Tuesday 25 November 2014

இயல் விருது வாங்க கனடா வந்திருந்த எஸ்.பொ விடம் ஒரு இடைமறிப்பு.


இந்த இரண்டு கேள்விகளுக்கும் பிற்பாடு. நீண்டநேரம் உரையாடினோம். அதில் நம்மைச் சுற்றியுள்ள இலக்கிய தகடுதித்தங்கள். அனுபவங்கள். தமிழக இலக்கியச்சூழல் கண்ணதாசனைச் சந்தித்த போது பேசிய குறும்புகள் என்று சந்தோசமாய் மனநிறைவாய் அமைந்த பொழுதுகள் அவை.




கற்சுறா:  2011 ஜனவரிமாதம்  நடந்த கொழும்பு சர்வதேச எழுத்தாளர் மாநாட்டினை எதிர்த்து முதற் கொள்ளி வைத்தவர் நீங்கள். கலை இலக்கிய ரீதியாக இலங்கைத் தமிழினத்தை அடிமைப் படுத்தும் ராஜபக்சேவின் திட்டம் தான் உலக எழுத்தாளர் மாநாடு என்றும் சிங்கள மொழி மேலாண்மையை தமிழர்களை ஒட்டுமொத்தமாக ஏற்றுக் கொள்ளச் செய்வதுதான் மாநாட்டின் ஒட்டுமொத்த நோக்கம் என்றும் சொல்லி அறிக்கை விட்டு மாநாட்டைப் புறக்கணித்தவர் நீங்கள். தற்போது மாநாடு முடிந்து இவ்வளவுகாலத்தின் பின் மாநாடு நடத்திவிட்டு தற்போது ஐந்து லட்சம் நட்டம் என்கிறார்கள். இவ்வளவு நட்டப்பட்டு ஏன் மாநாடு நடாத்துவான் என்று கிண்டலடிக்கிறீர்கள்.  மாநாடு நடத்தியவர்கள் அரசிடம் பணம் பெற்றார்கள் பதவி பெற்றார்கள் என்றும் அரசுதான் பின் நின்று நடாத்துகிறது என்றும் ஆரம்பத்தில் சொன்ன நீங்கள் தற்போது அதை மறந்து அவர்கள் பட்ட நட்டம் குறித்து பேசுகிறீர்கள். அண்மையில் அஸ்ரப் சிகாப்தீன் அவர்கள் மாநாட்டின் செயற்பாடுகள் குறித்து கொடுத்த பேட்டி பற்றி மிக மோசமாகக் கிண்டலடிக்கிறீர்கள். முஸ்லீம்களும் தமிழ்தானே பேசுகிறார்கள் பின் என்ன முஸ்லீம் மாநாடு என்று சொல்கிறார்கள் என குசும்பு பேசுகிறீர்கள்? தற்காலத்தில் உங்களைப் பிடித்து ஆட்டும் தமிழ்த் தேசிய வெறியும் புலித்தேசிய விருப்பும் தானே மாநாட்டை கண்மூடித்தனமாக எதிர்க்கவைத்தது?

எஸ்.பொ:  இதற்கு மிக இலகுவாகப் பதில் சொல்ல முடியும். ஆனால் அது நீண்ட பதிலாக அமையும். முருகபூபதி சர்வதேச எழுத்தாளர் மாநாட்டை செய்வதற்கு ஆரம்பித்த பொழுது அதற்கு ஆதரவாக முன்னோடியாக முன்னுக்கு நின்றவர்கள் இரண்டுபேர். ஒன்று லண்டனில் இருந்து ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் மற்றது அவுஸ்ரேலியாவிலிருந்து டாக்டர் நோயல் நடேசன். இந்த இருவரும் முள்ளிவாய்க்கால் போரின் பொழுது அரச சார்பாக கொழும்பில் செயற்பட்டவர்கள் என்பதற்கு முழு ஆதாரங்களும் என்னிடம் உண்டு. அதற்கு மேல் பிற் கட்டத்திலே ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ராஜபக்சே அரசாங்கத்தினுடைய நம்பிக்கைக்குரிய உளவாளி என்பதை “த கார்டியன்” பத்திரிகை நிரூபித்திருக்கிறது. முருகபூபதி இலங்கையில் வாழ்ந்த காலத்திலேயே தமிழ்த் தேசியத்தை நிராகரித்த ஒரு அரசியல் நிலைப்பாட்டுடன் வாழ்ந்தவர். அத்துடன் அவர் எக்காரணம் கொண்டும் தமிழீழப் பகுதிகளின் பிரதிநிதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள, பிறப்பாலும் உரிமையற்றவராவார். அடுத்து நான் இந்த மநாட்டினை எதிர்த்ததற்கு ஒரேயொரு காரணம் இந்த இரத்த வெடில் இன்னமும் மாறவில்லை. இந்த இரத்த வெடில் மாறாத நிலையில் இந்த மாநாட்டை அவசர அவசரமாகக் கூட்ட வேண்டாம் என்றுதான் என்னுடைய வேண்டுகோள் இருந்தது. நாம் ஊகித்தது நிச்சயமாக இராஜபக்ச அதற்கு உதவி செய்வார் என்று. ஏனென்றால் அவர்களுக்குச் சாதகமாக இந்த மாநாடு இருந்தது. மாநாட்டுக்குப் போய் வந்தவர்களிடமிருந்து அறிந்து கொண்டேன் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுடைய ஆசீர்வாதக் கைகள் பின்னால் இருந்துகொண்டே இருந்ததை. ராஜபக்ஸவினுடைய பணபலத்துடன் நடைபெறுகின்றது என்ற குற்றச்சாட்டிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்காகச் சிலசமயங்களில் அந்த உதவியைப் புறக்கணித்துவிட்டு தங்களுடைய நேர்மையை நிலைநாட்டியிருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு.
அடுத்து இந்த முஸ்லிம்களது விடையம். நான் நம்புறன் இலங்கையில் முஸ்லீம்களுடைய எழுத்து வல்லபங்களை முன்னெடுப்பதிலே என்னைப் போன்ற வேறு எந்தத் தமிழனும் உயிர்ப்புடன் பங்களிப்புச் செய்ததில்லை. இதற்கு பாணந்துறை முகைன் சமீமைக் கேட்கலாம் அல்லது ஓட்டமாவடி எஸ். எல். எம். ஹனீபாவைக் கேட்கலாம். குச்சவெளி தொடக்கம் பாணும வரையிலே பரந்து வாழ்ந்துகொண்டிருக்கும் முஸ்லீம்கள் மத்தியில் வாழுகின்ற இலக்கியச் சுவைஞர்களைக் கேட்கலாம் எல்லோரும் இதனைச் சொல்வார்கள். “இஸ்லாமும் தமிழும்” என்று- நான் நினைக்கிறன் 1970களிலே எழுதியவன் நான். அதுதான் முதல் முதலாக இலங்கையிலேயே- ஈழநாட்டிலே முஸ்லீம்களுடைய தமிழ் நேசிப்பும் பங்களிப்பும் காத்திரமானதென்று. இந்த முறை கனடாவுக்கு வந்தபொழுது கூட அதில் இரண்டுபிரதிகள் கொண்டு வந்து விற்கப்பட்டுள்ளது. எனவே நான் முஸ்லீம் விரோதியாக இலட்சியத்தில் என்னை அடையாளப்படுத்திக் கொண்டவன் கிடையாது. நான் பெருமைப்பட்டு என்னால் வளர்க்கப்பட்ட இலக்கியகாரர்கள் முஸ்லீம்கள் மத்தியிலே இருக்கிறார்கள். ஆனால் இந்த ஒன்று கூடலுக்குக் குரல் கொடுத்து அந்தப் பணியிலே முன்னணியில் நின்ற எந்த முஸ்லீம் எழுத்தாளர்களாவது ராஜபக்சேவினுடைய புதிய தந்திரங்களை எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை.

என்னவென்றால் இலங்கையில் இரண்டு மொழி. சிங்களம் அல்லது தமிழ். ஒரு முஸ்லீம் சிங்களத்திலே எழுதினால் அவன் சிங்கள எழுத்தாளன். ஒரு முஸ்லீம் தமிழிலே எழுதினால் அவன் தமிழ் எழுத்தாளன். ஆனால் ராஜபக்சே இதே முருகபூபதி எல்லோரையும் வைத்துக் கொண்டு சிங்கள தமிழ் முஸ்லீம் என்ற மூன்று பிரிவை உண்டாக்கி வைத்துக் கொண்டு மாநாட்டை நடாத்தியிருக்கிறார்கள். இந்த மூன்று பிரிவை தலை நிமிர்ந்து ஏற்று ஆமாம் சாமி போட்ட இந்த முஸ்லீம்கள் மேற்கொண்டும் தமிழர்களுடைய இலக்கிய நலன்களையும் இலக்கிய வீறுகளையும் முன்னெடுத்துச் செல்லக்கூடிய தார்மீக உரிமையை இழந்துவிட்டார்கள்.

மற்றது இந்த ஒன்று கூடலை இனிய உறவுகளின் ஒன்று கூடல் என்று ஒரு சொல்லாடலை முருகபூபதி அவர்கள் திரும்பத் திரும்பக் கையாண்டார். இனிநான் சொல்லப் போவதை நீங்கள் வெட்டலாம். வெட்டாமல் விடலாம். ஆனால் உண்மைகளை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். முருகபூபதி என்னுடன் குழாயடிச்சண்டையில் ஈடுபட்டிருந்தபொழுது நான் ஏதோ யாருமேயில்லாது – சிட்னியிலே எனக்குத் தலமை தாங்க யாரும் இல்லாது செல்வாக்கிழந்திருந்த எஸ்.பொவினுடைய நூலை தான் வந்து அபயகரம் நீட்டி வெளியிட்டு வைத்ததாக எழுதியிருக்கிறார். நீ எவ்வளவு ஒரு அயோக்கியன். ஏனென்றால் அந்தக் கட்டத்திலேதான் நீ உன்னுடைய குடும்பத்தில் நடைபெற்ற சிக்கல்கள் மூலம் முடங்கி மூலையிலே இருந்தபொழுது என்னுடை மகன் என்னிடம் வந்து அப்பா முருகபூபதி அண்ணைக்கு நடந்தது very unfortunate. அவர் முடங்கிப்போய் மூலையிலே கிடக்கிறார்.அவரை எப்படியாவது வெளிச்சத்திற்குக் கொண்டுவரவேண்டும். அந்த வெளிச்சத்திற்குக் கொண்டுவருவது உங்கள் நூல் வெளியீட்டுடன் இருக்கட்டும். நீங்கள் ஏன் அவரைச் செய்யச் சொல்லிக் கேட்கக்கூடாது என்று சொன்னான். அதற்காக சிட்னியிலே என்னுடைய புத்தக வெளியீட்டு விழாவுக்கு ஏதாவது ஒரு தலைவர் கிடைக்கவில்லை என்று சொல்லி உன்னை இரவல் விடுத்தேன் என்று நீ எழுதலாமா? இப்படிமகா அயோக்கித்தனமான பொய்யையும் பித்தலாட்டத்தையும் நேர்மையான எந்தவொரு எழுத்தாளனும் செய்யமாட்டான். இரண்டாவதாக தமிழை நேசிக்கிறேன் தமிழுடைய விழுமியங்களைப் பாதுகாத்துக் கொள்கிறேன் என்று சொல்லும் நீ இன்று அதிலே கூடத் தோல்வியடைந்து நீ உன்னுடைய வாழ்க்கையில் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு இப்பவந்து, புலிகள் இல்லாத ஒரு கட்டத்திலே சர்வதேச தலமைத்துவத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரேயொரு ஆசைக்காகத்தான் இந்த மாநாட்டிலே நீ முன்னின்று உழைத்ததாக நான் நினைக்கின்றேன்.

