சோபாசக்தி, தீபச்செல்வன் உரையாடல் குறித்த எதிர்வினை.

கற்சுறா..அசுரா



ஞானசம்பந்தர் ஞானப்பால் குடித்து ஐந்து வயதில் பதிகம் பாடியதாக எமக்கு புராணம் சொன்னது. புராணங்கள் எல்லாமே புரட்டுகள்தான் என்று மனம் புறந்தள்ளியது. “ஆனால்கிட்டத்தட்ட ஆறுவயதில் ஏன் யுத்தம் நடக்கிறது? எங்கள் மண்ணில் என்ன நடக்கிறது என்பது எனக்குப் புரிந்து விட்டது.எங்களுக்கு என்ன நடக்கிறது? நாங்கள் யார்? என்று புரிந்து கொண்டேன். ஆமிக்குப் பயந்து வாழும் வாழ்க்கை எனக்கு அந்த வயதிலேயே தெரிந்தது.” என புலிப்பால் குடித்து ஆறுவயதில் தமிழ்த் தேசியப் புராணம் பாடிய தீபச்செல்வனுக்கும் திருஞான சம்பந்தருக்கும் மிஞ்சி..மிஞ்சிப்போனால் ஒரு வயதுதான் வித்தியாசம். இந்த தீபச்செல்வனது அதிசயம் எம் கண்முன்னாலேயே நடக்கிறது. எனவே ஐந்து வயதில் சம்பந்தர் பதிகம் பாடியிருப்பார் என்பதை நாம்  இப்போது ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

தீபச்செல்வன் புலிஆதரவாளராக இருப்பதும் புலி இராட்சியத்தின் அவசியம் குறித்துப் பேசுவதும் நமக்கு ஒரு பொருட்டல்ல. இப்படியான மனம்படைத்தவர்களுடன் உரையாடுவதும் ஒரு தவறான விடயமும் அல்ல.
ஆனால் ஆக்க இலக்கியம் குறித்த சிந்தனையாளர்கள் எனக் கூறிக் கொள்பவர்களும், பன்முக சிந்தனைகள், மாற்றுக் கருத்தியல்களின்  அவசியம் கருதுபவர்களும் தீபச்செல்வன் போன்றவர்களின் உணர்வெழுச்சி உந்துதல்களை எப்படி எதிர்கொள்வது என்பதே இங்கு விவாதப் பொருளாக உள்ளது.

இந்த நேர்காணல் குறித்து நாம் கேட்கும் முதல் கேள்வி யாதெனில்,
“கிளிநொச்சி இரத்தினபுரத்தில் பிறந்த தீபச்செல்வன் கவிதை, பத்தி, எழுத்து, ஆவணப்படம், திறநாய்வு, ஊடகவியல் எனப் பல துறைகளில் இயங்கிக் கொண்டிருப்பவர்.’பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’ …… போரைக்குறித்தும் போரின் வடுவைக்குறித்தும் அலைந்து திரியும் ஏதலி வாழ்வு குறித்தும் தொடர்ச்சியாக எழுதிவரும் தீபச்செல்வன் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளராகவும் செயற்பட்டவர் ‘தீபம்’ என்ற வலைப்பக்கத்தை தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மும்மொழிகளிலும் நடத்திவருகின்றார். தற்போது யாழ்ப் பல்கலைக்கழக ஊடக நிலையத்தில் வருகை விரிவுரையாளராகப் பணியாற்றும் தீபச்செல்வனுடன் இந்நேர்காணல் மின் அஞ்சலூடாகக் கேள்விகள் அனுப்பியும் பெற்றுக்கொண்ட பதில்களிலிருந்து துணைக் கேள்விகள் அனுப்பிக் கூடுதல் பதில்களைப் பெற்றும் நிகழ்த்தப்பட்டது.” 
போன்ற அறிமுகங்களினூடாக தீபச்செல்வனை அணுகுவதா?

