Tuesday 23 June 2015

"யாழ்ப்பாணியம்" நல்ல முகமூடி ஈழத்தமிழ்த் தேசியம்


                                                               கற்சுறா

‘யாழ்ப்பாணியம்.’ அல்லது ‘யாழ்மையவாதம்’ என்ற மேற்கோள் குறிக்குள் வருகின்ற இந்த சொற்கள் குறித்து ஒருவர் பேச முற்படும் பொழுது அல்லது அதுகுறித்து கருத்துத் தெரிவிக்க முற்படும் பொழுது அந்த நபர் மிகத் தெளிவாக அப்புறப்படுத்தப் படுவார். கட்டமைக்கப்படும் வரலாற்றில் அவருக்குரிய இடம் மறுதலிக்கப்பட்டு தமிழ் மரபு சார்ந்த அடையாளங்களில் ஒன்றான ‘துரோகி’ அல்லது ‘எதிரி’ என்பதாக அடையாளமிட்டு தயாரித்து பழக்கப்படுத்தி வைக்கப்பட்ட  பதில்களி னூடாக  யாழ்ப்பாணியம் என்ற அந்தச் சொல் தன்னை மீளவும் தக்கவைத்துக் கொள்ளும்.
இதற்கான எதிர்க் கருத்தி யலை அது எவ்வகையில் நிராகரிக்கின் றது? தன்னை நியாயப்படுத்த தன்னைப் பாதுகாக்க எவ்வளவு தூரம் தனது கரங்களை நீட்டி தனக்கான பாதையை தயார்படுத்தி ஒவ்வொரு நபர்களாக குறிவைத்து தனக்குள் இழுத்து, யாழ்ப்பாணியத்தின் வெளியை எவ்வாறு விரிக்கிறது என்று நோக்கியே ஆகவேண்டும். இதன்மூலமே யாழ்ப்பாணியம் கட்டி வைத்துள்ள தேசப்பற்றையும் அதன் உச்ச வெறியில் உருவாகிய  இன்றைய யுத்தத்தின் தேவையும் அதனால் உருவாக இருப்ப தாகச் சொல்லும் தமிழீழம் என்பதின் தேவையையும் புரிந்து கொள்ள முடியும்.
தமிழ்த் தேசியம் என்ற ஒற்றைச் சொல்லினூடாக அதன் மீதான அதீத பற்றை அல்லது கடவுள் மீதான நம்பிக்கையைப் போல் கேள்வியற்ற ஒரு வழிபாட்டை ஒரு வெறியை யாழ்ப்பாணியம் தன்னகத்தே கட்டமைத்து வைத்திருக்கிறது. இங்கே அந்த ஒற்றைச் சொல்லின் மீதான பற்றில் அது தன்னைப் பாதுகாப்பதற்காக நாம் எவ்வளவு தொகைக் கேள்விகளை இழந்திருக்கிறோம் என்று நோக்க வேண்டும். கேள்விகள் என்பது வெறும் வார்த்தைகளல்ல. மனிதப் படுகொலைகள்.
ஈழத் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பமான காலங்களில் அதற்கெதிரான துரோகிகளும் கட்டமைக்கப்பட்டார்கள். அன்றைய துரோகிகள் எனப்படுவோர் இன்றைய துரோகிகளது நிலைக்கு எவ்விதத்திலும் இணைவு இல்லாதவர்கள். ஆனாலும் அவர்கள் துரோகிகள். துரோகிகள் என அடையாளப் படுத்தப்பட்டவர்கள். அவர்களுக்குரிய அடையாளப்படுத்தலுக்குப் பின்னால் ஒருவித அரசியல் கருத்து நிலைப்பாடும் இருக்கவில்லை. யாருடைய கட்சியையோ குழுவையோ அவர்கள் சேர்ந்திருக்க வில்லை. ஆனால் அவர்கள் சமூகத்தின் அரசியல் நெருக்கடியின் பக்கவிளைவுகள்.
இன்றைய துரோகிகள் எனப்படுவோர் ஈழத்தமிழ்த் தேசியத்தின் ஒவ்வொரு அங்கங்கள். எல்லோரையும் போல தேசியத்தின் மீதான பற்றைக் கொண்டிருப்பவர்கள்.  