இன்னொன்று இந்த மகாநாடு நடந்ததிற்குப் பிற்பாடு அதில் பங்கு பற்றிவிட்டு இந்தியாவுக்கு வந்தவர்களில் ஓங்கி அந்த மாநாடு வெற்றியளித்துவிட்டது என்று சொன்னவர் என்னுடைய நண்பர் தோப்பில் முகம்மது மீரான் அவர்கள். இன்றுகூட இந்தியாவிலே பேசப்படுகிறது அங்கு அற்புதமான முஸ்லீம்களுடைய எழுத்தாளர் மாநாடு அங்கு நடந்தது என்று. அதற்கு மேல் அங்கு இந்திய சமூக எழுத்தாளர்கள் சார்பாக வந்தவர்களில் கொஞ்சம் பிரபலமாக இருந்தது சின்னப்பாபாரதி. அவர் வந்து விட்ட அறிக்கையைப் பாருங்கள். எந்த விதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என்று சொன்னார்.
அடுத்ததாக என்னவென்றால் நான் புலி ஆதரவாளன் என்றவகையில் நிச்சயமாக நான் அதனை எதிர்க்கவில்லை. நான் எதிர்த்தது இலக்கியவாதி என்ற அதே கோதாவிலேதான். ஏனென்றால் இலக்கியவாதிகளுடைய அக்கறைகள் அரசியல் சார்ந்த அக்கறைகளாக மாறிவிடக்கூடாது. அரசியல் பேசுவது வேறு அரசியல் சார்புகொண்டிருப்பது வேறு. ஆனால் இலக்கியம் செய்யும் எழுத்தையும் அரசியல் ஆக்கிக் கொள்ளக்கூடாது. ஆனால் முருகபூபதி போன்றவர்கள் அதை அரசியலாக்கியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனை எதிர்த்தேன். முதற்தடவை கூடவேண்டாம் என்று சொன்ன பிறகு எந்தக் கட்டத்திலும் அதனை எதிர்த்து எந்தவித அறிக்கைகளும் நான் விடவில்லை. ஒதுங்கியிருந்தேன். மற்றவர்களுக்குத் தில் இல்லை. உண்மையாக கல் எறியமுடியாதவர்களாக திராணியற்றவர்களாக இருக்கிறார்கள் என்று முதல் கல் எறிந்தவன் நான். அதன் பிறகு இதை நடாத்து – நடத்தவேண்டாம் என்று பிரசாரம் செய்ததே கிடையாது. அதற்குப் பிறகு அந்தக் கூட்டத்திலே ஒவ்வொரு பேச்சாளனாக எழுந்து என்னை ஏசியிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றை விளங்கவேண்டும் நான் ஏச்சிலே பிறந்து ஏச்சிலே வளர்ந்து ஏச்சிலேயே வாழ்ந்து கொண்ருப்பவன். உங்களுடைய ஏச்சு என்னை ஒன்றும் செய்யமுடியாது. இங்கே மொன்றியலில் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறீஸ்கந்தராசா என்னுடைய நல்ல நண்பன். இந்த முறை என்னை வந்து சந்திக்கவில்லை என்பது எனக்கு மகாதுக்கம். இல்லை எனில் இந்த சனிக்கிழமை மொன்றியலுக்குச் சென்றிருப்பேன். அவர் வந்து சொன்னார் ‘ every speaker literally crucified you’  என்று. எவ்வளவு மகிழ்ச்சி. என்னத்துக்கு என்னைச் சிலுவையில் அறைய வேண்டும்? ஏன் நான் கடந்த 65ஆண்டுகளுக்கு மேலாக எழுதிக்கொண்டிருப்பது குற்றமா? இந்த 65 ஆண்டுகளில் இன்றும் ஈழத் தமிழர்களுடைய இலக்கியம் Archive இல்அழிக்கப்பட்டவிடும், அதைப் பாதுகாத்து நாளைய சந்ததிக்குக் கொடுக்கவேண்டும் என்று சொல்லி கடந்த நான்கு வருடங்களாக ஆறாயிரம் பக்கங்களை எடிற் செய்து கொண்டிருப்பது ஈழத் தமிழர்களுக்கு நான் செய்யும் துரோகமா?

அல்லது, இலத்தீன் அமெரிக்க இலக்கியம் தான் மூன்றவது உலக இலக்கியம் என்று இன்றும் நீங்கள் மயங்கிக்கொண்டிருக்கிறீர்கள். ஸ்பானிஸ் மொழியில் எழுதப்படும் இலக்கியம்தான் மூன்றாம் உலக இலக்கியம் என்று சொல்கிறீர்கள். ஆனால் ஆபிரிக்கக் கண்டத்தையும் தமிழ்நாட்டையும் இந்து சமுத்திரம் பிணைத்து வைத்திருக்கிறது. இந்திய நாட்டினுடைய தாக்கங்களும் கலாசாரங்களும் அங்கு இருக்கிறது. என்றைக்காவது இந்த ஆபிரிக்க நாட்டினுடைய இலக்கியங்களை தமிழ்படுத்த யோசித்திருக்கிறிர்களா? சிலசமயம் என்.கே. மகாலிங்கம் அவர்கள் இங்கிருந்து Things Fall a part ஐ “சிதைவுகள்” என்று மொழி பெயர்த்திருக்கிறார் .Things Fall a part என்றால் சிதைவுகள் அல்ல.

இவ்வளவும் நான் செய்ததற்கு நீங்கள் என்னைச் சிலுவையில் அறையத்தான் வேண்டும். ஆனால் தம்பிமாரே உங்களுக்கு ஒன்று சொல்கிறேன், சிலுவையில் அறைந்தால்தான் மீள உயிர்ததெழும் அற்புதம் நிகழும். இன்று அந்த அற்புதத்தைக் கனடாவில் நீங்களே பார்த்துக் கொண்டு அதன் சாட்சியமாக இருக்கிறீர்கள். எனக்கு மகிழ்சியாக இருக்கிறது.

கற்சுறா: நீங்கள் தமிழ் ஆக்க இலக்கியத்தில் யாரும் எட்டாத பெரும் பாய்சலை நிகழ்த்தியவர். ஒரு கலகக் காரனாக அதிர்வூட்டும் படைப்புக்களை எழுதிக்காட்டி தமிழிலக்கிய ஊழியத்தில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியவர். படைப்பிலக்கியத்தில் தமிழை உண்டு இல்லை என்றளவுக்கு பயன்படுத்திக் காட்டியவர். தமிழ் இலக்கியத்தில் சிறுகதை கவிதை நாவல் என்று பரந்து பட்டு விளாசித் தள்ளியவர். ஈழத்தில் எஸ்.பொ ? என்ற நாவல் போல் இன்றுவரை ஒன்று வந்ததில்லை. நீங்களே சொல்கிறீர்கள் உங்களுடைய எழுத்தில் உங்களுக்குப் பிடித்ததும் அதுதான் என்று. அவ்வளவு விறைப்பான வித்தைகள் அடங்கிய எழுத்து அது. தீ சடங்கு வீ நனவிடை தோய்தல் என்று உங்கள் நூல்கள் கொடுத்த தாக்கத்தில் இருந்து இன்னும் நாங்கள்; விடுபடவில்லை. இப்படியிருக்க இன்றுவரை இந்தக் கனடா இலக்கியத் தோட்டம் உங்களைக் கண்டு கொள்ளவில்லை. கண்டு கொள்ளவில்லை என்பதை விட புறக்கணித்தது. அது உங்களைப் புறக்கணித்தது என்பதை அவர்களால் இதுவரை விருது கொடுக்கப்பட்டவர்களின் பட்டியலைப் பார்த்தால் தெரியும். அவர்களது அரசியலுக்குள் நீங்கள் ஒருபோதும் வந்து கொள்ள மாட்டீர்கள். ஆனால் இந்த எழுத்தாளர் மநாட்டை எதிர்த்து நின்றதால்தான் – தமிழ்த் தேசியவெறியை காசி ஆனந்தனுக்கும் மேலால் நீங்கள் கக்குவதால் தான் அட இவனும் நம்மாள்தான் நம்ம கட்சிதான் என்று கண்டுகொண்டு உங்களை இவர்கள் இன்று ஏற்றார்கள். விருது தந்தார்கள்.. பாருங்கள் வாழ்நாள் இலக்கியசாதனைக்குக் கொடுக்கப்படுவதாகச் சொல்லும் இவர்களது விருது கடைசியில் ஒரு மாநாடு எதிர்ப்பு நோட்டீசுக்காக உங்களுக்குக் கிடைக்கிறது. இவ்வளவு காலமாக எஸ்.பொ. என்பவன் எதிர்ப்புணர்வு -கலகம் -மறுத்தோடி -காட்டான் என்று சொல்லி வரும் நீங்கள் இதைப் புறக்கணித்திருக்க வேண்டாமா? எள்ளி நகையாடியிருக்க வேண்டாமா? கொழும்பு சர்வதேச எழுத்தாளர் மநாட்டுக்காரன் சிலுவையில் அறைந்தான் இயல் விருதில் உயிர்த்தெழுந்தேன் என்று சொல்கிறீர்கள் இந்த விருது வாங்குவதில் உங்களுக்கு வெட்கம் வரவில்லையா? உண்மையில் எங்களது எஸ்.பொவுக்கு தற்போது என்னதான் நடந்தது?

