Wednesday 2 January 2013



அட்டைப்படக் கதையின் தொடக்கம் 
அல்லது 
குட்டி திரைப்பட விமர்சனம்.

-கற்சுறா-

(2006ம் வருடம் மற்றது இதழ் 2இல் வெளிவந்தது)





கதை,சொல்லுறது மாதிரி எப்பவும் கதை இருக்கிறேல்ல.  கதைக்கு பல கோணங்களும் பன்முகங்களும் இருக்கின்றது.கதையை யாராக இருந்து வாசிக்கிறோம் என்பதுதான் பெரிய சிக்கலுக்குரியது. அதைவிடச் சிக்கல் யாராக இருந்து சொல்கிறோம் என்பது.

எப்பவும் திரு.முத்துலிங்கம் அவர்கள் கதை சொல்லும் தளத்திலிருந்து அவரின் கதாபாத்திரம் மெல்ல அவரின் காலையே வாரி விடுவது போல் கதைசொல்வது மிகச் சிக்கலானது. அதுமாதிரித்தான் குட்டி திரைப்படமும். குட்டி திரைப்படத்தை கலைப்படம் என்றும் சிறந்த திரைக்கதை என்றும் தமிழ்சிற்றிதழ்கள் புகழாரம் சூட்டின. எல்லோரும் கதை சொல்லியாக இருந்து கதையைப்பார்த்தார்களே ஒழிய கதாபாத்திரத்தில் இருந்து கதையைப்பார்க்கத் தவறின. கதாபாத்திரத்திலிருந்து கதையைப் பார்த்தால்தான் கதை பிசகாமல் வரும்.

இப்ப கதைக்குப் பலகோணங்கள் இருக்கின்றன என்ற ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு  தப்பித்து விடலாம் என்று நினைப்பதை ஒருகணம் நிறுத்தி...

அப்பு ஏன் புல்லைப்பிடுங்கினார். ஏன் மாட்டைத் தடவினார்? மாட்டுப்பட்டிக்கும் தன்ர கட்டிலுக்கும் மாறி மாறி ஏன் நடந்தார் என்பதை யோசிக்க வேணும். அப்புவுக்கு மனசிருக்கேல்ல, மனசில ஈரமிருக்கேல்ல. என்டு விடியக்காலத்தாலை எழும்பின கையோட ஆர் குற்றஞ்சாட்டினாலும் அப்புவுக்கு மனசில ஒரு தைரியம் இருந்து கொண்டே இருந்தது. அப்புவினர மனசை மாடுகளாவது தெரிஞ்சு வைத்திருந்தது. ஆர் ஆற்ற மசிரைப் புடுங்கினாலும் யார் யருடைய தாலியை அறுத்தாலும் அப்பு அசையிறமாதிரித் தெரியேல்ல. இது மாடுகளுக்கும் தெரியும். மாடுகளுக்கு அடிமடியில கையைவிட்டுத் தடவவேணும் அதுவும் அப்பு தடவவேணும். மாடுகளுக்கு நாணம் தலைக்கேற அப்புவைச் சுத்திச்சுத்தி நிக்கும். மாடு மாடுதானே. 



அப்புவுக்கு ஊரிப்பட்ட பொட்டையள். அதுகள்ள ஒண்டு போய், வா எண்டாலும் வராது. மனப்படாதுகள் மாடுகள். மாடு கசியோணும். மனசை உருக்கி ஊனா உழைக்கோணும். அதில்லாம வாடி படடி எண்டா படுக்குதே. மாடுகளல்லே.  அப்பு மாடுகள கிடத்தி தடவி அதோடயே சீவியம் போனகாலத்தில இந்தியனாமி கொண்டுவந்த கோமாரி நோய் ஒவ்வொரு மாட்டின்ர காலையும் கழற்றிக்கொண்டு போனது. அப்பு கவிண்டிற்றார். கிடங்குகிண்டி உப்புத்தண்ணி கரைச்சூத்தி மாடுகளை நாள்பூரா நிக்க விட்டாலும் அழுகல் நோய் காலைக் கழற்றிக் கொண்டு போனது போனதுதான். கோமாரி கொண்டு போனது போக அப்பு வுக்கு மிஞ்சியது ஒன்பது பெட்டையளும் ஒரு குழுவனும் கொஞ்ச எருத்தனும்.

