Friday 6 March 2020

இது தற்கொலைச் சமூகம்.

 

 

 

வணக்கம்.

இது தற்கொலைச் சமூகம்.

 

கற்சுறா



 

 

 

இங்கே நான் வாசிக்க இருக்கும் கட்டுரை புதிதாக எழுதியதல்ல. கடந்த காலங்களில் தொடர்ச்சியாக நான் எழுதிவந்த அதிகமான கட்டுரைகளின் சில உட்குறிப்புக்களே இவை.
 
தற்பொழுது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் இறந்து விட்டதாக அரசு அறிவித்து அவர்களனைவருக்கும் மரணச்சான்றிதழ் கொடுப்பதற்கு அரசு முனைந்துள்ளது.    நம்மால் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது இருக்கிறது. ஏன் ஏற்றுக் கொள்ள முடியாதிருக்கிறது? மிகக் கூர்மையான உண்மையாக அது  இருக்கும் பொழுதும் கூட நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாதிருக்கிறது.
 
நமது தேசத்தின்  ஜனாதிபதியாக இருக்கும் ஒருவர் இந்தக் கருத்தினைச் சொன்ன காரணத்தால் மட்டும் இது அதிக கவனம் பெறப்படவில்லை. இன்றைய ஜனாதிபதி அப்போதைய யுத்தகாலத்தின்  பாதுகாப்பு மந்திரியாக இருந்தவர் என்பதால் அந்த வார்த்தை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
 
நமது தேசத்தில் நடந்து முடிந்த இறுதியுத்தம். அது  ஒரு அழுகிய யுத்தம். விடுதலைப் போராட்டமாக நம்மவர்களால் கட்டியழைக்கப்பட்ட போர் முள்ளிவாய்க்காலில் அழுகிய யுத்தமாக மாறியிருந்ததை நாம் அனைவரும் கண்டிருந்தோம்.
நமக்கு வெறும் கதைகளாக அவை இருந்ததில்லை. நேரடிக்காட்சிகளாகவும் நேரடிச்சாட்சிகளாகவும் அந்த யுத்தம் நமது ஒவ்வொருவருக்கும் அருகில் இருந்தது. ஆனால் நமக்கு அருகில் இருந்தவர்கள் பலர்  அந்த அழுகிய கோர யுத்தத்தைக் கூட  வியாபாரமாக்கிக் கொண்டிருந்தார்கள் என்பதனையும் நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள்.
யுத்தம் முடிவுறும் தறுவாயில் இந்த வியாபாரிகளே மிக அதிகமாகக் கையறு நிலைக்கு வந்தார்கள். அதற்குள் இருந்த மக்களோ  மன்னாரில் இருந்து ஓடத்தொடங்கிய போதே வாழ்வின் கையறு நிலைக்கு வந்து விட்டிருந்தார்கள். அவர்களது கையறு நிலையை அனைத்து வியாபாரிகளும் கடைசிவரை தமக்குச் சாதகமாக்கியபடியே இருந்தார்கள் என்பதனை நீங்கள் அனைவரும் உணர்ந்து கொண்டிருப்பீர்கள் என்றே எண்ணுகிறேன்.
இறுதியில் அந்த அழுகிய யுத்தம் முடிந்தபின் இந்த வியாபாரிகளால் கண்டு பிடித்த வார்த்தைதான் இன்றைய “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்” என்ற வார்த்தை. இன அழிப்பு என்ற வார்த்தை அதையும் தாண்டி இப்போது மரபுத் தமிழ் - தமிழர் தொன்மம் என்ற வார்த்தைகள் எல்லாம்.
 