எஸ்.பொ: நல்ல கேள்வி. அற்புதமான கேள்வி. இயல் விருதில் எனக்கு இரண்டு நிர்ப்பந்தங்கள் இருந்தது. ஒன்று அரசியல்ரீதியான நிர்ப்பந்தம். அந்த நிர்ப்பந்தம் என்னவென்றால் யூத இனம் 2000 ஆண்டுகளுக்கு மேலாக அகதிகளாக நாட்டுக்குநாடு அலைந்து, எத்தனையோ மில்லியன் மக்கள் இறந்து மொழியே இறந்த மொழியாகிப் போய் 2000வருடங்களுக்கப் பிறகு அமெரிக்காவில் வாழ்ந்த யூதர்களுடைய பணம், சாதுரியம் என்பனதான் ஒரு யூதநாடு இஸ்ரேல் தோன்றுவதற்கு சகாயித்தது. நான் வீராப்பாக இந்த இயல்விருதை வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம். சொல்லியிருக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்திருக்கிறார்கள். நான் வேண்டாம் என்று சொல்லாததற்குக் காரணம் இந்த இயல் விருதை ஒரு சாட்டாக வைத்துக் கொண்டு இன்று கனடாவில் வாழும் தமிழ் ஈழர்களுடைய உணர்வுகளையும் போக்குகளையும் நேரடியாக அறிந்து கொள்ள ஆசைப்பட்டேன். இரண்டாவது எனக்கு வேறு எந்த நாட்டிலும் உள்ளதிலும் பார்க்க கனடிய நாட்டிலே உறவுகள் அதிகம். இந்த உறவுகளின் பண உதவியுடன் 6000 பக்கங்களில் நீடிக்கக் கூடிய தமிழ் ஈழர்களுடைய இலக்கியங்களை பொக்கிசங்களை பிரசுரிக்க இருக்கிறேன்.

நான் கலகக்காரனாகவே வாழ்ந்து கொண்டிருப்பதனால் விருது வேண்டாம் என்று புறக்கணித்ததாக அர்த்தப்படுத்தி- இதற்காகத்தன் இவருக்கு சாகித்தியமண்டலப்பரிசு கொடுக்கவில்லை. இவர் கலகக்காரன் எந்தப் பரிசைக் கொடுத்தாலும் நிராகரித்து விடுவார் என்ற ஒரு அவச்சொல் வரக்கூடாது என்பதும் ஒரு காரணம்.

அடுத்து இதுவரை இந்த இயல்விருது கொடுக்கப்பட்டவர்களைப் பார்க்கிறேன். சுந்தரராமசாமி என்ன சாதித்தார்? வெங்கட் சாமிநாதன் என்ன சாதித்தார்? வெங்கட் சாமிநாதனது பங்களிப்பு என்ன? அவர் விமர்சனம் மட்டும் செய்தார். ஆனால் அது அல்லாத ஒன்றே ஒன்றுமட்டும், அந்தக்காலத்திலே அருமையான வலிமையான விமர்சன போசகத்தை கைலாசபதிக்கு எதிராக ‘மார்க்ஸின் கல்லறையிலிருந்து…’ என்று எழுதினார்.அதன்பிறகு இல்லை. சரி எங்களுடைய தாசிசியஸ் என்ன சாதித்தார்? இல்லாவிட்டால் இந்தப் பத்மநாபஐயருடைய சாதனைதான் என்ன? அவ்வளவும் எனக்குத் தெரியும். ஒரேயொருவர் இதற்கு முற்றிலும் தகுதியானவர் என்றால் அது கோவை ஞானி மட்டுந்தான். இந்தமாதிரியான கேவலங்களில் இருந்து கனடாவாழும் இலக்கிய சம்பந்தமான உயிர்ப்புக்கள் இன்னும் கொஞ்சம் சேட்டமாக வளரட்டும். இந்தக் கலகக்காரனுக்கு பரிசு கொடுத்து ஏற்று இங்கு வந்து கனடாவில் வாழக்கூடிய தமிழ் இலக்கிய முனைப்புகள் அனைத்தையும் கண்டு அளவளாவிச் செய்த பிறகு வேறும் என்னைப்போன்ற கலகக்காரர்களுக்கும் தகுதியுள்ளவர்களுக்கும் கொடுக்கலாம் என்ற நம்பிக்கையை இந்த நபுஞ்சகர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதனைச்செய்துவிட்டேன். நீங்கள் ஆதங்கப்பட்டது நியாயம். பொன்னுத்துரையும் எஸ்.பொவும் விலை போட்டானோ என்று நீங்கள் ஆதங்கப்பட்டது நியாயம்.there are own Agenda .i have my agenda.   உங்களுக்குத் தெரியாது இயல் விருதில் பேச நான் தயார் செய்து கொண்டுவந்தது ‘கனடாவில் கதைத்தது’ என்று சொல்லி ஒரு பேச்சு. அதில் இரண்டு வரிகூட நான் அங்கு பேசவில்லை. எதையாவது இவன் உளறிவிடுவானோ என்று அவர்கள் எல்லோரும் பயந்து போயிருந்தார்கள்.  என்ர பயறு எல்லா இடமும் அவியும் தம்பி.

அடுத்தது உங்கள் ஒருதருக்கும்  புரியாது... என்னுடைய புலி சார்பு நிலைப்பாடு என்பது அவர்களுடைய இயக்கத்திலே அவர்களுடைய செயற்பாட்டிலே நான் கொண்டிருந்த பற்றுதல் அல்ல. நான் உணர்வு பூர்வமாக எழுதுபவன். அநேகமாக கோட்பாடுகளை வைத்துக்கொண்டு எழுதியவனே அல்ல. கூடுதலாக உள்ளுணர்வுகளை வைத்துக்கொண்டு எழுதுபவன். அந்த உள்ளுணர்வு மிக மென்மையான மனித உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டது.  என்னுடைய ஒரேயொரு வாரிசு மித்ராதான். அவன் ஒரு கவிஞனாகவே இருந்து என்னுடன் வாழ்ந்தவன். அவனை நான் இழந்த தவிப்பு உங்கள் ஒருவருக்கும் தெரியாது. என்னுடைய அந்த ஆதரவு நிலைப்பாடு என்னுடைய மகன்மீது கொண்டுள்ள பாசம் மட்டுந்தான். இது உண்மை. நான் ஒருபோதும் பொய் சொல்பவனல்ல. பொய்யைத் தலைக்குள் கொண்டு திரிந்தால் என்னால் எழுதமுடியாது


 


































Saturday 22 November 2014

2008 புதுவருட வாழ்த்துக்கள் யாருக்கு? சமாதானம் என்ற மெழுகுதிரி ஏன் உருகி எரியுது?




தத்துரூபமான கற்பனைகளையும்

கற்பனைக்கெட்டாத கனவுகளையும்

சுமந்துகொண்டு இன்னும் இன்னும்

கழியும் ஆண்டுகளை

கடந்து போக வேண்டியிருக்கிறது.

உணவு உண்டுகொண்டு

இருப்பதால் மட்டும்

ஜீவன் இருக்கிறது

என்பதற்கப்பால்

நாம் எல்லோரும் கோமா நிலையிலேயே

வாழ்ந்து வருகிறோம்.

இதிலென்ன

நாள் மாறி

வருடம் மாறி…! என்று 2007ம் ஆண்டின் பிறப்பிற்காக அனைவரும் காத்திருந்த போது எழுதினோம். அதையே திரும்பி எழுதவேண்டிய தேவையை உணருவதில் என்ன வெட்கம் என்றால் நமது வாழ்நிலைக்கு எதையும் புதிதாக எழுதிவிடத்தேவையில்லை என்றதுதான். இந்தக் கோமா நிலை கவலையளிப்பதாகத்தானே இருக்கிறது. இலங்கையில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கொலையில் தொடங்குகின்றதாக அனைவரும் கவலைகொண்டுள்ளோம்.

இன்று காலை மகேஸ்வரன் எம்.பி. பொன்னம்பலவாணேஸ்வரத்திற்கு வழிபாட்டுக்குப் போனபோது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சென்பற்றிக் தேவாலயத்தில் வைத்து ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார். (இதுபற்றி அந்த நேரத்தில் கிழக்கில் நடந்த எந்தக் கொலைக்கும் வாய்திறக்காத சுகனே கவலைப்பட்டு எழுதியிருந்தது நீங்கள் அறிவீர்கள்.) இப்படிஒவ்வொருவருடத் தொடக்கத்திலும் யாரையாவது இழந்து விடுகிறோம். நாம் இன்னும் இன்னுமாய் இழப்பதற்கு தயாராய் இருக்கிறோம்.ஒவ்வொரு வருடத் தொடக்கம் என்பதைவிட ஒவ்வொரு விடியலிலும் யாரையாவது தொலைத்துவிட மனம் தயாராய் இருக்கிறது. இதற்கு அப்பால் நமக்குத் தெரியாத ஒரு சமாதானம் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். பாசிசம் பூசிய அந்தச் சொல் குறித்த அனைத்துப் பரிமாணங்களையும் தவிர்த்து விட்டு ஒன்றும் அறியாத குழந்தையைப்போல் சமாதானம் தேடிக்கொண்டிருக்கிறோம்.

புதுவருடப்பிறப்பில் சமாதானம் ஏற்படவேண்டும் என்று பேசிக் கொள்ளும் அனைவரும் அது குறித்து ஒரு விசாரணயற்ற, உரையாடலற்ற தன்மையிலிருந்து வானத்தை நோக்கி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சமாதானம் என்ற நகைப்பிற்குரிய அந்தச்சொல் எம்மிடம் எதாவது ஒரு இடத்தில் குடிகாண்டுள்ளது என்று யாராவது அடையாளம் காட்ட முடியுமா? ஒவ்வொரு சமாதானத்திற்கு முன்னும் பின்னும் தொடர் யுத்தத்தைத்தானே கடந்திருக்கிறோம். யுத்தத்தில் நடந்த கொலைகளை விட சமாதான காலத்தில் நடந்த கொலைகளின் பட்டியல்தானே நம்மிடம் அதிகமாகவுள்ளது. அதைவிட சமாதானம் என்று இதுவரை பேசிய காலங்களில் யார் யாருடன் எல்லாம் பேசியிருக்கிறோம்? ஏன் அவை எல்லாம் சாத்தியப்படாமற் போயிற்று? முதலில் சமாதானம் யாருக்கும் யாருக்குமானது? யார் யாருக்கிடையில் சமாதானம் தேவை? யார் யார் சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்? சண்டையிடாதவர்கள் யார்? சண்டையிடாதவர்களுக்கு ஏன் சமாதானம்? கடந்த சமாதான காலங்களில் நாம் கண்ட படுகொலைகளின் வீரியம் என்ன? வங்காலைப ;படுகொலை, அல்லப்பிட்டிப் படுகொலை, எல்லாம் நம்மை எவ்வளவு பாசிசவாதிகளாக்கி விட்டிருக்கிறது? இதற்கப்புறம் இன்னொரு சமாதானத்தில் நாம் எவ்வளவு படுகொலைகளைச் சந்திக்கப்போகிறோம்? என்று நாம் யோசிக்காத வரையில் சமாதானம் என்ற பாசிசச் சொல் நமக்கு தேவையற்றது. புதுவருடம் என்று ஒவ்வொரு ஜனவரி 1ம் திகதியைக் கொண்டாடுவதும் தேவையற்றது.

