Sunday 16 June 2019

சாதியால் சுட்ட வடு- கற்சுறா

 
 

“நினைவழியா வடுக்கள்”

சிவா சின்னப்பொடி அவர்களது நூல்  குறித்து…
வெளியீடு: விடியல் பதிப்பகம்
 
 
 
 
தீயினால் சுட்ட வடு ஆறும்
நாவினால் சுட்ட வடு ஆறும்
நடுத்தெருவில் இழுத்து வந்து
நாய் போல சுட்ட வடுஆறும்
ஆறாது
சாதியால் சுட்ட வடு.
 
என்று சாதியின் வடுக் குறித்து எழுதியும் பேசியும் வருகிறோம். இப்போது சிவா சின்னப்பொடி அவர்களது “நினைவழியா வடுக்கள்” என்ற நூலின் அத்தனை பக்கங்களிலும் அது துல்லியமாகத் தெரிந்து விடுகிறது.
 ஈழத்தில் சாதியால் தீண்டிய வடுக்கள் ஒவ்வொரு தெருவிலும் ஆறாது ஆழமாய்ப் பதிந்து போய்க் கிடக்கிறன. பிரதானமாக தமிழர்களது கலாசாரப் பூமி என்றவாறாக ஆதிக்கசாதிகளால் அடையாளம் இடப்படும் யாழ்ப்பாண மண்ணில் அதன் வடுக்கள் அதிகமாகத்தான் இருக்கின்றன.
சாதி வெறி என்பதனை எந்தத் தருணத்திலும் ஆதிக்க சாதிகளால் விட்டுக் கொடுக்க முடியாது என்பதற்கு உதாரணமாக  இறுதி யுத்தத்தின் பின் “மெனிக் பார்ம்” முகாமில் தாழ்த்தப்பட்டவர்களோடு சேர்ந்து இருக்கமுடியாது, சேர்ந்து சமையல் செய்ய முடியாது  என்று தனிப்பிரிவு கேட்டு சண்டையிட்ட சாதிவெறி கொண்டவர்களது ஆக்கினையைக் குறிப்பிட்டுச் செல்லிவிடமுடியும்.
மரணத்திற்குள் வாழ்ந்து மரணத்திற்குள்ளே வாழ்வைத் தொலைத்தாலும் சாதி காப்பாற்றும் சமூகம் நம்முடைய சமூகம் என்பதற்கு இதைவிட வேறு என்ன வியாக்கியானத்தைச் சொல்லிவிடமுடியும்.
இந்த நூலில் சிவா சின்னப்பொடி அவர்கள் தன்னுடைய வாழ்தலில் தான் நேரடியாக அனுபவித்த கொடுமைகளையும் தன்னுடைய முன்னோர்கள் அனுபவித்த கொடுமைகளையும்  தனது பாட்டனுக்கூடாகவும் தனது தாய் தந்தையருக்கூடாகவும் கேட்டு அறிந்து இந்த ஈழத்தமிழ்ச் சமூகத்திற்குமுன் பதிவு செய்திருக்கிறார். இற்றைக்கு 70, 80 வருடங்களுக்கு முன்னர் எப்படியான சாதியக் கொடுமைகள் இருந்தன. தனது முன்னோர்கள் எப்படியான துன்பங்களையெல்லாம் அனுபவித்தார்கள் என்று சொல்வதுடன்  கொடுமைகளில் இருந்து மூர்க்கத்துடன்  மீண்டுவர என்னவெல்லாம் செய்ய வேண்டியிருந்தது என எழுதிச் செல்கிறார்.