இலங்கை அரசியல் மாற்றம் அப்புவின்ர தனிப்பட்ட வாழ்வையும்  தாக்கியருப்பதாக  கவலைப்பட்டுக் கொண்டிருந்ததார். அப்பு ஒரு ஊடு பார்த்து தன்ர கஸ்டத்தைக் குறைக்க ஒன்பது பெட்டையள்ள ஒருத்தியைப் புடிச்சு யாழ்ப்பாணத்துக்கு ஒரு வீடு பராமரிப்பாளராக- இந்த வார்த்தையை உபயோகிக்க விரும்பிய வர்கள் இப்படியே உபயோகிக்கவும் மற்றவர்கள் வீட்டு வேலைக்காரி என்று உபயோகிக்கலாம் - தன்ர சிநேகிதன் மூலம் அனுப்பிவைச்சார். அப்பு யோசிச்சதெல்லாம் ஒருத்தியின்ர ஒருநேரச்சாப்பாடு பற்றித்தான். தன்னோட இருந்து சாப்பாட்டுக்கு அவதிப்படுறதைப் பாக்குறதுக்கு மனசு கேக்கேல்ல வளர்ற பிள்ளையள். கல்லைத் திண்டாலும் செமிக்கிற வயசு. சாப்பாடு முக்கியம் தானே அப்பு யோசித்தார் செய்தார்.

தயவு செய்து குட்டி படத்தை நீங்கள் இப்போது பார்கத் தொடங்க வேண்டும். அப்புவுக்கு எல்லாம் குமாரிகள். ஜெயக்குமாரி. வசந்தகுமாரி, சாந்தகுமாரி, ராஜகுமாரி, விஜயகுமாரி, தேவகுமாரி, ரத்தினகுமாரி என்று ஊரிப்பட்ட குமாரிகள். இதில ஒரு குமாரியான ராஜகுமாரியைப் பிடித்து ஒருமாதிரி யாழ்ப்பாணத்திற்குப் பெட்டி கட்டிவிட்டார் அப்பு. அப்பு மனசுக்குச் சரியென்று படுவதைச் செய்ய ஒரு கணமும் யோசிப்பதில்லை.



இப்ப ராஜகுமாரி யாழ்ப்பாணத்தில் இறங்குறாள்.  இடம்வலம் தெரியாமல் முழிக்க கூட்டிவந்த நண்பர் தேடிப்பிடித்து உரியவரிடம் ஒப்படைக்கிறார். வந்தவர் நல்ல பவ்வியமாக குனிஞ்சு ராஜகுமாரி யின் கையைப் பிடித்து பஸ்ராண்டைக் கடந்து கேகேஎஸ் பஸ் எடுக்கப் போறார். ராஜகுமாரி திக்குமுக்காடிப் போனாள். என்ன நெரிசல். புதூர் நாகதம்பிரான் கோயில்லையோ அல்லது காட்டுவைரவர் கோயில்லையோ திருவிழா நடக்கிற நேரம் கூட அவள் இப்பிடியொரு நெரிசலைப் பார்க்கவில்லை. காலை எடுத்து வைத்து பெருவீதியைக்கடக்கிறபோது பதறித்தான் போனாள்.

பஸ் எடுக்கிறதுக்கு கொஞ்சம் நடக்க வேணும்.முந்தி பக்கத்தில இருந்து எடுக்கிற பஸ்சை இந்தியனாமிக்காரங்கள் தங்கட வசதிக்கு ஸ்ரான்லிறோட்டுக்கு மாத்தியிருக்கிறாங்கள். அதில தட்டாதெரு தாவடி மானிப்பாய் என்று கத்திகத்தி கூப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு பஸ்ஸில ஏற்றினார். என்ன பெரிய பஸ். சிரிபியிலேயே ஏறாத ராஜகுமாரிக்கு ஏதோ கனவுலகத்தில் மிதப்பது போலிருந்தது. பெரிய மினிபஸ். யன்னல் கரையோரமாக இருந்த சீற்றை அவளுக்குக் கொடுத்து விட்டு பிள்ளை உன்ர பேரென்னம்மா என்று பேச்சைத் தொடங்குகிறார்.

குட்டியை ரெயில் பிடித்து  பட்டணத்திற்கு கூட்டி வந்தவர் அந்த நல்ல மனசுள்ள குடும்பத் தலைவனிடம் ஒப்படைக்க அவர் தன்ர காரில் ஏற்றிக் கொண்டு என்ன பெயர் என்று பேச்சைத் தொடங்குவது உங்களுக்கு ஞாபகம் வரவேண்டும்.இதில பாட்டெல்லாம் வருமா என்று குட்டி அதிசயப்படுகிறாள். இப்பஞாபகம் வருதா?