இந்தக்  “காணாமல் ஆக்கப்பட்டவர்கள்” என்ற சொல்லுக்கும் “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்” என்ற சொல்லுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் என்ன எனக்  கேட்டுச் சில காலம் முன்பும் எழுதியிருந்தேன்.  இதனை வெறும் கேள்வியாகவே மட்டும் பார்த்தனர் பலர்.
நமது தேசத்தில்  தனியே தமிழர்கள் மட்டும் காணாமல் ஆக்கப்படவில்லை. பல சந்தர்ப்பங்களில் சிங்கள இளைஞர்களும் காணாமல் ஆக்கப்பட்டேயிருக்கிறார்கள். தமிழர்களிடத்திலும் விடுதலைப் போராட்டம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து பலர் காணாமல் ஆக்கப்பட்டேயிருக்கிறார்கள். அவர்கள் யாருமே ஒருபோதும் மென்மையான முறையில் பவ்வியமாகக் கடத்தப்படவுமில்லை. காணாமல் ஆக்கப்படவுமில்லை.
இப்படியிருக்க முள்ளிவாய்க்காலில்  காணாமல் ஆக்கப்பட்டவர்களை மட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்  என்ற அடைமொழிச் சொல் கொண்டு அழைப்பதில் இருக்கும் தந்திரத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
 ஆம் இது தந்திரச் சொல்லே.
ஏனெனில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எமது தேசத்தின் தெருக்கள் எங்கிலும் கடந்தகாலம் முழுவதும் பரவியிருந்தபோதும் தனியே முள்ளிவாய்க்காலில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை மட்டும் அடையாளம் காட்ட உருவாக்கிய சொல்லே இது என்பதால் இதனை நான் “தந்திரச் சொல்” என்கிறேன். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று மட்டும் அடையாளம் இட்டால் அந்த வார்தைக்குள் தாங்களும் தங்கள் குற்றங்களும் மாட்டிக் கொள்ள நேர்ந்துவிடும் என நினைத்துக் கண்டுபிடித்த வார்த்தை தான் இந்த “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்” என்பது என்றே நான் கருதுகிறேன்.
 
ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்ட  காலத்திலிருந்து இயக்கங்களாலும் இலங்கை இராணுவத்தாலும் இந்திய இராணுவ காலத்திலும்  பல்லாயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறான காலங்களில் காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து  இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிப் பேசுவோர் அதீத அக்கறை கொள்வோர்  யாருமே  கரிசனை கொண்டதில்லை.
 
அப்போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து மனிதவுரிமை அமைப்புக்கள் உலகப் பெண்கள் அமைப்புக்கள் என எத்தனை அமைப்புக்கள் கேள்விகளாய்க் கேட்டும் கடத்தப்பட்ட நபர்களை காட்டச் சொல்லிக்   கேட்டும் இன்றுவரை அவற்றிற்குப் பதில்களற்றே இருக்கிறது.  கடத்தப்பட்டு உயிரோடு வைத்திருக்கும் பொழுதே அவர்கள் வீடுகளிற்குச் சென்று சடங்கைச் செய்யுங்கள் எனச் சொல்லி உயிரோடு சடங்கு செய்வித்துச் சந்தோசப்பட்ட மனநோயாளிகளைக் கொண்ட சமூகம் நம்முடையது. இப்பொழுது புதிதாகக்  காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்துக் கவலை கொள்கிறது. இந்த அக்கறை போலியானது. அது ஒருபொழுதும்   பாதிக்கப்பட்ட மக்களின் நலன் சார்ந்ததல்ல என்பதே எனது கருத்து.
 
உண்மையில் தேசவிடுதலை என்ற பெயரில் இயக்கமுரண்பாடுகளாலும் துரோகம் என்ற சொற்பதம் கொண்டும் சமூகவிரோதம் என்ற சொற்பதம் கொண்டும் கடந்த நாலு தசாப்தங்களாக நாம் எவ்வளவு எண்ணிக்கையுள்ளோரைக் காணாமல் ஆக்கியுள்ளோம்? அல்லது காணாமல் ஆக்கப்பட்டதிற்குத் துணை போயிருக்கிறோம்? அல்லது அதனைப் பார்த்தும் கோபம் கொள்ளாது  மவுனமாக இருந்திருக்கிறோம்? அவர்களுக்கு என்ன கணக்கை இன்றுவரை நாம் இட்டுள்ளோம்? இப்போது மட்டும் எங்கிருந்து இந்தக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த அக்கறை நமக்கு வருகிறது? உண்மையில் இது பொய்மையான அக்கறையல்லவா? இதில் நேர்மை இல்லாதிருக்கிறதல்லவா? இங்கே சார்பு நிலை இருக்கிறதல்லவா? நீங்கள் பேசுகின்ற அரசியலுக்காகவும் நீங்கள் காப்பாற்றி நின்ற தேசியத்திற்காகவும் முண்டு கொடுக்கும் தடியாக இன்று பாவிக்கப்படுவது ஏமாற்றுத்தனமல்லாது வேறு என்ன?
 
