Wednesday 26 December 2012


சங்கராச்சாரியார்

 கைது குறித்துக்

கவலை கொள்ளும் இந்துப் பாசிசம்.

-கற்சுறா



1.சங்கராச்சாரியார் கைது விபரம்.


காஞ்சி மடத்தின் 69வது மடாதிபதியான ஜெயேந்திர சரசுவதி சங்கராச்சாரியாரை தமிழகத்தின் அதிமுக அரசு சங்கரராமன் கொலைவழக்கில் நவம்பர்11ந் திகதி கைது செய்து வேலூர் சிறையில் அடைத்துள்ளது. காஞ்சி மடத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் நிர்வாகியான சங்கராராமன் கடந்த செப்படம்பர் மாதம் 3ந் திகதி கோயிலில் வைத்துக் கொலை செய்யப்பட்டிருந்தார். இக்கொலையை முன்நின்று நாடாத்தி முடித்த முதல் குற்றவாளியாக காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்.

கி.மு. 482 இல் ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்ட காமகோடி மடம்  ஜெயேந்திரருக்கு முன் காஞ்சிப்பெரியவர் என்று அழைக்கப்படும் சிறீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்பவரது  தலைமையில் நடைபெற்று வந்துகொண்டிருந்தது. 1994 ஜனவரியில் அவரின் இறப்பிற்குப் பின் தற்போதைய ஜெயேந்திரர் என்பவரே மடத்தின் பொறுப்பை ஏற்று நிர்வகித்து வந்தார்.

கொலைசெய்யப்பட்ட சங்கரராமன் அவர்கள் சீறீ சந்திரசேகரேந்திரரிடம் உதவியாளராக இருந்தவர். அவரிடம் மிகுந்த பற்று வைத்திருந்தவர். மடத்தில் ஜெயேந்திரரின் நடவடிக்கைகள் மடத்திற்கு எதிரான நிலையிலிருந்ததை அவர் பலதடவை சுட்டிக்காட்டி வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சங்கரராமனின் மீது அதிருப்தி கொண்ட ஜெயேந்திரர் தமிழகத்தின் தாதாக்களுடன் தொடர்புவைத்து இக்கொலையை செய்துள்ளார் என அரசதரப்பு விவாதங்கள் சொல்கின்றன. தொடர்ச்சியான குற்ற விசாரணையில் மேலும் பல கொலைகளுக்கும் வன்முறைகளுக்கும் சங்கராச்சாரியார் அவர்களுக்கும் தொடர்புள்ளதாக தெரியவந்துள்ளது என்று பொலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையில் சங்கராச்சாரியார் அவர்கள் தனக்கு ஜாமீன் கேட்டு இரண்டு முறை வழக்குத் தாக்குதல் செய்துள்ளார். ஆனால் கோட் அதனை நிராகரித்துள்ளது. பொலீஸ் தரப்பு மேலும் சில நாட்கள் சங்கராச்சாரியாரை தமது காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டபோது அதையும் கோட் மறுத்துள்ளது.

இதற்கிடையில் பொலீஸ் தரப்பு சங்கராச்சாரியார் அவர்களுக்கும் இக்கொலைக்கும் சம்பந்தமுள்ளதற்கு தம்மிடம் போதுமான ஆதாரம் உள்ளதாகச் சொல்கிறது. இதற்கிடையில் இந்தியத் திரைப்பட போர்முலாவில் உள்ளதுபோல் போலீசிடம் அப்ரூவராகிய சங்கராச்சாரியருடன் கொலைத் தொடர்பில் ஈடுபட்ட அப்பு என்ற தாதாவின் மிகநெருங்கிய உதவியாளனான கதிரவன் என்கிற குற்றவாளி தான் சொன்ன கருத்து பொய் என்றும் மறுகணம் அவை உண்மை என்பதுமாக  மாறி மாறி வாக்குமூலம் கொடுத்துக் கொண்டிருக்க, கொலையில் ஈடுபட்டதாக சில பொய்ச் சாட்சிகள் சரண் அடைந்து வழக்கை திசைதிருப்ப முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. இந்தக் கூட்டுச்சதியையே காரணங்காட்டி அரசதரப்பு ஜெயேந்திரர் மீதான ஜாமீனை மூன்று தடவை மறுத்துள்ளது.  இதற்கிடையில் கொலைக் குற்றவாளியாகக் கைதாகியிருக்கும் சங்கராச்சாரியார் தனது பூசை முறைகளை நேரந்தவறாது செய்து கொள்ள   வேலூரிலும் சரி பொலீஸ் காவலிலும் சரி வசதிபண்ணிக் கொடுக்கிறது அரசு. மறுபக்கம் சங்கராச்சாரியார் மீதான குற்றவழக்கில் மேலும் யாரைக் கைது செய்யலாம் என்று தோண்டித் திரிகிறது

போலீஸ்படை. பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள், கொலை மிரட்டல்கள் என்று ஜெயேந்திரர் மீது குற்றப்பத்திரிகைத்தாக்கல் அதிகரித்த வண்ணமேயுள்ளன. ஆனால் சங்கராச்சாரியரை கைது செய்தது இந்தியாவுக்கு ஏற்பட்ட அவமானம், இந்துக்களுக்கு ஏற்பட்ட அவமானம் என்கிறது இந்துத்துவக் கட்சிகளான பாரதிய ஜனதாக் கட்சி மற்றும் வி~;வ இந்து பரிசத் ஆகியன. சங்கராச்சாரியாரை விடுதலை செய் என்று வடக்கில் அத்வானி, வாஜ்பேய், ஆர். வெங்கட்ரமணன் என்று இந்திய முன்னால் தலைவர்கள் எல்லாம் உண்ணாவிரதமும் வழி மறிப்புப் போராட்டம் நடாத்துகிறார்கள். சங்கராச்சாரியாருக்காக வழக்காட முன்வந்திருப்பவர் இந்தியப் பெரும் கிரிமினல் லோயர் ராம்ஜெத்மலானி அவர்கள்( இவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளுக்காக வழக்காடியவர்)
இவைதான் சங்கராச்சாரியார் கைது தொடர்பாக நம்முன் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள்.

வெளிக்கிளம்பும் இந்து மதவெறி




இந்த நிகழ்வுகளிலிருந்து நாம் இங்கே கவனம் குவிக்கும் விடையம் என்னவென்றால். சங்கராச்சாரியார் கைதுசெய்யப்பட்ட சம்பவங்களுக்குள் இந்துமதவாதம் என்ற மிகப்பெரிய நச்சுக்கொடி எவ்வளவு தூரம் தன் அலகை விரித்துக் கொள்கிறது என்பதுதான்.அதனைத் தெரிந்து கொள்வதன் மூலம் காஞ்சி மடாதிபதி என்கிற ஒற்றை மனிதனுக்குள் இந்தியாவின் மதவாத அரசியல் எப்படி ஒழிந்து கொண்டிருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.

சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டவுடன் இந்திய இந்து மதவாத அமைப்புக்களான ஆர்.எஸ். எஸ்., பா.ஜ.க., வி~;வ இந்து பரி~த், தமிழ்நாடு பிராமணர் சங்கம் போன்ற அமைப்புக்கள் கோபங்கொண்டெழுந்து தமது கண்டனங்களை வெளியிட்டன. காஞ்சி மடாதிபதி கைது ஒரு தனிப்பட்ட இந்து மதத் தலைவருக்கு நேர்ந்த அவமானமாகக் கருதாமல் இந்து மதத்தின் மீதே தொடுக்கப்பட்ட தாக்குதலாகக் கருதுகிறோம் என்றார்கள். அவரைச் சிறையில் அடைத்து ஒரு குற்றவாளி போல் பார்க்காது சிறையில் அடைக்குமுன் அவரது அந்தஸ்து குடும்பப் பின்னணி,கல்வித் தகுதி பற்றிப் பார்க்க வேண்டும் என்றார்கள். இதற்கு மேல் வாஜ்பேயி, அத்வானி( முன்னாள் பிரதமர்கள்) முரளி மனோகர் ஜோஷி தலைமையில் மூன்று நாட்கள் உண்ணா விரதம்- மறியல் போராட்டம்  நடாத்தினார்கள். விஷ்வ இந்துபரிஷத் சார்பில் டில்லியில் சாமியார்கள் பேரணிநடைபெற்றது. இதுவடக்கில்.

தமிழகத்தில் இருக்கும் ஆர் எஸ்.எஸ். ப.ஜ.க. அமைப்புக்கள் சங்கராச்சாரியார் கைதான தினத்தைக் கருப்பு தினமாக அறிவித்தார்கள். அவ்வமைப்புக்கள், முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களுக்கெதிரான கோசங்களுடனும் துவேசச் சொற்களுடனும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டன. இந்து மதத்தின் ஆணிவேரை அசைக்த் தொடங்குகிறது திராவிடக்கட்சிகள் என்றார்கள். சங்கராச்சாரியாரை விடுதலை செய்யாவிட்டால் நாடுதழுவிய மனிதச்சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்தார்கள். அதற்கு இந்துமதத்தவரை ஆதரவு தரும்படி அறிக்கை விட்டார்கள்.
விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக்சிங்கால் டிசம்பர் 1ந் திகதிவேலூர் சிறையில் ஜெயேந்திரரைச் சந்தித்தார். இந்துமதத்தில் சந்நியாசிகளுக்கு சோதனை ஏற்படுவது புதிதல்ல என்றும், ஏற்கனவே மாத்மாகாந்தி கொலை வழக்கில் ஆர்.எஸ்.எஸ். முக்கிய தலைவரைக் கைது செய்தார்கள். அன்று முதல் இன்றுரை சோதனை தொடர்கிறது என்றார்.டிசம்பர் 6ந்திகதி உமாபாரதி வேலூரில் ஜெயேந்திரரைச் சந்தித்தார்.
தமிழ்நாடு பிராமணசங்கத் தலைவர் நாராயணன் இது இந்துக்களுக்கு ஏற்பட்ட அவமானம் காஞ்சி மடத்தின் உன்னத நிலைக்கு ஏற்பட்ட இழிவு என்று கூறி தாம் வீதிக்கு வந்து போராடத்தயார் என்று கோபம் கொண்டார்.
இங்கே நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும் சங்கராச்சரியார் கைது குறித்து இந்தியாவிலோ அல்லது உலகிலோ எவ்வித மனித உரிமைகள் அமைப்புக்களோ பொதுநல அமைப்புக்களோ எவ்வித மறுப்பையும் வெளியிடவி;ல்லை. வெறுமனே இந்து மதவாதிகளின் பாசிசக் குரல்கள் தான் சங்கராச்சாரியார் கைதுமீது தமது எதிர்ப்பைக் காட்டி நிற்கின்றன.
இவ்வாறு சங்கராச்சாரியார் கைது தொடர்பாக தமது ஒட்டுமொத்த எதிர்ப்பைக் காட்டிவரும் இந்த அமைப்புக்களின் அரசியல் பின்னணி எவை என்பதையும் இந்த அமைப்பக்கள் சார்ந்து பேசவரும் நபர்கள் யார் என்பதையும் நாம் இனம் காணவேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பு இந்தியா முழுவதும் இந்து மதத்திற்குரியது. இந்து மதம் என்பதே இந்தியமதம். இந்து என்பதே இந்தியா என்ற ஒற்றைத் தேசியத்தைக் கட்டியெழுப்பி ஏனைய மதத்தினரை விலக்கி, இந்துத்துவ துவேச நினைவுகளுடன் 1925இல் கட்டி எழுப்ப்பட்ட ஒரு பாசிச அமைப்பு ஆகும். ஆர்.எஸ்.எஸ். இன் ஸ்தாபகரான பி.எஸ். மூஞ்சே  இத்தாலி சென்று முசோலினியைச் சந்தித்து அதன் பாசிசக் கூறுகளை அப்படியே உள்வாங்கிக் கொண்டு வந்து அதன் போக்கிலேயே ஆர்.எஸ்.எஸ். என்பதை அமைப்பாக்கியவர். கோட்சே என்பவன் ஆர்.எஸ்.எஸ் இன் வழிகாட்டலிலேயே காந்தியைச் சுட்டவன். இந்த அமைப்பிலிருந்து உருக்கி வார்க்ப்பட்ட செல்லப்பிள்ளை அமைப்புத்தான் இன்றைய பா.ஜ.க என்பது. அதன் வழிபாட்டில் உதிர்த்தெழுந்தவர்கள்தான் அத்வானியும் வாஜ்பேயும் முரளி மனோகர் ஜோஷியும்.  இவர்கள்தானே பாபர்மசூதி இடிக்கப்பட்ட போது கடப்பாரையுடன் போய் நேரடிக் கரசேவை செய்தவர்கள்.

இப்படிப்பட்ட இந்து மதவாதிகளினதும் இந்து மதவாதக் கட்சிகள் மீதானதும் அக்றை சங்கராச்சாரியாரின் விடுதலை எனில், இவ்விடுதலை மூலம் இவர்கள் அடைய நினைப்பது எதனை? இவர்களது அக்கறை எமக்குமுன்  எதைக்  கொண்டுவந்து நிறுத்தும்?

இந்துக்களுக்கும் இந்து அல்லாதவர்களுக்கும் இடையில் இங்கு ஒரு பாரதப்போர் நடாத்தப்படவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அறிக்கை விட்டுக்கொண்டிருந்த கூட்டங்களில் வாஜ்பேயி நேரிடையாகப் பங்குபற்றினார்.

நான் ஒரு ஆர்.எஸ்.எஸ். உறுப்பினன் என்பதில் பெருமையடைகிறேன் நாளை நான் பிரதமராக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால் ஒரு ஆர்.எஸ்.எஸ். உறுப்பினாக இருக்கும் உரிமையை யாரும் பறித்துவிட முடியாது. என்று அறிக்கைவிட்டவர் வாஜ்பேயி.

ப.ஜ.க.வுக்கும் ஆர்.எஸ்.எஸ்.க்கும் இடையிலான உறவு வரலாற்று ரீதியானது. உடைக்க இயலாதது. அறக்கோட்பாடுகளின் அடிப்படையிலானது என்று அத்வானி முழங்கினார்.

முழு இந்தியாவுக்கென ஒற்றை இந்துமத மொழி ஒன்றை உருவாக்க வேண்டும். வேத உபநிடதங்களை கல்வித்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று சொல்லிவரும் தீவிர இந்துத்துவவாதியான  முரளி மனோகர் ஜோசிக்கு (இவர் ஜெயேந்திரரை வேலூர் சிறையில் போய்ப் பார்த்து வந்தவர்) ப.ஜ.க. கூட்டமைப்பில் கல்வியமைச்சர் பதவிகொடுக்கப்பட்டது.

இந்த அமைப்புக்களின் வழிவந்த மேற்சொன்ன நபர்கள்தான் இந்தியாவை இந்துப் பாசிசமாக உருவக்க முயற்சி செய்துகொண்டிருப்பவர்கள். இவர்கள் அரசியலில் இருப்பதும் தலைமை தாங்குவதும்  இந்து மதவெறியை ஊட்டி வளர்த்து இந்துப் பாசிசத்தை இந்தியா முழுவதும் பரப்பவேண்டும் என்பதற்காகவே தான்.

இதன் அடிப்படையில்தான் அவர்களுக்கு சங்கராச்சாரியரின் கைது கோபம் கொள்ள வைத்திருக்கிறது. சங்கராச்சாரியார் கைது அவர்களை அவமானங்கொள்ளச் செய்திருக்கிறது. இந்துக்களுக்கு செய்த துரோகம் என்று எண்ணவைத்திருக்கிறது. ஆனால் சங்கராச்சாரியார் என்ற இந்து மடாதிபதித் தலைவர் செய்த கொலை அவர்களை எவ்விதக் கவலையும் கொள்ள வைக்கவில்லை. அவமானம் கொள்ள வைக்கவில்லை. வெக்கப்பட வைக்கவில்லை. அதுபற்றி அவர்கள் பேசாதிருப்பது என்பது, மாறாக கொலைகளும் பாலியல் வன்முறைகளும் இந்து மதத்துடன் நெருக்கியதாகவே அவர்களை உணரவைக்கிறது. இந்து மதத்தின் மூலம் அவர்களுக்கு சங்கராச்சாரியாரின் குற்றச் செயற்பாடுகள் நியாயத்தை வழங்குவதாக  இருக்கிறது.

சரி இவ்வளவு பாசிசக் கூறுகளுடனும் வன்முறை மனோநிலையுடனும் இருக்கின்ற இந்து மதவாதிகள் சங்கராச்சாரியாரின் கைது குறித்து பலத்த கண்டனங்களை வெளியிடுகிறார்கள், உண்ணாவிரதம் இருக்கிறார்கள் எனில் இந்த சங்கராச்சாரியார் யார்? இவரின் வேலைத்திட்டம் என்ன இந்த வன்முறையாளர்களுக்கும் சங்ஙராச்சாரியாருக்குமான உறவு எங்கே தொடங்குகிறது? என்று நாம் யோசிக்க வேண்டும். கடவுள் , மடம் , ஆதீனம் என்ற பெயர்களில் படர்ந்து வரும் இந்துமதம் என்ற நச்சுக் கொடி வேரோடு பிடுங்கப்படவேண்டும். அதற்கு சங்கராச்சாரியாரின் கைது பெரிய துணையாயிருக்கும்.

இந்து மதத்தின் பெயரில் நடைபெற்ற அழிவுகளும் கொலைகளும் எமக்கு வரலாற்றில் பாடமாய் முன்நிற்கும் போது சங்கராச்சாரியார் இன்று கொலைக்குற்றத்தில் கைதாகியதின் பின்னர் இந்துப்பாசிசவாதிகளின் மேற்படி கூற்றுக்கள் இந்து மதத்தின் கொடு முகத்தை இன்னொரு முறை நமக்குக் காட்டி நம்மீது அச்சமூட்டி நிற்கின்றன. ஆனாலும் தமிழ்நாட்டு மக்களிடம் சங்கராச்சாரியரின் கைது குறித்து  ஓரளவு தெளிவான பார்வை இருப்பதும், கைதுக்கு ஆதரவுக்குரல் இருப்பதும்  மிகவும் கவனிக்கப்பட வேண்டியது. இது பெரியாரின் சிந்தனைகள் மக்களிடத்தில் ஏற்படுத்தியிருக்கும் - பாதிப்பின் விளைவாகும்.

-அறிதுயில்

Tuesday 25 December 2012


பெயர்கப்பட முடியாத மொழியும் 

அதற்குள்ளான இரண்டு கவிதைகளும்.



கற்சுறா

மற்றது இதழ்-1(2002)

மறைக்கப்பட்ட ஆழ் மனதின் இருட்டறையில் நிகழ்த்தப்படும் எண்ணற்ற படுகொலைக் கனவுகளை நாம் செயலற்ற வெற்றுச் செயற்பாடாய் அல்லது வெறும் கனவுலகச் சிந்தனையாய் அர்த்த மற்றதாக்குவதன் மூலம் எம்மிலிருந்து எதுவித வன்முறையும் நிகழாத வண்ணம் காப்பாற்றப்படுகிறோம். மறு முனையில் வெளியுலகின் அதிபயங்கரப் படுகொலைக்கும் உச்சக்கட்டச் சித்திரவதைக்கும் ஒவ்வொரு துளியாய்த் துணையிருக்கிறோம் என்பதை நினைப்பதில்லை.  பிணங்களின் நடுவில் பிறந்து பிணங்களின் நடுவில் தூங்கும் குழந்தைகளாய் நமது காலம் கழிக்கப்படுவதையிட்டு நாம் ஒரு போதும் கவலைப்படுவதில்லை. மரணத்தை இரசிப்பதும் மரணத்துக்காய் வாழ்வதும் கவிதையாய் இருப்பது போல் மரணத்தை வெறுப்பதும் மரணத்தைக் கொல்வதும் கவிதையாய் இருக்கிறது. இக்கவிதைகள் மரணத்தின் இருவேறுபட்ட புலர் நிலையிலிருந்து உரையாடுகிறது.





உடலின் பன்முக வெளியில் பிரையாசைப்பட்டுப் பறந்து திரியும் எனக்குள் உறவுகளின் கொடி படரச் சிக்குண்ட வார்த்தைகளில் வாழ்வை இழந்து கொண்டிருந்தேன். எனது வார்த்தைகளால் உருவான கேள்விகளுக்கு லினோவிடா எப்போதும் ஒரு சரியான பதிலைத் தந்ததில்லை. உறவற்ற, உறவை பொய்ப்பித்த  ஒரு விசாலப் பெருஞ்சுழியில் அலைதலுற்று தனக்கான உறவின் உச்சக்கட்ட நம்பிக்கையில் மிகுதி அத்தனை உறவின் மீதும்

ஒற்றைச் சொல்லால் பேராணி ஒன்றை அறைந்தாள்.
வாழ்வின் உச்சமெனப் போற்றும்
உனது ஒழுக்கம் கரைந்து 
எனது யோனியில் வழிகிறது.
உன்னுடைய தீண்டுதலில் திளைத்து
இருட்டறையின் மோக வாசல் வரை
உன்னோடு ஓடிவரும் எனக்கு
நேர்த்தியாய்ப் புணர்வது எப்படி என்பதைச் சொல்.
சாரையாய்ச் சுற்றி ஊர்ந்து வரும் உன் கைகள்
என் மார்புக்குள் நீந்தும் சிலுவையில் தரிக்கிறது.
அது ஒன்றுமில்லை 
யேசுவில் அறையப்பட்ட சிலுவை என்று நான் சொன்னதும்
உனது ஒழுக்கம் ஒரு முறை உன்னைச் சுருக்கியது.
நிச்சயிக்கப்பட்ட வாழ்வில்
நிச்சயிக்கப்பட்ட புனிதங்களுடன்
காலந்தள்ளும் உனக்கு 
என்னுடைய கலவிக் கூச்சல் இடைஞ்சலாய் எப்போதும் இருக்கட்டும்.
என்று சண்டையிட்டாள்.


