-கற்சுறா-


பால்தாக்கரே வாழ்ந்த காலத்திலிருந்த அச்சத்தை விட அவரது மரணம் அதிக அச்சத்தை உருவாக்கிவிட்டிருக்கிறது. மானிட மேன்மைக்கு ஊறுவிளைவிக்கும் காலங்களாக இனிவரும் காலங்கள் அமையும் என்பதை அவரது இறுதிச் சடங்கு நினைவுபடுத்துகிறது. பம்பாயில் திரண்ட மக்கள் தொகை இந்தியாவின் முட்டாள்தனத்தைச் சுட்டி நிற்கிறது.


சிவசேனாத்தலைவரான பால்தாக்கரே மராட்டியதேசம் தனியே
 மராட்டிய மக்களுக்கு என்று சொன்னதோடல்லாமல் தொடர்ந்து முஸ்லீம் இனவெறுப்பைக் கொட்டி வந்தவர். இந்தியா இந்துமதத்தினருக்கானதாகவும் முஸ்லீம் மக்கள் இந்தியாவிலிருந்து துரத்தியடிக்கப்படவேண்டியவர்களா
கவும், எப்போதும் அபாயகரமானவர்களாகவும் சித்தரித்துக் காட்டி இந்தியாவை எப்போதும் ரணகளமாக்கியதற்குக் காரணமாக இருந்தவர்.
மதவெறி என்பது மற்றய மதங்கள் மீது காட்டப்படும் அதீத வெறுப்பிலிருந்தே தொடங்குகிறது. இந்தியாவில் இந்துமதவெறி என்பது நேரம் கிடைத்தபோதெல்லாம் முஸ்லீம் மக்களைப் பலி எடுத்துவிடுகிறது.

இந்தியா இந்து மக்களுக்கு என்று பால்தாக்கரே மட்டும் சொல்லவில்லை. அது ஒரு இந்துத் தேசியச் சொல்லாகிவிட்டிருக்கிறது.

1948ஆண்டு காந்தியின் கொலை வழக்கில் நாதுராம் கோட்சே தனது வாக்கு மூலத்தில் சொன்னவிடையம் அது. அந்தக் கோட்சேயின் சொல் இந்து மதத்தினது வெறியாக இன்றுவரை வேறு வேறு வடிவங்களில் இந்தியா பூராவும் அழியாமல் பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

“இந்து மதத்தை அழிக்க முயலும் சக்தியை ஒழித்துவிட்டேன் என்ற மன நிறைவு எனக்கு ஏற்பட்டுள்ளது. மானிட வர்க்கத்தின் நலனுக்காகவே இந்தச் செயலை செய்தேன். இந்தச் செயல் முற்றிலும் இந்து தர்மத்தையும், பகவத் கீதையையும் அடிப்படையாகக் கொண்டதுதான். நம் நாடு “இந்துஸ்தான்” என்ற பெயரில் இனி அழைக்கப்படட்டும். இந்தியா மீண்டும் ஒரே நாடாக வேண்டும்.” என காந்தியைச் சுட்டபின்  கோட்சேபேசினான்.

ஆர்.எஸ்.எஸ் என்கிற இந்துத்துவா அமைப்பும் சிவசேனா என்கிற இந்துமதவாத அமைப்பும் இந்தியாவை எப்படியாவது இந்து மத நாடாக மாற்றிவிடவேண்டும் என்கின்ற வெறியோடே தமது சிறு செயற்பாடுகளையும் நகர்த்திவருகின்றது. விநாயகர் சதுர்த்தி போன்ற இந்துமதத் திருவிழாக்களின்போது ஒவ்வொருதடவையும் முஸ்லீம்கள் மீதான வன்முறையை நடாத்திக்காட்ட அவை தயங்குவதில்லை. பிள்ளையார் பால்குடிக்கிறார் போன்ற புலுடாக்களையும் அவர்களே உருவாக்கி இந்தியாவை ஒரு மதவெறித் தளம்பலில் எப்பொழுதும் வைத்திருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் அவர்கள். இவர்களின் கல்வித்திடலில் வளர்ந்தவன்தான் நாதுராம் கோட்சே. இன்று அந்தக் கோட்சேயின் மாதிரிகளை நம்மத்தியில் பல வடிவங்களில் கண்டுவருகிறோம்.

