Tuesday 23 June 2015

"யாழ்ப்பாணியம்" நல்ல முகமூடி ஈழத்தமிழ்த் தேசியம்


                                                               கற்சுறா

‘யாழ்ப்பாணியம்.’ அல்லது ‘யாழ்மையவாதம்’ என்ற மேற்கோள் குறிக்குள் வருகின்ற இந்த சொற்கள் குறித்து ஒருவர் பேச முற்படும் பொழுது அல்லது அதுகுறித்து கருத்துத் தெரிவிக்க முற்படும் பொழுது அந்த நபர் மிகத் தெளிவாக அப்புறப்படுத்தப் படுவார். கட்டமைக்கப்படும் வரலாற்றில் அவருக்குரிய இடம் மறுதலிக்கப்பட்டு தமிழ் மரபு சார்ந்த அடையாளங்களில் ஒன்றான ‘துரோகி’ அல்லது ‘எதிரி’ என்பதாக அடையாளமிட்டு தயாரித்து பழக்கப்படுத்தி வைக்கப்பட்ட  பதில்களி னூடாக  யாழ்ப்பாணியம் என்ற அந்தச் சொல் தன்னை மீளவும் தக்கவைத்துக் கொள்ளும்.
இதற்கான எதிர்க் கருத்தி யலை அது எவ்வகையில் நிராகரிக்கின் றது? தன்னை நியாயப்படுத்த தன்னைப் பாதுகாக்க எவ்வளவு தூரம் தனது கரங்களை நீட்டி தனக்கான பாதையை தயார்படுத்தி ஒவ்வொரு நபர்களாக குறிவைத்து தனக்குள் இழுத்து, யாழ்ப்பாணியத்தின் வெளியை எவ்வாறு விரிக்கிறது என்று நோக்கியே ஆகவேண்டும். இதன்மூலமே யாழ்ப்பாணியம் கட்டி வைத்துள்ள தேசப்பற்றையும் அதன் உச்ச வெறியில் உருவாகிய  இன்றைய யுத்தத்தின் தேவையும் அதனால் உருவாக இருப்ப தாகச் சொல்லும் தமிழீழம் என்பதின் தேவையையும் புரிந்து கொள்ள முடியும்.
தமிழ்த் தேசியம் என்ற ஒற்றைச் சொல்லினூடாக அதன் மீதான அதீத பற்றை அல்லது கடவுள் மீதான நம்பிக்கையைப் போல் கேள்வியற்ற ஒரு வழிபாட்டை ஒரு வெறியை யாழ்ப்பாணியம் தன்னகத்தே கட்டமைத்து வைத்திருக்கிறது. இங்கே அந்த ஒற்றைச் சொல்லின் மீதான பற்றில் அது தன்னைப் பாதுகாப்பதற்காக நாம் எவ்வளவு தொகைக் கேள்விகளை இழந்திருக்கிறோம் என்று நோக்க வேண்டும். கேள்விகள் என்பது வெறும் வார்த்தைகளல்ல. மனிதப் படுகொலைகள்.
ஈழத் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பமான காலங்களில் அதற்கெதிரான துரோகிகளும் கட்டமைக்கப்பட்டார்கள். அன்றைய துரோகிகள் எனப்படுவோர் இன்றைய துரோகிகளது நிலைக்கு எவ்விதத்திலும் இணைவு இல்லாதவர்கள். ஆனாலும் அவர்கள் துரோகிகள். துரோகிகள் என அடையாளப் படுத்தப்பட்டவர்கள். அவர்களுக்குரிய அடையாளப்படுத்தலுக்குப் பின்னால் ஒருவித அரசியல் கருத்து நிலைப்பாடும் இருக்கவில்லை. யாருடைய கட்சியையோ குழுவையோ அவர்கள் சேர்ந்திருக்க வில்லை. ஆனால் அவர்கள் சமூகத்தின் அரசியல் நெருக்கடியின் பக்கவிளைவுகள்.
இன்றைய துரோகிகள் எனப்படுவோர் ஈழத்தமிழ்த் தேசியத்தின் ஒவ்வொரு அங்கங்கள். எல்லோரையும் போல தேசியத்தின் மீதான பற்றைக் கொண்டிருப்பவர்கள்.  இன்னும் சிலர் தேசியத்தை நிராகரிப்பவர்கள். அப்படிச் சொல்வதை விட இன்றைய ஈழத்தமிழ்த் தேசியத்தை ஆதரிக்காதவர்கள் என்று சொல்ல முடியும். இவர்களையெல்லாம் துரோகிகள், சமூகத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டியவர்கள் என்பதாக நமக்குச் சொல்லப்படுகிறது. நாங்கள் நம்புகிறோம். சொல்பவர்கள் யாரெனில் இதே தமிழ்த் தேசியத்தின் பிரதிநிதியாக தம்மை முன்நிறுத்தி மிகத் தந்திரோபாயமான வார்த்தைகளால் மக்களின் அனைத்து வாசல்கதவுகளையும் மூடிவிட்ட யாழ் மையவாதச் சிந்தனைப் போக்கின் தற்போதைய உன்னத பிரதிநிதியான விடுதலைப் புலிகள். மற்றும் அவர்களுக்குச் சலாம் போடும் யாழ்; மேலாதிக்க மேட்டுக்குடிகள். அவர்கள் கையகப்படுத்தி யிருக்கும் தமிழ்ப் பத்திரிகைகள், ஊடகங்கள்.
விடுதலைப் புலிகளை அல்லது அவர்களது அரசியல் நடவடிக்கைகளை வெறுமனே குற்றஞ் சாட்டுவதினூடக இந்தச் சமூகம் தப்பித்துவிட முடியாது. ஈழவிடுதலைப் போராட்டம் ஆரம்பமானதும் அது தன்னகத்தே சிதையத் தொடங்கியதும் யாழ்ப்பாண எல்லைக்குள்ளேயே. விடுதலைப்புலிகள் என்ற அமைப்பின் சிதைவினுடன் அதன்மீதான குற்றச்சாட்டுக்கள் முடிவுக்குவரும். ஆனால் தன்னை அறிவியல் சார்ந்த சமூகம் என்று சொல்லிக்கொள்ளும் யாழ்ப்பாணிய சமூகம்  அனைத்துக்குமான பொறுப்பை எப்போதும் ஏற்க வேண்டும்.
இன்று மக்கள் தாம் தன்னியல்பாக ஒவ்வொரு விடையத்தையும் உள்வாங்குகிறார்கள், தமது சுய சிந்தனையின் அடிப்படையிலேயே சிந்திக்கிறார்கள் என்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மிகக் கூரிய ஆயுதமான  தேசியத்தினால்  அவர்களது சிந்தனை முறை மழுங்கடிக் கப்படுகிறது. கேள்விகளற்ற ஒரு முண்ட நிலைக்கு  அது கொண்டுவந்து விடுகிறது. ஈழமக்களுக்கான தேசியம் என்பது எண்ணற்ற  வன்முறைகளையும்  எண்ணற்ற கொலைகளையும் தாண்டியிருக்கிறது. தன்னகத்தே நடாத்தியிருக்கிறது என்பது பற்றி அவர்கள் யோசிக்க மறுக்கிறார்கள். அல்லது அவை தமக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் என்று நம்புகிறார்கள். அத்தனை கொலைகளையும் வன்முறைகளையும்  வரவேற்கி றார்கள். இந்த வரவேற்றல் மனோநிலையில் மக்கள் வந்திருக் கிறார்கள் எனில் இதற்கு யார் பொறுப்பு. எங்கேயிருந்து  இந்தத் தவறு தொடர்ந்து வந்திருக்கிறது?
ஆரம்பத்தில் கல்விகற்ற மேல்சாதி மக்களிடம் இருந்து அப்புறப்பட்டு சமூகத்தின் விளிம்பு நிலையில் இருந்து வாழ்த லுக்குப் போராடிக்கொண்டிருந்த  ஒரு சமூகத்தின் நபர்களை  துரோகிகள் என்று மின்கம்பத்தில் கட்டிச் சுட்டுக் கொல்லும்போது வரவேற்கப்பட்டது. இந்தத் துரோகிகள் அடையாளம் யாருக்கெதிரானதாக இருந்தது? யாழ் படித்த மேல்சாதி சமூகத்திற்கெதிராக துரோகிகள் உருவாக்கப்பட்டார்கள். இதை நடைமுறைப்படுத்தியது ஈழத் தேசியவிடுதலைப் போராட்ட இயக்கங்கள். ஆக ஈழவிடுதலைப் போராட்ட அமைப்புக்கள் யாரின் பிரதிநிதியாக அப்போது தம்மை முன்நிறுத்தினார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும். இப்படி யாழ்ப்பாணத்து விளிம்பு நிலை மக்களைக் துரோகிகளாக்கிய யாழ்ப்பாணியம் மெல்ல நகர்ந்து ஈழமெங்கும் பரவியது. ஈழத்தில் ஒவ்வொரு ஊருக்கும் பல விளிம்பு நிலை மனிதர்களை துரோகிகளாக்கிக் கொன்று போட்டது ஈழவிடுதலை இயக்கங்கள். இந்த ஈழவிடுதலை இயக்கங்கள் தம்மை முன்நிறுத்துவதற்கு இந்த மக்களின் கொலைகளையே முக்கியத்துவப்படுத்தினர். இவை அத்தனையையும் வரவேற்றது யாழ்ப்பாணிய மனம்.  யாழ்ப்பாணியம் ஈழத்தேசியமாக பரிணாமம் அடைந்தது இப்படித்தான்.
இவை எல்லாவற்றையும் விட மிகப்பெரிய ஆபத்தான விடையம் என்னவென்றால், ஈழத்தேசியத்தின் பிரதிநிதியாய் உள்ளார்ந்த யாழ்ப்பாணியத்தின் பிரதிநிதியாய் இருக்கின்றவர்கள் ஈழத்தில் குழந்தைகள் காப்பகத்தையும், சிறுவர் பாடசாலை களையும் கைப்பற்றி நடாத்திக் கொண்டிருப்பதுதான். செஞ்சோலை என்ற பெயரில் யுத்தத்தில் பாதிப்புற்ற அநாதைச் சிறுவர்களை பராமரிப்பதாகச் சொல்லும் விடுதலைப் புலிகள் மீது தொடர்ச்சியாக சிறுவர்களைப் படையணில் சேர்க்கப்படுவது பற்றி வருகின்ற குற்றச்சாட்டுக்களை எவருமே கண்டுகொள்ளவில்லை. அல்லது பேச மறுக்கிறார்கள். அநேக பத்திரிகையாளர்கள் அல்லது எழுத்தாளர்கள் யாவருமே அப்படியொன்று நடக்கவில்லை என்பது போல் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். மறுக்கிறார்கள். எழுகின்ற எந்தக் கேள்விகளுக்கும் பதிலற்ற ஒரு கோமாநிலையில் எப்படி இவர்களால் வாழ முடிகிறது என்பது மிகப்பெரிய கேள்வி. அதற்குரிய பதில் மிகப்பெரியது. அது சொல்லப்படவில்லை.
கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் இவர்களால் இலகுவாக நுழைய முடியும் என்பதற்கு நம்முன்னால் உள்ள  வாழ்வு சாட்சி. உலக வரலாற்றின் பொக்கிசமாகக் கருதப்படும் மாணவர் சமூகம் என்பது மிக இலகுவாக எல்லோராலும்  ஏமாற்றப்படக்கூடியது  வென்றுவி டக்கூடியது என்பதற்கு யாழ் பல்கலைக் கழகமே முதன்மைச் சாட்சி. கடந்த காலங்களில் படுமோசமான அரசியல் படுகொலைகள் யாழ் பல்கலைக் கழகத்திலேயே நடந்திருக்கிறது என்பது யாவரும் அறிந்த உண்மை. விஜிதரன் ராஜினி,செல்வி விமலேஸ்வரன் என்று இந்தப்பட்டியல் நீளும். இந்த உண்மை நிலை எப்படி நமது சமூகத்தின் இருட்ட றைகளில் பதுங்கிக் கிடக்கிறது. இதை தூண்டி விடக் கூடிய பெரும் பலம் யாருடைய கையில் இருக்கிறது? இது எவற்றுக்கும் விடையில்லை. விடையில்லை என்பதை விட விடை தேட விருப்பமில்லை. தேவையில்லை. ஈழவிடுதலைப் போராட்டத்தின் இருள் மூடிய பக்கங்களை இவர்கள் அறிய மறுக்கிறார்கள். அப்படி ஏதாவது இந்தப் ப+மியில் நடந்தனவா? நடக்கவேயில்லை. நடந்ததற்கான எந்தவித தடையங்களும் அவர்களிடம் கொடுக்கப்படவில்லை. கொடுக்கப்படாததை அவர்கள் எப்படிப் பேசமுடியும்? அவர்களுக்கு ஈழம் ஒரு வழிபாட்டுக்குரிய ப+மி.  அங்கே பழிகளுக்கும் பாவங்களுக்கும் இடமில்லை. அப்படி நடந்த பழிகளும் பாவங்களும் தெய்வவழிபாட்டிற்குரியவை. தெய்வ தியானத்தில் திளைத்திருக்கும் பல்கலை வளாகம் தெய்வத்தின் குற்றத்திலிருந்து விடுபட தன்னையே தெய்வமாக்குகிறது. தெய்வத்திருவளையாடலை தெய்வத்திற்கு மேலால்  விளையாடுகிறது யாழ்பல்கலைகழகம்.



‘யாழ்ப்பாணியம்’ என்ற  இந்த கொடுஞ்சொல் நடைமுறைவாழ்வில் அரசியலில் என்று சகல திசைகளிலும் தன்னை ஆழப்படுத்தியிருந்தாலும் அவையெல்லாவற்றையும் மறுதலித்தப்பேசக் கூடிய  புத்திசீவிகள் மட்டத்தில் மிகமிக நுண்ணிய தளத்தில் இது உறைந்திருப்பது குறித்து நம்மில் அநேகம்பேர் கண்டுகொள்வதில்லை. இந்த உறைவு நிலையின் அப்பட்டமான வெளிப்பாடுதான் தமிழ்த் தேசிய அடையாளம். இங்கே வெட்கம் என்னவெனில் இவர்களில் அநேகம் பேர் தம்மை வெளிப்படையாக தேசியவாதிகளாக அடையாளம் இடுவதுதான்.

ஈழத்தமிழ்தேசியவாதியாக தன்னை அடையாளப்படுத்தும் ஒருவன் எப்படி ஈழத்து முஸ்லீம்கள் குறித்து அக்கறைப்படுவதாகச் சொல்வது?

தன்னை ஈழத்தமிழ்தேசியத்தில் அக்கறை யுள்ளவனாகச் சொல்லும் ஒருவன் எப்படி ஒடுக்கப்பட்டமக்கள் குறித்து தான் அக்கறை கொள்வதாகவும் சொல்லமுடியும்?

கிழக்கு மாகாண மக்கள் குறித்தும் அக்கறைப்படுவதாகச் சொல்லும் ஒருவன் எப்படித் தமிழ்த் தேசியவாதியாக இருக்கிறேன் என்று சொல்லமுடியும்?

எவ்வளவு முரண்பாடுள்ள விடையம் இது. இதுவரை ஈழத்தமிழ்த் தேசியமாக வளர்ச்சிநிலை எய்திய யாழ்ப்பாணியம் என்பது ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து எந்த இடத்தில் கவலைப்பட்டது?

கிழக்கு மாகாணம் குறித்த உண்மையான கரிசனையை ஏதாவது ஓரு தருணத்தில் அது நிரூபித்ததா? முஸ்லீம் மக்கள் குறித்து  என்ன கருத்தை இந்த தமிழ்த் தேசியம் கொண்டுள்ளது? இவ்வளவு கேள்விகளையும் தம்மைத் தமிழ்த் தேசியவாதிகள்  எனக் கூறிக் கொள்பவர்கள் அல்லது அடையாளப்படுத்துபவர்கள் கேட்டுக்கொள்ள வேண்டும்.

இன்னொரு பக்கம் இந்தத் தமிழ்த்தேசியவாதிகள் தம்மைப் பெரியாரிஸ்டுகள் என்பது வேடிக்கையான விடையம். கறுத்தச் சட்டை உடுத்தி கடவுள் மறுப்பும் செய்தால் மட்டும் பெரியாரிஸ்ட் என்று செல்ல முடியுமா?

