Wednesday 27 April 2016

"இன்னொரு இடத்தில் பேசுதல்..."


உலோகத்தின் எழுத்துக்கள்

கற்சுறா







இடங்களில் காவிழாய்ச் செடிகள் முளைத்திருந்த
இடங்களில் தகரைப்பற்றைகள் முளைத்திருந்த
இடங்களில் குப்பைமேனிகள் முளைத்திருந்த
இடங்களில்தான் உன்னைக் காலாற நடாத்திப் போனேன்.

காண்டாவன வெக்கையில் கருகிப்போகாத காலத்தில்தானே உனது கால்களை ஊன்றினாய்?

பருவத்தின் கால்கள் இடங்களை அளையாதிருந்ததா?

மரணத்தின் வெக்கையில் கருகியதா உன்பாதம்?

மரணங்கள் உடலில் நிகழ்வதல்ல.

நாட்காட்டிகளால் நினைவுறுத்தும் ஒவ்வொரு நாட்களிலும் மரணத்தைக் கடக்கவேண்டியிருக்கிறது. நினைவுகளால் மரணம் வேறு வேறு நிறங்கள் பூசப்பட்டிருக்கிறது. நாட்களைத் தாண்டுதல் என்பதே நடைபெற்று முடிந்த ஏதோவொரு மரணத்தைத் தாண்டுதலாக இருக்கும் பொழுது வடிவங்களால் தெரிவுசெய்யப்பட்ட மரணங்களை காவித்திரிய இருப்பதோ இன்னும் நீண்டகாலமில்லை.

ஆனாலும் இந்த இடத்தில் பேசுவதைத் தவிர்த்துக் கொண்டு இன்னொரு இடத்தில் பேசுதல் என்பதே ஒரு காலத்தினைக் கடக்க எண்ணும் நாட்களை திரும்பத்திரும்ப நீ விளங்கிக் கொள்ள மறுப்பதாகிறது.

அதுவே உனது தப்பித்தலுக்கான முதல் வழி.

உனக்குத் தெரியும் ஆனந்தத்தால் பூசப்பட்டு விரிந்து கிடக்கும் பெருத்த உடலுக்குள் துக்கங்கள் நிரந்தரமாய் அடைபடுவதில்லை.

ஆனாலும்  நீ பேசவேண்டிய தருணத்திற்குள்ளால் மறைந்து நகருகிறாய்.
ஆனந்தத்தின் தருணங்களை அச்சங்கள்ளால் மூடுகிறாய்.

சாட்சியங்களால் மட்டும் நியாயப்படுத்திவிடமுடியாத தருணங்களால் கடந்துவிட்டிருக்கும் பொழுதில் பருவத்தை எழுதுவதற்கு எண்ணற்ற சொற்களை வரிசைப்படுத்துவதில் கைதேர்ந்தவனாக என்னாலும் இருக்கமுடியாதிருக்கிறது.

மனதில் ஏற்கனவே ரசிக்கப்பட்ட ஒரு வார்த்தையே  எப்போதும் முன்வந்து துருத்துகிறது.

சாட்சியங்களால் மட்டுமல்ல துருவலில் தேய்ந்து பல்லில் சிக்கிய வார்த்தைகளாக இருப்பதாலும் பருவத்தை வடிவமாக எழுதமுடிவதில்லை.


பருவங்களில் மீந்து கிடப்பதோ காலத்தின் வாசனை.

வாசனையைப் பூசி நிற்கிறது வர்ணத்தின் வடிவு.


கேள்...

உனது தருணங்களின் எல்லாப் பொழுதுகளிலும்  நான் பேசியதை.

மொழிகளற்றுப் போன, மொழியை மறந்து போன, உடல்களின் வாழ்தலுக்குள் இருக்கமுடியாத ஒரு நகர்வின் சாயலாகவே இருக்கும் அது.


கேள்...


அது ஒரு மழைக்காலத்தின் முடிவு.

வெறும் நீர் முள்ளிகளால்  மட்டுமே நிறைந்து போய், சேறு அடைத்திருந்தன குளங்கள்.

