ஆமான பதில் தேவைப்பட்டது. மண்டை குழம்பியது. என்ன நடந்தது என்று யோசிக்கத் தெரியவில்லை நா.வைக்கு.

"கையிலிருந்து தவறிய கொலையடா அது." 

என்று சுழன்று சுழன்று கத்தினான்.

"என்னண்டடா ஊருக்குப் போறது?"

"கிளியன்ர தாய்க்குப் போய்  என்னத்தைச் சொல்லுறது? " என்று அலறினான் நா.வை.

முகத்திற்கு நேரே கொண்டுவந்த கையைத் தட்டி அவனது கேள்வியை அலட்சியப்படுத்தினான் இயக்கன். 

"சொல்லடா... அவன்ர தாய்க்கு என்னத்தச் சொல்லுறது? " 

"மீனுக்குப் போட்டாச்சு என்று சொல்லு...!"எண்டு கத்தினான் இயக்கன். 

ரெத்தக் காட்டேறி போல் முகத்தைச் சிலுப்பினான். 

"நீயா தள்ளி விட்டாய்...? " 

"இல்லை. அவனாய் விழுந்தான்.."

"ஏன்ரா சொல்லேல்ல?."

"அவன் தளத்திற்கு வரக்கூடா." 

"வந்தா...? "

"வரக்...கூ...டா..."

"அதான்ரா ஏன்? "

"அவன் பெரியவற்ற ஆள்."

"அப்ப நீ யாற்ர ஆள்? "

"எல்லாம் முடிஞ்சு. இனியென்ன பெரியவரும்... சின்னவரும்...."

"இல்ல... அப்படியில்ல."

"அவன ஊருக்க விடக்கூடா. அவன் வந்தா... ஊர் நாசம்." என்று கத்தினான் இயக்கன்.

"சரி இப்ப அவன்ர தாய் தேப்பனுக்கு என்னத்தச் சொல்லப் போறாய்? "

"தோழர் பொஸ்கோவுக்கு என்னத்தச் சொல்லப் போறாய்" என்று கேட்டான் நா.வை.

"தோழரும்... ப்புண்டையும்...." என்று குனிந்து நின்று புறுபுறுத்தான்.

கருணை நா.வையின் பின்னால் நின்றான் கிளியனைப்பற்றிச் சொல்ல அவனிடம் ஒரு சொல்லும் இல்லை..

"சும்மா கத்தாத. அவன ஊருக்க விட்டா நீ நிறையத்  தாய்தேப்பனுக்குப் பதில் சொல்லோணும்." எண்டு சொன்னான் இயக்கன்.

வெயில் கரையைச் சுட்டது. கரையில் அதிகமான நேரத்தைக் கழித்தார்கள். அவர்களால் உடனேயே ஊருக்குள் போக மனமில்லாமல் இருந்தது.

"நேவிக்காரர் கலைத்துச் சுட்டாங்கள். நாங்க வந்த வள்ளம் கவிண்டுபோட்டுது. நாங்க எல்லாரும் கடலுக்குள்ள தாண்டுபோனம். ஓட்டிதான் எங்களைக் காப்பாத்திக் கொண்டு வந்தவா.; கிளியனுக்கு நீச்சல் தெரியாம கடலுக்க தாண்டுபோனான். நாங்க முழுராவும்  கடலுக்குள்ளதான் கிடந்தம். கடைசிவர தேடியும் கிளியனக் கண்டுபிடிக்கேல்ல." என்று கிளியனின் வீட்டிற்குச் சென்று அவனது அம்மாவுக்குச் சொன்னார்கள். 

அப்போது வீட்டின் பின் வளவிற்குள் நின்று தோழர் பொஸ்கோ வாழைக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு நின்றார். நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

கொஞ்ச நாட்களின் முன்னர்தான் இயக்கத்தை விட்டுவிட்டு தோழர் பொஸ்கோ வீட்டிற்கு நிரந்தரமாக வந்திருந்தார். சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லுரியில் நடந்த கடைசி இயக்க மாநாட்டில் செயலதிபர் முகுந்தன் தன்னுடைய செயலதிபர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று பொஸ்கோ உட்பட்ட சகல தோழர்களாலும்  வைக்கப்பட்ட கோரிக்கை இயக்கத்தின் மேலிடத்தால் நிராகரிக்கப்பட்டதில் மிகவும் மனம் உடைந்து போய் வீட்டிற்கு வந்திருந்தார்.

"கிளியனுக்கு நல்லா நீச்சல் தெரியும்." 

"மூத்தவனத் துலச்சுப் போட்டன் எண்டுதான் நினைச்சிருந்தனான். அவனே வந்துட்டான். அவனமாரி எண்ட கிளியனும் கெதில என்னட்ட வந்துருவான். நான் கும்பிர்ற சாளம்பன் பிள்ளையார் என்ன எண்டைக்கும் கைவிடமாட்டார்."