பெரியாரின் சிந்தனை கட்டறுக்கும் மிகப்பெரிய புள்ளியான தேசியத்தைத் துறக்க வேண்டாமா? தேசியம் என்பது காதல் அன்பு கடவுள் போன்றது  அது ஒரு பம்மாத்து என்றவரல்லவா பெரியார்.
பொதுவாக இன்று அனேகர்களால் சொல்லப்படும் ஒரு கருத்தியல் நிலை என்பது நமக்கான பொது எதிரி அல்லது முதல் எதிரி சிங்களப் பேரினவாதம் என்பது. இந்த உண்மை நிலை, இதை உண்மை நிலையாக எண்ணப்படுவதற்கு உள்ளார மறைந்திருப்பது தமிழ்த் தேசியம் அல்லாமல் வேறென்ன?.  ஏனெனில் தமிழர்கள் என்ற ஒற்றை அடையாளத்தை நினைவூட்டி தமிழர்களுக்கான பொதுப்பிரச்சனை ஒன்றை முன்நிறுத்தி அந்தப்பிரச்சனைக்கு எதிரானதை மட்டும் முதல்காரணமாக கட்டமைப்பதனூடு தமிழ்த் தேசியத்தினை  இது முன்மொழிகிறது. இதற்குள் தமிழ்ப் பேரினவாதம் செய்து வருகின்ற வன்முறைகள் எல்லாம் காயடிக்கப்பட்டு விடுகிறது. யாழ்ப்பாணியம்தான் தமிழ்த் தேசியவாதம் என்றானபின் ஈழத்தின் மற்றய பகுதிகளுக்கு அங்கு வேலையில்லாமல் போய்விடுகிறது. சிங்களப் பேரினவாதம் முதல் எதிரியில்லாமல் யாழ்ப்பாணியமும் அதற்குள் மறைந்திருக்கின்ற அதிகாரமுமே முதல் எதிரியாகிவிடுகிறதுமற்றவர்களுக்கு.  இந்த யாழ்ப்பாணியத்திற்கு எதிரான போராட்டமே முதன்மைப்பட்டு விடுகிறது. கட்டமைக்கப்பட்ட பொது எதிரி யாழ்ப்பாணியத்திற்கான எதிரி. அது எல்லோருக்குமான முதல் எதிரியாக்கப்படுவது வன்முறை. இந்த வன்முறையை பொதுமைப்படுத்தலை புலிகள் தொடக்கம் புலிகளின் அரசியலை விமர்சிக்கும் அல்லது மறுத்து நிற்கும் மாற்றுக் கருத்தாளர்கள் எனச் சொல்பவர்கள் வரை காவி நிற்கிறார்கள். இவர்களுக்குள் உள்ளார யாழ்ப்பாணியத்தின் ஆணிவேர் ஆழமாக இறுக்கப்பட்டிருக்கிறது. அது எவ்வகையிலும் அவர்களிடம் இருந்து வெளிப்பட்டு விடுகிறது. ஆக நமக்கு முதல் எதிரி சிங்களப்பேரினவாதம் என்றால் இந்த நமக்கு என்பதற்குள் யாரெல்லாம் வருகிறார்கள் என்று  சொல்பவர்கள் அடையாளமிட வேண்டுமல்லவா?



யாழ்ப்பாணம் என்ற பெருமிதத்தினுள் ஈழத்தேசியத்தை அடையாளப்படுத்தும் செயற்பாடுகள் கடந்த காலங்களில் பெருவாரியாகவே நடைபெற்று வருகின்றன. இது மிகவும் பகிடியானதும் அப்பாவித்தனமானதும் ஆகும். யாழ்ப்பாணத்தில் எவடம்? யாழ்ப்பாணத்து முறைப்படி தயாரிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட  எனும் வார்த்தைப் பிரையோகங்களை கூச்சமில்லாமல் பயன்படுத்துவதன் மூலம் தமது சுய அறிவீனத்தை யாழ்ப்பாணத் திமிரை அப்பட்டமாக வெளிக்காட்டும்  மனநோய் கொண்ட ஒரு சமூகமாக மாறிவிட்டி ருப்பதை அவதானிக்க முடியும்.
பொதுச்சூழல் இப்படியிருக்க புத்திசீவிகள்  மாற்றுச்சிந்தனை கொண்டதாகச் சொல்லிக் கொள்ளும் பலரையும் இந்த மனநோய் பீடித்திருப்பதை நாம் நிறையவே அவதானிக்க முடியும்.

கனடா காலம் இதழ்- 18.ல் எடிட்டோரியல் இப்படிச் சொல்கிறது.
ஏ.ஜே. கனகரட்னா அவர்கள் யாழ்ப்பாணத்துக்கே உரிய கல்வி முறையை தக்கபடி பயின்றவர்.என்று எழுதியது. இங்கே யாழ்ப்பாணத்துக்கே உரிய என்பதற்குள் மறைந்திருக்கும் யாழ்ப்பாணத்திமிர் குறித்த கவலை அல்லது கேள்வி காலத்தின் வாசகர்கள் யாருக்கும் இதுவரை எழவில்லை. காலம் இதழ் கனடாவில் இலக்கிய இதழாகத் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது. அந்தத் தொடர்ச்சிக்கும் அந்த உழைப்பிற்கும் நான் மரியாதை கொள்கிறேன். இதுகுறித்து நான் பலதடவை சஞ்சிகை ஆசிரியருடனே பேசியிருக்கிறேன். எவ்விடத்திலேயும் அது குறித்து அவர்கள் யோசித்ததாக இல்லை.இந்த வார்த்தை குறித்து  நான் சில கேள்விகளை உங்களிடம் கேட்க முடியும்.

1. யாழ்ப்பாணத்திற்குரிய கல்வி முறை என்று ஒன்று உண்டாயின் மற்றய பிரதேசங்களுக்கான கல்வி முறைகள் எவை?

2. அவை எப்படி யாழ்ப்பாணத்துக்குரிய கல்வி முறையிலிருந்து வேறுபடுகிறது?

3.மற்றைய பிரதேசத்திற்கான கல்வி முறையை யார் யார் தக்கபடி பயின்றவர்கள்?

4. வேறு  யாரெல்லாம் யாழ்ப்பாணத்துக்குரிய கல்வி முறையைத் தக்கபடி பயின்றவர்கள்?

ஏ.ஜே. கனகரட்னா மட்டும்தான் தக்கபடி பயின்றவர் எனில்
ஏன் யாழ்ப்பாணத்திலுள்ள மற்றவர்கள் தக்கபடி பயில முடியாமல் போனது?
இப்படி பல ஆயிரம் கேள்விகள் நமக்குத் தோன்றுவது தவிர்க்கமுடியாதது. யாழ்ப்பாணத்துக்குரிய முறையில் தயாரிக்கப்பட்ட வறுத்த மிளகாயத்தூள் என்ற வார்த்தையிலிருந்து  இந்த வார்த்தை எவ்விதத்திலும் வேறுபட்டதல்ல.
அடுத்து கனடா பதிவுகள் டொட் காம் எழுதியது:
யாழ்ப்பாணத்தில் தலித் பெண்களை வைப்பாட்டிகளாக வைத்திருப்பதற்கு ஏற்றுக்கொண்டவர்கள்தானே நாங்கள் என்கிறது.
இதை கனடாவில் ஒருபாலுறவுசார்ந்த கருத்தியலைப் பற்றிப் பேச வந்த ஓர்க்வில் நிருபாமா என்ற பெயரில் ஒழிந்திருக்கும் ஒருயாழ்ப்பாணி- இப்படி ஒருவர் கனடாவில் எழுதுவதில்லை அப்படி ஒருவரும் கனடாவில் இல்லை என்றே அனைவரும் சொல்கிறார்கள்-
இதை எழுதினார்.
இதுபற்றி அதே இணையத்திற்கு நான் மறுத்து எழுதிய மூன்று நிமிடத்தில் அந்தக் கட்டுரையிலிருந்த வரிகள் நீக்கப்பட்டுவிட்டன. ஆக என்னால் இந்த மோசமான கருத்தியலுக்கு அந்த இணையத்தின் ஆசிரியரையே குற்றஞ்சாட்ட முடியும்.
 நான் அவரிடம் கேட்டு எழுதியது தலித் பெண்களை வைப்பாட்டிகளாக வைத்திருப்பதற்கு ஏற்றுக்கொண்டவர்கள்தானே நாங்கள் என்பதில் வருகின்ற நாங்கள் என்பதற்குள் மறைந்திருக்கும் சாதி எது? என்பதுவே.
கவனமாகக் கவனிக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் - நாங்கள் என்ற சொல்லாடலுக்குள் இருக்கின்ற மிக முக்கியமான தளம் பற்றி கருத்துக்கெடுக்காதவர்கள் இவர்கள். அந்தக் கருத்தாக்கம் தருகின்ற வன்முறைகள் குறித்த கேள்விகளை எழுப்பாதவர்கள் இவர்கள்;. இவர்கள் எல்லோரும்தான் தம்மை ஈழத்தேசியவாதி களாக அடையாளப்படுத்துகிறார்கள். இந்த ஈழத்தேசியவாதிகள் மீது நாம் எவ்வகையான அவதானத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
இந்த ஈழத்தேசியவாதிகள் அநேகமானோர் யாழ்ப்பாணத் திலிருந்து முஸ்லீம்கள் விரட்டப்பட்டது குறித்து பேசமுற்படும் போது சித்தசுவாதீனமற்றவர்களாகிவிடுகிறார்கள். வரலாற்றின் பாதையிலிருந்து முறித்தெறியப்பட்ட அந்த இனம் தனது பாதையை நேராக்க இன்னும் எவ்வளவுகாலம் காத்திருக்க வேண்டியிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.
யாழ்ப்பாணத் திமிரின் உச்சக்கட்ட வன்முறையாய் இருந்தது அந்தத் துரத்தி யடிப்பு. இன்றைக்கு 16 வருடங்கள். இன்னும் தெளிவற்ற நிலை. இப்ப நாங்கள் திரும்பி வந்து இருக்கச் சொல்லி விட்டோம். அவர்களும் திரும்பி வந்திருக்கிறார்கள் நன்றாக வாழ்கிறார்கள் என்று புலிகள் தங்களது பினாமி ஊடகங்கள் மூலம் சொல்ல வைக்கிறது.  ஆனால் 16வருடத்திற்குப்பின் எதுவுமற்ற ஒரு இடத்திற்கு எப்படிப் போய்  வாழ முடியும் என்று யோசிக்கிறது முஸ்லீம் இனம். ஒரு சந்ததி இழந்து இன்னொரு சந்ததி உருவாகிவிட்டகாலம். எங்கே போவது.யாரை நம்பிப் போவது? இது இப்படியிருக்க யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் துரத்தப்பட்ட காலத்தை நினைவுகூர அல்லது அதுகுறித்துப் பேச முற்படும் பொழுது இன்றைக்குப் 16 வருடமாகிவிட்டது. இத்தனை வருசத்திற்குப் பிறகும்; அதுகுறித்து ஏன் பேசிக் கொண்டிருக்க வேணும். என்று அந்தப் பிரச்சனையில் இருந்து தப்பிக்கொள்ள விளைகிறது யாழ்ப்பாணியம்.
ஆனால் மறுபுறம் 23 வருசமாகியும் 83 ஜூலைப் படுகொலை குறித்து நினைவுகொள்வதை கேள்வியெழுப்வில்லை. வருடக்கணக்குப் பார்த்தால் நாம் மறந்து போகக் கூடியது  ஜூலைப்படுகொலையே.
குமுதினிப்படகில் கொல்லப்பட்ட மக்கள் குறித்து இத்தனை வருசமாகியும் நினைவுகொள்ளும் நமது தேசியவாதிகள்; ஹென்பார்ம் டொலர் பார்ம் தொழிலாளர்கள் குறித்து ஒருசின்னக் கவலையும் கொள்வதில்லை. அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்பதுவே அவர்களின் சிந்தனை. தமது செயற்பாட்டிற்கு எதிரானவர்கள், மறுத்தவர்கள்,கேள்விகளை முன்வைத்தவர்கள் என்று எல்லோரையும் கொன்றுவிட தமிழ்த் தேசியம் ஒருபோதும் யோசிப்பதில்லை.
எந்தக் கேள்விக்கும் எதுவித பதிலுமற்ற தமிழ்த் தேசியத்தின் பிதாமகனான புலிகள் யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்தை அழித்த காட்சிகளை வரவேற்று நின்றது யாழ்ப்பாணியம். ஒருகையால் ரெலோ இளைஞர்களை தீயில் போட மறுகையில் கொக்கோகோலா உடைத்துக் கொடுத்து தாகம் தீர்த்தது யாழ்ப்பாணியம்.
விடுதலைப்புலிகளால் நடாத்தி முடிக்கப்பட்ட ரெலோ இயக்கத்தினரது அழிப்பில் அழிந்து போனது ரெலோ இயக்கமல்ல. தின்னவேலிச்சந்தியில் ரயருக்குள் கிடந்து கருகிச் செத்தது  கிழக்குமாகாணம். ஆம் திருகோணமலை மட்டக்களப்பு ரெலோ இயக்கப்போராளிகள் மட்டுமே தேடித்தேடிக் கொல்லப்பட்டார்கள். கிழக்கு மாகாண இளைஞர்கள் யாழ்ப்பாணி யத்தின் எதிரிகளாக எப்போதுமே முன்நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
கிழக்கின் மார்ச் பிளவு யாழ்ப்பாணியத்தின் மிக இறுக்க மான ஆணிவேரை ஒட்ட அறுத்தது.
யாழ்ப்பாணியத்தின் காவல னான விடுதலைப் புலிகள் சொல்லிக் கொண்டிருந்த தாகத் தமிழீழத்திலிருந்து கிழக்கு பிரிந்துபோனது. ஈழவிடுதலைப் போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்து அதீதவளர்ச்சி பெற்ற காலம் ஈறாக விடுதலை இயக்க அழிப்பு வரையில் யாழ்ப்பா ணத்திமிர் தன் கோரப் பற்களை நீட்டியே வந்திருக்கிறது. ஆனால் அதன் தாண்டவம் விடுதலைப் புலிகளின் மார்ச் பிளவில் தான் வெளித் தெரிந்தது. யாழ்ப்பாணத்தின் அத்தனை கிடுகு வேலிகளும் யாழ்ப்பாணம் அல்லாத ஒருவனையாவது கொல்வதற்கு துடித்துக் கொண்டிருந்தது. அதே நேரம் யாழ்ப்பாணத்தான் ஒருவனையாவது இழந்து விடக்கூடாது என்று கண்காணித்துக் கொண்டிருந்தது. மட்டக்களப்பில் பிரிந்து போன  விடுதலைப்புலிகளை அழிக்க மட்டக்களப்பு சிறுவர்களையே அனுப்பி அவர்களது சகோதரத்திற்கு எதிராக சண்டையிடவைத்து திமிரின் உச்சக்கட்டத்தை நிரூபித்துக் காட்டியிருக்கிறது யாழ்ப்பாணியம்.

வெருகல் ஆறு யாழ்ப்பாணத் திமிரின் கொலைச் சரித்திரத்தை தன்னகத்தே மெல்லப்பதுக்கிப் பாதுகாத்து  ஓடிக்கொண்டிருக்கிறது. தனது குழந்தைகளின் குருதியை உள்ளாரப் பதுக்கி வைத்திருக்கிறது நாளையவரலாற்றுக்கு காண்பிக்க.
ஆனால் இன்று வரலாற்றை எழுதும் ஆசிரியர்களோ தமது மௌனத்தின் மூலம் அனைத்திற்கும் பச்சைக்கொடி காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதை எழுதாத, இந்தக் கொடூரத்தை மறுக்காதவர்கள் தம்மைப் புத்திசீவிகள் அல்லது மாற்றுக் கருத்தாளர்கள் என்று சொல்லி வருவதில் என்ன அர்த்தம் இருந்து விட்பபோகிறது?
ஆனால் இன்று வரலாற்றை எழுதவேண்டிய, நம் கைகளில் தவளுகின்ற  தமிழ்ப் பத்திரிகைகளோ உண்மை என்ற ஒன்றை தமது அறிவுப் புலத்திற்கு அப்பால் நின்று நிறுவுகிறார்கள். அந்த உண்மை மூலம் இன்று விடுதலைப் புலிகளையும் அவர்களின் தனித்த அபிலாசைகளையும் முன் நிறுத்துவதினூடாக தமக்கான தமிழ்த்தேசியத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்று நம்பியிருந்தார்கள். அண்மைக்காலமாக அந்த நம்பிக்கையும் அவர்கள் கைமீறிப் போய்கொண்டிருப்பது பற்றி அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இந்த உணர்வு அவர்களிடம் ஒரு பீதியை உண்டுபண்ணியிருக்கிறது. தமக்காக இருக்கின்ற ஒரு பிடியையும் அவர்கள் கைவிட விரும்பவில்லை. அதனால் புலிகளால் செய்யப்படும் அநீதிகளையெல்லாம் இந்தப்பத்திரிகையாளர்கள் குறிப்பிடுவதில்லை. புலிகளின் அத்துமீறிய வன்முறைகளெல்லாம் இவர்களால் வரவேற்கப் பட்டிருக்கின்றன. புலிகள் தமக்கான காரணமாக எதைச் சொல்கி றார்களோ அதையே அச்செடுப்பதற்குத் தயாராக இருக்கிறார்கள். புலிகளின் வாக்கே  அவர்களது ஆசிரியமாகிவிடுகிறது.
எவ்வகையிலும் எதிராக மக்களைச் சிந்திக்க வைக்காது மிகவும் தந்திரோபாயமாக புலிகளைக் காப்பாற்றி வைத்திருக்கும் செயற்பாட்டில் வெற்றி பெறுகிறார்கள். புலிகள் தமது இருப்பை நிலை நாட்ட என்னவெல்லாம் செய்ய நினைக்கிறார்களோ. அதை அப்படியே செய்வதற்கு வழிகாட்டிகளாக இருப்பது இன்றைய தமிழ் ஊடகங்கள்.இன்றைய கொலைகளுக்கும் அத்துமீறிய வன்முறைகளுக்கும் துணையாய் இருக்கும்  தமிழ்வெறி கக்கும் ஊடகங்கள் வரலாற்றின் குற்றநிலையில் முதலிடம் பெறுவார்கள். ஈழத்தில் இன்று நடந்து கொண்டிருக்கும் அத்தனை கொலைகளிற்கும் புலிகள் பொறுப்பெடுக்க வேண்டிய வர்கள்.அவர்களே குற்றவாளிகள். ஆனால் அவற்றைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்திய குற்றமான ஊழnளிசையஉல வழ உழஅவை அரசனநச தாக்கலை எதுவித எதிர்ப்புக்களுமற்று இருகரம் கோர்த்துக் காப்பாற்றி வந்த  பத்திரிகைகளின்மீதும்   அதன் எழுத்தாளர்கள் மீதும் நடைமுறைப்படுத்த வேண்டும்.  புலிகளின் எந்தவொரு வன்முறையையும் இவர்கள் இன்றுவரை எழுதியது கிடையாது.
இதைவிட இன்னுமொரு மோசமான நிலை இருக்கிறது. அது தன்னைப் புத்திசீவிகள் என்று சொல்லிக்கொள்கிறது. தனக்கு ஏன் தேவையில்லாத வேலை என்று சொல்லி தருணம் பார்த்திருப் பதாகச் சொல்லும் அந்த வட்டம் எப்பொழுதும் மௌனமாகவே இருந்து வருகிறது. இது ஒரு சட நிலை. இதற்கும் முதற் சொன்னதற்கும் பெரிய வேறுபாடு கிடையாது. இரண்டுக்கும் தருணம் தான் வித்தியாசம். மௌனம் என்பது சட நிலை. சம்மத நிலை. அதை நான் ஒரு போதும் ஒத்துக் கொள்ளப் போவதில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியம், ஈராக் படுகொலை, ஆப்கானிஸ்தான் சண்டை, என்று எல்லாவற்றையும் பேசும் இந்த புத்திசீவிகள் கூட்டம் எப்படி இதில் மட்டும் அமைதியாக இருக்க முடியும்?
இந்தப் பெருத்த அமைதிக்குப் பின்னால் இருப்பது எது? உயிருக்கான பயம் என்பதை  நான் ஒத்துக்கொள்ள மாட் டேன். இங்கே புலிகளின் கட்டாயப்பண வசூலிப்பை எத்தனை அப்பாவி மக்கள் தனித்து எதிர்த்து நின்றிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் எந்தளவுக்குப் பயம் கொண்டிருக்க வேண்டும். அவர்க ளுக்கு இல்லாத பயம் எப்படி இந்தப் புத்திசீவிகளுக்கு மட்டும் வரமுடியும்? சரியான வேடிக்கையான விடையம் இது. இல்லை  இவர்கள் பயமற்று இருக்கிறார்கள் எனில் ஏன் இவர்கள் எதிர்ப்பதில்லை?
இவர்கள் தமிழீழம் ஒன்று உருவாகும் என்று நினைக்கிறார்கள். தமிழீழம் என்ற ஒன்று தேவை என்று மனசார எண்ணுகிறார்கள். அதனைப் பெற்றுத்தர இன்று புலிகளை விட வேறு எவர்களாலும் முடியாது என்று நினைக்கிறார்கள். தங்களது பிள்ளைகளைத் தவிர வேறு எவரைக் கொன்றாவது தமிழீழம் பெற்றுத்தரவேண்டும் என்று தினமும் கடவுளைத் தியானிக்கிறார்கள். அதற்காகவே அவர்கள் மௌனமாக இருக்கிறார்கள். இங்கே அவர்களது மௌனம் தியானமே தவிரப் பயமில்லை. தியானத்திலிருந்து கடைக்கண்ணால் அத்தனை கொலைகளையும் கவனிக்கிறார்கள். கொலை செய்யப்பட்டவர்கள் தங்களுக்குத் தேவையற்றவர்கள் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரிகிறது. தங்களுடைய விழிப்பிற்கான தருணம் இதுவல்ல என்பது அவர்களுக்குத் தெரியும். தருணம் முக்கியம். பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு தருணத்திலும் யாழ்ப்பாணியம் தன்னை பாதுகாத்து உயர உயர வளர்க்கிறது. தமிழீழம் என்பது தமிழர்களுக்கான ஆகக்கூடிய ஒரு பொய். ஒரு ஏமாற்று. அது உண்மையற்ற ஒரு தளம். அதற்குள் மிகக் கவனமாக ஒழிந்திருப்பது யாழ்ப்பாணியம்.

