Sunday 24 July 2022

தற்குறிகளை இடைமறித்தல்.

 “24 யூலை 2022  தமிழகத்தில் என்.கே. ரகுநாதம் “.





கற்சுறா



என்.கே. ரகுநாதம் நூல் அறிமுக நிகழ்வில் உரையாற்றத் தயார் செய்யப்பட்ட கட்டுரை.


அனைத்து நண்பர்களுக்கும்  வணக்கம்.


இந்த இடத்தில் உங்களுடன் உரையாடக் கிடைத்த சந்தர்ப்பத்திற்கு பெரு நன்றியுடையவனாக இருப்பேன்.  ஏனெனில் நான் தமிழக இலக்கிய நண்பர்களை நோக்கி உரையாற்றும் முக்கிய நிகழ்வு எனக் கருதுகிறேன்.. இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும் இதில் உரையாற்றியவர்களுக்கும் மிகுந்த நன்றிகள்.


நான் “என். கே. ரகுநாதன்” அவர்கள் குறித்தோ அல்லது “என்.கே. ரகுநாதம்” என்கின்ற அவரது தொகுப்புக் குறித்தோ அல்லது அந்தத் தொகுப்பின் கருத்தியலினை நாம் ஏன் கொண்டோடவும் - கொண்டாவும்  நினைக்கிறோம் என்பது குறித்தோ  நான் இந்த நிகழ்வில் பேசப்பேவதில்லை என்பதனை முதலிலேயே சொல்லி விடுகிறேன்.


இந்தப் பெரும் நூலை நான் தொகுத்தேன் என்ற காரணத்தினால் மட்டும் இந்த உரையை நான் ஆற்ற வேண்டும் என்று விரும்பியதில்லை. அது என் தெரிவுமல்ல.


மிக நீண்ட தொடர் காலத்தில் ஈழத்தவர்களும் தமிழகத்தவர்களும்  எவ்வாறு இணைந்து வருகிறோம் என்பதும். இந்த இணைவின் பலம் எவ்வாறு கண்டடையப்பட்டு அடையாளப்படுத்த முனைகிறது என்று சிந்திக்கும் போது ஏற்படும் ஒரு நெருடல் ஒரு வெற்றிடம் எப்பொழுதும் இருந்தபடியே இருக்கிறது. இன்றும்  அதனை உணர்ந்து கொள்ள நேரும் பொழுது இதனைச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை எழுகிறது.


இந்த வெற்றிடம் மிக ஆபத்தான விளைவை ஏற்படுத்திவிடக் கூடியது.



கருத்தியலால் இந்த சமூகத்தை அணுகவிரும்புவதும் கருத்தியலால் ஒரு உறவை ஏற்படுத்தவிரும்புவதும் என்ற வரைவே நமக்கிடையில் இருக்கவேண்டும்.


நாம் விம்பங்களால் நமது சமூகங்களை விளங்கிக் கொள்ளவோ அணுகவோ முடியாது. உறவுகளைப் பேணமுடியாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.  அந்தப் புரிதலின் அடிப்படையிலேயே நான் உங்களில் பலரை அணுகியிருக்கிறேன்.


கருத்தியலால் சமூகத்தை அணுகும் போது அங்கே நீண்ட பெரும் உரையாடல் நிகழவேண்டும். அது உடன்பாடாகவோ இருக்கலாம்  அல்லது முரண்பாடாகவோ கூட இருக்கலாம். ஆனால் அது நடைபெற வேண்டும்.   அப்படியொரு நிலை நமக்கிடையில் இன்றும்  நடைபெறவேயில்லை. 


வெறுமனே வழிபாட்டுமுறையில் இங்கிருந்து வந்து அங்கே கதை சொல்பவர்களையும் அங்கிருந்து இங்கே வந்து கதை சொல்பவர்களையும் ஏற்றுக் கொள்ளும் போக்கே இன்றுவரை  தொடர்கிறது.