லினோவிடாவுக்கு வயது அப்போது பன்னிரண்டு இருக்கும். அவளை நான் பார்த்த போது பாரீஸ் நகருக்கும் அவளுக்கும்
எவ்விதத் தொடர்புமற்ற ஒரு சின்னஞ் சிறுமியாக யாரோ ஒரு முதியவனின் கண்காணிப்பில் தெருவோரம் கீறிய சதுரக் கோடுகளுக்குள் கால்களை விரித்துப் பாய்ந்து பாய்ந்து விளையாடுபவளாகவும் அதற்குள்ளே வாழ்பவளாகவும் இருந்தாள்.

அவளின் ஆரம்ப நாட்களில் தனது உணவுக்குரிய பிரச்சனைகளை அல்லது பதிலீடைத் தேடுவதில் அதிகம் அவள் சிந்தித்ததாகத் தெரியவில்லை. கை நீட்டிப் பிச்சை கேட்பது, கிடைக்காத போது கடைகளில் புகுந்து சாப்பிடுவது என்பதற்கப்பால் அவளுக்கு குளிர் மட்டுமே கொஞ்சம் கரைச்சல் கொடுப்பதாக இருந்தது. அதிகாலை ஐந்தரை மணிக்கு நான் வேலைக்குப் போகும் போது லினோவிடா அந்த முதியவனின் போர்வைக்குள் புகுந்து கிடந்து தூங்கிக் கொண்டு இருப்பாள்.

லினோவிடாவுக்கும் அந்த முதியவனுக்கும் உள்ள உறவு முறை என்பது அக்காலப் பொழுதில் தங்கியிருத்தல் என்பதாகத் தான் இருக்க வேண்டும். ஏனெனில் கிழவனை விட்டு பிரிந்து வந்ததில் தனக்காகவோ அல்லது கிழவனுக்காகவோ அவள் கவலைப்பட்டது கிடையாது. என்னதும் லினோவிடாவினதும்  எந்தவொரு உரையாடலிலும் அந்தக் கிழவனைப்பற்றி அக்கறைப்பட்டுக் கதைப்பதில்லை. கிழவனை யாரென்று கூடச் சொல்லவில்லை. இங்கே அவசியப்பட்டு யாரையும் நினைவுபடுத்திக் கொள்ளத்தேவையில்லை.

ஒரு புன் சிரிப்பில் மறந்து போகக் கூடிய அளவில் தானே நமது வாழ்வு. இதற்கேன் அவசியமில்லாத நினைவுச் சுமையும்  தேவையற்ற ஒரு பாசாங்குப் பேச்சும். என்று சட்டென்று நிறுத்தினாள்.

இப்படி என்னுடன் உரையாடும் லினோவிடா, மரணிக்கும் போது நிகழ்த்திய அவளுடைய உரையாடலில் எங்கேனும் மரணம் பற்றி எதுவுமே குறிக்கப்படவில்லை.

 வாழ்வியலின் இன்பங்கள், அலங்காரங்கள், கிளர்ச்சியூட்டும் சோடனைகள் என்று வியாபித்திருந்தது. மரணத்துக்கான ஒருவித வாசனையும் இருக்கவில்லை. கவிதையைப் போல் ஓடி வரையப்பட்ட அந்த உரையாடல் என்னை தனக்குள் பொத்திக் கொண்டது. அங்கு எனக்காக மறைத்து வைக்கப்பட்ட அத்தனை இன்பங்களிலும் என்னைக் கிடத்தி கிளர்ச்சி பொங்க மிதந்து கொண்டிந்தேன்.

ஒரு ஆனந்தக் கூத்தாடியின் 
மனம் லயிக்கப்பட்ட இடம் வரைக்கும் சென்று என்னைப் பூசித்தேன். 
மிகவும் அற்புதமான தருணங்களில் எனது உடலின் ஒட்டுமொத்த இன்பத்தையும் தரிசித்து 
மவுனத்தை உடைத்த எல்லையற்ற கற்பனைத் திடலில் நான் மூழ்கடிக்கப்பட்டு 
கொஞ்சமாக என்னை ஆசுவாசப்படுத்தினேன். 
மவுன மொழி பேசக் கூடிய உடலின் பகுதி என்று என்னில் இருப்பதை நான் வெறுக்கிறேன். 
வாய் மொழியின் ஓசையைப் போலவே எனது உறுப்புக்களும் என்னுடன் எப்போதும் பேசக் கூடியவை.  
அதற்கான மொழியுடன் பரிச்சயப்பட்ட எனக்கு 
குதிக்கால் கிளம்பும் ஆசையை ஊட்டி அவை தம்மோடு வளர்தெடுத்தன.
செப்பனிடப்பட்ட உறுப்புக்களின் துடியாட்டம் எத்தருணமும்
என்னைக் கிளர்ச்சியில் வைத்திருந்தன.


கிழத்தியின் குரலில் ஒலிப்பிரட்டை 
கள்ள மவுனத்தின் பின்னிருந்து எழும்பும் வன்முறை.

மிகவும் நேர்த்தியானது எனக் குறிக்கப்பட்ட வாழ்வினது
ஒவ்வொரு கோணங்களில் இருந்தும் தொடருகின்ற
வார்த்தைகளின் குறியானது

எமக்கு நீண்ட பெரும் குருதித் தொடர்ச்சியாகவே இருந்து வந்திருக்கின்றது.
பெரும் கவனம் எடுத்து விலத்த முயன்றாலும் முடிவதில்லை.
எம்மைப் பிரட்டிப் போட்டு  எம்முன் பாய்ந்து தன்னை வியாபிக்கின்றது குருதி.
இப்போதோ எமது வாழ்வினுள் வாழுவதை விட வார்த்தைக்குள் வாழவே முன் நிற்கிறது.

குருதி சிவப்பானது என்பதை மறுத்து எம்முன் பச்சையாய்
பலவர்ண வெளிச்சங்களுடன் உள்ளுர ஊர்ந்து செல்லும் குருதி
உடலை நனைத்து ஈரமாய் வைத்திருக்கிறது.
குருதி ஈரம். குருதி பசுமை. குருதி குளிர்மை
என்பதை இரசித்து முன்நிறுத்தும் நான்
மறுகணம் அதன் மறுமுனையில் இருந்து
குருதியை, குருதியின் வெப்பத்தை, குருதியின் பயமூட்டும் கொடுஞ் சிவப்பு வர்ணத்தை, குருதியற்று உடல் வாழ முடியாது போகும் கோர நிலையை எதிர்க்கிறேன்.

எப்படியும் எதையும் ஒற்றை விம்பமாய் வரிந்து அழிச்சாட்டியம் காட்டி சும்மா சும்மா சொல்லிக் காட்டுவதை விட

 செயல் அதுவே சிறந்த சொல் என்பது போல் கண்ணைக் கட்டிப் போட்டுப் படாரெனச் சுட்டாள்.

சூடுக்கும் சாவுக்கும் எந்த இடைவெளியும் இருந்ததில்லை. ஒரு துடிப்பும் தெரியவில்லை. வழமையைப் போல் எங்களிடம் அமைதியிருந்தது. அவர்கள் சொன்ன நியாயம் இருந்தது. யமுனாவை பிடரியில்  பிடித்து வைத்திருந்தவள் மெதுவாய்த் தரையில் கிடத்தினாள். நாங்கள் எந்த ஒரு சொல்லையும் அவளுக்குப் பதிலாகச் சொல்லவில்லை. அவளைப் போலவே நாங்கள் கடவுளைத் தியானிக்கவில்லை. எமக்கான நியாயம் அவர்களிடம் இருந்தது.

யமுனாவின் பேத்தியோ எமக்குப் பயமூட்டும் படியான வார்த்தைகளைச் சொல்லி அழுதுகொண்டிருந்தாள் யமுனாவைத் தூக்கி தன் மடியில் வைத்து விட்டு அவளின் குருதி பட்ட மணலை  அள்ளி பிசைந்து கொண்டிருந்த கையைத் தூக்கி வானத்தை நோக்கி உயர்த்தி  என் தாயில்லாப் பிள்ளையை தலைச்ச ஆம்பிளையை பொட்டைக் கள்ளனள் சுட்டுப் போட்டாங்களே என்று மட்டும் சொல்லிக் கத்திக் கொண்டு இருந்தாள்.

புயல் அடங்கிய வெளியின் மேற்பரப்பில் ஊறி
மெலிதாய் பறந்தது குருதி மணல்.
ஒவ்வொருவர் மனத்திலும் பதிந்த 
உண்மையை மூடி 
இன்னொரு கதை எழுதியது.
யுத்தத்தின் மீது சத்தியம் செய்த புதல்வர்கள்
தமது துப்பாக்கிகளைத் தூக்கி 
பெண்களின் முலைகளைத் திருகினார்கள்.
வார்த்தைகளை இழந்த பெண்களோ 
மௌனம் குருதியில் உறைய 
வாழ்வை அழிக்கிறார்கள் 
பெண்ணுடல் மீதெங்கும் விடுதலை. 


மண் மணக்கும் காட்டு மழையில் ஊறி, விரக வெடில் பாய என்னைத் தொட்டு முகர்ந்து மேவி வளரும் கொடியே! உன் நுனி தீண்டி நுனி தீண்டிப் பிளவுறும் என்னுடற் கொடியில் எத்தனை கோடுகள். சிதிலமெனப் பின்னிக் குறுக்கு மறுக்காய் கால்கள் வளர்ந்தன. கால்களை மறந்தன தெருக்கள். குடிகாரத் தெருவின் எஞ்சிய பொழுதையும் ஞாபகம் காட்டியது குஞ்சுகளை நடத்திப் போன ஒரு குழந்தை வாத்து. பெருந்தெருவின் இரைச்சலை நிறுத்தி வேடிக்கை பார்த்தது குஞ்சு. மரணத்தின் விசாலம் கவ்வாதிருக்க கவனமாய் வேவுபார்த்து வீதியைக் குறுக்கறுக்கும் பாவனையில்  ஒரு கணம் தரித்திருந்தது போல் காட்டாப்புக் காட்டி நேரே குறுக்கறுத்து தினாவெட்டாய் நடந்தது. எப்பொழுதும் நீரற்று ஓடும் புழுதி ஆற்றின் மேற் பரப்பில் உடலைச் சிலிர்த்துப் படுத்திருந்தேன்.



கண் எதிரே கடல்.
ஆழப் புதைந்தெழும் மீன் தடவிய நிலம்
கால்களில் மிதிபடக் கூசியது
மெல்ல மெல்லக் கரையை விடுகிறது கடல்.
மீள மோதும் காலலைகளைப் பிடியெனப் பற்றி விலகாதிருக்க 
நுழைந்து அரிக்கிறது நுரை.
இன்னுமென்ன வெட்கம்.
புரட்டிப் பார்த்தால் 
கால்களின் கீழே கடல்கள்.
கால்களின் கீழே தீவுகள்.

Monday 24 December 2012


         பன்முகவெளி (கனடா)

                                           

பன்முகவெளி அரங்கு கனடாவில் முதல் முறையாக 23 ஜனவரி 2010 அன்று23 ஜனவரி 20105225 Finch Av East, wood said point, Scarborough,Ont,Canada .இல் நடைபெற்றது.

                                  

நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் மீதும் நிகழ்தப்படுவதற்காகத் தயார் நிலையில் திட்டமிடப்பட்டுக் கொண்டிருக்கும் வன்முறைகள் மீதும் நாம் தொடர்ந்தும் எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறோம். நிறுவனமயப்பட்ட சமூக அதிகாரங்களுக்கெதிராக கதைகளாகவும் கட்டுரைகளாகவும் கவிதைகளாகவும் நாடகங்களாகவும் திரைப்படங்களாகவும் பதிவை முன்வைத்து தொடர்ந்து இயங்கிவரும் சகலரும் ஒன்றிணைந்து விவாதங்களை உருவாக்கும் ஒரு புள்ளியே இந்த பன்முகவெளி என அறிவித்தது அனைவருக்கும் தெரியும்.

முழுநேர அரங்காக இடம்பெற்ற பன்முகவெளி பலவிதமான கருத்தாளர்களது பேச்சுக்களை உள்ளடக்கி அவற்றின் மீதான விவாதங்களுடன் நிகழ்ந்து முடிந்தது.


முதலாவதாக சுய அறிமுகம் இடம்பெற்றது. அனைவரும் தமது ஆர்வம் முயற்சிகள் குறித்து தெரிவித்தார்கள். அதன்பின் முதலாது அமர்வுக்கு நம்மொழி பத்திரிகை ஆசிரியர் உமாபாஸ்கரன் தலைமை தாங்கினார்.
- பன்முகவெளி பற்றியும் அதன் அவசியம் தேவை பற்றியும் கற்சுறா பேசினார்.
இந்தப் பன்முக வெளி என்ற அரங்கை ஆரம்பித்ததற்கு எந்தவித பிரத்தியேக காரணமோ அல்லது எந்த அரசியற் பின்னணியோ இல்லை என்பதை திறந்த மனதுடன் முதலில் ஒப்புவிக்கிறேன். இங்கிருக்கின்ற நாம் அனைவருமே கடந்த காலத்தில் சமூகம் சார்ந்த அக்கறையுடன் பலவித தளங்களில் செயற்பட்டவர்கள். என்றும் இந்தப் பன்முகவெளியின் செயற்பாடு என்பது இந்த முரணையும் பகையுணர்வையும் நீக்கி ஒரு பரஸ்பரதளத்தில் திறந்த விவாதங்களை உருவாக்க வேண்டும் என்பதே.

இங்கே யாரும் யாரையும் வென்றெடுப்பதோ கட்சி கட்டுவதோ நோக்கமில்லை. அவரவர்க்கான தளத்தில் கருத்தோட்டத்தில் இருந்து உரையாடுவதும்  புதிய தளங்களைத் தொடுவதுமே இதன் முக்கிய நோக்கம். கனடாவில் இதுவரை பலவித சஞ்சிகைகள் பத்திரிகைகள்- சமூகம் சார் அக்கறையுடன் -வெளிவந்திருக்கின்றன. அவை தொகுக்கப்படுவதும் அவற்றை விமர்சனத்துக்குட்படுத்துவதும் இதன்முக்கிய செயற்பாடாக இருக்க வேண்டும். முடிந்தளவு இந்தமுறை பார்வைக்கு வைத்திருக்கிறேன். இது தொடர்ச்சியாக நடைபெறவேண்டும் என்பது மிக முக்கியமானது என்று கற்சுறா குறிப்பிட்டார்.


அடுத்து விஜி அவர்கள் இடம்பெயர்வும் பெண்களும் என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தார். நீண்டகாலமாக மனிதஉரிமைகள் குறித்து தீவிரமாகப் பேசிவரும் விஜி அவர்கள் யாழ்ப்பாணத்தில்87களில் ஆரம்பிக்கப்பட்ட பூரணி எனும் பெண்களுக்கான அமைப்பில் ராஜினி, செல்வி, சிவரமணி போன்றவர்களுடன் இணைந்து செயற்பட்டவர். 92இல் இருந்து  94 வரையான காலப்பகுதியில் வடகிழக்கில் இருந்து இடம்பெயர்ந்து வந்த பெண்களுடன் கொழும்பில் பணியாற்றியவர். பின்னர் கிழக்கிலங்கையில் சூர்யா பெண்கள் அமைப்பில் இணைந்து பணியாற்றியவர்.  தற்போது கனடாவில் வசித்துவரும் விஜி அவர்கள் தொழிலாளிகளது உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார்.

Women of color எனும் அமைப்பில் தற்போது இணைந்து செயற்பட்டு வருகிறார். 2005இல் மனிதவுரிமைக்கும் சமாதானத்திற்கும் அபிவிருத்திக்குமான நோபல் பரிசுக்காக தெரிவுசெய்யப்பட்ட உலகின் முக்கியமான ஆயிரம் பெண்களில் ஒருவராக கணிக்கப்பட்டவர். இவர் பேசும் போது இலங்கையில் அனைத்து ஆயுதம் தாங்கிய அனைத்து அமைப்பினராலும் பெண்கள் எப்படி நெருக்குதலுக்குள்ளானார்கள் என்றும் முஸ்லீம் பெண்கள் எப்படி யாழில் இருந்து இடம்பெயரும்போது துன்புறுத்தப்பட்டார்கள் என்றும் பேசினார்.


தொடர்ந்து சபேசன் அவர்கள் குறுந்தேசியவாதத்தின் தவறுகளுக்கு அப்பால் என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தார். ஒரு தேசிய விடுதலைப் போராட்டம்  எவ்வகையில் சீரழிக்கப்பட்டது. சீரழிக்கப்படும் என்று தமிழீழவிடுதலைப் போராட்டத்தை மையப்படுத்திப் பேசினார். இலங்கை அரசை தனது ஆளுமைக்குள் வைப்பதற்கு தமிழீழ விடுதலை  இயக்கங்களை குறிப்பாக புலிகளை வளர்க்கிறது இந்திய அரசு,  ஆனால் ரஜீவ் காந்தியின் கொலைக்குப் பின்னர் தான் வளர்த்தவர்களே தன்னை மீறிப்போகின்றார்கள் என்ற நிலையில், பஞ்சாபில் செய்ததையே செய்யநினைக்கிறார்கள்.  அதுவும் இனவாத பிரேமதாச அரசுடன் தேனிலவு நடத்திய தந்திரோபாயத்தால் இந்தியாவை வென்ற அதே நடைமுறையை கையாண்டு ராஜபக்ஸவுடன் தேனிலவு கொண்ட இந்திரா கொங்கிரஸ் புலிகளை அழிக்கிறது.  இங்கே நாங்கள் பஞ்சாப்பையும் ஈழத்தையும் ஒரே சமாந்திர அரசியலில் பார்க்க முடியும். என்று சொன்னார்.

புலிகளின் தவறுகள் போன்றவற்ரை நேர்முகமாக பார்ப்பதும் விமர்சிப்பதும் என்று பார்த்தால் ஒரு மூர்க்கமான தற்திறுத்தியாகத்தான் அமையும்.  இன்னமும் முக்கியமானது மேற்குறிப்பிட்ட பாரம்பரியம்தான்.  அதாவது யாழ்மையவாதமான இந்தப் பாரம்பரியம் தமிழ்க் கொங்கிரஸில் ஆரம்பித்து புலிகளின் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்ததாக யாரும் சந்தோசப்பட முடியாது. தொடர்ந்தும் வணங்காமண், வட்டுக்கோட்டை, நாடுகடந்ந்த தமிழீழம் என்று கோவணம் கூடத் தேவையில்லை என்று நிர்வாணமாக தனது அசிங்கத்தை வெளிப்படுத்துகிறது எங்கள் பிற்போக்கு தமிழ் தேசியம். 
என்பதைத் தெரிவித்தார்.


அடுத்து மதிய உணவுக்கான இடைவேளை வழங்கப்பட்டது. மதிய உணவைத் தொடர்ந்து, இரண்டாவது அமர்வு ஆரம்பமாகியது.  அமர்விற்கு ராஜேந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார்.
சந்தோசம் ஆனால் யாருக்கும் தெரியாமல் என்று டன்ஸ்ரன் தமிழ்ச்சூழலில் ஒருபாலுறவுக்கான சிக்கல்கள் குறித்துப் பேச ஆரம்பித்தார். அவருடன் விஜய் அவர்களும் கலந்து கொண்டார். சபையோரை ஆறு குழுவாகப்பிரித்து அவர்களிடம் மூன்று கேள்விகளைக் கொடுத்துப் பதில் எழுதச் சொன்னார்கள். 1.Gay, Lesbian இவற்றிற்கான தமிழ்ச் சொற்கள் என்ன? 2. Gay, Lesbian குறித்து தமிழ்ச் சினிமா சித்தரிப்பது என்ன? 3. Gay, Lesbian இன் எதிர்காலம் என்ன? போன்றவை அந்தக் கேள்விகள். சபையோர் குறிப்பிட்ட பதில்களில் இருந்து தொடங்கியது அந்த நிகழ்வு ஒரு அரங்கப்பட்டறை போல் நடைபெற்றது.  