 
மற்றது இதழ்2
2006

Friday 19 June 2015

குதிரை முகம் கொண்டு வந்த சிவகுமார்.

கற்சுறா











ஒரு கோடி பிரச்சனைகளும் ஒரு கொள்ளைத் தீர்வுகளும் கைவசம் வைத்துக் கொண்டு திரியும் என்னாசைத் தேவகி…


பாலியாற்றங்கரையில் படுத்திருக்கும் வேளையில் பகல்பொழுதில் பிடிபட்டாள்.
கலிங்கை மேவிப்பாயும் நீர்ப்புயல் பாலியாற்றை மறைத்தது.
ஆற்றங்கரையில் சற்றுச் சரிந்திருந்த தேவகி கொட்டிலோடு சேர்த்து ஆட்டையும் ஆற்றுநீர் கொண்டு போனதை கண்டு வியப்புற்றாள்.

வெள்ளை கொண்டு போகவேண்டிய ஆட்டை நீர் கொண்டு போனது.

நீர் வெள்ளையல்ல.

நீர் நிறமற்றதுமல்ல.

வெள்ளையென நினைத்து நீரைத் தொட்ட தேவகி நேற்று  தனது முகத்தை பதினாறாவது தடவையாகவும் வெளியில் மறைத்தாள். 

ஒருமுறை துணிகளாலும் மறுமுறை வெற்றுக் கடதாசிகளாலும் என மாறி மாறி மறைக்கும் தேவகி இம்முறை விலங்கொன்றிற்குள் ஒழிந்து கொண்டது புதிராகவே இருந்தது. ஒழியும் ஒவ்வொரு முறையும் பெயர்களை மாற்றினாள். விலங்கினுள் ஒழிந்த இக்கணம் மட்டும் பெயரை மாற்றவில்லை.அல்லது மாற்ற மறந்துவிட்டாள்.  ஒழிந்த விலங்கின் பெயரைக் கொண்டு என்னை அழையுங்கள் உங்களுக்குச் சிக்கல்கள் இரா. என்பதே அவள் இப்போது நமக்குச் சொல்லக்கூடியது.

ஆனால் தேவகியே…
நீ மறுமுறையும் மறுமுறையும் உனது முகமறுத்து வரும்போது ஆட்டைக் காவு கொள்ளும் வெள்ளையர் அறுத்த கிணற்றின் தேடாக்கயிறை உன்கையிலிருந்து ஏன் ஒழிக்க மறந்துவிட்டாய்?


காட்டு அம்மன் கோவில் வழிப் பாதை.
குளத்தருகில் முருகன்.
முருகனின் சூனியத்தில்
வெள்ளையரிடம்
தனது ஆட்டைப் பறிகொடுத்தாள் தாய்.
வெள்ளை கிளப்பிய ஆட்டின் குட்டி
ஈரப் பால்முலை தேடிக் களைத்தது.
தன் முலையில் வைத்து குட்டிக்கு குழையை தின்னப் பழக்கினாள் தாய்.
குளிர்த்தி நாளும் நெருங்க முருகன்
ஆட்டின் தோலை குளத்தருகில் கண்டான்.

நேற்று வெள்ளை
“சிவகுமாரின்” கள்ள அடையாள அட்டையுடன்
ஊருக்குத் திரும்பினான்.
குட்டியாடு தன்குட்டிக்காய் கனைத்தது
சிவகுமாரை குதிரை என நினைத்து.

சிவகுமாரின் கள்ள அடையாள அட்டையில் இருக்கும் வெள்ளையை
தாய் காணாமல் குட்டி கண்டதில் என்ன வியப்பிருக்கிறது?


தாய் அதன் குட்டியை உடனடியாக குழைதின்னப்பழக்கினாள்.

தேவகியின் கை தேடாக்கயிற்றை இன்னும் விடவில்லை..

Friday 5 June 2015

இடைமறிப்பு- தேவகாந்தன்

தேவகாந்தனுடன் உரையாடல்

கற்சுறா


உயிர்ப் பயணம், விதி, கனவுச்சிறை (ஐந்து பாகம);,நிலாச் சமுத்திரம் யுத்தத்தின் முதலாம் அதிகாரம் போன்ற நாவல்களையும் எழுதாத சரித்திரங்கள், திசைகள்,என்ற இரண்டு குறுநாவல் தொகுப்புக்களையும், நெருப்பு, இன்னொரு பக்கம் காலக்கனா எனும் சிறுகதைத் தொகுப்புக்களையும் மற்றும் ஒரு விடுதலைப் போராளி என்ற உரைவீச்சையும் கதாகாலம் என்ற மகாபாரதத்தின் மறுவாசிப்பையும் எழுதியுள்ள தேவகாந்தன் மற்றய ஈழத்தின் இலக்கிய எழுத்தாளர்கள் போல் பேசப்பட்டவர்  இல்லை. அதற்கு ஈழத்து இலக்கியச் சூழலுக்கு ஏதோ ஒரு விசேட காரணம் இருப்பதாகவே  எண்ணிக்கொள்ள வேண்டியிருக்கிறது. சதாகாலமும் நிறைந்த வாசித்தல் எழுதுதல், நிறைந்த குடி, நிறைந்த புகைப்பிடிப்புப் பழக்கமுள்ள ஒருவர் அவர்.

கடந்தகாலங்களில் தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்தவர். தற்போது கனடாவில் வாழ்ந்துவருகிறார். தீவிர இலக்கிய ஈடுபாடுகொண்ட அவரிடம் கடந்தகால தற்கால இலக்கிய செயற்பாடுகள் குறித்தும் அதனுள் ஓடிவிளையாடும் அரசியல் பெருச்சாளி குறித்தும் கேட்டபோது தன்னுடைய அனுபவத்தினூடாக நிறையவே பேசினார்.  அந்தப் பேச்சுக்களில்  ஒவ்வொரு வரிகளிலும் இன்னும் இன்னும் கேள்விகளே தொடர்கின்றன. அந்த முரண்பாடுகளுடன் இன்னும் ஏதாவது பக்கங்களில் தேவகாந்தனுடன்   உரையாட முடியும். தேவகாந்தனுக்கும்  அதுவே விருப்பமும்.  



உங்களது எழுத்தியக்கம் ஆரம்பமான காலங்கள் குறித்துக் கொஞ்சம் சொல்லுங்களேன்.


சாவகச்சேரி றிபேக் கல்லூரியில் நான் அட்வான்ஸ்ட் லெவல் பாஸ் பண்ணின வருசம், அப்பதான் நான் நினைக்கிறன் பல்க லைக் கழகங்களில விகிதாசார அடிப்படையிலதான் பிரவேசிக்கேலும் எண்ட சட்டச் செயற்பாடு உறுதியாய் நடைமுறைக்கு  வாற நேர மெண்டு, அதாலை கூடுதலான தமிழ் மாணவருக்கு கூடுதலான புள்ளிகள் தேவைப்பட்டுது. அதால அந்த வருஷம் பல்கலைக்கழகத்துக்குப் போற வாய்ப்பு எனக்குக் கிடைக்கேல்லை. திரும்ப சோதினை  எடுத்து பாஸ்பண்ணி அடுத்த வருசம் போயிருக்கலாம்தான். அப்பிடித் தான் செய்யச்சொல்லி தெரிஞ்சாக்களும் சொந்தக்காறரும் சிநேகிதர்மாரும் சொல்லிச்சினம்.ஆனா அப்பிடிச் செய்யிறதுக்கான மனநிலை வரேல்லை. அது ஒரு வீழ்ச்சியாய்ப் போச்சு. மனமொடிஞ்சு போச்சு. படிக்கிற காலத்திலையும் சோதினைக்காய்ப் படிக்கிற குணம் என் னிட்டை இருக்கேல்லை. அரசாங்க வேலையைவிடவும் வேற கூடுதலான கனவுகளோட படிப்பும், அதில்லாத வாசிப்புகளோடையும்தான் நான் அப்பவும் இருந்திருக்கிறன்.  கனவு எண்டுறது எதிர்காலத்தில எப்படி இருக்கவேணும், நிறைய சங்க, நவீன தமிழிலக்கியங்களை வாசிக்கவேணும், எழுதவேணும், ஒரு விரிவுரையாளராய் பேராசிரியராய் வரவேணும் எண்டதுகளைத்தான் நான் குறிப்பிடுறன். இந்தக் கனவுகளுக்கு ஆதாரமாய்ச் சில பேராசிரியர் விரிவுரையாளரின்ரை அறிமுகமும் இருந்ததைச் சொல்லலாம். அட்வான்ஸ்ட் லெவல் படிக்கேக்குள்ளையே வாஸிற்றியிலை படிச்ச நண்பர்களோட போய்  கலாநிதி கைலாசபதியை  நான் சந்திச்சிருக்கிறன். சு.வித்தியானந்தன்ரை ‘தமிழர் சால்பு’ படிச்ச கையோடை, அவரின்ரை இராவணன் நாடகம் யாழ்ப்பாணத்தில போட்டிச்சினம். அதையும் பாக்கக் கிடைச்சுது. அதையொட்டின ஒருநாளிலை சு.வித்தியானந்தனையும் சந்திக்கிற வாய்ப்புக் கிடைச்சுது. எனக்கு பல்கலைக் கழகத்தில படிச்ச, படிச்சுக் கொண்டிருந்த கனபேர்  நண்பர்களாயும் இருந்தினம். இந்தக் காரணங்களால எனக்கு அந்தமாதிரிக் கனவுகளும் ஆசையும். தமிழ் மொழியிலைதான் ஓனர்ஸ் செய்ய  நான் நினைச்சிருந்தது. அதாலை சமஸ்கிருதத்தை அட்வான்ஸ்ட் லெவலில ஒரு பாடமாய் நான் படிச்சன். மொழிவாரியாய் தமிழ்ப் படிப்புக்கு சமஸ்கிருதம் கொஞ்சம் உதவியாய் இருக்குமெண்டது அப்ப என்ரை நினைப்பு.
  பல்கலைக்கழகத்துக்கு எடுபடாமல் போனவுடனை, என்ரை தீவிரமான வாசிப்புப் பழக்கத்தாலை இயல்பா வந்து எழுத்துத் துறையைத்தான் என்ரை மனம் நாடிச்சிது.அப்ப நான் எழுதத் தொடங்கேல்லை எண்டாலும் நல்ல வாசகனாய் இருந்திருக்கிறன். பள்ளிக்கூடத்தில படிக்கிறபோதே படிப்புக்குச் சம்பந்தமில்லாத நிறைய நாவல்களும் சிறுகதைகளும் சிறுபத்திரிகைகளும்தானே  வாசிச்சுக் கொண்டு திரிஞ்சிருக்கிறன். அப்ப எழுத்து நாட்டமாய் இருந்ததால நான் போகவேண்டியிருந்தது பத்திரிகைத் துறையாய்த்தான் இருந்தது. அந்தநேரம் யாழ்ப்பாணம் ‘ஈழநாடு’ பத்திரிகைக்கு உதவி ஆசிரியர் எடுக்கினமெண்டு கேள்விப்பட்டு நானும் விண்ணப்பம் குடுத்தன். தெரிவும் செய்யப்பட்டன். அது ஒரு முக்கியமான திசைவழி மாற்றம் எனக்கு.
நான் ‘ஈழநாடு’ போன நேரத்தில அ.செ.முருகானந்தன், ஊர்க்குருவி எண்ட புனை பெயரில எழுதின  பாலசுப்பிரமணியன் போன்ற முதுபெரும் எழுத்தாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தினம். அங்க போன பிறகு நிறையக் கவிஞர்கள் இ.அம்பிகைபாகன் ச.அம்பிகைபாகன், மற்றது இ.நாகராஜன், ச.பஞ்சாட்சரம் போன்றவர் களுடன் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது.அந்த நேரத்தில ‘ஈழ நாடு வாரமல’ரை பொறுப்பெடுத்திருந்தது சசிபாரதி என்ற நண்பர். நான் போன நேரம் ஈழநாடு துவங்கின 10வது ஆண்டுவிழாவைப் பெரிய அளவிலை நடத்த ஏற்பாடும் நடந்துகொண்டிருந்தது. நாவல், நாடகம், சிறுகதை, கவிதைப் போட்டிகள் அறிவிக்கப்பட்டு படைப்புகளைக் கையளிக்க, வேறை காரணங்களுக்காய் நிறைய வடமாகாணத்து எழுத்தாளரும் கவிஞரும் அலுவலகத்துக்கு வந்துகொண்டும் போய்;க்கொண்டுமாயிருந்தினம். அண்மையில காலஞ்சென்ற செம்பியன்செல்வன், மற்றும் செங்கையாழியான், செ.கதிர்காமநாதன் போன்றவர்கள் அக்காலகட்டத்திலை எனக்கு அறிமுகமானவர்கள்தான். சமகால ஈழ இலக்கியத்தின்ரை அகலம் தெரிய நான் திகைச்சுப்போனன். கவனிக்கவேணும். நான் அகலமெண் டுதான் குறிப்பிட்டிருக்கிறன். ஆழமான இலக்கிய முயற்சிகள் ஓரளவுக்கே இருந்திருப்பினும், அது நூற்றுக்குத் தொண்ணூறு வீதமும் வடமாகாணத்துக்கு வெளியிலை நடந்ததாய்த்தான் நான் அப்பவே கருதியிருந்தன். இதுவொண்டும் அரசியல் சார்ந்த விசயமில்லை. வாழ்வியல் சார்ந்த விசயம்தான். இதைப்பற்றிச் சந்தர்ப்பம் வந்தால் பிறகு விரிவாய்ப் பாப்பம்.
துவங்கின விசயத்துக்கு வாறன். அதுவரைக்கும் எனக்காக எனக்குள்ளை எழுதிக்கொண்டிருந்த நான் கொஞ்சம் வெளியால எழுதத் துவங்கினன். அப்ப சிறுகதைதான் எனக்கு வாய்ப்பான உருவமா வந்தது. முதல் சிறுகதையும் எழுதியாச்சு. அதுவும் நான் தினசரி ஈழநாடு அலுவலகத்துக்குப் போய் வந்து கொண்டிருக்கேக்கை நான் வழியிலை அவதானிச்ச ஒரு சம்பவத்தை மூலமாய்க் கொண்ட துதான். இப்ப எனக்குள்ளை ஒரு தயக்கம். நான் ஈழநாட்டில வேலை செய்யிறன். என்ரை சிறுகதையை ஈழநாடு பத்திரிகையிலயே கொடுத்தாப் போடுவினம். ஆனா எனக்கு அது விருப்பம் இல்லை. நான் வேலை செய்யிற பத்திரிகை எண்டதால எனது சிறுகதை தகுதி குறைவாய் இருந்தாக் கூட போடப்படக்கூடிய வாய்ப்பு வரும். அதுக்காக, வாரம் வாரம் கண்டியில இருந்து வெளிவந்துகொண்டிருந்த ‘செய்தி’ எண்ட பத்திரிகைக்கு அனுப்பினன். அதில வெளிவந்த என்ரை முதல் சிறுகதைதான் ‘குருடர்கள’;.