ஈழச் சமூகம் குறித்தும்  அதன் வாழ்வியலும் அதன் அரசியல் நகர்வுகளும் தமிழகத்தில் உரிய முறையில் பெரும்பாலும் அணுகப்படவில்லை - உள்வாங்கப்படவில்லை. உரையாடலாய்  அது வெளிபப்படவேயில்லை  என்ற உண்மையை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். 


அவை வெறுமனே புகழாரங்களாகவும் இல்லையேல் குற்றவுணர்வில் வெளிப்படும் கேவல்களாகவும். இல்லையேல் உணர்ச்சிவசப்பட்ட துதிபாடல்களாகவுமே விளங்கிக் கொள்ளப்பட்டிருக்கின்றன. இது பொதுவாக வெகுசன மட்டத்தில் நிகழ்ந்து வந்தாலும் சீரிய இலக்கியச் செல்நெறித் தளத்திலும் அதன்போக்கில் மாற்றமின்றியே இருந்திருக்கிறது.


2009இன் பின்னான  யுத்த நிறைவுக் காலகட்டங்களில் மிக அதிகமான உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த தமிழகத்திலிருந்து எழுத்தாளர் பிறேம் அவர்கள் “தனது அடுத்த நாவல் “ஈழம்  குறித்துத்தான் எழுதப்போகிறேன்” என ஒரு அறிவித்தலைச் செய்திருந்தார். அதேபோல் இயக்குனர் ராம் அவர்களும் இதேபோன்றே எனது அடுத்த திரைப்படம் “ஈழம் பற்றிய கதைதான்” என அறிவித்திருந்தார். இரண்டு பேருக்குமே “தயவு செய்து அப்படியான எண்ணத்தைக் கைவிடுங்கள். உங்களால் அதனை முழுமையாக ஒருபொழுதிலும் அதனைச் செய்யமுடியாது. இந்த உணர்ச்சிவசப்படும் நிலையிலிருந்து வெளியே வாருங்கள்( இவ்வாறுதான் எழுதினேன் என ஞாபகம் உள்ள வரிகள் இவை )எனப் பதில் எழுதியிருந்தேன். 


தமிழகத்தில் ஒரு கருத்தியல் நிலையில் கைகோர்த்து இருக்கக் கூடியவர்களின் மனநிலையே இப்படியிருக்கும் பொழுது எத்தனை முத்துக்குமார்கள் தீயில் எரிவார்கள்? எரியூட்டப்படுவார்கள்? என யோசியுங்கள். முத்துக்குமார் எரிந்து போனதை அரசியலாக்கிய இயக்குனர் பாரதிராஜா எனது அடுத்த படத்திற்கு முத்துக்குமார் என்றுதான் பெயர் வைப்பேன் என்றார். அதனோடு சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனோ ஆயிரம் முத்துக்குமார்கள் உருவாகுவார்கள் என்று உரத்துக் கோசமிட்டார்.இதன் நீண்ட தொடர்ச்சிகள்தான் இன்றுவரை இலக்கியச் சூழலிலும் வளர்ந்து போயிருக்கிறது. 


பொதுவாகவே ஈழத்தில் நடைபெற்ற சாதிய எதிர்ப்புப் போராட்டங்கள் என்றாலும் சரி, இறுதியாக நடைபெறறு முடிந்த  ஈழவிடுதலைப் போராட்டங்கள் என்றாலும் சரி உங்கள் அருகில் உள்ளவர்களின் கருத்துக்களையே கேட்டு அவற்றையே  பொதுக் கருத்துக்களாக முன்வைக்கும் விளங்கிக் கொள்ளும் அளவிலேயே தமிழகம் நின்று விட்டிருக்கிறது. அதற்குமப்பால் அதன் உள்ளார்ந்த வீரியத்தை அது ஒருபொழுதிலும் கண்டுகொள்ளவேயில்லை. அதனைக் கண்டு கொள்ளும் பாவனை தூரத்திலும் இல்லை.