தாழ்த்தப்பட்டவர்கள் என அடையாளம் இடப்பட்டவர்கள் கோவில்களில் உள் நுழையக் கூடாது  கிணற்றில் தண்ணீர் அள்ளக் கூடாது பாடசாலைகளில் ஒன்றாக இருக்ககூடாது என்றும் தேனீர்சாலைகளில்  தனிக்குவளை வைத்தும் தமது வீடுகளில் அழுக்குகளைச் சுத்தம் செய்ய வைத்தும் தமது பிணங்களைக் காவ வைத்தும் யாழ்ப்பாணத் தேச வழமைச் சட்டம் வைத்திருந்த  இந்தக் ஆதிக்க சாதிக்கூட்டம், தாம் புலம்பெயர்ந்த போது இம்மியும் பிசகாது தம்முடன் சாதியையும்  காவிக் கொண்டு போனவர்கள்.  இப்போது ஈழத்தில் தமது காணிக்குள்ளும் தமது ஊருக்குள்ளும் புதுப் புதுக் கோவில்களைக் கட்டியபடி அதே ஆதிக்க மனநிலையோடு  ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். முன்பு கோவில்களைக் கொண்டு எப்படி தமது அதிகாரத்தை முன்னிறுத்தியிருந்தனரோ அதனை மறந்து விடாது முன்நிறுத்த  இன்னொரு வியூகம் அமைக்கின்றனர்.
ஈழயுத்தகாலத்தில் கூட சிதிலமடையாது சாதி மனோபாவத்தை உள்ளாரப் பாதுகாத்திருந்த அதிகார வர்க்கம் மீளத் தன்னுடைய அதிகாரத்தை மெல்ல மெல்ல ஆலயங்களுக்குள்ளால் தக்கபடி வடிவமைத்துவிடத் தயார் செய்து கொண்டிருக்கிறது.
சில மாதங்களின் முன்னர் ஈழத்தின் கோயில்களின் தேரினை ஒடுக்கப்பட்டவர்கள் தொட்டு இழுத்துவிடக் விடக் கூடாது என்ற சண்டையில் இராணுவத்தைக் கொண்டு இழுத்த கதையையும் இயந்திரத்தைக் கொண்டு இழுத்த கதையையும் நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.
 
 
- நினைவழியா வடுக்கள் எனும் இந்த நூலில் தான் கல்விகற்ற ஆரம்பப் பாடசாலையில் சாதிவெறிபிடித்த ஆசிரியர்களால் தான்பட்ட துன்பங்களை விபரித்திருக்கும் சிவா சின்னப்பொடி அவர்கள் அதிலிருந்து தப்புவதற்காக கந்த முருகேசனிடம் கல்விகற்கப் போகிறார். அதனால் சாதிவெறியர்களிடமிருந்து கந்த முருகேசனார் வாங்கும் வசவுகள் துன்பங்கள் பற்றி விபரிக்கிறார். கந்த முருகேசனரின் தெளிவும் சமூக அக்கறையும் சாதிய விடுதலைக்கான முன்முனைப்பும் தனக்குள் விதை விடும் அளவிற்கான அறிவுரைகளும் தனது சிந்தனையில் மாற்றத்தைக் கொண்டு வந்ததில் முக்கியமான தருணம் என்று சொல்கிறார்.
 - கந்த முருகேசனாரின் திண்ணைப்பள்ளிக்குச் சென்ற சிறுவனான சிவா சின்னப் பொடி பின்னர் அரச பாடசாலையில் சேர்கிறார். அங்கே  சாதிய வெறிக்குள் தினமும் முகம் கொடுக்க ஏற்படுகிறது. தந்தைக்கிருந்த சாதிய விடுதலைக்கான கருத்துத் தெளிவு மற்றும் அவர் சார்ந்து இயங்கிய நண்பர்கள் தோழர்களது சிந்தனைகளால் இயல்பாக அவருக்குள் ஏற்படும் எதிர்ப்புணர்வு அவரைப் பள்ளியில் இருந்து கலைக்க வைக்கிறது. படிப்பதற்காக ஏங்கும் ஒரு சிறுவனாக இருக்கும் அவர் சாதியவெறிகொண்ட ஆசிரியர்களால் மக்கோனாவுக்கு( சிறுவர் சீர்திருத்தப்பள்ளி இருக்கும் இடம்) அனுப்ப பொலீசில் பிடித்துக் கொடுக்கப்படுகிறார்.  பின் விடுதலையாகிய போதும் படிப்பதற்குப் பாடசாலைகள்  மறுக்கப்படுகின்றன.
