Wednesday 2 January 2013


வன்னிப் பெருநிலம்.



கற்சுறா

இன்று யுத்த அழிவின் சாட்சியம். ஒரு காலத்தில் அழகிய குளங்களும் அதனைச் சூழ்ந்த குடும்பங்களும் வயல்களும் அருகருகே வனங்களும் விலங்குகளுமென தன்னளவில் ஏறக்குறையத் தன்னிறைவோடு வாழ்ந்த ஒரு நிலம். வறுமைக்கும் ஏழ்மைக்கும் அப்பால் தனக்கான உணவுகளைத் தேடி எடுக்கும் நிலப்பிரதேசம் கொண்ட சூழல். ஆகக் குறைந்தது குளங்களில் மீனையும் காடுகளில் தானியங்களையும் விலங்குகளையும் எடுத்து உணவாக்கிக் கொள்ளக் கூடிய வாழ்நிலையைக் கொண்டிருந்தது.

கல்வியில் மற்றய பிரதேசங்களோடு ஒப்பிடுகையில் பின்தங்கிய வசதிகளையும் சாத்தியங்களையும் கொண்டிருந்தது. தரமான பாடசாலைகள் என்றும் தகுந்த ஆசிரியர்கள் என்றும் கொண்டிருந்த பாடசாலைகளை விரல் விட்டு எண்ணமுடியும். அப்படியான பாடசாலைகளும் வன்னியின் நகர்ப்புறங்களிலேயே அமைந்திருந்தன. வவுனியா  மன்னார் முல்லைத்தீவு கிளிநொச்சி நகரிலேயே இவை இருந்தன. இவற்றிலும் இரண்டேயிரண்டு மட்டும் கல்லூரி அந்தஸ்தைக் கொண்டிருந்தன. மற்றய பிரதேசங்களில் உள்ளவை எல்லாமே மகாவித்தியாலயங்களும் வித்தியாலயங்களும் அ.த.க. பாடசாலைகளுமே. இவையெல்லாம் ஒருபொழுதும் தக்க ஆசிரியர்களைக் கொண்டியங்கியதில்லை. ஆகக் குறைந்தளவு இருக்கக்கூடிய எந்த வசதிகளையும் அவை கொண்டியங்கியதில்லை. இது நான் சொல்வது இலங்கையில் யுத்தம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னைய காலங்கள்.

நான் அறிய அநேகமான பாடசாலைகள் வசதிக்கட்டண ஆசிரியர்களைக் கொண்டே இயங்கிக் கொண்டிருந்தது. அப்போதைய அரசுகளும் வன்னியை  வளமாக்கிவிடவேண்டும் என ஒருபோதும் எண்ணியதில்லை. யுத்தத்திற்கு முன்பே அநேகமான பிரதான பாதைகள் கூட வன்னியில் பலகாலம் திருத்தப்படாமலேயே இருந்தது.

ஆனாலும் வன்னி மெல்ல மெல்ல தன்னை வளப்படுத்திக் கொண்டேவந்தது. கல்வியில் பின்தங்கிய மாவட்டத்திற்கென தரப்படுத்தல் சட்டம்  வந்தபோது பல மாணவர்கள் பல்கலைக் கழகம் செல்லக்கூடிய வாய்ப்பைப் பெற்றார்கள்.(அந்தச் சந்தர்ப்பத்தையும் பரீட்சைக் காலங்களில் மட்டும் வந்து பரீடசை எழுதிய மற்றய பிரதேச மாணவர்கள் வந்து பறித்தெடுத்துப் போனகதை வேறுகதை) அதனால் வேற்று மாகாணங்களில் இறுந்து அனுப்பப்பட்ட ஆசிரியர்களால் கல்வி கற்றுக் கொண்டிருந்த பல பாடசாலைகளுக்கு அந்தக் கிராமங்களிலிருந்தே ஆசிரியர்கள் உருவானார்கள். வன்னி மெல்ல வளம் பெற்றுக் கொண்டுவந்தது.