 


அதனால் தான் நான் என்.கே. ரகுநாதன் . குறித்து  இங்கு எதையும் பேசப் போவதில்லை என்றும் இந்தவகை வியாதியின் பின்னால் இருக்கும் அசட்டுத்தனத்தின் மொத்தவடிவம் எது எனவும் அண்மைக்காலத்தில் அறிந்து கொண்ட அனுபவத்தின் ஒருசிறிய  கருத்துரைப்பினைக் குறிப்பிட இருப்பதாகச் சொல்கிறேன்.


ஈழச்சாதியமைப்பின் நச்செழுற்சியை உடைத்து நொருக்க  கருத்தியற் பகிர்வுகளும்  சிந்தாந்தத் திட்டமிடல்களுமேயற்ற ஒரு காலத்தில் தன்னெழுச்சியாய் தனது பத்தொன்பாதாவது வயதில் 1951ம் வருடம் எழுத்தைக் கையில் எடுத்தவர் என்.கே. ரகுநாதன் அவர்கள். அந்த எழுச்சியின் தொடர்ச்சியினை நாம் ஒரு கருத்தியலாகவே பார்க்கிறோம். ஆம் 1951ம் ஆண்டு அந்த நிலவிலே பேசிய கதை ஒரு கருத்தியல் அடையாளம். அந்தக் கருத்தியல் தமிழகத்தை வந்தடைய இவ்வளவு காலம் சென்றிருக்கிறது என்பது மிகப் பெரிய வருத்தம்.


இந்தப் பின்னடைவு எதனால் நிகழ்ந்தது? எங்கே தவறு இருந்தது? சாதிய நச்சுக் கொடிக்கான ஒருங்கிணைந்த எழுச்சியைப் பரவலான அறிதலுடன் கண்டடைய முடியாது  போனது ஏன் என நாம் வினாவ வேண்டும். 


விம்பங்களை முன்நகர்த்திய செயலுக்குக் காரணமானவர்களைக் கண்டறிய வேண்டும். அவர்களைத்தான்  நாம்  முதலில் நாம் தகர்த்தெறிய வேண்டும். கருத்தியலால் மட்டும் நாம் இணையவேண்டும். ஆனால் அது ஒரு பொழுதிலும்  நடைபெறவேயில்லை. இன்றைய சூழலை உற்று நோக்கும் போது அது ஒருபொழுதும் நடைபெறப்போவதேயில்லை என்ற எண்ணம் உருவாகிவிடுகிறது.


வெற்று முகங்களுக்குப் பின்னால் அவர்கள் சொல்லும் போலிப் பிரசங்கங்களிற்குப் பின்னால் இயங்குபவர்களாக நீங்கள் தொடர்ந்தும் இருந்தால் உங்களை விடவும் உங்கள் எதிராளிகள் எப்போதும்  “அற்புதமானவர்கள்” என்றே எண்ணத் தோன்றுவார்கள். அதனை நாம் எங்கே நிறுத்துவது? எவ்வாறு கண்டடைவது என இனியாவது யோசிக்க வேண்டும்.


இன்றுள்ள தமிழகத்துச் சூழலில் சமூக நீதியின் பக்கம் நின்று செயற்படுவதாக யார் விம்பம் காட்டினாலும் அவர்கள் தமக்கு வசதியான தமக்குத் தீங்கற்ற யாரோ ஒருவருடைய விம்பத்தையும் அவரது குரலையும் எந்தக் கேள்விகளும் இல்லாது அதன் பின்னாலுள்ள எந்தக் கதைகளையும் அறிய விருப்பமில்லாது கொண்டாடவும்  அதனையே  முன்னுதாரணமானது என்று வெளிக்காட்டவும் முனைகின்றார்கள். இது காலாகாலம் நடக்கின்ற செயற்பாடுகள் எனினும்  இது மிக அயோக்கியத்தனமானது. மிக நீண்ட பக்க விளைவுகளை உருவாக்கிவிடக்கூடியது. இது உண்மையானதல்ல.


நீங்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும்.