அப்புவுக்கு ஒன்பது பொட்டையளும் ஒத்தாசையாய் நிண்டு பார்க்கிற அலுவல்ல பாதிகுறைஞ்சது மாதிரி இருந்தது. கோமாரி வந்து பாதி மாட்டைக் கொண்டு போக வெள்ளையன் வெளிறியன் எண்டு  ஊருக்குள்ள இருக்கிற மாடுதூக்கிகளிட்டை இருந்து மாட்டைக் காப்பாற்ற  மாறி மாறி சென்றி பார்க்க வேண்டியதாய் இருந்தது. ராஜகுமாரி வெளிக்கிட்ட நாள்ள இருந்து வீடு இடிஞ்சு போயிட்டுது. இருட்டு விழுந்தமாதிரி. பொட்டையளுக்கு மாடென்ன மனிசரென்ன எண்டு வந்துட்டுது. சமையலில்லை. சாப்பாடில்லை. இழவு விழுந்த வீடு மாதிரி.  அப்புவை எப்பவும் நச்சரித்துக் கொண்டிருத்துதுகள். காலமை எழும்பினதில இருந்து படுக்கப்போகும் வரையும் அப்புவுக்கு ஏச்சுத்தான்.

செத்துப் போனாலும் இஞ்ச கிடந்து சாகவேண்டியது என்னத்துக்கு அவளைப் புடிச்சு அனுப்பினனீ எண்டு ஒவ்வொரு நாளும் பிரச்சனை. அப்பு தைரியமாய் இருக்கவேண்டிய நேரம். விட்டால் மாட்டுக்கு யாருமில்லை எண்டமாதிரி நிலை வந்துட்டுது.

பஸ் இப்ப சிவன்கோவில் புளியடி தாண்டிப் போகிறது. மெல்ல யன்னலைத் திறந்தாள். என்ர பேர் ராஜகுமாரி. என்று சொல்லிக் கொண்டே வெளியில்  ஓடிக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்கள்  ஆட்டோக்கள் எல்லாத்தையும் ஆசை ஆசையாப் பார்த்துக் கொண்டிருந்தாள். வாத்தியாருக்கு பெரிய நிம்மதி இப்பதான். மனிசிட ஆய்க்கினை தாங்கேலாம இருந்தது. ஒரு வேலைக்கரியைப் பிடிச்சுக் கொண்டு வாங்கோ.. வாங்கோ... எண்டு கத்தித் தொலைத்ததுக்கு ஒரு நிம்மதி.

நான் ஒரு ஸ்கூல் வாத்தியார். எனக்கு 5 பிள்ளைகள். மனிசியும் ஸகூலுக்குப் போறவா. வீட்டைப் பார்க்கோணும். என்ர அம்மாவுக்கும் நீதான்  உதவியாய் இருக்கோணும் என்று சொல்லிக்கொண்டிருந்தார். வெளியாலை பிராக்குப் பார்க்க கூடாது. சீற்றில அமைதியா இரு பிள்ளை. இப்படியெல்லாம் நீ பஸ்ஸில போனதில்லையே?  ராஜகுமாரி தலையை உள்ளுக்குள் இழுத்தாள்.

வாத்தியார் பஸ்ஸை விட்டு இறக்கி வீட்டுக்குக் கூட்டிப் போனார். நடந்து போகேக்கேயே எவ்வளவு கோயில்கள். எவ்வளவு பெரிய கோபுரங்கள். அப்பு கதைகதையாச் சொல்லேக்க கேட்டதெல்லாம் நேரிலே பார்க்கிறாள். .ராஜகுமாரிக்கு மனசு மதாளிக்குது. தான் வைரகோயிலுக்குப் போறதிற்கே எவ்வளவு தூரம் நடக்கோணும். அதுவும் சுடுமணலுக்குள்ளால தத்தித் தத்தி நடக்க என்ன வேதனை. இஞ்ச ஒவ்வொரு வீட்டுக்கு முன்னாலையும் ஒவ்வொரு பெரிய கோயில். ஆளுக்கொரு கோயிலும் கோபுரமும். கையில் வைச்சிக்கிற நாலு உடுப்பைச் சுத்தியுள்ள உரபாக்கை  நெஞ்சில ஒத்தி வைத்துக் கொண்டு வாத்தியாரோட ஓடி ஓடி நடக்கிறாள்.