அல்லது தீபச்செல்வனின் பதில்களில் உறைந்து கிடக்கும் அறியாமையையும் அலட்சியங்களையும், தீபச்செல்வன் போன்றவர்களால் எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் விளைவுகளையும் அம்பலப்படுத்துவதை நோக்கமாகக் கொள்ள வேண்டியது அவசியமா? என்பதுதான்.
போரைக்குறித்தும் போரின் வடுவைக்குறித்தும் அலைந்து திரியும் ஏதலி வாழ்வு குறித்தும் எங்கள் புலவர் சேரன் பாடாததையா தீபச்செல்வன் தற்போது பாடப்போகின்றார்.
……..
துயிலா இரவுகளில்
அப்பா என்று அலறித்துடிக்கின்ற
சின்ன மழலைக்கு
என்னதான் சொல்வாய்?
உலாவித்திரிந்து நிலவைக் காட்டி
அப்பா கடவுளிடம் போனார்
என்று சொல்லாதே.
துயரம் தொடர்ந்த வகையைச் சொல்
குருதி படிந்த கதையைச் சொல்
கொடுமைகள் அழியப்
போரிடச் சொல்;
…..
இரவல் படையில்
புரட்சி எதற்கு?
எங்கள் நிலத்தில்
எங்கள் பலத்தில்
எங்கள் கால்களில்
தங்கி நில்லுங்கள்
வெல்வோமாயின் வாழ்வோம்
வீழ்வோமாயினும் வாழ்வோம்
நமது பரம்பரை போர் புரியட்டும். (சேரனின் ‘நீ இப்போது இறங்கும் ஆறு’ எனும் கவிதைத் தொகுப்பிலிருந்து)

என்றெல்லாம் கவிதைபாடி உணர்ச்சி ஏற்றி ஆயிரக்கணக்கான இளைஞர்களையும், குழந்தைகளையும் கொல்லக் கொடுத்துவிட்டு தனது வாழ்வை எவ்வாறு தக்கவைத்துள்ளார் புலவர் சேரன் என்பதைப் பாருங்கள். ‘வீழ்வோமாயினும் வாழ்வோம்’ என்று பாடியதற்காகவே இன்று ‘வீழ்ந்தபோதும்’ அவர் நாடுகடந்த தமிழ் ஈழத்துக்கு தனது ஆதரவை நல்குவதனூடாக அவர் ‘வாழ்ந்து’ கொண்டிருக்கின்றார்.
இந்த நேர்காணலின் வாசிப்பு மன நிலையானது ஒரு ஆரம்பகால புலி உறுப்பினருக்கும், ஒரு நிரந்தர (eternal) புலி உறுப்பினருக்குமான உரையாடலில்  எதிர்நிலைகளில் கேள்விகளும் விடைகளும் போய்க்கொண்டிருப்பதான ‘தோற்ற மயக்கத்தில்’ இழுத்துச் செல்லும். ஆனால் உண்மை அதுவல்ல. விடுதலைப்புலிகளது தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக அறிந்ததும் இணையத்தளங்களில் அவரது படங்களைப்பார்த்ததும் எனது இரண்டு கண்களும் தாழ்ந்தன. நான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஒரு குழந்தைப் போராளியாக இருந்தவன் அதனால் காட்டப்பட்ட படம் அவரேதான் என்பது எனக்குத் தெரியும். என்று சோபா எழுதியபோது எமக்கு எதுவித ஆச்சரியத்தையும் கொடுக்கவில்லை. விடுதலைப்புலிகளது சாகசவிளையாட்டில் அதிகமாய் மயக்கமுள்ளவர் அவர்.  கொரில்லா நாவல் அதற்கு நல்ல உதாரணம்.
அதனால்தான் சொல்கிறோம் தனக்குரிய அரசியலை தீபச்செல்வனுக்குள்ளால் கொண்டுவர நினைக்கிறார் அவர். அதனால் தான் புலம் பெயர்ந்த தமிழர்கள் எவ்வாறிருக்கவேண்டும் எவ்வாறிருக்கக்கூடாது என்று தீபச்செல்வனிடம் புத்திமதி கேட்கிறார் அவர்.
இதே கேள்விகள் நிலாந்தன், கருணாகரன்,  புதுவை ரத்தினதுரை, ஜெயபாலன், உருத்திரகுமார், சீமான், வை.கோபால்சாமி  போன்றவர்களிடம்  கேட்டாலும் இதேமாதிரி சப்புக்கெட்ட பதில்கள் தான் வரும். இனிவருங்காலங்களில் அவர்களிடமும் கேட்கப்பட்டு அவற்றை லும்பினி இணையத்தில் பிரசுரித்து எல்லோரையும் புல்லரிக்க வைக்கவேண்டும்.

