Wednesday 10 April 2019

குறிப்பு:தோழர் சண் அவர்களது 6ம் ஆண்டின் நினைவுப் பகிர்தல்.


தோழர் சண் அவர்களது 6ம் ஆண்டின் நினைவுப் பகிர்தல்.

 

“நினைவு கொள்ளலும் சண் தாண்டிச் சென்ற தடயங்களைப் புரிந்து கொள்ளலும்”

என்றவாறாக சண் குறித்துப் பேசுவதற்கு 7ஏப்ரல் 2019இல் நாம் கூடியிருந்தோம்.

நிகழ்வின் பேச்சாளர்களாக தோழர் இரா. சீவரத்தினம், தோழர். பாக்கியநாதன் முருகேசு, தோழி உசா(சறோஜினி பொன்னம்பலம்), தோழர் நேசன், பாதர் சேவியர்  ஆகியோர் பங்கு கொண்டார்கள். நிகழ்வின் ஆரம்ப உரையை நான் நிகழ்த்தினேன். எனது உரையை இக்குறிப்பின் இறுதியில் பதிவிடுகிறேன்.

நிகழ்வில் பேசிய மற்றயவர்களது உரையிலும் மிக முக்கியமானது என நான் கருதுபவற்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்கிறேன். அனைவரது உரைகளும் வீடியோ வடிவில் விரைவில் பதிவேற்றப்படும். அதில் உரைகளை முழுமையாக நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
 

முதலில் பேசிய சீவரத்தினம் அவர்கள் சண்குறித்து தனக்குத் தெரிந்த கதைகளையும் கேட்ட கதைகளையும் விபரித்தார். தோழர் சண் அவர்கள் சிறிய வயதில் தான் கல்விகற்ற  பாடசாலையான விக்கினேஸ்வராக்  கல்லூரியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களை வாங்கில்களில் இருந்து கல்வி பயிலக் கூடாது என இருந்த அக்கிரமத்தை எதிர்த்து “ அப்படியெனில் யாருமே வாங்குகளில் இருக்கக் கூடாது” என அனைத்து வாங்கில்களையும் உடைத்தவர் என்ற தகவலைக் குறிப்பிட்டுச் சொன்னார்.

அடுத்துப் பேசிய பாக்கியநாதன் அவர்கள் காந்தியத்தில் சந்ததியாரின் தொடர்பில் இணைந்த சண் அவர்கள் காந்தியத்தின் கொள்கைகளின் ஈர்ப்பில் இணைந்து கொண்டவர் என்றும் காந்தியத்தின் செயற்பாடுகளில் மிகுந்த சிரத்தையுடன் செயற்பட்டவர் என்றும் கூறி காந்தியம் என்பதும் அதில் சந்ததியார் டேவிட் ஐயா, டாக்டர் ராஜசுந்தரம் போன்றவர்கள் குறித்தும் விபரமாகப் பேசினார்.

அடுத்துப் பேசிய  தோழர் சண் அவர்களின்  சகோதரியான உசா அக்கா அவர்கள்  பேசிய போது தானும் தோழர் சண் அவர்களும்  இவ்வாறு இருப்பதற்கு தமது பெற்றோரின் முன்னுதாரணம் என்பதைச் சொல்லி தனது வாழ்வில் எவ்வளவு எளிமையாக வாழ முடியுமோ அவ்வளவு எளிதாக வாழ்ந்தவர்   அவர். என்பதற்குப் பல உதாரணங்களைச் சொன்னார்.  ஈழவிடுதலை அரசியலில் தோழர் உமாமகேஸ்வரனுடன் உரையாடிவிட்டு அவரிடம் அரசியல் தெளிவு இல்லை என்பதை உடனடியாகவே தனக்குச் சொன்னவர் என்றார்.