உங்களுக்கு இங்கிருந்து அங்கு வந்து கதை சொல்பவர்களையும் உங்களிடமிருந்து இங்கு  வந்து மீண்டும் உங்களுக்கு  கதை கொண்டு வந்து சொல்பவர்களையும்  நம்பி நீங்கள் ஏமாந்து போகிறீர்கள். அவர்கள் இரண்டுபேருமே ஒருவரில் ஒருவர் தங்கியிருப்பவர்கள். முதலில் இவர்களை நம்பாதீர்கள். இவர்களை விடவும் உண்மையில் வேறு கதை இருக்கும் என்ற சாதாரண அறிவையாவது நீங்கள் அறிந்து கொண்டிருக்க வேண்டும்.. 


இவர்களிலிருந்து அந்தக் கதைகள் முற்றிலும் வேறுபாடாகவே இருக்கிறது. தன்னை மட்டும் முன்னிலைப்படுத்திச் சொல்லும்  ஒரு தற்குறியால் ஈழத்தின் பரவலான கதைகளையும் அதன் மீதான எதிர்க்கதைகளையும்  சொல்லிவிட முடியாது. அந்தத் தற்குறி தனது விம்பத்தை மட்டுமே கணக்கில் வைத்துக் கதை சொல்லும்போது அதனை  ஏன் நீங்கள் நம்பித் தொலைக்க வேண்டும். அதுதான் உண்மை என்று நீங்கள் ஏன் காவியலைய வேண்டும்? 


"உன்னுடைய  அறிவு பெரிது நீ அதனால் நீ யோசி" என்று தமிழகத்திலிருந்துதானே உங்களுக்கு ஒருவர் சொல்லி வைத்தார். அவர் ஒரு மகாமொக்கன் என்பதா உங்கள் கணிப்பு?


பகுத்தறிவு குறித்த கருத்தியலினை முன்னகர்த்தும் அறிவாளிகளாக இருப்பதாகச் சொல்லும் நீங்கள் எதையும் பகுத்தறியாது கடந்து விடுகிறீர்கள்.


சாதாரண ஒரு பூம் பூம் மாட்டுக்காரன்சொல்வதை நம்பிவிடும் ஏமாளியாக நீங்கள் இருக்கிறீர்கள் என்றாவது புரிந்து கொள்ளுங்கள். 


ஆனால் என்னமோ  நீங்கள் அனைவருமே தஞ்சாவூர்ப் பொம்மையினை எனக்குள் எப்பொழுதும் ஞாபகம் ஊட்டிக் கொண்டிருக்கிறீர்கள். நடைபெறுகின்ற கூட்டங்களில் நீங்கள் ஆட்டிக் கொண்டிருக்கும் உங்கள் தலைகளைக் கவனிக்கும் போது எனக்கு அப்படியொரு எண்ணம் தோன்றுவது ஒன்றும் வியப்பல்ல.ஒரு பொம்மையாக அரசியற்கருத்தகளை உள்வாங்குவதில் உங்களுக்குள் பெருமகிழ்ச்சி ஏற்படுகிறது.  அவ்வளவு இலகுவாகத் தலையாட்டியபடி இருக்கிறீர்கள். நீங்கள் இவர்களுக்குத் தலையாட்டுவதுபோல் எம்மால்  ஒருபொழுதும் ஆட்ட முடியாது என்பதனை நீங்கள் அவதானித்தேயாகவேண்டும். எமக்கு அந்தத் தேவை ஒருபொழுதிலும் இல்லை. மறுவளமாக அதனை நீங்கள் கேட்டு எங்களுக்குத் திருப்பிச் சொல்லும் போது,  உங்களுக்கும்  நாம் தலையை ஆட்டுவோம் என நீங்கள் ஒருபொழுதிலும் எதிர்பார்க்கக் கூடாது. 