இன்னும் சிலர் தேசியத்தை நிராகரிப்பவர்கள். அப்படிச் சொல்வதை விட இன்றைய ஈழத்தமிழ்த் தேசியத்தை ஆதரிக்காதவர்கள் என்று சொல்ல முடியும். இவர்களையெல்லாம் துரோகிகள், சமூகத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டியவர்கள் என்பதாக நமக்குச் சொல்லப்படுகிறது. நாங்கள் நம்புகிறோம். சொல்பவர்கள் யாரெனில் இதே தமிழ்த் தேசியத்தின் பிரதிநிதியாக தம்மை முன்நிறுத்தி மிகத் தந்திரோபாயமான வார்த்தைகளால் மக்களின் அனைத்து வாசல்கதவுகளையும் மூடிவிட்ட யாழ் மையவாதச் சிந்தனைப் போக்கின் தற்போதைய உன்னத பிரதிநிதியான விடுதலைப் புலிகள். மற்றும் அவர்களுக்குச் சலாம் போடும் யாழ்; மேலாதிக்க மேட்டுக்குடிகள். அவர்கள் கையகப்படுத்தி யிருக்கும் தமிழ்ப் பத்திரிகைகள், ஊடகங்கள்.
விடுதலைப் புலிகளை அல்லது அவர்களது அரசியல் நடவடிக்கைகளை வெறுமனே குற்றஞ் சாட்டுவதினூடக இந்தச் சமூகம் தப்பித்துவிட முடியாது. ஈழவிடுதலைப் போராட்டம் ஆரம்பமானதும் அது தன்னகத்தே சிதையத் தொடங்கியதும் யாழ்ப்பாண எல்லைக்குள்ளேயே. விடுதலைப்புலிகள் என்ற அமைப்பின் சிதைவினுடன் அதன்மீதான குற்றச்சாட்டுக்கள் முடிவுக்குவரும். ஆனால் தன்னை அறிவியல் சார்ந்த சமூகம் என்று சொல்லிக்கொள்ளும் யாழ்ப்பாணிய சமூகம்  அனைத்துக்குமான பொறுப்பை எப்போதும் ஏற்க வேண்டும்.
இன்று மக்கள் தாம் தன்னியல்பாக ஒவ்வொரு விடையத்தையும் உள்வாங்குகிறார்கள், தமது சுய சிந்தனையின் அடிப்படையிலேயே சிந்திக்கிறார்கள் என்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மிகக் கூரிய ஆயுதமான  தேசியத்தினால்  அவர்களது சிந்தனை முறை மழுங்கடிக் கப்படுகிறது. கேள்விகளற்ற ஒரு முண்ட நிலைக்கு  அது கொண்டுவந்து விடுகிறது. ஈழமக்களுக்கான தேசியம் என்பது எண்ணற்ற  வன்முறைகளையும்  எண்ணற்ற கொலைகளையும் தாண்டியிருக்கிறது. தன்னகத்தே நடாத்தியிருக்கிறது என்பது பற்றி அவர்கள் யோசிக்க மறுக்கிறார்கள். அல்லது அவை தமக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் என்று நம்புகிறார்கள். அத்தனை கொலைகளையும் வன்முறைகளையும்  வரவேற்கி றார்கள். இந்த வரவேற்றல் மனோநிலையில் மக்கள் வந்திருக் கிறார்கள் எனில் இதற்கு யார் பொறுப்பு. எங்கேயிருந்து  இந்தத் தவறு தொடர்ந்து வந்திருக்கிறது?
ஆரம்பத்தில் கல்விகற்ற மேல்சாதி மக்களிடம் இருந்து அப்புறப்பட்டு சமூகத்தின் விளிம்பு நிலையில் இருந்து வாழ்த லுக்குப் போராடிக்கொண்டிருந்த  ஒரு சமூகத்தின் நபர்களை  துரோகிகள் என்று மின்கம்பத்தில் கட்டிச் சுட்டுக் கொல்லும்போது வரவேற்கப்பட்டது. இந்தத் துரோகிகள் அடையாளம் யாருக்கெதிரானதாக இருந்தது? யாழ் படித்த மேல்சாதி சமூகத்திற்கெதிராக துரோகிகள் உருவாக்கப்பட்டார்கள். இதை நடைமுறைப்படுத்தியது ஈழத் தேசியவிடுதலைப் போராட்ட இயக்கங்கள். ஆக ஈழவிடுதலைப் போராட்ட அமைப்புக்கள் யாரின் பிரதிநிதியாக அப்போது தம்மை முன்நிறுத்தினார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும். இப்படி யாழ்ப்பாணத்து விளிம்பு நிலை மக்களைக் துரோகிகளாக்கிய யாழ்ப்பாணியம் மெல்ல நகர்ந்து ஈழமெங்கும் பரவியது. ஈழத்தில் ஒவ்வொரு ஊருக்கும் பல விளிம்பு நிலை மனிதர்களை துரோகிகளாக்கிக் கொன்று போட்டது ஈழவிடுதலை இயக்கங்கள். இந்த ஈழவிடுதலை இயக்கங்கள் தம்மை முன்நிறுத்துவதற்கு இந்த மக்களின் கொலைகளையே முக்கியத்துவப்படுத்தினர். இவை அத்தனையையும் வரவேற்றது யாழ்ப்பாணிய மனம்.  யாழ்ப்பாணியம் ஈழத்தேசியமாக பரிணாமம் அடைந்தது இப்படித்தான்.