அந்தக் காலகட்டத்திலை சுமாராய் எத்தனை சிறுக தைகள் எழுதியிருப்பீர்கள்?


‘குருடர்க’ளுக்கு நல்ல பாராட்டு இருந்தது. தொடர்ந்து எழுத உற்சாகம் வந்தது. பிறகு ‘சிந்தாமணி’, ‘மல்லிகை’ மற்றும் ‘ஈழநாடு வாரமலர்;’ போன்றவற்றிலயும் எழுதினன். எண்டாலும் பெரிசாய் எழுதிக் குவிச்சிடேல்லை. சுமாராய் ஒரு இருபத்தைஞ்சு சிறுகதையள் எழுதியிருப்பன். சுமார் இருபத்தைஞ்சு வருசத்திலை சுமாராய் இருபத்தைஞ்சு சிறுகதையள் பெரிய தொகையில்லைத்தானே? எண்டா லும் அதுக்குள்ளையே சில நல்ல சிறுகதையள் இருக்கு. இப்ப அதிலை ஒண்டுகூட என்னிட்டை இல்லை. அதையெல்லாம் தேடியெடுத்துத் தொகுப்பாய்க் கொண்டுவாற ஒரு எண்ணமிருக்கு இப்ப. பாக்கலாம்.

எழுதத் துவங்கின காலத்திலையே வருசத்துக்கு ஒரு சிறுகதையெண்டது சரியான குறைவு. அதுக்கேதாவது பிரத்தியேகக் காரணம் இருக்கேலுமா?


பிரத்தியேகக் காரணமில்லை, பொதுக்காரணம்தான் இருக்கு. என்ரை சூழலிலை எங்கையும், தமிழ்ப் பரப்பிலை வெகு வாயும் இருந்த இலக்கியத்தின்ரை கருத்தியல்கள்  குறிச்சு எனக் குள்ளை பிரச்சினை இருந்துகொண்டிருந்தது. என்னைச் சூழ இருந்த இலக்கியத்துக்கப்பாலை ஒரு சமுதாய மாற்றத்துக்கான இலக்கிய முயற்சி நடந்துகொண்டிருந்ததை நான் அவதானிச்சன். உதாரணமாய் டானியல், நீர்வை பொன்னையன், டொமினிக் ஜீவா, செ.கணேசலிங்கன் போன்றவை அப்பத்தைய சமூகம் அடைஞ்சுகொண்டிருந்த வலியளை எழுதிக்கொண்டிருந்தினம். ஆழமற்றதாயிருந்தாலும் அதுகளிலை அர்த்தமிருந்தது. ஆழம் - அர்த்தம் எண்ட விசயத்தை படைப்பு மொழியிலை கலைத்துவம் - கரு அல்லது சமூக பிரக்ஞை எண்டு சொல்லலாம்; என நினைக்கிறன். இது ஒரு படைப்பாளிக்கு மிகமிகச் சிக்கலான ஒரு நிலைமை.
இப்ப பாருங்கோ, அர்த்தமில்லையெண்டு யாழ் இலக்கிய வட்டத்தோடையும் சேராமல், ஆழமில்லையெண்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோடையும் இணையாமலுமிருந்தால் ஒரு படைப் பாளி எந்த இடத்திலையும்தான் ஒரு அநாமதேயம். தொகுப்பாய் வராத எழுத்தாளர்கள் இலங்கை விமர்சகர்களாலை பேசப்பட்டிருக் கினம். இந்த இரண்டு பக்கத்திலை ஒரு பக்கத்தாலையெண்டாலும் பேசப்பட்டிருக்கினம். ஏனெண்டா அவை குழுநிலை சார்ந்தவை. ஆனால் தேவகாந்தன் பேசப்படேல்லை. ஏன்? அவன் இந்த இரண்டு பக்கத்திலை எந்த இடத்திலையும் இல்லை எண்டதுதான். இதாலை அவனுக்கொண்டுமில்லை. விமர்சகர்கள்தான் காலத்தின் கேள்வி களைச் சந்திக்கவேண்டி வரும். இது அவையின்ரை பிரச்சினை.
தானொரு தனிப் பக்கமாய்த் தனியொதுங்கிருக்கிறது ‘ஊரோடை ஒத்தோடு;’ எண்ட நீதிக்கு முரணாய் வரேல்லையோ எண்டா, வரேல்லைத்தான். எந்த அம்சத்திலை போகேலாமலிருந்துதோ அங்கதான் போகாமலிருந்தனே தவிர, போகக்கூடின அம்சத்திலை போய் இணைஞ்சன்தானே. இயல்பிலயே மார்க்சிய ஈடுபாடு கொண்டி ருந்த நான், சமூக அரசியல் காரணங்களுக்கான விசயங்களிலை சேர்ந்தியங்கினன்தானே. தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்திலை ஆதரவாளனாய் மட்டுமில்லை, அதிலை ஒரு போராளியாயே இருந்தன். சித்தாந்தத்திலை நம்பிக்கையிருந்ததாலை, இடதுசாரி இயக்கத்திலை நம்பிக்கையிருந்தது. கொம்ய+னிஸ்டுக் கட்சியிலை ஆதரவிருந்தது. நான் கட்சியிலை அங்கத்தவனாய் எப்பவும் இருக்கேல்லை. அங்கத்த வனாய் இருந்திருந்தாப் பிழையுமில்லை. அந்த நேரத்திலை பிழை யில்லை.

இப்ப பிழையா?


நூற்றுக்கு நூறு வீதம். ஒருகாலத்திலை, நாங்கள் மார்க்சீ யத்தைப் படிக்க ஆரம்பிச்ச காலத்திலையெண்டு வையுங்கோவன், இலங்கை அரசியல் பிரச்சினையை ஒரு இடதுசாரி அரசாங்கத் தாலைதான் தீர்த்துவைக்க ஏலுமெண்டு நாங்கள் மனசார நம்பினம். இன ஐக்கியம், ஒரு நாடு, சோசலிச சமுதாயமெல்லாம் எங்கடை கனவுகளாயிருந்தது. மே தினத்துக்கு லொறி லொறியாய் யாழ்ப்பா ணத்திலையிருந்து கொழும்பு போய் சிங்களச் சகோதரர்களோடை ஊர்வலங்களிலை கலந்துகொண்டது அந்தக் கனவுகளிலை நம்பிக் கையை வளத்துவிட்டுது. ஆனா…இண்டைக்கு…? அந்த நம்பிக்கை யெல்;லாமே தகர்ந்துபோச்சு. ஒரு இணைக்கப்பட இயலாத உடை வுக்கு சிங்கள - தமிழ் உறவு வந்திட்டுது. எல்லாத்துக்கும் தமிழின, சிங்கள பேரினவாத, இடதுசாரிக் கட்சிகளெண்ட காரணங்கள் கொஞ்சம் கொஞ்சம் இருந்தாலும், முதல் காரணமாய் நான் இடதுசாரித் துரோகத்தைத்தான் சொல்லுவன். 1983 யூலை கலவரக் காலத் திலைகூட இந்த உலகத் தொழிலாளரே, ஒன்றுபடுங்கள்! என்று கோஷம் போட்டுக்கொண்டிருந்த கொம்யூனிசவாதிகள் வாய் திறக் கேல்லை. அது எனக்குப் பெரிய ஆச்சரியம்.
ஒரு தமிழ் அரசியல்வாதி, சிங்கள அரசியல்வாதி, இடதுசாரி அரசியல்வாதி எண்டு மூண்டுபேரையும் எனக்கு முன்னாலை நிப்பாட்டி, இண்டைக்கு இந்த நாடு இப்பிடிச் சிதைஞ்சு, சிதறி, அல்லோலப்பட்டுக் கிடக்கிறதுக்கு மூலகாரணமாய் இருந்தவனெண்டு நான் நம்புற ஒரு வாதியை அடிக்கலாமெண்டு சொன்னால், கொஞ்சம ;கூடத் தயங்காமல் இடதுசாரிக் கட்சி அரசியல்வாதியை அடிச்சே போடுவன்.
சிங்கள இனவாதிகளின்ரை தரப்படுத்தல் முறை காரணமாய்க் கல்வி பாதிக்கப்பட்ட நான், இடதுசாரிகளின்ரை போலித்த னத்தாலை அரசியல் துரோகத்துக்கும் ஆளானன் எண்டு சொல்ல வேணும். நெஞ்செல்லாம் வாழ்க்கை முழுதும் வலியே தொடர்ந்தது.
இந்த வலியை, எழுதித்தான் அடக்கினன். 2003ம் வருசம் வெளிவந்த என்ரை ‘யுத்தத்தின் முதலாம் அதிகாரம்’ நாவல் பேசுறது இதைத்தான். நிகழ்வும் கற்பனையுமான அப் புனைவு நாவலின் பின்னணி முழுக்க ஒளிர்வது இந்தச் சமூக எதார்த்தம்தான். ஆயுதப் போராட்டத்தின்ரை மூலமே இஞ்சையிருந்து துவங்கிறதாய்த்தான் நான் காணுறன்.

இதுபோன்ற கருத்துக்களின் அடிநாதமாயே உங்கள் இடைக்காலப் படைப்புக்களும் இருந்ததாய்ச் சொல்ல முடியுமா?


அப்பிடிச் சொல்லேலாது. எனக்குள்ளை அப்ப தெளிவின் மைதான் இருந்தது. இதை வெளிப்படையாய்ச் சொல்லுறதிலை எனக்கு வெக்கமில்லை. கலை கலைக்காகவே, கலை மக்களுக் காகவே எண்ட கோட்பாடுகளில எனக்குச் சார்பெடுக்கேலாமலிருந்தது நிஜம். ஒரு தளம்பல் இருந்துகொண்டேயிருந்தது. ஒருபக்கம் டானியல், நீர்வை பொன்னையன், இ.முருகையன் போன்றவை. மற்றப்பக்கம் எஸ்.பொன்னுத்துரை, மு.தளையசிங்கம், நீலாவணன், மஹாகவி போன்றவை. பின்னவை தரத்தாலை நிமிர்ந்து நிண்டினம். இதுக்காக இடதுசாரி எழுத்தாளர்கள் எழுதினதெல்லாம் தரமில்லா ததெண்டு நான் சொல்ல வரேல்லை. இதை திரு. எம்.வேதசகாயகுமார் கனடாக் ‘காலம்’சஞ்சிகையில எழுதினநேரம் அதுக்கு எதிர்வினை யாற்றினது ஈழத்துத் தமிழ்ச் சூழலிலை நான் ஒருதன்தான். அவை எழுதினதிலையும் தரம் இருந்தது. நீர்வை பொன்னையன்ரை ‘மேடும் பள்ளமும்’ சிறுகதைத் தொகுப்பிலை மிகஅற்புதமான சிறுகதைக ளெல்லாம் இருக்கு. ஆனாலும் ஒட்டுமொத்தமான எழுத்து ஒப்பீட்ட ளவிலை தரம் குறைவுதான். இப்பிடியொரு சார்பு நிலைச் சிக்கல் இருந்ததாலை, என்ரை எழுத்துக்கள் பெரும்பாலும் ஒரு மௌடீ கத்தோடேயே வெளிவந்ததாய்ச் சொல்லவேணும். பின்னாலை வந்த என்ரை படைப்புக்கள் இலக்கியத்தில தரத்தை முன்வைக்கும் எழுத்துக் களாய்த்தான் இருந்திருக்கு.
1981ம் ஆண்டு ரண்டாம் தடவையாய் ஈழநாடு எரிக்கப்படு றதுக்கு முந்தி நான் சொந்தக் காரணங்களுக்காக பத்திரிகை நிறுவனத்திலிருந்து விலகியிட்டன். விலகிப்போய் விவசாயம் செய்து கொண்டு இருந்தன். உடையார்கட்டிலை காடு வெட்டினதெல்லாம் அப்பதான். அது ஒருகாலம். தனிமனித அனுபவங்களுக்கான காலம்.
ஈழநாட்டில் இருந்த காலம் மிக முக்கியமானது. ஏனெண்டா,என்ரை படைப்புக்கள்  அச்சுருவிலயாச்சும் வந்தது இந்தக் காலத்திலதான். 1967ம் ஆண்டு ஈழநாட்டில சேர்ந்தனான். 68ம் ஆண்டு என்ரை முதல் சிறுகதை வந்தது. 1984ம் ஆண்டு தமிழ் நாட்டுக்குப் புலம்பெயர்ந்த பின்னர்தான்; கூடுதலாய் எழுதவும் வாசிக் கவும் வாய்ப்புக் கிடைச்சுது. தினமணிக் கதிர், கல்கி, கணையாழி போன்ற இடைநிலைப் பத்திரிகைகளிலும், கதைசொல்லி, கல்வெட்டுப் பேசுகிறது, சுந்தர சுகன், நிழல், சதங்கை போன்ற சிற்றிதழ்களிலும் பரவலாய் எழுதினன். அப்பிடி எழுதின சிறுகதையள் மூண்டு தொகுப் பாய் வந்திருக்கு. முதலாவது ‘நெருப்பு’, இரண்டாவது‘ இன்னொரு பக்கம்’, மூண்டாவது ‘காலக்கனா’.

மல்லிகையில் எழுதியதாகக் குறிப்பிட்டீர்கள். மல்லிகையின் ஆசிரியரான டொமினிக் ஜீவாவும்  ஒரு இடதுசாரிப் பாரம்பரியத்திற்கூடாக தனது வேலைத் திட்டத் தைப் பகிர்ந்துகொள்பவர். மல்லிகையுடனோ அல்லது டொமினிக் ஜீவாவுடனோ சேர்ந்தியங்கிய சந்தர்ப்பங்கள் ஏதாவது உண்டா?


இல்லை. அதற்குரியதாய் நடைமுறை அமையேல்லை. ஆனால் ஓரளவுக்கு இடதுசாரிப் பத்திரிகை எண்ட வகையில ஒரு ஆதரவு இருந்தது. அப்பவே ரஷ்ய சார்பு, சீன சார்பு எண்ட பெரிய பிளவு இலங்கைக் கொம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளை வந்திட்டுது. நான் அப்ப தீவிர ஆதரவாளனாய் இருந்தது சீனசார்புக் கொம்யூனிஸ்ட் கட்சியோடதான். அதாலை மல்லிகை ஜீவாவோடு நெருங்கிப் பழகிற வாய்ப்பு இல்லாமல் போச்சு. அவர் ரஷ்ய சார்பு. எனக்கு டானியலோட இருந்த உறவு ஜீவாவோட இல்லை. டானியல் சீனச் சார்பு   கொம்யூனிஸ்டுகட்சி.

ட்றிபேக் கல்லூரியில் அட்வான்ஸ்ட் லெவல் படித்தும் பல்கலைக்கழகம் போக முடியாமல் போனதற்கு தரப்ப டுத்தல்தான் காரணம் என்று கூறியிருந்தீர்கள். அந்த நேரத்தில் தரப்படுத்தல் முறை அமுல்படுத்தப்பட்டபோது உங்கள் உணர்வு எப்படியிருந்தது? இப்போது அதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?


அந்த நேரத்தில மாணவனாய் இருந்து தரப்படுத்தலால் பாதிக்கப்பட்ட முதல் கட்டத்தில, எனக்கு ஒரு அபரிமிதமான வெறுப்பு அதன்மீது இருந்ததுதான். நான் பாதிக்கப்பட்ட காரணத் தாலையும் அது ஏற்பட்டிருக்கலாம். இதை ஊக்குவித்ததுக்கு வேறை காரணமும் இருக்கு.
தரப்படுத்தல் எண்டது அந்த நேரத்துத் தமிழ்க் கட்சிக ளாலையும் வரவேற்கப்படேல்லை. அதுக்கு எதிராய்த்தான் இருந்தினம். அதுக்காகவே நான் தரப்படுத்தலை எதிர்த்ததாய்ச் சொல்லேலாது. சுதந்திரன் வாசகனாய் இருந்த காலத்தைவிட, தேசாபிமானியின் ரையும், தொழிலாளியின்ரையும் வாசகத் தாகத்தோடைதான் நான் கனகாலம் இருந்திருக்கிறன். அதாலை என்ரை பார்வை பெரிசாய் வழி தப்பிச் செல்ல வாய்ப்பில்லை. தரப்படுத்தல் எண்டது சமூக அக்கறை சேர்ந்த விசயம். அது அரசியல் காரணத்தோடை வந்த தைத்தான் நான் எதிர்க்கிறன். சிங்கள பேரினவாதிகள் எப்பவுமே இப்பிடித்தான். தனிச் சிங்களச் சட்டத்துக்கும் தரப்படுத்தலுக்கும் எனக்கு பெரிய வித்தியாசம் தெரியேல்லை.