கற்சுறா
01.01.2008

Tuesday 18 November 2014

“ஆம்..இல்லை, என நறுக்கென்று இரண்டு வார்த்தை போதும்.”



சோபாசக்தி, தீபச்செல்வன் உரையாடல் குறித்த எதிர்வினை.

=கற்சுறா..அசுரா=

ஞானசம்பந்தர் ஞானப்பால் குடித்து ஐந்து வயதில் பதிகம் பாடியதாக எமக்கு புராணம் சொன்னது. புராணங்கள் எல்லாமே புரட்டுகள்தான் என்று மனம் புறந்தள்ளியது. “ஆனால்கிட்டத்தட்ட ஆறுவயதில் ஏன் யுத்தம் நடக்கிறது? எங்கள் மண்ணில் என்ன நடக்கிறது என்பது எனக்குப் புரிந்து விட்டது.எங்களுக்கு என்ன நடக்கிறது? நாங்கள் யார்? என்று புரிந்து கொண்டேன். ஆமிக்குப் பயந்து வாழும் வாழ்க்கை எனக்கு அந்த வயதிலேயே தெரிந்தது.” என புலிப்பால் குடித்து ஆறுவயதில் தமிழ்த் தேசியப் புராணம் பாடிய தீபச்செல்வனுக்கும் திருஞான சம்பந்தருக்கும் மிஞ்சி..மிஞ்சிப்போனால் ஒரு வயதுதான் வித்தியாசம். இந்த தீபச்செல்வனது அதிசயம் எம் கண்முன்னாலேயே நடக்கிறது. எனவே ஐந்து வயதில் சம்பந்தர் பதிகம் பாடியிருப்பார் என்பதை நாம்  இப்போது ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

தீபச்செல்வன் புலிஆதரவாளராக இருப்பதும் புலி இராட்சியத்தின் அவசியம் குறித்துப் பேசுவதும் நமக்கு ஒரு பொருட்டல்ல. இப்படியான மனம்படைத்தவர்களுடன் உரையாடுவதும் ஒரு தவறான விடயமும் அல்ல.

ஆனால் ஆக்க இலக்கியம் குறித்த சிந்தனையாளர்கள் எனக் கூறிக் கொள்பவர்களும், பன்முக சிந்தனைகள், மாற்றுக் கருத்தியல்களின்  அவசியம் கருதுபவர்களும் தீபச்செல்வன் போன்றவர்களின் உணர்வெழுச்சி உந்துதல்களை எப்படி எதிர்கொள்வது என்பதே இங்கு விவாதப் பொருளாக உள்ளது.

இந்த நேர்காணல் குறித்து நாம் கேட்கும் முதல் கேள்வி யாதெனில்,

“கிளிநொச்சி இரத்தினபுரத்தில் பிறந்த தீபச்செல்வன் கவிதை, பத்தி, எழுத்து, ஆவணப்படம், திறநாய்வு, ஊடகவியல் எனப் பல துறைகளில் இயங்கிக் கொண்டிருப்பவர்.’பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’ …… போரைக்குறித்தும் போரின் வடுவைக்குறித்தும் அலைந்து திரியும் ஏதலி வாழ்வு குறித்தும் தொடர்ச்சியாக எழுதிவரும் தீபச்செல்வன் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளராகவும் செயற்பட்டவர் ‘தீபம்’ என்ற வலைப்பக்கத்தை தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மும்மொழிகளிலும் நடத்திவருகின்றார். தற்போது யாழ்ப் பல்கலைக்கழக ஊடக நிலையத்தில் வருகை விரிவுரையாளராகப் பணியாற்றும் தீபச்செல்வனுடன் இந்நேர்காணல் மின் அஞ்சலூடாகக் கேள்விகள் அனுப்பியும் பெற்றுக்கொண்ட பதில்களிலிருந்து துணைக் கேள்விகள் அனுப்பிக் கூடுதல் பதில்களைப் பெற்றும் நிகழ்த்தப்பட்டது.” போன்ற அறிமுகங்களினூடாக தீபச்செல்வனை அணுகுவதா?

அல்லது தீபச்செல்வனின் பதில்களில் உறைந்து கிடக்கும் அறியாமையையும் அலட்சியங்களையும், தீபச்செல்வன் போன்றவர்களால் எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் விளைவுகளையும் அம்பலப்படுத்துவதை நோக்கமாகக் கொள்ள வேண்டியது அவசியமா? என்பதுதான்.

போரைக்குறித்தும் போரின் வடுவைக்குறித்தும் அலைந்து திரியும் ஏதலி வாழ்வு குறித்தும் எங்கள் புலவர் சேரன் பாடாததையா தீபச்செல்வன் தற்போது பாடப்போகின்றார்.
……..
துயிலா இரவுகளில்
அப்பா என்று அலறித்துடிக்கின்ற
சின்ன மழலைக்கு
என்னதான் சொல்வாய்?
உலாவித்திரிந்து நிலவைக் காட்டி
அப்பா கடவுளிடம் போனார்
என்று சொல்லாதே.
துயரம் தொடர்ந்த வகையைச் சொல்
குருதி படிந்த கதையைச் சொல்
கொடுமைகள் அழியப்
போரிடச் சொல்;
…..
இரவல் படையில்
புரட்சி எதற்கு?
எங்கள் நிலத்தில்
எங்கள் பலத்தில்
எங்கள் கால்களில்
தங்கி நில்லுங்கள்

வெல்வோமாயின் வாழ்வோம்
வீழ்வோமாயினும் வாழ்வோம்
நமது பரம்பரை போர் புரியட்டும். (சேரனின் ‘நீ இப்போது இறங்கும் ஆறு’ எனும் கவிதைத் தொகுப்பிலிருந்து)

என்றெல்லாம் கவிதைபாடி உணர்ச்சி ஏற்றி ஆயிரக்கணக்கான இளைஞர்களையும், குழந்தைகளையும் கொல்லக் கொடுத்துவிட்டு தனது வாழ்வை எவ்வாறு தக்கவைத்துள்ளார் புலவர் சேரன் என்பதைப் பாருங்கள். ‘வீழ்வோமாயினும் வாழ்வோம்’ என்று பாடியதற்காகவே இன்று ‘வீழ்ந்தபோதும்’ அவர் நாடுகடந்த தமிழ் ஈழத்துக்கு தனது ஆதரவை நல்குவதனூடாக அவர் ‘வாழ்ந்து’ கொண்டிருக்கின்றார்.

இந்த நேர்காணலின் வாசிப்பு மன நிலையானது ஒரு ஆரம்பகால புலி உறுப்பினருக்கும், ஒரு நிரந்தர (eternal) புலி உறுப்பினருக்குமான உரையாடலில்  எதிர்நிலைகளில் கேள்விகளும் விடைகளும் போய்க்கொண்டிருப்பதான ‘தோற்ற மயக்கத்தில்’ இழுத்துச் செல்லும். ஆனால் உண்மை அதுவல்ல. விடுதலைப்புலிகளது தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக அறிந்ததும் இணையத்தளங்களில் அவரது படங்களைப்பார்த்ததும் எனது இரண்டு கண்களும் தாழ்ந்தன. நான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஒரு குழந்தைப் போராளியாக இருந்தவன் அதனால் காட்டப்பட்ட படம் அவரேதான் என்பது எனக்குத் தெரியும். என்று சோபா எழுதியபோது எமக்கு எதுவித ஆச்சரியத்தையும் கொடுக்கவில்லை. விடுதலைப்புலிகளது சாகசவிளையாட்டில் அதிகமாய் மயக்கமுள்ளவர் அவர்.  கொரில்லா நாவல் அதற்கு நல்ல உதாரணம்.

அதனால்தான் சொல்கிறோம் தனக்குரிய அரசியலை தீபச்செல்வனுக்குள்ளால் கொண்டுவர நினைக்கிறார் அவர். அதனால் தான் புலம் பெயர்ந்த தமிழர்கள் எவ்வாறிருக்கவேண்டும் எவ்வாறிருக்கக்கூடாது என்று தீபச்செல்வனிடம் புத்திமதி கேட்கிறார் அவர்.

இதே கேள்விகள் நிலாந்தன், கருணாகரன்,  புதுவை ரத்தினதுரை, ஜெயபாலன், உருத்திரகுமார், சீமான், வை.கோபால்சாமி  போன்றவர்களிடம்  கேட்டாலும் இதேமாதிரி சப்புக்கெட்ட பதில்கள் தான் வரும். இனிவருங்காலங்களில் அவர்களிடமும் கேட்கப்பட்டு அவற்றை லும்பினி இணையத்தில் பிரசுரித்து எல்லோரையும் புல்லரிக்க வைக்கவேண்டும்.

முதலில் நாம் ஒன்றைத் தெரி(ளி)ந்து கொள்ளவேண்டும். “யுத்தம்தான் என்னை உண்மையான எழுத்தையும் இலக்கியத்தையும் நோக்கி நகர்த்தியது” என தீபச்செல்வன் அவர்கள் கூறியதிலிருந்தும், “நானோ விடுதலைப்புலிகள் தொடர்பான நிரந்தரமான விருப்பை வைத்துக் கொண்டு பேசுகின்றேன்” என்று கூறுவதனூடாகவும் தீபச்செல்வனிடம் தொடர்ந்து கேட்கவேண்டிய கேள்வி என்பது புலிகளின் சாகசம் குறித்ததாக மட்டுமே இருக்கமுடியும்.

தீபச்செல்வன் அவர்கள் தான் ஆறுவயதில் பெற்ற ஞானத்திலிருந்துதான் உலகத்தைப் பார்க்கிறார். பாவம் அவர். அவர் இலங்கையின் அரசியல் சமூக வரலாறுகள் குறித்த தேடலோ அது குறித்த அக்கறையோ எதுவுமற்ற ஒரு அப்பாவி.

புலிகள் காலத்தில் தொடர்ச்சியாகவே யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்களும், பேராசிரியர்களும் புலிகளைக் காப்பாற்றுவதிலும் யாழ் மேலாதிக்க சிந்தனையை பேணுபவர்களுமாகவே இருந்து வந்தவர்கள். இதில் முறிந்த பனை ஆசிரியர்கள் மட்டுமே விதி விலக்காக இருந்துள்ளனர்.