இவை எல்லாவற்றையும் விட மிகப்பெரிய ஆபத்தான விடையம் என்னவென்றால், ஈழத்தேசியத்தின் பிரதிநிதியாய் உள்ளார்ந்த யாழ்ப்பாணியத்தின் பிரதிநிதியாய் இருக்கின்றவர்கள் ஈழத்தில் குழந்தைகள் காப்பகத்தையும், சிறுவர் பாடசாலை களையும் கைப்பற்றி நடாத்திக் கொண்டிருப்பதுதான். செஞ்சோலை என்ற பெயரில் யுத்தத்தில் பாதிப்புற்ற அநாதைச் சிறுவர்களை பராமரிப்பதாகச் சொல்லும் விடுதலைப் புலிகள் மீது தொடர்ச்சியாக சிறுவர்களைப் படையணில் சேர்க்கப்படுவது பற்றி வருகின்ற குற்றச்சாட்டுக்களை எவருமே கண்டுகொள்ளவில்லை. அல்லது பேச மறுக்கிறார்கள். அநேக பத்திரிகையாளர்கள் அல்லது எழுத்தாளர்கள் யாவருமே அப்படியொன்று நடக்கவில்லை என்பது போல் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். மறுக்கிறார்கள். எழுகின்ற எந்தக் கேள்விகளுக்கும் பதிலற்ற ஒரு கோமாநிலையில் எப்படி இவர்களால் வாழ முடிகிறது என்பது மிகப்பெரிய கேள்வி. அதற்குரிய பதில் மிகப்பெரியது. அது சொல்லப்படவில்லை.
கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் இவர்களால் இலகுவாக நுழைய முடியும் என்பதற்கு நம்முன்னால் உள்ள  வாழ்வு சாட்சி. உலக வரலாற்றின் பொக்கிசமாகக் கருதப்படும் மாணவர் சமூகம் என்பது மிக இலகுவாக எல்லோராலும்  ஏமாற்றப்படக்கூடியது  வென்றுவி டக்கூடியது என்பதற்கு யாழ் பல்கலைக் கழகமே முதன்மைச் சாட்சி. கடந்த காலங்களில் படுமோசமான அரசியல் படுகொலைகள் யாழ் பல்கலைக் கழகத்திலேயே நடந்திருக்கிறது என்பது யாவரும் அறிந்த உண்மை. விஜிதரன் ராஜினி,செல்வி விமலேஸ்வரன் என்று இந்தப்பட்டியல் நீளும். இந்த உண்மை நிலை எப்படி நமது சமூகத்தின் இருட்ட றைகளில் பதுங்கிக் கிடக்கிறது. இதை தூண்டி விடக் கூடிய பெரும் பலம் யாருடைய கையில் இருக்கிறது? இது எவற்றுக்கும் விடையில்லை. விடையில்லை என்பதை விட விடை தேட விருப்பமில்லை. தேவையில்லை. ஈழவிடுதலைப் போராட்டத்தின் இருள் மூடிய பக்கங்களை இவர்கள் அறிய மறுக்கிறார்கள். அப்படி ஏதாவது இந்தப் ப+மியில் நடந்தனவா? நடக்கவேயில்லை. நடந்ததற்கான எந்தவித தடையங்களும் அவர்களிடம் கொடுக்கப்படவில்லை. கொடுக்கப்படாததை அவர்கள் எப்படிப் பேசமுடியும்? அவர்களுக்கு ஈழம் ஒரு வழிபாட்டுக்குரிய ப+மி.  அங்கே பழிகளுக்கும் பாவங்களுக்கும் இடமில்லை. அப்படி நடந்த பழிகளும் பாவங்களும் தெய்வவழிபாட்டிற்குரியவை. தெய்வ தியானத்தில் திளைத்திருக்கும் பல்கலை வளாகம் தெய்வத்தின் குற்றத்திலிருந்து விடுபட தன்னையே தெய்வமாக்குகிறது. தெய்வத்திருவளையாடலை தெய்வத்திற்கு மேலால்  விளையாடுகிறது யாழ்பல்கலைகழகம்.