தார் வீதிகளைக் கடந்து வந்த ஓசைகளால் அர்த்தங்களை நாம் தெளிவாகப் பெற்றுக் கொண்டோம்.

அது  தொடர் வாகனங்களின் இரைச்சல் என்பதனை உணர்ந்து கொள்ள வெகு நேரமாகவில்லை. ஓசையின் அதிகரிப்பினை வைத்து எங்களால் அதன் வேகத்தையும் கணிப்பிட முடிந்தது.

அடுத்த சில நிமிடங்கள் மட்டுமே எமக்கு இருக்கின்றன என்பதனைத் தீர்மானித்தோம். வீட்டின் பின்புறமாகவோ அல்லது முன்புறமாகவோ ஓட வேண்டும். அந்த சில நிமிடங்கள்  முன்புறத்தையும் பின்புறத்தையும்  பிரித்தறியப் எங்களுக்குப் போதுமானதாகவே இருந்தது.

அப்போது அதிகாலை ஏழுமணி என்பதால் நாம் வீட்டின் முன்பக்கத்தையே தெரிவு செய்தோம். பின்பக்கம் குளத்தோடு சேர்ந்திருந்ததோ மிகப்பெரிய காடு.

தொடர் வண்டிகள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதனை முகில்களில் தெறித்தனுப்பிய ஓசைகள் உணர்த்தியது. வண்டிகளின் எண்ணிக்கை குறைந்தது பன்னிரண்டு என்றும் எங்களால் எண்ணக் கூடியதாக இருந்தது.

சத்தங்களில் இருந்து வாகனங்களின் எண்ணிக்கையைக்  கணக்கிடுவதில் நாங்கள் மிக அதிகமாகவே எமது திறமையை வளர்த்திருந்தோம்.

அப்போது ஒரு கட்டுத்துவக்கை வடிவமைக்கத் தெரிந்திருந்த திறமையை ஒத்திருந்தது அது.

வாகனச்சத்தம் இன்னும் ஓயவில்லை.

ஒரேமாதிரி திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருந்தது.

அலுத்துப்போன வார்த்தைகளை கவிதை என்று சொல்லி சோகமான ஓசை நயத்துடன் திரும்பத்திரும்ப வாசிக்கும் ஒருவனது இத்துப்போன குரல் போல இருந்தது அந்த ஓசை.

அது  கிறிஸ்தவ தேவாலயத்தில் எமது தமிழ்ச் சுவாமிமாரின் ஞாயிற்றுக்கிழமையின் இரக்கமுள்ள பிரசங்கம் போலவும் இருந்தது.

ஆனால் இப்போது நாங்கள் ஓசைகளால் சுற்றிவளைக்கப்பட்டிருந்தோம்.

வாசனைகளாலும் சுற்றிவளைக்கப்பட்டிருந்தோம்.

நிறங்கள் மட்டும் எப்போதும் போல எங்களது கண்ணை மறைத்தது.

நிறங்களைப் பிரித்தறியப் போதுமானதாக எமக்கு எந்த அறிவும் மேலதிகமாகத் தெரியவில்லை.

நிறக்குருடர்களாக இருந்தோமா?

அல்லது,

நிறங்களின் செயல்கள் எல்லாமே எங்களால் பிரித்தறியமுடியாதபடி ஒரேமாதிரியானதாக இருந்ததா?

நீ இல்லை என்கிறாய்.

சுற்றிவளைப்புக்களின் எல்லாக்காலங்களிலும் நாங்கள் நிறக்குருடர்களாக மாறிவிட்டிருந்த கதையை நீ நம்ம மறுக்கிறாய்.

இன்னொரு இடத்தில் பேசுதல் என்ற உனது மவுனங்களால் நிறங்களை நீ பிரித்துக் காட்டுகிறாய்.

எனது கண்களை என்னால் மறுதலிக்கமுடியவில்லை.

ஓசைகளைப் போலவும் வாசனைகளைப் போலவும் நிறங்களாலும் சுற்றிவளைக்கப்பட்டோம்.