வன்னி ஒரு விமர்சனப்பார்வை என்ற தலைப்பில் அகங்கிளறி பேசினார். அதனை அவர் மூன்று பிரிவுகளாகப்பிரித்துப் பேசினார். 1.வன்னியின் வரலாற்றுப் பார்வை. 2. பிரதேசவாதமும் வன்னியும். 3. விடுதலைப்புலிகளும் வன்னியும். என்பன அவை. வன்னியின் வரலாறு என்பது   இதுவரை தகுந்தபடி பதிவுசெய்யப்படவில்லை. ஆய்வு செய்யப்படவில்லை.  யாழ்ப்பாணத்து மேல்  ஆதிக்கம் வன்னியை கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஆதிக்கம் செலுத்திவந்ததையும். விடுதலைப்புலிகளது யுத்தம் வன்னி மக்களை எவ்வாறு தனக்குச்சாதகமாகப் பலிகொண்டது என்றும் பண்டாரவன்னியன் தொடக்கம் கார்த்திகைப் பூவை தேசியப்பபூ ஆக்கியது வரை அத்தனை கதையாடல்களையும் பலவித உதாரணங்களுடன் சொல்லிக் கட்டுடைத்தார். ஆவணப்படுத்தினார். சபை இறுகிய முகத்துடன் உறைந்து போயிருந்தது.


அடுத்து வின்சன்ற்  அவர்கள் துருவத்தின் சொந்தக்காரர்கள் என்ற தலைப்பில் கனடாவின் தொல் குடிகளான செவ்விந்தியர்களது வாழ்வும் போராட்டங்களும் பற்றிக் குறிப்பிட்டார். அவர்களது வாழ்நிலங்கள், வீடுகள், அவர்களது பிள்ளைகளைக் கட்டாயப் பள்ளிக்குப் பிடித்துக் கொண்டு போனதால் பிள்ளைகளைப் பார்க்க பாடசாலையைச் சுற்றி பெற்றோர் வீடமைத்து வாழ்வதைப் பற்றி ஒளிப்படங்களுடன் விளக்கினார்.
இறுதியாக

Brown Like me என்ற விவரணப்படம் காண்பிக்கப்பட்டது.  assap நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த இந்த விவரணப்படம், சவுத் ஏசியன் ஒருபாலுறவுக்காரர்களது நெருக்கடிகள் குறித்துப் பேசியது.

முதலாவது பன்முகவெளி அரங்கு  பலதரமான விவாதங்களைக் கொண்டு இடம்பெற்றது. அடுத்த அரங்குக்கான திகதி மிகவிரைவில் அறிவிக்கப்படும். அரங்கில் கனடாவின் முக்கிய பல இலக்கியமுகங்களைக் காணவில்லையாயினும் பல புதிய ஆர்வலர்கள் கலந்து கொண்டார்கள்.

         புலம்பெயர்வும் இடம்பெயர்வும்

                                        தோழர் தங்கவடிவேல். 


தொகுப்பு- கற்சுறா

அன்பர்களே நண்பர்களே அனைவருக்கும் வணக்கம். ’சமாதானத்திற்கான கனடியர் அமைப்பினர்’ நடாத்தும் இந்தக் கூட்டத்தில் பேசுவதையிட்டு நான் பெருமைப்படுகிறேன். எனக்குத் தரப்பட்ட தலைப்பு இடம்பெயர்ந்தவர்களும் புலம்பெயர்ந்தவர்களும். இது ஒரு அருமையான தலைப்பு. அன்பர்களே முதலில் இடம்பெயர்வு என்ற பதத்தை எடுப்போமாக இருந்தால் இலங்கையில் தமிழர்களாக இருந்த தமிழர்களோடு இருந்த ஒருசாரார் அதாவது தாழ்த்தப்பட்ட மக்கள்தான் முதன் முதலில் இடம்பெயர்வுக்கு உள்ளானார்கள். நண்பர்களுக்கு நான் இதை ஞாபகப்படுத்த ஆசைப்படுகிறேன். முற்றுமுழுதாக தமிழர்கள் வாழுகின்ற யாழ்ப்பாண மண்ணிலே தாழ்த்தப்பட்ட மக்கள் ஏழை மக்கள் உயர்சாதி என்று சொல்லப்படுபவர்களால் பலதடவை இடம்பெயர்வுக்கு வற்புறுத்தப்பட்டார்கள். பலர் மனபங்கப்படுத்தப்பட்டார்கள். பல இளைஞர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அவர்கள் அங்கவீனர்களாக்கப்பட்டார்கள். விசேடமாகப் பெண்கள். பலரது குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டன. அதேபோல ஓரிடத்தில் நிரந்தரமாக வாழுகின்ற தங்களது அடிப்படை உரிமையை இழந்து யாழ்ப்பாண மண்ணிலே இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் திருகோணமலைக்கும் வன்னிப் பகுதிக்கும் இடம்பெயர்ந்த வரலாறு ஏராளம் ஏராளம்.

இது ஒன்றும் கற்பனைக் கதையல்ல. நிதர்சனமான வரலாற்று உண்மைகள். இந்தச் சாதித் துவேசம் என்கின்ற அடிப்படையான கேவலமான மிருகத்தனமான மிலேச்சத்தனமான இந்தக் கட்டமைப்பிலிருந்து எங்களுடைய இலங்கை அரசியலில் இனவாதமும் சரி மதவாதமும் சரி முளைத்திருக்கின்றன. முளைக்கின்றன. தமிழ் மொழியைவிட வேறுமொழி தெரியாது. வேறு மொழிகளைப் படிப்பதற்கு வாய்ப்பளிக்ப்படாத மக்கள். பாடசாலைகளிலே படிக்க்கூடாது என்று தடுக்கப்பட்ட மக்கள். தாங்கள் நினைத்தது போல் உடைதரிக்க முடியாது போன மக்களை மிகவும் கீழ்த்தரமான வாழ்நிலைக்குத் தள்ளி மிக மோசமான மனித உரிமை மீறல்களைச் செய்தவர்கள் இலங்கை வரலாற்றிலே மேட்டுக் குடியினர் என்று சொல்லப்படும் சாதிமான்களான யாழ்ப்பாணத்துக் கனவான்களே என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்.

யாழ்ப்பாணத்துத் தமிழ்த் தலைவர்கள் யாழ்ப்பாணமண்ணிலே வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்களது உரிமையை கொடுக்க மறுத்து செய்த கொடுமைகள் ஏராளம். இப்படியான தலைவர்கள் இலங்கை சுதந்திரம் அடைந்ததற்கு அதாவது 1948ம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் எப்படிச் சிங்களத் தலைவர்களோடு உறவாடினார்கள் என்பதைநாங்கள் நிதானமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உதாரணத்திற்குச் சொல்லலாம், டி.எஸ் சேனநாயக்கா குடும்பம் பின் பண்டாரநாயக்கா குடும்பம் அதன்பின் வந்தவர்கள் என அனைவரோடும் மிகநெருங்கிய உறவை வைத்துக் கொண்டிருந்தவர்கள் இராமநாதன், அருணாசலம், ஜி.ஜி. பொன்னம்பலம் அதன்பின் வந்த சுந்தரலிங்கம் திருச்செல்வம் போன்றவர்கள்.

இந்த இரண்டு இனவாதிகளும் இந்த இரண்டு சாதிவாதிகளும் தான் இலங்கையில் நடைபெற்ற அனைத்து அட்டூழியங்களுக்கும் மோதல்களுக்கும் அடாத்துக்களுக்கும் விதை விதைத்தார்கள் என்று சொல்வது ஒன்றும் பொய்யல்ல. கட்டுக்கதையல்ல. நண்பர்களே, சிங்கள அரசியல் தலைவர்கள் முழு இலங்கையையும் ஆண்ட காலத்திலே அதாவது உதாரணத்திற்கு டி.எஸ். சேனநாயக்கா காலத்திலே அவர்பிரதமராக இருந்த காலத்திலே அவருக்கு சகல விதமான உதவிகளையும் ஒத்தாசையையும் செய்தவர்கள் ஜி.ஜி. பொன்னம்பலம், எஸ்.ஜே.வி. செல்வநாயகம் போன்றவர்கள். ஏனெனில் அவர்கள் ஒரு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் உதவியாகவும் பாதகாப்பாகவும்தான் இருந்திருக்கிறார்கள்.

சேனநாயக்கா அவர்கள் குடியேற்றத் திட்டம் ஒன்றைக் கொண்டுவந்த பொழுது சிங்களக் குடியேற்றம் என்று சொன்னார்கள். அன்றைய தமிழ்த் தலைவர்கள் அவர்களுக்கு உடன்பாடாய்த்தான் இருந்தார்கள். ஒத்தசையாகத்தான் இருந்தார்கள். அப்போது இதனைத் தவறு என்றும் பிரச்சனைக்குரியவை என்றும் இடதுசாரிகள் சொன்னபொழுது இந்தத் தமிழ்த் தலைவர்கள் சிங்களத் தலைவர்களோடு சேர்ந்து நின்று தமது கைங்கரியங்களை புரிந்தார்கள். தமிழ் மக்களில் ஒரு சாராருக்கு உரிமைகள் கொடுக்கக் கூடாது என்று பேசியவர்கள் சிங்களத் தலைவர்கள் அல்ல. முதல் பேசியவர்கள் இராமநாதன் போன்ற தமிழ்த் தலைவர்கள். பின்னர் அந்த அடக்கப்பட்ட மக்கள் அடக்குமுறைக்கெதிராக வீறு கொண்டெழுந்து தெளிந்த மனதோடு மார்க்சிய லெனினிச சோசலிச கொள்கையோடு சேர்ந்து எடுத்த நடவடிக்கைக்கு எதிராக நின்றவர் வவுனியா சி.சுந்தரலிங்கம் அவர்கள்.
இவர்களுக்கு எதிராக சிங்கள அரசு எந்த நடவடிக்கையும் எடக்கவில்லை. தட்டிக் கேட்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள்தான் கேட்டார்கள். நண்பர்களே சாதிவாதம் மொழிவாதம் இனவாதம் வர்க்க வாதம் எல்லாமே கிட்டத்தட்ட ஓரிடத்தில் இருந்துதான் பிறக்கின்றது. சாதி அடக்குமுறை எவ்வளவு பயங்கரமானதோ அதேயளவு பயங்கரமானதுதான் இனவாதம். வர்க்க வாதமும் அப்படித்தான். வர்க்கமுரண்பாடு உலகம் முழுமைக்கும் பொதுவானது.

அடுத்து, பண்டார நாயக்கா ஆட்சிக்கு வருகிறபொழுது இரண்டே இரண்டு கட்சிகள்தான் சிங்களவர்களிடம் இருந்தது. ஒன்று ஐக்கியதேசியக்கட்சி மற்றது சிறீலங்கா சுதந்திரக் கட்சி. பண்டாரநாயக்கா 1947இலேயே தமிழத் தலைவர்களான எஸ்.ஜே.வி. செல்வநாயகம் போன்றவர்களிடம் இலங்கையில் ஒரு இனப்பிரச்சனை இருக்கிறது இது பிற்காலத்தில் வளர்ந்து பெருத்து வெடித்து பேராபத்தை உண்டு பண்ணக்கூடியது. ஆனபடியால் இரண்டு பகுதித் தலைவர்களும் பேசி ஒரு உடன்பாட்டிற்கு வருவதன் மூலம் இதை விஸ்பரூபம் எடுக்காமல் தடுக்கமுடியும் என்று சொல்லியிருக்கிறார். இது எஸ்.டிபிள்யூ.ஆர்.டி. பண்டபரநாயக்காவின் மனதில் எழுந்த எண்ணம். இது எங்கள் தமிழ்த் தலைவர்களது மனதில் தோன்றியதல்ல. பின்னர் பண்டாரநாயக்காவும் தந்தை செல்வநாயகமும் சேர்ந்து ஒப்பந்தம் ஒன்றை எழுதினார்கள். இது பூரணமானதாக இல்லாவிடினும் பின்னர் எழுந்த மிகப்பெரிய பிரச்சனைகளை தவிர்க்க அது காத்திரமான பங்களிப்பைச் செய்தது.

ஜே.ஆர். ஜெயவர்த்தனா என்ன செய்தார் என்று உங்களுக்குத் தெரியும். ஜே.ஆர். ஜெயவர்த்தனா அவர்கள் பண்டாரநாயக்காவும் செல்வநாயகமும் செய்த ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்து கண்டி யாத்திரை செய்தார். கண்டி யாத்திரை செய்ததன் மூலம் சிங்கள இனவாதத்தை தூண்டினார். நான் சிங்களப் பேரினவாதம் என்று சொல்ல மாட்டேன். நண்பர்களே, நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ தெரியாது. இனவாதம் என்பது தமிழர்களிடமும் இருந்தது. அது தமிழ் இனவாதம். சிங்களவர்களிடமும் இருந்தது சிங்கள இனவாதம். இந்த இனவாதத்தை மக்களுடைய தொகையைக் கொண்டு நாங்கள் தீர்மானிக்க இயலாது. தமிழ் இனவாதம் என்பது இந்த வெறி என்பது, இந்த மிலேச்சத்தனமென்பது சிங்கள இனவாத்தை விட எந்தளவிலும் குறைந்ததல்ல. ஜே.ஆர்.அவர்களது கண்டியாத்திரையின் பிற்பாடு யூ. என்.பி கட்சி சிங்கள மக்களிடத்தில் கணிசமான ஆதரவைப் பெற்று வளருகிறது. அதற்கான ஆதாரம், மூலதனம் இனவாதமே. இன்றுவரை அனைத்துப்பிரச்சனைகளுக்கும் முரண்பாடுகளுக்கும் மூலகாரணம் பொருளாதாரம் தான் அந்த ஏற்றத்தாழ்வுதான் என்று சொன்னவர்கள் இடதுசாரிகள்தான். இடதுசாரிகள் ஒன்றையே நினைத்து நேரான பாதையில் சென்றதனால்தான் ஒருபோதும் இடறவில்லை.

ரஸ்சியா என்றும் மொஸ்கோ என்றும் ரொஸ்கியம் என்றும் பிளவுபட்டு நின்றதும் இவர்கள் ஒற்றுமைப்படாததும் தவறுதான். இந்த மூவரும் ஒற்றுமைப்பட்டு நின்றிருந்தால் இலங்கையில் நடைபெற்ற அரசியல் அனர்த்தங்கள் நிட்சயம் தவிர்க்கப்பட்டிருக்கும். தவிர்க்கப்படுவது மாத்திரமல்ல ஒரு பெரிய ஐக்கியம் இந்த மக்களிடையே வந்திருக்கும். நான் 1956ம் ஆண்டு கல்லோயா அபிவிருத்தி சபையிலே பணிபுரிந்தேன். இலங்கை வரலாற்றிலே முதலாவது இனக்கலவரம் அங்கேதான் வெடித்தது. இனக்கலவரம் அம்பாறையில் வெடித்தபொழுது எனக்கு அப்போது 23 வயது. அந்தநேரம் எங்களை ஒரு துன்பமும் இல்லாது பாதுகாத்தவர்கள் எங்களது சிங்கள நண்பர்கள். நான் ஒரு உதாரணத்திற்குச் சொல்லுகிறேன். பிரேமரட்ணா என்று அம்பாந்தோட்டையில் இருக்கின்ற எனது நண்பன் என்னையும் இன்னும் மூன்று தமிழ் இளைஞர்களையும் ஒரு பேக்கரியிலேயே கொண்டு போய் பத்திரமாக இருக்கச் சொல்லி விட்டார். அது முதலாவது அனுபவம். அங்கே பார்த்தால் ஒவ்வொருவரும் வெவ்வேறு கோலங்களில் இருக்கின்ற தொழிலாளிகள். பார்க்க எங்களுக்கு மிகவும் அச்சமாக இருந்தது. தமிழனின் குணம் என்ன பார்த்தவுடன் எல்லோரையும் சந்தேகிப்பது. அங்கிருந்த கத்திகள் கோடாலிகளைப் பார்க்க எனது நண்பர்களுக்குப் பயம் வந்துவிட்டது. ஆனால் தனது தம்பியினது பேக்கரிதான் இது. நீங்கள் இங்கிருந்து வெளியில் போக யோசிக்க வேண்டாம். வெளியில் நிலைமை படுமோசமாகவுள்ளது. என்பதை பிரேமரட்ண விளக்கினார்.

தனது தம்பியும் என்னைப் போல்தான் ஆதலினால் பயப்படவேண்டாம் என்றார். நான் இதை ஏன் சொல்கிறேன் என்றால், அடிமட்டத்து மனிதர்கள் தொழிலாளிகள் உறவு கொள்வது என்பது திடீரென ஏற்படும் சிக்கல்களிலும் அல்லது அளவு கடந்த அன்பிலும்தான். 1987களில் பலாலி இராணுவமுகாமைச் சுற்றியுள்ள கிராமத்து குடும்பங்கள் பாதுகாப்புக் கருதி இடம்பெயரவேண்டிவந்தது. அனைவரும் ஒட்டுமொத்தமாக இடம்பெயர்ந்தார்கள். அந்தநேரம் இரண்டுநாள் தங்குவதற்கு அரசாங்க அதிபரும் பொலிசும் இடம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டபொழுது, சாதியிலே ஒடுக்கப்பட்ட மக்கள் ஒருபகுதியிலேயே விடப்பட்டு சாதிமான்கள் வேறுபகுதியிலே போய்ச் சேர்ந்தார்கள். பின்பு நடந்த உள்நாட்டு யுத்தத்திலே எங்களுடைய மக்கள் உயிருக்குப் பயந்து அநாதைகளாக ஓடி ஒழிந்து கொண்ட இடங்களிலே தாழ்த்தப்பட்ட மக்கள் தண்ணியள்ளிக்குடிக்க முடியாமல் தடைசெய்யப்பட்டார்கள். நண்பர்களே அன்பர்களே நான் உங்களுக்குச் சொல்லுவது, இந்த அடிப்படை இன்றுவரை இருக்கிறது. அது செத்து விட்டது என்று சிலர் சொல்கிறார்கள். வெளிநாடுகளில் புலம்பெயர்ந்தவர்களைப் பார்க்கிறேன். இங்கே மிகக் கவனமாக அது பாதுகாக்கப்படுகிறது. குடியிருக்க வீடு வாங்கப் போகும் போது அயலிலே யார் இருக்கிறார்கள் என்தான் பார்க்கிறார்கள். என்ன சாதிக்காரர் இருக்கிறார் என்றுதான் பார்க்கிறார்கள்.

