தோழர் யோகரட்ணம் அவர்களால் எழுதப்பட்ட ‘தீண்டாமைக் கொடுமையும் தீமூண்ட நாட்களும்’ எனும் நூல் இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியால் பிரான்சில் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து  இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் ஆதரவாளர்களால் லண்டன்,யாழ்ப்பாணம், இந்தியா,கொழும்பில் வெளியிடப்பட்டதோடு கடந்த 22 ஏப்ரல் 2012 இல் கனடாவிலும் வெளியிடப்பட்டது. 

-கற்சுறா-



‘தீண்டாமைக் கொடுமையும்  தீமூண்ட நாட்களும்’  நூல் வெளியீடும், வரலாற்றைப் பேசுதலும் எனும் நிகழ்வு  22 ஏப்ரல் 2012இல் கனடாவில் நடைபெற்றது. நூல் குறித்துப் பேசுவதுடன் சாதியத்திற்கெதிரான போராட்டக் காலங்கள் குறித்தும் அந்த அனுபவங்கள் குறித்தும் பேசுவதை நோக்கமாக வைத்தே கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.

மூத்த  செயற்பாட்டாளர்கள் மற்றும் ஈழத்தில் சாதிய விடுதலைப்போராட்டத்தில் பங்கு பற்றியவர்கள் பலர் குறித்தகாலத்தில் கனடாவில் இல்லை என்பது மிகுந்த வருத்தமாக இருந்தது. முடிந்தவரை முயற்சித்தோம். பலரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. தோழர் மாற்கு அவர்களும் தோழர் சீவரத்தினம் அவர்களும் பங்குபற்றியது சந்தோசமாக இருந்தது. கூட்டத்தை நான் தொடக்கிவைத்தேன். அதே நாளில் சமூகச் செயற்பாட்டாளரும் அனைவரதும் நண்பரான நவறஞ்சனின் தாயாரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நாளாகவும,  அத்தோடு அன்றே சிங்கள தமிழ் புத்தாண்டு நாளாகவும் இருந்தமையால்  அந்த நிகழ்வுகளில் பங்குபற்ற பலர் செல்லவேண்டியிருந்ததால் கூட்டத்தை விரைவாக முடிக்க வேண்டிய தேவையும் இருந்தது.

எனது உரையில் சாதிய ஒடுக்குமுறைகளும், அதற்கெதிரான போராட்டங்களும் எவ்வாறு இலங்கையில் நடைபெற்றது.எமது சாதிய சமூகத்திலிருந்து முகிழிந்த தமிழத் தேசிய விடுதலைப்போராட்டம் என்பது கடந்த 30வருடத்திற்குள் சமூகத்தில எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவந்து விட்டுள்ளது. இன்று யுத்தம் முடிவுற்றதும் சாதியம் எவ்வாறு வேர்கொண்டெழுகிறது என்பதையும் சொல்லி கடந்த 7ஏப்ரல்2012இல் வீரகேசரியில் வெளிவந்த சைவவேளாளர்களது விளம்பரம் குறித்தும் வாசித்துக் காட்டினேன்.

இந்த விளம்பரம் குறித்து ஏன் நமக்குள் ஓர் உரையாடல் நடைபெற வில்லை? அந்த வெள்ளாள ஒன்றுகூடல் குறித்த கோபத்தை எம்மத்தியில் காணமுடியாதிருந்தமைக்கு என்ன காரணம்?  எமக்குள் ஒழிந்திருக்கும் சாதி போற்றும் மனநிலையே காரணம். எனவே இந்தவிளம்பரம் குறித்து எவருக்கெல்லாம் கோபம் வரவில்லையோ அவர்கள் எல்லோரும் சாதி வெறியர்களே என்பதையும் சொல்லி முடித்தேன்.
அடுத்து பேசிய ஜோர்ஜ் (தாயகம்) மனித முரண்பாடுகள் என்பது

