– கற்சுறா-

1. தோழர் சிவம் நினைவும் தேடகம் 20 ஆண்டு சிறப்பு மலரும்.

கனடாவில் தேடகம் அமைப்பினரால் தோழர் சிவம் அவர்களது நினைவும் தேடல் நூல் வெளியீடும் ஒக்ரோபர் 2ம் திகதி நடாத்தப்பட்டது. நிகழ்வில் இலங்கையில் இருந்து மார்க்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளளர் தோழர் சி.கா.செந்தில்வேல் அவர்கள் கலந்துகொண்டு நினைவுப் பேருரை ஆற்றினார்.




நிகழ்வின் தலைமையுரை ஆற்றிய ப.அ. ஜயகரன் அவர்கள் தேடகத்தின் கடந்தகால எதிர்கால நடைமுறை அரசியற் செயற்பாடுகள் குறித்து உரையாற்றினார். குறிப்பாக ஈழத்தில் நடைபெற்ற இறுதியுத்தகாலத்தில் தேடகம்  மேற்கொண்ட செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்தார். கனடாவில் விடுதலைப்புலிகள் தடைசெய்யப்பட்டதற்கு தேடகம் எதிர்ப்புத் தெரிவித்து கண்டன அறிக்கை வெளியிட்டதும், ஈழயுத்தத்தில் இந்தியத் தலையீடு குறித்து இந்தியதூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டதும் ஏன் என்பதற்கான காரணங்களை முன்வைத்தார்.

தொடர்ந்து காலம் செல்வம் அவர்களும் தோழர் மாற்கு அவர்களும் சிவம் அவர்களது நினைவு குறித்தும் தேடகம் செய்த பங்களிப்புக்கள் குறித்தும் பேசினார்கள். அத்துடன்;  சென்றவருடம்  ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டபோது சிவம் அண்ணை அவர்களது பங்களிப்பு,  அர்ப்பணிப்பு  குறித்து சில சம்பவங்களை சொல்லி உரையாற்றினார்கள். சிவம் அவர்கள் தனது உடல்நிலை குறித்து கொஞ்சமும் கவலை கொள்ளாது அனைத்திலும் முன்னுக்கு நிற்பவர் என்பது அனைவருக்கும் தெரியும். கனடாவில் நடைபெற்ற அநேக பொதுவிடையங்களில் தன்னை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்துபவர். இலக்கிய நிகழ்வாக இருந்தாலும் சரி நாடக நிகழ்வாக இருந்தாலும் சரி அனைத்திற்கும் தோள் கொடுப்பவர். கனடாவில் தோழர் டானியல் நினைவுமலர் வெளியிட்டதில் சிவம் அவர்களது பங்களிப்பு நிறையவே இருந்தது. இதுபோன்ற அவரது அக்கறை பற்றி பேசியவர்கள் அனைவரும் நினைவு கூர்ந்தார்கள்.

தொடர்ந்து தேடல் நூல் வெளியிடப்பட்டது. நூலை சி.கா. செந்திவேல் வெளியிட சிவம் அவர்களது துணைவியார் சாந்தி அவர்கள் பெற்றுக் கொண்டார்.

இடைவேளையின் பின் தோழர் சீவரத்தினம் அவர்கள் சிவம் பற்றியும் செந்திவேல் பற்றியும் அறிமுக உரை நிகழ்த்தியபின்  மார்கஸிய லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்தில்வேல் அவர்கள்  நினைவுப் பேருரையாற்றினார். தோழர் சிவம் அவர்களது இடதுசாரியச் செயற்பாடுகளும் மனிதஉரிமைச் செயற்பாடுகளும் குறித்து சம்பவங்களுடன் தெரிவித்தார்.