புலிகளால் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் குறித்துக் கேட்கப்பட்டபோது: “ இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள், சிங்களவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை நான் வளர்ந்த பின்புதான் அறிந்தேன். அதை யார் செய்தார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அப்பாவிச் சிங்கள மக்களையும், முஸ்லிம் மக்களையும் கொல்வது தீர்வல்ல என்று விடுதலைப்புலிகள் கருதியவர்கள் என்பதை நான் அறிவேன்”. என்கிறார் தீபச்செல்வன். கேக்கிறவன் கேணையன் என்றால் கேப்பையிலும் பால் வழியுமாம்.

அட அதுக்கு அப்படி ஒரு புலுடா விடுகிறாரென்று பார்த்தால்,  அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் கொலைகள் பற்றிக் கேட்டதற்கு, “அவர்கள் கொல்லப்படும் பொழுது நான் குழந்தையாகவும், சிறுவனாகவும் இருந்தேன். …..அவர்களைப் புலிகளா கொன்றார்கள் என்பதைப் பற்றியும் நான் அறியவில்லை. நான் உன்னதமான போராட்டம் நடந்த சூழலில்தான் நான் இருந்தேன்”. என்கிறார். எங்கபோய் முட்டுறது நாம.

“ஆனால் கிட்டத்தட்ட ஆறுவயதில் ஏன் யுத்தம் நடக்கிறது? எங்கள் மண்ணில் என்ன நடக்கிறது என்பது எனக்குப் புரிந்து விட்டது”. என்று ஆறுவயதுக் குழந்தையாக இருக்கும்போதே இராணுவம் மக்களைக் கொல்வதையும், சிங்கள ஆட்சியின் அரசியலையும் அறிந்து கொள்ளக்கூடிய ஞானப் பார்வை பெற்றிருந்தவர் தீபச்செல்வன். ஆனால் அமிர்தலிங்கத்தையும், யோகேஸ்வரனையும், அப்பாவிச் சிங்களவர்களையும்  புலிகள் கொல்லும் போது மட்டும் நான் குழந்தையாக இருந்தேன், நான் அப்போது  சிறுவன் என்றெல்லாம் குழைகின்றார். அவர் சொல்லுவதில்  ‘புலி நியாயம்’ ஒன்றிருக்கிறதல்லவா! புலிகள் தமது ‘உன்னதமான போராட்டத்திற்காகத்தானே’ தமது அதிகாரத்திற்கு எதிரானவர்கள் எனக் கருதுபவர்களை எல்லாம் கொன்று குவித்தார்கள். ”புலிகள் மரணத்தை எதிர்கொள்ளும் விதம் மக்களிடம் பெரியளவிலான ஆதரவைப்பெற்றது” என்று கூறும் தீபச்செல்வனுக்கு

“ஐயோ! நாங்கள் ஒன்றுமறியாத அகதிகள். எங்களால் சண்டைபோட முடியாது. எங்களுக்கு சண்டையில் விருப்பமில்லை. உங்களால் நாங்களெல்லாம் சாகப் போகிறோம். தயவு செய்து இங்கிருந்து போய்விடுங்கள்”. என பொதுமக்களின் வேண்டுதலை பதிவு செய்த முறிந்த பனை ஆசிரியர்களின் கள ஆய்வின் ஆதாரமான (பக்கம் 300) முறிந்த பனை நூலை வாசிக்குமாறு அடுத்த கேள்வியில் சொல்லியிருக்க வேண்டாமோ?

அந்த காலகட்டத்தில் தீபச்செல்வனுக்கு நாலு வயதுதானே இருந்தது என்ற காரணத்தால்  அவருடன் உரையாடியவர் அதைத் தவிர்த்துக் கொண்டாரோ என்னவோ!

“புலிகள் பொதுமக்களை பாதுகாப்புக்கான கவசமாக பயன்படுத்தினர். போராளிகள் மக்கள் செறிந்திருந்த மருத்துவமனைகளிலிருந்தும் கோயில்களிலிருந்தும் பாடசாலைகளிலிருந்தும் தாக்குதல் நடத்தி தப்பிக்கொண்டனர்”.(முறிந்த பனை, பக்கம் 357) …“அக்டோபர் யுத்தத்தின் போதும் இலங்கை அரசோ, இந்திய அரசோ தமிழ் மக்களின் அக்கறைகளை ஒருபோதும் பொருட்டாகவே கருதியதில்லை என்பதை நாம் அறிவோம். எல்லாவற்றிற்கும் மேலாக, விடுதலைப்புலிகள்கூட தமது இயக்கத்தின் குறுகிய நலன்களைவிடப் பொதுமக்களின் ஜீவமரணப் பிரச்சனைகளை மிகவும் அற்பமாகவே கருதியிருந்ததை அக்டோபர் யுத்தத்தின்போது அவர்கள் நடந்து கொண்ட விதம் நன்றாகவே தெளிவாக்கியது.” (முறிந்த பனை, பக்கம்405) இங்கே ஒன்றை நினைவு கொள்ளவேண்டும் முறிந்த பனை நூல் ஆசிரியர்கள் இலங்கை அரசிற்கு எதிராக யுத்தத்தில் ஈடுபட்ட  அனைத்து இயக்கங்களையும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியவர்கள். அதுமட்டுமல்லாது இந்திய இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட யுத்த காலத்தில் களப் பணிகள் ஊடாக மக்களை ஊர், ஊராக, கிராமம், கிராமமாக சென்று நிலமைகளை நேரில் கேட்டு, அறிந்து ஆவணப்படுத்தியுள்ளனர்.

அக்காலகட்டத்தில் மக்கள் ஓரளவிற்கு புலிகளின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை காட்டியுள்ளனர். 90 களின் பிற்பகுதியிலிருந்து மக்கள் வாய்மூடி மௌனமாக்கப்பட்டனர். இப்படியான சூழலே புலிகள் அழியும் வரை வட-கிழக்குப் பகுதியில் இருந்து வந்தது.

“விடுதலைப் புலிகளுக்கு அறிவுரை சொல்லும் விதமாக இருக்கவில்லை விடுதலைப் புலிகளை அழிக்கும் விதமாகவே இருந்தது” எனக் கூறிய தீபச்செல்வனுக்கு புலிகளுக்கு அறிவுரை கூறி பலன் அற்ற காரணத்தாலேயே புலிகள் அழிக்கப்பட வேண்டியவர்கள் எனும் சூழல் ஏற்பட்டது என்பதாக கூறியருக்க வேண்டாமா?

தீபச்செல்வன் போன்றவர்கள் புலிகள் புனிதமானவர்கள் என்று பட்டைச்சாராயம் அடித்து நாக்குச் செத்தவர்கள் போல் திரும்பத்திரும்ப ஒரேபதிலைச் சொல்வார்கள். ஊருக்கே தெரிந்த விடையம் தமக்குத் தெரியாது என்பதாக புலுடா விட இவர்களால் மட்டும்தான் முடியும். இவர்களுக்கு நடைபெற்ற எல்லமே தெரியும். ஆனால் இன்றுவரை புலிகளுடன் கூட இருந்து நம்பி ஏமாந்து போனதை இவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதே ஒரு உண்மை. அதனால் தாம் சொல்வது பொய் என்று தெரிந்தும் இல்லை என்று மறுத்துச்சொல்ல வேண்டியிருக்கிறது. இறுதி யுத்தத்தில் புலிகள் மக்களைக் கொன்றார்கள் என்று எத்தனையோ நேரடி ஆதாரங்கள் இருந்தும் தீபச்செல்வன் பச்சையாக மூடிமறைக்க வேண்டியிருப்பதற்கு வேறுகாரணம் எதுவும் இருக்க முடியாது. அந்த உண்மையை இன்று கருணாகரன் இந்தியாவில் இருந்து விதுல்ராஜா போன்ற பல புனைபெயர்களில் சொல்வதனால் கருணாகரனுடன் தற்போது தான் முரண்படுவதாகச் சொல்கிறார்.

சாதாரணமாக விடுதலைப்புலியில் இணைந்துகொண்ட ஒரு போராளி என்பவனுடைய சிந்தனையில் இருக்கக்கூடிய ஆகக் குறைந்தளவு நேர்மைகூட இல்லாதவர் அவர். புலிகளை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட பதில்களையே திரும்பத்திரும்பச் சொல்லும் தீபச்செல்வன் போன்ற புலி உத்தியோகத்தர்கள் எப்போதும் ஆபத்து நிறைந்தவர்கள். ஒரு இனத்தின்  கொடடுரமான படுகொலைகளுக்கு துணைபோனவர்கள்  தீபச்செல்வன் போன்றவர்கள்.

பார்த்தீர்கள்தானே பல்கலைக்கழக விரிவுரையாளராக இருக்கும் விடுதலைப்புலிகளது உத்தியோகத்தரான தீபச்செல்வன் கேட்கப்படும்  மிகச் சாதாரணமான கேள்விகளுக்கு அற்பத்தனமாகப் பதிலளிப்பதை!  சகோதரப்படுகொலை குறித்து கேட்டால்..,  அப்போது நான் குழந்தை. முஸ்லீம்கள் வெளியேற்றம் குறித்து, அப்போது நான் குழந்தை. கிழக்கிலங்கைப் படுகொலை… அப்போது நான் சிறுவன். சிங்களமக்கள் படுகொலை… அதை நான் அறியவில்லை. என்று குழந்தைத்தனமாகவே பேசிக் கொள்கிறார். இங்கே பல்வேறு ஆதாரங்களையும்,  விளக்கங்களையும் எழுதி தீபச்செல்வனின் புத்திக்குள் புதைக்கவேண்டும் என்ற எண்ணமும் கருசனையும் எமக்கில்லை. அது நமது தேவையுமல்ல.

ஏனெனில் அவர்களுக்கு சகலதும் விளக்கமாகத் தெரியும். நாமும் காலாகாலமாக எழுதியும் வருகின்றோம். ஆனால் தீபச்செல்வன் போன்றவர்களது ஏக்கம் கவலையெல்லாம் தாம் மிகப்பெரிய நம்பிக்கை கொண்டிருந்த விடுதலைப் புலிகள் அவசரமாக அழிந்து போனதைப் பற்றித்தான். தங்களது அந்த ஏக்கத்தைத்தான் மக்கள் மனதில் இருந்து என்றும் புலிகளது நினைவு அழியாது என தமக்காக மக்களைத் துணைக்கு அழைக்கிறார்கள்.

இன்றைய ஜேர்மனியர்கள் தமது மூதாதையர்கள் செய்த செயல் குறித்து மிகவும் வெட்கப்படுகிறார்கள். அதேபோல் புலிகளது தீபச்செல்வன்கள் போன்ற உத்தியோகத்தர்களும் வெட்கப்படும் நிலை உருவாகவேண்டும்.