அந்தச் சுற்றிவளைப்புகளுக்குள் அகப்பட்ட நாங்கள் எமது உதடுகளை மெல்லிதாகவேனும் அசைக்காமல் இறுகிய உதடுகளோடு பற்களைக் கிட்டியபடி உள்ளார்ந்த அர்த்தங்களோடு ஒரே சத்தத்தில் நாம் புதிய புதிய சொற்களால் பேசிக் கொண்டிருந்த  அந்தக் காலங்களில் வரிசையில் இருந்த எமக்கு முன்னால் இராணுவத்தினரும் நின்றார்கள்.

உண்மையில்,
யுத்தத்தை யுத்தகாலத்தில் எழுதுவதிலும் விடப் பயங்கரமானது  யுத்தமற்ற காலத்தில் யுத்தத்தை எழுதுவது.



விளங்கிக் கொள்ளலுக்காக கதைகளையும் கூடவே கட்டுக்கதைகளையும்  கொண்டே ஓடவேண்டியிருக்கிறது.

கட்டிமுடிக்கப்பட்ட தாகச் சொல்லப்படும் கதைகளிருந்துதான் அவிழ்ந்து விழுகின்றன முடிச்சுக்கள்.

தொடர்பறுந்த காலத்திலிருந்தே வளர்ந்திருக்கவேண்டும்  என நினைத்த வரிசையை இடையில் காணவில்லை.

எட்டிப்பார்த்த தலை, வரிசையை அறுத்தது.

வரிசையாய் இருப்பதற்கும் வரிசையில் இருப்பதற்கும்

இடையில்,

நினைவுவெளி உறைவு.

"இன்னொரு இடத்தில் பேசுதல்."

தப்பித்தலுக்கான நுழைவாயில் மட்டுமே.

கதைகளைத் தவறவிட்டு நகரும் வார்த்தை எத்தனை மறிப்புக்களைத் தாண்டியிருக்கவேண்டும்?

குலைந்த அடுக்கிலிருந்து  தடுமாறிய சொல் என்னுடன் நகர்ந்து

இன்னொரு இடத்தை நிரப்பியது.

அங்கேயும் நீ இல்லை.

உனக்குத் தெரியுமா என் தரிப்பிடம்?

வரிசையில் இருந்து தப்பிய வார்த்தையைக் குலைத்தது

வரிசையாய் இருந்தது.

ஒரு தலையாட்டியின் முன்னால் நடந்துவரும் தருணத்தைக் கடப்பதற்கு தடையாய் இருப்பது பின்னால் வரிசையாய் நிற்கின்ற இராணுவத்தின் கால்களல்ல.

உள்ளே சாக்கினால் மூடியிருக்கும் தலையின் கண்களே.

இராணுவத்தின் காலடியில் இருத்தி வைக்கப்பட்ட ஒரு தலையாட்டியின் முன்னால் நகரும் வரிசையில் ஒருமுறையேனும் நீ நின்றிருக்கிறாயா?

சாக்கினால் போர்த்தியிருக்கும் தலையை நெருங்க கண்களால் முடியாது.

உயிர் அறுந்து கால்களில் உறையும்.

தலையாட்டியின் கால்களிற்குள்ளால் நெளிந்த கால்களை அடையாளம் கண்ட தருணம் என்முன்னால் மெல்லிதாகவேனும் ஆடாதிருந்த தலை யாருடையதாய் இருந்திருக்கும்?

உனக்குத் தெரியுமா என் தரிப்பிடம்?

தலையாட்டிகளால் மட்டும் நிறைந்திருக்கும்  நமது இலக்கியக் கலந்துரையாடல்களில் அதனை நீ இப்போதும் இனம்காணமுடியாது.

அந்தத் தலையாட்டி போல் இல்லாது, ஆனாலும் யாரையேனும் காட்டிக் கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இல்லாது இருக்கும் இந்தத் தலையாட்டிகள் ஒவ்வொரு தருணமும் தமது தலையை ஆட்டும் போது தம்மையே காட்டிக் கொடுத்துவிடுகிறார்கள்.