முதலில் நாம் ஒன்றைத் தெரி(ளி)ந்து கொள்ளவேண்டும். “யுத்தம்தான் என்னை உண்மையான எழுத்தையும் இலக்கியத்தையும் நோக்கி நகர்த்தியது” என தீபச்செல்வன் அவர்கள் கூறியதிலிருந்தும், “நானோ விடுதலைப்புலிகள் தொடர்பான நிரந்தரமான விருப்பை வைத்துக் கொண்டு பேசுகின்றேன்” என்று கூறுவதனூடாகவும் தீபச்செல்வனிடம் தொடர்ந்து கேட்கவேண்டிய கேள்வி என்பது புலிகளின் சாகசம் குறித்ததாக மட்டுமே இருக்கமுடியும்.

தீபச்செல்வன் அவர்கள் தான் ஆறுவயதில் பெற்ற ஞானத்திலிருந்துதான் உலகத்தைப் பார்க்கிறார். பாவம் அவர். அவர் இலங்கையின் அரசியல் சமூக வரலாறுகள் குறித்த தேடலோ அது குறித்த அக்கறையோ எதுவுமற்ற ஒரு அப்பாவி.
புலிகள் காலத்தில் தொடர்ச்சியாகவே யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்களும், பேராசிரியர்களும் புலிகளைக் காப்பாற்றுவதிலும் யாழ் மேலாதிக்க சிந்தனையை பேணுபவர்களுமாகவே இருந்து வந்தவர்கள். இதில் முறிந்த பனை ஆசிரியர்கள் மட்டுமே விதி விலக்காக இருந்துள்ளனர்.
புலிகளால் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் குறித்துக் கேட்கப்பட்டபோது: “ இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள், சிங்களவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை நான் வளர்ந்த பின்புதான் அறிந்தேன். அதை யார் செய்தார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அப்பாவிச் சிங்கள மக்களையும், முஸ்லிம் மக்களையும் கொல்வது தீர்வல்ல என்று விடுதலைப்புலிகள் கருதியவர்கள் என்பதை நான் அறிவேன்”. என்கிறார் தீபச்செல்வன். கேக்கிறவன் கேணையன் என்றால் கேப்பையிலும் பால் வழியுமாம்.

அட அதுக்கு அப்படி ஒரு புலுடா விடுகிறாரென்று பார்த்தால்,  அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் கொலைகள் பற்றிக் கேட்டதற்கு, “அவர்கள் கொல்லப்படும் பொழுது நான் குழந்தையாகவும், சிறுவனாகவும் இருந்தேன். …..அவர்களைப் புலிகளா கொன்றார்கள் என்பதைப் பற்றியும் நான் அறியவில்லை. நான் உன்னதமான போராட்டம் நடந்த சூழலில்தான் நான் இருந்தேன்”. என்கிறார். எங்கபோய் முட்டுறது நாம.
“ஆனால் கிட்டத்தட்ட ஆறுவயதில் ஏன் யுத்தம் நடக்கிறது? எங்கள் மண்ணில் என்ன நடக்கிறது என்பது எனக்குப் புரிந்து விட்டது”. என்று ஆறுவயதுக் குழந்தையாக இருக்கும்போதே இராணுவம் மக்களைக் கொல்வதையும், சிங்கள ஆட்சியின் அரசியலையும் அறிந்து கொள்ளக்கூடிய ஞானப் பார்வை பெற்றிருந்தவர் தீபச்செல்வன். ஆனால் அமிர்தலிங்கத்தையும், யோகேஸ்வரனையும், அப்பாவிச் சிங்களவர்களையும்  புலிகள் கொல்லும் போது மட்டும் நான் குழந்தையாக இருந்தேன், நான் அப்போது  சிறுவன் என்றெல்லாம் குழைகின்றார். அவர் சொல்லுவதில்  ‘புலி நியாயம்’ ஒன்றிருக்கிறதல்லவா! புலிகள் தமது ‘உன்னதமான போராட்டத்திற்காகத்தானே’ தமது அதிகாரத்திற்கு எதிரானவர்கள் எனக் கருதுபவர்களை எல்லாம் கொன்று குவித்தார்கள். ”புலிகள் மரணத்தை எதிர்கொள்ளும் விதம் மக்களிடம் பெரியளவிலான ஆதரவைப்பெற்றது” என்று கூறும் தீபச்செல்வனுக்கு