ராஜகுமாரியை வீட்டுக்குள்  கூட்டிக் கொண்டு போய் தன்னுடைய மனைவியிடம் ஒப்படைக்கிறார் வாத்தியார். தன்னு டைய ஐந்து பிள்ளைகளையும் கூப்பிட்டு முன்னால் நிறுத்தி இஞ்சபாருங்கோ பிள்ளையள் இப்ப எங்கட வீட்டுக்கு ஒரு புது ஆள் வந்திருக்கிறா. இவாட பெயர் ராஜகுமாரி. உங்களுடைய தங்கையாக நினைத்து நீங்கள் பழக வேண்டும். இப்ப எங்களுக்கு ஒரு சிக்கல் இருக்கு எங்களிட்டையும் ஒரு ராஜு இருக்கிறா. நாங்கள் கொன்பியூசாகமா இருக்கிறதெண்டா யாருடையதாவது பெயரை மாத்த வேண்டும். அதனால ராஜகுமாரிக்கு நாங்கள் ஒரு இலகுவான பெயர் வைப்பம். என்ன பெயர் வைப்பது என்று நீங்கள் சொல்லுங்கோ. எண்டு வாத்தியார்  கேட்க ஆளாளுக்கு பப்பி, றொசின்,ஜிம்மி, பவளம் என்று சொல்லியபோது வாத்தியார்  பவளம் நல்ல தமிழ்ப் பெயர் என்று சொல்லி பிரையாசப்பட்டு ராஜகுமாரிக்குப் பவளம் என்று பெயரிட்டார்.

இப்போது மீண்டும் நீங்கள் குட்டி திரைப்படத்திற்கு வரவேண்டும். கிராமத்தில் இருந்து பட்டணம் வந்தவள் குட்டியா கியதை நீங்கள் கவனிக்க வேண்டும். பவளம் இந்த இளம் வயதில் தம்மிடம் வந்துள்ளது தாம் செய்த பாக்கியம் என்று மனதுக்குள் நினைத்த வாத்தியார் தைப்பொங்கலுக்கு தன்னுடைய பிள்ளைகளுக்கு உடுப்பு எடுத்தபோது மறக்காமல் பவளக் கொடிக்கும் எடுத்தார்.

 பவளக் கொடியைப் பொறுத்தளவில் குசுனிக்குள் படுத்தெழும்பினாலும்  நேரம் நேரம் ஏதோ சாப்பாடு கிடைக்கிறது என்று நிம்மதியடைந்தாலும் தன்னுடைய அப்பு மற்றும் அக்காள் மாரை விட்டு வந்ததில் பெருத்த வருத்தம். அப்பு பற்றி அதிகம் யோசித்தாள்.  அப்பு தன்னை வந்து எப்ப பார்ப்பார் என்று கவலை வரத் தொடங்கி விட்டது. வாத்தியரின் பிள்ளைகள் நாயைவிடக் கேவலமாக தன்னை நடத்துவதை எப்படியாவது வாத்தியாரிடம்  சொல்ல வேண்டும் என எண்ணினாலும் சரிவரவில்லை. வாத்தியாரின் மனிசிகூட  எப்பவும் வீட்டுக்குள் வெளியில் பவளக்கொடியை வைத்திருக்கவே விரும்பினாள். வாத்தியார் இல்லாத நேரமெல்லாம் என்ன செய்விக்க வேண்டுமோ அவ்வளவையும் செய்வித்தாள்.  வாத்தியார் வீட்டில் இருக்கிற நேரம் இவை எதுவும் நடப்பதில்லை. ஆனாலும் வாத்தியாருக்கு குட்டியின் போக்கிலிருந்து மெல்ல மெல்லக் கசிந்தது. வாத்தியார் நிறையவே பவளக்கொடி பற்றிக் கவலைப்பட்டார்.  தன்னுடைய பிள்ளைகள் எவ்வளவு சந்தோசமாக வைத்திருக்க வேண்டும் தன்னை நம்பி வந்தது அது. ஏன் இப்படிக் கொடுமைகள் செய்யுதுகள் என்று கவலைப்பட்டார்.   அவர்கள் வாத்தியாரின் கதைகள் பற்றிக் கனக்க யோசிக்கவில்லை. அவர்களுக்கான காரணம் நிறையவே இருந்தது. இந்த அமளிதுமளிக்குள்ளால் பவளம் வளர்ந்து கொண்டிருந்தாள்.