ஒரு தலையாட்டியாய் சாக்கினால் மூடிய தலையுடன் எந்த இராணுவத்தின் கால்களினூடேனும் ஒற்றைச் சந்தியில் குந்தியிருந்திருக்கிறாயா?

இன்னொரு இடத்தில் பேசுதலில் மறையும் உனது சொற்களை நீதான் கண்டுபிடிக்கவேண்டும். நானல்ல.

அவை ஒற்றை நாளில் அர்த்தமிழந்து போகக் கூடியவை என்பதையும் நீ இன்னமும் அறியவில்லை.

மிகவும் சிக்கலான தருணங்களில் மனது கடந்து போகிறது.

ஒரு அழுங்குப்பிடியானவனின் கைகளில் கிடைத்துவிட்ட சொற்கள் ஒருபோதும் நெகிழ்வடைவதில்லை.

நீரில் இருந்து நழுவும் இன்னொரு நீர்போல வார்த்தைகளை நழுவவிடும் ஆசைமட்டுமே தினமும் துருத்திக் கொண்டு நிற்கிறது.

முப்பது வருடகாலமாக யுத்தமற்ற ஒரு நாளுக்கு ஏங்கிய மனது அர்த்தமிழந்த சொற்கள் பாவனைக்கு இல்லாது போகும் ஒரு தருணத்திற்காக இன்று ஏங்குகிறது.

இழப்புக்கள் எப்போதும் சாவீடுகளாக மட்டுமே பழக்கப்பட்ட மனதிற்கு அர்த்த இழப்பு யாருடைய வீட்டுக்கதவினைத் தட்டுமோ என்று பயம் ஏற்பட்டுவிடுகிறதா?

மரணத்தின் அர்த்தம் எப்போதும் போலத்தானே இன்றும் இருக்கிறது.

மரணத்தைக் காவிக் காவி இதற்குமேலும் குடிபெயர முடியவில்லை என்றானபோதும் மரணம் அதன் கட்டித்தன்மையிலிருந்து கொஞ்சமும் கரைந்துவிடவில்லை.

பாஸ்போட்டை கிழித்து கொமட்டிற்குள் ஓட்டிவிட்டு விமான நிலையத்தில் கையைத்தூக்கிக்காட்டி நின்று பெயரை மாற்றியது போல்,
எழுத்தின் அர்த்தங்களை கொமட்டிற்குள் ஓட்டிவிட வசதியில்லை.

அதனால்தான் எனது எழுத்துக்களை  ஒரு வாசகனாக  மலக்கூடத்தின் கதவை அடைத்துவிட்டு உள்ளேயிருந்து வாசிக்கவேண்டிய நிர்ப்பந்தம் வந்துவிடுகிறது உனக்கு.

கக்கூசின் அடைப்புக்குள்ளிருந்து கதைகளை அறியநினைக்கும் கதைகளாக உனக்கு அவை தடம்பிடியா.

உள்ளேயும் வெளியேயும் மணம் ஒன்றே.

ஆனாலும்,

நீ பேசவேண்டிய காலத்தை  இப்போதாவது உனக்கு  எடுத்துக்கொள்.

ஆனாலும் நீ பேசமுடியாதிருந்த காலமும் நீ மாற முடியாதிருந்த காலமும் யாருடையது என்பதை மட்டுமேனும் சொல்லு.

உனது காலங்களாகவே அவை இருந்தன என்பதை இப்போது மட்டும் ஏன் மறைத்துக் கொள்கிறாய்.

அப்போது நீ மொழிகளை பழகிக் கொண்டிருந்த ஒரு குழந்தையைப் போல் வீணிகளில் ஒழுகிய வார்த்தைகளோடு மட்டும் பேசிக் கொண்டிருந்தாயா?

முள்ளுக்கம்பியை மட்டும் மெழுகுதிரியைச் சுற்றி கொழுத்திஉனது கதைகளை மேசையில் பரவமுடிந்தது போல் இல்லை இப்போதைய காலம் எனபதை நீ நன்றாகவே அறிந்திருக்கிறாய்.