இந்தியாவிலை நான் இருந்த காலத்திலைதான் வி.பி.சிங் பிரதமராய் இருக்கேக்குள்ளை மண்டல் கமிசன் அறிக்கையை சட்டரீதியாய் நடைமுறைப்படுத்த நடவடிக்கையள் எடுக்கப்பட்டது. இந்தியாவே கொதிச்செழுந்திட்டுது. மண்டல் கமிசன் அறிக்கை சமூக அக்கறையின் மேலானது. சிங்கள அரசாங்கத்தின்ரை தரப்படுத் தல் இனத்துவேசம் காரணமானது. அதாலை இரண்டும் ஒப்பில்லை.
தரப்படுத்தலின்ரை நியாயம் நியாயமின்மை எண்டதை அதன் நோக்கத்தை வைச்சுத்தான் பாக்கவேணும். பின்தங்கின ஒரு பிரதேசம் அல்லது ஒரு சமூகம் அல்லது ஒரு இனம் முன்னேறுற துக்கான ஒரு வாய்ப்பாயிருக்க இந்தத் தரப்படுத்தல் முறை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால,; அதை நியாயம் எண்டுசொல்ல எந்த இடத்திலையும் எனக்குத் தயக்கமில்லை. அந்த நேரத்திலை விபரம் அதிகம் தெரியாத வயதானபடியால் அதிகமான எதிர்ப்பு அல்லது அதிகமான வெறுப்பெண்டு இருந்திருந்தாலும், இப்ப கூட அந்தச்செயற்பாட்டில சமூக நியாயம் இருக்கிற தாய்ச் சொல்ல என்னாலை ஏலாமல்தான் இருக்கு. அந்த நேரத்திலை தமிழ் மாணவர்க ளுக்கிருந்ததைவிட, சிங்கள மக்களுக்கான பல்கலைக் கழகங்கள் அதிகமாய் இருந்தது. வித்தியோதயா, வித்தியாலங்கார போன்றவை சிங்கள மாணவர்களுக்கானவை. ஆனால் பெரதெனியா மட்டும்தான் இரண்டினங்களுக்கும் பொதுவானதாய் இருந்தது.   இப்படியிருக்க, கூடியளவு பல்கலைக்கழக இடங்கள் சிங்கள மாணவர்களுக்குப் பறிபோனது, அதாலை தரப்படுத்தல் நடைமுறைப்படுத்தப்பட்டதெண்டு எங்கடை இடதுசாரித் தோழர்கள் சொன்னதை நான் நம்பேல்லை.

தரப்படுத்தல் முறை தமிழ் சிங்கள மாணவர்களுக் கிடையிலான இனப்பிரிவின் அடிப்படையில் உருவாக்கப் பட்டதாகச் சொல்கிறீர்கள். உண்மையில் பின்தங்கிய பிரதேச மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட தரப்படுத்தல் முறை பெரும்பாலான பின்தங்கிய மாவட்ட தமிழ் மாணவர்களுக்கு நன்மை பெறவைத்த விடயம் தானே. யாழ்ப்பாணத்தைத் தாண்டி  அநேக மாணவர்களுக்கு தரப்படுத்தல் முறை பயனளித்ததை ஒப்புக் கொள்ளத்தானே வேண்டும்? அதை எப்படி நிராகரிப்பது? யாழ் மாவட்ட மாணவர்கள் தமது கல்விக்காலம் முழுவதையும் யாழ்ப்பாணத்தில் படித்துவிட்டு பல்கலைக்கழக பரீட்சையைமட்டும் பின்தங்கிய பிரதேசத்தில் வந்து எழுதி அந்த ஒரு குறைந்த பட்ச உரிமையையும்தட்டிப்பறிப்பதை அறிந்திருக்கிறீர்களா?


தரப்படுத்தல் முறை வந்தாப்பிறகுதான் இவைக்கு அதிக சந்தர்ப்பங்கள் கிடைச்சதெண்டு சொல்ல முடியாது.  யாழ் பல்கலைக் கழகம் முதலிலை உருவாச்சுது. பிறகு மட்டக்களப்பு பல்கலைக் கழகம். இப்ப கடைசியாய் வவுனியாவிலை ஒண்டு. இந்தப் பல்கலைக் கழகங்கள் வந்தாப்பிறகுதான் பின்தங்கிய பிரதேச மாணவர்களுக்கு அதிக சந்தர்ப்பம் கிடைச்சதாய் நான் சொல்லுவன். இதை முதல்லேயே அரசாங்கம் செய்திருக்கலாம். தமிழ்ப் பகுதி மாணவர்களுக்கு தமிழ்ப் பகுதியிலையும், சிங்கள
மாணவர்களுக்கு சிங்களப் பகுதியிலையும் பல்கலைக் கழகங்களை உருவாக்கிற திட்டம்  அரசாங்கத்துக்கு நிச்சயமாய் இருந்தது. அதை நிறைவேற்றுறதை விட்டிட்டு ஒரு பகுதியினுடைய படிப்பு வசதியைக் குறைப்பதனூடாய்த்தான் அரசாங்கத்தாலை இதைச் செய்ய முடிஞ்சதெண்டதை என்னாலை எப்பவுமே  ஒப்புக்கொள்ள ஏலாது.
இந்த விசயம் - நீங்கள் சொன்ன வேறு பிரதேசங்களிலை வடபகுதி மாணவர்கள் வந்து பரீட்சையெழுதி அந்தப் பிரதேச மாணவரின்ரை பல்கலைக் கழகப் பிரவேசத்தைப் பாதிக்கிற விசயம் - நான் முந்தியே அறிஞ்சதுதான். யாழ்ப்பாணத்திலை சித்தியடையாமல் போற சிலபேர் இப்பிடிச் செய்திருக்கினம்தான். இப்பிடி எங்கை நடக்காது? ஒரு ஒழுங்கின்மையின்ரை அடையா ளமிது. இது எங்கையும்தான் ஏற்படலாம். பஸ் ஏறுவதற்கு நிக்கிற கியூவிலை ஒராள் வந்து இடிச்சுத் துளைச்சுக்கொண்டு நிக்கிறேல்லையே, அதுமாதிரி இது.
மற்ற விசயம், இது நடந்து இப்ப கால் நூற்றாண்டுக்கு மேலை ஆகுது. மண்டல் கமிசன் விசயமெல்லாம் சுமாராய் ஒரு பத்தாண்டுகளுக்கு முந்தினது. அதையும் இதையும் ஒப்பிடுகிற திலையும் கால வித்தியாசம் ஒரு பெரிய தாக்கமாய் வந்து நிண்டு இடைஞ்சல் செய்யும். இன்னுமொண்டு. தரப்படுத்தல், யாழ் நூலக எரிப்புக்கும் முற்பட்டது. 1983 கலவரத்துக்கும் முற்பட்டது. இண்டைய நிலைமைக்கு வேறைவேறை மிகமுக்கியமான பிரச்சினைகளெல்லாம் வந்து முன்னாலை நிண்டுகொண்டிருக்கு. யுத்தம் ஒரு மகாபிரச்சினை. இன அழிப்பின் உச்சகட்டம். தரப்ப டுத்தலெண்டது ஒருகாலத்திய இனத்துவேசத்தின் அடையாளம் அவ்வளவுதான்.


ஈழத்து இலக்கியப் பிரதிகளில் கவிதை நீண்ட வளர்ச்சிப் போக்கினை எட்டவில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது? தற்போது போர்க்காலக் கவிதைகள் -புலம்பெயர்ந்து போனபின் எழுதும் இழப்பின் துயரக் கவிதைகள்- இவைதான் ஈழத்துக் கவிதைகள் என்று அடையாளப்படுத்த முடியுமா?


நிச்சயமாய் அப்பிடி இல்லை. சங்கத் தொகுப்புக்குப் பின்னாலை, பாரதி சகாப்தத்துக்குப் பிறகு தமிழ்ப் பரப்பிலயே கவிதை சிறப்பாய் வளந்ததெண்டால் அது ஈழத்திலையெண்டுதான் சொல்லவேணும். நாவல் சிறுகதையெண்டு வேறை எந்த இலக்கிய வடிவத்தைவிடவும் ஈழம் கவிதையில முன்னுக்குத்தான் நிக்குது. தமிழ்நாட்டிலையும் பாரதி சாகாப்தத்திலயிருந்து வீச்சாய் வளந்தது கவிதைதான்.
பிறகு அங்கை ந. பிச்சமூர்த்தியின்ரை செல்வாக்கை அதிகம் பெற்று ஒரு திசையிலையும், ஈழத்தில பாரதியின் தொடர்ச் சியாய் வேறொரு திசையிலையும் அது வளந்ததெண்டு சொல்லலாம். பாரதியின்ரை செல்வாக்கோட ஈழத்தில கவிதை இருந்த காலத்தில் தான் எங்களுக்கு மிகப்பெருங் கவிஞர்களாக சிலர் உருவாகினம். மகாகவி, முருகையன், நீலாவாணன் எண்டு முக்கியமாய் இந்த மூண்டு பேரையும் இந்த இடத்திலை சொல்லலாம்.
இவையின்ரை கவிதைப் போக்குகளைத் தனித்தனியாய்த் தான் பாக்கவேணும். அவைக்குள்ளையும் பிரிநிலைக் கோடுகள் இருக்கு. மேலெழுந்தவாரியாய்ச் சில விஷயங்களைச் சொல்லுறன். மண்,பிரதேசம் இந்தமாதிரியானஉணர்வு மகாகவியின் கவிதைக ளிலை அதிகம். அதுபோல நீலாவாணனின் கவிதையளிலும் அது தூக்கலாயிருக்கும். அதாவது, அவரது கிழக்கு மாகாண வளம் அவரது கவிதைகளில் அதிகம் இருக்கும். இதுக்கான ஒரு முக்கிய காரணமாய் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை நான் சொல்லுவன்.  இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மண்வளத்தைப் பேசுகிற  இலக்கியம் என்ற கோசத்தை முன் வைச்சுது. மண்வாசனையெண்டு பொதுவாய்ச் சொல்லிக் கொண்டினம். ஈழத்து நிலப்பரப்பைப் பேசுதல்,அதன் வளங்களைப் பேசுதல், அதன் மக்களைப் பேசுதல், அவர்களின் பேச்சுமொழியைப் பாவனை யாக்குதல் எண்டவை அதன் குணாம்சங்களாயிருந்தன. இவை யந் திரத்தனமாய்ப் பாவிக்கப்பட்டன எண்டு ஏ.ஜே.கனகரட்னா சொல்லுறதும் மெய். அதாலை போலி இலக்கியங்கள் எழுந்தனவெண்ட நிஜத்தையும் நான் இங்கே சொல்லவேணும். சமூகரீதியான எழுச்சியை அது வெளிப்படுத்தியிருந்தபோதிலையும், இலக்கியரீதியாய்ப் பெரிய சாதனைகளை நடத்தினதாய்ச் சொல்லேலாது. ஆனா ஒண்டு. தமிழ் நாட்டிலை தலித் இலக்கியப் பிரஸ்தாபம் எழுகிறதுக்கு முந்தி மக்கள் இலக்கியம் அல்லது மண்வாசன இலக்கியம் எண்ட இந்த எழுத்து ஈழத்திலை பதிவாகியிட்டுது. டானியலையெல்லாம் தமிழிலை தலித் இலக்கிய முன்னோடியெண்டு அ.மார்க்ஸ் சொல்லுவார். ‘இழிச னர் இலக்கியம்’ எண்டு பலராலையும் கேலிசெய்யப்பட அந்த இலக்கியவகையை வளத்தெடுத்தவர் அவர். இந்த மண்வாசைன வீச்சு இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில இல்லாத எழுத்தாளரிட்டையும் ஏற்பட்டுது. இந்தத் தாக்கத்தில எழுதியவர்தான் மஹாகவி. இதன் மூலம் ஈழத்து இலக்கியம் முன்னேறினது எண்டுதான் நினைக்கிறன்.
இதுக்கு அடுத்த கட்டத்தில வந்தவைதான் வ.ஐ.ச.ஜெய பாலன்,சேரன், சண்முகம் சிவலிங்கம் போன்றவை. இவையின்ரை கவிதைப் போக்குகள் முந்தைய தலைமுறையினரின்ரை கவிதைப் போக்குகளை விட நவீனமாக, புதுக்கவிதையின் அம்சங்களோடை வந்துது. முந்தின தலைமுறையினரின்ரை காலம் அரசியலிலை இனப்பிரச்சினையும், சமூகத்திலை சாதிப் போராட்டமாயும் இருந்த காலம். பின்னாலை வந்தவையை சமூகப் பிரச்சினையும், யுத்தமும் எதிர்கொண்டுது. பாடு பொருள் இப்ப வேறாயிட்டுது. இவைக்கு கொஞ்சம் பிந்தி வந்ததாய்ச் சொல்லக்கூடிய அ.யேசுராசா, அஸ்வகோஷ், றஷ்மி, மு.பொன்னம்பலம், சோலைக்கிளி போன்றவை எதிர்கொண்டது இதே எதார்த்தத்தையேயெண்டாலும் தீவிரமானதாய் எதிர்கொண்டினம். இண்டைக்கு போராளிகளே படைப்பாளியளாயும் இருக்கினம். ‘போர் உலா’ போன்ற புதினம் தமிழ்நாட்டுச் சூழலிலை வரேலாது. வரவேயேலாது. அதுமாதிரித்தான் மாலதி, மைதிலி, தான்யா, அனார், சிவரமணி, செல்வி போன்றவையின்ரை கவிதையளும். இவையெல்லாம் போரின்ரை வார்ப்புக்கள். கி.பி.அரவிந்தன், சுகன், நட்சத்திரன் செவ்விந்தியன், செழியன், திருமாவளவன், பா.அகிலன் போன்றவையும் இந்தமாதிரித்தான். உலகமகா யுத்த காலங்களிலையும் அதையொட்டியும் மிகச் சிறப்பான கவிதையள் உலக இலக்கியப் பரப்பிலை பாடப்பட்டன என்பினம். மெய். முப்பதாண்டுப் போர்ச் சூழலிலை ஈழத்திலையும், ஈழத்தவராலை வெளிநாடுகளிலையிருந்தும் பாடப்பட்ட கவிதையள் பல அவைக்கு நிகரானவை இல்லாட்டி அவைக்குக் கொஞ்சம் மேலானவை யெண்டதிலை எனக்கு வேறை கருத்தில்லை.

தற்போது போர்க்காலக் கவிதைகள் - புலம்பெயர்ந்து போனபின் எழுதும் இழப்பின் துயரக் கவிதைகள் - இவைதான் ஈழத்துக் கவிதைகள் என்று அடையாளப்படுத்த முடியுமா?


இக் காலகட்டத்தின் விசேஷமான அடையாளமே போர்ச் சூழல்தானே? இதைவிட்டுக் கவிதை வேறையெங்கை போகேலும்? எண்டாலும் ஒண்டை நாங்கள் மறந்திடக்கூடாது. மனித இருப்பு இன்னும் இருக்கு. மரணம்போலவே ஜனனமும் நடக்குது. கண்ணீரைப ;போல காமமும் வருகுது. ஒரு உறவு போக இன்னொண்டு வருகுது. எல்லாம் இயங்கிக்கொண்டே இருக்கு. அப்ப என்ன வித்தியா சமெண்டா… நேற்று மாதிரி இண்டைய வாழ்க்கை இல்லையெண்ட துதான். போர்க்காலக் கவிதை இதையெல்லாமே பேசுதுதான்.
புலம்பெயர்ந்த இடத்திலைகூட இழப்புமட்டுமே வலியில்லை. இங்கையிருக்கிற கலாச்சாரச் சிக்கல், அடையாளச் சிக்கல் எல்லாமே பிரச்சினைதான். நிறச் சிக்கல், மொழிச் சிக்கல் இல்லையெண்டு சொல்லவேண்டாம். இல்லையெண்டமாதிரி ஒரு தோற்றம்தான் இருக்கு. இதெல்லாம்தான் கவிதைப் பொருள்.
ஈழத்துக் கவிதைகள் எல்லாம் போர்க் காலக் கவிதையள், புலம்பெயர்ந்தோர் கவிதையெண்டது வெறும் இழப்பின் துயரம் உள்ளதுதான் எண்டதெல்லாம் ஒரு மாயத் தோற்றத்தின் விளைவு. இல்லாட்டி, ஒரு மாயத் தோற்றத்தை உண்டாக்கிறதுக்கான முயற்சி. தமிழ்நாட்டிலை சில வருஷங்களுக்கு முந்தி இப்பிடியொரு முனைப்பு எழுந்ததை இப்ப என்னாலை நினைச்சுப் பாக்க முடியுது.

ஒரு சிலரைத் தவிர்த்து அநேகமானவர்களது கவிதைகளை ஒன்றாக்கி எழுதியவர்களது பெயரை நீக்கி விட்டால் எல்லாம் ஒருவரது கவிதைகள் என்று குறிப்பிடும் நிலையில்தானே  ஈழத்துக் கவிதைகளது போக்கு இருக்கின்றது?