‘யாழ்ப்பாணியம்’ என்ற  இந்த கொடுஞ்சொல் நடைமுறைவாழ்வில் அரசியலில் என்று சகல திசைகளிலும் தன்னை ஆழப்படுத்தியிருந்தாலும் அவையெல்லாவற்றையும் மறுதலித்தப்பேசக் கூடிய  புத்திசீவிகள் மட்டத்தில் மிகமிக நுண்ணிய தளத்தில் இது உறைந்திருப்பது குறித்து நம்மில் அநேகம்பேர் கண்டுகொள்வதில்லை. இந்த உறைவு நிலையின் அப்பட்டமான வெளிப்பாடுதான் தமிழ்த் தேசிய அடையாளம். இங்கே வெட்கம் என்னவெனில் இவர்களில் அநேகம் பேர் தம்மை வெளிப்படையாக தேசியவாதிகளாக அடையாளம் இடுவதுதான்.

ஈழத்தமிழ்தேசியவாதியாக தன்னை அடையாளப்படுத்தும் ஒருவன் எப்படி ஈழத்து முஸ்லீம்கள் குறித்து அக்கறைப்படுவதாகச் சொல்வது?

தன்னை ஈழத்தமிழ்தேசியத்தில் அக்கறை யுள்ளவனாகச் சொல்லும் ஒருவன் எப்படி ஒடுக்கப்பட்டமக்கள் குறித்து தான் அக்கறை கொள்வதாகவும் சொல்லமுடியும்?

கிழக்கு மாகாண மக்கள் குறித்தும் அக்கறைப்படுவதாகச் சொல்லும் ஒருவன் எப்படித் தமிழ்த் தேசியவாதியாக இருக்கிறேன் என்று சொல்லமுடியும்?

எவ்வளவு முரண்பாடுள்ள விடையம் இது. இதுவரை ஈழத்தமிழ்த் தேசியமாக வளர்ச்சிநிலை எய்திய யாழ்ப்பாணியம் என்பது ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து எந்த இடத்தில் கவலைப்பட்டது?

கிழக்கு மாகாணம் குறித்த உண்மையான கரிசனையை ஏதாவது ஓரு தருணத்தில் அது நிரூபித்ததா? முஸ்லீம் மக்கள் குறித்து  என்ன கருத்தை இந்த தமிழ்த் தேசியம் கொண்டுள்ளது? இவ்வளவு கேள்விகளையும் தம்மைத் தமிழ்த் தேசியவாதிகள்  எனக் கூறிக் கொள்பவர்கள் அல்லது அடையாளப்படுத்துபவர்கள் கேட்டுக்கொள்ள வேண்டும்.

இன்னொரு பக்கம் இந்தத் தமிழ்த்தேசியவாதிகள் தம்மைப் பெரியாரிஸ்டுகள் என்பது வேடிக்கையான விடையம். கறுத்தச் சட்டை உடுத்தி கடவுள் மறுப்பும் செய்தால் மட்டும் பெரியாரிஸ்ட் என்று செல்ல முடியுமா?

பெரியாரின் சிந்தனை கட்டறுக்கும் மிகப்பெரிய புள்ளியான தேசியத்தைத் துறக்க வேண்டாமா? தேசியம் என்பது காதல் அன்பு கடவுள் போன்றது  அது ஒரு பம்மாத்து என்றவரல்லவா பெரியார்.
பொதுவாக இன்று அனேகர்களால் சொல்லப்படும் ஒரு கருத்தியல் நிலை என்பது நமக்கான பொது எதிரி அல்லது முதல் எதிரி சிங்களப் பேரினவாதம் என்பது. இந்த உண்மை நிலை, இதை உண்மை நிலையாக எண்ணப்படுவதற்கு உள்ளார மறைந்திருப்பது தமிழ்த் தேசியம் அல்லாமல் வேறென்ன?.  ஏனெனில் தமிழர்கள் என்ற ஒற்றை அடையாளத்தை நினைவூட்டி தமிழர்களுக்கான பொதுப்பிரச்சனை ஒன்றை முன்நிறுத்தி அந்தப்பிரச்சனைக்கு எதிரானதை மட்டும் முதல்காரணமாக கட்டமைப்பதனூடு தமிழ்த் தேசியத்தினை  இது முன்மொழிகிறது. இதற்குள் தமிழ்ப் பேரினவாதம் செய்து வருகின்ற வன்முறைகள் எல்லாம் காயடிக்கப்பட்டு விடுகிறது. யாழ்ப்பாணியம்தான் தமிழ்த் தேசியவாதம் என்றானபின் ஈழத்தின் மற்றய பகுதிகளுக்கு அங்கு வேலையில்லாமல் போய்விடுகிறது. சிங்களப் பேரினவாதம் முதல் எதிரியில்லாமல் யாழ்ப்பாணியமும் அதற்குள் மறைந்திருக்கின்ற அதிகாரமுமே முதல் எதிரியாகிவிடுகிறதுமற்றவர்களுக்கு.  இந்த யாழ்ப்பாணியத்திற்கு எதிரான போராட்டமே முதன்மைப்பட்டு விடுகிறது. கட்டமைக்கப்பட்ட பொது எதிரி யாழ்ப்பாணியத்திற்கான எதிரி. அது எல்லோருக்குமான முதல் எதிரியாக்கப்படுவது வன்முறை. இந்த வன்முறையை பொதுமைப்படுத்தலை புலிகள் தொடக்கம் புலிகளின் அரசியலை விமர்சிக்கும் அல்லது மறுத்து நிற்கும் மாற்றுக் கருத்தாளர்கள் எனச் சொல்பவர்கள் வரை காவி நிற்கிறார்கள். இவர்களுக்குள் உள்ளார யாழ்ப்பாணியத்தின் ஆணிவேர் ஆழமாக இறுக்கப்பட்டிருக்கிறது. அது எவ்வகையிலும் அவர்களிடம் இருந்து வெளிப்பட்டு விடுகிறது. ஆக நமக்கு முதல் எதிரி சிங்களப்பேரினவாதம் என்றால் இந்த நமக்கு என்பதற்குள் யாரெல்லாம் வருகிறார்கள் என்று  சொல்பவர்கள் அடையாளமிட வேண்டுமல்லவா?