வாத்தியாரின் பிள்ளைகள் விளையாடும் பந்துகள் பக்கத்தி வீட்டிற்குப் போய் விழும் நேரமெல்லாம் அவை அப்படியே கைவிடப்பட்டன. பவளக்கொடிக்குப் புதினம். எவ்வளவு பந்து கைவிட்டாச்சு. எப்பவாவது அங்கிருந்து யாராவது எடுத்துஇங்கால எறிந்தாலொளிய மற்றப்படி அவை தேவையற்ற வையாகியது.  ஏன் அக்காக்கள் அதுகளை எடுக்கக் கூடாது என்று கேட்க அவே மற்றாக்கள். நாங்கள் அதுக்குள்ள போறேல்ல என்று சொன்னதை விளங்காமல் பவளக்கொடி போய்ப் பந்தை எடுத்துக் கொண்டு வந்து விட்டாள். இதை அறிந்த வாத்தியாரின் மனைவி  உடம்பெல்லாம் விறுவிறுக்க பவளகொடியைக் கை நீட்டி அடித்து விட்டாள். எங்கட வீட்டிலயிருந்து இவ்வளவுகாலமும் யாரும் கால்வைக்காத வளவுக்கை நீ வந்து கால்வைத்து எங்கட மானத்தைக் கப்பல் ஏத்துறாய் நாயே... இண்டைக்கு வரட்டும் வாதத்தியார். நான் ஒரு முடிவு எடுக்கிறன் என்று தாண்டவம் ஆடுற அவளைப் பார்க்க  பவளக்கொடிக்கு பயம் வந்துட்டுது.

வாத்தியார் வீட்டுக்கு வந்தவுடனே மனிசி தொடங்கீட்டாள். கொண்டுவந்தியளே ஒண்டை எனக்கு ஒத்தாசையெண்டு. அது செய்த கூத்தைப் பார்த்தியளோ? அடுத்தவீட்டுக்குப் போன பந்தை வேலி பூர்ந்து எடுத்து வந்திருக்கிறாள். எங்கட பரம்பரையில இல்லாத ஒன்று. அவங்கள் என்ன நினைப்பாங்கள் எண்டு அடித்தெண்டைகிழிய கத்துற மனிசியை பர்hத்துச் சிரித்தார். வாத்தியாருக்குப் பெரிய நிம்மதி. மெல்ல மனிசியைக் கூப்பிட்டுச் சொன்னார். எங்கட பிள்ளையள் எதுவும் போனதே இல்லைத்தானே. உதுக்கேன் கிடந்து கத்துறாய். பிடிக்காட்டிச் சொல்லு உப்ப கொண்டுபோய் விட்டுவிடுறன். உனக்கும் பொடியளுக்கும் ஒத்தசையாய் இருக்கட்டுமன் என்று செய்தா இருக்கிற பிரச்சனையை சும்மா கூட்டிக்கொண்டிருக்கிறாய்.  கொஞ்சம் சும்மா இரன்.

இவ்வளவு கதையும் வாசித்துக் கொண்டுவர உங்களுக்கு குட்டி படம் பார்த்தது மாதிரியே இருக்கும் என்று நம்புகிறேன்.

இப்ப நீங்கள் ஒரு கேள்வி கோக்கோணும்.

அப்புவிட்ட இருந்து ராஜகுமாரியாய் யாழ்ப்பாணம் போனது இந்தியனாமிக் காலத்தில. ராஐகுமாரி பவளமாய் மாறியது யாழ்ப்பாணத்தில. அப்ப பவளம் பவளக் கொடியாய் மாறியது எப்ப?

தேசியக் கொடி என்று ஒன்றை யாழ்ப்பணத்தில எல்லோரும் கச்சையாய்க் கட்டியபோது. கச்சை கைமாறி பவளத்தின் மானத்தையும் மறைக்க கட்டாயச்சட்டம் வந்தபோது பவளம் உண்மையில் ஏமாந்துதான் போனாள். ஆருக்குத் தெரியும். பவளம் வாத்தியாரை பாவம் என்று நம்பினாள். தனக்காகக் கதைக்கும் கவலைப்படும் ஒரு ஜீவன் வாத்தியார்தான் என்று நம்பினாள்.

 இந்தக் கட்டத்தில வாத்தியாரை முன்நிறுத்தி நீங்கள் குட்டி திரைப்படம் பற்றிய அப்பட்டமான பம்மாத்தைக் கவனிக்க முடியும். பவளக்கொடி நிம்மதியாக இருக்க வேண்டும். கஸ்டப்படுத்தக் கூடாது என்று நினைக்கும் வாத்தியாரையும் குட்டி திரைப்படத்தில் வரும் ரமேஸ் அர்விந்தினது பாத்திரத்தையும் உற்று நோக்க வேண்டும். குட்டிதிரைப்படத்தில் குட்டிக்கு எதிராக இருக்கின்ற பாட்டியினதும் பேரனினதும் எதிர் வினைகளை நீக்கிவிட்டால் குட்டியின் மீது காட்டப்பட்ட சிக்கல்கள் இல்லாமல் ஒழிந்து விடும். அதனால் குட்டியை தொடர்ச்சியாக வேலைக்கு வைத்திருக்கலாம். அதனால் தமது பிள்ளைகளை தொடர்ச்சியாக பராமரிக்கப்பண்ணலாம். அல்லது பல்கலைக்கழகத்துக் கணேசலிங்கம் போல பாலியல் வல்லுறவும் செய்யலாம்.
குட்டிமாதிரி சிறுவர்களை வேலையில் அமர்த்தக் கூடாது என்று யாரும் சொல்லவரமாட்டார்கள். குட்டி பவளம் மாதிரி பிள்ளைகளை யுத்தத்திற்கே அனுப்பிக் கொல்லும் சமூகத்திற்கு வேலையும் பாலியல் வல்லுறவும் என்ன சின்ன ஜுஜுபி.

