Monday 17 November 2014

கற்சுறாவுக்கும் விசர்...






1.தலைக்கு ஒரு தலையணை போல் ஆளுக்கொரு தொகுப்பைக் கவிதையாய்க் கொண்டலையும்  ஒரு கிரகத்தில்  உன்னை வாழ நிர்ப்பந்தித்தால் நீ உன் மொழியைத் தொலைப்பாய் முதலில். மெல்ல அது நழுவி உன் உடலெங்கும் பரந்து ஒரு வியாதிபோல் துரத்தித் துரத்தி உன் நினைவை அழிக்கும்.  

2.அப்பனிடமிருந்து மகனுக்கு பரிமாறப்படும் ஒரு பரம்பரைத் தொழிலைச் செய்வது போல் கவிதை தனது கவிதையை இழந்து கவிதையாகி நிற்கும். அப்போதுதான் கவிஞன் என்பவன்(ள்) ஒரு தமிழ்"வாச்சர்"ஆகவோ அல்லது ஒரு சங்கக்கடை மனேச்சராகவோ வந்து நிற்கும் நிலை உருவாகிறது. இங்கிருந்துதான் கவிதைக்கு மங்குசனி உருவாகிறது.

3.நீரிலிருந்து தொடங்கிய உனது வார்த்தை என்னில் கசிந்த பொழுது எனது நா வழுவழுத்தது. சொல்லற்றுப்போன போது கண்களால் வார்த்தைகளை உனக்குள் சாற்றினேன். நீ என்னை மன்னித்தாயா என் சின்ன மலரே...?  ஒரு பூவின்  சருகோடு சுருட்டியபடி குருசும் கொஞ்சம் மஞ்சளும் இன்னும் என் கையில் மீதம் இருக்கிறது. உனக்குத் தெரியுமா அதன் பாரம்? இருபத்தியெட்டுவருசமாக அதனைக் காவித்திரியும் எனக்கு சலித்துவிட்டது. எதாவதொரு தடவை என்னை அது காக்கும் என்ற உனது நம்பிக்கையைத் தொலைத்துவிட இன்னும் என்னால் முடியவில்லை.கனத்தையும் பாராது காவித்திரிகிறேன். ஆனால் என் சின்னமலரே எனக்குச் சலித்து விட்டது. எங்கேனும் ஒரு கடலில் எங்கேனும் ஒரு சமாதியில் உன்னைக் கைவிட்டது போல் அதனையும் நான் கைவிடவிவேண்டும். வழிமாறாதிருக்க காட்டை முறித்து அடையாளமிட்டது  போல்  வந்த வழியெங்கும் அடையாளமிட முடியவில்லை.  நீரை முறித்து கருகவைக்க முடியாது இலைகளைப்போல்.நீர் நனைத்த தெருக்களில்  வார்த்தைகள் எப்போதும் இளவாளித்துக் கொண்டேயிருக்கிறது.
 கணச்சூடு மொய்த்த என் பிஞ்சுடலைப் பிரித்தெடுத்து  ஒரு கொடுதாயாய் ஏன் தத்துக் கொடுத்தாய்? உடலின் மொச்சைகளில் தானே வாழ்வின் ருசி அதிகம். என்னை விட்டெறிந்த வழிகளில் முறித்துமடித்த காடாய்  தாய்களின் கால்கள். நான் நடக்கும் புதியதெருக்கள் எங்கும்  என் சின் மலரே உனது அம்மாக்களின் கால்கள் முளைத்து நிற்கின்றன. கால்களின் கீழே கண்ணாடி நீர்ப் படிகம். கண்ணாடியில் உடைந்து நீரில் நனைகிறது அவர்களது கால்கள். என் சின்னமலரே உன் கால்கள் எங்கே நனைகின்றன.பற்றிப்பிடித்து கேட்க ஆயிரத்தெட்டுக் கேள்விகள் என்கைகளில் இருக்கிறது.


4.தெறிப்பில் சிதறிய
கண்ணாடிச் சில்லுக்குள்
குலைந்த உரு.
மனக் கண்ணாடி
சிதறாது.
குலையா மனதிற்குள்
தெறியா- துரு.

5.இருளில் கைவைத்து
சுவரைப்பிடித்தேன்.
கையில் நிழல்.
பின்னால் 
மனதிற்குள் நிலைகுத்தி நின்றது சுவர்.
இருளுக்கும் நிழலுக்கும்கருமை வேறு.
கண்ணாடி வெளியே நான்
உள்ளே இருள்.

6.கண்ணாடிக்குள்ளிருந்து
திறந்தது கண்.
வில்லையில்
படரும் கனவை விதைத்து
குவித்த விம்பம்
கண்ணைப் பற்றியது.
உருமாற உருமாற 
ஓவியம்
அழியாகல்லாய்
உடலை நினைத்து
நனைத்தது.

7.மழைநீர் ஊறித்தெறித்து
வழிந்தது.
கண்ணாடியில் 
மறுபுறமும் உட்புறமும்
எதிர்ச்சுவாலை.
சுவாசம் முழுவதும் 
கண்ணாடிச் சில்லு.
8.
கடவுள் கைவிட்டார்
நான் கைவிட்டேன்.
விட்ட கைவழி
நகர்ந்து கல்லைப் பற்றி
கடவுள் எழுதினார்,
கடவுள் கைவிடார்.
கடவுளை
கடவுளின் பின்னிருந்த கருங்கல்லை-க்
கடவுளாய்க் கண்ட கருங்கல்லை
நான் விட்டேன்
கடவுள் கைவிடார்.

நன்றி
உரையாடல்



No comments:

Post a Comment