- ஒருமுறை தனது தங்கை பிறக்க இருந்த காலத்தில் தந்தையுடன் இணுவில் ஆஸ்பத்திரிக்குச் செல்கிறார். இணுவிலில்  ஒரு சாப்பாட்டுக்கடையில் சாப்பிட்டு கைகழுவப்  போன இடத்தில் தந்தையின் கையிலிருந்த மரமேறிய தழும்பைப் பார்த்து விட்டு  ஒரு ஆதிக்க சாதி வெறியன் “நீ என்ன கீழ்சாதியா?” எனக் கூச்சலிட்டு முதலாளியுடன் சேர்ந்து அடித்து வதை செய்த பின் தந்தைக்கும் மகனுக்குமான தண்டனையாக  மிகப்பெரிய தொகை விறகைக் கொத்தி அடுக்கும்படி செய்கிறார்கள். அந்த வதையினை அவர் எழுதியிருக்கும் வரிகள் ஈழத்தின் சாதிவெறிநிலம் எரிந்து சாம்பலாகவே வேண்டும் அது எக்காலத்திலும் மீளவே கூடாது என எண்ணத் தோன்றும். நீங்கள் அனைவரும்( உங்களில் யாராவது சாதி வெறியராக இருந்தால் கூட) கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் இது எனச் சொல்லிக் கொள்கிறேன்.
 - இயல்பிலேயே கலை ஆர்வம் கொண்ட தமது சமூகத்திற்குள் பிளவுகளை ஏற்படுத்தி சகோதரச் சண்டைகளை சகோதரக் கொலைகளை திட்டமிட்டு  உருவாக்கிவிட்ட ஆதிக்கசாதிகளின் வஞ்சனையைத் துல்லியமாகக் குறிப்பிடுகிறார். 
-தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்கள் வாழும் வீடுகள் ஆதிக்க சாதிகளின் தரத்துக்கு இருக்கக் கூடாது என்ற யாழ் தேச வழமைச் சட்டத்தை மீறி தனது சமூகம் எப்படியான போராட்டங்களை நடத்தியது. மேற்சட்டை போடுவதற்கான உரிமையை எப்படித் தனது சமூகம் போராடிப் பெற்றது எனக்  “கல்வீட்டுப் போராட்டம்” “மேற்சட்டைப்  போராட்டம்” என்பவற்றை விளக்கிச் செல்கிறார்.
 - சாதிரீதியாக ஒடுக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்காக ஆதிக்கசாதிகள் எவ்வகையான நூதனமான வேலைகளை பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் பதியப்படும் வேளைகளில் செய்தார்கள் என்பதனை விளக்கிச் செல்லும் சிவா. சாதி என்று குறிப்பிடப்பட்ட இடத்தில் இலங்கை  நாடாளுமன்றத்தில் சமூகக் குறைபாட்டுச் சட்டம் கொண்டுவரப்பட்ட பின்பு தேசிய இனம் என்று மாற்றப்பட்டது.  இந்த மாற்றம் வந்த பின்பு அதில் இலங்கைத் தமிழர் என்று எழுதப்பட்டிருந்தால் மேல் சாதியினர் என்றும் இலங்கைத் தமிழ் என்று எழுதப்பட்டிருந்தால்  அது இடை நிலைச் சாதி என்றும்இலங்கைத் தமிழன் என எழுதப்பட்டிருந்தால்  அது சாதிரீதியாக ஒடுக்கப்பட்டவர்களைக் குறிக்கும் என்றும் அப்போது இருந்த ஆதிக்க வெறியின்  தந்திர விளங்கப்படுத்தலை அவர் தெளிவுறச் சொல்கிறார். இது ஒரு மிக முக்கியமான பதிவு என நான் கருதுகிறேன். ஆதிக்க சாதித் திமிர் என்பது எப்படி ஒவ்வொரு நுண்ணிய தளங்களிலும் சட்டங்களையும் சமூக விழுமியங்களையும் கேலிக் கூத்தாக்கி மேவி நின்று வெறியாடியது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
- அதனை விடவும் வெள்ளாள நிலக்கிழார் வீட்டுப் பெண்களுக்கு அவர்களது தாய்வீட்டில் அடிமை வேலைசெய்து வந்த ( நான் சேவகம் என்ற சொல்லைத் தவிர்க்கிறேன்) நளவர் சமூகத்துப் பெண் ஒருவரையும் பள்ளர் சமூகத்துப் பெண் ஒருவரையும் கோவியர் சாதிப் பெண் ஒருவரையும் சீதன வரிசையில் சேர்த்துவிடும் நிலைதான் இருந்தது என்பதைச் சொல்வதோடு சாதிய சமூகத்தில் ஒரு ஆதிக்க சாதியினது  மரண ஊர்வலம் என்பதும் அப்பட்டமான அடிமை முறையின் வெளிப்பாடாக இருப்பதனையும் சுட்டிக்காட்டுகிறார்.