அப்பிடிச் சொல்லேலாது. இந்த யுத்த, புலம்பெயர்வுச் சூழலிலை அநேகமாக எல்லாரின்ரை உணர்வுகளும், பாதிப்புக்களும் ஒரேமாதிரி இருக்குதெண்டு சொல்லலாம். அதாலை, எடுக்கிற பொருள் ஒண்டாயிருக்கிறதுக்கு, அதாவது ஒரேமாதிரி இருக்கிறதுக்கான வாய்ப்பு அதிகம். கவிதையளும் ஒரே விஷயத்தைப் பேசுறதுபோல இருக்கும். ஆனா கவித்துவம் வேறை. அது வித்தியாசமானது. ஒவ்வொருத்தரிட்டையும் ஒவ்வொருமாதிரி அது வெளிப்படும். வெளிப்படவேணும். வெளிப்படாட்டி அது நல்ல கவிதையில்லை. எண்டாலும் சில கவிஞர்கள் வெகுவாக வேறை மாதிரிப் பேசேல்லை எண்டுதான் நினைக்கிறன். தீவிரமாய்ச் சொன்ன நேரத்திலை, கவித்துவமாயோ, வித்தியாசமாயோ அவை சொல்லேல்லை.
சுபத்திரன்ரை கவிதையள் உணர்வு நிறைஞ்சவை. சாதிப்போராட்ட காலத்தில சுபத்திரனது கவிதையள் பலரை எழுச்சிப்படுத்திச்சுது. ‘சங்கானைக்கு என் வணக்கம்’ எண்ட கவிதை மிகமுக்கியமானது. காசி ஆனந்தனது கவிதையள்மாதிரி இவரின்ரை. ஆனா காசியானந்தனது கவிதையள் காலத்திலை நிக்காது. அவரது பல கவிதையளை கவிதையெண்டே  என்னால இப்ப எடுக்க ஏலாது. பசுபதி  வித்தியாசமாய் எழுதினவர். மக்கள் கவிஞரெண்டு சொல்லக் கூடியளவுக்கு எழுதினவர். சுபத்திரன்ரையும் பசுபதியின்ரையும் கவிதையள் பாக்க ஒண்டாயிருக்கும். ஆனா கவித்துவத்தாலை அவை தனித்தனியாவேதான் நிக்கும். புலப்பெயர்வுக் கவிதையளோடை இந்த வர்க்கப் போராட்டக் கவிதைத் தன்மையளை நாங்கள் ஒப்பிட்டுப் பாக்க ஏலும்.

புதுக்கவிதை தோன்றின ஆரம்பத்தில அதுக்கெண்டு யாப்பு இல்லாமல் எதையும் சொல்லலாமெண்ட சுதந்திரப் பாங்கில மயங்கி பலபேர் எழுதிச்சினம் எண்டதை நாங்கள் இப்ப நினைச்சுப் பாக்கலாம். எப்படியும் எழுதலாமெண்டு  இருந்தபடியா எழுதிச்சினம். சிலபேர் வசனங்களையே சிதைச்சு கவிதை மாதிரித் தந்தினம். புதுக்கவிதை மிக மலினப்பட்டுப் போச்சு. அதுக்குமேலை சந்தேகமே வந்திட்டுது, காலத்திலை இது தமிழிலை நிண்டுபிடிக்கக்கூடின வடிவமாய் இருக்குமோவெண்டு.
அதைப்போல ஒரு வீச்சு புலம்
;பெயர்ந்தவர்களின்ரை பக்கத்திலையும் உருவானதுதான். பலபேர் எழுதியிருக் கினம். நிறைய எழுதியிருக்கினம். அவைய ளின்ரை ஏதேனும் எழுத்து வரவேணும் எண்ட நிலையில இருந்த பத்திரிகையள் அவையின்ரை கவிதையளை வெளியிட் டு;துகள். மழைக்காலத்திலை ஈசல் மாதிரி கவிதையள் வெடிச்சுக் கிளம்பிச்சுதுகள். புதுக்கவிதை தொடங்கின காலத்தில இருந்ததுமாதிரி புலம்பெயர்ந்த கவிதைகள் எழுதத் துவங்கின பலபேருக்கு இண்டைக்கு நல்ல கவிதைகள் எழுதக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கு. நல்ல கவிதையளே எழுது கினம். இவையிலை தனித்துவமான கவிஞர் களே இருக்கினம்.  நிறைய எழுதாமல் விட்டாலும் இவையின்ரை அடையாளங்கள் புலம்பெயர்ந்த தமிழர்களுடைய கவிதை வரலாற்றில ஆழமாய்ப் பதிஞ்சிருக்கு.
இதே குறைபாட்டை யுத்தச் சூழலிலை வாழுற கவிஞர்கள் மேலையும் சொல்லலாம். அந்தச் சூழலிலை வெடிச்செழும் கவிதை யளுக்கும் இதேமாதிரியான விளக்கத்தைத்தான் சொல்லமுடியும்.

ஈழத்து இலக்கியச் சூழலில் தரமான இலக்கியச் சஞ்சிகையாக தனக்கான கருத்துநிலையில் நின்று கறாரான விமர்சனப் போக்கை முன்வைத்த சஞ்சிகையாக எதனை நீங்கள் குறிப்பிடுவீர்கள்?


ஈழத்தில, 60களிலயிருந்து பாக்கலாம், எப்பவுமே சிறுபத்திரிகைகள் பெரிய வீச்சைப் பெற்றதில்லை. ‘மறுமலர்ச்சி’ வெளிவந்து ஏற்படுத்தின தாக்கம்மாதிரி வேறு எதுவும் ஏற்படுத்தி னதில்லை. ‘மறுமலர்ச்சி’க் காலத்தில ‘தேனருவி’ எண்டொரு சஞ்சிகை வெளிவந்தது, ‘கலைச்செல்வி’ எண்டு இன்னொரு சஞ்சிகை வெளி வந்தது. ஆனா மறுமலர்ச்சி மாதிரி வேறு எதுவும் பாதிப்பை ஏற்படுத்தினதில்லை. இதுகளின்ர காரணம் நிறைய இருந்தாலும் மேலோட்டமான ஒரு காரணத்தைச் சொல்ல வேணும். அதாவது ஈழத்தில சிறுபத்திரிகைக்கான ஒரு சூழலமைப்பு இருக்கேல்லை. காரணம், ஈழத்தில வெளிவந்து கொண்டிருந்த தினகரன், வீரகேசரி, ஈழநாடு, தினபதி போன்ற பத்திரிகைகள் தங்கடை வார மலர்களை இலக்கியத்தை முன்நிறுத்திக் காத்திரமாயே வெளியிட்டன. தினகரன் வந்துகொண்டிருந்த காலத்தில அதுகின்ரை வாரமஞ்சரி முக்கியமான பதிப்பு. அதுகின்ரை ஆசிரியராயிருந்து கலாநிதி கைலாசபதி ஆற்றிய பங்கு அறுபதுகளிலை மகத்தானது. இப்பிடி இலக்கியச் சஞ்சிகைகள் போல தினசரிகளின்ரை வாரமலர்கள் வந்துகொண்டிருந்தபடியால் வேறை சிறுசஞ்சிகை முயற்சிகள் எதுவும் பெரிதாய்ப் பயன் தரேல் லை. ‘அலைகள், ‘புதுசு’, ‘திசைகள்’,’நந்தலாலா’ எண்டு நிறையச் சிறுபத்திரிகைகள்;. நிச்சயமாய் எங்களுக்கெண்டு ஒரு சிறுபத்திரிகை வரலாறிருக்கு. அதோடையே அதுகள் காத்திரமானதாயில்லை எண்ட உண்மையும் இருக்கு.
‘மல்லிகை’ வந்து கொண்டிருந்தது. இப்பவும் வந்து கொண்டிருக்கு. மல்லிகை வந்து எதாவது ஒரு இலக்கியப் பாதிப்பை இதுவரை செய்ததா எண்டால் இல்லை எண்டுதான் சொல்லுவன். அது இதுவரைக்கும் செய்ததும் செய்துகொண்டிருக்கிறதும் சில படைப்பாளிகளுக்கு ஒரு களமாக இருப்பது மட்டுந்தான். தன்ரை போக்கை-நிலைப்பாட்டை அது சொல்லிக்கொண்டிருக்கு எண்டது வேறை சங்கதி. அது ஒரு சிறுபத்திரிகையின்ரை வேலையில்லை. சிறு பத்திரிகை எண்ட கருத்துருவாக்கத்தின் மீது எனக்கு வித்தி யாசமான கருத்திருக்கு. மல்லிகையைப் போலத்தான் ;ஞான’மும். ஆனால் ‘சரிநிகர்’ பத்திரிகை வந்து கொண்டிருந்த காலத்தில, 90களில, முக்கியமான ஒரு நவீன இலக்கியத் தளமாயும் இருந்த தெண்டதை மறுக்கேலாது. நவீன அரசியல், இலக்கியச் சிந்தனைக் கான பத்திரிகையாய் இருந்தது எண்டதைத் தவிர, அதுவும் ஒரு பெரிய அலையாக ஈழத்து இலக்கியப் பரப்பிலை செயற்படேல்லை. சரிநிகர் காலம் என்று வரேல்லை. மணிக்கொடி காலம், சரஸ்வதி காலம் எண்டு தமிழ்நாட்டில இருக்கிறது போல ஒரு காலத்தை ஏற்படுத்த இந்தப் பத்திரிகைகளால முடியேல்லை. பத்திரிகையள், சிறுசஞ்சிகையள் காலத்தையுருவாக்கிறதில்லை, காலமே தன்ரை தேவைக்கான உபகரணங்களை உருவாக்கிக் கொள்ளுது எண்டதே சரி. எண்டாலும்  காலத்தின்ரை போக்கை, அதுகின்ரை தேவையை அறிஞ்சு இல்லாட்டி முன்னனுமானிச்சு பத்திரிகையளும் வரவேணும்.
‘மூன்றாவது மனித’னை ஒரு காலகட்டத்தை உருவாக்கத் துவங்கின சஞ்சிகையாய் என்னாலை குறிப்பிட ஏலும். மூன்றாவது மனிதன் நவீன இலக்கியத்தின் ஒரு தீவிர தளமாக இருந்தது. இது ஒரு அலையாகச் செயற்பட்டிருக்க முடியும். ஆனா அது தொடர்ந்து வெளிவர முடியாமல் போனது வாசகர்களுக்குத் துக்கமான விசயம். ஈழத்தில வந்து கொண்டிருந்த இவ்வளவு பத்திரிகைக ளையும் மேலோட்டமாப் பாக்கேக்க தன் கருத்து நிலையில சரியாக நிண்டு வெளிவந்த பத்திரிகைகளெண்டு சரிநிகரையும், மூன்றாவது மனிதனையும்தான் குறிப்பிடலாம்.

ஈழத்து இலக்கியப்பிரதிகள் மீதான விமர்சனப் பார்வை என்பது அன்றிலிருந்து இன்றுவரை ஒரு தரமான நிலையில் இருந்ததில்லை. தனிநபர் வழிபாடு அல்லது தனிநபர் வெறுப்பு சார்ந்தே இன்று வரை இருந்து வந்திருக்கிறது. அல்லது மௌனமாய் இருத்தலாய் இருக்கிறது. இதற்கான மூலகாரணம் எது?

தமிழ்ப் பரப்பிலையே விமர்சனம் எண்டது வெறும் வரட்டுத் தனமாய்த்தான் இருந்தது. கலாநிதிகள் க.கைலாசபதி, கா.சிவத் தம்பி, நா.வானமாமலை போன்றவை விமர்சனத்துறைக் குள்ளை பிரவேசிக்கிறவரைக்கும். அண்டைவரைக்கும் தமிழிலக்கியம் நவீன விமர்சனத்தை அறியாது. தமிழிலையிருந்த விமர்சன நூலெண்டு சொல்லக்கூடினதா யிருந்தது சிதம்பர ரகுநாதன்ரை ‘இலக்கியத் திறனாய்வு’ மட்டும்தான். அதுக்கு முந்தி விமர்சனமெண்டு இருந்த தெல்லாம் ரசனைமுறைத் திறனாய்வு எண்டதுதான். கம்பராமாய ணத்தை ரசிகமணி டி.கே.சி. வாசிச்ச முறையிலேயே நவீன தமிழ்ப் பிரதியையும் வாசிச்சினம். வித்தியாசமாய் தமிழிலக்கியத்தை விமர்சனமாய்ப் பாத்தது அதுவரைக்கும் புதுமைப்பித்தன்தான். சிறந்த படைப்பாளியாய் இருந்தாலும் இந்த விமர்சனப்பார்வை புதுமைப்பித் தனுக்கு கைகூடி வந்திருக்கு. ஆங்கில மொழிமூலமாய், இலக்;கியம் ஊடாய் இந்த விமர்சனக் கருத்துக்களை புதுமைப்பித்தன் அடைஞ்சி ருக்கிறார். ஆங்கில இலக்கிய வகையான புதினத்தை அல்லது நவீன கவிதையை தமிழ்முறைப்படி விமர்சனம்செய்து பாத்து மகிழ்ச்சிகொண்டாடிக்கொண்டிருந்தது படிச்ச கூட்டம். இஞ்சைதான் கைலாசபதியும், சிவத்தம்பியும் வருகினம். தமிழிலக்கியத்தை மார்க்சீயத்தினூடாய் எப்பிடிப் பாக்கிறதெண்டதை தமிழுலகத்துக்கு அறிமுகமாக்கி வைச்சது இவையெண்டு சொன்னாலும் பிழையில்லை. தமிழிலக்கியம் இதுவரையில்லாத புதுப் பார்வை கொண்டு நிமிர்ந்து திரியத் துவங்கினதாய் இவையின்ரை தமிழ்த் துறைப் பிரவேசப் பலனாய் நான் பாக்கிறன்.
நாவலர் மூலமாய்த் தமிழ் வசனநடையின்ரை மாபெரும் துவக்கத்தைச் செய்ததுமாதிரி, மார்க்சீயமூடாகப் பிரதியை உணரு கிற இந்தத் திறனாய்வு முறையை கைலாசபதி சிவத்தம்பி மூலமாய் ஈழம்தான் துவங்கிவைச்சது. விமர்சனத் துறையிலை ஈழத்தின்ரை சாதனை இவ்வளவுதான். இந்தளவிலை கைலாசபதி, சிவத்தம்பி யின்ரை பங்களிப்பும் முடிஞ்சுபோச்சு. இவை சிலாகிச்சுச் சொன்ன எழுத்தாளர்களின்ரை கலாசித்தியளை வைச்சு இவையின்ரை விமர்சன முடிவுகளிலையுள்ள அபத்தங்களைச் சுலபமாய் நாங்கள் கண்டுகொள் ளலாம். மார்க்சீய விமர்சனமுறையின்ரை நேர்மையிலை சந்தேகத் தையே இவையின்ரை விமர்சனத் தெரிவுகள் உண்டாக்கியிட்டு தெண்டாலும் பிழையில்லை. நான் பெயர் குறிப்பிட விரும்பேல்லை. இந்தப் படைப்பாளிகளின்ரை படைப்புகளைப்பற்றி வாசகர்கள் தெரிஞ்சிருக்கினம். அதுபோதும்.
விமர்சனத்திலையிருக்கிற மூலாதாரமான விஷயமே ரசிக்காமல் விமர்சனம் செய்ய ஏலாதெண்டதுதான். பலர் வாசிக்கிற துகூட இல்லாமல் விமர்சனம் செய்ய வருகினம், உவை புத்தகத் தையே பாத்திருக்க மாட்டினம், ஆளைப் பாத்துத்தான் விமர்சனம் செய்யிறவையெண்டு சிலபேர் சொல்லுறவை. அதை நான் நம்பமாட் டன். அந்தப் புத்தகத்திலை நிச்சயமாய்க் கண்ணோடியிருப்பினம்தான். முதல்லையிருந்து கடைசிவரைக்கும் கண்ணோடியிருப்பினம். வடிவாய்க் குறிப்புமெடுத்திருப்பினம். குறிப்பெடுத்தாச்சா, விமர்சனம் வந்திட்டுதெண்டு அர்த்தம். இந்த ஆரம்ப நிலையை மீறி நாங்கள் வளரேல்லை.
இதுக்கனுகூலமாய் இருக்கிற விஷயம் என்னெண்டா, எங்க டை பேர்போன விமர்சகர்களெல்லாருமே எங்கடை பல்கலைக் கழகக் காறர் எண்டது. எல்லாரையும் நான் சொல்லவரேல்லை. ஆனா ஒட்டு மொத்தமான உண்மை என்னெண்டா, ஈழத்தமிழின்ரை விமர்சனத் துறையெண்டது பல்கலைக்கழகத்துக்கை அடக்கமாயிட்டுது. அடக்கமெண்டதை ரண்டு அர்த்தத்திலையும் நீங்கள் எடுக்கலாம்.

அநேக புலம்பெயர்ந்த சிறுகதைகள் கவிதைகளைப் பார்த்தீர்கள் என்றால் றெஸ்ரோறண்டில் கோப்பை கழுவுவது, கிளீனிங்செய்வது இப்போது மோட்கேஜ் கட்டுவது என்றுதானே இருந்து வருகிறது? ஈழத்தில் இருக்கிற  அநேக பிரதிகள் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வேலைக்குப் போய்வருவது குறித்துக் கவலைப்படுகிறது. இதே யாழ்ப்பாணத்தில் முறிகண் டியில் கொழும்பில் தேனீர்கடைகளிலும் தெருவோரங்களிலும் எத்தனை இளைஞர்கள் கோப்பை கழுவுறார்கள், வெங்கயாம் உரிக்கிறார்கள்? தெருக்கூட்டுகிறார்கள். ஏன் அவை எவையும் இவர்களது படைப்பில் கதையாகவோ கவிதையாகவோ வந்த தில்லை? தாங்கள் கழுவியவுடன் மாத்திரம் அழுகி றார்கள், புலம்புகிறார்கள,; கவிதை எழுதுகிறார்கள். இந்தப் படைப்பாளிகளது பிரதிகள் சொல்லும் சிந்த னைத் தளம் அங்கே எது? இங்கே எது?