எவ்வாறு உலகளாவிய ரீதியில் இருக்கிறது. ஒவ்வொரு இனத்திற்கும்  ஒரு பிடிக்காத இனம் இருக்கிறது எனத் தொடங்கிய ஜோர்ஜ்… இஸ்ரேலியனுக்கு யூதனைப் பிடிக்காது. யூதனுக்கு ஜெர்மனியரைப் பிடிக்காது. ஜெர்மனியருக்கு பிரஞ்சுக் காரனைப்பிடிக்காது. பிரஞ்சுக் காரனுக்கு இராக்கியனைப் பிடிக்காது. ஈராக்கில் சியாம் முஸ்லீம்களுக்கு சுன்னி முஸ்லீம்களைப் பிடிக்காது. ஆனால் யாழ்ப்பாணத்தானுக்கோ ஒருத்தனையும் பிடிக்காது என தனது வழமையான அங்கதச் சுவையுடன்  சாதியத்தின் அவலங்களை அம்பலப்படுத்தினார்.

அடுத்துப் பேசிய மனோரஞ்சன் தேசியவிடுதலைப் போராட்டத்தினால் சாதியப்பிரச்சனை மறையவில்லை என்பதையும் விடுதலைப்புலிகள் எவ்வாறு சாதியைக் காப்பாற்றினார்கள் என்பதையும் உதாரணங்களுடன் விளக்கினார். ஈழத்தின் தலித் சமூகங்களின் வளர்ச்சிக்கு ஆரம்பத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி எவ்வாறு பணியாற்றியது என்பதற்கான நூலிலிருந்த உதாரணங்களைக் குறிப்பிட்டுப் பேசினார். விடுதலைப் புலிகளது காலத்தில் மரணச் சடங்குகளுக்கு பறை அடிக்கக் கூடாது என்று கொண்டுவந்த சட்டத்தை பின்பு புலிகளே வெள்ளாளர்களுக்காக எப்படி அச்சட்டத்தை இல்லாமல் பண்ணினார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார். இதற்குரிய ஆதாரங்கள்  பத்திரிகைகளில் பதிவாகியுள்ளதென்பதையும் குறிப்பிட்டார்.

இந்த நூலில் பேசப்படுகின்ற முக்கியமான பல தோழர்கள் தமிழ்ச்

சூழலின் கதையாடல்களில் வருவதில்லை. இவர்களது முக்கியத்துவம் குறித்துப் பேசப்படுவதில்லை. நமது தலைவர்கள் பெருமான்கள் எனச் சொல்லப்படுபவர்கள் இந்த நூலில் குறிப்பிடப்படும் மனிதர்களாக இருப்பதில்லை. எனச் சுட்டிக்காட்டி தந்தை செல்வநாயகத்தின் தந்திரங்களை இந்த நூல் தெளிவாகப் பேசுவதாக அடுத்து உரையாற்றிய தர்சன் தெரிவித்தார்.
அடுத்துப் பேசிய மெலிஞ்சிமுத்தன் அவர்கள் தனது அனுபவங்களுக்
குள்ளால் ஈழத்துச் சாதியப்பிரச்சனை குறித்து அணுகினார். தமது சமூகம் ஒடுக்கப்படும் சமூகமாகவும் மறுபுறம் ஒடுக்கும் சமூகமாகவும் இருக்கின்றதை அவதானிப்பதாகவும், யுத்தகாலத்தில் வறுமையையும்,சாதிய ஒடுக்குமுறையையும்  தனது தகப்பனார் எதிர்கொண்ட கொடூரங்களையும் விபரித்தார்.


அதன் பின் கலந்துரையாடல் ஆரம்பமானது. கலந்துரையாடல் நூலை விட்டு பல்வேறுவிதமான விவாதங்களுக்குள் சென்று திரும்பியது. தோழர் மாற்கு அவர்கள்  சாதிய விடுதலைப் போராட்டத்தில் நேரடியாக பங்குபற்றிய தனது அனுபவங்களை கூறினார். அப்போராட்டங்களில்  இடதுசாரிகளின் பங்களிப்புகளை நினைவுறுத்தியதோடு வர்க்கவிடுதலை யூடாகவே சாதிய ஒழிப்பிற்கான வழியையும் நாம் கண்டடையமுடியும் எனவும் கூறினார்.
  சமூகத்தில் சாதி நீங்க நமக்குக் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருக்கும் ஆகக் குறைந்தளவு கருவி கலப்புத் திருமணம் தான் எனவும். அதுவே  சாத்தியப்படுத்தக் கூடியளவுக்கான ஒரு கருவி என வின்சன்போல் அவர்கள் கூறினார்.