இன்றும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் எச்சம்,விட்டுவிலகிவிட முடியாதபடி சொச்சமாக, மரணவீடுகளில் சாதியை ஒரு அடையாளமாகவேனும் நிகழ்த்திவிட வேண்டியிருப்பதனை நாம் கண்டு வருகிறோம் தானே.
-யாழ்ப்பாணத்து பாடசாலைகளிலும் ரியூசன் சென்டர்களிலும் நடைபெறும் உரையாடல்களில் ஒடுக்கப்பட்ட மாணவர்களினைப் பிரித்துச் சொல்லும் குறியீடாக சோடியம்(Na) என்றும் பொஸ்பரஸ்(P) என்றும் இருக்கும் கேவலமான நடைமுறையை அவர் குறிப்பிடுகிறார். நளவன் என்றோ பள்ளன் என்றோ வெளிப்படையாகச் சொல்ல முடியாத சூழலில் இந்தக் குறியீட்டுச் சொல்லைக் கொண்டு அடையாளம் இட்டுவிடும் நிலையினை அந்த யாழ்ப்பாண இளையசமூகம் கைக்கொண்ட தந்திரம் அசிங்கமானது.
 
-சாதிய சமூகமான ஈழத்தமிழ்ச் சமூகம், அதிலும் இறுக்கமான சாதிய வெறியுடன்  காலந்தள்ளிய யாழ்ப்பாண சமூகத்தின் அரசியல் கட்சிகளாக இருந்த தமிழரசுக்கட்சியும் தமிழ்க் காங்கிரசும் எப்படி தமது வாக்குகளுக்காக  இரண்டு பிரிவாகவே தமிழ் சமூகத்தை கண்கொண்டு பார்த்தார்கள் என்பதனை அனைத்து விளங்கப்படுத்தல்களுடனும் சொல்லிவரும் சிவா சின்னப்பொடி இடது சாரிச் கொள்கைகளுடன் இயங்கிய பலரது செயற்பாடுகளாலும் சிந்தனை முறையாலும் பல மாற்றங்களை முன்நகர்த்த முடிந்தது எனச் சொல்கிறார். அதில் பொன். கந்தையா அவர்களது பல செயற்பாடுகளை முன்நிறுத்தும் அவர் கல்வியில் முன்னேறுவதன் மூலமே ஆதிக்க சாதித் திமிரை அடித்து நொருக்க முடியும் என  அறை கூவி நின்றவர்களாக கந்தமுருகேசனாரையும் பொன். கந்தையா அவர்களையும் அடையாளமிடுகிறார்.
-பொன். கந்தையா அவர்களது மேடைப் பேச்சு ஒன்றைப்பற்றிக் குறிப்பிடும் இடம் முக்கியமானது. 