பின் இலங்கைத் தமிழர்களது வாழ்வும் அவர்களது எதிர்காலம் என்ற தலைப்பில்  நீண்ட உரை ஒன்றை நிகழ்த்தினார். அந்த உரை  ஏறத்தாழ இரண்டு மணிநேர உரை. இலங்கையில் இனமுரண்பாடு, வர்க்க முரண்பாடு ஈழத்தின் சாதி அமைப்பு, சாதிப் போராட்டங்கள், ஈழவிடுதலை யுத்தம் என்று கடந்தகால நிகழ்கால சம்பவங்களுடன் விபரித்தார். சென்றவருடம் நடைபெற்ற ஈழத்தின் இறுதி யுத்தகாலம் எவ்வளவு கொடுமையானது என்று பல உதாரணங்கள் கொண்டு உரையாற்றினார். இலங்கை அரசும் அதற்கும் மேலால் விடுதலைப் புலிகளும் எவ்வாறு மக்கள் மீதான வன்முறையை நிகழ்த்தினார்கள் என்பதை நேரடியாக வன்னிமக்களுடன் உரையாடிப் பெற்றுக் கொண்ட தகவல்களைத் தெரிவித்து விளக்கமளித்தார்.

யுத்தம் முடிந்த கையோடு தமிழ் மக்களுக்குரிய பிரச்சனை முடிந்துவிட்டது. ஒரே நாடு ஒரே மக்கள் நாம் எல்லோரும் இலங்கையர்கள் என்று இலங்கை அரசு சொல்லிக் கொள்வது ஒரு ஏமாற்றுவேலை என்றார். இத்தனை அழிவுகளுக்குப்பிறகும்  இத்தனை இழப்புக்களுக்குப் பிறகும் அந்த மக்கள் கடந்த தேர்தல்களில் வாக்களிப்பினை முடிந்தளவு தவிர்த்ததன் மூலம் தமது எதிர்ப்புணர்வினை மௌனமாகத் தெரிவித்தார்கள். சூழல் காரணமாக அப்படித்தான் தெரிவிக்கமுடியும் என்றார். கடந்த மூன்று தேர்தல்களிலும் மக்கள் 20வீதம் கூட வாக்களிக்கவில்லை. ஏன்வாக்களிக்கவில்லை எனபதைக் கூட ஆராய அவர்கள் தயாரில்லை. அதைவிடவெறும் ஒன்பது வீதமான வாக்குகளைப் பெற்று 15 தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் பாராளுமன்றம் சென்றார்கள். அவர்களையும் மக்கள் புறக்கணித்ததார்கள். ஆனால் தாம்தான் தமிழ் மக்களது ஏகபிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு பாராளுமன்றம் சென்றார்கள். ராஜபக்ஸ கூட சொல்லாத வார்த்தை அது. ஆனால் நமது தமிழ்த் தலைவர்கள் இன்று சொல்லிக் கொள்கிறார்கள்.  ஒருமுறை சொல்லித் தோல்விகண்ட சொல் அது. இப்போது திரும்ப இவர்கள் தூக்கிக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