இதுதான் தமிழர்களது மனோபாவமாக இருக்கிறது. இனி, தமிழீழ விடுதலைப் போரை நடாத்திய புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டார்கள். தோற்கடிக்கப்பட்டது என்று சொல்லுவதற்கும் எதிர்ப்பானவர்கள் இருப்பார்கள். புலிகள் போரில் தோற்கடிக்கப்ட்ட பின் அங்குள்ள அரசும் அரசுக்கு சார்பானவர்களும் தூண்டிவிட்டதின் பேரில் சிங்கள மக்கள் பெரிய கொண்டாட்டமாகக் கொண்டாடினார்கள். புத்தர் அதையா சொன்னார்? பஞ்ச சீலம் என்கின்ற அன்பைப் போதித்த புத்த சமயத்தைத் தழுவுகிற மக்கள் பல்லாயிரம் மக்கள் சாகடிக்கப்பட்டதை கொண்டாட்டமாகக் கொண்டாடினார்கள். இது அந்த மக்களுடைய குற்றமல்ல. அந்த மாதிரி அவர்களுடைய மூளைகள் சலவை செய்யப்பட்டுள்ளன. நான் இப்படிச் சொல்கிற பொழுது இன்னொரு விடையத்தையும் சொல்ல வேண்டும். 1999ம், 2000ம் ஆண்டுகளில் ஓயாத அலைகள் என்ற புலிகளுடைய இராணுவ நடவடிக்கையின் பொது நடந்த சம்பவங்கள் பூண்டோடு அழிக்கப்பட்ட இராணுவ முகாம்கள், சிங்களக் கிராமங்கள், முஸ்லீம் மக்கள் அழிக்கப்பட்டு இரசு தடுத்து நிறுத்த முடியாது பின்வாங்கியபோது நாங்கள் எல்லாம் கொண்டாடினோம். எமது வீடுகளில் விழாவாகக் கொண்டாடினோம்.
நமது நாட்டிலல்ல. இங்கே புலம் பெயர்ந்து வந்து சர்வ பாக்கியங்களையும், வாழ்க்கைக்குத் தேவையான சகலவசதிகளையும் அதற்கும் மேலால் மனித உரிமைகளைப் பாதுகாக்கின்ற, மதிக்கின்ற நாட்டில் வந்திருக்கின்ற நாங்கள் கொண்டாடினோம். அது தவறு எனில் இது எவ்வகையில் சரியானதாக இருக்கமுடியும்? ஆகவே இனவாதம் என்பது தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் பொதுவான விடையம். இடதுசாரி என்று சொல்கிற நாங்கள். இனவாதம் என்ற உணர்வுக்கோ அந்த மனநிலைக்கோ எங்களை உள்ளாக்காமல் இருந்தபடியால்தான் யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்களது சம உரிமைக்கான போராட்டத்தில் எதிர்பார்க்காதளவு வெற்றியை அடைந்துள்ளோம். காரணம் எங்களது போராட்டத்திலே நம்மிடம் இனவாதம் இருக்கவில்லை. சிங்களமக்கள் நிறையளவு உதவி செய்தார்கள். முஸ்லீம் மக்கள் உதவி செய்தார்கள். அதேபோல் நல்லெண்ணம் படைத்த, தெளிந்த சிந்தனையுள்ள, இடதுசாரி மனப்பாங்குள்ள உயர்சாதித் தமிழர்களும் தங்களுடைய உயிரைக் கொடுக்கிற அளவுக்கு முன்வந்தார்கள். இவற்றையெல்லாம் நாம் பெருமையாகப் பேசவேண்டும். முடிவாக புலம்பெயர்ந்து வந்திருக்கிற தமிழர்கள் பற்றிப் பேசவேண்டும்.
இங்கு சகலவிதமான வசதிகளுடன் வாழ்ந்து கொண்டு அழிவையே நோக்காக்கொண்ட அழிந்துபோகின்ற இயக்கங்களுக்கு தாராளமாக அள்ளிக் கொடுத்து அங்கே நடக்கின்ற போருக்கு வித்திட்டவர்கள், அதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம் என்று நம்பியவர்கள் இந்தப் புலம் பெயர்ந்தவர்கள். எங்காவது யாராவது நூறுபேர் சென்று உண்மையான சமாதானம் வேண்டும், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உண்மையாக அமைதி வேண்டும், தமிழர்களுக்கு மாத்திரமல்ல ஏழைச் சிங்களவர்களுக்கு, மலையக மக்களுக்கு உண்மையான அமைதி வேண்டும் என்று சொன்ன ஏதாவது ஒரு இயக்கம் இங்கிருந்திருக்கிறதா? இல்லை. தற்போது இங்கிருந்து அரசு அமைப்பது பற்றியும் தேசியக் கொடி எது என்றும் விவாதித்துக் கொண்டிருப்பதை விட்டு புலம்பெயர் சமூகம் இனிச் செய்யவேண்டியது இலங்கையில் இருக்கின்ற அனைத்து சமூகங்களும் இன ஐக்கியத்துடன் ஒன்றுபட்டு ஒரு புரிந்துணர்வுடன் வாழ வழிசெய்கின்ற ஒரு அரசை அங்கு ஏற்படுத்துவதுதான் சரியாக இருக்கமுடியும் என்று சொல்லி எனது பேச்சை முடித்துக் கொள்கின்றேன்.

         “ஆம்..இல்லை, என நறுக்கென்று இரண்டு வார்த்தை போதும்.”


சோபாசக்தி, தீபச்செல்வன் உரையாடல் குறித்த எதிர்வினை.

கற்சுறா..அசுரா



ஞானசம்பந்தர் ஞானப்பால் குடித்து ஐந்து வயதில் பதிகம் பாடியதாக எமக்கு புராணம் சொன்னது. புராணங்கள் எல்லாமே புரட்டுகள்தான் என்று மனம் புறந்தள்ளியது. “ஆனால்கிட்டத்தட்ட ஆறுவயதில் ஏன் யுத்தம் நடக்கிறது? எங்கள் மண்ணில் என்ன நடக்கிறது என்பது எனக்குப் புரிந்து விட்டது.எங்களுக்கு என்ன நடக்கிறது? நாங்கள் யார்? என்று புரிந்து கொண்டேன். ஆமிக்குப் பயந்து வாழும் வாழ்க்கை எனக்கு அந்த வயதிலேயே தெரிந்தது.” என புலிப்பால் குடித்து ஆறுவயதில் தமிழ்த் தேசியப் புராணம் பாடிய தீபச்செல்வனுக்கும் திருஞான சம்பந்தருக்கும் மிஞ்சி..மிஞ்சிப்போனால் ஒரு வயதுதான் வித்தியாசம். இந்த தீபச்செல்வனது அதிசயம் எம் கண்முன்னாலேயே நடக்கிறது. எனவே ஐந்து வயதில் சம்பந்தர் பதிகம் பாடியிருப்பார் என்பதை நாம்  இப்போது ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

தீபச்செல்வன் புலிஆதரவாளராக இருப்பதும் புலி இராட்சியத்தின் அவசியம் குறித்துப் பேசுவதும் நமக்கு ஒரு பொருட்டல்ல. இப்படியான மனம்படைத்தவர்களுடன் உரையாடுவதும் ஒரு தவறான விடயமும் அல்ல.
ஆனால் ஆக்க இலக்கியம் குறித்த சிந்தனையாளர்கள் எனக் கூறிக் கொள்பவர்களும், பன்முக சிந்தனைகள், மாற்றுக் கருத்தியல்களின்  அவசியம் கருதுபவர்களும் தீபச்செல்வன் போன்றவர்களின் உணர்வெழுச்சி உந்துதல்களை எப்படி எதிர்கொள்வது என்பதே இங்கு விவாதப் பொருளாக உள்ளது.

இந்த நேர்காணல் குறித்து நாம் கேட்கும் முதல் கேள்வி யாதெனில்,
“கிளிநொச்சி இரத்தினபுரத்தில் பிறந்த தீபச்செல்வன் கவிதை, பத்தி, எழுத்து, ஆவணப்படம், திறநாய்வு, ஊடகவியல் எனப் பல துறைகளில் இயங்கிக் கொண்டிருப்பவர்.’பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’ …… போரைக்குறித்தும் போரின் வடுவைக்குறித்தும் அலைந்து திரியும் ஏதலி வாழ்வு குறித்தும் தொடர்ச்சியாக எழுதிவரும் தீபச்செல்வன் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளராகவும் செயற்பட்டவர் ‘தீபம்’ என்ற வலைப்பக்கத்தை தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மும்மொழிகளிலும் நடத்திவருகின்றார். தற்போது யாழ்ப் பல்கலைக்கழக ஊடக நிலையத்தில் வருகை விரிவுரையாளராகப் பணியாற்றும் தீபச்செல்வனுடன் இந்நேர்காணல் மின் அஞ்சலூடாகக் கேள்விகள் அனுப்பியும் பெற்றுக்கொண்ட பதில்களிலிருந்து துணைக் கேள்விகள் அனுப்பிக் கூடுதல் பதில்களைப் பெற்றும் நிகழ்த்தப்பட்டது.” 
போன்ற அறிமுகங்களினூடாக தீபச்செல்வனை அணுகுவதா?

அல்லது தீபச்செல்வனின் பதில்களில் உறைந்து கிடக்கும் அறியாமையையும் அலட்சியங்களையும், தீபச்செல்வன் போன்றவர்களால் எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் விளைவுகளையும் அம்பலப்படுத்துவதை நோக்கமாகக் கொள்ள வேண்டியது அவசியமா? என்பதுதான்.
போரைக்குறித்தும் போரின் வடுவைக்குறித்தும் அலைந்து திரியும் ஏதலி வாழ்வு குறித்தும் எங்கள் புலவர் சேரன் பாடாததையா தீபச்செல்வன் தற்போது பாடப்போகின்றார்.
……..
துயிலா இரவுகளில்
அப்பா என்று அலறித்துடிக்கின்ற
சின்ன மழலைக்கு
என்னதான் சொல்வாய்?
உலாவித்திரிந்து நிலவைக் காட்டி
அப்பா கடவுளிடம் போனார்
என்று சொல்லாதே.
துயரம் தொடர்ந்த வகையைச் சொல்
குருதி படிந்த கதையைச் சொல்
கொடுமைகள் அழியப்
போரிடச் சொல்;
…..
இரவல் படையில்
புரட்சி எதற்கு?
எங்கள் நிலத்தில்
எங்கள் பலத்தில்
எங்கள் கால்களில்
தங்கி நில்லுங்கள்
வெல்வோமாயின் வாழ்வோம்
வீழ்வோமாயினும் வாழ்வோம்
நமது பரம்பரை போர் புரியட்டும். (சேரனின் ‘நீ இப்போது இறங்கும் ஆறு’ எனும் கவிதைத் தொகுப்பிலிருந்து)

என்றெல்லாம் கவிதைபாடி உணர்ச்சி ஏற்றி ஆயிரக்கணக்கான இளைஞர்களையும், குழந்தைகளையும் கொல்லக் கொடுத்துவிட்டு தனது வாழ்வை எவ்வாறு தக்கவைத்துள்ளார் புலவர் சேரன் என்பதைப் பாருங்கள். ‘வீழ்வோமாயினும் வாழ்வோம்’ என்று பாடியதற்காகவே இன்று ‘வீழ்ந்தபோதும்’ அவர் நாடுகடந்த தமிழ் ஈழத்துக்கு தனது ஆதரவை நல்குவதனூடாக அவர் ‘வாழ்ந்து’ கொண்டிருக்கின்றார்.
இந்த நேர்காணலின் வாசிப்பு மன நிலையானது ஒரு ஆரம்பகால புலி உறுப்பினருக்கும், ஒரு நிரந்தர (eternal) புலி உறுப்பினருக்குமான உரையாடலில்  எதிர்நிலைகளில் கேள்விகளும் விடைகளும் போய்க்கொண்டிருப்பதான ‘தோற்ற மயக்கத்தில்’ இழுத்துச் செல்லும். ஆனால் உண்மை அதுவல்ல. விடுதலைப்புலிகளது தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக அறிந்ததும் இணையத்தளங்களில் அவரது படங்களைப்பார்த்ததும் எனது இரண்டு கண்களும் தாழ்ந்தன. நான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஒரு குழந்தைப் போராளியாக இருந்தவன் அதனால் காட்டப்பட்ட படம் அவரேதான் என்பது எனக்குத் தெரியும். என்று சோபா எழுதியபோது எமக்கு எதுவித ஆச்சரியத்தையும் கொடுக்கவில்லை. விடுதலைப்புலிகளது சாகசவிளையாட்டில் அதிகமாய் மயக்கமுள்ளவர் அவர்.  கொரில்லா நாவல் அதற்கு நல்ல உதாரணம்.
அதனால்தான் சொல்கிறோம் தனக்குரிய அரசியலை தீபச்செல்வனுக்குள்ளால் கொண்டுவர நினைக்கிறார் அவர். அதனால் தான் புலம் பெயர்ந்த தமிழர்கள் எவ்வாறிருக்கவேண்டும் எவ்வாறிருக்கக்கூடாது என்று தீபச்செல்வனிடம் புத்திமதி கேட்கிறார் அவர்.
இதே கேள்விகள் நிலாந்தன், கருணாகரன்,  புதுவை ரத்தினதுரை, ஜெயபாலன், உருத்திரகுமார், சீமான், வை.கோபால்சாமி  போன்றவர்களிடம்  கேட்டாலும் இதேமாதிரி சப்புக்கெட்ட பதில்கள் தான் வரும். இனிவருங்காலங்களில் அவர்களிடமும் கேட்கப்பட்டு அவற்றை லும்பினி இணையத்தில் பிரசுரித்து எல்லோரையும் புல்லரிக்க வைக்கவேண்டும்.

முதலில் நாம் ஒன்றைத் தெரி(ளி)ந்து கொள்ளவேண்டும். “யுத்தம்தான் என்னை உண்மையான எழுத்தையும் இலக்கியத்தையும் நோக்கி நகர்த்தியது” என தீபச்செல்வன் அவர்கள் கூறியதிலிருந்தும், “நானோ விடுதலைப்புலிகள் தொடர்பான நிரந்தரமான விருப்பை வைத்துக் கொண்டு பேசுகின்றேன்” என்று கூறுவதனூடாகவும் தீபச்செல்வனிடம் தொடர்ந்து கேட்கவேண்டிய கேள்வி என்பது புலிகளின் சாகசம் குறித்ததாக மட்டுமே இருக்கமுடியும்.

தீபச்செல்வன் அவர்கள் தான் ஆறுவயதில் பெற்ற ஞானத்திலிருந்துதான் உலகத்தைப் பார்க்கிறார். பாவம் அவர். அவர் இலங்கையின் அரசியல் சமூக வரலாறுகள் குறித்த தேடலோ அது குறித்த அக்கறையோ எதுவுமற்ற ஒரு அப்பாவி.
புலிகள் காலத்தில் தொடர்ச்சியாகவே யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்களும், பேராசிரியர்களும் புலிகளைக் காப்பாற்றுவதிலும் யாழ் மேலாதிக்க சிந்தனையை பேணுபவர்களுமாகவே இருந்து வந்தவர்கள். இதில் முறிந்த பனை ஆசிரியர்கள் மட்டுமே விதி விலக்காக இருந்துள்ளனர்.
புலிகளால் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் குறித்துக் கேட்கப்பட்டபோது: “ இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள், சிங்களவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை நான் வளர்ந்த பின்புதான் அறிந்தேன். அதை யார் செய்தார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அப்பாவிச் சிங்கள மக்களையும், முஸ்லிம் மக்களையும் கொல்வது தீர்வல்ல என்று விடுதலைப்புலிகள் கருதியவர்கள் என்பதை நான் அறிவேன்”. என்கிறார் தீபச்செல்வன். கேக்கிறவன் கேணையன் என்றால் கேப்பையிலும் பால் வழியுமாம்.

அட அதுக்கு அப்படி ஒரு புலுடா விடுகிறாரென்று பார்த்தால்,  அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் கொலைகள் பற்றிக் கேட்டதற்கு, “அவர்கள் கொல்லப்படும் பொழுது நான் குழந்தையாகவும், சிறுவனாகவும் இருந்தேன். …..அவர்களைப் புலிகளா கொன்றார்கள் என்பதைப் பற்றியும் நான் அறியவில்லை. நான் உன்னதமான போராட்டம் நடந்த சூழலில்தான் நான் இருந்தேன்”. என்கிறார். எங்கபோய் முட்டுறது நாம.
“ஆனால் கிட்டத்தட்ட ஆறுவயதில் ஏன் யுத்தம் நடக்கிறது? எங்கள் மண்ணில் என்ன நடக்கிறது என்பது எனக்குப் புரிந்து விட்டது”. என்று ஆறுவயதுக் குழந்தையாக இருக்கும்போதே இராணுவம் மக்களைக் கொல்வதையும், சிங்கள ஆட்சியின் அரசியலையும் அறிந்து கொள்ளக்கூடிய ஞானப் பார்வை பெற்றிருந்தவர் தீபச்செல்வன். ஆனால் அமிர்தலிங்கத்தையும், யோகேஸ்வரனையும், அப்பாவிச் சிங்களவர்களையும்  புலிகள் கொல்லும் போது மட்டும் நான் குழந்தையாக இருந்தேன், நான் அப்போது  சிறுவன் என்றெல்லாம் குழைகின்றார். அவர் சொல்லுவதில்  ‘புலி நியாயம்’ ஒன்றிருக்கிறதல்லவா! புலிகள் தமது ‘உன்னதமான போராட்டத்திற்காகத்தானே’ தமது அதிகாரத்திற்கு எதிரானவர்கள் எனக் கருதுபவர்களை எல்லாம் கொன்று குவித்தார்கள். ”புலிகள் மரணத்தை எதிர்கொள்ளும் விதம் மக்களிடம் பெரியளவிலான ஆதரவைப்பெற்றது” என்று கூறும் தீபச்செல்வனுக்கு

“ஐயோ! நாங்கள் ஒன்றுமறியாத அகதிகள். எங்களால் சண்டைபோட முடியாது. எங்களுக்கு சண்டையில் விருப்பமில்லை. உங்களால் நாங்களெல்லாம் சாகப் போகிறோம். தயவு செய்து இங்கிருந்து போய்விடுங்கள்”. என பொதுமக்களின் வேண்டுதலை பதிவு செய்த முறிந்த பனை ஆசிரியர்களின் கள ஆய்வின் ஆதாரமான (பக்கம் 300) முறிந்த பனை நூலை வாசிக்குமாறு அடுத்த கேள்வியில் சொல்லியிருக்க வேண்டாமோ?
அந்த காலகட்டத்தில் தீபச்செல்வனுக்கு நாலு வயதுதானே இருந்தது என்ற காரணத்தால்  அவருடன் உரையாடியவர் அதைத் தவிர்த்துக் கொண்டாரோ என்னவோ!

“புலிகள் பொதுமக்களை பாதுகாப்புக்கான கவசமாக பயன்படுத்தினர். போராளிகள் மக்கள் செறிந்திருந்த மருத்துவமனைகளிலிருந்தும் கோயில்களிலிருந்தும் பாடசாலைகளிலிருந்தும் தாக்குதல் நடத்தி தப்பிக்கொண்டனர்”.(முறிந்த பனை, பக்கம் 357) …“அக்டோபர் யுத்தத்தின் போதும் இலங்கை அரசோ, இந்திய அரசோ தமிழ் மக்களின் அக்கறைகளை ஒருபோதும் பொருட்டாகவே கருதியதில்லை என்பதை நாம் அறிவோம். எல்லாவற்றிற்கும் மேலாக, விடுதலைப்புலிகள்கூட தமது இயக்கத்தின் குறுகிய நலன்களைவிடப் பொதுமக்களின் ஜீவமரணப் பிரச்சனைகளை மிகவும் அற்பமாகவே கருதியிருந்ததை அக்டோபர் யுத்தத்தின்போது அவர்கள் நடந்து கொண்ட விதம் நன்றாகவே தெளிவாக்கியது.” (முறிந்த பனை, பக்கம்405) இங்கே ஒன்றை நினைவு கொள்ளவேண்டும் முறிந்த பனை நூல் ஆசிரியர்கள் இலங்கை அரசிற்கு எதிராக யுத்தத்தில் ஈடுபட்ட  அனைத்து இயக்கங்களையும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியவர்கள். அதுமட்டுமல்லாது இந்திய இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட யுத்த காலத்தில் களப் பணிகள் ஊடாக மக்களை ஊர், ஊராக, கிராமம், கிராமமாக சென்று நிலமைகளை நேரில் கேட்டு, அறிந்து ஆவணப்படுத்தியுள்ளனர்.
அக்காலகட்டத்தில் மக்கள் ஓரளவிற்கு புலிகளின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை காட்டியுள்ளனர். 90 களின் பிற்பகுதியிலிருந்து மக்கள் வாய்மூடி மௌனமாக்கப்பட்டனர். இப்படியான சூழலே புலிகள் அழியும் வரை வட-கிழக்குப் பகுதியில் இருந்து வந்தது.

“விடுதலைப் புலிகளுக்கு அறிவுரை சொல்லும் விதமாக இருக்கவில்லை விடுதலைப் புலிகளை அழிக்கும் விதமாகவே இருந்தது” எனக் கூறிய தீபச்செல்வனுக்கு புலிகளுக்கு அறிவுரை கூறி பலன் அற்ற காரணத்தாலேயே புலிகள் அழிக்கப்பட வேண்டியவர்கள் எனும் சூழல் ஏற்பட்டது என்பதாக கூறியருக்க வேண்டாமா?

தீபச்செல்வன் போன்றவர்கள் புலிகள் புனிதமானவர்கள் என்று பட்டைச்சாராயம் அடித்து நாக்குச் செத்தவர்கள் போல் திரும்பத்திரும்ப ஒரேபதிலைச் சொல்வார்கள். ஊருக்கே தெரிந்த விடையம் தமக்குத் தெரியாது என்பதாக புலுடா விட இவர்களால் மட்டும்தான் முடியும். இவர்களுக்கு நடைபெற்ற எல்லமே தெரியும். ஆனால் இன்றுவரை புலிகளுடன் கூட இருந்து நம்பி ஏமாந்து போனதை இவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதே ஒரு உண்மை. அதனால் தாம் சொல்வது பொய் என்று தெரிந்தும் இல்லை என்று மறுத்துச்சொல்ல வேண்டியிருக்கிறது. இறுதி யுத்தத்தில் புலிகள் மக்களைக் கொன்றார்கள் என்று எத்தனையோ நேரடி ஆதாரங்கள் இருந்தும் தீபச்செல்வன் பச்சையாக மூடிமறைக்க வேண்டியிருப்பதற்கு வேறுகாரணம் எதுவும் இருக்க முடியாது. அந்த உண்மையை இன்று கருணாகரன் இந்தியாவில் இருந்து விதுல்ராஜா போன்ற பல புனைபெயர்களில் சொல்வதனால் கருணாகரனுடன் தற்போது தான் முரண்படுவதாகச் சொல்கிறார்.
சாதாரணமாக விடுதலைப்புலியில் இணைந்துகொண்ட ஒரு போராளி என்பவனுடைய சிந்தனையில் இருக்கக்கூடிய ஆகக் குறைந்தளவு நேர்மைகூட இல்லாதவர் அவர். புலிகளை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட பதில்களையே திரும்பத்திரும்பச் சொல்லும் தீபச்செல்வன் போன்ற புலி உத்தியோகத்தர்கள் எப்போதும் ஆபத்து நிறைந்தவர்கள். ஒரு இனத்தின்  கொடடுரமான படுகொலைகளுக்கு துணைபோனவர்கள்  தீபச்செல்வன் போன்றவர்கள்.