 பவளத்திற்கு வீட்டில இருக்கிற கொடுமை தாங்காம ஒரு இரவில  ஒருத்தருக்கும் தெரியாம வீட்டை விட்டு ஓடிவிட்டாள். தப்பியோட முதல் பவளத் திற்கு மிகக் கவலையான விடையம் என்ன வென்றால் பைத்தியமாக சாமி வந்து வெருட்டுவதாக சாபமிடுவதாக கமலஹாசன் றேஞ்சுக்கு இறங்கி நடிக்க வேண்டியிருந் ததுதான்.

குட்டி திரைப்படத்தில ஓடின குட்டி யாரிட்டை மாட்டினாள் என்பது உங்களுக்குத் தெரியும்.. யாழ்ப்பாணத்தில இருந்து தப்பியோடுற ஒரு பிள்ளை யாரிட்ட மாட்டும் என்பதும் உங்டகளுக்குத் தெரியும். இதென்ன சின்ன விடையம்.

பிறகென்ன. வாத்தியார் தன்ர வீடும் மாவீரர் வீடு என்று அடையாளப்படுத்த ரெடியாய் இருக்கிறார். எப்படியாவது தன்ர அப்புவைப் பார்க்க வேணும் என்று பவளம் தியானித்துக் கொண்டிருக்கிறாள்.

சோடாப் போத்தில் நிறைய பிளேன்ரீயைக் கொண்டு வந்து வைத்துவிட்டு

குடியடி வேசை.

டேவிட் அண்ணை ‘புளுத்தூர்’ அடிக்கிறார் இப்ப உன்னட்டதான் வாறார்.

கெதியாய்க் குடியடி...

என்று சொன்னவனை எட்டிக் காலால் உதைத்தாள் பவளம்.

விறாந்தையில் காற்றில் வீசிக் கொண்டிருந்த இருந்த கொடிமரத்தை நோக்கி நடந்து போகிறாள்.

அப்பு ஏன் கட்டிலுக்கும் பட்டிக்கும் மாறிமாறி நடந்தார் என்று யோசிக்கிறீர்களா?

மூன்று நாளுக்கு முதல்  யாழ்ப்பாணத்து செக்கு வியாபரிக்கு விற்ற இரண்டு எருத்தன் இண்டைக்கு அப்புவின்ர பட்டிக்குத் திரும்பி வந்துட்டுது. இரவோடிரவாய் கால்நடையா யாழ்ப்பாணத்தில இருந்து வந்திருக்கு..

அது மாடே  வந்திருக்கு.  தன்ர மகள் இன்னும் ஏன் வரேல்ல எண்டு அப்பு யோசிப்பார் தானே.

பவளக்கொடி தன்னுடைய ஆடைகளையெல் லாம் அவிழ்த்தெறிந்து......... என்று அட்டைப்படத்தில் முடிகிறது கதை.


பவளக்கொடி தன்னுடைய 
ஆடைகளையெல்லாம் அவிழ்த்தெறிந்து விட்டு நிர்வாணமான நிலையில்  அரைக் கம்பத்தில் தொங்கிக் கொண்டிருந்தாள். 
ஏண்டி மூதேசி! சனியனே! 
மானத்தை வேண்டுறாய். மனிசரை நிம்மதியாய் மானத்தோட வாழ விடமாட்டியோடி. 
உடுப்பை உடுத்தடி... உடுத்தடி... உடுத்தடி...
 உன்னைக் கெஞ்சிக் கேட்கிறம் உடுத்தடி. பவளக்கொடி அம்மணநிலையில் மேல மேல ஏறுறாளே ஒழிய ஒரு சொட்டும் கேட்கிறமாதிரித் தெரியேல்ல. அவளுக்கு இந்தக் கெஞ்சலைக் கேட்க சிரிப்பு.
 யாரால மானம் போகுது? 
கந்தன் கருணையிலையும்
 காத்தான் குடியிலையும்  
வெருகல் ஆத்திலயும் போகாத உங்கட மானம் என்ர அம்மணத்திலயா  போறது. 
ஆருக்கு சொல்லுறியள் கதை. 
செத்த பிணம்மாதிரி வாழுற உங்கள விட நான் அம்மணமா இருக்குறதால ஒரு கோதாரியும் வராது. 
போங்கடா.... நீங்களும் உங்கட மானமும். 
இப்ப, பவளக்கொடிக்கு தட்டிற்றுது. 
அல்லது பவளக்கொடியைத் தட்டியாச்சு. 
கதை எப்படியும் முடியலாம்.