இந்த உரையாடலானது ‘இனிஒரு இணையத்திலோ’ தேசம் இணையத்திலோ’ அல்லது ‘லங்காசிறீ இணையத்திலோ’ ஏன் கனக்கவேண்டாம் even சோபாசக்தி டாட் காமிலையோ (!!!) வந்திருந்தால் நாம் இதை வாசித்து விட்டு பிறங்காலால் உதைத்து தள்ளிவிட்டு சிவனே என்று சென்றிருப்போம்.

ஆனால் நாம் தொடர்ச்சியாக வாசித்துவரும் ‘லும்பினி இணையத்தில்’ வந்ததால் தான் இதை நாம் எழுத நேரிட்டது. காரணம் லும்பினியில் எழுதிவரும் பல எழுத்தாளர்கள் மிகப்பெரிய சிந்தனையாளர்கள், இலக்கிய வாதிகள்,பேராசிரியர்கள், தலித் சிந்தனையாளர்கள். இவர்கள்   புலிகளின் அதிகார மோகத்தையும், அதற்கான அவர்களது பாசிச அணுகுமுறைகளையும் நன்கு அறிந்து கொண்டவர்கள். எனவே இவர்களிடமே சில நியாயத்தை நாம் கோரவேண்டியுள்ளது.

“மகிந்த ராஜபக்சவின் சர்வாதிகார அரசுக்கு ஏதிராக சிங்கள முற்போக்குச் சக்திகளிடையே பலமான ஓர் எதிர்ப்பியக்கம் தோன்ற வாய்ப்புள்ளதா?” என புலியின் நிரந்தர ஆதரவாளரான தீபச்செல்வனிடம் கேட்கவேண்டியதின் தார்மீகம் தான் என்ன?

புலிசெய்த சர்வாதிகாரம் என்பது ‘பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்’ என்ற காரணத்திலா முதலாளித்துவ சர்வாதிகாரம் குறித்து தீபச்செல்வனிடம் வினா தொடுக்கப்பட்டது?

1983 இல் தான் பிறந்ததால அதற்கு முன்பு நடந்ததெல்லாம் தனக்குத் தெரியாது, அதை நான் அறியவில்லை நான் குழந்தை, நான் சிறுவன்.  நான் ஆறுவயதில் இருந்தே புலிப் புராணம் பாடுகின்றேன் என ஒப்புதல் வாக்குமூலம் அழித்த ஒருவரிடம் 19ஆம் நூற்றாண்டில் தோன்றிய மார்க்சியம் குறித்தும், மேலும் உலகமயமாதல் குறித்தும் கேட்கப்படும் கேள்விக்கான நியாயம் தான் என்ன?

தீண்டாமை குறித்தெல்லாம் இவரிடம் எந்த நியாயம் எதிர்பார்க்கப்பட்டது?

“சாதிய ஒடுக்குமுறை மீறலை பேசும் இலக்கியங்கள் இன்று காலத்திற்கு ஏற்ப ஈழத்தில் எழவில்லை” என்று கூறும் தீபச்செல்வனுக்கு தெணியான் எனும் தலித் எழுத்தாளர் இருப்பது தெரியவில்லை. புலிகளின் அடக்குமுறைக் காலத்திலும் சாதிய ஒடுக்கு முறை குறித்த இலக்கிய படைப்புகளை எழுதி வந்தவரல்லவா தெணியான் அவர்கள்?

வடபகுதியில் எழுந்த சாதி எழுச்சிபோராட்டங்களான தேனீர்கடை பிரவேசம், கோவில் நுழைவுப்போராட்டம் போன்ற சமூக அதிர்வுகள் தீபச்செல்வனின் புத்திக்குள் நுழைந்திருக்குமா?

“யாழ்ப்பாணம் புலிகளது ஆட்சியின் கீழ் இருக்கவில்லை என்பதனால் சாதிய ஒடுக்குமுறை இருக்கலாம்”.  “…..வன்னியில் தீண்டாமை முற்றாக ஒழிந்திருந்ததைப் பார்த்திருக்கின்றேன்”.என்று கூறும் தீபச்செல்வனிடம், அட நாசமாப்போவானே உன்ர வாய்  அழுகிப்போகும்.என்று சோபாவால் கூறமுடியாதிருந்ததன் காரணம் என்ன. முள்ளி வாய்க்கால் சம்பவத்திற்கு பிற்பாடு வன்னியில் கிளம்பிய சாதிய அதிர்வுகளை  சோபா தொட்டுக்காட்டியிருக்கலாமே?

வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து அகதி முகாம்களில் இருந்தபோது சாதியம் சடைத்துக் கிளம்பியதை அங்கு சென்று வந்தவர்கள் நேரில் பார்த்து அறிந்ததாக வெளிவந்த செய்திகள் சோபாவுக்குக்கூடத் தெரியாது போனதா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இன்று தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் என்று கூறுகிறார் தீபச்செல்வன் அவர்கள். அண்மையில் வவுனியாவில் “வெளிய போங்கடா சக்கிலிய நாய்களே” என சாதிவெறியில் குலைத்தவர் தீபச்செல்வன் நம்புகின்ற தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஓர் அங்கத்தவர்.

நாம் அனைத்தும் அறிவோம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யார்…திபச்செல்வன்கள் யார்…இவர்களின் கருத்துக்களும், சிந்தனைகளும் யாருக்குரியது என அனைத்தும் நாம் அறிவோம்.

தீபச்செல்வனோடு உரையாடியவர் மிகப்பெரிய எழுத்தாளர். முற்போக்கு, மாற்றுச் சிந்தனை, மார்க்சியம், ரொட்ஸ்கியம், ஜனநாயகம், தலித்தியம், புலிகளின் அராஜகம், மனித உரிமை போன்ற பல தளங்களில் பயிற்சிபெற்று (!!!) அவை குறித்தெல்லாம் ‘அக்கறையுடன்’  பேசியும் , எழுதியும் வருபவர்.

எமக்கு தீபச்செல்வனிடம் கேட்கப்பட்ட கேள்விகள் யாவும் எதிரும்-முரணுமாக நகர்வதான ஒரு ‘தோற்ற மயக்கமாகவே’ இருக்கின்றது. காண்பதிலிருந்து நாம் காணததைக் காணுகின்றோம். இருந்தபோதும் தீபச்செல்வனிடம் தொடுக்கப்பட்ட கேள்விகள் யாவும் வெறும் சம்பிரதாய பூர்வமானதென்றோ, அல்லது இது வெறும் அயோக்கியத்தனமான நாடகம் என்றோ நாம் தீர்ப்புச் சொல்லிவிட முடியாதுள்ளது.

ஏனெனில் இது ‘லும்பினி இணையத்தளத்தில்’ வந்த சம்பவம். நாம் கண்டபடி எதையும் பேசிவிடமுடியாது. அதில் எழுதி வருபவர்கள் மிகப் பெரிய சிந்தனையாளர்கள் எனவே தான் நாம் அவர்களிடம் (லும்பினியில் கட்டுரைகள் எழுதுபவர்களிடம்) நியாயம் கேட்கின்றோம். லும்பினியில் வரும் ஆக்கங்களை தொடர்ச்சியாக வாசிப்பவர்கள் எனும் குறைந்த பட்ச உரிமையுடன்தான் இந்த நியாயத்தைக் கேட்கின்றோம். எமக்கு நீங்கள் பல்வேறு எடுகோள்கள் காட்டி ,பல்வேறு சித்தாந்தங்களை முன்வைத்து  நியாயங்கூற முயற்சிக்க வேண்டாம். ஏனெனில் எமக்கு அவை புரியாமலும் போகலாம். நறுக்கென்று இரண்டு வார்த்தையில் விளக்கம் அளித்தாலே போதுமானது.

கேள்வி, 1) தீபச்செல்வனுடன் உரையாடியதன் மூலமாக கண்டிறிந்த உண்மைகளை பேசியிருக்கவேண்டாமா? புலிகள் விதைத்த பாசிசம் வேரோடு அழிக்கப்படவில்லை என்பதை அம்பலப்படுத்தியிருக்க வேண்டாமா?

கேள்வி,2) தீபச்செல்வன் முற்போக்கு இலக்கிய வட்டத்திற்கும், மாற்றுச்சிந்தனை கொண்டவர்களுக்கும், ஜனநாயகம் மனித உரிமை குறித்தெல்லாம் அக்கறைகொண்டவர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட வேண்டிய ஒரு ‘இலக்கியப் பொக்கிசமா’?

ஆம்..இல்லை, என நறுக்கென்று இரண்டுவார்த்தை போதும்.

நன்றி.

31/1/2007 அன்று அவள் ஏன் தற்கொலை செய்து கொண்டாள் என்று யாருக்கும் தொயாது...




விரல் விட்டு எண்ணிப்பார்க்க் கூடிய காலந்தான் இருக்கிறது.

பார்த்துக் கொண்டிருக்க…

எமது உரோமங்களை வழித்து

மெல்லத்தோல்களை உரித்து உரித்து

ஒரு பூந்தளிரின் மேல் படர விட்டு

வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான் ஒருவன்.

இன்னொருவனை அழைந்து வந்து

ஒரு இருண்ட அறையினுள் விட்டு

அவனுடை ஆண்குறியை அறுத்து

அவனது வாயிலேயே திணித்து விட்டு

சிரித்துக் கொண்டிருப்பான் ஒருவன்.

ஊரே வீட்டிற்குள் ஒழிந்து கிடக்கிறது.

சாப்பாட்டுச்சாமான் வாங்க கடைக்குச் சென்றவர்கள்,

சுகயீனம் என்று வைத்தியசாலைக்குச் சென்றவர்கள்

யாரும் திரும்பி வரவில்லை.

திரும்பி வராதவர்களைத் தேடி யாரும் செல்லவில்லை.

இருள் மெல்லக் கவிகிறது.

வெளியில் வராதவர்களைத் தேடிப் போகிறது

கருங்குழல் துப்பாக்கிகள்.

இருளையும் மேவித் தெரிகிறது துப்பாக்கி முனை.

வாழ்வைத் தேடி ஒடும் பெண் ஒன்று

துப்பாக்கியைத் தவிர்த்திவிட்டு நஞ்சருந்திச் சாகிறது.  

சாவைக் கடந்து

சகோதரியை இழுத்துக் கொண்டு போகிறது துப்பாக்கி.

பாருங்கள்…

விரல் விட்டு எண்ணிப்பார்க்க் கூடிய காலந்தான் இருக்கிறது.

பார்த்துக் கொண்டிருக்க…

தெருவெங்கும் பரவிக்கிடக்கிறது மனித எலும்புகள்.

