அன்பர்களே நண்பர்களே அனைவருக்கும் வணக்கம். ’சமாதானத்திற்கான கனடியர் அமைப்பினர்’ நடாத்தும் இந்தக் கூட்டத்தில் பேசுவதையிட்டு நான் பெருமைப்படுகிறேன். எனக்குத் தரப்பட்ட தலைப்பு இடம்பெயர்ந்தவர்களும் புலம்பெயர்ந்தவர்களும். இது ஒரு அருமையான தலைப்பு. அன்பர்களே முதலில் இடம்பெயர்வு என்ற பதத்தை எடுப்போமாக இருந்தால் இலங்கையில் தமிழர்களாக இருந்த தமிழர்களோடு இருந்த ஒருசாரார் அதாவது தாழ்த்தப்பட்ட மக்கள்தான் முதன் முதலில் இடம்பெயர்வுக்கு உள்ளானார்கள். நண்பர்களுக்கு நான் இதை ஞாபகப்படுத்த ஆசைப்படுகிறேன். முற்றுமுழுதாக தமிழர்கள் வாழுகின்ற யாழ்ப்பாண மண்ணிலே தாழ்த்தப்பட்ட மக்கள் ஏழை மக்கள் உயர்சாதி என்று சொல்லப்படுபவர்களால் பலதடவை இடம்பெயர்வுக்கு வற்புறுத்தப்பட்டார்கள். பலர் மனபங்கப்படுத்தப்பட்டார்கள். பல இளைஞர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அவர்கள் அங்கவீனர்களாக்கப்பட்டார்கள். விசேடமாகப் பெண்கள். பலரது குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டன. அதேபோல ஓரிடத்தில் நிரந்தரமாக வாழுகின்ற தங்களது அடிப்படை உரிமையை இழந்து யாழ்ப்பாண மண்ணிலே இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் திருகோணமலைக்கும் வன்னிப் பகுதிக்கும் இடம்பெயர்ந்த வரலாறு ஏராளம் ஏராளம்.

இது ஒன்றும் கற்பனைக் கதையல்ல. நிதர்சனமான வரலாற்று உண்மைகள். இந்தச் சாதித் துவேசம் என்கின்ற அடிப்படையான கேவலமான மிருகத்தனமான மிலேச்சத்தனமான இந்தக் கட்டமைப்பிலிருந்து எங்களுடைய இலங்கை அரசியலில் இனவாதமும் சரி மதவாதமும் சரி முளைத்திருக்கின்றன. முளைக்கின்றன. தமிழ் மொழியைவிட வேறுமொழி தெரியாது. வேறு மொழிகளைப் படிப்பதற்கு வாய்ப்பளிக்ப்படாத மக்கள். பாடசாலைகளிலே படிக்க்கூடாது என்று தடுக்கப்பட்ட மக்கள். தாங்கள் நினைத்தது போல் உடைதரிக்க முடியாது போன மக்களை மிகவும் கீழ்த்தரமான வாழ்நிலைக்குத் தள்ளி மிக மோசமான மனித உரிமை மீறல்களைச் செய்தவர்கள் இலங்கை வரலாற்றிலே மேட்டுக் குடியினர் என்று சொல்லப்படும் சாதிமான்களான யாழ்ப்பாணத்துக் கனவான்களே என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்.

யாழ்ப்பாணத்துத் தமிழ்த் தலைவர்கள் யாழ்ப்பாணமண்ணிலே வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்களது உரிமையை கொடுக்க மறுத்து செய்த கொடுமைகள் ஏராளம். இப்படியான தலைவர்கள் இலங்கை சுதந்திரம் அடைந்ததற்கு அதாவது 1948ம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் எப்படிச் சிங்களத் தலைவர்களோடு உறவாடினார்கள் என்பதைநாங்கள் நிதானமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உதாரணத்திற்குச் சொல்லலாம், டி.எஸ் சேனநாயக்கா குடும்பம் பின் பண்டாரநாயக்கா குடும்பம் அதன்பின் வந்தவர்கள் என அனைவரோடும் மிகநெருங்கிய உறவை வைத்துக் கொண்டிருந்தவர்கள் இராமநாதன், அருணாசலம், ஜி.ஜி. பொன்னம்பலம் அதன்பின் வந்த சுந்தரலிங்கம் திருச்செல்வம் போன்றவர்கள்.

