Friday 19 June 2015

குதிரை முகம் கொண்டு வந்த சிவகுமார்.

கற்சுறா











ஒரு கோடி பிரச்சனைகளும் ஒரு கொள்ளைத் தீர்வுகளும் கைவசம் வைத்துக் கொண்டு திரியும் என்னாசைத் தேவகி…


பாலியாற்றங்கரையில் படுத்திருக்கும் வேளையில் பகல்பொழுதில் பிடிபட்டாள்.
கலிங்கை மேவிப்பாயும் நீர்ப்புயல் பாலியாற்றை மறைத்தது.
ஆற்றங்கரையில் சற்றுச் சரிந்திருந்த தேவகி கொட்டிலோடு சேர்த்து ஆட்டையும் ஆற்றுநீர் கொண்டு போனதை கண்டு வியப்புற்றாள்.

வெள்ளை கொண்டு போகவேண்டிய ஆட்டை நீர் கொண்டு போனது.

நீர் வெள்ளையல்ல.

நீர் நிறமற்றதுமல்ல.

வெள்ளையென நினைத்து நீரைத் தொட்ட தேவகி நேற்று  தனது முகத்தை பதினாறாவது தடவையாகவும் வெளியில் மறைத்தாள். 

ஒருமுறை துணிகளாலும் மறுமுறை வெற்றுக் கடதாசிகளாலும் என மாறி மாறி மறைக்கும் தேவகி இம்முறை விலங்கொன்றிற்குள் ஒழிந்து கொண்டது புதிராகவே இருந்தது. ஒழியும் ஒவ்வொரு முறையும் பெயர்களை மாற்றினாள். விலங்கினுள் ஒழிந்த இக்கணம் மட்டும் பெயரை மாற்றவில்லை.அல்லது மாற்ற மறந்துவிட்டாள்.  ஒழிந்த விலங்கின் பெயரைக் கொண்டு என்னை அழையுங்கள் உங்களுக்குச் சிக்கல்கள் இரா. என்பதே அவள் இப்போது நமக்குச் சொல்லக்கூடியது.

ஆனால் தேவகியே…
நீ மறுமுறையும் மறுமுறையும் உனது முகமறுத்து வரும்போது ஆட்டைக் காவு கொள்ளும் வெள்ளையர் அறுத்த கிணற்றின் தேடாக்கயிறை உன்கையிலிருந்து ஏன் ஒழிக்க மறந்துவிட்டாய்?


காட்டு அம்மன் கோவில் வழிப் பாதை.
குளத்தருகில் முருகன்.
முருகனின் சூனியத்தில்
வெள்ளையரிடம்
தனது ஆட்டைப் பறிகொடுத்தாள் தாய்.
வெள்ளை கிளப்பிய ஆட்டின் குட்டி
ஈரப் பால்முலை தேடிக் களைத்தது.
தன் முலையில் வைத்து குட்டிக்கு குழையை தின்னப் பழக்கினாள் தாய்.
குளிர்த்தி நாளும் நெருங்க முருகன்
ஆட்டின் தோலை குளத்தருகில் கண்டான்.

நேற்று வெள்ளை
“சிவகுமாரின்” கள்ள அடையாள அட்டையுடன்
ஊருக்குத் திரும்பினான்.
குட்டியாடு தன்குட்டிக்காய் கனைத்தது
சிவகுமாரை குதிரை என நினைத்து.

சிவகுமாரின் கள்ள அடையாள அட்டையில் இருக்கும் வெள்ளையை
தாய் காணாமல் குட்டி கண்டதில் என்ன வியப்பிருக்கிறது?


தாய் அதன் குட்டியை உடனடியாக குழைதின்னப்பழக்கினாள்.

தேவகியின் கை தேடாக்கயிற்றை இன்னும் விடவில்லை..

No comments:

Post a Comment