இங்கே  சில கதைகளை உங்களுக்கு ஞாபகம் ஊட்டுகிறேன்


ஒரு முறை  உங்களிடமிருந்து இங்கு வந்தவர் ஒருவர் அவர் பெயர் எஸ். இராமகிருஸ்ணன்.  அவரைக் குறுந்திரைப்படம் குறித்த உரையாடல் நிகழ்வில் பேச அழைத்திருந்தார்கள். அவர் அதற்குச் சில நாட்களுக்கு முன் ஏதோ ஒரு தமிழகத்துத் திரைப்படம் ஒன்றிற்கு கதைவசனம் எழுதியிருந்தார் எனச் சொன்னார்கள். அதனாலேயே அந்தத் தகுதி அவருக்குக் கிடைத்தது. இங்கு கனடாவிலுள்ள திரைப்படம் எடுக்கும் இளையோருக்கு ஒரு கதை சொன்னார்.


"கனடாவிலுள்ள நீங்கள் சுந்தரராமசாமியின்  புளியமாரத்தின் கதையை வாசியுங்கள். சுஜாதாவை வாசியுங்கள். அவற்றை  வாசிக்காது நீங்கள் ஒரு நல்ல குறும்படமமோ திரைப்படமோ  எடுக்க முடியாது"

என்றார்.



அவரை இங்கு வரவழைத்த கூட்டம் கைதட்டியது. சிலாகித்தது.  இங்குள்ள இளையோர்களது அனுபவத் திறன் குறித்தோ அல்லது அறிவின் தேடல் குறித்தோ அவர்களுக்கான தேவைகள்- அவர்களுக்குச் சமூகம் பற்றி இருக்கும் கரிசனையின் வடிவம் குறித்தே எவ்வித புரிதலுமற்ற நிலையிலேயே உதிர்க்கப்பட்ட வார்த்தைகள் அவை. ஆனால் அங்கிருந்து வந்த அவர் ஏதோ அற்புதமான கருத்தைச் சொல்லிவிட்டார் என்று இங்குள்ள கூட்டம் கைதட்டியது சிலாகித்தது. இரண்டும் ஒன்றில் ஒன்று தங்கியிருப்பவையே. இரண்டும் தற்குறிகளே...


இந்தக் கைதட்டிய கூட்டம் ஒருநாள் அங்கே வந்திருந்து தனக்குரியவகையில் இங்குள்ள இன்னொரு கதையைச் சொல்லும். நீங்கள் வாயைப் பிளந்து கேட்பீர்கள். அதுதான் உண்மை என நம்புவீர்கள். நீங்கள் நம்பத்தான் வேண்டும்.


ஏனெனில்  உங்களுக்கு ஒன்றும் புரியாது. உங்கள் அறிவால் நீங்கள் ஒருபொழுதும்  யோசிக்கப் போவதில்லை.  உங்களுக்கு இன்னொரு கதை தெரியாத பட்சத்தில் தெரிந்து கொள்ள விரும்பாத பட்சத்தில் பகுத்தறிந்து உணராத பட்சத்தில் நீங்கள் நம்பத்தானே வேண்டும். இல்லையேல் நம்பியமாதிரி நடிக்கத்தான் வேண்டும். அது உங்களுக்கு மிக வசதியானது. 


ஆனால் இவை ஒரு பொழுதும் உண்மையாக இருக்கப் போவதில்லை என்பதையாவது உணர்ந்து கொள்ளுங்கள்.


அப்படித்தான் அண்மையில்  இங்கிருந்து ஒருவர் அங்கே வந்து

“அண்ணாமலை மட்டுமல்ல அமித்ஷா வந்தாலும் ஈழத்தில் பி.ஜே.பி. காலூன்ற முடியாது” என விட்ட  வேடிக்கையை நீங்கள் நம்புகிறீர்கள். அது ஒரு  வேடிக்கை எனத் தெரிந்தாலும் அதனை மறுதலித்துச் சொல்ல உங்களிடம் ஒருவித தேடலோ அறிவோ இல்லை. அவரே ஈழத்தின் கருத்துச் சொல்லியாகவும் கதை சொல்லியாகவும் நீங்கள் நம்பி வைத்திருக்கீறீர்கள். அதனை மீறி உங்களால் ஒரு அறிவையும் மேலதிகமாகப் பெறமுடியாதிருக்கிறது. இது உங்கள் தவறே அன்றி அவருடையதல்ல. 