வன்னிப் பெருநிலம்.



கற்சுறா

இன்று யுத்த அழிவின் சாட்சியம். ஒரு காலத்தில் அழகிய குளங்களும் அதனைச் சூழ்ந்த குடும்பங்களும் வயல்களும் அருகருகே வனங்களும் விலங்குகளுமென தன்னளவில் ஏறக்குறையத் தன்னிறைவோடு வாழ்ந்த ஒரு நிலம். வறுமைக்கும் ஏழ்மைக்கும் அப்பால் தனக்கான உணவுகளைத் தேடி எடுக்கும் நிலப்பிரதேசம் கொண்ட சூழல். ஆகக் குறைந்தது குளங்களில் மீனையும் காடுகளில் தானியங்களையும் விலங்குகளையும் எடுத்து உணவாக்கிக் கொள்ளக் கூடிய வாழ்நிலையைக் கொண்டிருந்தது.

கல்வியில் மற்றய பிரதேசங்களோடு ஒப்பிடுகையில் பின்தங்கிய வசதிகளையும் சாத்தியங்களையும் கொண்டிருந்தது. தரமான பாடசாலைகள் என்றும் தகுந்த ஆசிரியர்கள் என்றும் கொண்டிருந்த பாடசாலைகளை விரல் விட்டு எண்ணமுடியும். அப்படியான பாடசாலைகளும் வன்னியின் நகர்ப்புறங்களிலேயே அமைந்திருந்தன. வவுனியா  மன்னார் முல்லைத்தீவு கிளிநொச்சி நகரிலேயே இவை இருந்தன. இவற்றிலும் இரண்டேயிரண்டு மட்டும் கல்லூரி அந்தஸ்தைக் கொண்டிருந்தன. மற்றய பிரதேசங்களில் உள்ளவை எல்லாமே மகாவித்தியாலயங்களும் வித்தியாலயங்களும் அ.த.க. பாடசாலைகளுமே. இவையெல்லாம் ஒருபொழுதும் தக்க ஆசிரியர்களைக் கொண்டியங்கியதில்லை. ஆகக் குறைந்தளவு இருக்கக்கூடிய எந்த வசதிகளையும் அவை கொண்டியங்கியதில்லை. இது நான் சொல்வது இலங்கையில் யுத்தம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னைய காலங்கள்.

நான் அறிய அநேகமான பாடசாலைகள் வசதிக்கட்டண ஆசிரியர்களைக் கொண்டே இயங்கிக் கொண்டிருந்தது. அப்போதைய அரசுகளும் வன்னியை  வளமாக்கிவிடவேண்டும் என ஒருபோதும் எண்ணியதில்லை. யுத்தத்திற்கு முன்பே அநேகமான பிரதான பாதைகள் கூட வன்னியில் பலகாலம் திருத்தப்படாமலேயே இருந்தது.

ஆனாலும் வன்னி மெல்ல மெல்ல தன்னை வளப்படுத்திக் கொண்டேவந்தது. கல்வியில் பின்தங்கிய மாவட்டத்திற்கென தரப்படுத்தல் சட்டம்  வந்தபோது பல மாணவர்கள் பல்கலைக் கழகம் செல்லக்கூடிய வாய்ப்பைப் பெற்றார்கள்.(அந்தச் சந்தர்ப்பத்தையும் பரீட்சைக் காலங்களில் மட்டும் வந்து பரீடசை எழுதிய மற்றய பிரதேச மாணவர்கள் வந்து பறித்தெடுத்துப் போனகதை வேறுகதை) அதனால் வேற்று மாகாணங்களில் இறுந்து அனுப்பப்பட்ட ஆசிரியர்களால் கல்வி கற்றுக் கொண்டிருந்த பல பாடசாலைகளுக்கு அந்தக் கிராமங்களிலிருந்தே ஆசிரியர்கள் உருவானார்கள். வன்னி மெல்ல வளம் பெற்றுக் கொண்டுவந்தது.