பாசிசத்தின் சாட்சியமாய்

ஈழத்தின் அஸ்விச்சாய்

எழுந்துகொண்டிருக்கிறது துணுக்காய்.

நூற்றுக்கணக்கில்

ஈழத்துக் கல்விமான்களையும்

அறிவாளிகளையும்

துரோகிகள் என்று சிறைவைத்துக் கொன்றொழித்ததின் சாட்சியம் துணுக்காய்.

குரங்குகளும் காட்டு விலங்குகளும்

நடமாட

மனித எலும்புகள் பரவிக்கிடக்கும்

தெருக்களைப் படம் பிடித்து

வரலாறாய் எமது பிள்ளைகளுக்கு

கல்வி புகட்டும் காலம் தொலைவில் இல்லை.

பாருங்கள்…

விரல் விட்டு எண்ணிப்பார்க்க் கூடிய காலந்தான் இருக்கிறது.

திரு. ஆனந்த சங்கரி அவர்களுக்கு …..

கற்சுறா,அசுரா




ஐயா,
வழமையாக நீங்கள்தான் அனைவருக்கும் கடிதம் எழுதுவீர்கள். அதை மீறி நாங்கள் உங்களுக்கு எழுதவேண்டி வந்ததையிட்டு வெட்கப்படுகிறோம். யாழ் உதயன் பத்திரிகையில் நீங்கள் கொடுத்திருந்த செவ்வியே இதனை எழுதத் தூண்டியது.

கடந்த முப்பது வருடங்களாக  இலங்கை நாடு பலத்த இன்னல்களுக்கும் அழிவுகளுக்கும் உள்ளாகியிருந்தது. இன முறுகல் தோன்றிய ஆரம்பகாலங்களில் நீங்கள் இலங்கையின் கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் சாதாரணமக்களுக்குக் கிட்டாத, நினைத்துப் பார்க்க முடியாத மிகப்பெரிய வாசஸ்தலத்தில் வாழ்ந்து வந்தீர்கள். அப்போதும் நீங்கள் த.வி.கூ யின் பா.உ.ஆகவே இருந்தீர்கள். பின்னைய காலத்தில் நீங்களும் கிளிநொச்சியை விட்டோடியவர்தானே. நீங்கள் அரசபாதுகாப்பில் இருந்துகொண்டுதானே பிரபாகரனுக்கு கடிதம் எழுதிவந்த நீங்கள்.

ஆனால் இன்று சுயேட்சையாக தேர்தலில் நிற்கும் புத்திஜீவிகளும், இலக்கியவாதிகளும் இராணுவச்சுற்றி வளைப்பிற்குள்ளும்,  புலிப்பாசிசத்தையும் எதிர்கொண்டு வாழ்ந்தவர்கள். அவர்களுக்கு எந்தப்பாதுகாப்பும் இருந்ததில்லை. ஐயா நீங்களும், உங்கள் மதிப்பிற்குரிய கனவான்களும் வளர்த்துவிட்ட அரசியலை ஆயுதத்துடன் முன்னெடுத்தவர்கள் தானே புலிகள். துரையப்பாவின் கொலையென்பது உங்கள் கனவான் அமிர்தலிங்கத்தின் மனம் குளிரச் செய்யபட்டதுதானே. துரோகிகள் பட்டியலுக்கு பிள்ளையார் சுழி போட்டதும் உங்கள் மதிப்பிற்குரிய கனவான்அமிர்தலிங்கம் என்பதுதானே வரலாறு.

தமிழ் மக்களது பிரச்சனைகளைப் பற்றிப் பேச நேர்மையான தைரியமான ஒருவர் தற்போது இல்லை. அந்தத் தகுதி எனக்கிருக்கிறது அதனால்தான் போட்டியிடுகிறேன் என்று மிகக் கீழ்த்தரமாக ஒரு ‘கடை’ மனிதனாக சொல்லிக் கொள்ளும் நீங்கள் வைத்திருக்கும் ஒரு தகுதியைச் சொல்லுங்கள். உங்கள் அரசியலிலும், சிந்தனையிலும் எந்த மாற்றத்தையும் எங்களால் காணமுடியவில்லை. உங்கள் கனவான்கள் பின்பற்றிய அரசியலும், அவர்களது  சிந்தனையும்தான் இன்றும் உங்கள் புத்தியில் நிலைத்திருக்கின்றது.

தற்போதைய உங்கள் அரசியல் அறிக்கைகளையும் எழுதும் கடிதங்களையும் செயற்பாடுகளையும் பற்றிப் பலரிடம் பேசும்போது ஐயோ பாவம் அவருக்கு அறளைபேர்ந்து விட்டது, விட்டிருங்கோ  என்றுதான் எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். உங்களுக்குத் தமிழ் மக்கள் மீது அக்கறை இருக்குது என்றோ… நீங்கள்தான் சிறந்த அரசியல்வாதி என்றோ… இலங்கை அரசியல் குறித்த சிந்தனைவாதி என்றோ யாருமே பேசுவதில்லை. இலங்கை அரசியலில் இருந்து வலு கெதியில் காணாமற் போகக்கூடியவர்களில் நீங்களும் ஒருவர் என்பது எங்களைப்போலவே அனைவருக்கும் தெரியும்.

பிரதான அரசியல் கட்சிகள் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை எடுக்கத் தவறின் வரலாறுகாணாத அபத்தம் தமிழ் மக்களுக்கு எற்படும் என்று சொல்கிறீர்கள். எது ஐயா பிரதான அரசியல் கட்சி? சாதிரீதியாகப் பிளவுபட்டுக்கிடக்கும் தமிழ்சமூகத்தில் பையப்பைய எண்ணெய் ஊற்றிய அமிர்தலிங்கத்தை தலைவராகக் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியா? அன்று சங்கானையில் சாதியப் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்தபோது அங்கே நடப்பது சாதியப்போராட்டம் அல்ல அது ‘சங்காய்’ பிரச்சனை கொம்யூனிஸ்ட்டுக்களினால் தூண்டிவிடப்பட்ட பிரச்சனை என்று அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் பேசினாரே அவர்தானே சங்கரி ஐயா உங்கள் மதிப்பு மிக்க கனவான்!! உங்கள் ‘ஈழத்துக் காந்தியும், தந்தையுமான’ செல்வநாயகம் அவர்கள் தனது தொகுதியிலுள்ள ஆலயப்பிரவேசத்திற்காக (மாவிட்டபுர கந்தசுவாமிகோயில்) தலித் அமைப்புக்கள் போராடியபோது என்ன செய்தார்!!  ”நான் ஒரு கிருஸ்தவனாக இருப்பதால் இந்த விடயத்தில் தலையிட முடியாது என்றல்லவா சொல்லி  ஓடி ஒழிந்து கொண்டவர்.  சங்கரி ஐயா அவர்களெல்லாம்  உங்களுக்கு கனவான்களாகவும், தந்தையாகவும், ஈழத்துக் காந்தியாகவும், மதிப்பு மிக்கவர்களாகவும் இருக்கலாம் ஆனால்  தலித் சமூகத்தினர்களுக்கும், மலையக மக்களுக்கும், முஸ்லிம் சமூகத்தவர்களுக்கும், அவர்களது வாழ்வியல் மேம்பாட்டிற்கும் விரோதமாக செயல் பட்டவர்கள்தான் உங்கள் மதிப்பு மிக்க கனவான்கள்.

அமிர்தலிங்கமும் யோகேஸ்வரனும் கொழும்பில் வைத்துப் புலிகளால் கொல்லப்படுவதற்கு ஒருமாதத்திற்கு முன் இரண்டுதடவைகள் யோகேஸ்வரன் மாங்குளம் வழியாகப் பாண்டியன்குளம் வந்து புலிகளைச் சந்தித்து விட்டுப்போவனவர்தான். அப்போது வவுனிக்குளத்தில் வந்து தங்கியிருந்த புலியான விசு தான் அந்த இருவரையும் கொழும்பு சென்று பலியெடுத்தவர். கூட்டிக்கழித்துப் பாருங்கள் என்ன நடந்திருக்குமென்று. அதுசரி கடந்த இரண்டு வருடமாக யுத்தம் உச்சத்திற்குப் போன காலத்திலும் இறுதி மே மாதத்திலும் நடக்காத அபத்தமா இனி நடக்கப் போகுது ஏனய்யா ஒன்றுமில்லாதததிற்குப் பயப்படுகிறீர்கள்.

இதுவரை நீங்கள் செய்த எல்லா அநியாத்தையும் விட மிகக் கேவலமானது இந்தமுறை தேர்தலில் நிற்கும் சுயேட்சைக் குழுக்களை வாபஸ் வாங்கச் சொல்வது. இதுதான் கடந்த 30வருடமாக ஆயுத முனையில் புலி சொல்லி வந்தது. பாவம் உங்களுக்கு வயசாகி விட்டது மன்றாடிக் கேட்கிறீர்கள்.  ஆனால் சூழல் இன்று அப்படியில்லை.  ஒன்பது இடத்திற்காக 320 பேர்கள் தேர்தலில் நிற்கமுடிகிறது. புலிகள் இருந்த காலத்தில்  இது சாத்தியமாகியிருக்காது என்பது யாருக்கும் தெரியும். ஆனால் நீங்களோ அதே பாழ்பட்ட நிலையை இன்றும் விரும்புகிறீர்கள். பின்ன என்ன கோதாரிக்கு பிரபாகரனை ஜனநாயகத்திற்கு வாங்கோ தம்பி என்று ஓயாது கடிதம் எழுதிக் கொண்டிருந்தநீங்கள் ஐயா!!! ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் நாம் எவ்வளவு பேரை இழந்திருக்கிறோம். உங்கள் ஆலால சுந்தரம், தர்மலிங்கம் என்று  வந்து அண்மையில் சறோஜினி, சிவபாலன், சத்தியமூர்த்தி,பரராஜசிங்கம் என்று எத்தனை பேர். யோசித்துப் பாருங்கள்.  இந்தக் கொடுமைகளில் இருந்து விடுபட்டு ஒருவருடமும் அகவில்லை அதற்குள் உங்களது கொடுக்கைத் தூக்கிக் கட்டிக் கொண்டு கிளம்பிவிடடீர்கள்.

1960களில் சாதிவெறிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த சிறுபான்மை மகாசபையினது அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க மறுத்த  சாதிகாப்பாற்றும் பத்திரிகையான உதயன் உங்களிடம் பேட்டி எடுத்துப் போடுகிறது. நீங்கள் தானாம் தமிழ் மக்களுக்கு சேவை செய்ய வந்த கனவான். ‘தூ’…வெட்கமாயில்லை.