யாழ்ப்பாணம் என்ற பெருமிதத்தினுள் ஈழத்தேசியத்தை அடையாளப்படுத்தும் செயற்பாடுகள் கடந்த காலங்களில் பெருவாரியாகவே நடைபெற்று வருகின்றன. இது மிகவும் பகிடியானதும் அப்பாவித்தனமானதும் ஆகும். யாழ்ப்பாணத்தில் எவடம்? யாழ்ப்பாணத்து முறைப்படி தயாரிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட  எனும் வார்த்தைப் பிரையோகங்களை கூச்சமில்லாமல் பயன்படுத்துவதன் மூலம் தமது சுய அறிவீனத்தை யாழ்ப்பாணத் திமிரை அப்பட்டமாக வெளிக்காட்டும்  மனநோய் கொண்ட ஒரு சமூகமாக மாறிவிட்டி ருப்பதை அவதானிக்க முடியும்.
பொதுச்சூழல் இப்படியிருக்க புத்திசீவிகள்  மாற்றுச்சிந்தனை கொண்டதாகச் சொல்லிக் கொள்ளும் பலரையும் இந்த மனநோய் பீடித்திருப்பதை நாம் நிறையவே அவதானிக்க முடியும்.

கனடா காலம் இதழ்- 18.ல் எடிட்டோரியல் இப்படிச் சொல்கிறது.
ஏ.ஜே. கனகரட்னா அவர்கள் யாழ்ப்பாணத்துக்கே உரிய கல்வி முறையை தக்கபடி பயின்றவர்.என்று எழுதியது. இங்கே யாழ்ப்பாணத்துக்கே உரிய என்பதற்குள் மறைந்திருக்கும் யாழ்ப்பாணத்திமிர் குறித்த கவலை அல்லது கேள்வி காலத்தின் வாசகர்கள் யாருக்கும் இதுவரை எழவில்லை. காலம் இதழ் கனடாவில் இலக்கிய இதழாகத் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது. அந்தத் தொடர்ச்சிக்கும் அந்த உழைப்பிற்கும் நான் மரியாதை கொள்கிறேன். இதுகுறித்து நான் பலதடவை சஞ்சிகை ஆசிரியருடனே பேசியிருக்கிறேன். எவ்விடத்திலேயும் அது குறித்து அவர்கள் யோசித்ததாக இல்லை.இந்த வார்த்தை குறித்து  நான் சில கேள்விகளை உங்களிடம் கேட்க முடியும்.

1. யாழ்ப்பாணத்திற்குரிய கல்வி முறை என்று ஒன்று உண்டாயின் மற்றய பிரதேசங்களுக்கான கல்வி முறைகள் எவை?

2. அவை எப்படி யாழ்ப்பாணத்துக்குரிய கல்வி முறையிலிருந்து வேறுபடுகிறது?

3.மற்றைய பிரதேசத்திற்கான கல்வி முறையை யார் யார் தக்கபடி பயின்றவர்கள்?

4. வேறு  யாரெல்லாம் யாழ்ப்பாணத்துக்குரிய கல்வி முறையைத் தக்கபடி பயின்றவர்கள்?