 இலக்ஸபானா திட்டத்தின் மூலம் இருளிலிருந்த பல வன்னிக் கிராமங்கள் மின்சாரத்தைப் பெற்றன. புத்துவெட்டுவானிலும் துணுக்காயிலும் பொருத்தப்பட்ட தெலைத்தொடர்புக் கோபுரங்கள் அரசின் தேவைக்கு தயார் படுத்தப்பட்டது எனினும் அவற்றின் பின்பே பலகிராமங்கள் மின்சாரத்தைப் பெற்றன. போக்கவரத்தேயற்ற பலபாதைகள் போக்குவரத்துக்குரியதாக மாற்றப்பட்டது. ஆனால் இவையெல்லாம் இரண்டு வருடங்கள் கூட நீடிக்கவில்லை. யுத்தம் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றியது.

ஐந்து மிகப்பெரிய இராணுவமுகாம்களுக்கிடையிலும் ஐந்து மிகப்பெரிய இயக்கங்களுக்கு மத்தியிலும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் வன்னி மக்கள். மின்சாரம் நிறுத்தப்பட்டது. புகையிரதம் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டது. அப்போதுதான் ஆரம்பிக்கப்பட்ட பஸ் போக்குவரத்துக்கள் கூட நிறுத்தப்பட்டன.


பாடசாலைகள் பல கைவிடப்பட்டு குரங்குகள் வாழும் கொட்டில்களாகியது.  மாணவர்களற்றுப்போன பாடசாலைகளின் விளையாட்டு மைதானங்களில் அதன் ஆசிரியர்கள்; உழுந்து விதைத்து எடுத்துச் சென்றததைப் பலபாடசாலைகளில் கண்டிருக்கிறேன். விறகு ஏற்றவும் உழுந்து கவுப்பி விதைக்கவும் வன்னிக்கு வந்துபோன  ஆசியர்கள் பலரை எனக்குத் தெரியும். வளம் கொண்ட வன்னிப் பெருநிலம் தன்னை மெல்ல அழித்துக் கொண்டிருந்தது.

இன்று யுத்தம் தின்று தீர்த்துவிட்டு வெறும் சக்கையைப் போட்டுவிட்டுப் போய்விட்டிருக்கிறது. உயிர்கள் மட்டுமல்ல மூன்று தலைமுறையினை அழித்துவிட்டிருக்கிறது யுத்தம். எனது நண்பன் சொன்னான், மச்சான் ஒருகலியாணவீட்டிலோ அல்லது சாமத்திய வீட்டிலோ அதை நடாத்தும் -அங்கும் இங்கும் ஓடித்திரியும் வழமையான இளைஞர் பட்டாளத்தைப் பார்க்கமுடியவில்லை என்று. 15 வயதிற்கும் 30வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர்கள் அழிந்து விட்டார்கள். மிகுதிப்பேர் சிறையில் இருக்கிறார்கள். பெற்றோர்களோ பிள்ளையைத் தேடி சிறைகளில் அலைந்து திரிகிறார்கள். எந்தப்பிள்ளை எந்த சிறையில் இருக்கிறது எனத்தெரியவில்லை. பிள்ளை இருக்கிறதா இல்லையா எனவும் பல பெற்றோர்களுக்குத் தெரியவில்லை.

யுத்தம் முடிந்து மூன்று வருடங்களின் பின்பே இறப்பை அறிந்து எத்தனை பிள்ளைகளுக்குப் பெற்றோர் கிரியை செய்துகொண்டிருக்கிறார்கள். மறுபுறம் பிள்ளைகளின் இறப்பைத் தாங்கமுடியாத மனவுழைச்சலில் பெற்றோர்களின் தற்கொலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நாம் அன்போடு அழைத்துக் கொண்டிருந்த வன்னிப்பெருநிலம் மூன்று தலைமுறையைத் தொலைத்துவிட்டு இருளில் கிடக்கிறது.

கடந்து வரும் காலங்களில் நாம் எது செய்யினும் அது சிறையில் இருக்கும் நமது குழைந்தைகளை வெளியில் கொண்டுவரும்படியானதாக இருக்க வேண்டும். எவராய் இப்பினும் அவர்கள் நமது குழந்தைகள். நமது எதிர் காலங்கள்.  நமது  தலைவர்களைப் போலவும் அவர்களும் வெளியில் வரவேண்டும். வெளியில் வாழவேண்டும். சிறைகளும் வதை முகாம்களுமற்ற ஒரு சூழல் நமக்கு இனியாவது வேண்டும்.

நன்றி பூபாளம்

No comments:

Post a Comment