அடுத்ததாகப் பேசியவர் பாதர் சேவியர். தனது 91 வயதிலும்      இந்த நிகழ்விற்கு வருகை தந்தது அனைவருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அவர் பேசியவை மறதிகளுடன் கூடியவை என்பதனை பலர் தெரிவித்தார்கள். 
 

இறுதியாக நேசனது உரை. கடந்த 38 வருடங்களுக்கு முன்னமே தனக்கு சண் அவர்களைத் தெரிந்திருந்தது. அவர் தன்னலம் அற்றவர். அதற்கு உதாரணமாக  ஈழ அரசியலில் ஈடுபட்ட காரணத்தால் சிறை சென்ற சண் சிறையிலிருந்து வந்த பின் தனது வங்கிக் கணக்கில்   இருந்த ஒரு தொகைப்  பணத்தினை எடுத்து ஒரு பகுதியை ஈழவிடுதலைப் போராட்ட அமைப்பிற்கும் மற்றய இன்னொரு பகுதியை காந்தியத்தில் இருந்து செயற்பட்டு அதன் பின் மிக வறுமையில் சாப்பாட்டுக்கும் வழியற்று இருந்த மாணிக்கம்  என்றொருவருக்குக் கொடுத்துவிட்டு வெறுங்கையுடன் இந்தியா சென்றவர் தோழர் சண் என்பதனைக் குறிப்பிட்டுச் சொன்னார்.

அதனைத் தொடர்ந்து சபையிலிருந்தவர்கள் தமது கருத்தினைத் தெரிவித்தார்கள்.  டேவிற்சன், மித்திரன், மகேஸ்வரராஜா, தவபாலன், ஜயகரன், ஜோர்ஜ் குருசேவ், திலீபன், குமரன் லோகன், மதி ஆகியோர் தமக்குத் தெரிந்த சண் குறித்துக் கருத்தினைப் பதிவு செய்தார்கள்.  அதில் திலீபன் அவர்களால் சிறு குழப்பம் ஏற்பட்டு  குமரன் லோகனின் கருத்துப்பகிர்வு இடையில் நின்றது. நிகழ்வின் ஏற்பாட்டாளர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் அந்தச் சங்கடத்திற்காக குமரன் அவர்களிடம் நான் அனைவர் சார்பாகவும் மன்னிப்புக் கோருகிறேன்.
 

இந்த நிகழ்வினை நடத்துவதற்கு மண்டப உதவி வழங்கிய ஹீரோ கேற்றிங் குமார் அண்ணைக்கும் நிகழ்வினை வீடியோப் பதிவு செய்து தந்த குமார் அவர்களுக்கும் பகைப்படம் எடுத்துத் தந்த குணசீலன் அவர்களுக்கும் நிகழ்வினை Live இல் உடனடியாகவே வெளியிட்டுக் கொண்டிருந்த கிருபா கந்தையா அவர்களுக்கும் மிக்க நன்றிகள்.
 
 

6வருடத்தின் பின் தோழர் சண் அவர்களது மறைவிற்குப் பின் நிகழ்த்தப்பட்ட ஒரு நினைவு பகிர்வு நிகழ்வு இது. நாம் அதிகமாக முரண்படுவதற்கும் அதனை எதிர் கொள்வதற்கும் உள்ளும் புறமும் இருக்கும் தர்க்க நியாய அநியாயங்கள் குறித்துப் பேசுவதற்கும் நம்மிடம் அதிக விடயங்கள் இருப்பதாகவே எண்ணியிருக்கும் நிலையில் இப்படியொரு குழப்பம் நடந்திருக்கக் கூடாதது. ஆனாலும் ரொரண்டோ சூழலில்  வாழ்த்துக்களையும் புகழுரைகளையும் மட்டுமே பார்த்தும் கேட்டும் வந்த கண்ணும் காதும் நீண்ட காலத்தின் பின் ஒரு முரணை உணர்ந்தது. அந்த முரண் ஆரோக்கியமாக விவாதிக்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்.