.பம்பாயில் நடந்த  முஸ்லீம்கள் மீதான வெறியாட்டத்தை வைத்துக் கதையாக்கிய திரைப்படம் பம்பாய். பாபர் மசூதியைப்பற்றிப்பேசாமலேயே பம்பாய் படம் எடுத்து முடித்தவர் மணிரத்தினம். படம் திரையிடமுதல் பால்தாக்ரேயிடம் போய் ஆசி வாங்கியபின்பே திரையிட்டர் அவர். பம்பாயில் நடைபெற்ற இந்துமதவெறியர்களின் முஸ்லீம்கள் மீதான வன்முறையை இரண்டு மதங்களின் கலவரமாக்கி தாக்கரேபோல் பம்பாயில் முஸ்லீம் இனத்திற்கும் ஒரு தலைவர் இருப்பதாகக் காட்டி மிக அயோக்கியத்தனமான இந்து மதவெறியைக் கக்கியவர் மணிரத்தினம். அதற்கூடாக தனது பணம் பண்ணும் வித்தையில் வெற்றியீட்டியவர். நாசரை இந்துவாகவும் கிட்டியை முஸ்லீமாகவும் மாற்றி தனது சுத்துமாத்து விளையாட்டின் மூலம் சமநிலைப்படுத்துவதாகக் காட்டிய மணிரத்தினத்தின் இந்து முகம் படத்தின் பல இடங்களில் அப்பட்டமாக வெளிப்படும்.

அதேபோல் கமலகாசனின் உன்னைப்போல் ஒருவன் திரைப்படம் பாகிஸ்தான் தீவிர வாதிகளைச் சுட்டுத்தள்ளுகிறது. பிரகாஸ்ரஜின் திரைப்படமான அன்வர். அதற்கு ஆங்கிலத்தில் அன்றுயுசு என்று எழுதியிருப்பார்கள்.
இன்றைய தமிழ்ச் சினிமாக்காரர்களது சிந்தனைகளைப் பாருங்களேன். இயக்குனர் சிகரங்கள் என்றும் நடிகச் செம்மல்கள் என்றும் விழித்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும் சினிமாக்காரர்கள்  மதவெறிகளுக்குள் ஒழிந்திருக்கிறார்கள். இவர்களுக்கு தீவிரவாதிகள் என்றால் அவர்கள் முஸ்லீம்கள்தான். அவர்கள் பாகிஸ்தானில் இருந்துதான் வரவேண்டும். அவர்களுக்கு அன்வர். அக்பர் என்றுதான் பெயர் இருக்கவேண்டும். இந்தப் பொறுக்கித்தனமான அரசியலை அண்மையில் பேசியது பயணம் என்கின்ற பிரகாஸ்ராஜினுடைய திரைப்படமும் கமலினுடைய உன்னைப்போல் ஒருவனும்.

தற்பொழுது அதே முட்டாள்தனத்தில் துப்பாக்கி. ஏழாம் அறிவு என்ற ஆறறிவேயற்ற தமிழ்வெறிப் படத்தை எடுத்த முருகதாஸ் துப்பாக்கி என்று முஸ்லீம் வெறுப்புப் படம் எடுத்து இருக்கிறார். ஒரு திரைப்படத்தை எடுப்பவன் மிகக் கவனமாகக் கையாளவேண்டிய  விடையங்கள் குறித்த அடிப்படை அறிவுகள் கூட அற்றவர்களாக இருக்கிறார்கள் இவர்கள். இவர்களுக்கு எந்த வெறிகளைப் பேசினாலும் பரவாயில்லை தமக்குப் பணம் பண்ணுவதுதான் குறி. தாம் பற்றிக் கொள்ளுகின்ற கருத்துக்கள் குறித்து எந்தவிவாதங்களையும் அவர்கள் தமக்குள் நிகழ்த்துவதில்லை. துப்பாக்கி திரைப்படத்திற்கு முஸ்லீம் அமைப்பக்களிடமிருந்து எதிர்ப்புக் கிழம்பியதும்  உடனே  மன்னிப்பு கேட்கிறார்கள். இந்த மன்னிப்பு முழுமையானதல்ல. மனப்பூவமானதல்ல. தமது திரைப்படத்தை நட்டம் வராமல் தப்பவைத்து பணம் சம்பாதிக்கும் வரைக்கானது மட்டும்தான்.