நமது தோழர்கள் சிலர் வன்னிக்குச் சென்றோம். கண்கொண்டு பார்க்க முடியாத கோலத்தில் வன்னி இருந்தது. அங்கிருந்த பலருடன் உரையாடினோம். இது இங்குள்ள பலரால் உள்வாங்கிக் கொள்ள முடியாது.  இலங்கை இராணுவம் செய்த கொடுமைகளைச் சொன்னவர்கள் தம்மைப் பலாத்காரமாக புதுமாத்தளன் வரையிலும் இழுத்துக்கொண்டு போனவர்கள் செய்த கொடுமையையும் அவர்கள் சொன்னார்கள். சுட்டிருக்கிறார்கள். பிள்ளைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு போயிருக்கிறார்கள். பிள்ளைகளைப்பிடித்துக் கொண்டு போனபோது வாகனத்தின் முன் படுத்துக்கிடந்து தடுத்த தந்தையின் தலைக்கு மேலால் வாகனத்தை ஏற்றிக் கொன்றிருக்கிறார்கள் என்று சொன்னார்.
இவ்வாறு தமது மக்களையே கொன்றொழித்த விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு விடுதலை இயக்கம் என்று எப்படிச்சொல்வது என்று கேள்வி கேட்டார். இப்படி வன்னி மக்களிடம் தான் சென்று கேட்ட அனுபவங்களைப் பட்டியலிட்ட பொழுது புலம் பெயர் சூழலில் விடுதலைப்புலிக்கொடிகளுடன் தெருவில் இறங்கி போராட்டம் நடாத்தியவர்கள் பலர் வெட்கப்பட்டுத்தான் போனார்கள்.
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் சாதியத்தின் கொடுமை பற்றி விளக்கமளித்தபோது 1995ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தை விட்டு மக்கள் வெளியேறியபோது இரண்டு பிரிவினராகவே வேளியேறினோம். ஒன்று உயர்த்தப்பட்ட சாதி மற்றது தாழ்த்தப்பட்ட சாதி என்பதைக் கூறி, நாவற்குழி பாலத்தில் ஒன்றாகிய தமிழ் மக்கள் பாலம் கழிந்து இரண்டு பிரிவினராகவே சென்றதாகவும் சொன்னார். தமிழ்த் தேசியத்தின் பொய் முகம் கிழிந்து போகும் இடம் இதுதான். சாதிரீதியாக  மதரீதியாக பிரதேசரீதியாக பிளவுபட்டுள்ள தமிழினத்தை தமிழீழத்திற்குள் ஒன்று சேர்க்க முடியும் என்ற கட்டுக்கதை இன்றுவரை பொய்த்துப் போயுள்ளது. இறுதி யுத்தத்திற்குள் இடம் பெயர்ந்து போயிருந்த வவுனியா முகாம்களினுள் கூட தமிழ் மக்களிடத்தில் மிக மோசமான சாதி வெறி தாண்டவமாடியதை அனைவரும் அறிவர். இலங்கை அரசு எப்படி இலங்கை ஒரு நாடு. ஒரே மக்கள் என்று சொல்வது பச்சைப் பொய்யோ, அதைவிடப் பொய்யானது நாம் எல்லோரும் தமிழ் மக்கள். நாம் ஒரு இனம் என்று சொல்வது.

கூட்டம் ரதன் அவர்களது நன்றி உரையுடன் முடடிவுற்றது.

2. தேடகம் – அறிக்கையும் அதன் அரசியலும்.



தேடகம் அமைப்பினரால் வெளியிடப்பட்ட தேடல் இதழில் எழுதப்பட்டிருக்கும் (பக்கம் 88) அறிக்கை குறித்து பேசவேண்டியுள்ளது. 2009ம் ஆண்டு இலங்கையில் யுத்தம் கோரமான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த தருணத்தில் தேடகம் அமைப்பினர் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்கள். 15.02.2009 திகதியிட்ட அந்த அறிக்கை குறித்தும் தேடகத்தினரது கோரிக்கை குறித்தும் எனது எதிர்வினையை அப்போதே தெரிவித்திருந்தேன். சென்ற வருட அறிக்கைக்கும் தற்போதைய அறிக்கைக்கும் அரசியலில் பெரிய மாற்றம் இருப்பதாகத் தெரியவில்லை எனினும் தமது அரசியல் எதுவென்ற குழப்பம் இரண்டு அறிக்கையிலும் அப்பட்டமாகத் தெரிகிறது.

சென்றவருட அறிக்கையில் கனடிய அரசே விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கு என்று கேட்டிருந்த தேடகத்தினர், இலங்கை அரசே தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையை நிறுத்து! சொந்த மண்ணிலேயே அகதி முகாமுக்குள் மக்களை அடைப்பதை நிறுத்து! இந்திய அரசே புலிகள் மீதான யுத்தம் தமிழ் மக்கள் மீதான யுத்தமே. இலங்கை அரசுக்கான இராணுவ உதவிகளை நிறுத்து என்று எழுதி கனடா இந்தியத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.  விடுதலைப்புலிகளின் தடையை நீக்கு! என்று அறிக்கையிடுவதற்கு இவர்களுக்கு இருந்த அரசியல் நிலைப்பாடு எதுவென்று யோசிக்க வேண்டும். புலிகள் அமைப்பு ஒரு விடுதலை இயக்கச் செயற்பாடுடையது. ஈழத்தமிழ் மக்களுக்கான விடுதலையை அவர்கள் உருவாக்குவார்கள். என்று  அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். அதன்மூலம் கனடாவில் விடுதலைப்புலிகளை தடையில்லாமல் செயற்படவைப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கான விடுதலையை உரிமைகளைப் பெற்றுத்தர முடியும் என்று அவர்கள் எண்ணியிருக்க வேண்டும்.