ஏ.ஜே. கனகரட்னா மட்டும்தான் தக்கபடி பயின்றவர் எனில்
ஏன் யாழ்ப்பாணத்திலுள்ள மற்றவர்கள் தக்கபடி பயில முடியாமல் போனது?
இப்படி பல ஆயிரம் கேள்விகள் நமக்குத் தோன்றுவது தவிர்க்கமுடியாதது. யாழ்ப்பாணத்துக்குரிய முறையில் தயாரிக்கப்பட்ட வறுத்த மிளகாயத்தூள் என்ற வார்த்தையிலிருந்து  இந்த வார்த்தை எவ்விதத்திலும் வேறுபட்டதல்ல.
அடுத்து கனடா பதிவுகள் டொட் காம் எழுதியது:
யாழ்ப்பாணத்தில் தலித் பெண்களை வைப்பாட்டிகளாக வைத்திருப்பதற்கு ஏற்றுக்கொண்டவர்கள்தானே நாங்கள் என்கிறது.
இதை கனடாவில் ஒருபாலுறவுசார்ந்த கருத்தியலைப் பற்றிப் பேச வந்த ஓர்க்வில் நிருபாமா என்ற பெயரில் ஒழிந்திருக்கும் ஒருயாழ்ப்பாணி- இப்படி ஒருவர் கனடாவில் எழுதுவதில்லை அப்படி ஒருவரும் கனடாவில் இல்லை என்றே அனைவரும் சொல்கிறார்கள்-
இதை எழுதினார்.
இதுபற்றி அதே இணையத்திற்கு நான் மறுத்து எழுதிய மூன்று நிமிடத்தில் அந்தக் கட்டுரையிலிருந்த வரிகள் நீக்கப்பட்டுவிட்டன. ஆக என்னால் இந்த மோசமான கருத்தியலுக்கு அந்த இணையத்தின் ஆசிரியரையே குற்றஞ்சாட்ட முடியும்.
 நான் அவரிடம் கேட்டு எழுதியது தலித் பெண்களை வைப்பாட்டிகளாக வைத்திருப்பதற்கு ஏற்றுக்கொண்டவர்கள்தானே நாங்கள் என்பதில் வருகின்ற நாங்கள் என்பதற்குள் மறைந்திருக்கும் சாதி எது? என்பதுவே.
கவனமாகக் கவனிக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் - நாங்கள் என்ற சொல்லாடலுக்குள் இருக்கின்ற மிக முக்கியமான தளம் பற்றி கருத்துக்கெடுக்காதவர்கள் இவர்கள். அந்தக் கருத்தாக்கம் தருகின்ற வன்முறைகள் குறித்த கேள்விகளை எழுப்பாதவர்கள் இவர்கள்;. இவர்கள் எல்லோரும்தான் தம்மை ஈழத்தேசியவாதி களாக அடையாளப்படுத்துகிறார்கள். இந்த ஈழத்தேசியவாதிகள் மீது நாம் எவ்வகையான அவதானத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
இந்த ஈழத்தேசியவாதிகள் அநேகமானோர் யாழ்ப்பாணத் திலிருந்து முஸ்லீம்கள் விரட்டப்பட்டது குறித்து பேசமுற்படும் போது சித்தசுவாதீனமற்றவர்களாகிவிடுகிறார்கள். வரலாற்றின் பாதையிலிருந்து முறித்தெறியப்பட்ட அந்த இனம் தனது பாதையை நேராக்க இன்னும் எவ்வளவுகாலம் காத்திருக்க வேண்டியிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.
யாழ்ப்பாணத் திமிரின் உச்சக்கட்ட வன்முறையாய் இருந்தது அந்தத் துரத்தி யடிப்பு. இன்றைக்கு 16 வருடங்கள். இன்னும் தெளிவற்ற நிலை. இப்ப நாங்கள் திரும்பி வந்து இருக்கச் சொல்லி விட்டோம். அவர்களும் திரும்பி வந்திருக்கிறார்கள் நன்றாக வாழ்கிறார்கள் என்று புலிகள் தங்களது பினாமி ஊடகங்கள் மூலம் சொல்ல வைக்கிறது.  ஆனால் 16வருடத்திற்குப்பின் எதுவுமற்ற ஒரு இடத்திற்கு எப்படிப் போய்  வாழ முடியும் என்று யோசிக்கிறது முஸ்லீம் இனம். ஒரு சந்ததி இழந்து இன்னொரு சந்ததி உருவாகிவிட்டகாலம். எங்கே போவது.யாரை நம்பிப் போவது? இது இப்படியிருக்க யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் துரத்தப்பட்ட காலத்தை நினைவுகூர அல்லது அதுகுறித்துப் பேச முற்படும் பொழுது இன்றைக்குப் 16 வருடமாகிவிட்டது. இத்தனை வருசத்திற்குப் பிறகும்; அதுகுறித்து ஏன் பேசிக் கொண்டிருக்க வேணும். என்று அந்தப் பிரச்சனையில் இருந்து தப்பிக்கொள்ள விளைகிறது யாழ்ப்பாணியம்.