பார்த்தீர்கள்தானே பல்கலைக்கழக விரிவுரையாளராக இருக்கும் விடுதலைப்புலிகளது உத்தியோகத்தரான தீபச்செல்வன் கேட்கப்படும்  மிகச் சாதாரணமான கேள்விகளுக்கு அற்பத்தனமாகப் பதிலளிப்பதை!  சகோதரப்படுகொலை குறித்து கேட்டால்..,  அப்போது நான் குழந்தை. முஸ்லீம்கள் வெளியேற்றம் குறித்து, அப்போது நான் குழந்தை. கிழக்கிலங்கைப் படுகொலை… அப்போது நான் சிறுவன். சிங்களமக்கள் படுகொலை… அதை நான் அறியவில்லை. என்று குழந்தைத்தனமாகவே பேசிக் கொள்கிறார். இங்கே பல்வேறு ஆதாரங்களையும்,  விளக்கங்களையும் எழுதி தீபச்செல்வனின் புத்திக்குள் புதைக்கவேண்டும் என்ற எண்ணமும் கருசனையும் எமக்கில்லை. அது நமது தேவையுமல்ல.

ஏனெனில் அவர்களுக்கு சகலதும் விளக்கமாகத் தெரியும். நாமும் காலாகாலமாக எழுதியும் வருகின்றோம். ஆனால் தீபச்செல்வன் போன்றவர்களது ஏக்கம் கவலையெல்லாம் தாம் மிகப்பெரிய நம்பிக்கை கொண்டிருந்த விடுதலைப் புலிகள் அவசரமாக அழிந்து போனதைப் பற்றித்தான். தங்களது அந்த ஏக்கத்தைத்தான் மக்கள் மனதில் இருந்து என்றும் புலிகளது நினைவு அழியாது என தமக்காக மக்களைத் துணைக்கு அழைக்கிறார்கள்.

இன்றைய ஜேர்மனியர்கள் தமது மூதாதையர்கள் செய்த செயல் குறித்து மிகவும் வெட்கப்படுகிறார்கள். அதேபோல் புலிகளது தீபச்செல்வன்கள் போன்ற உத்தியோகத்தர்களும் வெட்கப்படும் நிலை உருவாகவேண்டும்.
இந்த உரையாடலானது ‘இனிஒரு இணையத்திலோ’ தேசம் இணையத்திலோ’ அல்லது ‘லங்காசிறீ இணையத்திலோ’ ஏன் கனக்கவேண்டாம் even சோபாசக்தி டாட் காமிலையோ (!!!) வந்திருந்தால் நாம் இதை வாசித்து விட்டு பிறங்காலால் உதைத்து தள்ளிவிட்டு சிவனே என்று சென்றிருப்போம்.
ஆனால் நாம் தொடர்ச்சியாக வாசித்துவரும் ‘லும்பினி இணையத்தில்’ வந்ததால் தான் இதை நாம் எழுத நேரிட்டது. காரணம் லும்பினியில் எழுதிவரும் பல எழுத்தாளர்கள் மிகப்பெரிய சிந்தனையாளர்கள், இலக்கிய வாதிகள்,பேராசிரியர்கள், தலித் சிந்தனையாளர்கள். இவர்கள்   புலிகளின் அதிகார மோகத்தையும், அதற்கான அவர்களது பாசிச அணுகுமுறைகளையும் நன்கு அறிந்து கொண்டவர்கள். எனவே இவர்களிடமே சில நியாயத்தை நாம் கோரவேண்டியுள்ளது.

“மகிந்த ராஜபக்சவின் சர்வாதிகார அரசுக்கு ஏதிராக சிங்கள முற்போக்குச் சக்திகளிடையே பலமான ஓர் எதிர்ப்பியக்கம் தோன்ற வாய்ப்புள்ளதா?” என புலியின் நிரந்தர ஆதரவாளரான தீபச்செல்வனிடம் கேட்கவேண்டியதின் தார்மீகம் தான் என்ன?

புலிசெய்த சர்வாதிகாரம் என்பது ‘பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்’ என்ற காரணத்திலா முதலாளித்துவ சர்வாதிகாரம் குறித்து தீபச்செல்வனிடம் வினா தொடுக்கப்பட்டது?

1983 இல் தான் பிறந்ததால அதற்கு முன்பு நடந்ததெல்லாம் தனக்குத் தெரியாது, அதை நான் அறியவில்லை நான் குழந்தை, நான் சிறுவன்.  நான் ஆறுவயதில் இருந்தே புலிப் புராணம் பாடுகின்றேன் என ஒப்புதல் வாக்குமூலம் அழித்த ஒருவரிடம் 19ஆம் நூற்றாண்டில் தோன்றிய மார்க்சியம் குறித்தும், மேலும் உலகமயமாதல் குறித்தும் கேட்கப்படும் கேள்விக்கான நியாயம் தான் என்ன?
தீண்டாமை குறித்தெல்லாம் இவரிடம் எந்த நியாயம் எதிர்பார்க்கப்பட்டது?
“சாதிய ஒடுக்குமுறை மீறலை பேசும் இலக்கியங்கள் இன்று காலத்திற்கு ஏற்ப ஈழத்தில் எழவில்லை” என்று கூறும் தீபச்செல்வனுக்கு தெணியான் எனும் தலித் எழுத்தாளர் இருப்பது தெரியவில்லை. புலிகளின் அடக்குமுறைக் காலத்திலும் சாதிய ஒடுக்கு முறை குறித்த இலக்கிய படைப்புகளை எழுதி வந்தவரல்லவா தெணியான் அவர்கள்?
வடபகுதியில் எழுந்த சாதி எழுச்சிபோராட்டங்களான தேனீர்கடை பிரவேசம், கோவில் நுழைவுப்போராட்டம் போன்ற சமூக அதிர்வுகள் தீபச்செல்வனின் புத்திக்குள் நுழைந்திருக்குமா?

“யாழ்ப்பாணம் புலிகளது ஆட்சியின் கீழ் இருக்கவில்லை என்பதனால் சாதிய ஒடுக்குமுறை இருக்கலாம்”.  “…..வன்னியில் தீண்டாமை முற்றாக ஒழிந்திருந்ததைப் பார்த்திருக்கின்றேன்”.என்று கூறும் தீபச்செல்வனிடம், அட நாசமாப்போவானே உன்ர வாய்  அழுகிப்போகும்.என்று சோபாவால் கூறமுடியாதிருந்ததன் காரணம் என்ன. முள்ளி வாய்க்கால் சம்பவத்திற்கு பிற்பாடு வன்னியில் கிளம்பிய சாதிய அதிர்வுகளை  சோபா தொட்டுக்காட்டியிருக்கலாமே?
வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து அகதி முகாம்களில் இருந்தபோது சாதியம் சடைத்துக் கிளம்பியதை அங்கு சென்று வந்தவர்கள் நேரில் பார்த்து அறிந்ததாக வெளிவந்த செய்திகள் சோபாவுக்குக்கூடத் தெரியாது போனதா?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இன்று தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் என்று கூறுகிறார் தீபச்செல்வன் அவர்கள். அண்மையில் வவுனியாவில் “வெளிய போங்கடா சக்கிலிய நாய்களே” என சாதிவெறியில் குலைத்தவர் தீபச்செல்வன் நம்புகின்ற தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஓர் அங்கத்தவர்.

நாம் அனைத்தும் அறிவோம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யார்…திபச்செல்வன்கள் யார்…இவர்களின் கருத்துக்களும், சிந்தனைகளும் யாருக்குரியது என அனைத்தும் நாம் அறிவோம்.
தீபச்செல்வனோடு உரையாடியவர் மிகப்பெரிய எழுத்தாளர். முற்போக்கு, மாற்றுச் சிந்தனை, மார்க்சியம், ரொட்ஸ்கியம், ஜனநாயகம், தலித்தியம், புலிகளின் அராஜகம், மனித உரிமை போன்ற பல தளங்களில் பயிற்சிபெற்று (!!!) அவை குறித்தெல்லாம் ‘அக்கறையுடன்’  பேசியும் , எழுதியும் வருபவர்.
எமக்கு தீபச்செல்வனிடம் கேட்கப்பட்ட கேள்விகள் யாவும் எதிரும்-முரணுமாக நகர்வதான ஒரு ‘தோற்ற மயக்கமாகவே’ இருக்கின்றது. காண்பதிலிருந்து நாம் காணததைக் காணுகின்றோம். இருந்தபோதும் தீபச்செல்வனிடம் தொடுக்கப்பட்ட கேள்விகள் யாவும் வெறும் சம்பிரதாய பூர்வமானதென்றோ, அல்லது இது வெறும் அயோக்கியத்தனமான நாடகம் என்றோ நாம் தீர்ப்புச் சொல்லிவிட முடியாதுள்ளது.

ஏனெனில் இது ‘லும்பினி இணையத்தளத்தில்’ வந்த சம்பவம். நாம் கண்டபடி எதையும் பேசிவிடமுடியாது. அதில் எழுதி வருபவர்கள் மிகப் பெரிய சிந்தனையாளர்கள் எனவே தான் நாம் அவர்களிடம் (லும்பினியில் கட்டுரைகள் எழுதுபவர்களிடம்) நியாயம் கேட்கின்றோம். லும்பினியில் வரும் ஆக்கங்களை தொடர்ச்சியாக வாசிப்பவர்கள் எனும் குறைந்த பட்ச உரிமையுடன்தான் இந்த நியாயத்தைக் கேட்கின்றோம். எமக்கு நீங்கள் பல்வேறு எடுகோள்கள் காட்டி ,பல்வேறு சித்தாந்தங்களை முன்வைத்து  நியாயங்கூற முயற்சிக்க வேண்டாம். ஏனெனில் எமக்கு அவை புரியாமலும் போகலாம். நறுக்கென்று இரண்டு வார்த்தையில் விளக்கம் அளித்தாலே போதுமானது.

கேள்வி, 1) தீபச்செல்வனுடன் உரையாடியதன் மூலமாக கண்டிறிந்த உண்மைகளை பேசியிருக்கவேண்டாமா? புலிகள் விதைத்த பாசிசம் வேரோடு அழிக்கப்படவில்லை என்பதை அம்பலப்படுத்தியிருக்க வேண்டாமா?

கேள்வி,2) தீபச்செல்வன் முற்போக்கு இலக்கிய வட்டத்திற்கும், மாற்றுச்சிந்தனை கொண்டவர்களுக்கும், ஜனநாயகம் மனித உரிமை குறித்தெல்லாம் அக்கறைகொண்டவர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட வேண்டிய ஒரு ‘இலக்கியப் பொக்கிசமா’?

ஆம்..இல்லை, என நறுக்கென்று இரண்டுவார்த்தை போதும்.
நன்றி.

         “இலங்கையில் தோன்றிய சாதியமும் அதன் பின்னணியம்”

-அசுரா-



எம்மத்தியில் நிலவும் சாதியம் பற்றிய கருத்தியலானது பல்வேறுவகையான புரிதலுக்குட்பட்ட நிலையில் இயங்கி வருகின்றது. அந்தவகையில் எம்மத்தியில் சாதியம் குறித்து மூன்றுவகையான சிந்தனைப்போக்கு நிலவுகின்றதை என்னால் காணக்கூடியதாக உள்ளது. மானுட தோற்ற வரலாற்று நிகழ்வின் ஓர் அம்சமாக சாதியத்தை பார்க்கின்ற ஓரு பார்வை. அதாவது மார்க்சியச் சிந்தனை வெளிச்சத்தின் ஊடாக எம்மத்தியில் நிலவும் சாதிய சிந்தனைப்போக்கை வரையறுப்பது ஓர்நிலை. அடுத்ததாக தமிழ்மொழி பேசும் எம்மத்தியல் நிலவும் சாதியம் போலவே எல்லா சமூகத்தவர்களிடமும் பிரிவினைகள் வேறுபாடுகள் இருக்கின்றன. சிங்கள மக்கள் மத்தியில் சாதியம் இருக்கின்றது. முஸ்லிம் மக்கள் மத்தியில் சாதியம் இருக்கிறது. அதுபோல் பல்வேறு நாடுகளில் வாழும் வெவ்வேறு இன மக்களிடமும் பிரிவினைகளும், வேறுபாடுகளும் இருக்கின்றது.  இவ்வாறான வேறுபாடுகள் காலப்போக்கில் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வருகின்றது. எனவே சாதியமும் எதிர்காலங்களில்  மறைந்து தொலைந்துவிடும் என்பதாக ஒரு சாரார். அடுத்ததாக எம்மத்தியில் நிலவும் சாதியமானது உலகத்தில் வாழும் அனைத்து இன மக்களிடமும் காணப்படும் பிரிவினை வேறுபாடுகளை விட மிகக் கொடூரமான மானிட விரோதப்போக்கை கடைப்பிடிக்கும் ஒரு சிந்தனை முறையாக இச் சாதியக் கருத்தியலை இனம் காண்பது.இதற்கு ஆதாரமாக உள்ள வடஇந்தியாவில் தோற்றம் பெற்ற இந்துத்துவ வர்ணாச்சிரம தர்மத்தை அடிப்படைக் கோட்பாடாக கொண்டு இயங்கி வரும் சமூக சிந்தனை மரபின் பின்னணியை கேள்விக்குள்ளாக்குவது.


இவ்வாறாக சாதியம் குறித்த மூன்றுவகை சிந்தனைகள் எம்மத்தியில் நிலவுகின்றது. இதில் குறிப்பாக மார்க்சிய சிந்தனை வெளிச்சத்தில் எமது மத்தியில் நிலவும் சாதியம் குறித்த பார்வையும், சாதியத்திற்கு எதிராக அவர்கள் மேற்கொண்ட பணிகளும் மிகக் காத்திரமானது.  இலங்கையில் நடைபெற்ற சாதிய எதிர்புப் போராட்ட வரலாறுகளில்அவற்றை நாம் காணலாம். இருந்தபோதிலும் வர்க்க விடுதலைபெறுவதன் ஊடாகவே நிரந்தரமான சாதிய ஒழிப்பு சாத்தியம் என நம்பிக்கை கொண்டுள்ளர்கள். இடதுசாரி சிந்தனை கொண்ட இவர்கள் வர்ணாச்சிரம கோட்பாடானது எவ்வாறு சாதியத்தை தக்கவைத்துப் பேணிவருகின்றது எனும் உண்மையைக் கண்டு கொண்டவர்களாகவும் அதற்கெதிராக குரல்கொடுப்பவர்களாகவும் இருந்து வருகின்றார்கள். ஆனபோதிலும் நிரந்தரமான சாதிய ஒழிப்பிற்கு வர்க்கமற்ற சமூகத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்து சாதிய சமூகம் குறித்து அம்பேத்கர் அவர்கள் பேசும்போது. இந்தியாவில் ஐந்துவகையான பிரிவினர்கள் குறித்து அவர் பேசுகின்றார்.  முதலாவதாக வைதீக இந்துக்கள் எனப்படுவோர்; அவர்கள்  இந்துக் கலாச்சாரத்தில் எந்த மாற்றம் நிகழ்வதையும் அனுமதிக்க விரும்பாதவர்கள். ஏதும் மாற்றம் நிகழ்வதை வைதீக இந்துக்கள் காண்பார்களேயாயின் அதற்கெதிராக கிளர்ந்தெழுந்துவிடுவார்கள். இரண்டாவதாக ஆரிய சமாயவாதிகள் இவர்கள் வைதீக இந்துக்களுக்கு எதிரானவர்கள். வேதகாலத்தை விரும்பிப் பேணுபவர்கள். இந்துக் கலாச்சாரத்தை மீண்டும் வேதகாலத்தை நோக்கி நகர்த்துவதே இவர்களது நோக்கமாக உள்ளது.

மூன்றவதாக இருப்பவர்கள்   இந்துக்கலாச்சார முறைகளின் குறைகளைப் பேசுபவர் களாக  இருந்தபோதிலும் அதற்கெதிரான செயல்பாடுகள் அவசியமற்றவை என்கிறார்கள். இந்துக்கலாச்சாரமானது எவ்வாறு வளர்ந்து வருகின்றதோ அவ்வாறே அழிந்து கொண்டும் இருக்கின்றது எனவே நாம் அதற்கெதிராக எதுவும் செய்யத்தேவையில்லை என்கின்றார்கள். நான்கவதாக உள்ளவர்கள் அரசியல் சுதந்திரம் குறித்து வலியுறுத்தி வரும் அரசியல் வாதிகள். இவர்கள் கலாச்சாரப் பண்பாட்டுத்தளங்களில் மாற்றம் ஏற்படுவது குறித்து அக்கறைகொள்ளாதவர்கள். அனைத்து சமூக மேம்பாட்டிற்கும்  அரசியல் சுதந்திரமே  சர்வயோக நிவாரணி என்பார்கள்.

ஐந்தாவதாக உள்ளவர்கள் அரசியல் சுதந்திரத்திற்கான முன்னுருமையைக் காட்டிலும் சமூக பண்பாட்டுக் காலாச்சார மாற்றங்களுக்குப் பிரதான முன்னுரிமை கொடுத்து இயங்கி வரும் பகுத்தறிவு வாதிகள்.
அம்பேத்கரின் இப்பார்வையை ஏன் இங்கு நான் குறிப்பிடுகின்றேன் எனில்  எம்மத்தியிலுள்ள சமூகவியலாளர்களையும், இந்தியாவிலுள்ள சமூகவியலாளர்களையும் பிரித்தறியும் நோக்கத்திற்காகவே. எம்மத்தியில் சமூகவியல் பேராசிரியர்கள் எனப் பலர் இருந்தும் சாதியம் பற்றிய அறிதலில் காத்திரமான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்தியாவில் அம்பேத்கர், பெரியார், பிரேம்நாத் பஸாத்,ராகுல் சாங்கிருத்தியாயன், கோசாம்பி, போன்ற பலர் இந்துத்துவ சாதிய அமைப்பு முறையின் கருத்தியல் குறித்து காத்திரமான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். எம்மத்தியில் அவ்வாறு நிகழவில்லை. இந்து சமூகக் கலாச்சாரம் குறித்து மேற்குறிப்பிட்ட அம்பேத்கரின் ஐந்து வகைப்பட்ட பிரிவினர்களை ஒத்த வகையினரை எம்மத்தியில் இனம் கண்டு கொள்ள முடியுமாயின்.  ஒரே ஒரு வகையினரைத்தான் நாம் இனம் கண்டு கொள்ள முடியும். வைதீக இந்துக்கள் எனப்படுவோரையோ, ஆரிய சமாஜவாதிகளையோ எம்மத்தியில் தேடமுடியாதென்பது உணமையே. இந்தியாபோன்று பார்ப்பனிய ஆழுமை என்பது இலங்கையில் இல்லை. எனவே வைதீகச் சிந்தனை மரபும், ஆரிய சமாஜவாதக் கோட்பாடுகளும் இலங்கையில் தோன்றவில்லை. இந்தியாபோன்ற மக்கள் தொகையினராகவும், பல்வேறு மொழி பேசும் மக்கள் பிரிவினரைக்கொண்ட சமூகமாகவும் இலங்கையில்லை என்பதையும் நாம் அறிவோம். எனவே அம்பேத்கர் அவர்கள் வகைப்படுத்திய சமூகப் பிரிவினர்கள் அனைவரையும்  எம்மத்தியில் தேட முடியாது. ஒரே ஒரு வகையினரைத்தவிர. சமூக வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் அரசியல் சுதந்திரமே அவசியமானது எனக் கருதுபவர்கள்தான் எம்மத்தியில் உள்ளவர்கள். எமது சமூகம் குறித்தும், சாதியம் குறித்தும் ஆய்வு செய்த பல்வேறு தரப்பினரும் இறுதியில் தீர்வாக முன்வைப்பது அரசியல் சுதந்திரத்தையே. அரசியலைப் பேசிப் பேசி அரசை  உதிர்த்தி வர்க்கம் அற்ற சமூகமாக  மாற்றுவது. இதுவே எமது சாதிய சமூகம் குறித்த அவர்களது தீர்வாகவும் உள்ளது.