“ஐயோ! நாங்கள் ஒன்றுமறியாத அகதிகள். எங்களால் சண்டைபோட முடியாது. எங்களுக்கு சண்டையில் விருப்பமில்லை. உங்களால் நாங்களெல்லாம் சாகப் போகிறோம். தயவு செய்து இங்கிருந்து போய்விடுங்கள்”. என பொதுமக்களின் வேண்டுதலை பதிவு செய்த முறிந்த பனை ஆசிரியர்களின் கள ஆய்வின் ஆதாரமான (பக்கம் 300) முறிந்த பனை நூலை வாசிக்குமாறு அடுத்த கேள்வியில் சொல்லியிருக்க வேண்டாமோ?
அந்த காலகட்டத்தில் தீபச்செல்வனுக்கு நாலு வயதுதானே இருந்தது என்ற காரணத்தால்  அவருடன் உரையாடியவர் அதைத் தவிர்த்துக் கொண்டாரோ என்னவோ!

“புலிகள் பொதுமக்களை பாதுகாப்புக்கான கவசமாக பயன்படுத்தினர். போராளிகள் மக்கள் செறிந்திருந்த மருத்துவமனைகளிலிருந்தும் கோயில்களிலிருந்தும் பாடசாலைகளிலிருந்தும் தாக்குதல் நடத்தி தப்பிக்கொண்டனர்”.(முறிந்த பனை, பக்கம் 357) …“அக்டோபர் யுத்தத்தின் போதும் இலங்கை அரசோ, இந்திய அரசோ தமிழ் மக்களின் அக்கறைகளை ஒருபோதும் பொருட்டாகவே கருதியதில்லை என்பதை நாம் அறிவோம். எல்லாவற்றிற்கும் மேலாக, விடுதலைப்புலிகள்கூட தமது இயக்கத்தின் குறுகிய நலன்களைவிடப் பொதுமக்களின் ஜீவமரணப் பிரச்சனைகளை மிகவும் அற்பமாகவே கருதியிருந்ததை அக்டோபர் யுத்தத்தின்போது அவர்கள் நடந்து கொண்ட விதம் நன்றாகவே தெளிவாக்கியது.” (முறிந்த பனை, பக்கம்405) இங்கே ஒன்றை நினைவு கொள்ளவேண்டும் முறிந்த பனை நூல் ஆசிரியர்கள் இலங்கை அரசிற்கு எதிராக யுத்தத்தில் ஈடுபட்ட  அனைத்து இயக்கங்களையும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியவர்கள். அதுமட்டுமல்லாது இந்திய இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட யுத்த காலத்தில் களப் பணிகள் ஊடாக மக்களை ஊர், ஊராக, கிராமம், கிராமமாக சென்று நிலமைகளை நேரில் கேட்டு, அறிந்து ஆவணப்படுத்தியுள்ளனர்.
அக்காலகட்டத்தில் மக்கள் ஓரளவிற்கு புலிகளின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை காட்டியுள்ளனர். 90 களின் பிற்பகுதியிலிருந்து மக்கள் வாய்மூடி மௌனமாக்கப்பட்டனர். இப்படியான சூழலே புலிகள் அழியும் வரை வட-கிழக்குப் பகுதியில் இருந்து வந்தது.

“விடுதலைப் புலிகளுக்கு அறிவுரை சொல்லும் விதமாக இருக்கவில்லை விடுதலைப் புலிகளை அழிக்கும் விதமாகவே இருந்தது” எனக் கூறிய தீபச்செல்வனுக்கு புலிகளுக்கு அறிவுரை கூறி பலன் அற்ற காரணத்தாலேயே புலிகள் அழிக்கப்பட வேண்டியவர்கள் எனும் சூழல் ஏற்பட்டது என்பதாக கூறியருக்க வேண்டாமா?