வின்சனபோல் அவர்களின் கருத்தினால் கோபங் கொண்ட பலர் சாதி மாறிக் கட்டியவர்கள் பலர் படும் அவஸ்தை குறித்துப் பேசி மறுதலித்தார்கள். இவை வெறும் சம்பவங்கள் ஆனால் கலப்புத் திருமணம் என்பது தொலை நோக்கில் சாதி அழியும் தன்மை கொண்டது என வின்சன்போல்  அழுத்திக் கூறினார்.
 மார்க்சியமே  விஞ்ஞானத் துணையுடன் அனைத்தையும் இயங்கியல் தன்மையுடன் நோக்குகிறது,  எனவே அதற்கூடாக சாதியத்தையும்  நாம் அணுகவேண்டும். கலப்புத் திருமணத்தின் ஊடான சாதிய ஒழிப்பு என்பது  சாத்திமற்றது என வாதிட்டார் சபேசன்.

மீராபாரதி அவர்கள் மார்க்சியத்தின் பற்றாக் குறைகளை நாம் கவனிக்காமல் விடக் கூடாது எனவும். தலித்தியப்பிரச்சனை குறித்து இவ்வளவு பேசுவது மிக முக்கியமானது எனவும் சொன்னார்.

தோழர் சீவரத்தினம் அவர்கள் பௌத்த மதத்தினை முதலில் முன்னெடுத்தவர் அல்வாயைச் சேர்ந்த முருகேசு என்பவர் எனவும் தலித் மேம்பாடு எனச் சொல்லிக் கொண்டு தலித்துக்களது முன்னேற்றம் குறித்து அக்கறை இல்லாது இருக்க கூடாது எனவும் சொன்னார். இலங்கையில் எத்தனையோ தலித்துக்கள் மிகவும் அடிப்படையான வசதிகளற்று வாழ்கிறார்கள் அவர்களுக்கு முதலில் உதவி செய்ய வேண்டும் எனவும் சொன்னார். நமு பொன்னம்பலம் , நடராஜா முரளி, மாகாவலி ராஜன், சேனா ஜயகரன் போன்றோரும் மற்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் பொதுவாக தமது கருத்துக்களை முன்வைத்தார்கள். விவாதங்கள் காரசாரமாகவும், ஆரோக்கியமாகவும் நடைபெற்றன. அதிகமாக முரண்பட்ட உரையாடல்களாகவே இருந்தன. சாதியவிடுதலை தேசியவிடுதலை இரண்டின் எதிர்மறையான முக்கியத்துவம் பற்றியும்  ஒன்றிற்குள் ஒன்றின் மறைவு பற்றியும் பேசப்பட்டது. கலந்து கொண்டவர்கள் பெரும்பாலும்  வேறு வேறு தளங்களில் செயற்பட்டுக் கொண்டிருப்பவர்களாதலால் சாதியம் குறித்த அவரவர் புரிதலில் விவாதம் கொஞ்சம் சூடாகவே நடைபெற்றது.
சாதியம் குறித்த உரையாடல்களும் கருத்துப் பகிர்வுகளும் 


அவசியமானதாக, தேவையாக இருக்கின்றதை  நிகழ்வு தெரிவித்தது. தோழர் யோகரட்ணம் அவர்களின் ‘தீண்டாமைக் கொடுமையும் திமூண்ட நாட்களும்’ எனும்  நூல் அதற்குரிய கடமையைச் செய்திருக்கிறது. பதிவு செய்யும் வசதியற்றுப் போனதால் ஞபகத்திலுள்ளதை வைத்து எழுதுவது பெருத்த கஸ்டமாகத்தான் இருக்கிறது. கலந்து கொண்ட நண்பர்கள் யாராவது தவறவிட்டதை அல்லது எழுதவேண்டியதை எழுதினால் சந்தோசம். மேலும் பேசவேண்டியிருந்து பேசமுடியாமல் போன முரண்பாடுகளை எழுதினாலும் சந்தோசம்.