அண்மையில் இலங்கையில் நிலவும் சாதியம் குறித்த ஆய்வுத் தொகுப்பொன்று நூலாக வெளிவந்திருக்கிறது. ‘சாதியின்மையா சாதிமறைப்பா’ என்பது அந்நூலின் தலைப்பாக உள்ளது. எனது தேடலுக்குட்பட்ட வகையில் இலங்கையில் நிலவும் சாதியம் குறித்த ஆய்வுகளில் இந்த ‘சாதியின்மையா சாதிமறைப்பா’ எனும் நூலானது முக்கியத்துவம் கொண்டது என்றே கருதுகின்றேன். நான் இங்கு இந்த நூல் பற்றிய ஒரு முழுமையான விமர்சனத்தை முன்வைக்க முனையவில்லை. இந்நூலானது சிங்கள மக்கள் மத்தியில் நிலவும் சாதியம் பற்றிய எனது தேடலுக்கு மிகப் பயனுள்ள ஒன்றாக அமைந்துள்ளது. சிங்கள சமூகத்தினரிடம் சாதியம் இன்றுவரை நீடித்து நிலைகொண்டு வருவதற்கான அடிப்படைக் காரணம் என்ன என்பதை நான் உங்கள் முன் உரையாற்றுவதற்காக இந்நூலிலுள்ள சில அம்சங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் எனக் கருதுகின்றேன்.

இந்த நூலிலுள்ள அம்சங்கள் குறித்துப் பேசுவதற்கு முன்பாக இந்நூல் வெளிவருவதற்கான பின்னணி என்ன என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இந்நூல் வெளிவருவதற்கான அனைத்துத் தேவைகளையும் (பொருளாதாரம் உட்பட) ஆலோசனைகளையும் வழங்கியது வெளிநாடுகிளிலுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள். INTERNATIONAL DALIT SOLIDARITY NETWORK (COPENHAGEN), INDIAN INSTITUTE OF DALIT STUDIES (NEWDELHI) எனும் நிறுவனங்களே அவைகள். இந்த நூலுக்கான அணிந்துரையில்  இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ‘’இவ்வெளியீடு தென்னாசியாவில் சாதியடிப்படையிலான பாகுபாடுபற்றி மேற்கொள்ளப்பட்ட ஒரு பிரதேச ஆய்வத்திட்டத்தின் ஒரு பகுதி விளைபயனாகும். முதற்தடவையாக பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான், மற்றும் இலங்கை ஆகிய தென்னாசிய நாடுகளிலிருந்து ஆய்வாளர்கள் ஒன்றிணைந்து சாதியடிப்படையிலான பாகுபாடு பற்றி விளக்கமானதொரு பார்வையுடன் இப்பணியினை மேற்கொண்டுள்ளனர். இவ்வொப்பீட்டாய்வு தென்னாசியாவிலுள்ள சாதியடிப்படையிலான  பாகுபாடுபற்றிக் கட்டமைப்புரீதியிலான அடிப்படைகளை அடையாளம் காண உதவியதோடு இந்து, இஸ்லாம், பௌத்தம் மற்றும் ஏனைய சமயங்களினால் செல்வாக்குக் குட்பட்டுள்ள வேறுபட்ட சமூகச் சூழல்களில் காணப்படும் முக்கிய வேறுபாடுகளை அடையாளப்படுத்துவதற்கும் துணைபுரிந்துள்ளது. இக்கற்கையின் தொகுதிகள் மனித உரிமைகளுக்காக அர்ப்பணிக்கும் மனித மற்றும் பண்புநயமுடையதொரு ஜனநாயகப் பிராந்தியமாக தெற்காசியாவை உருவாக்குவதற்கு மேற்கொள்ளப்படும் அரச கொள்கை, அரசியல் செயற்பாட்டுமுறை மற்றும் உள்ளுர்ச் சமூகங்களின் தலையீடுகள் போன்றவற்றுக்குப் புதியதொரு திறவுகோலை ஏற்படுத்திக் கொடுக்கும் என நாம் நம்புகின்றோம்

இக்குறிப்பிட்ட வெளியீட்டில், இலங்கையின் ஆய்வாளர்கள்குழு ஒன்று சிங்கள, இலங்கைத் தமிழ், மற்றும் இந்தியத் தமிழரிடையே நிலவும் சதியடிப்படையிலான பாகுபாட்டு விவகாரம் பற்றி ஆய்ந்தறிவதில் தலைமைதாங்கியது. தலித் கற்கைகளுக்கான இந்திய நிறுவனத்தின் சார்பில் கலாநிதி சித்தறஞ்சன் சேனாபதி இப்பாரிய ஆய்வுச்செயன் முறைத்திட்டத்தின்  இணைப்பாளராகச் செயலாற்றினார். தலித் கற்கைகளுக்கான இந்திய நிறுவனத்தின் ஆலோசனைக்குழு ஒன்று பேராசிரியர் ஹனஷியம் ஷா, சுக்ஹாடேயோ தோறாற், மற்றும் திரு மாடின் மக்வன் ஆகியோருடன் இணைந்து இப்பாரிய திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட அனைத்து நான்கு நாடுகளிலும் இடம் பெற்ற ஆய்வுச் செயல்முறையினை ஒழுங்குபடுத்தியது, வழிநடத்தியது. இத்திட்டத்திற்கு பொருளாதார உதவி வழங்கிய  டென்மார்க் அரசு மற்றும் சர்வதேச தலித் கூட்டொருமைப்பாட்டு வலைப்பின்னல் ஆகியவற்றிற்கு எமது நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்….‘’ என தலித் கற்கைகளுக்கான இந்திய நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் சுரிண்டர் எஸ் ஜொட்கா என்பவர் முன்னோக்கு வழங்கியுள்ளார்.

ஆகவே இந்த ஆய்வு நூலை ஒழுங்குபடுத்தியதும், இதன் ஆய்வாளர்களை வழிநடத்தியதும் தாமே என்பதை அழுத்தமாக தெரிவித்திருக்கின்றார், டெல்லியிலுள்ள தலித் கற்கைகளுக்கான இந்திய நிறுவனத்தின்  இயக்குனர். இங்கே ஒன்றை நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டியுள்ளது.

முதலில் இந்த நூல் வெளிவரக்காரணமான அரசசார்பற்ற நிறுவனங்களின் நோக்கத்தை இனம் காட்டவேண்டியுள்ளது. தலித் கற்கைகளுக்கான இந்திய நிறுவனத்தின் இயக்குனர் குறிப்பிட்டுள்ளார். இந்நூலானது சாதிப் பாகுபாடுகளின் கட்டமைப்புகளை அடையாளம் காண உதவியதாகவும். மற்றும் இந்து, இஸ்லாம், பௌத்தம் மற்றும் ஏனைய சமயங்களினால் செல்வாக்கக்குட்பட்டுள்ள வேறுபட்ட சமூகச் சூழல்களில் காணப்படும் முக்கிய வேறுபாடுகளை அடையாளப்படுத்துவதற்கும் துணைபுரிந்துள்ளது  என்பதாக.

இந்த நூலை வாசித்தவர்கள் அறிந்துகொள்ளலாம் இதில் சாதிப்பாகுபாடுகளின் கட்டமைப்பின் தோற்றம் குறித்து எதுவும் பேசப்படவில்லை என்பதை. அவர்கள் இதை ஏன் வலியுறுத்தவேண்டியுள்ளது என்பதை நாம் சற்று ஆழமாகச் சிந்திக்கவேண்டும். ஏனெனில் சாதியத்தின் தோற்றுவாய் குறித்து ஆய்வுசெய்யும் வெளிநாட்டு அறிஞர்கள் கூட இனம்கண்டுகொண்ட விடயம் இந்துமதமே எம்மத்தியில் நிலவும் (தெற்காசிய நாடுகள் உட்பட) சாதியப்பிரிவினைக்குப் அடிப்படைக் காரணியாக விளங்குகிறது  என்பதை.

இது இந்தியாவிற்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்துவருகிறது. எனவேதான் இந்து மதத்தில் மட்டுமல்லாது இஸ்லாம், பௌத்தம் போன்ற மதங்களிலும் சாதியப் பிரிவினைகள் இருக்கின்றது என்பதை அவர்கள் நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள்.

ஆகவேதான் இந்த நூலில் சிங்கள மக்கள் மத்தியில் நிலவும் சாதியம் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. வெளிநாட்டு அறிஞர்களுக்கு சிங்கள மக்கள் மத்தியில் சாதியம் இருக்கிறதா என்பது தெரியாமல் இருக்கலாம், ஆனால் பௌத்த சிந்தனையில் சாதியம் இல்லை என்பது உலகத்திலுள்ள அனைவருக்கும் தெரிந்த விடயம்.

அதெப்படி சிங்களவர்களையும் நாம் பௌத்தர்கள் என்கின்றோமே அப்படி இருக்கும்போது சிங்களவர்களிடம் எப்படி சாதிப்பாகுபாடுகள் இருக்க முடியும்? சிங்களவர்களிடம் சாதியம் பேணப்படுகின்றது என்பதற்கான ஆதாரம் குறித்த தகவல்களை  இந்தநூலில் காணக்கூடியதாக உள்ளது. பௌத்த சிந்தனை சாதியத்திற்கு எதிரானது ஆனால் பௌத்த சிங்களவர்களிடம் சாதியம் எப்படி தோன்றியது, எவ்வாறு பேணப்படுகின்றது என்பதையும் நாம் ஆராயவேண்டியுள்ளது. முதலில்  சிங்களச் சமூகத்தினரிடம் நிலவும் சாதியம் பற்றி இந்த நூல் என்ன பேசுகிறதென்பதைப் பார்ப்போம்.

இந்த நூலில் கட்டுரைகள் எழுதியவர்கள் அனைவருமே பெரும்பாலும் சாதியம் குறித்து ஏற்கனவே எழுதப்பட்ட படைப்புகளை கற்று அறிந்து கொண்ட பல தகவல்களையே தமது ஆய்வுக்கு துணைசேர்த்துள்ளார்கள். இதன் தொகுப்பாசிரியர்களாக காலிங்கர் டியூட்டர் சில்வா, பரஞ்சோதி தங்கேஸ், பி.சிவப்பிரகாசம் ஆகியோர் இருந்துள்ளனர்.  சிங்களச் சமூகத்தில் நிலவும் சாதி முறைகளை இந்நூலில் எழுதுவதற்கு சிங்கள எழுத்தாளர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளிலிருந்து மேற்கோள் காட்டுகின்றனர். வடக்கில் நிலவும் சாதியம் பற்றிய இவர்களது ஆய்விற்கு தோழர்களான  செந்தில்வேல் ரவீந்திரன் எழுதிய நூலான ‘இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்’ இவர்களது தேடலுக்குள்ளாகியிருக்கின்றது. அத்துடன் இடம்பெயர்ந்து அகதிமுகாம்களில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் சாதிப்பாகுபாடுகளையும் அறிந்து எழுதியுள்ளார்கள். கிழக்கு மாகாணத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.

இவர்கள் இந்த நூலுக்கான ஆய்வுகளை மேற்கொண்ட காலமானது 2007 என அறியக்கூடியதாக உள்ளது. அக்காலகட்டத்தில் வட-கிழக்கில் யுத்தம் மிக மூர்க்கமாக நடைபெற்றுக்கொண்டிருந்ததால்  தம்மால் அங்கு முழுமையான சாதிப்பாகுபாட்டு முறைகளை தொகுக்க முடியாது போனது எனக் கூறுகின்றனர். இலங்கையிலுள்ள இந்திய  வம்சாவழி மக்களிடமுள்ள சாதிப்பாகுபாடுகளை ஓரளவு விரிவாக ஆய்வு செய்துள்ளனர் என்பதை அறிய முடிகின்றது. ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் நிலவும் சாதியம் பற்றிய தகவல்களே மிக ஆழமாகவும் அக்கறையுடனும் ஆய்வு செய்யப்பட்டுள்ளதை உணரக்கூடியதாக உள்ளது.

சிங்கள் சமூகத்திடம் 15 வகை சாதிப்பிரிவினைகள் இருக்கிறது. அதில் மிக உயர்ந்த சாதியினராக ‘றதல’ எனும் சாதி இருந்தது. இச்சாதியினரே அரச வம்சத்தினராக இருந்துவந்துள்ளனர். கண்டி இராச்சியத்தின்போது சிங்களச்சமூகத்தில் முன்னணியில் உள்ள அரச சமூகத்தவர்களாக இவர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர். இரண்டாவதாக ‘கொய்கம’ எனும் சாதிப்பிரிவினர் இவர்கள் சிங்களச் சமூகத்தில் 50 வீதமானவர்களாக இருந்து வருகின்றார்கள்

அரசனுக்கு சேவகம் செய்து வந்தவர்களாகவும் பிற்பாடு அதன் செல்வாக்கின் பயனாகவே விவசாய ஆதிக்கம் இவர்களிடமே இருந்துவந்துள்ளது. ‘கரவா’(கரையோரப் பகுதிமக்கள்) ‘பத்கம’ (கொய்கம சாதியினருக்க சேவகம் செய்பவர்கள்) ‘வகும்புற’(சக்கரைத்தொழில்) எனும் சாதிப்பிரிவினர் இடைப்பட்ட சமூக அந்தஸ்துடையவர்களாக இருக்கும் சாதியினராகும்.
சிங்களச் சமூகத்தின் விளிம்பு நிலைச்சமூகமாக இருப்பவர்கள் ‘கின்னற’ (காட்டிலுள்ள மூலப்பொருட்களை பயன்படுத்தி பாய்போன்ற கைப்பணிப் பொருட்களை செய்பவர்கள்) ‘கஹல’ (குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிப்பவர்கள்) ‘றொடி’ (துப்பரவுப்பணி புரிபவர்கள்.) மற்றும் ‘நவன்தன்ன’ (கொல்லர்) ‘கும்பல்’ (குயவர்) ‘படு’ (சலவைத்தொழில்) ‘துறாவ’ (சீவல்தொழில்) ‘சலாகம’ ( (கறுவாத்தொழில்) ‘பெறவா’ (மேளம் அடிப்பவர்கள்) இவ்வாறாக 15 வகை சாதியினர் இருந்து வருகின்றார்கள்.
மே 27 2007 இல் முதல் முதலாக இலங்கையில் சாதியடிப்படையிலான பாகுபாடு பற்றிய தேசிய ஆலோசனைப் பயிற்சிப் பட்டறை ஒன்றை பேராதனைப் பல்கலைக்ழகத்தில் நடத்தியள்ளனர். அதுவும் நான் முன்பு குறிப்பிட்ட  அரச சார்பற்ற நிறுவனங்களின் பின்புலத்தில்தான் நடைபெற்றும் இருக்கின்றது.

கண்டியிலுள்ள மகியாவை எனும் கிராமத்திலுள்ள மலையகத்தைச் சேர்ந்த அருந்ததியர் சமூகம் பற்றியும், மலையக சமூகத்தில் நிலவும் சாதியம் குறித்தும்  இந்த நூல் பேசுகின்றது.

சிங்களச் சமூகத்தில் நிலவும் சாதியம் குறித்து பேசுகின்றபோது வடக்கில் நிலவும் சாதியத்தின் தீண்டாமைக் கொடுமைகள் சிங்களச் சாதியத்தில் இல்லை என்பதாகக் கூறுகின்றார்கள். அதற்கு இவர்கள் கூறும் காரணம் இந்து மதத்தின் பாரம் பரியத்தில்  தீண்டாமை பேணப்பட்டு வந்ததால் அங்கு அவை நிலைத்து நிற்கின்றது. சிங்கள மக்கள் பௌத்த பண்பாட்டுக் கலாச்சாரத்துடன் இணைந்துள்ளதால் சிங்கள மக்கள் மத்தியில் நிலவும் சாதியத்தில்  தீண்டாமை  பேணப்படவில்லை என்பதாக. அத்தோடு பௌத்தப் பண்பாட்டுச் சடங்கு சம்பிரதாயங்களுடன் சாதியம் இணைக்கப்படாத காரணத்தால் சாதியம் குலைந்து போவதற்குரிய வாய்ப்புகள் உள்ளதாகவும் இந்நூல் பேசுகின்றது.

சிங்கள மக்கள் மத்தியில் நிலவிவரும் சாதியமானது உலக மானிட மாற்றத்துடன் தொடர்புள்ளதாக சில சிங்கள ஆய்வாளர்கள் தெரிவித்த கருத்துக்களையும் பதிவுசெய்துள்ளார்கள்.இருந்தபோதிலும் தேர்தல் காலங்களில் சாதியப்பாகுபாடுகளில் வாக்குச்சேகரிப்பு நிகழ்வதையும் பதிவு செய்துள்ளது இந்த நூல்.

வடக்கில் தீண்டாமைச் செயல்பாடுகளான சிரட்டையில் தேனீர் கொடுப்பது வீட்டுக்குள் குறைந்த சாதியினரை வரவேற்பது தவிர்க்கப்படுவது, கோவில் நுழைவு மறுப்பு போன்ற நடைமுறைகளும் இருந்துவருகின்றது. சமூக புறக்கணிப்பும் கௌரவமான தொழில் வாய்ப்பும் அற்ற காரணத்தாலேயே சாதியால் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச்சேர்ந்த பெண்கள் அரபு நாடுகளுக்கு வீட்டுவேலைப் பணிகளுக்குச் செல்வதாகவும் அதன் காரணமாக அவர்களது சமூக அந்தஸ்து மேலோங்கி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜே.வி.பி யின் தோற்றத்திற்கு ‘கறவா’ ‘வகும்புற’ ‘பத்கம’ போன்ற சாதிப் பிரிவினரே பிரதான பங்களிப்பாளர்களாக இருந்துள்ளனர்.
இந்தநூலின் 7ஆம் அத்தியாயமானது முடிவுரையும் சிபாரிசுகளும் எனும் தலைப்பில் அமைந்திருக்கின்றது.  இதில் பதிப்பாசிரியர்களில் ஒருவரான காலிங்க டியூட்டர் சில்வா அவர்கள் பல ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைத்துள்ளார்

இலங்கைச் சமூகத்திலுள்ள சமூக நீதி, சமூகப்பாகுபாடு அல்லது சமூக நகர்வுகளைப் புரிந்துகொள்வதில் சாதியமானது  முக்கியத்துவமற்றதாகவும் சாதி என்ற விடயத்தைக் காட்டிலும் சமூக வர்க்கம், இனத்துவம் என்பவற்றின் அடிப்படையிலேயே சமூக வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளப்படவேண்டும் என்ற அபிப்பிராயங்கள் கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டது.  அவ் அபிப்பிராயத்திற்கு மாறாக ‘’சாதிரீதியாக ஒடுக்கப்படும் மக்களை சமூக வர்க்கம் என்ற அடிப்படையில் மட்டும் வைத்து விளங்கிக்கொள்ள முடியாது. இந்தியாவிலுள்ளது போல் தீண்டாமைக் கொடுமைகள் சமகலா இலங்கையில் இல்லாது போனாலும் சாதியடிப்படையிலான பாகுபாடுகள் இலங்கையில் இல்லை என கருதமுடியாது.‘’ என காலிங்க டியூட்டர் சில்வா அவர்கள் தனது  கருத்தை வலியுறுத்துவதையும் காணமுடிகின்றது.

இலங்கையில் தலித்தியம் எனும் கருத்தியல் பிரயோகிக்க முடியாத சூழலையும் இந்நூல் விரிவாக ஆராய்ந்துள்ளது. இந்தியாவில் தலித்தியம் எனும் பெயரில் ஒடுக்கப்பட்டவர்கள் தம்மை இணைத்துக் கொள்வதற்கான சூழலிற்கு இட ஒதுக்கீட்டுக்கொள்கை மிக முக்கிய காரணமாகும். அந்தவகை இட ஒதுக்கீட்டுச் சட்டங்கள் இலங்கையில் இல்லாததால் தமது சாதியை இனம் காட்டிக்கொள்ள விரும்பாத நிலமையே இலங்கையில் உள்ளது. இருந்தபோதிலும் உணர்பு பூர்வமான சாதியப் பாகுபாடுகள் இருக்கவே செய்கின்றது. இலங்கைச் சமுதாயமானது சாதி அந்தஸ்து தொடர்பான உணர்வு நிலையை தொடர்ந்து உயர்வாகவே கருதிவருகின்றது.

தேசிய விடுதலைப் போராட்டத்தின் முயற்சிக்கு  தடையாக இருக்கும் என்பதாலேயே புலிகள் சாதிப்பாகுபாட்டிற்கு எதிரான தண்டனைகளை வழங்கி வந்துள்ளனர். சாதியப்பிரச்சனை குறித்துப் பேசுவதை தமிழ்தேசியவாதிகளும் விரும்பவில்லை. அது தமது தேசியப்போராட்த்திற்கு மிகப் பலவீனமானதாகவும் கருதினார்கள். என காலிங்க டியூட்டர் சில்வா அவர்கள் கருத்துத் தெரிவிக்கின்றார்.

இறுதியாக சிங்கள சமூகத்தில் நிலவும் சாதிபற்றி காலிங்க டியூட்டர் சில்வா அவர்கள் குறிப்பிடும்பொழுது. சிங்கள சாதியமைப்பானது. இந்துச் சாதியமைப்பைப்போல் மதச்சார்புடையதல்ல. சிங்களச் சாதியமைப்பில் உயர் சாதியனராயிருக்கும்  ‘றதல’ எனும் சாதிப் பிரிவினர் இந்துச் சாதி அமைப்பிலுள்ள பிராமணர்போல் எவ்வித குருக்கள் அந்தஸ்தினையும் கொண்டிருக்கவில்லை. அதேபோல் மிகவும் பின் தங்கிய சாதியினர்களான ‘றொடி’ சாதியினரும்  இந்துச்சாதி அமைப்பு முறையில் தீண்டப்படாதவர்களாக கணிக்கப்படுவதில்லை. அவர்கள் பிச்சை எடுத்து வாழ்வதால் அவர்கள் சமூக ரீதியாக தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்படுகின்றார்கள்.