தீபச்செல்வன் போன்றவர்கள் புலிகள் புனிதமானவர்கள் என்று பட்டைச்சாராயம் அடித்து நாக்குச் செத்தவர்கள் போல் திரும்பத்திரும்ப ஒரேபதிலைச் சொல்வார்கள். ஊருக்கே தெரிந்த விடையம் தமக்குத் தெரியாது என்பதாக புலுடா விட இவர்களால் மட்டும்தான் முடியும். இவர்களுக்கு நடைபெற்ற எல்லமே தெரியும். ஆனால் இன்றுவரை புலிகளுடன் கூட இருந்து நம்பி ஏமாந்து போனதை இவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதே ஒரு உண்மை. அதனால் தாம் சொல்வது பொய் என்று தெரிந்தும் இல்லை என்று மறுத்துச்சொல்ல வேண்டியிருக்கிறது. இறுதி யுத்தத்தில் புலிகள் மக்களைக் கொன்றார்கள் என்று எத்தனையோ நேரடி ஆதாரங்கள் இருந்தும் தீபச்செல்வன் பச்சையாக மூடிமறைக்க வேண்டியிருப்பதற்கு வேறுகாரணம் எதுவும் இருக்க முடியாது. அந்த உண்மையை இன்று கருணாகரன் இந்தியாவில் இருந்து விதுல்ராஜா போன்ற பல புனைபெயர்களில் சொல்வதனால் கருணாகரனுடன் தற்போது தான் முரண்படுவதாகச் சொல்கிறார்.
சாதாரணமாக விடுதலைப்புலியில் இணைந்துகொண்ட ஒரு போராளி என்பவனுடைய சிந்தனையில் இருக்கக்கூடிய ஆகக் குறைந்தளவு நேர்மைகூட இல்லாதவர் அவர். புலிகளை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட பதில்களையே திரும்பத்திரும்பச் சொல்லும் தீபச்செல்வன் போன்ற புலி உத்தியோகத்தர்கள் எப்போதும் ஆபத்து நிறைந்தவர்கள். ஒரு இனத்தின்  கொடடுரமான படுகொலைகளுக்கு துணைபோனவர்கள்  தீபச்செல்வன் போன்றவர்கள்.

பார்த்தீர்கள்தானே பல்கலைக்கழக விரிவுரையாளராக இருக்கும் விடுதலைப்புலிகளது உத்தியோகத்தரான தீபச்செல்வன் கேட்கப்படும்  மிகச் சாதாரணமான கேள்விகளுக்கு அற்பத்தனமாகப் பதிலளிப்பதை!  சகோதரப்படுகொலை குறித்து கேட்டால்..,  அப்போது நான் குழந்தை. முஸ்லீம்கள் வெளியேற்றம் குறித்து, அப்போது நான் குழந்தை. கிழக்கிலங்கைப் படுகொலை… அப்போது நான் சிறுவன். சிங்களமக்கள் படுகொலை… அதை நான் அறியவில்லை. என்று குழந்தைத்தனமாகவே பேசிக் கொள்கிறார். இங்கே பல்வேறு ஆதாரங்களையும்,  விளக்கங்களையும் எழுதி தீபச்செல்வனின் புத்திக்குள் புதைக்கவேண்டும் என்ற எண்ணமும் கருசனையும் எமக்கில்லை. அது நமது தேவையுமல்ல.

ஏனெனில் அவர்களுக்கு சகலதும் விளக்கமாகத் தெரியும். நாமும் காலாகாலமாக எழுதியும் வருகின்றோம். ஆனால் தீபச்செல்வன் போன்றவர்களது ஏக்கம் கவலையெல்லாம் தாம் மிகப்பெரிய நம்பிக்கை கொண்டிருந்த விடுதலைப் புலிகள் அவசரமாக அழிந்து போனதைப் பற்றித்தான். தங்களது அந்த ஏக்கத்தைத்தான் மக்கள் மனதில் இருந்து என்றும் புலிகளது நினைவு அழியாது என தமக்காக மக்களைத் துணைக்கு அழைக்கிறார்கள்.