நீங்கள் சொல்லுகின்ற தமிழ் மக்கள்  என்று சொல்லுக்குள் தாழ்த்தபட்ட சமூகம் வருமா? அவர்களது பிரச்சனைகள் நீங்கள் சொல்லுகின்ற தமிழ் மக்கள் பிரச்சனைகள் என்பதற்குள் அடங்குமா என்று முதலில் சொல்லுங்கள். நீங்கள் ஜேர்மனிக்கு தீர்வுத்திட்டம் குறித்து பேசவந்த போது பார்த்தோம் தானே சாதி ஒடுக்குமுறை குறித்த உங்கள் அறிவை. நாம் யாழ்மேலாதிக்கத்தின் மேட்டுக்குடி அரசியல் பற்றி விவாதிக்கும்போது ‘அங்கு மேடும் இல்லை பள்ளமும்’  இல்லை என்று காமெடி பண்ணிநீங்களே ஞாபகம் இருக்கா?

”ஒரு காலத்தில் நாடாளுமன்றில் கௌரவமான கனவான்கள் அங்கத்துவம் வகித்தார்கள். அத்தகையவர்களோடு சேர்ந்திருந்தது பெருமையாக இருந்தது”.என்று சொல்லுகின்றீர்களே யார் அந்தக் கனவான்கள்? யாருக்காகாக பாராளுமன்றம் சென்றார்கள். தங்கள் நலன்களுக்காகவே இனவாதம் பேசி அரசியல் நடத்தியவர்கள்தான் உங்கள் கனவான்களும் நீங்களும். உங்களுக்கென்ன கொழுப்பு  சுயேட்சையாக போட்டியிடுபவர்களை விலகச்சொல்லிக் கேட்பதற்கு. இதைத்தானே பிரபாகனும் செய்து கொண்டிருந்தார். எந்த அர்த்தத்தில் சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள் என்று கூறுகின்றீர்கள்.  இது உங்கள் சாதிய மேட்டுக்குடி மனப்பான்மையின் வெளிப்பாடுதான் என்பது எமக்குப் புரியாததல்ல. உங்கள் மேட்டுக்குடிக் கனவானகள் 60 களில் நடந்த சாதிய எதிர்ப்புப் போராட்டங்களை எப்படி கொச்சைப்படுத்தினார்கள் என்றும் எமக்குத் தெரியும். கடந்தகாலங்களில் உங்கள் கனவான்களான அப்புக்காத்து அரசியல் வாதிகள் எமது தலித் சமூகத்திற்கும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்காகவும் என்ன அரசியலை வெட்டிப்புடுங்கினவர்கள். தலித் தலைமைகளும்,சிங்கள, தமிழ் இடதுசாரிகளும் மேற்கொண்ட அரசியல் வேலைகளுக்கு மிகஇடையூறு புரிந்துவந்தவர்கள் தானே உங்கள் கனவான்கள். அந்த அனுபவங்களும் ஏமாற்றங்களுமே இன்று தலித் சமூகமான நாங்கள் சுயேட்சையாக போட்டியிடவேண்டிய தேவையைக் கொண்டுவந்தது. நீங்க வேற ‘ஆக்களய்யா’ நாங்க வேற ஆக்களய்யா.

ஐயா ஆனந்த சங்கரி அவர்களே நீங்களும் உங்கள் கனவான்களான செல்வநாயகமும், ஜீ.ஜீ பொன்னம்பலம் போன்றவர்கள் செய்த அரசியல் எனிமேல் எங்களிடம் எடுபடாது. நீங்கள் இன்னமும் சிங்களமக்களையும் தமிழ் மக்களையும் பிரித்தாளும் நோக்கத்தில்தான் தொடர்ந்தும் செயல்பட முனைகின்றீர்கள். பிரபாகரன் எனும் சூரியக் கடவுள் சொன்னார் நான்தான் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதியென்று. அதுக்கு நாங்களும் பயந்தனாங்கள் தான் ஏனெனில் பிரபாகரனிடம் கொடுமையான ஆயுதங்களெல்லாம் இருந்தது. அதனால பிரபாகரனுக்கும் சொல்வதற்கு துணிவு இருந்தது.  என்ன தினாவெட்டு இருந்தால் எனக்குத்தான் பாராளுமன்றம் செல்வதற்கு தகுதி இருக்குகென்று சொல்லுவீர்கள்.   உந்த அப்புக்காத்து அரசியல் எனிமேல் எடுபடாது கண்டியலே. உங்களுக்கு ஒரே ஒரு தகுதி மட்டும்தான் இருந்தது அதுதான் பிரபாகரனுக்கு கடிதம் எழுதுவது. அந்த வேலையும் எனிமேல் உங்களுக்கு இல்லை.

ஐயா  உங்களுக்கு கிடைக்கும் 300⁄400வாக்குகளில் பெரும்பாலான வாக்குகள் எமது தலித் சமூகத்தின் வாக்குகளாகத்தான் இருக்கும் என்று நாம் நம்புகின்றோம்.  திரு. செல்லன் கந்தையா அவர்கள் உங்களுடன் கொண்டிருக்கும் நட்பே அதற்கு காரணமாக இருக்கும்.



உதயன் பத்திரிகைக்கு  திரு. ஆனந்த சங்கரி அவர்கள் வழங்கிய பேட்டி (நன்றி  தேனீ)http://www.thenee.com/html/270310.html

Monday 17 November 2014

கற்சுறாவுக்கும் விசர்...






1.தலைக்கு ஒரு தலையணை போல் ஆளுக்கொரு தொகுப்பைக் கவிதையாய்க் கொண்டலையும்  ஒரு கிரகத்தில்  உன்னை வாழ நிர்ப்பந்தித்தால் நீ உன் மொழியைத் தொலைப்பாய் முதலில். மெல்ல அது நழுவி உன் உடலெங்கும் பரந்து ஒரு வியாதிபோல் துரத்தித் துரத்தி உன் நினைவை அழிக்கும்.  

2.அப்பனிடமிருந்து மகனுக்கு பரிமாறப்படும் ஒரு பரம்பரைத் தொழிலைச் செய்வது போல் கவிதை தனது கவிதையை இழந்து கவிதையாகி நிற்கும். அப்போதுதான் கவிஞன் என்பவன்(ள்) ஒரு தமிழ்"வாச்சர்"ஆகவோ அல்லது ஒரு சங்கக்கடை மனேச்சராகவோ வந்து நிற்கும் நிலை உருவாகிறது. இங்கிருந்துதான் கவிதைக்கு மங்குசனி உருவாகிறது.

3.நீரிலிருந்து தொடங்கிய உனது வார்த்தை என்னில் கசிந்த பொழுது எனது நா வழுவழுத்தது. சொல்லற்றுப்போன போது கண்களால் வார்த்தைகளை உனக்குள் சாற்றினேன். நீ என்னை மன்னித்தாயா என் சின்ன மலரே...?  ஒரு பூவின்  சருகோடு சுருட்டியபடி குருசும் கொஞ்சம் மஞ்சளும் இன்னும் என் கையில் மீதம் இருக்கிறது. உனக்குத் தெரியுமா அதன் பாரம்? இருபத்தியெட்டுவருசமாக அதனைக் காவித்திரியும் எனக்கு சலித்துவிட்டது. எதாவதொரு தடவை என்னை அது காக்கும் என்ற உனது நம்பிக்கையைத் தொலைத்துவிட இன்னும் என்னால் முடியவில்லை.கனத்தையும் பாராது காவித்திரிகிறேன். ஆனால் என் சின்னமலரே எனக்குச் சலித்து விட்டது. எங்கேனும் ஒரு கடலில் எங்கேனும் ஒரு சமாதியில் உன்னைக் கைவிட்டது போல் அதனையும் நான் கைவிடவிவேண்டும். வழிமாறாதிருக்க காட்டை முறித்து அடையாளமிட்டது  போல்  வந்த வழியெங்கும் அடையாளமிட முடியவில்லை.  நீரை முறித்து கருகவைக்க முடியாது இலைகளைப்போல்.நீர் நனைத்த தெருக்களில்  வார்த்தைகள் எப்போதும் இளவாளித்துக் கொண்டேயிருக்கிறது.
 கணச்சூடு மொய்த்த என் பிஞ்சுடலைப் பிரித்தெடுத்து  ஒரு கொடுதாயாய் ஏன் தத்துக் கொடுத்தாய்? உடலின் மொச்சைகளில் தானே வாழ்வின் ருசி அதிகம். என்னை விட்டெறிந்த வழிகளில் முறித்துமடித்த காடாய்  தாய்களின் கால்கள். நான் நடக்கும் புதியதெருக்கள் எங்கும்  என் சின் மலரே உனது அம்மாக்களின் கால்கள் முளைத்து நிற்கின்றன. கால்களின் கீழே கண்ணாடி நீர்ப் படிகம். கண்ணாடியில் உடைந்து நீரில் நனைகிறது அவர்களது கால்கள். என் சின்னமலரே உன் கால்கள் எங்கே நனைகின்றன.பற்றிப்பிடித்து கேட்க ஆயிரத்தெட்டுக் கேள்விகள் என்கைகளில் இருக்கிறது.


4.தெறிப்பில் சிதறிய
கண்ணாடிச் சில்லுக்குள்
குலைந்த உரு.
மனக் கண்ணாடி
சிதறாது.
குலையா மனதிற்குள்
தெறியா- துரு.

5.இருளில் கைவைத்து
சுவரைப்பிடித்தேன்.
கையில் நிழல்.
பின்னால் 
மனதிற்குள் நிலைகுத்தி நின்றது சுவர்.
இருளுக்கும் நிழலுக்கும்கருமை வேறு.
கண்ணாடி வெளியே நான்
உள்ளே இருள்.

6.கண்ணாடிக்குள்ளிருந்து
திறந்தது கண்.
வில்லையில்
படரும் கனவை விதைத்து
குவித்த விம்பம்
கண்ணைப் பற்றியது.
உருமாற உருமாற 
ஓவியம்
அழியாகல்லாய்
உடலை நினைத்து
நனைத்தது.

7.மழைநீர் ஊறித்தெறித்து
வழிந்தது.
கண்ணாடியில் 
மறுபுறமும் உட்புறமும்
எதிர்ச்சுவாலை.
சுவாசம் முழுவதும் 
கண்ணாடிச் சில்லு.
8.
கடவுள் கைவிட்டார்
நான் கைவிட்டேன்.
விட்ட கைவழி
நகர்ந்து கல்லைப் பற்றி
கடவுள் எழுதினார்,
கடவுள் கைவிடார்.
கடவுளை
கடவுளின் பின்னிருந்த கருங்கல்லை-க்
கடவுளாய்க் கண்ட கருங்கல்லை
நான் விட்டேன்
கடவுள் கைவிடார்.

நன்றி
உரையாடல்