ஆனால் மறுபுறம் 23 வருசமாகியும் 83 ஜூலைப் படுகொலை குறித்து நினைவுகொள்வதை கேள்வியெழுப்வில்லை. வருடக்கணக்குப் பார்த்தால் நாம் மறந்து போகக் கூடியது  ஜூலைப்படுகொலையே.
குமுதினிப்படகில் கொல்லப்பட்ட மக்கள் குறித்து இத்தனை வருசமாகியும் நினைவுகொள்ளும் நமது தேசியவாதிகள்; ஹென்பார்ம் டொலர் பார்ம் தொழிலாளர்கள் குறித்து ஒருசின்னக் கவலையும் கொள்வதில்லை. அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்பதுவே அவர்களின் சிந்தனை. தமது செயற்பாட்டிற்கு எதிரானவர்கள், மறுத்தவர்கள்,கேள்விகளை முன்வைத்தவர்கள் என்று எல்லோரையும் கொன்றுவிட தமிழ்த் தேசியம் ஒருபோதும் யோசிப்பதில்லை.
எந்தக் கேள்விக்கும் எதுவித பதிலுமற்ற தமிழ்த் தேசியத்தின் பிதாமகனான புலிகள் யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்தை அழித்த காட்சிகளை வரவேற்று நின்றது யாழ்ப்பாணியம். ஒருகையால் ரெலோ இளைஞர்களை தீயில் போட மறுகையில் கொக்கோகோலா உடைத்துக் கொடுத்து தாகம் தீர்த்தது யாழ்ப்பாணியம்.
விடுதலைப்புலிகளால் நடாத்தி முடிக்கப்பட்ட ரெலோ இயக்கத்தினரது அழிப்பில் அழிந்து போனது ரெலோ இயக்கமல்ல. தின்னவேலிச்சந்தியில் ரயருக்குள் கிடந்து கருகிச் செத்தது  கிழக்குமாகாணம். ஆம் திருகோணமலை மட்டக்களப்பு ரெலோ இயக்கப்போராளிகள் மட்டுமே தேடித்தேடிக் கொல்லப்பட்டார்கள். கிழக்கு மாகாண இளைஞர்கள் யாழ்ப்பாணி யத்தின் எதிரிகளாக எப்போதுமே முன்நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
கிழக்கின் மார்ச் பிளவு யாழ்ப்பாணியத்தின் மிக இறுக்க மான ஆணிவேரை ஒட்ட அறுத்தது.
யாழ்ப்பாணியத்தின் காவல னான விடுதலைப் புலிகள் சொல்லிக் கொண்டிருந்த தாகத் தமிழீழத்திலிருந்து கிழக்கு பிரிந்துபோனது. ஈழவிடுதலைப் போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்து அதீதவளர்ச்சி பெற்ற காலம் ஈறாக விடுதலை இயக்க அழிப்பு வரையில் யாழ்ப்பா ணத்திமிர் தன் கோரப் பற்களை நீட்டியே வந்திருக்கிறது. ஆனால் அதன் தாண்டவம் விடுதலைப் புலிகளின் மார்ச் பிளவில் தான் வெளித் தெரிந்தது. யாழ்ப்பாணத்தின் அத்தனை கிடுகு வேலிகளும் யாழ்ப்பாணம் அல்லாத ஒருவனையாவது கொல்வதற்கு துடித்துக் கொண்டிருந்தது. அதே நேரம் யாழ்ப்பாணத்தான் ஒருவனையாவது இழந்து விடக்கூடாது என்று கண்காணித்துக் கொண்டிருந்தது. மட்டக்களப்பில் பிரிந்து போன  விடுதலைப்புலிகளை அழிக்க மட்டக்களப்பு சிறுவர்களையே அனுப்பி அவர்களது சகோதரத்திற்கு எதிராக சண்டையிடவைத்து திமிரின் உச்சக்கட்டத்தை நிரூபித்துக் காட்டியிருக்கிறது யாழ்ப்பாணியம்.