இன்று ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டம் என  முன்னெடுக்கப்பட்டதின் பின்னால்  பிற்போக்குத் தனம் கொண்ட தமிழ் அரசியல் வாதிகளது ஈடுபாடு இருப்பதாகவே நான் கருதுகிறேன். அதனால் தான் 100 நாட்கள் 1000 நாட்கள் என்று பின்னணி அடையாளப்படுத்தல்களுடன் இளம் விதவைகளும் தாய்மாரும் தமது வாழ்வைக் காணாமல் ஆக்கியபடி தெருவில் நிற்க வைக்கப்படுகிறார்கள். வீடியோ எடுக்கப்படுகிறது. அது அரசியலாக்கப்படுகிறது. ஆனால் இன்றுவரை அவர்களுக்குரிய குறைந்தளவு தேவை கூட நிறைவேற்றப்படவில்லை.
 
பிள்ளைகளை- மனைவிமாரை- கணவன் மாரைப் பறி கொடுத்தவர்கள் தமது சொந்தம் எங்கேயாவது இருந்து விடமாட்டார்களா என்று காத்திருக்கும் ஏக்கத்தை தமது அரசியலுக்குச் சாதகமாக்குகிறது இந்தச் சகதி கொண்டலையும் சமூகம். அவர்களது எஞ்சியிருக்கும் வாழ்வையும் காணாமல் ஆக்கிக் கொண்டிருக்கிறது. இது இன்றைய இன்னுமொரு கேவலமான செயற்பாடு.
 
நமது சமூகத்தில் உறவுகளைத் தொலைத்த ஒரு மக்களிற்கு ஒருநேசக்கரமாகக் கூட எவ்வளவோ ஆதரவை வழங்கியிருக்க வேண்டியவர்கள் எந்த முகாந்தரமும் இல்லாது திரும்பவும் அவர்களது வாழ்வைத் தொலைப்பது கேவலமானது.
 
நீங்கள் இன்று வரை பேசி வருகின்ற தேசிய அக்கறையின்படி கூட இதனை நியாயப்படுத்திவிடமுடியாது.
ஒரு கொடிய அரசுக்கெதிராக அரச இராணுவத்திற்கெதிராகப் போராடப் புறப்பட்ட ஒரு சமூகத்தை தமது குறுகிய சிந்தனையின் வழி நின்று தானே உள்ளார அசிங்கமான வகையில் அழித்து இல்லாதொழித்த வரலாற்றை நீங்கள் தேசியம் என அடையாளப்படுத்துகிறீர்கள். அந்த அசிங்கமான தேசியத்திற்காகக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரது நினைவுகளிலும் தேடல்களிலும் நெஞ்சு நிறைந்து இருக்கிறார்கள். ஆனால் நீங்களோ அவர்கள் நினைவுகளைக் காணாமல் ஆக்கி உங்கள் வாழ்விற்காக வலிந்து காணாமல் அக்கப்பட்டவர்கள் என்ற புதுச் சொல்லோடு புறப்பட்டிருக்கிறீர்கள். இது ஒருபொழுதும் அர்த்தமுள்ள நியாயமான ஒரு வழிகாட்டலை உங்களுக்குத் தந்துவிடாது.
 உண்மையில் காணாமல்ஆக்கப்பட்டவர்கள் குறித்த நேர்மையான அக்கறை உங்களுக்குக்கு இருக்குமேயானால் நமது போராட்ட காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட அனைத்து வகைப்பட்டோரின் அக்கறையின் மீது அது இருக்க வேண்டும். ஆனால் இன்று நீங்கள் கோரி நிற்பது அதுவல்ல . எப்படி உங்களுக்கு எதிரானவர்களை துரோகிகளாக வடிவமைத்தீர்களோ அதன் எதிர்புறத்தில் தியாகிகளை வடிவமைத்தீர்களோ அது மாதிரியான வெறும் அர்ர்த்தமற்ற சொல்லாக அது காலத்தில் கரைந்து போய்விடும்.
 
இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலுக்குள் வைத்து கட்டாய ஆட்சேர்ப்பில் இழுத்துச்செல்லப்பட்ட குழந்தைகளையும் முள்ளிவாய்க்காலுக்குள் இருந்து தப்பியோடுபவர்களையும் அடுத்தடுத்த மணிநேரத்தில் பிணங்களாகத் திருப்பியெடுத்த கதைகள் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. இந்தக் கதைகளைத் தெரிந்த அரசு அந்தக் கதைகளுக்குள் தனது கணக்கையும் முடிக்க நினைக்கிறது. அந்த நினைப்பிற்கு நீங்கள் துணை நிற்கிறீர்கள். உங்களது பொறுப்பற்ற பார்வை அரச அதிகாரத்தின் அத்தனை விசமத்தனங்களுக்கும் உரம் ஊட்டுகிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ற சொல் மிக நீண்டு திரட்டிச் செல்லப்பட வேண்டியது. அதனை நீங்கள் முள்ளிவாய்க்காலிற்குள் மட்டும் குறுக்குகிறீர்கள். நீண்டு திரட்டும் போது அதற்குள் குற்றவாளிகளாக தனியே சிங்கள அரசும் அரசின் இராணுவமும் மட்டும் இருக்கப் போவதில்லை என்கின்ற அச்சம் அனைத்தையும் விடப் பயங்கரமானது.
உலகின் அதி மோசமான அதி பயங்கரமான வதை முகாம்களையும் கொலை முகாம்களையும் வைத்திருந்தவர்கள் நமது ஈழவிடுதலைப் போராளிகள். நாம் அங்கிருந்துதான்  கணக்கைத் தொடங்க வேண்டும். அங்கே காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின்  தாய்மாரை கொஞ்சம் அழவாவது விட வேண்டும். கடந்து போன எந்தக் காலத்திலும் அவர்களை கணக்கில் கூட எடுத்ததில்லை இந்தத் தமிழ்ச் சமூகம். சமூகத்தில் ஒரு தாய்க்கு இருக்கின்ற எந்தத் தகுதியையும் இழந்து காணாமல் ஆக்கப்பட்ட அந்தத் தாய்மாரை இந்த நேரத்திலாவது கணக்கில் கொள்ளுங்கள். அவர்கள் பிள்ளைகளைக் கணக்கில் வையுங்கள். அவர்கள் யாருமே மென்மையான முறையில் காணாமலாக்கப்படவில்லை. மிகவும் திட்டமிட்டு அவர்கள் ஒவ்வொருவரும் சித்திரவதை செய்யப்பட்டே கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
எந்தத் தடயமும் இல்லாதபடி அந்தக் கொலை மறைக்கப்பட்டிருக்கிறது. அதுகுறித்து இந்த நேரத்திலாவது  கணக்கிலெடுக்கத் தொடங்குங்கள். அதனைத் தொடங்காது நீங்கள் உங்களுக்கு வசதியான வார்த்தைகளைக் கொண்டு வாதிடுவதால் நீங்கள் எதிர்பார்க்கும் எந்தப்பலனும் வந்து சேரப்போவதில்லை.
நாங்கள் இனவாதிகளாக இருக்கிறோம் நாங்கள் சாதிய வாதிகளாக இருக்கிறோம். நாங்கள் மதவாதிகளாக இருக்கிறோம். நாங்கள் கொலையாளர்களாக இருக்கிறோம். நாங்களே வதையாளர்களாக இருக்கிறோம். ஆனால் அத்தனையையும் செய்யும் இன்னுமொருவர் மீது மறுபுறம் கோபமாயும் இருக்கிறோம். இது ஒருபோதும் நியாமாய் இருக்க முடியாதது.
முள்ளிவாய்க்காலுக்குள்ளிருந்து  விடுதலைப் புலிகளைச் சேர்ந்தவர்களையும் அவர்கள் கூட்டியிழுத்து வைத்திருந்த மக்களையும் இராணுவத்தினர் உயிரோடு பிடித்துச் செல்லப்பட்டதும் பின் இல்லாதொழிக்கப்பட்டதற்குமான ஆதாரங்கள் வெளிப்படையாக புகைப்படங்களாகவும் வீடியோக் காட்சிகளாகவும் இருந்த பின்னாலும் நமக்கு அதற்கெதிராக அறுதியான வாதங்களைத் தொடரமுடியாதிருக்கிறது என்பது ஏன் என்பதை இனியாவது நாம் யோசிக்க  வேண்டும்.
 