ஈழத்தில் இன்றுள்ள சூழலை விளங்கிக் கொள்ள ஒரு ஆறுமுகம் அங்கே வந்து திரும்பி ஈழத்தில் நாவலரான கதையும் அந்த நாவலரினால் அடைந்த சமூக மாற்றங்களையும் இன்று வரை துடைத்தெறிய முடியாதிருக்கிறது என்ற கதை போதுமானது. வெறுமனே தமிழ்நாட்டு சகபாடிகளுக்கு புல்லரிக்க வைக்க இந்தத் தற்குறிகளால் உதிர்க்கப்படும் வார்த்தைகளே இவை. இவை தாண்டிஅந்த வார்த்தைகள் எவ்வித சமூநோக்கம் கொண்டவையுமல்ல ..


இன்னொரு இடத்தில் அவரே  "ஈழத்தில் மட்டுமல்ல புலம்பெயர் தேசத்திலும் தமிழுக்கு 3ம் இடம் தான்" என அழுது  எழுதியதும் அந்தத் தமிழிற்குள் ஒரு தலித்திற்கு எத்தனையாம் இடம் என நீங்கள் ஒருபொழுதும்  கேட்பதில்லை. அதுதான் ஈழத்தின் கதை என நீங்களும் அடையாளம் கொள்கீறீர்கள். ஈழம் குறித்து உங்களுக்கு எதையும் தேடி அறியும் அறிவில்லை. நீங்கள் மூளைச்சலவை செய்யப்பட்ட தற்கொலைப் போராளிகளைப் போல் அவரைப் போன்றவர்கள்  முன்னால்  நடிக்கிறீர்கள்.அது உங்களுக்கு ஒருபக்கம் வசதியாகவும் இன்னொருபக்கம் அவருக்கு இன்னும் வசதியாகவும் இருக்கிறது.


ஒருத்தன் பொய் சொல்கிறான் எனத் தெரிந்தும் அந்தப் பொய்யை மெய்யாக்க முனைபவர்கள் அதிமேதகு பொய்யர்கள்.


“எனது எழுத்துக்களுக்காக எனது சொந்த சமூகத்தால் தொடர்ந்து நான் நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்றும் உடல் ரீதியான தாக்குதல் முயற்சிகளை எதிர் கொண்டேன். வெவ்வேறு அழுத்தங்கள் உண்டு. புத்தகங்களை வாங்கக் கூடாது என்று சொல்லுவார்கள். புத்தகங்களை வாங்கி றோட்டிலே கொழுத்திப் போடுவார்கள். இவ்வளவு எழுத்துகளுக்குள்ளாலும் நான் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தேன். ஒரு சின்னக் கட்டுரை எழுதினாலும் போன் பண்ணிச் சொல்லுவார்கள் சோபா கொஞ்சம் கவனமாக இருங்கள். லாச்சப்பல் பக்கம் வராதீங்க. எனது நண்பர் சபாலிங்கம் 1994 மே மாதம் அவரது வீட்டில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த அச்சுறுத்தல்களுக்குள்ளேதான் நான் இயங்கிக் கொண்டிருந்தேன். எனறு சொன்னவர் நான் எனது எழுத்துப் பயணத்தில் கிட்டத்தட்ட 25 வருடங்கள் வந்து விட்டேன். எனக்கு விழா எடுத்துவிடாதீர்கள். ” 

என்கிறார்.


(பார்க்க: https://www.youtube.com/watch?v=tekIw-MqO-g)


இவ்வாறு உங்கள் மேடையில் ஒருவர் உரையாற்றும் பொழுது நீங்கள் ஆகக் குறைந்தது சபாலிங்கத்தைப் படுகொலை செய்து 28 வருடங்கள் ஆகிவிட்டது. என்றாவது இடைமறித்துச் சொல்லக் கூடாதா? 