இந்த யாழ்ப்பாண சமூகம் என்பது ஒரு மோசமான சமூகம். ஒரு சமூகம். மோசமானது, மோசமானதில்லையெண்டதை எப்பிடி அறியேலுமெண்டா, அது  வழங்கிற பழமொழியளிலையிருந்துதான். அவை அதுகின்ரை வாழ்க்கை முறையின்ரை அடையாளம். வேற இனங்களில, சமூகங்களில இந்த மாதிரிப் பழமொழியள் இருக்குமோ எனக்குத் தெரியாது. ‘கோழி மேய்ச்சாலும் கொறணமேந்தில மேய்க்கவேணும’;, ‘கெட்டவன் கிழக்கை போ’ மாதிரிப் பழமொழியள் அந்த இனத்தையே வெளிச்சம்போட்டுக் காட்டியிடுது. கிழக்கை எண்டது அப்ப பணம் சேர்க்கக் கூடிய திசையிலயிருந்த சிங்கப்ப+ர், மலேசியா ஆகிய நாடுகளைத்தான். இந்தப் பணம் சார்ந்த கட்டுமா னங்கள் யாழ்ப்பாணச் சமூகத்திட்ட அதிகமாய் இருக்கு. நான் அந் தச் சமூகம் எண்டதில எந்த ஒரு தனிநபரையும் குற்றஞ்சாட்N;டல்லை. சமூகத்தைக்கூடக் குற்றம்சாட்டேல்லைத்தான். நான் வரலாற்றைப் பார்த்துப் பேசிக்கொண்டிருக்கிறன். வரலாறுதான் தவறாய் நடந்தி ருக்கு. தவறாய் இருந்திருக்கு. சமூக அமைப்பிலை மாற்றம், மாற்ற மின்மை, மாறுபாடு போன்றதுகளை நாம் சரியாய் விளங்கிக் கொள்ள வேணும்.
யாழ்ப்பாணச் சமூகம் வித்தியாசமான மனநிலை கொண்டது. அந்த அமைப்பு பணம் சார்ந்தது. எல்லா அமைப்புக்கும் பணம் பிரதானம் எண்டாலும் யாழ்ப்பாணச் சமூகத்தின்ரை வாழ்வியல், போக்கு எண்டதுகள் பணமும், அந்தப் பணத்தின்ரை ஆதாரமான சமூக அமைப்பை நிலை நாட்டுறதுக்கான மனோநிலையுமாயே இருந்திருக்கு. அதில முக்கியமானது சாதிப்பிரச்சனை. ‘யார் இந்த யாழ்ப்பாணத்தான்?’ எண்டு பேராசிரியர் சிவத்தம்பி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். யாழ்ப்பாண மனநிலை அதிலை அழகாய் விழுந்திருக்கு.
இந்தப் பின்னணியிலையிருந்து புலம் பெயர்ந்து வந்தவைக்கு, எழுத்து முயற்சியெண்டது ஒரு கட்டறுப்பு. சுதந்திரமாய் இருக்கிற வகையிலை, அவையின்ரை அடிநிலை எண்ணங்கள் பீறிக் கொண்டு வெளிப்பட்டு வாறதைத் தவிர்கவேயேலாது. வெளியில வந்தாப்பிறகு நான் கோப்பை கழுவுறதா எண்டொரு ஆதங்கம். அவேசம். கோப்பை கழுவுறதை, கிளீனிங் செய்யிறதை ஏற்றுக் கொள்ளமுடியாத மனோநிலையில உள்ளவையிட்டை  இந்த எழுத் துதான் உருவாகும். இந்த உணர்வு ஒற்றுமை நிலைதான் படைப்புகள் ஒண்டுபோலத் தோன்றுறதுக்கும் காரணம். முந்தியே இதைப் பற்றி நான் குறிப்பிட்டிருக்கிறன்.
அண்மைக்காலம்வரையான புலம்பெயர்ந்தோருக் குள்ளை பலபேர் தங்கடை கல்வியை இழந்தவை. அவை  தங்கடை உணர்வுகளைக் கொட்டிச்சினமேதவிர  இலக்கிய முக்கியத்துவம் கொடுத்து எழுதியதாய்ச் சொல்லேலாது.சில தீவிரவாசகர்க ளாயிருந் தவை, தீவிர வாழ்வனுபவங்களுக்காளானவை ஒரு மொழியைத் தங்கட வசமாக்கிக் கொண்டு எழுதிச்சினம். அதில நான் குறிப்பிடக் கூடிய ஒராள் ஷோபாசக்தி. 60களில எஸ்.பொ.வி;ன்ரை மொழி ஆளுமை சிறப்பாய் இருந்தது. தமிழ்நாட்டிலை லா.ச.ரா.வைச் சொல்லுறவேளை ஈழத்துக்கு எஸ்.பொவைச் சொல்ல முடியும். மொழியை அவ்வளவு தீவிரமாய்க் கையாளக்கூடிய தகைமை இப்பத ;தைய ஆக்களில ஷோபாசக்திக்கு உண்டு. அவரது கருத்துக்களோடு எவ்வளவு முரண்பட்டாலும் படைப்பு மொழி எண்ட வகையில அவரது நடை எனக்குப் பிடித்தமானது. ஆனா கனபேர் வளராமலே இருக்கினம். தங்கடை எண்ணங்களை இலக்கியப் பிரக்ஞையுடன் எழுதிய ஆக்க ளெண்டும் கனபேரைச் சொல்ல ஏலாது. அவையிலையும் கனபேர் பிரான்ஸிலைதான் இருக்கினம். மிச்சப்பேர் சிறுகதை எண்டு தங்க ளுக்குத் தெரிஞ்ச மொழிகளில ஏதோ எழுதிச்சினம். பெயரை நீக் கிப்பார்த்தால் ஒண்டுபோலை அனுபவங்கள் விரிஞ்சுகொண்டே போகும். கவிதை எண்டதுக்கு அதன் இலகு வடிவத்தை – வரி அமைப்பை - பாத்தினமே தவிர அதுக்கு மேலை ஆருக்கும் தெரிஞ்சிருக்கேல்லை. அவைக்குத் தெரிஞ்சிருக்கவும் வேண்டியிருக்கேல்லை. பின்நவீனத் துவப்பாணியிலை, நவீன யதார்த்தப் போக்கிலை எழுதுகிற தமிழகப் படைப்பாளிகளிட்டைக் கூட இந்த நிலை இருக்கு. ஒரு சிறுகதை யின்ரை பேரை நீக்கிப் பாத்தால் ஆர் எழுதினதெண்டு சொல்ல முடியாமல் தான் இருக்கும். சில முக்கிய படைப்பாளிகள் எஸ். ராமகிருஸ்ணன், ஜெயமோகன், சுந்தரராமசாமி போன்ற ஆக்களைத் தவிர்த்துப் பாத்தால் இண்டைய இளம் படைப்பாளிகளிட்டைச் சுயஅடையாள அழிப்புத்தான் இருக்கு. அனுபவமேற ஏறத்தான் சுய அடையாளங்களோடை கூடின படைப்புக்கள் அவையிட்டையிருந்து பிறக்கும். புலம்பெயர்ந்தவையிட்டையிருந்தும் அந்தமாதிரித்தான். வடிவ மேன்மைமாதிரித்தான் கருவும் மாறும்.
தொலைக் காட்சி, சினிமா ஊடகங்கள+டாய் ஈழத்துப் பேச்சுவழக்கு முறையிலை தமிழ் நாட்டுப் பேச்சு வழக்குமுறை ஒரு பாணியாயும், இயல்பாயும் கலந்து வருகுதெண்ட உண்மை எத்தி னைபேர் கவனத்திலை பட்டுதோ தெரியாது. ஆனா ஒரு கலப்பு நடந்து கொண்டிருக்கு. ஆரும் தூண்டாமலேதான். இதுபோலத்தான் தமிழ்நாட்டு இலக்கியநடைப் போக்கும் ஈழத்திலை கசிய ஆரம்பிச் சிட்டுது. உள்வாங்குதல் இல்லாமல், வெறுமனே ‘கொப்பி’பண்ணுற மாதிரியான இந்தப் போக்கு விமர்சனத்துக்காளாகாமல் தவிரவும் மாட்டுது.
கல்வி வசதி மறுக்கப்பட்டு சிறுவர்கள் வேலைக்கமர்த் தப்படும் கொடுமைகள்பற்றி ஏன் ஈழத்திலை எழுதப்படேல்லை எண்டு கேட்டியள். எழுதப்பட்டிருக்கவேணும். ஆனா எழுதப்படேல்லை. ஒன்றிரண்டு ஆக்கங்கள் வந்திருக்கிறதாய்த்தான் நினைக்கிறன். பேர் குறிப்பிட்டுச் சொல்ல உடனடியாய் வரேல்லை. அது போதாது. ஆனாலும் எந்தவொரு படைப்பாளியிட்டையும் இதைப்பற்றி ஏன் எழுதேல்லையெண்டு கேக்கப்படமுடியாத கேள்வி இது.
அங்கத்தைச் சூழ்நிலையிலை ஆரும் இப்பிடியொரு கேள் வியை அங்கை கேட்டிட மாட்டினம். ஏனெண்டா ஒரு யுத்தம் அங்கை நடந்து கொண்டிருக்கு. மனித இருப்பே கேள்விக்குள்ளாகியிருக்கிற நேரத்திலை, அதன் இருப்புக்கான இங்கிதங்களிலை கரிசனை வராது.
இது எதுகின்ரை சிந்தனைத் தளம்? வாழ்முறைதான் சிந்தனைத் தளத்தை உருவாக்குது. அப்பிடியெண்டா யுத்தத்தின்ரை சிந்தனைத் தளமெண்டு இதைச் சொல்லலாமா? அப்பிடித்தான் எனக்குச் சொல்லத் தெரியுது.

ஈழத்து எழுத்தாளர்கள் சுயமரியாதையுள்ளவர்கள் என்பதில் சந்தேகமாக இருக்கிறது. அவர்கள் தாங்க ளாக எதையும் உணர்ந்து எழுதுவதில்லையென்றும், அந்தநேர அலைகளுக்கான எழுத்தை மட்டும் எழுதுப வர்கள் என்றும் சொல்லலாமா? வடக்கிலிருந்து முஸ்லீம் கள் வெளியேற்றப்பட்டமை எந்த எழுத்தாளரினதும் எழுத்தாழுமையைப் பாதித்ததாக இல்லையே!


ஒரு எழுத்தாளன் அல்லது கவிஞன் அல்லது கூத்து நாடகம் போன்றவற்றில் இருக்கிற கலைஞர்களின்ரை படைப்பு மய்யத்தைச் சமகால நிகழ்வுதான் பாதிக்க வேணுமெண்டு  இல்லை. அதோடை மனதிலை பதியும் எந்தவொரு நிகழ்வும் உடனடியாய் எழுத்தாக வரவேண்டுமெண்டும் நாங்கள் எதிர்பாக்கவுமேலாது. எதிர் பாக்கவும் கூடாது.  அதுக்கான பிரதிபலிப்பு வேறுமாதிரியும் இருக்க லாம்.
இப்ப வடபகுதியில இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவங்கள் குறிச்சு படைப்பாளிகள் ஆரும் எந்தப் பெரிய ஆக்கத் தையும் செய்யேல்லை எண்டுதான் நானும் நினைக்கிறன். தொண் ணூற்றி மூண்டு மேயிலை பிரதமர் பிரேமதாச கொலைசெய்யப்பட்ட நாலு மாசத்துக்குள்ளை அந்தச் சம்பவத்தின்ரை பின்னணியிலை ‘ஞானத் தீ’ எண்ட சிறுகதையை நான் எழுதினன். அதுக்கு கல்கி நினைவுச் சிறுகதைப் பரிசும் கிடைச்சது அப்ப. ஒரு சம்பவம் நடந்து நாலு மாசத்துக்குள்ளை அதைப் படைப்பாக்க முடிஞ்சிருக்கு. அதுபோலை அனார், இளையஅப்துல்லா, முல்லை முஸ்ரிபா போன்ற சிலரின்ரை கவிதையள் வடக்கிலையிருந்து முஸ்லீம்கள் வெளியேற் றப்பட்டது குறிச்சு வந்திருக்கு. வடபகுதிப் படைப்பாளிகளின்ரை ஆக்கங்களும் இல்லாமலில்லை. ஆனா இவை போதாது. வராதது பிழை எண்டும் நான் நினைக்கமாட்டன். அதற்கு மாறான கருத்தை எழுதுகிறபோதுதான் இந்தப் பிரச்சனையே வரும்.
எந்தவொரு சம்பவத்தையும் படைப்பாக்கு அல்லாட்டி படைப்பாக்காதை எண்டு சொல்லுற உரிமை  வாசகனுக்கோ விமர்சக னுக்கோ இல்லை. அப்படைப்பாளிக்கு ஒரு சம்பவம் மனசிலைபட்டு, அது கலையாய் வெளிப்பாடடையிற விஷயம் வந்து அவனுக் குச் சொந்தம். அவனுக்கே அவனுக்குச் சொந்தமானது. இது அவன்ரை தன்னுணர்வு சார்ந்த விஷயம் எண்டிறன். இண்டைக்கு முஸ்லீம்கள் கலைக்கப்பட்டு ஏறக்குறைய 10 வருஷங்களுக்கு மேலை ஆகியிட்டா லும் இன்னொரு படைப்பாளி இதை எழுத ஏலும். அவன் இதை எழுதுற நேரத்திலை இதை ஏன் இப்ப எழுதுறாயெண்டும் கேக்கேலாது எண்டது என்ரை நிலைப்பாடு. இது ஒண்டு.
இந்த விஷயத்திலை கேக்கப்படவேண்டிய இன்னொரு கேள்வி இந்தச் சம்பவத்தை நான் எப்பிடிப் பாக்கிறனெண்டது. இது சரியா பிழையா எண்டதிலை திட்டவட்டமான அபிப்பிராயம் என்னிட்டை இருக்கு. வடபகுதியிலிருந்து முஸ்லீம்கள் விரட்டப்பட்டது நூற்றுக்கு நூறு வீதம் பிழையானது. மோசமானது. மனிதாபிமானம் அற்றது. இதைச் செய்த அரசியல் இயக்கம் அரசியல் இயங்கு தளத்திலை தன்ரை செயற்பாட்டுத் திறமையின்மையைத்தான் இதன்மூலம் வெளிப்படுத்தியிருக்கெண்டு நான் சொல்லுவன்.
முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதுக்கான காரணம் வேறை வேறை விதமாய்ச் சொல்லப்படுகுது. விடுதலைப் போராட்டத்துக்கு எதிராய்ச் செயற்படுறதுக்காய் முஸ்லீம் இளைஞர் பலர் பேரினவாத அரசினாலை அங்கை சேர்க்கப்பட்டிருந்தினமெண்டும் சொல்லப்பட்டுது. எண்டாலும் இதைக்கூட ஒரு அரசியல் பிரச்சினையாயெடுத்து அந்தத் தளத்திலை வைச்சு ஒரு செயற்பாட்டுத் திறமையுள்ள இயக்கத்தாலை தீர்த்துக்கொண்டிருக்கேலும்.  ஒரு சில முஸ்லீம்கள் செய்த ஒரு தவறை ஒட்டு மொத்த சமூகமும் செய்ததாய் நினைச்சு ஒட்டு மொத்தமான சமூகத்தையும் வெளியேற்றினது சகல வடபகுதித் தமிழரையுமே சிலுவை சுமக்க வைச்சிட்டுது. ஒரு வடபகுதித் தமி ழனாய் என்ரை தலை குனிஞ்ச  இடம் இதுதூன்.


படைப்பாளிகள்  தங்களுடைய தன்னுணர்வு சார்ந்து எழுதுகிறார்கள,; எல்லாவற்றையும் எழுது என்று கேட்க முடியாது, காலஞ்சென்றும் எழுதலாம் என்கிறீர்கள். ஒரு ஓர்மமான எழுத்தாளனால் மனித வாழ்வியல் வாதை களுக்கும் அதன் இன்பங்களுக்கும் இடையில் ஓடி எழுதிக்கொண்டிருக்கவே முடியும்.  ஈழத்து எழுத்தாளப் பெருந்தகைகள் அல்லது இப்படிச் சொல்லும் எழுத்தா ளர்கள் ஈழத்து வாழ்வியல் அவலங்களை கண்டுகொள் ளாமல் இருப்பதைப் பற்றித்தான் நான் குறிப்பிடுகிறேன். பெரும்பாலான படைப்பாளிகள் தனது என்பதற்குள் இருந்தே புனைவுகளையோ கவிதைகளையோ செய்கிறார்கள் (நோட் த பொயிண்ட் செய்கிறார்கள்). பரந்த மனதுள்ள எழுத்தாளர்கள் மற்றதை அறவே மறந்து போய்விடுகிறார்கள். ஈழத்து விமர்சனச் செம்மலான கா. சிவத்தம்பி அவர்கள் கூட இவற்றை யெல்லாம் கடந்து நின்று தத்துவம் பேசுகிறார். கயிறைப் பாம்பாக நம்பி விட்டுவிடலாம் ஆனால் பாம்பைக் கயிறாக நம்பி விட்டுவிடக்கூடாது என்று ஈழவிடுதலை என்ற பெயரில் செய்த அநியாயத்துக் கெல்லாம் நியா யம் கற்பிக்கிறாரே?