“ உங்களுடைய பூட்டன் மாரிடம் ஒரே ஒரு நாலுமுழ வேட்டி இருந்தது. அதன்  ஒரு பகுதியைக் கிழித்து கோவணமாகக் கட்டிவிட்டு மீதியை உடுத்திக் கொண்டார்கள். உங்கள் பூட்டிமாரிடம் ஒரேயொரு புடவை இருந்தது. மற்றப் பெண்கள் அணியும் உள்டபாவாடையோ மற்ற எதுவுமே அவர்களிடம்  இருக்கவில்லை. அந்தச் சேலையை அவர்கள் தமது மானத்தை மறைக்க உடம்பில் சுற்றிக் கொண்டார்கள். மாதக் கணக்காக வருடக்கணக்காக அந்த ஒற்றைத் துணியைத்தான் அவர்கள் கட்டிக்கொண்டு திரிந்தார்கள். அவர்கள் தொட்டால் தண்ணீர் அழுக்காகிவிடும் என்று கிணறுகளிலும் குளங்களிலும் தண்ணிர் அள்ளத் தடை விதித்தார்கள். அதனால் அவர்கள் அழுக்காக இருந்தார்கள். அவர்களைப் பார்த்து ஊத்தையர்கள் என்றார்கள். மழை வந்தால் தான் அவர்களது உடம்பில் தண்ணீர் படும் என்ற நிலை அவர்கள் காலத்தில் இருந்தது.
உங்களுடைய தாத்தாமாரிடம் 2 வேட்டிகள் இருந்தன. தனியான கோவணங்கள் கூட இருந்தன. உங்கள் பாட்டிமாரிடம் 2 சேலைகள் இருந்தன. ஆனால் அவர்களிடம் சால்வைகளோ ரவிக்கைகளோ இருக்கவில்லை. ஏனென்றால் அவற்றை அணியத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கும் கிணறுகளிலும் குளங்களிலும் தண்ணீர் அள்ளவும் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அவர்கள் தங்களுக்கென்று தண்ணீர் அள்ள துரவுகளைத் தோண்டினார்கள். இந்த நிலைமை உங்களுடைய அப்பாக்களின் காலத்திலும் இருந்தது.
இன்று உங்களிடம் பல வேட்டிகளும் சேலைகளும் சால்வைகளும் ரவிக்கைகளும் பாவாடைகளும்கூட இருக்கின்றன. கிணறுகள் நீங்கள் கட்டியிருக்கிறீர்கள். இவையெல்லாம் உங்களுக்குக் கிடைத்த சலுகைகளோ வரப்பிரசாதங்களோ அல்ல. இவையெல்லாம்  உங்களுடைய நீண்ட போராட்டத்தால் உழைப்பால் உங்களுக்குக் கிடைத்தவை.”
என்ற  அறிவுறுத்தல் பொன். கந்தையா அவர்களுடையதுஎனச் சொல்லும் சிவா, ஒடுக்கப்பட்டவர்கள் பொருளாதாரமும் கல்வியும் பெற்றுவிடவேண்டும். அப்போதுதான் சரிநிகர் சமானமாக சமூகத்தில் நிலைகொள்ளக் கைகொடுக்கும் என்பதனைத் தெளிவுபடுத்தியவர் அவர் என்கிறார்.
 
-புலம்பெயர்ந்த சூழலில் எவ்வாறு சாதிய ரீதியாக பிள்ளைகள் பெற்றோர்களால் அடையாளப்படுத்தப்பட்டு பிளவினை வளர்க்கிறார்கள். அதனை எதிர்த்த பிள்ளைகளைத் துன்புறுத்தியபோது சிறைவாசம் அனுபவித்த பெற்றோர்கள் என்று பிரான்சில் பலகதைள் இருப்பதாகச் சொல்லுகிறார். நமது கனடாவில் கூட  இதுக்கு ஒன்றும் குறைச்சலே இல்லை.
“மாதிரி யாழ்ப்பாணம்” என்று அடையாளம் இடப்பட்ட கனடாவில் எப்படியிருக்கும் என்பதனை உதாரணங்களுடன் நான் சொல்லத் தேவையில்லை. அழுக்கூறிய சாதியின் சகல சிறகுகளும் ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு மனத்திலும் ஆழப்பரவித்தான் இருக்கிறது.