இன்றைய ஜேர்மனியர்கள் தமது மூதாதையர்கள் செய்த செயல் குறித்து மிகவும் வெட்கப்படுகிறார்கள். அதேபோல் புலிகளது தீபச்செல்வன்கள் போன்ற உத்தியோகத்தர்களும் வெட்கப்படும் நிலை உருவாகவேண்டும்.
இந்த உரையாடலானது ‘இனிஒரு இணையத்திலோ’ தேசம் இணையத்திலோ’ அல்லது ‘லங்காசிறீ இணையத்திலோ’ ஏன் கனக்கவேண்டாம் even சோபாசக்தி டாட் காமிலையோ (!!!) வந்திருந்தால் நாம் இதை வாசித்து விட்டு பிறங்காலால் உதைத்து தள்ளிவிட்டு சிவனே என்று சென்றிருப்போம்.
ஆனால் நாம் தொடர்ச்சியாக வாசித்துவரும் ‘லும்பினி இணையத்தில்’ வந்ததால் தான் இதை நாம் எழுத நேரிட்டது. காரணம் லும்பினியில் எழுதிவரும் பல எழுத்தாளர்கள் மிகப்பெரிய சிந்தனையாளர்கள், இலக்கிய வாதிகள்,பேராசிரியர்கள், தலித் சிந்தனையாளர்கள். இவர்கள்   புலிகளின் அதிகார மோகத்தையும், அதற்கான அவர்களது பாசிச அணுகுமுறைகளையும் நன்கு அறிந்து கொண்டவர்கள். எனவே இவர்களிடமே சில நியாயத்தை நாம் கோரவேண்டியுள்ளது.

“மகிந்த ராஜபக்சவின் சர்வாதிகார அரசுக்கு ஏதிராக சிங்கள முற்போக்குச் சக்திகளிடையே பலமான ஓர் எதிர்ப்பியக்கம் தோன்ற வாய்ப்புள்ளதா?” என புலியின் நிரந்தர ஆதரவாளரான தீபச்செல்வனிடம் கேட்கவேண்டியதின் தார்மீகம் தான் என்ன?

புலிசெய்த சர்வாதிகாரம் என்பது ‘பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்’ என்ற காரணத்திலா முதலாளித்துவ சர்வாதிகாரம் குறித்து தீபச்செல்வனிடம் வினா தொடுக்கப்பட்டது?

1983 இல் தான் பிறந்ததால அதற்கு முன்பு நடந்ததெல்லாம் தனக்குத் தெரியாது, அதை நான் அறியவில்லை நான் குழந்தை, நான் சிறுவன்.  நான் ஆறுவயதில் இருந்தே புலிப் புராணம் பாடுகின்றேன் என ஒப்புதல் வாக்குமூலம் அழித்த ஒருவரிடம் 19ஆம் நூற்றாண்டில் தோன்றிய மார்க்சியம் குறித்தும், மேலும் உலகமயமாதல் குறித்தும் கேட்கப்படும் கேள்விக்கான நியாயம் தான் என்ன?
தீண்டாமை குறித்தெல்லாம் இவரிடம் எந்த நியாயம் எதிர்பார்க்கப்பட்டது?
“சாதிய ஒடுக்குமுறை மீறலை பேசும் இலக்கியங்கள் இன்று காலத்திற்கு ஏற்ப ஈழத்தில் எழவில்லை” என்று கூறும் தீபச்செல்வனுக்கு தெணியான் எனும் தலித் எழுத்தாளர் இருப்பது தெரியவில்லை. புலிகளின் அடக்குமுறைக் காலத்திலும் சாதிய ஒடுக்கு முறை குறித்த இலக்கிய படைப்புகளை எழுதி வந்தவரல்லவா தெணியான் அவர்கள்?
வடபகுதியில் எழுந்த சாதி எழுச்சிபோராட்டங்களான தேனீர்கடை பிரவேசம், கோவில் நுழைவுப்போராட்டம் போன்ற சமூக அதிர்வுகள் தீபச்செல்வனின் புத்திக்குள் நுழைந்திருக்குமா?