 "நீங்கள் யோசிக்காதேங்கோ"
என்று அவர்களிடம் நம்பிக்கையாகச் சொல்லியனுப்பினாள் கிளியனின் அம்மா.

"சடங்கச் செய்யுங்கோ" என்று சொல்ல மனம் வந்தும் அவளது நம்பிக்கையைக் குலைத்துவிட நா.வைக்குத் தைரியமில்லை. 
தோழர் பொஸ்கோ குனிந்த தலை நிமிரவில்லை. நம்பிக்கையெல்லாம் உடைந்த வெட்கத்தில் குனிந்த தலை அது. 


சான்டிஸ்டாப் புதல்விகளால் ஏமாற்றப்பட்டவர்கள் இந்த ஒன்பது பேர்மட்டுமல்ல. 




இப்போது நாங்கள் எல்லோரும் பயணித்துக் கொண்டிருந்த பஸ் பழைய முறிகண்டியில் இருந்த இந்தியன் ஆமியின் சிறியதொரு தடுப்புமுகாமில் நின்றது. அதந்தத் தடுப்பு முகாம் வயல்களில் போடப்படும் காவற்கொட்டில் போன்று காயாத் தடிகளைக் கொண்டும்  நாலு ஐந்து கிடுகுகளைக் கொண்டும் அமைக்கப்பட்டிருந்தது. அதன் அமைப்பினைப் பார்த்தாலே அது திடீரெனப் போடப்பட்ட ஒரு தற்காலிக தடுப்புமுகாம் என்பது அனைவருக்கும் புரிந்து விடும்.  அந்த தற்காலிக முகாமின் தோற்றம் எல்லாப் பயணிகளுக்கும் ஒருவித பயத்தை உண்டுபண்ணியது.
பஸ்சிலிருந்து அனைவரையும் இறங்கச் சொன்னான் ஒரு இராணுவத்தான். கடலை எண்ணை மணத்தையும் மேவியிருந்தது பயம். 

எல்லோரும் இறங்கினாலும் இயக்கன் மட்டும் இறங்க மறுத்தான்.  

இயக்கன் வாய் நிறையக் கத்திக் கத்திக் களைத்திருந்தான்.

நாளைக்கு முழு நிலவு. அவனால் தன்னைக் கட்டுக்குள் வைத்திருக்கவே முடியாது. சொல்ல வேண்டும் என்று அவன் நினைத்ததை மட்டும் அவனால் சொல்லமுடியாதிருந்தது.  அவனது மனம் முழுவதும் பவுர்ணமிக்குச் சொந்தமாகிற போது அவன் தனது மனைவிக்குச் சொல்லமுடியாத கதை எல்லாவற்றையும் பவுர்ணமிக்குச் சொல்லிக் கொண்டிருந்தான்.

இயக்கன் இறங்க மறுத்த போது அவனது மனைவி பயத்தில் நடுங்கினாள். 

"இஞ்சேயப்பா எழும்பி வாங்கோ. அவங்கள் சுட்டுப் போடுவாங்கள். எனக்குப் பயமா இருக்கு. மற்றாக்கள் எல்லாரும் இறங்கிட்டினம் பார்த்தீங்கதானே. நீங்களும் வாங்கோ" என்று ஒருமுறை கெஞ்சியும் மறுமுறை அதட்டியும் கேட்டாள். இயக்கன் எதற்கும் மசியவில்லை. 

"நான் ஏன் இறங்கோணும்." "நான் இறங்கமாட்டன்" 
என்று அறுதியாய்ச் சொன்னான் இயக்கன்

"நாங்கள் வாழ்வது சோசலிச தமிழ் ஈழத்தில். இது ஒரு கம்யூனிச நாடு. இங்கே மக்களுக்கே சகல அதிகாரமும் உண்டு. என்னால் இறங்க முடியாது." என்று கத்தினான். 

எல்லோரும் நடந்து காம்பிற்கு முன்னால் சென்று கொண்டிருக்கும் போது இயக்கனும் றைவரும் மட்டுமே பஸ்சிற்குள் இருந்தனர். பஸ் மெதுவாக ஊர்ந்து சனங்களோடு வந்தது.

யன்னலுக்குள்ளால் தலையை நீட்டி விசில் ஒன்றை அடித்து 

"டோய்... கொலைகாரா...? 
என்று கருணையை நோக்கிக் கூப்பிட்டான் இயக்கன். 
காட்டுக்குள் இருந்து சிதறிய சூரிய ஒளி செம்மஞ்சள் கலரில் இயக்கனின் முகத்தில் தெறித்தது.


நன்றி
ழகரம்5
ஓவியங்கள்
karuna
kkrajah


****