இந்த இரண்டு இனவாதிகளும் இந்த இரண்டு சாதிவாதிகளும் தான் இலங்கையில் நடைபெற்ற அனைத்து அட்டூழியங்களுக்கும் மோதல்களுக்கும் அடாத்துக்களுக்கும் விதை விதைத்தார்கள் என்று சொல்வது ஒன்றும் பொய்யல்ல. கட்டுக்கதையல்ல. நண்பர்களே, சிங்கள அரசியல் தலைவர்கள் முழு இலங்கையையும் ஆண்ட காலத்திலே அதாவது உதாரணத்திற்கு டி.எஸ். சேனநாயக்கா காலத்திலே அவர்பிரதமராக இருந்த காலத்திலே அவருக்கு சகல விதமான உதவிகளையும் ஒத்தாசையையும் செய்தவர்கள் ஜி.ஜி. பொன்னம்பலம், எஸ்.ஜே.வி. செல்வநாயகம் போன்றவர்கள். ஏனெனில் அவர்கள் ஒரு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் உதவியாகவும் பாதகாப்பாகவும்தான் இருந்திருக்கிறார்கள்.

சேனநாயக்கா அவர்கள் குடியேற்றத் திட்டம் ஒன்றைக் கொண்டுவந்த பொழுது சிங்களக் குடியேற்றம் என்று சொன்னார்கள். அன்றைய தமிழ்த் தலைவர்கள் அவர்களுக்கு உடன்பாடாய்த்தான் இருந்தார்கள். ஒத்தசையாகத்தான் இருந்தார்கள். அப்போது இதனைத் தவறு என்றும் பிரச்சனைக்குரியவை என்றும் இடதுசாரிகள் சொன்னபொழுது இந்தத் தமிழ்த் தலைவர்கள் சிங்களத் தலைவர்களோடு சேர்ந்து நின்று தமது கைங்கரியங்களை புரிந்தார்கள். தமிழ் மக்களில் ஒரு சாராருக்கு உரிமைகள் கொடுக்கக் கூடாது என்று பேசியவர்கள் சிங்களத் தலைவர்கள் அல்ல. முதல் பேசியவர்கள் இராமநாதன் போன்ற தமிழ்த் தலைவர்கள். பின்னர் அந்த அடக்கப்பட்ட மக்கள் அடக்குமுறைக்கெதிராக வீறு கொண்டெழுந்து தெளிந்த மனதோடு மார்க்சிய லெனினிச சோசலிச கொள்கையோடு சேர்ந்து எடுத்த நடவடிக்கைக்கு எதிராக நின்றவர் வவுனியா சி.சுந்தரலிங்கம் அவர்கள்.
இவர்களுக்கு எதிராக சிங்கள அரசு எந்த நடவடிக்கையும் எடக்கவில்லை. தட்டிக் கேட்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள்தான் கேட்டார்கள். நண்பர்களே சாதிவாதம் மொழிவாதம் இனவாதம் வர்க்க வாதம் எல்லாமே கிட்டத்தட்ட ஓரிடத்தில் இருந்துதான் பிறக்கின்றது. சாதி அடக்குமுறை எவ்வளவு பயங்கரமானதோ அதேயளவு பயங்கரமானதுதான் இனவாதம். வர்க்க வாதமும் அப்படித்தான். வர்க்கமுரண்பாடு உலகம் முழுமைக்கும் பொதுவானது.

அடுத்து, பண்டார நாயக்கா ஆட்சிக்கு வருகிறபொழுது இரண்டே இரண்டு கட்சிகள்தான் சிங்களவர்களிடம் இருந்தது. ஒன்று ஐக்கியதேசியக்கட்சி மற்றது சிறீலங்கா சுதந்திரக் கட்சி. பண்டாரநாயக்கா 1947இலேயே தமிழத் தலைவர்களான எஸ்.ஜே.வி. செல்வநாயகம் போன்றவர்களிடம் இலங்கையில் ஒரு இனப்பிரச்சனை இருக்கிறது இது பிற்காலத்தில் வளர்ந்து பெருத்து வெடித்து பேராபத்தை உண்டு பண்ணக்கூடியது. ஆனபடியால் இரண்டு பகுதித் தலைவர்களும் பேசி ஒரு உடன்பாட்டிற்கு வருவதன் மூலம் இதை விஸ்பரூபம் எடுக்காமல் தடுக்கமுடியும் என்று சொல்லியிருக்கிறார். இது எஸ்.டிபிள்யூ.ஆர்.டி. பண்டபரநாயக்காவின் மனதில் எழுந்த எண்ணம். இது எங்கள் தமிழ்த் தலைவர்களது மனதில் தோன்றியதல்ல. பின்னர் பண்டாரநாயக்காவும் தந்தை செல்வநாயகமும் சேர்ந்து ஒப்பந்தம் ஒன்றை எழுதினார்கள். இது பூரணமானதாக இல்லாவிடினும் பின்னர் எழுந்த மிகப்பெரிய பிரச்சனைகளை தவிர்க்க அது காத்திரமான பங்களிப்பைச் செய்தது.