 

கீழே இனி வருவது எனது ஆரம்ப உரை.


சண்முகலிங்கம் அவர்களது 6ம் ஆண்டு நினைவினை நிறுத்திப் பேசுவதற்கு நாம் கூடியிருக்கிறோம்.  இன்று தான் நமது இன்னொரு தோழர் சண் என அழைக்கப்படும் சண்முகநாதன்  சின்னத்தம்பிஅவர்கள் மறைந்த நாள். தோழர் சண்முநாதன் குறித்துப் பேசுவதற்கும் நமக்கு அதிக விடையங்கள் இருக்கின்றன. பல்வேறு தளங்களில் அவருடன் சேர்ந்து வேலை செய்த பலர் இங்கிருக்கிறார்கள்.அவர்களும் அதனைக் கருத்தில் எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

சண்முகலிங்கம்  அவர்கள் மறைந்து ஆறு வருடங்கள். நான் ஏற்கனவே சொன்னது போல இந்த சமூகம் கைவிடப்பட முடியாத பலரைக் கைவிட்டே வந்திருக்கிறது. நமது தமிழ் இலக்கிய அரசியற்ச் சூழலில் சண் அண்ணாவினது  பங்கு – செயற்பாடு அது ஈழத்தில் என்றாலும் சரி கனடாவில் என்றாலும் சரி தகுந்த முறையில் கவனம் கொண்டு பதியப்படவில்லை என்ற ஒரு கவலை நம்மில் பலருக்கு இருந்து கொண்டே இருந்தது. தொடர்ச்சியாக நண்பர்களிடத்தில் அதுகுறித்துப் பேசிவந்த பின் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வே இது.

 “தோழர் சண்”

ஆம் இப்போது தோழர் சண் என்றே அழைக்கத் தொடங்குகிறேன். அவர் நம்மில் அனைவருக்கும் தோழனாகவும் இருந்தார். நம் பலரது இடர்களில் ஒரு தந்தையாக இருந்திருக்கிறார். நான் அனுபவித்தது போல் அந்த தந்தைக்குரிய தார்ப்பரியத்தை இங்குள்ள பலர் அவரிடமிருந்து அனுபவித்திருக்கக் கூடும்.

ஆனாலும் அவரை நாம் எல்லோரும் சண் அண்ணா என்றே அன்போடு அழைத்திருக்கிறோம். அவர்  எல்லோருக்கும் எப்போதும் உவப்பானவராக இருந்திருக்கவில்லை. அவர் வழமையாகப் பேசும் ஒருவித கரடுமுரடான உரையாடல் மொழிப்பாவனை அவரைப் பலரிடம் இருந்து விலக்கி வைத்திருக்கிறது.

இறுதிக்காலத்தில் அவருடைய ஈழ அரசியல் நிலைப்பாடும் அவருடன் நெருங்கியிருந்த பல நண்பர்களதும் அரசியற் செயற்பாட்டாளர்களதும் நிலைப்பாடும் வேறு வேறானது என்பதுவும் அவருடன் சேர்ந்து பழகிய பல நண்பர்களை அவரிடம் இருந்து விலக வைத்ததாகவே  நான் எண்ணுகிறேன்.

இதில் உங்களில் பலருக்கு வேறு கருத்து இருக்கக் கூடும்.

ஒருவர் இறந்து போனவுடன் கடவுளாக்குவதும் மெல்ல மெல்ல மகாத்மாவாக்குவதும் பொதுவக நடைபெறுகின்ற செயல் எனினும்  நமது இலக்கிய  அரசியற் சூழலிலும் இப்போது அது இயல்பாக வந்துவிடுகிற செயற்பாடாகிவிட்டது. ஈழத்தில் யுத்தத்தில் இறந்து போனவுடன் லெப்பினன்ட் அல்லது கப்டன் பதவிகள் வழங்குவது  போலான ஒரு நடைமுறையாக இலக்கியச் சூழலிலிலும் வந்து விட்டது என்பது கொஞ்சம் அருவருப்பானதுதான்.