பேராசிரியர் சிவத்தம்பி எந்தப் பேட்டியில, எந்தக் கட்டுரை யில இந்தக் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறாரெண்டு எனக்குத் தெரியேல்லை. அப்பிடிச் சொல்லியிருந்தாரெண்டால் பேராசிரியர்   இந்த விஷயத்திலை மிக நிதானமாயோ, சரியாயோ பதில் சொன்ன தாய் என்னாலை சொல்லேலாது. பாம்பும் கயிறும் மயக்கமான விடைக்கு அல்லது கேள்விக்கான மூலமாயிருக்கும். எப்பவும். முஸ்லீம்கள் வடபகுதியில இருந்து வெளியேற்றப்பட்டது எவ்வ ளவுதான் காரணங்களைக் கொண்டிருந்தாலும் அது மகா தவறான ஒரு காரியம். சரி, பிழைகளுக்கிடையிலை இடைபாதை எடுக்கேலாது. எண்டாலும் எனக்கு இன்னுமொரு கருத்திருக்கு. உண்மையெண்டது ஒண்டேயில்லை எண்டதுதான் அது. எண்டாலும் அதுக்கான வலுவான பதிலுக்கு முன்னாலை இத்தனை வருசத்திற்குப் பிறகு இப்ப இது கதைக்கப்படுறதுக்கான அரசியல் புலமும் எனக்குத் தெரியவேணும். ஒரு யுத்தம் நடந்துகொண்டிருக்கெண்ட யதார்த்தத்தை மீறி என்னாலை எதையும் பாத்திட ஏலாது. அந்த எதிர்ப்பின் பின்புலம் எனக்கு எல்லாமாயும் இப்ப தோற்றம் தருகுது.
ஏறக்குறைய வடபகுதியிலை முஸ்லீம்கள் திரும்பவும் வந்து மீளக் குடியேறுகினமெண்டுதான் செய்தியள் மூலம் நான் அறியிறன். முஸ்லீம்கள் இதை இண்டைக்குப் பெரிதுபடுத்துறதாயும் தெரியேல்லை. அவர்கள் மறக்காவிட்டாலும் மன்னிச்சுவிட்டார்கள் எண்டு இதை நாம் எடுக்கலாம். இளைய அப்துல்லா எழுதின  கவிதைகள்ளகூட முஸ்லீம்களின்ரை வெளியேற்றத்துக்கு அப்பாலான சில நியாயமான ஆதங்கங்களும் இருக்கிறதை நான் காணுறன். முஸ்லீம்கள் ஒருவேளை பேரினவாதத்தின் அரசியல் சதுரங்கத்தில காய்களாய் நகர்த்தப்படுகினமோ எண்ட ஐயம் அந்தக் கவிதைகளில -சில கவிதைகளிலையெண்டாலும் - இருக்கு. இளைய அப்துல்லா வின் கவிதைகளிலை ஒரு ப+டகத்தன்மை இருக்கும். அவர் வெளிப் படையாய்க் கட்டுரைகளிலை எழுதினாலும் அவரின்ரை கவிதைக ளிலை முஸ்லீம்களின்ரை இடப் பெயர்வுப் பிரச்சனை குறிச்சு அவர் பெரிசாய்ப் பேசேல்லையெண்டுதான் நான் சொல்லுவன். அவ ரின்ரை ‘பிணம் செய்யும் தேசம்’ கவிதைத் தொகுப்பையும் கிட்ட டியிலைதான் படிச்சு முடிச்சன். அதிலைகூடப் பெரிசாய்ப் பேசேல்லை. பேசினவை கவிதைகளாய் இல்லை. இதை எப்பிடி நான் பாக்கிறன் எண்டால், முஸ்லீம்களை வெளியேற்றின ஒரு தவறை வைச்சுக் கொண்டு நாங்கள் எவ்வளவு தூரத்திற்குப் போகலாம் எண்டதுதான். புலிகளாலானது எண்டதைவிடவும், போராலானது எண்டதுதான் என்ரை தெளிவு, புரிதல்.
அடுத்தது சுயமரியாதை பற்றின விஷயத்துக்கு வாறன். ஈழத்தில சிறுகதை வளர்ச்சி தொடங்கின அந்த நாளில இருந்து எப்பவுமே அது தமிழகத்தின்ரை ஒரு மறுபதிப்புப் போலத்தான் தொடர்ந்து வந்து கொண்டிருக்கு. நாங்கள் எவ்வளவுதான் நாவல்லை, சரித்திர நாவல்ல புதுமைகளையும் பரீட்சார்த்தங்களையும், சில முன்னோட்டங்களையும் செய்தம் எண்டு சொல்லிக்  கொண்டிருந் தாலும், எங்கடை சிறுகதை அல்லது கவிதை தமிழகத்தின்ரை ஒரு பின் விளைவாய்த்தான் எப்பவும் வந்து கொண்டிருக்கெண்டது மறுக்கேலாத உண்மை. அரசியல்ல எப்படி இருந்ததோ அது போலத் தான் இலக்கியத்திலும். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் புதிய தேசிய இலக்கியத் திட்டத்தை முன்வைச்சுச் செயற்படத் துவங்கிற வரைக்கும் அப்படியிருந்தது எண்டும் சொல்லலாம். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோன்றினதுக்குப் பிறகு அதிகமாய் அந்தச் சங்கத்தில இருந்து எழுதினவை சாதி அடக்குமுறை, வர்க்க அடக்கு முறை போன்றதுகளுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டில இருந்து  மண்வளத்தையும் மக்களையும் பேசிச்சினம் எண்டது சரியான வார்த்தைதான். அதிலை முக்கியமாகக் குறிப்பிடவேண் டியவர்கள் நீர்வை பொன்னையன், டானியல், டொமினிக் ஜீவா, செ.கணேசலிங்கன் போன்றவை. இவையின்ரை சிறந்த கலைப் படைப்புக்களா எண்டு தமிழ் நாட்டில விவாதம் வந்தது. ஈழத்தில வந்திருந்தா ஓரளவுக்குச் சரியாய் இருந்திருக்கும். எனக்கு வந்துது. தமிழ் நாட்டில வந்தது எனக்கு முரணாய்த் தெரிஞ்சுது. வந்ததுக்கான பின்புலத்தை பிறகு நான் யோசித்து அறிஞ்சன். கலாநிதியள் கைலாசபதிக்கும் சிவத்தம்பிக்கும் தமிழ் விமர்சனத்துறையில இருந்த மதிப்பு, இவை சோஷலிச முகாமைச் சேர்ந்தவையெண்ட காரணத் தாலை சிலபேருக்குப் பிடிக்கேல்லை. இவைதான் டானியல் மற்றும் இடது சாரி எழுத்தாளர்களின்ரை படைப்புக்களை முன்னெடுத்துப் பேசினவை. இவையின்ரை விமர்சன முறைமை மூலம் ஸ்தாபிக் கப்பட்டவையின்ரை செல்வாக்கை அழிக்கிறதுக்கும், இவையின்ரை செல்வாக்கை அழிக்கிறதுக்காயுமே ஒரு முயற்சி அந்தச் சிலராலை எடுக்கப்பட்டுது. அதுகின்ரை ஒரு அம்சம்தான் மு.தளையசிங்கத் தின்ரை படைப்புக்கள் மீதான ஆய்வரங்கு. அது ஊட்டியிலை 4 வருடத்திற்கு முந்தி நடந்தது. வேதசகாயகுமார் மு.தளையசிங்கத் தின்ரை சிறுகதைகள் பற்றின ஒரு பெரிய கட்டுரை வாசிச்சார். மு.தளையசிங்கம் குறித்த அவரின்ரை கருத்துக்களோடை எனக்குப் பெரிய மாறுபாடில்லை. இருக்கவேண்டினதுமில்லை. ஆனால் அது இடதுசாரி எழுத்தாளர்கள், விமர்சகர்களின்ரை வரலாற்றிருப்பையும் உள்ளீடாய்க் கேள்விக்குட்படுத்தியிருந்தது. அந்தக் கேள்வியின்ரை விரிவுதான் பிறகு ‘காலம்’இதழில் வந்த ‘ஈழத்துச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற கட்டுரை. அந்தக் கட்டுரை முற்று முழுதாக  டானியல், நீர்வை பொன்னையன், டொமினிக் ஜீவா போன்றவர்களின்ரை இலக்கிய வரலாற்று முக்கியத்துவத்தை நிராகரிச்சுது. அவர்களின்ரை சிறுகதை களை ஒரு பிரஸ்தாபத்துக்குக்கூட வேதசகாயகுமாரின்ரை கட்டுரை எடுக்கேல்லை. அதுக்கு மறுப்பாய் நான் ஒரு கட்டுரையைப் பதிவுகள் டொட் கொம் இல் எழுதினன். அதற்கு ஜெயமோகன் மறுப்புக் கட்டுரையொண்டை ‘பதிவுகள்’ளையே எழுதினார். அந்தக் கட்டுரை என்ன சொல்லிச்சுது எண்டதை விளக்கிறதைக் காட்டிலும் அதுகின்ரை தலைப்பைச் சொன்னாலே எல்லாருக்கும் கருத்து விளங்கும். அது ‘ஒரு படைப்பை நிராகரிப்பதற்கு வாசகனுக்கு உரிமையுண்டு’ எண்டதுதான். அதற்கு நான் ஒரு பதில் எழுதினன். ‘ஒரு படைப்பை நிராகரிக்க வாசகனுக்கு உரிமையுண்டு. ஆனால் ஆய்வாளனுக்கு அந்த உரிமையில்லை.’ பொத்தம் பொதுவில டானியல், நீர்வை பொன்னையன் போன்றவையின்ரை கதைகளை ஒதுக்கும் மனோநிலை தமிழ்நாட்டிலை இப்பவும் இருக்கு. ஒதுக்கிறதெண்டது கலைத் தரம் எண்ட தளத்திலை சரியாயிருந் தாலும் சமூகத் தரங்கள்ள, அதன் வரலாற்று அடியிலை எப்பவுமே ஒதுக்க முடியாது. இவர்க ளின்ரை படைப்புக்கள் அந்தக் காலத்துக்குரிய நியாயத்தையும் சரியையும் கொண்டிருந்ததுகள். பிறகு மொழி அல்லது இனம் கார ணமான தளங்களிலை எழுந்த எழுத்தாளர்களிடையே ஒரு ஒட்டுண்ணித் தனமான கருத்துச் சத்துறிஞ்சல் வந்திட்டுது. இப்பவும் பரவலாய்த் தமிழ் நாட்டில அறியப்பட்ட செ.யோகநாதன், செங்கை யாழியான் போன்றவையின்ரை எழுத்துக்கள் வெகுசன வாசிப்பிற்கான சாதாரண நடையில சான்டில்யன் அல்லது புஸ்பா தங்கத்துரை போன்றவையின்ரை எழுத்துக்கள் மாதிரியிலேயே இருக்கு. ஒரு பிரச்சனையை எடுத்துக்கொள்ளுற விதம் கையாளுற விதம் எல்லாம் ஒண்டுதான். எங்களுக்கான மொழி நடை, மொழிப் பாவனைகளை விட்டிட்டு நாங்கள் எங்கையோ போய்க் கொண்டிருக்கிறம். இதைவந்து சுயமரியாதையற்ற எழுத்துக்க ளாய்த்தான் கொள்ளலாம்.


தமிழ் இலக்கியத்திலும் சரி, அரசியல் சூழலிலும் சரி இந்தத் தனித் தமிழ் வெறியர்களின் துன்பம் தாங்கேலாமல் இருக்கிறது. ஒரு மொழி அழிந்து போகக்கூடாது என்பதிற்கூடாக தமிழ்மொழியும் அழிந்து போகக்கூடாது என்பதில் எனக்கு ஆட்சேபனையில்லை. ஆனால் இன்றுள்ள சூழல் ஒரு வன்முறை சார்ந்ததா கவே இருக்கிறது. தேசியம் பற்றிய ஆசையும் கற்புக் குறித்துக் கவலையும் படும் ஒரு குழு பெரியாரையும் ஆதரிக்கிறது. வெதுப்பகம்,வெதுப்பி, வாகன உதிரிப்பாக தொழிற்பாய்வு கூடம் என்று தமிழைப் பிய்த்தெடுக்கும் குழு தன்னைத் தமிழில் லெப்டின்ட் கேர்ணல் என்கிறது. இது உங்களுக்குச் சிரிப்பாக இல்லையா? சித்த சுவாதீன அல்லது கோமாநிலையில் நமது சமூகம் வந்திருப்பதாக நீங்கள் நினைக்கவி ல்லையா?


படைப்பாளிகளிடத்தில் தனித்தமிழ் பற்றின விஷயத்தில் கருத்துருவாகியிட்டுது.  தனித்தமிழ் எண்டு ஒரு தமிழை  நாங்கள் இனிமேல் கொண்டுவர ஏலாது. ஆனால் ஆரம்பத்தில தனித்தமிழ் எண்டு ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறதக்கான அரசியல் நிலை தமிழ் நாட்டிலை இருந்தது. தமிழ் நாட்டில பிராமணர்களின்ரை தமிழ், ஆதிக்கம் செலுத்துகிற ஒரு வகையாய் இருந்தது. அதை அழிக்கிறதுக்கு திராவிட இயக்கத்துக்கு ஒரு தேவை இருந்தது. அதுக்கு முன்னாலை தமிழும் சமஸ்கிருதமும் ஏறக்குறைய சம பங்காய்க் கலந்து எழுதுற முறை வந்திருந்தது. இதை இலக்கணம் மணிப்பிரவாள நடை எண்டு சொல்லிச்சுது. மணிப்பிரவாளமெண்ட ஒரு புது மொழியே உருவாகிற நிலை. இதுக்கு அப்பவிருந்த எழுத்தாளரும் கவிஞரும்தான் தெரிஞ்சோ, தெரியாமலோ துணையி ருந்தினம். அந்தநேரத்திலை மறைமலையடிகள் மற்றது பரிதிமாற் கலைஞர்  போன்றவையாலை இந்த மொழியாபத்து தடுத்துநிறுத்தப் பட்டது. அவையாலை துவங்கப்பட்ட தனித்தமிழ் இயக்கத்துக்கு அந்த நேரத்தில தமிழ்நாட்டில தேவை இருந்தது மெய். அப்ப தனித்தமிழ் இயக்கம் வடமொழிக்கு எதிரானதாய்த்தான் இருந்தது. இப்ப ஆரும் தமிழ் நாட்டில தனித்தமிழ்த் தேவை பற்றி அதிகமாய்ப் பேசுறதில்லை. இடைக்காலத்திலை ஜெயகாந்தன், சுஜாதா போன் றவை ஆங்கிலத்தை அதீதமாய்ப் பாவிச்சு தங்கடை படைப்புக்களைச் செய்தினம். அப்பகூட ஆங்கிலத்தை ஆங்கிலமாகவே பாவிக்காமல் மக்களின்ரை பயன்பாட்டு வடிவத்திலை பாவிக்க வேணுமெண்டதுதான் அப்ப எழுந்த எதிர்ப்பின்ரை ஆதாரமாயிருந்தது. இப்பத்தைய எதிர்ப்பு ஊடகங்கள், குறிப்பாய் தொலைக்காட்சிகளிலை வாற தமிழுக்கெண்டா ஆர் அதைப் பிழையில்லையெண்டு சொல்லப்போகினம்? இங்கு கனடாவிலைகூட தனித்தமிழ் முயற்சிகள் இருப்பதாய் நான் அறிகியிறன். அந்த இயக்கம் சார்ந்த பத்திரிகையிலை எழுதுற போதுகூட அவை சொல்லக்கூடியதான மொழி வரைபுகளை ஏற்க மறுத்துதத்தான்   சுயாதீனமாய் எழுதினன். எனக்கு ஒரு பஸ் வந்து பஸ்சாய்த்தான் இருக்கு. எனக்கு பேக்கரி பேக்கரிதான். பாண் பாண்தான்.  ஆனால் இதைவிட உயர்ந்த மட்டத்துக்குப் போய் பாணுக்கு ஏன் தமிழிலை ஒரு சொல் இருக்க்கூடாதெண்டு நான் நினைக்கலாம். ஆனா அது அகராதிக்கானதோ அல்லது கலைச்சொல் தொகுதிக்கானதாயோதான் இருக்க ஏலும். அதை நடை முறைப்படுத்தவேணுமெண்டு நான் நினைக்கமாட்டன். எனக்கு வந்து நிசங்கம், ஆதர போன்ற சிங்களச் சொல்லுகள் கூட பிரியமா னதாய் இருக்கு. நான் அதை நிறையவே எனது படைப்புக்களில பயன்படுத்தியிருக்கிறன். காதல் எண்ட சொல்லை விட கூடுதல் அர்த்தம் பொதிந்த சொல் ஆதர. அந்தவகையில அவை முக்கிய மானவை. ஆனா அவை இயல்பிலை வந்து கலந்த சொல்லுகளாய் இருக்கவேணுமெண்டது எல்லாத்தையும்விட முக்கியம். திருப்புழி எண்ட சொல் என்ரை கிராமத்திலை தச்சுவேலை செய்யிற ஆக்கள் பாவிச்ச மொழி. அதுக்குப் பதிலாய் ஸ்குரூ ட்ரைவர் எண்டு படிப் பிச்சால் அதைப் பிழையெண்டு சொல்ல நான் தயங்கமாட்டன். அதையும் சூழ்நிலைக்குத் தகதான் செய்யவேணும். கனடாவிலை திருப்புழியெண்டுதான் பாவிக்கவேணுமெண்டு நான் நிண்டா அது எப்பிடிச் சுவாதீனமானதாகும்? அது இப்ப அகராதிக்கானது. மக்களிடமிருந்து பெறப்பட்டதேயானாலும்கூட.
ஒரு படைப்பாளிக்கு தன் மொழி மகத்தானது. அதன் வாழ்வு அப்படைப்பாளியின் ஜீவநிலைப்பாட்டோடை கூடினது. மொழி யில்லாமல் படைப்பில்லை. ஏன், சிந்தனையேயில்லை.
மேலை நான் சொன்னதுகள் ஒரு படைப்பாளியாய் என்ரை கருத்து. மற்றப்படி, இது மொழிகளின்ரை இயல்பு தெரிஞ்ச மொழியாய்வாளராலை தீர்மானிக்கப்படவேண்டிய விஷயமே. நாங்களும்  சிந்திப்பம்.

மற்றது 2
2006