ஜே.ஆர். ஜெயவர்த்தனா என்ன செய்தார் என்று உங்களுக்குத் தெரியும். ஜே.ஆர். ஜெயவர்த்தனா அவர்கள் பண்டாரநாயக்காவும் செல்வநாயகமும் செய்த ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்து கண்டி யாத்திரை செய்தார். கண்டி யாத்திரை செய்ததன் மூலம் சிங்கள இனவாதத்தை தூண்டினார். நான் சிங்களப் பேரினவாதம் என்று சொல்ல மாட்டேன். நண்பர்களே, நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ தெரியாது. இனவாதம் என்பது தமிழர்களிடமும் இருந்தது. அது தமிழ் இனவாதம். சிங்களவர்களிடமும் இருந்தது சிங்கள இனவாதம். இந்த இனவாதத்தை மக்களுடைய தொகையைக் கொண்டு நாங்கள் தீர்மானிக்க இயலாது. தமிழ் இனவாதம் என்பது இந்த வெறி என்பது, இந்த மிலேச்சத்தனமென்பது சிங்கள இனவாத்தை விட எந்தளவிலும் குறைந்ததல்ல. ஜே.ஆர்.அவர்களது கண்டியாத்திரையின் பிற்பாடு யூ. என்.பி கட்சி சிங்கள மக்களிடத்தில் கணிசமான ஆதரவைப் பெற்று வளருகிறது. அதற்கான ஆதாரம், மூலதனம் இனவாதமே. இன்றுவரை அனைத்துப்பிரச்சனைகளுக்கும் முரண்பாடுகளுக்கும் மூலகாரணம் பொருளாதாரம் தான் அந்த ஏற்றத்தாழ்வுதான் என்று சொன்னவர்கள் இடதுசாரிகள்தான். இடதுசாரிகள் ஒன்றையே நினைத்து நேரான பாதையில் சென்றதனால்தான் ஒருபோதும் இடறவில்லை.

ரஸ்சியா என்றும் மொஸ்கோ என்றும் ரொஸ்கியம் என்றும் பிளவுபட்டு நின்றதும் இவர்கள் ஒற்றுமைப்படாததும் தவறுதான். இந்த மூவரும் ஒற்றுமைப்பட்டு நின்றிருந்தால் இலங்கையில் நடைபெற்ற அரசியல் அனர்த்தங்கள் நிட்சயம் தவிர்க்கப்பட்டிருக்கும். தவிர்க்கப்படுவது மாத்திரமல்ல ஒரு பெரிய ஐக்கியம் இந்த மக்களிடையே வந்திருக்கும். நான் 1956ம் ஆண்டு கல்லோயா அபிவிருத்தி சபையிலே பணிபுரிந்தேன். இலங்கை வரலாற்றிலே முதலாவது இனக்கலவரம் அங்கேதான் வெடித்தது. இனக்கலவரம் அம்பாறையில் வெடித்தபொழுது எனக்கு அப்போது 23 வயது. அந்தநேரம் எங்களை ஒரு துன்பமும் இல்லாது பாதுகாத்தவர்கள் எங்களது சிங்கள நண்பர்கள். நான் ஒரு உதாரணத்திற்குச் சொல்லுகிறேன். பிரேமரட்ணா என்று அம்பாந்தோட்டையில் இருக்கின்ற எனது நண்பன் என்னையும் இன்னும் மூன்று தமிழ் இளைஞர்களையும் ஒரு பேக்கரியிலேயே கொண்டு போய் பத்திரமாக இருக்கச் சொல்லி விட்டார். அது முதலாவது அனுபவம். அங்கே பார்த்தால் ஒவ்வொருவரும் வெவ்வேறு கோலங்களில் இருக்கின்ற தொழிலாளிகள். பார்க்க எங்களுக்கு மிகவும் அச்சமாக இருந்தது. தமிழனின் குணம் என்ன பார்த்தவுடன் எல்லோரையும் சந்தேகிப்பது. அங்கிருந்த கத்திகள் கோடாலிகளைப் பார்க்க எனது நண்பர்களுக்குப் பயம் வந்துவிட்டது. ஆனால் தனது தம்பியினது பேக்கரிதான் இது. நீங்கள் இங்கிருந்து வெளியில் போக யோசிக்க வேண்டாம். வெளியில் நிலைமை படுமோசமாகவுள்ளது. என்பதை பிரேமரட்ண விளக்கினார்.