இங்கே  அப்படியில்லாது சண்குறித்த நமது அனுபவங்களையும் நினைவுகளையும் மீட்டிப் பேசுவதற்கே நாம் கூடியிருக்கிறோம். தோழர் சண்ணோடு எங்கே உடன்பட்டோம் எங்கே முரண்பட்டோம் எங்கே சந்தோசமாக இருந்தோம் எங்கே சண்டை பிடித்தோம். எப்படி வேலை செய்தோம். உண்மையில் சண் அண்ணா என்ற அடையாளம் எது என்று நாங்கள் பேசுவோம்.

ஈழத்தில் தோழர் சண் அவர்களது செயற்பாடுகளையும் அவருடனான அனுபவங்களையும் குறிப்பிட்டுச் சொல்வதற்கும் கனடாவில் அவரது செயற்பாடுகளைப் பற்றிச் சொல்வதற்கும் எல்லோருக்கும் பல நினைவுகள் இருக்கும். அது உடன்பாடானதாக இருந்தாலும் முரண்பாடானதாக இருந்தாலும் அவற்றை நீங்கள் பேச வேண்டும்.

அதற்கு முதல்

இங்கே சண் குறித்து அனுபவங்களைப் பேசுவதற்கு  இருப்பவர்களை அறியத் தருகிறேன். முதலாவது தோழர் சீரட்ணம் அண்ணா. இரண்டாவது பாதர் சேவியர். அடுத்து தோழி  உசா அக்கா. தோழர் பாக்கியநாதன் முருகேசு தோழர் நேசன்.

 

ஒருகாலகட்டத்தில் சமூக அசைவியக்கத்திற்காக தீவிரமாகத் தனது வாழ்நாளைத் தொலைத்த ஒருவர், கனடாவிற்குப் புலம் பெயர்ந்த பின்னாலும் அனைத்து வித இலக்கிய அரசியல் நாடகச் செயல் முறைகளுக்கும் தன்னால் முடிந்தளவு தொண்டாற்றிய ஒருவரை அவருடைய மரணத்தின் பின் நாம் கவனத்தில் கொள்ளாது கருத்திற்கும் எடுக்காது கடந்து  செல்லும் ஒரு தன்மை ஆரோக்கியமானதல்ல எனக் கருதுகிறேன்.

இது குறித்து பல நண்பர்களுடன் நீண்ட காலமாகப் பேசியிருக்கிறேன். ரொரண்டோ தமிழ்ச் சூழலில் அவரது அன்றாடச் செயற்பாடுகளை நான் கவனித்து வந்திருக்கிறேன். அவருக்கு ஈழ அரசியலில் இருந்த அனுபவங்கள் அவர் சேர்ந்தியங்கிய அமைப்புக்கள்  அந்த அமைப்புக்கள் குறித்திருந்த விமர்சனங்கள் அனைத்தையும் எந்த சமரசமும் இன்றி  எந்த மறைப்புக்களும் இன்றி நேர்படப் பேசிவிடக் கூடியவர். எப்பொழுதும்  தமது முன்னேற்றங்களையும் தமது வருமானங்களையும் தமது இருப்புக்களையும் கருத்தில் கொண்டு நடமாடுபவர்களால் ஒருபோதும் அருகில் செல்லமுடியாதவர்களில் அவரும் ஒருவர் என்பது எனது அபிப்பிராயம்.

அவரது  இறந்த உடலை வைத்துக் கூட யாரும்  தமது வியாபாரம் பண்ணமுடியாதபடித்தான் அவரது வாழ்வு இருந்தது.