 இலக்ஸபானா திட்டத்தின் மூலம் இருளிலிருந்த பல வன்னிக் கிராமங்கள் மின்சாரத்தைப் பெற்றன. புத்துவெட்டுவானிலும் துணுக்காயிலும் பொருத்தப்பட்ட தெலைத்தொடர்புக் கோபுரங்கள் அரசின் தேவைக்கு தயார் படுத்தப்பட்டது எனினும் அவற்றின் பின்பே பலகிராமங்கள் மின்சாரத்தைப் பெற்றன. போக்கவரத்தேயற்ற பலபாதைகள் போக்குவரத்துக்குரியதாக மாற்றப்பட்டது. ஆனால் இவையெல்லாம் இரண்டு வருடங்கள் கூட நீடிக்கவில்லை. யுத்தம் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றியது.

ஐந்து மிகப்பெரிய இராணுவமுகாம்களுக்கிடையிலும் ஐந்து மிகப்பெரிய இயக்கங்களுக்கு மத்தியிலும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் வன்னி மக்கள். மின்சாரம் நிறுத்தப்பட்டது. புகையிரதம் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டது. அப்போதுதான் ஆரம்பிக்கப்பட்ட பஸ் போக்குவரத்துக்கள் கூட நிறுத்தப்பட்டன.


பாடசாலைகள் பல கைவிடப்பட்டு குரங்குகள் வாழும் கொட்டில்களாகியது.  மாணவர்களற்றுப்போன பாடசாலைகளின் விளையாட்டு மைதானங்களில் அதன் ஆசிரியர்கள்; உழுந்து விதைத்து எடுத்துச் சென்றததைப் பலபாடசாலைகளில் கண்டிருக்கிறேன். விறகு ஏற்றவும் உழுந்து கவுப்பி விதைக்கவும் வன்னிக்கு வந்துபோன  ஆசியர்கள் பலரை எனக்குத் தெரியும். வளம் கொண்ட வன்னிப் பெருநிலம் தன்னை மெல்ல அழித்துக் கொண்டிருந்தது.

இன்று யுத்தம் தின்று தீர்த்துவிட்டு வெறும் சக்கையைப் போட்டுவிட்டுப் போய்விட்டிருக்கிறது. உயிர்கள் மட்டுமல்ல மூன்று தலைமுறையினை அழித்துவிட்டிருக்கிறது யுத்தம். எனது நண்பன் சொன்னான், மச்சான் ஒருகலியாணவீட்டிலோ அல்லது சாமத்திய வீட்டிலோ அதை நடாத்தும் -அங்கும் இங்கும் ஓடித்திரியும் வழமையான இளைஞர் பட்டாளத்தைப் பார்க்கமுடியவில்லை என்று. 15 வயதிற்கும் 30வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர்கள் அழிந்து விட்டார்கள். மிகுதிப்பேர் சிறையில் இருக்கிறார்கள். பெற்றோர்களோ பிள்ளையைத் தேடி சிறைகளில் அலைந்து திரிகிறார்கள். எந்தப்பிள்ளை எந்த சிறையில் இருக்கிறது எனத்தெரியவில்லை. பிள்ளை இருக்கிறதா இல்லையா எனவும் பல பெற்றோர்களுக்குத் தெரியவில்லை.

யுத்தம் முடிந்து மூன்று வருடங்களின் பின்பே இறப்பை அறிந்து எத்தனை பிள்ளைகளுக்குப் பெற்றோர் கிரியை செய்துகொண்டிருக்கிறார்கள். மறுபுறம் பிள்ளைகளின் இறப்பைத் தாங்கமுடியாத மனவுழைச்சலில் பெற்றோர்களின் தற்கொலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நாம் அன்போடு அழைத்துக் கொண்டிருந்த வன்னிப்பெருநிலம் மூன்று தலைமுறையைத் தொலைத்துவிட்டு இருளில் கிடக்கிறது.

கடந்து வரும் காலங்களில் நாம் எது செய்யினும் அது சிறையில் இருக்கும் நமது குழைந்தைகளை வெளியில் கொண்டுவரும்படியானதாக இருக்க வேண்டும். எவராய் இப்பினும் அவர்கள் நமது குழந்தைகள். நமது எதிர் காலங்கள்.  நமது  தலைவர்களைப் போலவும் அவர்களும் வெளியில் வரவேண்டும். வெளியில் வாழவேண்டும். சிறைகளும் வதை முகாம்களுமற்ற ஒரு சூழல் நமக்கு இனியாவது வேண்டும்.

நன்றி பூபாளம்