அறிதலில் தளைத்த ஒருவார்த்தையாய் உன்னால் கைக்கொள்ளப்படாதிருப்பது இடர்களின் காலுக்குள் நசிப்பட்ட குரல் என்பதனை உனக்கு ஞாபகப்படுத்துகிறேன்.

இராணுவத்தின் அசைவு மட்டுமல்ல சொற்களின் அர்த்தமும் ஓசைகளால் மட்டும் தீர்மானிக்கப்படும்போது உன்னுடைய சொற்கள் பலமிழந்துவிடும்.

சத்தங்களால்  நிரம்பப்படப் போதுமானதாக இருக்காது அதனுடைய அர்த்தங்கள்.

"ன்" ககும் "ள்"க்கும்  இடையில் ஓசைகளால் தடுமாறும் நீ அர்த்தங்களை வரிசைப்படுத்துகிறாய்.



அது அர்த்தங்களால் வரிசைப்படுத்த முடியாத எழுத்துக்கள்.

வெறுமனே கோடுகளாலும் அர்த்தமிழந்த நெளிவுகளாலும் சுற்றிவளைத்துக் கொள்ளப்பட்ட உடல்களை "ர்"ஆலும் "ன்" ஆலும் பிரிக்கத் துடிப்பதில் தோல்வியையே நீ தொடர்ந்தும் காணுவாய்.

இருந்தும்,
இத்தனை காலமாய் வெளிகளில் அலைந்த  கேள்விகளில் ஒழிந்து போய் இருந்து விட்டு மெல்ல நகர்ந்து வருகிறாய் நீ.

ஒருபக்கம் மெல்லிதாகவும் மறுபக்கம் அகன்றும் ஒரு வார்த்தையை இடம்மாறிப் பாவிக்கத் தொடங்கும் போதே நீயாரென்று தெரிந்து விடுகிறது எனக்கு.

பயணத்தின் முடிவில்  உனது கையில் எஞ்சியிருக்கும் புகைப்படங்கள் போல அவை மினுங்கத் தொடங்கிவிடும்.

ஒளிபூசப்பட்ட உனது புகைப்படங்கள் போல இருப்பதில்லை  நமது வார்த்தைகள்.

இருப்பிடங்களில் ஊன்றிய திண்மத்தின் தன்மை அது.

ரசிக்க வைக்கப்பட்ட வார்த்தைகளுக்குள் நீ மறைந்துகொள்ளும் போது  யாரும் காட்டிக்கொடுத்துவிடத் தேவையில்லை.

உன்னுடைய அர்த்தங்கள் தானாகவே பிடிபட்டுவிடும்.

ஒற்றைக் கேள்விக்கு உடனே தெற்கே கண்ணைச் செருகுபவன் ஒருபோதும் நெஞ்சாங்க கற்களை  எனக்குள் எறிவதற்கு தயாரற்றவன்.

தற்காப்பு வார்த்தைகளைக் கூட தனக்காக உருவாக்கத் தெரியாத அவனை நோக்கியதல்ல இது.

வெற்று ஆபாசவார்த்தைகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட  ஒரு அலுமினீயப் பாத்திரத்தின் சாயல் கொண்ட எழுத்தாக இருக்கும்  இதனை நீ வாசிக்கும் பொழுது  மிக அதிகமானோர் வீடுகளை நீங்கள் தட்டித் திறக்க வேண்டியிருக்கும்.

உலோகத்தின் எழுத்துக்கள் வெறும் சத்தங்களால் ஆனவை மட்டுமல்ல.

மன்னிப்பேயற்ற பாவங்களால் திரண்டுபோய்க் கிடக்கிறது மொழி. மொழியின் பிரத்தியேகமான வன்முறையின் பாடுகளால் ஆனந்தத்தின் உடல்களை கூறுபோடுதல் என்பதே சாபத்திற்கான முதல் வழி என்பதை நீ தெரிந்து கொள்.

நன்றி
புதியசொல்
இதழ்2


Saturday 9 April 2016

"சும்மா இருப்பது என்பது சும்மா இருத்தல் அல்ல.