அச்சமூகமானது சிங்கள மக்கள் தொகையில் 1வீதமானவர்களே என்பதையும் நாம் அறியக்கூடியதாக இருக்கின்றது.‘றொடி சமூகத்தினர் பிச்சை எடுத்து வாழ்வது குறித்து புராதனக் கதையொன்றும் சிங்களச் சமூகத்தின் மத்தியில் நிலவுகின்றது.

இருந்தாலும் பேராசிரியர் திரு காலிங்க டியூட்டர் சில்வாவின் கருத்து வலுவற்றதாகவே நான் கருதுகின்றேன். சிங்கள மக்களிடம் தோன்றிய சாதியமைப்பு பற்றிய அடிப்படை அம்சமானது   நியாயமான முறையில் பகுத்தாய்வு செய்யப்படவில்லை என்பதாகவே நான் கருதுகின்றேன்.

பலவிடயங்களில் காலிங்க டியூட்டர் சில்வா அவர்கள் நியாயமான கருத்துக்களைக் கூறிவந்திருக்கின்றார். அவர் சிங்கள மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கும் சாதியத்தின் அடிப்படைத் தோற்றம் குறித்த புரிதல் அற்றவராக இருக்கமுடியாது.  இவர் ஒருவகையில் தமிழ்த் தேசியத்தை கேள்விக்குட்படுத்துவதாகத் தோன்றினாலும். இந்துத்துவ தேசியத்தை மறைமுகமாக ஆதரிப்பதற்கு பயன்படுத்தப்ட்டுள்ளார் என ஊகிக்க முடிகின்றது..

இந்த ஆய்வினை மேற்கொள்ள பின்பலமாக விளங்கிய அரசசார்பற்ற நிறுவனங்களின் திருத்தங்களின் பிற்பாடே இந்த நூல் வெளிவந்திருக்கவேண்டும். இந்த நூலுக்கான பொருளாதார உதவிகள் வழங்கியதை நேரடியாகவே அவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் ஒழுங்கு செய்த கருத்தரங்குகளுக்கும் இந்நூலுக்காக கட்டுரைகள் எழுதியவர்களுக்கெல்லாம் ஊக்கத்தொகைகளும் வழங்கியிருப்பார்கள். (அரசசார்பற்ற நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் மாநாடுகளுக்கு சமூகமளிப்பவர்களுக்கான பிரயாணச் செலவுகள் உட்பட பல வசதி வாய்ப்புகள் வழங்கப்படுவதை நாம் அறிவோம்)

இறுதியாக தலித் கற்கைகளுக்கான இந்திய நிறவனத்தின் விருப்பத்திற்கு ஏற்றவாறே திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கும் என நம்பலாம்.  இந்து மதத்தின் விளைபொருளே சாதியம் எனும் கருத்து நிலையையும் நிராகரிக்கவேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கின்றது. எனவேதான் பௌத்த, இஸ்லாம் மதங்களின் செல்வாக்குக்குட்பட்ட சமூகங்களிலும் சாதியம் நிலவுகின்றது எனும் கருத்தை தூண்டும் விதத்தில் தலித் கற்கைகளுக்கான இந்திய நிறுவனம் இந்நூலின் முன்னுரையில் பதிவும் செய்துள்ளது.

சிங்கள சமூகத்திலுள்ள உயிர் சாதியினரான ‘றதல’ எனும் சதியினர் இந்தியாவிலுள்ளது போல் பிராமண அந்தஸ்துள்ளவர்கள் அல்ல என இந்நூலின் தொகுப்பாசிரியர்களில் ஒருவரான பேராசிரியர் காலிங் டியூட்டர் சில்வா அவர்கள் வலியுறுத்துகின்றார். இதேபோன்று எம்மத்தியிலும் கருதப்படுகின்றது. அதாவது எம்மத்தியிலும் பிராமணர்கள் உயர்சாதியினராக இல்லை. வெள்ளாளர்களே எம்மத்தியில் உயர்சாதியினராக இருக்கின்றார்கள் ஆகவே இந்தியாவிலுள்ள சாதிய படிமுறைக்கும் எம்மத்தியில் நிலவும் சாதியத்திற்கும் பலவேறுபாடுகள் உள்ளது என்கின்றார்கள்.

அதுமட்டுமல்லாது  இலங்கையில் வாழும் பிராமணர்களை தலித்துக்களின் வகைக்குள் உட்படுத்தலாம் என்று கூறுபவர்களும் எம் மத்தியில் உள்ளனர்.
இலங்கையில் வாழும் பிராமணர்கள் பொருளாதார ரீதியாக கோயில் நிர்வாகிகள் போன்றோர்களின் பொருளாதாரத் தயவில் வாழுகின்றார்களே அல்லாது சமூகப்பண்பாட்டு சடங்குக் கலாச்சாரத்தில் இந்தியப் பிராமணர்களின் மன உணர்வு நிலையில் ஒருமைப்பாடுடையவர்களே ஆகும்.

தலித்துக்களின் பொருளாதாரத் தயவில் வாழும் வெள்ளாள உயர்சாதியினர் பலரை நாம் அறிவோம் அதற்காக வெள்ளாளரை விட தலித்துக்கள் சமூக அந்தஸ்தில் உயர்ந்து விட்டனர் என நாம் கருதிவிட முடியுமா என்ன? அனைத்துக்கும்மேலாக சமூகச் சடங்கு பண்பாட்டுத் தேவைகளுக்கு நாம் ஐயர்களைத்தானே மேலானவர்களாகக் கருதுகின்றோம் வெள்ளாளர் உட்பட.
எனவே ‘றதல’ எனும் சிங்கள உயர்சாதியினர் இந்தியப் பிராமணர்களின் அந்தஸ்திலுள்ளவர்கள் இல்லை எனும்  காரணத்தால் இந்திய சாதியத் தோற்றத்திற்கும் சிங்கள் சமூகத்தின் நிலவிய-நிலவி வரும் சாதியத்திற்கும் தொடர்பு இல்லை எனும் பேராசிரியர் காலிங்க டியூட்டர் சில்லா அவர்களின் நியாயத்தை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

சிங்களச் சமூகத்தில் சாதியம் இறுக்கமானதற்கு பிரதானமான காரணமாக விளங்கியது வட-தென் இந்தியப் பண்பாட்டுக் கலாச்சாரத் தொடர்புகளேயாகும். இவ்வாறான மரபு பல நூற்றாண்டுகாலமாக தொடந்து பேணப்பட்டும் வந்துள்ளது. சிங்களச் சமூகமானது இந்துத்துவ மரபுகளுடன் மோதிப் புரண்டெழுந்து தெளிந்த ஒரு சமூகமாக உள்ளது. இதற்கான ஆதாரங்களை எழுதப்பட்டுள்ள இலங்கை வரலாற்று இலக்கியங்களுடாக நாம் காணலாம்.

இருந்தாலும் எழுதப்பட்டுள்ள வரலாறுகளின் நம்பகத்தன்மை பற்றிய கேள்வியொன்றும் எழுவதற்கு வாய்ப்புண்டு. வரலாறு எழுதும் படைப்பாளியானவர் தனது விருப்பம், இலட்சியம், கோட்பாடுகள் காரணமாக தனது சொந்த அபிப்பிராயங்களை வரலாற்றில் புகுத்திவிடும் சந்தர்ப்பங்கள் உண்டு என்பதையும் நாம் உணரவேண்டும்.

இருந்தபோதிலும் மொழியியல் ஆய்வுகளும், அகழ்வாராய்ச்சிச் சாசனங்களுடாக பெறப்படும் ஆய்வுகளுமே எழுதப்பட்ட வரலாற்றின் நம்பகத்தன்மைக்கு  அதிகபட்ச ஆதராரமாக விளங்குகின்றது.
இலங்கை வரலாற்றை நாம் தெரிந்து கொள்வதற்கு சிங்கள இலக்கியங்கள் தாம் எமத்தியில் உள்ளது. இலங்கைவாழ் தமிழ்பேசும் சமூகத்தவர்கள் தரப்பில் இருந்து இலங்கை வரலாறு எழுதப்படவில்லை. (அவர்களால் எழுதப்பட்டது யாழ்ப்பாண வரலாறு மட்டுமே)

எழுதப்பட்ட இலங்கை வரலாறுகளை புதைபொருள் அகழ்வாராய்ச்சிச் சாசனங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்தவர்கள் மிகக் குறைவானவர்களே எம்மத்தியில் உள்ளனர். இருந்தபோதிலும் அண்மையில் (1999 இல்) வரலாற்றுத்துறைப் பேராசிரியரான எஸ். கிருஸ்ணராஜா அவர்கள் எழுதப்பட்டுள்ள இலங்கை வரலாற்றை ஆய்வு செய்துள்ளார்.  இவர் அகழ்வாய்வுகளிலும் ஈடுபாடடையவர். இவர் எழுதிய இலங்கை வரலாறானது அகழ்வராய்ச்சியினூடாகப் பெறப்பட்டுள்ள சாசனங்களுடன் ஒப்பிட்டுக் கணிக்கப்பட்ட ஆய்வாக உள்ளது.

இவர் எழுதிய இலங்கை வரலாற்று நூலானது ’சாதியன்மையா சாதிமறைப்பா’ எனும் நூலில் விபரிக்கப்பட்டுள்ள சிங்கள மக்கள் மத்தியில் நிலவும் சாதியத்தின் தோற்றம் குறித்த எனது தேடலுக்கு மிக உதவியாக இருந்துள்ளது.

ஆகவே இலங்கை வரலாறறுச் சம்பவங்களை இங்கு ஆதாரமாகக் கொண்டே சிங்கள சமூகத்தில் படிந்துள்ள சாதியத்தின் பின்னணியை நாம் தேடவேண்டியுள்ளது..


பாளி மொழியில் இலங்கை வரலாற்றை  எழுதிய இலக்கிய நூல்களாக தீபவம்ஸம், மகாவம்சம், சூளவம்சம் போன்ற நூல்களே பிரதான படைப்புகளாக உள்ளதை நாம் காணலாம். இதில் தீபவம்சம் மானது கி.பி. 4ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகவும், மகாவம்சமானது கி.பி 5ஆம்,6ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டதாகவும் அவைகளுக்குப் பிற்பாடே சூளவம்சம் எழுதப்பட்டதாகவும் நாம் அறியக்கூடியதாக உள்ளது. வட இந்தியாவிலிருந்து ஆரிய வம்சத்தைச்சேர்ந் விஜயன் என்பவன் தனது நண்பர்களுடன் இலங்கை வந்ததாகவும், ஆரிய வம்சத்தவனான விஜயன் இலங்கை வரும் காலத்தில் இலங்கையின் பழங்குடி மக்களான இயக்கர், நாகர் எனும் ‘பண்பாடுடைய’ மக்கள் இலங்கையில் வாழ்ந்து வந்ததையும் நாம் அறிகின்றோம். இயக்கர் குலப் பெண்ணான குவேனியை விஜயன் மணம் புரிந்து கொண்டதாகவும் மகாவம்சம் கூறுகின்றது.

மகிந்ததேரரால் பௌத்தம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாக இலங்கையில் இருந்த அரசுகளுக்கும் இந்திய அரசுகளுக்கும் பண்பாட்டுக் கலாச்சர ரீதியாக மிக நெருக்கமான உறவுகள் நிலவி வந்துள்ளது.

பௌத்தம் அறிமுகப்படுத்தப்பட்டதன் பிற்பாடும் அவ்வுறவுகளில் பாரிய வேறுபாடுகள் தோன்றவில்லை. தேவநம்பியதீசனுக்கு முந்திய அநுராதபுர ஆட்சியானது பந்துகாபய மன்னனின் அதிகாரத்தில் இருந்துவந்துள்ளது. பந்துகாபய மன்னன் காலத்தில் நகரத்திய, ஆஜீவக, பிராமண, சமண, நிக்கிரகம் போன்ற இந்து மதப்பிரிவினரின் செல்வாக்கு இலங்கையில் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தது.

இந்தியாவில் மௌரியப்பேரரசின் தோற்றமே பௌத்த சிந்தனை அங்கு மேலோங்கக் காரணமாக இருந்தது. அசோகர் காலத்தில் இந்தியாவில் பார்ப்பன மதம் அழிந்துபோகும் தறுவாயில் இருந்தது. அசோகச் சக்கரவர்த்தியின் மகனான மகிந்ததேரரின் தலைமையிலேயே பௌத்ததூதுக்குழு வொன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டது. அக்காலகட்டத்தில் இலங்கையை ஆண்டுவந்தவன் தேவநம்பியதீசனாகும். தேவநம்பியதீசன் காலத்திலேயே பௌத்தம் இலங்கையில் தோற்றம் பெற்றதையும் நாம் காணலாம்.

வடஇந்தியாவில் அசோகச்சக்கர வர்த்தியின் ஆட்சிக்குப் பின்னான குப்பதர் காலமே மீண்டும் பார்ப்பனிய அதிகாரம் மேலோங்கக் காரணமாகியது. இதனது தாக்கம் இலங்கையிலும் ஏற்பட்டது. துட்டகாமினியின் எதிராளியான எல்லாளன் எனும் அரசன் சோழவம்சத்ததைச் சேர்ந்தவர். 1017இல் இருந்து 1077 வரை இலங்கை முழுவதும் சோழப்பேரரசின் ஆதிக்கத்திலேயே இருந்து வந்ததையும் நாம் அறியக்கூடியதாக உள்ளது.

தென் இந்தியாவில்  சோழப்பேரரசின் காலத்தில்தான் வடஇந்தியப் பார்ப்பனிய ஆதிக்கம் அங்கு இறுக்கமாக வேர்கொள்ளத்தொடங்கியது. அக்காலங்களிலேயே நாயன்மார்களும், வைணவ ஆழ்வார்களும் பௌத்த சிந்தனைக்கும், சைனமத கோட்பாடுகளுக்கும் எதிராக செயல்பட்டார்கள். சைன மதத்தினரை கழுவில் ஏற்றும் சம்பவங்களும் சோழர் சாம்பிராட்சியத்திலேயே நிகழ்ந்தது. சைவம் இந்துமதத்தோடு கலந்துபோனதற்கும் சோழர் காலமே வழிவகுத்தது.

இவ்வாறான சோழப்பேரரிசின் ஆட்சியில் இலங்கை இருந்தபோது இலங்கையில் இந்துக் கோவில்களும் இந்துப் பார்ப்பனிய வர்ணாச்சிரமப் பாகுபாடும் இலங்கை வாழ் சமூகத்தில் பரவலாகவே பேணப்பட்டு வந்திருக்கும். சோழர்காலத்தில்தான் நிலங்கள் மானியங்களாக உயர்சாதியனருக்கு வழங்கப்பட்டும் வந்தது. அந்த உயர்சாதியினரே மணியகாரர்கள் என அழைக்கப்படுபவர்கள்.

பௌத்தம் இலங்கையில் தோன்றிய பிற்பாடும் சோழப்பேரரசு இலங்கையில் மேற்கொண்ட அரசியல் சமூகப்பண்பாட்டு அம்சங்களில் இந்துத்துவ சாதியப்பாகுபாடுகள் இலங்கை பூராகவும் வியாபித்து செழித்துச் சடைத்து நின்றது. தென்இந்தியா உட்பட தெற்காசிய பிரதேசங்களிலும்  சோழப்பேரரசின் ஆதிக்கமும், சமஸ்கிருத அறிமுகங்களும் நிகழ்ந்தது. சோழப்பேரரசின் ஒரு மாகாணமாகவே இலங்கை இருந்து வந்துள்ளதாகவும் வரலாறுகள் கூறுகின்றது.

ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுகால சோழராட்சியினால் இலங்கையின் சமய,பண்பாட்டுத்துறையில் குறிப்பிடத்தக்க மாற்றமும், செல்வாக்கும் ஏற்பட்டமையினை காணமுடிகிறது. இந்துசமயமானது பௌத்தமதப் பண்பாட்டினை அடிப்படையாகக் கொண்டிருந்த இலங்கைத்தீவில் வேர்விட்டு வளர்ச்சிபெற்றது. அரச மதமாக இந்துசமயம் அமைந்ததன் பின்னணியில் பிராமணீய செல்வாக்கு நிலைகள் பல துறைகளிலும் ஏற்பட்டமையைக் காணமுடிந்தது. அரண்மனை நடவடிக்கைகளிலும் கிரிகை முறைகளிலும் இந்துமதமும் பிராமணியமும் முதலிடம் பெற்றிருந்தன.  இலங்கையின் பௌத்த மத கட்டிட, சிற்ப ஓவியக்கலை மரபுகளில் இந்துமதமானது பெரும் செல்வாக்கினை ஏற்படுத்தியது.‘’ என்பதாக தனது ‘இலங்கை வரலாறு’ எனும் நூலில் எஸ் கிருஸ்ணராசா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பிற்பாடு சோழப்பேரரசை வெற்றிகொண்ட விஜயபாகு மன்னனின் காலத்தை நாம் பார்போமாயின் இந்துத்துவப் பண்பாட்டுத்தொடர்புகளின் நீட்சியை நாம் காணலாம். விஜயபாகு தனது சகோதரியான மித்தாவை பாண்டிய மன்னன் ஒருவனுக்கே திருமணம் செய்து வைத்துள்ளான் விஜயபாகு மன்னனும் கலிங்க இளவரசியான திருலோகசுந்தரியை திருமணம் செய்து கொண்டதாகவும் அறியக்கூடியதாக உள்ளது. இவ்வாறான இந்தியக் கலாச்சாரத் தொடர்புகளின் தொடர்ச்சியின் காரணமாக சாதியமும் சிங்கள சமூகத்தில் தொடர்ந்து வலுப்பெற்றதாக இருந்துவந்திருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்வதில் பெரும் சிரமம் இருக்கும் என்று கருதமுடியாது. விஜயபாகு மன்னனுக்குப் பிற்பாடான மன்னர்களாக ஜயபாகு, விக்கிரமபாகு, வீரபாகு போன்றவர்கள் இருந்துவந்த காலங்கள் கடந்த பிற்பாடும் கூட கஜபாகு எனும் மன்னின் ஆட்சிக்காலத்தில் வடஇந்தியத் தொடர்புகள் மேலும் வலுவாக உள்ளதை நாம் காணலாம்.

 இந்து மதத்தோடு தொடர்புடைய விருதுகளும் ஆட்சிமுறைகளும் பண்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட ஒரு காலப்பகுதியாக இக் கஜபாகு மன்னனின் ஆட்சிக்காலம் அமைந்தது என்றால் அது மிகையாகாது.‘’ என்பதாக எஸ்.கிருஸ்ணராசா அவர்கள் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கையில் தோன்றிய பௌத்தம் என்பது  இந்துத்துவப் பண்பாட்டு வேர்களிலிருந்து துளிர்த்ததே. இன்று கூட அதன் மரபுவழி தொடர்ச்சியாக சிங்கள மக்களின் பெயர்கள் அமைந்துள்ளதை  நாம் காணலாம். ‘மித்திர ஆரியசிங்க’ எனும் பெயர் எப்படி சிங்களவர்களின் பெயராக இன்றும் நிலைத்து நிற்கிறது? மித்ர,புத்ர, இந்ர, அநுர போன்ற பெயர்கள் இருக்குவேதத்தில் வரும் பெயர்கள் ஆகும். எனவேதான் நான் கூறுகின்றேன் சிங்கள மக்களில் சாதியம் தோன்றுவதற்கும் இந்துமத பண்பாடுகளே பிரதான காரணமாக இருந்துவந்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து அவர்கள் பேணிவரும் பண்பாடு காலாச்சாரங்கள் பௌத்தம் சார்ந்து நிலவுவதால் அங்கு சாதிரீயான பாகுபாடுகள் எதிர்காலங்களில் அற்றுப்போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இந்துத்துவ சாதியத்தின் தோற்றமும் அது எவ்வகையில் உலகிலுள்ள பல்வேறு பண்பாட்டு நடைமுறைகளுடன் வேறுபாடுடையது என்பதையும் நான்  மிகச் சுருக்கமாகவேனும்  கூறவேண்டியுள்ளது.

இலங்கை வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்கு எமக்குரிய சாதனமாக இருப்பது பாளிமொழியில் எழுதப்பட்ட இலக்கியங்களான ‘தீபவம்சம், ‘மகாவம்சம்’, ‘சூளவம்சம்’ போன்ற நூல்களாகும். அதேபோன்றுதான் இந்தியவரலாற்றையும் அதுனுடன் இணைந்த இந்துமத வரலாற்றையும் தெரிந்து கொள்வதற்கு சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட இலக்கியங்களையே நாம் துணையாகக் கொள்ளவேண்டியுள்ளது.