“யாழ்ப்பாணம் புலிகளது ஆட்சியின் கீழ் இருக்கவில்லை என்பதனால் சாதிய ஒடுக்குமுறை இருக்கலாம்”.  “…..வன்னியில் தீண்டாமை முற்றாக ஒழிந்திருந்ததைப் பார்த்திருக்கின்றேன்”.என்று கூறும் தீபச்செல்வனிடம், அட நாசமாப்போவானே உன்ர வாய்  அழுகிப்போகும்.என்று சோபாவால் கூறமுடியாதிருந்ததன் காரணம் என்ன. முள்ளி வாய்க்கால் சம்பவத்திற்கு பிற்பாடு வன்னியில் கிளம்பிய சாதிய அதிர்வுகளை  சோபா தொட்டுக்காட்டியிருக்கலாமே?
வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து அகதி முகாம்களில் இருந்தபோது சாதியம் சடைத்துக் கிளம்பியதை அங்கு சென்று வந்தவர்கள் நேரில் பார்த்து அறிந்ததாக வெளிவந்த செய்திகள் சோபாவுக்குக்கூடத் தெரியாது போனதா?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இன்று தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் என்று கூறுகிறார் தீபச்செல்வன் அவர்கள். அண்மையில் வவுனியாவில் “வெளிய போங்கடா சக்கிலிய நாய்களே” என சாதிவெறியில் குலைத்தவர் தீபச்செல்வன் நம்புகின்ற தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஓர் அங்கத்தவர்.

நாம் அனைத்தும் அறிவோம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யார்…திபச்செல்வன்கள் யார்…இவர்களின் கருத்துக்களும், சிந்தனைகளும் யாருக்குரியது என அனைத்தும் நாம் அறிவோம்.
தீபச்செல்வனோடு உரையாடியவர் மிகப்பெரிய எழுத்தாளர். முற்போக்கு, மாற்றுச் சிந்தனை, மார்க்சியம், ரொட்ஸ்கியம், ஜனநாயகம், தலித்தியம், புலிகளின் அராஜகம், மனித உரிமை போன்ற பல தளங்களில் பயிற்சிபெற்று (!!!) அவை குறித்தெல்லாம் ‘அக்கறையுடன்’  பேசியும் , எழுதியும் வருபவர்.
எமக்கு தீபச்செல்வனிடம் கேட்கப்பட்ட கேள்விகள் யாவும் எதிரும்-முரணுமாக நகர்வதான ஒரு ‘தோற்ற மயக்கமாகவே’ இருக்கின்றது. காண்பதிலிருந்து நாம் காணததைக் காணுகின்றோம். இருந்தபோதும் தீபச்செல்வனிடம் தொடுக்கப்பட்ட கேள்விகள் யாவும் வெறும் சம்பிரதாய பூர்வமானதென்றோ, அல்லது இது வெறும் அயோக்கியத்தனமான நாடகம் என்றோ நாம் தீர்ப்புச் சொல்லிவிட முடியாதுள்ளது.

ஏனெனில் இது ‘லும்பினி இணையத்தளத்தில்’ வந்த சம்பவம். நாம் கண்டபடி எதையும் பேசிவிடமுடியாது. அதில் எழுதி வருபவர்கள் மிகப் பெரிய சிந்தனையாளர்கள் எனவே தான் நாம் அவர்களிடம் (லும்பினியில் கட்டுரைகள் எழுதுபவர்களிடம்) நியாயம் கேட்கின்றோம். லும்பினியில் வரும் ஆக்கங்களை தொடர்ச்சியாக வாசிப்பவர்கள் எனும் குறைந்த பட்ச உரிமையுடன்தான் இந்த நியாயத்தைக் கேட்கின்றோம். எமக்கு நீங்கள் பல்வேறு எடுகோள்கள் காட்டி ,பல்வேறு சித்தாந்தங்களை முன்வைத்து  நியாயங்கூற முயற்சிக்க வேண்டாம். ஏனெனில் எமக்கு அவை புரியாமலும் போகலாம். நறுக்கென்று இரண்டு வார்த்தையில் விளக்கம் அளித்தாலே போதுமானது.

கேள்வி, 1) தீபச்செல்வனுடன் உரையாடியதன் மூலமாக கண்டிறிந்த உண்மைகளை பேசியிருக்கவேண்டாமா? புலிகள் விதைத்த பாசிசம் வேரோடு அழிக்கப்படவில்லை என்பதை அம்பலப்படுத்தியிருக்க வேண்டாமா?

கேள்வி,2) தீபச்செல்வன் முற்போக்கு இலக்கிய வட்டத்திற்கும், மாற்றுச்சிந்தனை கொண்டவர்களுக்கும், ஜனநாயகம் மனித உரிமை குறித்தெல்லாம் அக்கறைகொண்டவர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட வேண்டிய ஒரு ‘இலக்கியப் பொக்கிசமா’?

ஆம்..இல்லை, என நறுக்கென்று இரண்டுவார்த்தை போதும்.
நன்றி.