Saturday 9 April 2016

"சும்மா இருப்பது என்பது சும்மா இருத்தல் அல்ல.


தோழர் சண் நினைவுப் பகிர்வு...
கற்சுறா


                                                       



"இலக்கியம் ரசனை சார்ந்தது. ரசிகரோ வாசகரோ, அவர் தானே உய்த்துணர்வது. அவரது ரசனையினூடாக அவருக்கான செய்தியை எடுத்துக் கொள்வது.அவற்றிற்கூடாக மனித வாழ்வின் அவலங்களைத் துடைத்தெறிய ஆவேசம் கொள்வது."

இவ்வாறிருக்க நமது எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் மட்டும் இலக்கியம் ஏன் சமர்க்களமாக இருக்கிறது? இது தொழில்சார் போட்டியாகவோ இருக்கலாம். இதனால் வாசகர்களுக்குக் கிடைப்பது பொறுமை சேர்க்கும் போட்டி மட்டுமே. அது வெறுப்பையும் வெறுமையையும் அவர்களிடம் வளர்த்து விடுகிறது.வாசகர்களை நோக்கி எழுதுபவர்களுக்கு இந்தச் சமர்க்களம் உதவுவதில்லை.எழுத்தாளர்களை நோக்கி எழுதுபவர்களுக்கே இந்த இலக்கியச் சமர்க்களம் தேவைப்படுகிறது. ஏனெனில் எழுதுபவர்களும் படிப்பவர்களும் அவர்களாகவே மாத்திரம் இருப்பதால்.

தோழர்
சண்முகநாதன்



ஒரு சிரிப்பு. அல்லது ஒரு சிறிய தலையசைப்புடன் மாத்திரம் இலக்கியக் கூட்டங்களுக்கு வந்துபோகும் சண் அண்ணா அண்மையில் எனக்கு எழுதித்தந்த  பதிவில் வருகின்ற சிறிய பகுதி இது.

கடந்த காலங்களில் மிகுந்த சலிப்புற்று அவற்றிலிருந்து எதையும் எழுதுவதற்கு விருப்பமற்று ஆனாலும் சமூகத்தின் அசைவியக்கங்களினை தவறாது உற்று நோக்கிவந்த ஒருவர் அவர்.

இடதுசாரி சிந்தனைகளின் வழி நின்று அவர் செயற்பட்ட காலத்தை அவர் வாயிலாகப் பெற்றுவிடவேண்டும் என்ற ஒரு ஆசை எனக்கிருந்தது. நாம் அறியாத பல கதைகைளை அவர் அவ்வப்போது சொல்லியிருக்கிறார்.

"நீங்கள் அதனை பதிவுசெய்ய வேண்டிய அவசியம் அல்ல கட்டாயம் இருக்கிறது" என்பதனைச் சொல்லி அவருடன் இறுக்கமாகத் தர்க்கம் செய்திருக்கிறேன்.  அதற்கும்  ஒரு சிறிய சிரிப்புடன் என்னைக் கடந்து போவார்.
இப்படியே நீங்கள் சும்மா இருக்கமுடியாது என்று சீண்டும் போது...

"சும்மா இருப்பது என்பது சும்மா இருத்தல் அல்ல" என்ற மறுமொழி ஒன்றை பதிலாகச் சொல்லி சும்மா இருத்தல் என்பது குறித்த கவிதை ஒன்றை ஒரு கூட்டத்தில் வைத்து என்னிடம் தந்திருந்தார்.



ஆனாலும் தனது கடந்த காலத்தை பதிவு செய்யவேண்டும் என்ற விருப்பத்தில் அவர் தனது வரலாற்றைப் பதிவு செய்ய தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார்.

மானசீகமான இடதுசாரியாக சமூக சிந்தனையாளனாக செயற்பாட்டாளனாக இருந்த தோழர் சண் அவர்களின் திடீர் மரணம் மனதளவில் பலரை உருக்குலைய வைத்துவிட்டது.

ஒரு காலத்தின் கதைகள் கைகளில் இருந்து நழுவிவிட்டது.

மரணம் பல கதைகளை எழுதவிடுவதில்லை.

No comments:

Post a Comment