கனடாவிலும் சரி எந்தப் புலம் பெயர் நாடுகளிலும் சரி குறைந்தளவு ஜனநாயகப் பண்பைக் கூட ஏற்றுக் கொள்வோ நடைமுறைப்படுத்தவோ விரும்பாதவர்கள் அவர்கள். சர்வதேச ரீதியாக சபாலிங்கம் கொலை தொடக்கம் தேடகம் எரிப்புவரை நடாத்தியவர்கள் அவர்கள். அவர்களது தடையை நீக்கு என்று தேடகம் கேட்பது ஆபத்தானது.
அமெரிக்கா கனடா ஐரோப்பா போன்ற மேற்குலக நாடுகள் தமது நாடுகளில் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகளை இயங்கவிடுவதும் தடைசெய்வதும் அந்த நாடுகளின் நலன்சார்ந்த விடையம். தற்போது புலிகளின் தடை என்பதுவும் அவர்கள் நலன் சார்ந்த விடையமே. இதில் தேடகம் அமைப்பினர் கனடாவில் புலிகளின் தடையை நீக்கு எனக் கேட்பது வேடிக்கையானது என அப்போதே நான் மறுத்து எழுதியிருந்தேன். (பார்க்க தூ..)

அடுத்து தமிழர் தேசியவிடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்க நினைக்கும் இலங்கை இந்திய அரசுகளின் நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல்  ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபடும் இந்தியத் தமிழர்களுடனும் புலம்பெயர் தமிழர்களுடனும் கைகோர்க்கிறோம் என்றும் அந்த அறிக்கையில் எழுதினார்கள். விடுதலைப்புலிகளது யுத்த வெறியையும் வன்முறை அரசியலையும் காவிநின்ற செயற்பாட்டை தமிழர்களது தேசியவிடுதலைப் போராட்டம் என்று சொல்வது முற்றிலும் தவறானது. அதிலும் அந்தப் போராட்டத்திற்காகவே புலம்பெயர் தமிழர்களும் சீமான் வழி இந்தியத் தமிழர்களும் தெருவில் இறங்கினார்கள் என்பது அதைவிடப் பொய்யானது. இதனை தேடகம் அமைப்பினரால் விளங்கிக் கொள்ளமுடியாமல் போனது என்பது அப்போது பெருங்கோபத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
இலங்கை அரசு மேற்கொள்ளும் புலிகளின் அழிப்பு  என்பது தமிழ் மக்கள் மீதான அழிப்பல்ல. இந்த யுத்தத்தை விரும்பித் தொடங்கியவர்கள் புலிகளே என்றும் மக்களை மாட்டுமந்தைகள் சாய்ப்பது போல் தம்முடன் சாய்த்துக் கொண்டு போகிறவர்கள் புலிகள் தான் என்றும் இந்த மக்களை இலங்கை அரசு அழிப்பதை விட புலிகள் தான் தொடர்ந்தும் கோரமாக அழித்து வருகிறார்கள் என்றும் யுத்தம் நடந்த காலங்களில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தவர்கள் நாங்கள். தமிழ்த் தேசியவாதிகளும் புலிகளின் உத்தியோகத்தர்களும் சொல்வது போல் தமிழ் மக்களும் புலிகளும் ஒன்றல்ல. புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என்று மிகவும் இறுக்கமாகச் சொல்லியிருந்தோம். வன்னியில் நடந்த சண்டையில் மக்களைப் புலிகள் கொத்துக் கொத்தாகச் சுட்டுத் தள்ளுகிறார்கள், யுத்தத்திற்குள்ளும் குழந்தைகளைக் கடத்துகிறார்கள் என்றும் நாம் சொல்லிக்கொண்டிருந்ததை வெறும் புலி எதிர்ப்புக் கோசமாக தேடகம் உட்பட பலர் தவிர்த்துவிட்டு செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். இன்று இவர்கள் எல்லோருக்கும் சி.கா. செந்தில்வேல் அவர்கள் இலங்கையிலிருந்து வந்து சொல்ல வேண்டியிருக்கிறது.