இல்லையேல் எனது மகன் அடுத்த படத்தில் முஸ்லீமாக நடிப்பார் என்று படு முட்டாளான விஜயின் தந்தை சந்திரசேகரன் அறிவிக்கமாட்டான். இன்றுள்ள சந்திரசேகரனுக்கும் முருகதாசுக்கும் மணிரத்தினத்திற்கும் ரஜனிகாந்துக்கும் கமலகாசனுக்கும்  அன்றய கோட்சேக்கும் என்ன வித்தியாசங்கள் உண்டு?  65 வருடங்கள் ஓடிவிட்டது. ஆனால் கோட்சே இன்னும்  இவர்களில் வாழ்கிறான்.

தாக்கரே மட்டுமல்ல. நரேந்திரமோடி சோ ராமசாமி போன்ற ஆசாமிகளும் ஆபத்தானவர்கள். நல்லதொரு இந்தியாவுக்கு எதிரானவர்கள். 2002இல் குஜராத்தில் முஸலீம்களுக்கு நரேந்திரமோடி அரசு செய்த அட்டூழியம் கொஞ்சமல்ல. இன்னும் முற்றுமுழுதாகத் தண்டனை பெறாத அரசு அது.
ஒரு இடத்தில் சோ ராமசாமி  ரஜனிகாந் பற்றிச் சொல்லும் போது ரஜனிகாந்தை நரேந்திரமோடி ஆக்கப்போகிறேன் என்பார். இது ஆபத்தான சொல். அலட்சியப்படுத்திவிட்டுப்போக முடியாத சொல். 2010இல் சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்ரேயிடம் ஆசிபெறுவதற்காக அவரது இல்லத்திற்கு நடிகர் ரஜனிகாந்த் சென்றிருந்தாராம். சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர்

ரஜினகாந்த் பால்தாக்ரே கடவுளுக்கு நிகரானவர். அவர் எனக்கு கடவுள் மாதிரி எனத்தெரிவித்துள்ளார். பாருங்கள் காலம் பூராவும் முஸ்லீம்களை அழித்தவன் மராட்டியதேசம் மராட்டியருக்கே என்று தென்னிந்தியர்களை விரட்டியவன் ரஜனிக்குக் கடவுளாகிறான். ரஜனியை சோராமசாமி குஜராத்தை அழித்த மோடியாக்குகிறேன் என்கிறான்.

நாதுராம் கோட்சே செத்துவிட்டான் பால்தாக்கரே செத்துவிட்டான் என்றுமட்டும் இருந்துவிடமுடியாது. அவர்கள் பலமுகங்களில் பல மனங்களில் வாழ்கிறார்கள். எம்.ஆர். ராதா சொல்வதுபோல் இவர்ளது  பேச்சைக் கூத்தாடிகள் பேச்சு என்று விட்டுப் போகமுடியாது. இன்றைய தமிழகக் கூத்தாடிகள், அரசியற் கூத்தாடிகள். அராஜகக் கூத்தாடிகள். பாசிசக் கூத்தாடிகள். இவர்கள் நம்மிடையே படுமோசமான சிந்தனையை வளர்த்து விட்டுவிடும் அபாயம் கொண்டவர்கள். இந்க் கூத்தாடிகள் மீது மிகக் கவனமான எச்சரிக்கை நமக்குத் தேவை. பால் தாக்காரேயின் மரணம் சொல்லியிருப்து இதைத்தான்.


அவனின் இறுதி ஊர்வலம் இந்தியத் தேசத்தின் மீது அந்த மக்களுக்கு நம்பிக்கை இழக்கவைத்திருக்கிறது. இது அபாயத்தின் முக்கிய குறி.  அப்பாவித்தனமாக ஈழத்தை பால்தாக்கரே ஆதரித்தான் தமிழர்களை ஆதரித்தான் என்று சொல்லி அவன் மற்றய இனத்திற்குச் செய்த அழிவை கணக்கிலெடுக்காமல் அவனுக்கு அஞ்சலி செய்து கொண்டிருப்பதில் உள்ளே இருப்பதும் இந்துமதவெறியே.