நீண்ட காலத்தின் பின் தீண்டாமை குறித்து எழுதி வெளியான ஒரு நூல் இது. மிக அதிகமான தகவல்களையும் வலிகளையும் கூறும் நூலாக இருக்கிறது. அனைவராலும் கட்டாயம் கவனத்துக்குட்படுத்தப்பட வேண்டிய நூலாகவும் இருக்கிறது. இந்த நூல் குறித்து நாம் அதிகம் பேசவேண்டும். முதலில் அனைவரும் வாசிக்க வேண்டும். கனடாவில் இதற்கான ஒரு கலந்துரையாடலை யாராவது நிகழ்த்த வேண்டும். அங்கே நாம் இதுகுறித்து இன்னமும் அதிகமாகப் பேசமுடியும் என்று நினைக்கிறேன்.
இறுதியாக, நான் நினைக்கும் இன்னொரு தகவலையும் இந்த இடத்தில் பின் செருகலாகச் சொல்லிவிட வேண்டும்.
 
 
 
 
நான் சிவா சின்னப் பொடி அவர்களை மிக நீண்டகாலமாக அறிந்து வைத்திருக்கிறேன். ஐரோப்பாவில் அவரது செயற்பாடுகள் குறித்து அறிந்த போது அவர்தான் ஈழவிடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் திவாகரன் என்றழைக்கப்பட்டவர் என அறிந்ததும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.அப்போது அவர் பாரிசின் ஈழமுரசு பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். அவர் இருந்த இடம் எமக்குத் தோதான இடமாக  ஒருபொழுதும் இருந்ததில்லை. அது நமக்கு நேரெதிர்ப் புள்ளியில் இருந்தது.
இந்த நூலின் “என்னுரை” யில் அவர் “காக்கை வன்னியன் முதல் கதிர் காமர் வரை என்ற தொடர்களை மிகக் குறுகிய காலத்தில் எழுதிய நான் இந்த நூலை எழுதுவதற்கு 13 வருடங்கள் பிடித்திருக்கிறது” எனக்குறிப்பிடுகிறார்.
அவர் கை பற்றிக் கொண்டிருந்த அரசியல் நிலைப்பாடும் அவர் செயற்பட்டுக் கொண்டிருந்த எழுத்துச் சூழலும் சிந்தித்து எழுத வேண்டியதும் பொறுப்புடன் எழுத வேண்டியதுமானதாக இருந்ததில்லை. எழுதப்பட்டதும் இல்லை என்பது எனது கருத்து. அப்போது பலர் “லலித் முதல் சந்திரிகா வரை”  , “அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை” , “இமயமலை முதல் ஈழம் வரை”“அவர் முதல் இவர் வரை” என்று தமக்குரிய அரசியலுடன்  எழுதிக் கொண்டுதான் இருந்தார்கள். இப்போது “மாவிலாறு முதல் முள்ளிவாய்க்கால்” வரை என்று கதை  எழுதத் தொடங்கவில்லையா? அப்படித்தான்.
இந்த மாதிரியான எழுத்து முறைகளுக்கு  நாம் தகவல் திரட்ட வேண்டிய எந்த அவசியமும் இல்லை. எமக்கு என்ன சொல்ல வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிடலுடன் தெரிகிறது. அதனை வாசிக்கும் கூட்டமும் யார் என்பது கண்முன்னால் தெரிகிறது.அவர்களது அறிவின் அல்லது சிந்தனையின் எல்லை தெரிகிறது. இங்கே யாரும் நேரம் செலவிடத் தேவையில்லை. தகவல் தேடத் தேவையில்லை. ஒரு இரவில் பத்திரிகை அச்சிற்குப் போகமுதல்  எழுதிவிடக் கூடியவை இவை. அவற்றை எழுதுவதால் பணமும் கிடைக்கிறது என்றால் என்ன கவலை இருந்து விடப் போகிறது.