இன்று ஒருவருடகாலத்தின் பின்னாலும் விடுதலைப்புலிகளின் தோல்வி வெறுமனே புலிகளின் தோல்வியாக மட்டும் கருத முடியாது இத்தோல்வி ஒட்டுமொத்த தமிழர்களின் தோல்வியே என்று தேடலில்(தேடல் 16 பக்கம் 88) எழுதியுள்ளார்கள். புலிகள் செய்த அத்தனை  இன அழிப்புக்களையும் பாசிசச் செயற்பாடுகளையும் கொலை வெறியையும் மிக நூதனமாக  தமிழ் மக்களின் தலையில் கட்டிவிடும் செயற்பாடு இது. தேசியவிடுதலைக்கான தலைமையைக் கைப்பற்றுவதற்கான போட்டியில் ஆயுதமுறையில் வெற்றிபெற்று பெரும்பான்மைத் தமழர்களின் பிரதிநிதிகளாகினார்கள் விடுதலைப்புலிகள் என்று புலிகளின் சகோதரக் கொலைக்கு மென்மையான சாயம் பூசியது தேடகத்தினரது சென்றவருட அறிக்கை. இந்தவருடம் புலிகளது இராணுவ ஒடுக்குமுறைக்கு தம்மைத் தக்கவைக்க முடியாத அமைப்புக்கள் இலங்கை அரசிடம் தஞ்சமடைந்ததார்கள் என்று அதே கொலை வெறியாட்டத்திற்கு கொஞ்சம் வீர சாயம் பூசியிருக்கிறார்கள்.
விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட நாடுகடந்த அரசுக்குழு புலிகளின் கடந்தகாலத் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று கேட்பதுடன் பலவந்தமான முஸ்லீம் மக்களது வெளியேற்றத்திற்கும்  முஸ்லீம் மக்களது படுகொலைக்கும் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் என்று கேட்கிறது. இந்த நாடு கடந்த அரசு என்பதை எப்படி விடுதலைப்புலிகளது தொடர்ச்சி என்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. விடுதலைப்புலிகளது இரணுவமும் அதன் தலைமையும் அழிக்கப்பட்டு அதன் வலைப்பின்னல் செயற்பாடுகள் அனைத்தும் செயலிழந்த நிலையில் உலகெங்கும் இயங்கிய விடுதலைப்புலிகளது பினாமிகள் தமது பணத்தைத் தக்கவைக்க நாடுகடந்த அரசு என்றும்  வட்டுக் கோட்டைத் தீர்மானம் என்றும் மக்களவை என்றும் பிளவுபட்டுப் போயிருக்க நாடுகடந்த அரசு மட்டும் புலிகளின் தொடர்ச்சி என்று சொல்வதன் நோக்கம் என்ன? இதற்குள் தமிழ்த் தேசியத்தின் தூண்களாக தம்மைச் சொல்லிக் கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முஸ்லீம்கள் மீதான வன்முறைக்கு 20வருடம் கழித்து மன்னிப்புக்கோரியுள்ள வேடிக்கையும் நடந்து விட்டது. இப்போ யார் விடுதலைப் புலிகளது தொடர்ச்சி?

வெறும் மன்னிப்புக் கேட்டுவிடுவதன் மூலம் சகோதரப் படுகொலைகளிலும், கந்தன் கருணைப் படுகொலையிலும், காத்தான்குடிப் படுகொலையிலும், அறந்தலாவையிலும், வெருகல் ஆற்றிலும், முள்ளிவாய்க்காலிலும் கொல்லப்பட்ட அத்தனை இளைஞர்கள் வாழ்வும் வலியும் மறக்கப்பட்டுவிடுமா என்ன? ஒரு இனத்தின்  அழிவை முன்னின்று நடாத்தியவர்கள் விடுதலைப்புலிகள். தனது இனத்தை தானே அழித்த இனம் நம்முடையது. இந்த அழிவை தூபம் போட்டு வளர்த்தவர்கள் தமிழ்ஈழம் என்றும் தேசிய விடுதலை என்றும் சொல்லி அத்தனை அழிவுகளுக்கும் காரணம் கற்பித்துக் கொண்டிருந்தவர்களே. இவர்கள் எந்த சபையில் பாவமன்னிப்புக் கேட்டாலும் எக்காலத்திலும் பாவம் தீரப்போவதில்லை.