கடந்த மூவாயிரம் ஆண்டுகளுக்குமேலான இந்திய வரலாற்றை தெரிந்து கொள்வதற்கான சான்றாக எம்மிடம் இருப்பது வட இந்தியாவிலே இயற்றப்பட்ட வேதகால இலக்கியமாகும். அந்தவகையில் நாம் பார்ப்பனர்களுக்க நன்றி சொல்லியே ஆகவேண்டும்‘’ என்று பிரேம்நாத் பஸாத் கூறுகின்றார். (இந்தியவரலாற்றில் பகவத்கீதை)

இந்த வேதகால இலக்கியங்களான ‘இருக்கு’ ‘யசூர்’ ‘சாமம்’ ‘அதர்வம்’ போன்ற படைப்புகளுடாகவே இந்திய வரலாற்றையும் அதனது இந்துத்துவக் கலாசார பண்பாட்டு தொடர்புகளையும் நாம் அறியக்கூடியதாக இருக்கின்றது.
வட இந்தியாவிலே தோன்றிய பழைமைவாய்ந்த ஒரு நாகரீகமாக  சிந்துவெளிநாகரீகம் விளங்கியது. இந்நாகரீகத்தில் ’ஹரப்பா’ ‘மொகஞ்சதாரோ’ என இரண்டு பண்பாடுகள் பேணப்பட்டுவந்ததாகவும் கூறப்படுகின்றது. சிந்துவெளிநாகரீக மக்களால் பேசப்பட்ட மொழியானது இன்றுவரை புரிதலுக்குட்படாத வகையிலேயே இருந்து வருகின்றது. அம்மக்களால் பேசப்பட்ட மொழிகளைப் புரிந்து கொள்வதன் ஊடாகவே  அம்மக்களால் பேணப்பட்டுவந்த கலாசாரப் பண்பாடுகளை புரிந்து கொள்ளமுடியும். சிந்துவெளிநாகரீகம் மறைந்து 1500 ஆண்டுகளுக்குப் பிற்பாடே வெளிநாட்டவர்களின் வருகை இந்தியாவிற்குள் நடைபெற்றதாக அறியக்கூடியதாக உள்ளது.


அவ்வாறு இந்தியாவிற்குள் குடியேறியவர்களையே ஆரியர்கள் என்று கூறுகின்றனர். இந்தியாவிற்குள் ஆரியர்களின் படையெடுப்பு என்று கூறும் மேற்கு நாட்டு அறிஞரான மார்க்ஸ் முல்லரின் கூற்றை அம்பேத்கர் மறுக்கின்றார். தொடர்ச்சியான ஒரு குடியேற்றமாகவே அவை நிகழ்ந்ததற்கான ஆதாரங்களையும் அம்பேத்கர் முன்வைத்துள்ளார். ஆரியர்கள் எனப்படுபவர்கள் குறித்து பல்வேறு அபிப்பிராயங்கள் நிலவுகின்றது. இவ்வாறு குடியேறியவர்கள் கால்நடைகளின் உரிமையாளர்களாக இருந்துள்ளனர். இந்தியாவின் பூர்வகுடிகள் என்று சொல்லப்படுபவர்கள் விவசாய உற்பத்தியும் அதற்குரிய நிலங்களையும் சார்ந்து வாழ்ந்து வந்தவர்களாகவும் அறிய முடிகின்றது.

அதனூடாக குடியேறியவர்களுக்கும் பூர்வீக குடியினருக்கும் இடையிலேயான உற்பத்தி உடமை முறைகளில் முரண்பாடுகள் நிலவுகின்றது. அதன்பிரதிபலிப்பாக அவர்களுக்கிடையிலே  பகைமையும், யுத்தமும் தோன்றுகின்றது. இந்த நிகழவானது சர்வதேச மானிட வரலாற்று நிகழ்வுகளுடன் ஒத்ததாகவே அமைந்துள்ளது. குடியேறிய ஆரியர்கள் என்று சொல்லப்படுபவர்கள் அனைவரும் ஒரே இனக்குழுக்களாகவும் இருந்ததில்லை அவர்களுக்கிடையிலேயும் பல்வேறு பிரிவுகள் இருந்துள்ளது.

குடியேறிய ஆரியர்கள் நாடோடிகளாக அலைந்து திரிந்த பிற்பாடு அவர்கள் நிரந்தரமான இடங்களில் வசித்ததன் பிற்பாடே வாய்மொழி இலக்கியங்கள் தோன்றியுள்ளது.அதுவே வேத இலக்கியங்களான ‘இருக்கு’ ‘யசூர்’ ‘சாமம்’ ‘அதர்வம்’ என நான்கு வகை இலக்கியங்களாகும். இதில் அதர்வவேதம் என்பது தனித்துவமாக ஒரு தனி இனக்குழுவினரால் இயற்றப்பட்டு பின்பு நான்கும் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த வேதகால இலக்கியமானது ஒரு வரலாற்றைக் கூறும் நோக்கத்துடன் எழுதப்படவில்லை. தாம் வணங்கும் கடவுள்  அக்கடவுள்களுக்கான பூஜைகள், தமது எதிரி, பில்லி சூனியம், போன்ற விடயங்கள் பற்றியே கூறப்பட்டுள்ளன. அதர்வ வேதத்தை ஆய்வு செய்த ஜேர்மன் நாட்டு மொழியிலாளரான WINTERNITZ  என்பவர் இவ்வாறு கூறுகின்றார். ‘’அதர்வவேதத்திலுள்ள பெரும்பாலான மாய மந்திரப்பாடல்கள் யாவும் கற்பனையில் உதித்தவை. இதுபோன்ற மாய மந்திரச் சடங்குகள் உலகம் முழுவதும் உள்ளது. பல்வேறு நாட்டிலுள்ள பல்வேறு இன மக்களிடையே வழக்கத்தில் உள்ளதோடு அவை வியப்பூட்டும் விதத்தில் ஒரே மாதிரி நடைமுறைகளைக் கொண்டிருக்கின்றது. வடஇந்தியர்கள், செவ்இந்தியர்கள், ஆபிரிக்கர்கள், மங்கோலியர்கள், கிரேக்கர்கள், எகிப்தியர்கள், ஐரோப்பியர்கள் என அனைத்து நாட்டு மக்களும் பின்பற்றி வந்த நடைமுறைகளோடு ஒத்ததாகவே இருந்துவந்துள்ளது‘’.

காற்று, நீர், நெருப்பு போன்ற இயற்கை நிகழ்வுகளால் ஆதிகால மனிதன் அச்சுறுத்தப்பட்டான் அவைகளைக்கண்டு அஞ்சினான். அவற்றை வணங்குவதன் ஊடாகவே அதன் அழிவுகளிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளமுடியும் எனக்கருதினான். ஆகவேதான் அவைகளைக் கடவுள்களாக கருதி வழிபடத் தொடங்கினான். மனிதனின் இயற்கை வழிபாடுகளின் தோற்றத்தை நாம் இன்றைய காலகட்டத்தில் இருந்து, இன்றைய அறிவுப் பின்புலத்தில் நின்று சிந்திக்கும்போது அவை யாவும் முட்டாள்தனமாகவும் பிற்போக்கான செயல்பாடாகவும் நினைக்கத் தோன்றும். ஆனால் இதுவே மனிதனின் அறிவியல் செயல்பாட்டின் முதல் அம்சம் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இவ்வாறு உலகிலுள்ள அனைத்து மானிடப் பிரிவினர்களிடமும் மாற்றங்களானது ஒரே தன்மையுடையதாகவே இருந்துவந்துள்ளது. வட இந்தியாவிலும் இதுபோன்ற தன்மையையே நாம் காணக்கூடியதாக உள்ளது. இந்தக்காலகட்டத்திலும் சாதியம் அங்கு வேர்கொள்ளவில்லை.

இந்தியாவில் குடியேறிய ஆரியர் எனக்குறிப்பிடப்படும் மக்கள் குழுவினர் ஆரம்பத்தில் பல்வேறு இனக்குழுக்களாக இருந்து வந்துள்ளனர். அவர்களுக்குள்ளும் பல்வேறு முரண்பாடுகள் தோன்றியதையும் நாம் அறிக்கூடியதாக உள்ளது. இவ்வாறான இனக்குழுக்களுக்கிடையிலேயான மாற்றங்களும் சர்வதேச மாற்றங்களோடு ஒத்ததாகவே அமைந்துள்ளது. விலிமையான இனத்துடன் பிற இனக்குழுக்களைச் சார்ந்த சமூகங்கள் ஒன்றாய் கலந்துவிடும் போக்கும் நிகழ்ந்துள்ளது.
ஆரம்பத்தில் இயற்கையை வழிபட்ட மக்கள் பிற்பாடு இனக்குழுக்களின் தலைவர்களை வழிபடும் நிலைக்கு மாற்றம் பெறுகின்றனர். இவ்வாறு இருக்குவேத நாயகனாக இந்திரன் இருப்பதைக் காணலாம். இந்திரனையும், அக்கினியையுமே இருக்குவேத சமூகத்தினர் தமது  பிரதான கடவுள்களாக  வழிபட்டும் வந்துள்ளனர்.

இந்திரன் குறித்த ஒரு பாடல்
வகைமுறை தப்பிய வன்மப் பகைவனின்
படைத்திறன் கண்டு பணிந்ததுமில்லை.
ஓங்குயர் மலையும் வீழ்ந்திடும் இந்திரன் முன்னால்
ஆழ்நீர் நிலையிலும் அமுந்துண்டு வாழ்பவன்.
அக்கினி குறித்த பாடல்
எரிதழல் மூட்டி எருவிட்டு கொள்ளிவைத்து
விறகால் நெருப்பிட்டு விண்ணெல்லாம் புகைகூற
சருகாய்ச் சடலமும் வெந்துபொடி சாம்பலாக
நெருப்புக்கடவுளே நீறாக்கி விடுவாயோ.

ஆரம்பகால இருக்குவேதத்தை இயற்றியவர்களில்  பிரதான  ரிஷிகளாக உள்ளவர்கள் பரித்வாஜர், வசிட்டர், விசுவாமித்திரர் களாகும். இராமாயணத்தில் வரும் வஷிட்டருக்கும், விசுவாமித்திரருக்கும் இதில் எவ்வித தொடர்பும் இல்லை.

இவர்களது மன்னர்களாக திவோதாச என்பவனும், அவனுடைய மகனானன  சுதாச என்பவனும் இருந்துள்ளனர். வடஇந்திய மக்களின் பூர்வீக குடிகளை தஸ்யூக்கள் தாசர்கள் என்று இருக்குவேதம் கூறுகின்றது. இவர்களையே பின்பு அசுரர்களாக இந்துமதம் கற்பித்தது. இவர்கள்தான் திராவிடர்கள் என்று சிலர் கூறுவதை அம்பேத்கர் மறுக்கின்றார். தாசர்கள், தஸ்யூக்கள் எனப்படுவோர் மங்கோலிய இனத்தைச்சேர்ந்தவர்கள்.  சம்பரன் எனும் அசுரனை வெற்றிகொள்வதற்கு ஆரிய மன்னர்களான திவோதாசவும், சுதாசவும் நாற்பது ஆண்டுகள் தொடர்ச்சியாக கடும் போர்புரிந்துள்ளனர்.
இவ்வாறு போர்புரிவதும் கொல்லப்படுவதும் சத்ரியர்களாகவும் யுத்தத்திலும், உழைப்பிலும் எவ்விததொடர்புகள் அற்று வாழ்பவர்களாக புரோகிதர்களும் இருந்துவந்துள்ளனர். புரோகிதர்களின் கடமைகளாக சடங்குகள், யாகங்கள் கடவுளைவேண்டிப் பிராத்தனைகள் புரிவது என்பவையாகவே இருந்து வந்துள்ளது.


இதன்தொடர்ச்சியே சத்திரியர்களுக்கும் புரோகிதர்களுக்கும் முரண்பாடுகள் தோன்றக்காரணமாகியது. இக்காலகட்டத்தில் வடஇந்தியாவில் புரோகிதர்கள், சத்திரியர்கள்,வைசியர்கள், அடிமைகள் எனும் சமூகப்பிரிவுகளே இருந்துவந்துள்ளது. இவைகூட உலக மாற்றத்திற்கு ஏற்றவகையாகவே அமைந்து வந்துள்ளதை நாம் காணலாம். அப்போதும் சாதியம் தோன்றவில்லை.


தொடர்ச்சியான புரோகிதர்களுக்கும், சத்திரியர்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் உச்சநிலை அடையும்போதுதான் இன்று நிலவும் சாதியமுறையின் தோற்றம் ஆரம்பமாகியது.

வேதகாலம் உபநிடதகாலமாக மாற்றம் பெறுகின்றது. வேதகால இலக்கியங்களான இருக்கு, யசூர், சாமம்,அதர்வம் போன்ற இலக்கியங்களிலும் மாற்றங்கள் நிலவுகின்றது. பிராமணங்களை இயற்றத்தொடங்கினார்கள். பிராமணங்கள் என்பது யாகங்கள், வேள்விகள் புரிவதற்கான மந்திரங்களை உள்ளடக்கிய பார்ப்பன இலக்கியமாகும். இவர்களது வேள்வியில் பலியிடப்பட்டவன்தான் புருசசுக்தா எனும் ‘மீ’ (அதீதசக்திவாய்ந்த) மனிதன். இவன் நான்கு துண்டுகளாக வெட்டப்படுகின்றான். இச்சம்பவத்தினூடாகவே நான்கு வர்ணங்கள் தோற்றம் பெறுகின்றது. வேதகாலத்தில் இருந்துவந்த பிரதான கடவுளான இந்திரனுக்கு மாற்றாக பிரம்மா முழுமுதல் கடவுளாகின்றார். இவரே படைப்புக்கடவுளாகவும் மாறுகின்றார். இவரது முகத்திலிருந்து தோன்றியவர்களே பிராமணர்கள். இவரது தோள்களிலிருந்து தோன்றியவர்கள் சத்திரியர்கள், தொடையிலிருந்து தோன்றியவர்கள் வைசியர்கள், பாதத்திலிருந்து படைக்கப்பட்டவர்கள் சூத்திரர்கள் என்பதாக பிரம்மாவே  மனிதர்களைப் படைத்தார். இவ்வாறே  வர்ணாச்சிரமா கோட்பாடு தோற்றம்பெற்றது. கடவுள் மனிதர்களை தனது உடலின் வெவ்வேறு பாகங்கள் ஊடாக  மனிதர்களைப் படைத்ததோடு ஒவ்வொரு பிறப்பினருக்கும் உரிய கடமைகளையும் கடவுளே அருளியும் உள்ளார்.
வர்ணாச்சிரமக்கோட்பாட்டு விதிகளே பிராமணர்கள் மீதான சத்திரியர்களின் கோபத்தையும் தணித்தது. சத்திரியர்கள் ஒடுக்குவதற்கு வைசியர்களையும், பிராமணர்கள்,சத்திரியர்கள் வைசியர்கள் என அனைவரும் ஒடுக்குவதற்கு  சூத்திரர்களையும் எமது பரம்பொருள் படைத்தார். இவ்வாறான ஒடுக்குமுறை விதிகளே பிராமணர்கள் மீதான சத்திரியர்களின் கோபம் தணிக்கப்பட்டதற்கும் காரணமாகியது.

உலகில் பிரயோகிக்கப்படும்  கோட்பாடுகளானது எதிர்ப்புணர்வையும், ஒடுக்கப்படுவதற்கு எதிரான போராடும் உணர்வையும் ஏற்படுத்தும் தன்மைகளைக் கொண்டது. ஆனால் வர்ணாச்சிரமக் கோட்பாடு மட்டுமே எதிர்ப்புகளுக்கு அடங்கிப்போகும் உணர்வை ஏற்படுத்தும் சக்தியாக விளங்குகின்றது. அதுமட்டுமல்லாது சமூக மேன் நிலையாக்க உணர்வுக்கு ஏங்கும் தன்மையைக் கொண்டதாகவும்  இயங்கிவருகின்றது.

அனைத்துக்கும் மேலாக இந்த வர்ணாச்சிரமக் கோட்பாட்டு விதிகளானது   எம்மைப் படைத்த கடவுளால் தோற்றுவிக்கப்பட்ட ஒன்றாகும். கடவுளே எம்மை பல்வேறு சாதிப்பிரிவினை கொண்டவர்களாகவும் படைத்துள்ளார். எனவே எமது சாதிய அமைப்பு முறையானது தெய்வீக அம்சம் கொண்டது.
இதுவே உலகிலுள்ள வேறுபாடுகளிலிருந்து தனித்துவமான கோட்பாடாகவும், விதிமுறைகளாகவும் இருந்து வருகின்றது. எந்தவோரு செயலிலும் எந்தவோரு கோட்பாட்டிலும், எந்தவொரு மனிதர்களிலும் தெய்வீகத்தன்மை ஏற்றப்படுமாயின் அவைகள் எவ்வித மதிப்பீடுகளுக்கும், விமர்சனங்களுக்கும் உட்படுத்தும் தன்மையை இழந்துவிடுகின்றது. அவை புனிதமானதாக கட்டமைக்கப்பட்டுவிடுகின்றது.

உதாரணத்திற்கு இன்றைய சூழலைப்பாருங்கள் நடிகர் ரஜனிகாந் அவர்களை எவ்வித விமர்சனத்திற்கும் உட்படுத்திவிட முடியாது. அவர்மீது தெய்வீகத்தன்மை ஏற்றப்பட்டுவிட்டது. கற்பூரங்கொழுத்தி, பால்அபிஷேகம் செய்து, தேங்காய் உடைத்து வழிபடும் அளவிற்கு தெய்வீக அம்சம் கொண்டவராக ரஜனிகாந் வழிபடப்பட்டு வருகின்றார். நாம் தெய்வீகத்தன்மைகளை அனைத்து அம்சங்களிலும் ஏற்றிவிடுகின்றோம். நாம் கற்றுக்கொண்ட சித்தாந்தங்கள், கோட்பாடுகள் போன்றவற்றைக் கூட தெய்வீக அம்சத்திற்குள்ளாக்கி விடுகின்றோம். அவற்றை மீள் மதிப்பீடு செய்வதை எம்மால் அங்கீகரிக்க முடியாது போவதற்கு காரணமும் அதுவேயாகும்.

அதுமட்டுமா சூரியக் கடவுளென பிரபாகரன் இன்று தெய்விகத்தன்மைக் குள்ளாக்கப்பட்டு வருவதை நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம்.
இந்தியத் தலித் சமூகத்தை அவர்களது சமூக விடுதலைப் போராட்ட அம்சத்தை மழுங்கடித்ததில் பெரும் பங்கையாற்றியவராக நாம் காந்தியை இனம் காணக் கூடியதாக இருக்கின்றது. தீண்டாமைக் கருத்தியலுக் குள்ளாக்கப்பட்ட சமூகத்தை ஹரிஜனர்கள் என பெயர்சூட்டினார்   காந்தி அவர்கள். நீங்களெல்லாம் ஹரிஹரனின் புதல்வர்கள் உங்களது பிறப்பானது கருமவினைகளால் விளைந்தது. எனவே உங்களுக்குரிய கருமங்களை மட்டுமே நீங்கள் புரியவேண்டும். அவை  உங்களைப் படைத்த இறைவனால் தீர்மானிக்கப்பட்டது. என்றார் காந்தி அவர்கள்.

ஆயிரங்காலம் அடிமைவாழ்க்கை வாழ்ந்த எமக்கு ஹரிஜனர்  என பெயர் வைக்க நீ யாரடா நாயே.‘’ என இன்று காந்தியைப் பார்த்து கேட்கின்றார்கள் தலித்துக்கள்.

இதுதான் எம்மத்தியில் நிலவும் சாதியத்திற்கும் பிறசமூகத்திற்குள் நிலவும் வேறுபாடுகளுக்கும் உள்ள வித்தியாசமாகும். எமது மத்தியில் நிலவும் சாதியமானது எமது பிறப்போடும் தெய்வீக அம்சம் பொருந்தியதாகவும், புனிதமானதாகவும் பேணப்பட்டுவருகின்றது. அவை எமது இந்துத்துவப் பண்பாட்டுச்  சடங்கு சம்பிரதாயங்களுடன் தொடர்ச்சியாகவும் நிலைத்தும் வருகின்றது.எமது பிறப்பிலிருந்து இறப்பு வரை ஏன் இறப்பிற்குப் பிற்பாடுகூட எமது சாதியம் நிலைத்து நிற்கின்றது.
எனவேதான் இந்துத்துவ சாதிய அமைப்பு முறைகளை மிக நுணுக்கமாக ஆய்வு செய்த தந்தை பெரியார் சொன்னார்.
எமது மொழி சாதி காப்பாற்றும் மொழி
எமது பண்பாடு சாதி காப்பாற்றும் பண்பாடு
எமது மதம் சாதி காப்பாற்றும் மதம்
எமது கடவுள்கள் சாதி காப்பாற்றும் கடவுள்கள்.