“ காக்கை வன்னியன் முதல் கதிர்காமர் வரை” என்ற தகவலை ஈழமுரசு வாசகர்களுக்கு நீங்கள்  எழுதித்தான் ஆக வேண்டுமா? அத்தனை வாசகர்களும் அந்தக் கதையைத்தானே தினமும் உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைச் சிந்திக்க வைக்க வேண்டிய எழுத்துத் தான் அப்போது தேவைப்பட்டது. அதனை ஈழமுரசுப் பத்திரிகையில் இருந்து நீங்கள் ஒருபொழுதும் எழுதிவிட முடியாது.அப்போது நீங்களும் எழுதும் சிந்தனையில் இருக்கவில்லை. நீங்கள் குறிப்பிட்டுக் கொண்டிருந்த  தமிழத் தேசியம் என்பது அல்லது தமிழர்கள் என்பது அல்லது தமிழினம் என்பது ஒன்று அல்ல அது சாதியாகவும் பிரதேசமாகவும் ஊர்களாகவும் வெறியூட்டப்பட்டுப் பிளவுண்டு  நீண்டகாலமாகக் கிடக்கிறது. அந்தப் பிளவினை  நீங்கள் பேசிக்கொண்டிருந்த தமிழ்த் தேசியம் என்பது கருத்தியல் ரீதியாக ஒருபோதும் உடைத்துவிடவில்லை. புரிதலை உருவாக்கவில்லை.
தீண்டாமைக்கெதிராக “கந்தன் கருணை”  என்ற நாடகத்தை எழுதிய என்.கே. ரகுநாதன் அவர்கள்  அப்போது “துப்பாக்கி நிழலில் சாதி மறைந்து கிடக்கிறது” என்று சொன்னார். நீங்கள் யாருமே அப்போது அதனை விளங்கிக் கொள்ளவில்லை. அதனை யாழ்ப்பாணத்தில் வட்டுக் கோட்டை சங்கரத்தையில் 1998ம் ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்ற சாதிக்கலவரம் மீள விளங்கப்படுத்தியது.ஆனால் நீங்கள் யாருமே அதுகுறித்துப் பேச முனையவில்லை. நீங்கள் பேசிவந்த தமிழ்த் தேசியத்திற்குப் பங்கம் வந்து விடும் என்று நீங்கள் நினைத்திருக்கலாம்.
நமது சமூகத்தில் உள்ளார ஊறிக்கிடக்கும் சாதிய அசிங்கம் குறித்துப் பேசினால் தேசிய விடுதலைப் போராட்டத்திற்குப் பங்கம் விளைந்து விடும் என்று நீங்கள் நினைத்துக் காத்திருந்த மவுனங்கள் எவ்விதத்திலும் பிரியோசனமற்றவை. அவை சாதிவெறியின் அத்துமீறலை இன்னொரு தளத்தில்  நிகழ்த்திக் காட்டியே தீரும். அதற்கான செயற்பாடுகள் எவை என்பது மிக முக்கியமான கேள்வி.
நீங்கள் பேசிக் கொண்டிருந்த தமிழ்த் தேசியத்தை உங்களுடன் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தவர்களே உங்களை சாதிரீதியாக அவமதித்த கதைகள் அனுபவமாக உங்களுக்கிருக்கின்றன. அவற்றை இப்போது நூலில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவற்றை நீங்கள் அப்போதே அம்பலப்படுத்தியிருக்க வேண்டும்.
பெரியார் சொல்வது போல்
நமது மொழி சாதிகாப்பாற்றும் மொழி
நமது காலாசாரம் சாதிகாப்பாற்றும் கலாசாரம்
நமது பண்பாடு சாதி காப்பாற்றும் பண்பாடு.
என்றிருக்கும் போது நமது தேசியம் மட்டும் என்ன
அதுவும் சாதி காப்பாற்றும் தேசியம்தானே.
ஈழம் என்றால் என்ன தமிழீழம் என்றால் என்ன. சாதிரீதியாக இருக்கும் பிரிவுகள் அந்தப் பிரிவுகளுடன் அரங்கேறும் வெறிகளைத் துடையாது நாம் அனைவரும் ஒன்றான இனம் என்று அடையாளப்படுத்துவதை ஒருபொழுதும் ஏற்றுக் கொள்ள முடியாது. உங்கள் நூலை முன்வைத்து நாம் இதனைப் பேசத்தான் வேண்டும் தோழர்.
இத்தனை தகவலை இப்போதாவது எழுதியதற்கு மிக்க நன்றி.
கற்சுறா
நன்றி- தமிழ்ப்பார்வை கனடா( யூன் 2019)