தனது தம்பியும் என்னைப் போல்தான் ஆதலினால் பயப்படவேண்டாம் என்றார். நான் இதை ஏன் சொல்கிறேன் என்றால், அடிமட்டத்து மனிதர்கள் தொழிலாளிகள் உறவு கொள்வது என்பது திடீரென ஏற்படும் சிக்கல்களிலும் அல்லது அளவு கடந்த அன்பிலும்தான். 1987களில் பலாலி இராணுவமுகாமைச் சுற்றியுள்ள கிராமத்து குடும்பங்கள் பாதுகாப்புக் கருதி இடம்பெயரவேண்டிவந்தது. அனைவரும் ஒட்டுமொத்தமாக இடம்பெயர்ந்தார்கள். அந்தநேரம் இரண்டுநாள் தங்குவதற்கு அரசாங்க அதிபரும் பொலிசும் இடம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டபொழுது, சாதியிலே ஒடுக்கப்பட்ட மக்கள் ஒருபகுதியிலேயே விடப்பட்டு சாதிமான்கள் வேறுபகுதியிலே போய்ச் சேர்ந்தார்கள். பின்பு நடந்த உள்நாட்டு யுத்தத்திலே எங்களுடைய மக்கள் உயிருக்குப் பயந்து அநாதைகளாக ஓடி ஒழிந்து கொண்ட இடங்களிலே தாழ்த்தப்பட்ட மக்கள் தண்ணியள்ளிக்குடிக்க முடியாமல் தடைசெய்யப்பட்டார்கள். நண்பர்களே அன்பர்களே நான் உங்களுக்குச் சொல்லுவது, இந்த அடிப்படை இன்றுவரை இருக்கிறது. அது செத்து விட்டது என்று சிலர் சொல்கிறார்கள். வெளிநாடுகளில் புலம்பெயர்ந்தவர்களைப் பார்க்கிறேன். இங்கே மிகக் கவனமாக அது பாதுகாக்கப்படுகிறது. குடியிருக்க வீடு வாங்கப் போகும் போது அயலிலே யார் இருக்கிறார்கள் என்தான் பார்க்கிறார்கள். என்ன சாதிக்காரர் இருக்கிறார் என்றுதான் பார்க்கிறார்கள்.