வெருகல் ஆறு யாழ்ப்பாணத் திமிரின் கொலைச் சரித்திரத்தை தன்னகத்தே மெல்லப்பதுக்கிப் பாதுகாத்து  ஓடிக்கொண்டிருக்கிறது. தனது குழந்தைகளின் குருதியை உள்ளாரப் பதுக்கி வைத்திருக்கிறது நாளையவரலாற்றுக்கு காண்பிக்க.
ஆனால் இன்று வரலாற்றை எழுதும் ஆசிரியர்களோ தமது மௌனத்தின் மூலம் அனைத்திற்கும் பச்சைக்கொடி காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதை எழுதாத, இந்தக் கொடூரத்தை மறுக்காதவர்கள் தம்மைப் புத்திசீவிகள் அல்லது மாற்றுக் கருத்தாளர்கள் என்று சொல்லி வருவதில் என்ன அர்த்தம் இருந்து விட்பபோகிறது?
ஆனால் இன்று வரலாற்றை எழுதவேண்டிய, நம் கைகளில் தவளுகின்ற  தமிழ்ப் பத்திரிகைகளோ உண்மை என்ற ஒன்றை தமது அறிவுப் புலத்திற்கு அப்பால் நின்று நிறுவுகிறார்கள். அந்த உண்மை மூலம் இன்று விடுதலைப் புலிகளையும் அவர்களின் தனித்த அபிலாசைகளையும் முன் நிறுத்துவதினூடாக தமக்கான தமிழ்த்தேசியத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்று நம்பியிருந்தார்கள். அண்மைக்காலமாக அந்த நம்பிக்கையும் அவர்கள் கைமீறிப் போய்கொண்டிருப்பது பற்றி அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இந்த உணர்வு அவர்களிடம் ஒரு பீதியை உண்டுபண்ணியிருக்கிறது. தமக்காக இருக்கின்ற ஒரு பிடியையும் அவர்கள் கைவிட விரும்பவில்லை. அதனால் புலிகளால் செய்யப்படும் அநீதிகளையெல்லாம் இந்தப்பத்திரிகையாளர்கள் குறிப்பிடுவதில்லை. புலிகளின் அத்துமீறிய வன்முறைகளெல்லாம் இவர்களால் வரவேற்கப் பட்டிருக்கின்றன. புலிகள் தமக்கான காரணமாக எதைச் சொல்கி றார்களோ அதையே அச்செடுப்பதற்குத் தயாராக இருக்கிறார்கள். புலிகளின் வாக்கே  அவர்களது ஆசிரியமாகிவிடுகிறது.
எவ்வகையிலும் எதிராக மக்களைச் சிந்திக்க வைக்காது மிகவும் தந்திரோபாயமாக புலிகளைக் காப்பாற்றி வைத்திருக்கும் செயற்பாட்டில் வெற்றி பெறுகிறார்கள். புலிகள் தமது இருப்பை நிலை நாட்ட என்னவெல்லாம் செய்ய நினைக்கிறார்களோ. அதை அப்படியே செய்வதற்கு வழிகாட்டிகளாக இருப்பது இன்றைய தமிழ் ஊடகங்கள்.இன்றைய கொலைகளுக்கும் அத்துமீறிய வன்முறைகளுக்கும் துணையாய் இருக்கும்  தமிழ்வெறி கக்கும் ஊடகங்கள் வரலாற்றின் குற்றநிலையில் முதலிடம் பெறுவார்கள். ஈழத்தில் இன்று நடந்து கொண்டிருக்கும் அத்தனை கொலைகளிற்கும் புலிகள் பொறுப்பெடுக்க வேண்டிய வர்கள்.அவர்களே குற்றவாளிகள். ஆனால் அவற்றைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்திய குற்றமான ஊழnளிசையஉல வழ உழஅவை அரசனநச தாக்கலை எதுவித எதிர்ப்புக்களுமற்று இருகரம் கோர்த்துக் காப்பாற்றி வந்த  பத்திரிகைகளின்மீதும்   அதன் எழுத்தாளர்கள் மீதும் நடைமுறைப்படுத்த வேண்டும்.  புலிகளின் எந்தவொரு வன்முறையையும் இவர்கள் இன்றுவரை எழுதியது கிடையாது.
இதைவிட இன்னுமொரு மோசமான நிலை இருக்கிறது. அது தன்னைப் புத்திசீவிகள் என்று சொல்லிக்கொள்கிறது. தனக்கு ஏன் தேவையில்லாத வேலை என்று சொல்லி தருணம் பார்த்திருப் பதாகச் சொல்லும் அந்த வட்டம் எப்பொழுதும் மௌனமாகவே இருந்து வருகிறது. இது ஒரு சட நிலை. இதற்கும் முதற் சொன்னதற்கும் பெரிய வேறுபாடு கிடையாது. இரண்டுக்கும் தருணம் தான் வித்தியாசம். மௌனம் என்பது சட நிலை. சம்மத நிலை. அதை நான் ஒரு போதும் ஒத்துக் கொள்ளப் போவதில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியம், ஈராக் படுகொலை, ஆப்கானிஸ்தான் சண்டை, என்று எல்லாவற்றையும் பேசும் இந்த புத்திசீவிகள் கூட்டம் எப்படி இதில் மட்டும் அமைதியாக இருக்க முடியும்?
இந்தப் பெருத்த அமைதிக்குப் பின்னால் இருப்பது எது? உயிருக்கான பயம் என்பதை  நான் ஒத்துக்கொள்ள மாட் டேன். இங்கே புலிகளின் கட்டாயப்பண வசூலிப்பை எத்தனை அப்பாவி மக்கள் தனித்து எதிர்த்து நின்றிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் எந்தளவுக்குப் பயம் கொண்டிருக்க வேண்டும். அவர்க ளுக்கு இல்லாத பயம் எப்படி இந்தப் புத்திசீவிகளுக்கு மட்டும் வரமுடியும்? சரியான வேடிக்கையான விடையம் இது. இல்லை  இவர்கள் பயமற்று இருக்கிறார்கள் எனில் ஏன் இவர்கள் எதிர்ப்பதில்லை?
இவர்கள் தமிழீழம் ஒன்று உருவாகும் என்று நினைக்கிறார்கள். தமிழீழம் என்ற ஒன்று தேவை என்று மனசார எண்ணுகிறார்கள். அதனைப் பெற்றுத்தர இன்று புலிகளை விட வேறு எவர்களாலும் முடியாது என்று நினைக்கிறார்கள். தங்களது பிள்ளைகளைத் தவிர வேறு எவரைக் கொன்றாவது தமிழீழம் பெற்றுத்தரவேண்டும் என்று தினமும் கடவுளைத் தியானிக்கிறார்கள். அதற்காகவே அவர்கள் மௌனமாக இருக்கிறார்கள். இங்கே அவர்களது மௌனம் தியானமே தவிரப் பயமில்லை. தியானத்திலிருந்து கடைக்கண்ணால் அத்தனை கொலைகளையும் கவனிக்கிறார்கள். கொலை செய்யப்பட்டவர்கள் தங்களுக்குத் தேவையற்றவர்கள் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரிகிறது. தங்களுடைய விழிப்பிற்கான தருணம் இதுவல்ல என்பது அவர்களுக்குத் தெரியும். தருணம் முக்கியம். பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு தருணத்திலும் யாழ்ப்பாணியம் தன்னை பாதுகாத்து உயர உயர வளர்க்கிறது. தமிழீழம் என்பது தமிழர்களுக்கான ஆகக்கூடிய ஒரு பொய். ஒரு ஏமாற்று. அது உண்மையற்ற ஒரு தளம். அதற்குள் மிகக் கவனமாக ஒழிந்திருப்பது யாழ்ப்பாணியம்.

 
மற்றது இதழ்2
2006

No comments:

Post a Comment