தோழர் சண் நினைவுப் பகிர்வு...
கற்சுறா


                                                       



"இலக்கியம் ரசனை சார்ந்தது. ரசிகரோ வாசகரோ, அவர் தானே உய்த்துணர்வது. அவரது ரசனையினூடாக அவருக்கான செய்தியை எடுத்துக் கொள்வது.அவற்றிற்கூடாக மனித வாழ்வின் அவலங்களைத் துடைத்தெறிய ஆவேசம் கொள்வது."

இவ்வாறிருக்க நமது எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் மட்டும் இலக்கியம் ஏன் சமர்க்களமாக இருக்கிறது? இது தொழில்சார் போட்டியாகவோ இருக்கலாம். இதனால் வாசகர்களுக்குக் கிடைப்பது பொறுமை சேர்க்கும் போட்டி மட்டுமே. அது வெறுப்பையும் வெறுமையையும் அவர்களிடம் வளர்த்து விடுகிறது.வாசகர்களை நோக்கி எழுதுபவர்களுக்கு இந்தச் சமர்க்களம் உதவுவதில்லை.எழுத்தாளர்களை நோக்கி எழுதுபவர்களுக்கே இந்த இலக்கியச் சமர்க்களம் தேவைப்படுகிறது. ஏனெனில் எழுதுபவர்களும் படிப்பவர்களும் அவர்களாகவே மாத்திரம் இருப்பதால்.

தோழர்
சண்முகநாதன்



ஒரு சிரிப்பு. அல்லது ஒரு சிறிய தலையசைப்புடன் மாத்திரம் இலக்கியக் கூட்டங்களுக்கு வந்துபோகும் சண் அண்ணா அண்மையில் எனக்கு எழுதித்தந்த  பதிவில் வருகின்ற சிறிய பகுதி இது.

கடந்த காலங்களில் மிகுந்த சலிப்புற்று அவற்றிலிருந்து எதையும் எழுதுவதற்கு விருப்பமற்று ஆனாலும் சமூகத்தின் அசைவியக்கங்களினை தவறாது உற்று நோக்கிவந்த ஒருவர் அவர்.

இடதுசாரி சிந்தனைகளின் வழி நின்று அவர் செயற்பட்ட காலத்தை அவர் வாயிலாகப் பெற்றுவிடவேண்டும் என்ற ஒரு ஆசை எனக்கிருந்தது. நாம் அறியாத பல கதைகைளை அவர் அவ்வப்போது சொல்லியிருக்கிறார்.

"நீங்கள் அதனை பதிவுசெய்ய வேண்டிய அவசியம் அல்ல கட்டாயம் இருக்கிறது" என்பதனைச் சொல்லி அவருடன் இறுக்கமாகத் தர்க்கம் செய்திருக்கிறேன்.  அதற்கும்  ஒரு சிறிய சிரிப்புடன் என்னைக் கடந்து போவார்.
இப்படியே நீங்கள் சும்மா இருக்கமுடியாது என்று சீண்டும் போது...

"சும்மா இருப்பது என்பது சும்மா இருத்தல் அல்ல" என்ற மறுமொழி ஒன்றை பதிலாகச் சொல்லி சும்மா இருத்தல் என்பது குறித்த கவிதை ஒன்றை ஒரு கூட்டத்தில் வைத்து என்னிடம் தந்திருந்தார்.



ஆனாலும் தனது கடந்த காலத்தை பதிவு செய்யவேண்டும் என்ற விருப்பத்தில் அவர் தனது வரலாற்றைப் பதிவு செய்ய தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார்.

மானசீகமான இடதுசாரியாக சமூக சிந்தனையாளனாக செயற்பாட்டாளனாக இருந்த தோழர் சண் அவர்களின் திடீர் மரணம் மனதளவில் பலரை உருக்குலைய வைத்துவிட்டது.

ஒரு காலத்தின் கதைகள் கைகளில் இருந்து நழுவிவிட்டது.

மரணம் பல கதைகளை எழுதவிடுவதில்லை.