இதுதான் தமிழர்களது மனோபாவமாக இருக்கிறது. இனி, தமிழீழ விடுதலைப் போரை நடாத்திய புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டார்கள். தோற்கடிக்கப்பட்டது என்று சொல்லுவதற்கும் எதிர்ப்பானவர்கள் இருப்பார்கள். புலிகள் போரில் தோற்கடிக்கப்ட்ட பின் அங்குள்ள அரசும் அரசுக்கு சார்பானவர்களும் தூண்டிவிட்டதின் பேரில் சிங்கள மக்கள் பெரிய கொண்டாட்டமாகக் கொண்டாடினார்கள். புத்தர் அதையா சொன்னார்? பஞ்ச சீலம் என்கின்ற அன்பைப் போதித்த புத்த சமயத்தைத் தழுவுகிற மக்கள் பல்லாயிரம் மக்கள் சாகடிக்கப்பட்டதை கொண்டாட்டமாகக் கொண்டாடினார்கள். இது அந்த மக்களுடைய குற்றமல்ல. அந்த மாதிரி அவர்களுடைய மூளைகள் சலவை செய்யப்பட்டுள்ளன. நான் இப்படிச் சொல்கிற பொழுது இன்னொரு விடையத்தையும் சொல்ல வேண்டும். 1999ம், 2000ம் ஆண்டுகளில் ஓயாத அலைகள் என்ற புலிகளுடைய இராணுவ நடவடிக்கையின் பொது நடந்த சம்பவங்கள் பூண்டோடு அழிக்கப்பட்ட இராணுவ முகாம்கள், சிங்களக் கிராமங்கள், முஸ்லீம் மக்கள் அழிக்கப்பட்டு இரசு தடுத்து நிறுத்த முடியாது பின்வாங்கியபோது நாங்கள் எல்லாம் கொண்டாடினோம். எமது வீடுகளில் விழாவாகக் கொண்டாடினோம்.
நமது நாட்டிலல்ல. இங்கே புலம் பெயர்ந்து வந்து சர்வ பாக்கியங்களையும், வாழ்க்கைக்குத் தேவையான சகலவசதிகளையும் அதற்கும் மேலால் மனித உரிமைகளைப் பாதுகாக்கின்ற, மதிக்கின்ற நாட்டில் வந்திருக்கின்ற நாங்கள் கொண்டாடினோம். அது தவறு எனில் இது எவ்வகையில் சரியானதாக இருக்கமுடியும்? ஆகவே இனவாதம் என்பது தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் பொதுவான விடையம். இடதுசாரி என்று சொல்கிற நாங்கள். இனவாதம் என்ற உணர்வுக்கோ அந்த மனநிலைக்கோ எங்களை உள்ளாக்காமல் இருந்தபடியால்தான் யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்களது சம உரிமைக்கான போராட்டத்தில் எதிர்பார்க்காதளவு வெற்றியை அடைந்துள்ளோம். காரணம் எங்களது போராட்டத்திலே நம்மிடம் இனவாதம் இருக்கவில்லை. சிங்களமக்கள் நிறையளவு உதவி செய்தார்கள். முஸ்லீம் மக்கள் உதவி செய்தார்கள். அதேபோல் நல்லெண்ணம் படைத்த, தெளிந்த சிந்தனையுள்ள, இடதுசாரி மனப்பாங்குள்ள உயர்சாதித் தமிழர்களும் தங்களுடைய உயிரைக் கொடுக்கிற அளவுக்கு முன்வந்தார்கள். இவற்றையெல்லாம் நாம் பெருமையாகப் பேசவேண்டும். முடிவாக புலம்பெயர்ந்து வந்திருக்கிற தமிழர்கள் பற்றிப் பேசவேண்டும்.
இங்கு சகலவிதமான வசதிகளுடன் வாழ்ந்து கொண்டு அழிவையே நோக்காக்கொண்ட அழிந்துபோகின்ற இயக்கங்களுக்கு தாராளமாக அள்ளிக் கொடுத்து அங்கே நடக்கின்ற போருக்கு வித்திட்டவர்கள், அதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம் என்று நம்பியவர்கள் இந்தப் புலம் பெயர்ந்தவர்கள். எங்காவது யாராவது நூறுபேர் சென்று உண்மையான சமாதானம் வேண்டும், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உண்மையாக அமைதி வேண்டும், தமிழர்களுக்கு மாத்திரமல்ல ஏழைச் சிங்களவர்களுக்கு, மலையக மக்களுக்கு உண்மையான அமைதி வேண்டும் என்று சொன்ன ஏதாவது ஒரு இயக்கம் இங்கிருந்திருக்கிறதா? இல்லை. தற்போது இங்கிருந்து அரசு அமைப்பது பற்றியும் தேசியக் கொடி எது என்றும் விவாதித்துக் கொண்டிருப்பதை விட்டு புலம்பெயர் சமூகம் இனிச் செய்யவேண்டியது இலங்கையில் இருக்கின்ற அனைத்து சமூகங்களும் இன ஐக்கியத்துடன் ஒன்றுபட்டு ஒரு புரிந்துணர்வுடன் வாழ வழிசெய்கின்ற ஒரு அரசை அங்கு ஏற்படுத்துவதுதான் சரியாக இருக்கமுடியும் என்று சொல்லி எனது பேச்சை முடித்துக் கொள்கின்றேன்.