ஒரு அரசியற் சம்பவங்களைத் தன்னிலிருந்தே தொடங்க நினைக்கும் தற்குறிகளின் காலமாக நினைத்து நீங்கள் கடந்துபோவது எப்படி? ஈழத்தில் எழுத்துக்காகவும் கருத்திற்காகவும் மரணித்தவர்கள் பலர் உண்டு. அச்சுறுத்தப்பட்டவர்கள் பலர் உண்டு. தன்னுடைய முகத்தையே வெளிக்காட்ட விருப்பமற்று, ஆனால் தினமும் எழுதிக் கொண்டிருக்கும் எத்தனையோ எழுத்தாழுமைகள் உண்டு. ஆனால் இவ்வளவு கேவலமாக அவற்றையெல்லாம்  தன்னுடைய அடையாளமாக அடையாளமிட்டு உங்களுக்குக் கதை சொல்லும் போது நீங்களும் மெய் மறந்து கடந்து சென்று விடலாமா? இது அயோக்கியத்தனம் இல்லையா?


உங்கள் சமூகம் உங்களை எங்கே நிராகரித்தது? போகும் இடமெல்லாம் உங்களுக்கு விருதுகளை வழங்கும் இந்தத் தமிழ்ச் சமூகமா உங்களை நிராகரிக்கிறது? உங்கள் புத்தகத்தைக் கொழுத்துகிறது? உங்களை எழுத விடாமல் தடைசெய்கிறது? உங்களைத் தொந்தரவு செய்கிறது? எனக் கேட்கமாட்டீர்களா?




பெரியதொரு பூசணிக்காயை புலுடாவாய் சொன்னபொழுதில் கணக்குப் பார்த்து அறிவை யோசிக்க உங்களால் முடியாது போனது என்பது நீங்கள் கருத்தியலால் எதையும் அணுகவில்லை என்பதையே. வெறும் விம்பங்களால் அணுகி அத்தனை போலிப் பிரச்சாரங்களுக்கும் மண்டையை மண்டையை ஆட்டுவதால் ஏதும் ஆகிவிடப் பேவதில்லை.


கருத்தியல் தளத்தில்  மிகு சிரத்தையோடு சமூக நீதியின் பக்கம் நின்று பேசுவதாகச் சொல்பவர்கள் உரையாடல்களை நிகழ்த்துவதாகச் சொல்பவர்கள் உண்மையில் அவ்வாறு செயலாற்றுவதில்லை.  


ஆனால் தமிழகத்துப் பதிப்பகத்தார்- தமிழகத்து எழுத்தாளர்கள் -தமிழகத்துக் கருத்தியலாளர்கள் என்று அடையாளமிடப்படுபவர்களால் தொடர்ந்தும் இந்தத் தரித்திர நிலை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த அவலத்திற்கு அல்லது கேவலத்திற்கு நாம் ஒரு முற்றுப் புள்ளியை வைத்தேயாகவேண்டும். இல்லையேல் நாம் கருத்தியலால் இணையவே முடியாது. புலம்பெயர் சூழலில் இருந்து உங்களை நோக்கி வருபவர்கள் என்ன பொய்யை வேண்டுமானாலும் உங்களுக்குச் சொல்லிவிட்டுப் போகலாம் என நினைத்துவிட்டார்கள். அதனை நீங்கள் மாற்றி அமையுங்கள்.


தஞ்சாவூர்ப் பொம்மைகளாக நீங்கள் கேட்டுக் கொண்டும் அந்தப் பொய்களுக்குச் சாமரம் வீசிக் கொண்டிருப்பீர்களானால் அவர்களின் பொய்களிற்கு அளவே இருக்கப் போவதில்லை. நீங்களும் தஞ்சாவூர் பொம்மை வேசம் போடாது மெதுவாய் நகர்ந்து சீமானின் தம்பிகளாகப் போய் அமர்ந்து விடுங்கள். அதுவே உங்களுக்குச் சிறப்பு.