சண் அண்ணாவை நான் கண்ட நாளிலிருந்து  நீங்கள் உங்கள் வாழ்வைப் பதிவு செய்யுங்கள் என கேட்டு ஒரு மணிநேரம் வீடியோப் பதிவு பண்ணியிருக்கிறேன். எனது ஒழுங்கீனத்தின் காரணமாக அது உடனடியாக கையில் கிடைத்துக் கொள்ளவில்லை. கிடைத்தால் அது ஒரு முக்கிய பதிவாக இருக்கும்.

அவரை எழுதுங்கள் எனக் கேட்டு எனது மற்றது சிற்றிதழில் நான் ஒரு கட்டுரை எழுதவைத்துப் பிரசுரித்திருக்கிறேன். அவர் எழுத்தாற்றல் என்று நாம் சொல்லுகின்ற ஒரு அசைவில் எழுதக் கூடியவரல்ல. அந்தக் கட்டுரையின் பின்னால் அவர் தொடர்ந்து அதிகம் எழுதினார். அவர் எழுதியவைகள் என்னிடம் இருக்கின்றன. உண்மையில் அவருடன் இருந்து அவை திருத்தப்பட்டிருக்க வேண்டும். அவருக்கு பெரிய அளவில் தட்டச்சுச் செய்யத் தெரியாது. அதனால் மிக அதிகமான எழுத்து வசனப் பிழைகளுடன் அவை இருக்கின்றன. ஆனால் அதில் பலவகைப்பட்ட தகவல்கள் அதிகமாக இருக்கின்றன.

தான் வாழ்ந்து கடந்த பாதைகளை தன் நுனிநாவில் வைத்திருக்கும் திறமை கொண்டவர். சாதாரணமாக ஈழத்தின் அத்தனை தெருக்களிலும் நடந்து திரிந்தலைந்த வாழ்வைக் கொண்டதை அவரது ஒவ்வொரு உரையாடலிலும் எல்லோரும் அறிந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு ஊரிலும் வாழ்ந்தவர்களில்  ஒரு பத்துப் பேரையாவது அவரால் பெயர் சொல்ல முடிந்திருக்கும் அனுபவம் பெற்றவர். ஒவ்வொரு ஊரினது அடையாளங்களையும் வாழ்வு முறையையும் அவரால் வியாக்கியானம் பண்ணமுடிந்திருக்கும் அனுபவம் மிக முக்கியமானது.

தனது இளவயதில் மலையக மக்களுடன் சிங்கள மக்களுடன் எல்லாம் வேலை செய்த அனுபவம் அவருக்கு இருக்கிறது. அது குறித்து இங்கு பேச இருப்பவர்கள் பேசுவார்கள்.

கனடாவில் சிங்கள தமிழ் உறவு ஒன்றை நல்லமுறையில் உருவாக்க வேண்டும் என முன்நின்று உழைத்தவர்களில் அவர் ஒருவர். கனடிய இலக்கிய முயற்சிகளிலும் சரி நாடக மற்றும் அரசியற் செயற்பாடுகளிலும் அவரது பங்கு மிக அதிகமாக இருந்த சந்தர்ப்பங்களை இங்கு வந்திருப்பவர்கள் தெரிவிப்பார்கள் என்றே எண்ணுகிறேன்.

 

குறிப்பிட்டவர்களது உரை முடிந்த பின்னால் கலந்துரையாடல் இடம்பெறும் அதில்  உங்களுக்கு இருக்கும் கருத்துக்களை நீங்கள் பேசலாம்.

பேச்சாளர்கள் தமக்குரிய நேரமாக  அதிகமாகப் பத்து நிமிடமே எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். கலந்துரையாடலில் பேசுபவர்கள்  மிகச்சுருக்கமாக தெளிவுறப் பேசுவதன் மூலம் நேர விரையத்தையும் புரிந்து கொள்ளலின் வீரியத்தையும் முன்நிறுத்த முடியும். அவற்றைக் கருத்தில் கொண்டு நிகழ்வின் முதல் உரையைக் கேட்கத் தொடங்குவோம்.

நன்றி.