பிடித்துச் செல்லப்பட்டவர்களில் அதிகமானோர் உயிருடன் இல்லை என்பதுவே நிதர்சனமானது. அது எப்படி நிகழ்ந்தது? அதனை நிகழ்த்தியவர் யார்? அதற்கு யார் பொறுப்பு? என்பதனைக் கூறாது ஒரு ஜனாதிபதியாக இருப்பவர் இப்படி அதிரடி அறிவிப்பினைச் சொல்லுவது ஏற்கமுடியாதது. ஆனாலும் அந்த நிதர்சனமான உண்மையைத்   தெரிந்தும்  நாம் அதற்குரிய வகையில் நிலமையை அணுகாது நூறு நாள் ஆயிரம் நாள் என காணாமற் போனோரின் பெற்றோரை தெருவில் நிற்பாட்ட வைப்பதற்கும் அதனைப்படம் பிடித்துக்காட்டுவதற்கும் பின்னால் ஒரு வகை அரசியல் பித்தலாட்டம் இருக்கிறது என்பது எனது கணிப்பு.  உண்மையில் இவர்களுக்கு சமூகம் மீதான சரியான கவனம் இருக்குமானால்  தொடர் யுத்தகாலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களது மொத்தப் பெயரையும் அதன் காரணத்தையும் காணாமல் ஆக்கப்பட்ட இடத்தையும் மிக இலகுவாகத் திரட்டிவிடமுடியும். அதனைத் திரட்டுவதன் தொடர்ச்சியாக இறுதியுத்த விபரத்தையும் சேர்த்து அந்த மக்களுக்குரிய இழப்பீடுகளைப் பெற்றுக் கொடுக்க இவர்களால் முடியும். அது மடியாத காரியமல்ல. அதனைச் செய்வதற்கு இன்றைய தேசியவாதிகள் விருப்பமற்றேயிருக்கிறார்கள். அது தேவையற்றதாகவே யோசிக்கிறார்கள். மீளவும் மீளவும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய் என்ற மாயக் கதைகளால்  உறவினர்களது வாழ்வைக் காணாமல் ஆக்குகிறார்கள்.
ஆனால் இந்த அரசுக்கு எங்களைப்பற்றி அதிகம் நன்றாகத் தெரிந்திருக்கிறது. ஆரம்ப காலம் தொடக்கம் தேச விடுதலை என்ற பெயரில் முள்ளிவாய்கால் வரை தமது மக்களையே அழித்தொழித்த சமூகம் இது என்பதனை அவர்களும் நன்கு அறிவார்கள். அதனால் தான் இந்த வகையான திமிர்க் கருத்துக்களை அவர்கள் தொடர்ந்தும் சொல்லிக் கொண்டிருக்க முடிகிறது. ‘ஏய் சமூகமே நீ  இப்படியே இருந்தால்  சுட்டுக்கொலை செய்து தூக்கி கம்பத்தில் கட்டிவிட்டு எதிரி தற்கொலை என எழுதி வைப்பான்’ என  செல்வம் அருளானந்தம்  அவர்கள் 30 வருடங்களுக்கு முன் எழுதிய கவிதையை இந்த இடத்தில் ஞாபகம் சொல்லி
இந்தத் தற்கொலைச் சமூகத்தை திருத்தவதற்கு மருந்தும் இல்லை  மாத்திரையும் இல்லை என்பதனையும் சொல்லி  முடிக்கிறேன்.
 
சமவுரிமை இயக்கம் 01 மார்ச்2020 அன்று ரொரன்டோவில்  நிகழ்த்திய காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவருக்கும் மரணச்சான்றிதழ் வழங்க முனையும் அரச செயற்பாட்டிற்கு எதிரான கண்டனக் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட உரை.