Tuesday 21 July 2015

“இவர்களுக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்.”

லெனின் சின்னத்தம்பி:
நாவலை முன்வைத்து தேடகம் ஒழுங்கு செய்த அரங்கில் பேசியது.

கற்சுறா



“திட்டமிட்டு ஒருவருக்கு அயோக்கியத்தனம் பண்ணுகின்ற ஒருவன்
ஒருபோதும் இன்னொருவருக்கு நன்மை செய்துவிடப்போவதில்லை.
ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அப்படி அவன் நன்மை செய்கிறான் என்றால்
எப்போதும் அது தன்னுடைய இலாபம் கருதியதாகவே இருக்கும்.
ஆனாலும் அந்த அயோக்கியத்தனத்தை மற்றவனுக்குச் செய்வதற்காக அவன் தருணங்களைக் கணக்கிட்டபடியே இருப்பான்.”

இந்தச் சத்தியம் பலருக்கு தமது வாழ்வின் அனுபவமாக இருந்தாலும் ஒரு ரெஸ்ரோரன்ட் தொழிலாளிக்கு அவன் அன்றாடம் உணரும் சத்தியமாக இருந்து விடுகிறது.

ஐரோப்பாவில் அகதி வாழ்வினைத் தொடங்கியவர்களில் பெரும்பாலானவர்கள் ரெஸ்ரோரன்ற் இல் கோப்பை கழுவும் அனுபவங்களைப் பெற்றிருப்பார்கள்.

கோப்பைகழுவியவர்களில் அநேகர் பின்நாளில் புலம்பெயர் கவிஞர்களாகிய பொழுது கோப்பை கழுவிய வலிகளைத் தங்களது கவிதைகளாக எழுதினார்கள். அதனால் அதிகமான புலம்பெயர் கவிதைகளில் கோப்பை கழுவும் வலி பதிவாகிவிட்டது என்றே எண்ணுகிறேன்.

பின்நாளில் அந்தக் கவிஞர்களும் கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டார்கள். அதனால் அந்த வலிகளின் பூரணத்துவம் எழுத்துக்களில் பதியப்படவில்லை. அந்த வலிகளின் ஒரு பகுதிப் பூரணத்துவத்தையேனும் இந்த லெனின் சின்னத்தம்பி என்ற நாவல் பதிந்திருக்கிறது என்றே எண்ணுகிறேன்.

கோப்பை கழுவும் தொழில் என்பது ஒரு இலங்கை அகதிக்கு ஆரம்பகாலங்களில் இலகுவாகப் பெற்றுவிடக்கூடிய தொழிலாக இருந்தது. கோப்பை கழுவுவதிலும் பயிற்சி. - அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்ற ஒருவிதமான கட்டுப்பாடு இருந்தாலும் ஒரு  இலங்கைத் தமிழனுக்கு அத்தனை பயிற்சிகளையும் அனுபவங்களையும் ஒருநாளில் பெற்றுவிடும் வல்லமை இருந்தது.

ஒரு இலங்கைத் தமிழன் எப்படி யுத்தத்திற்கு தன்னைத் தத்துக் கொடுக்கும் வல்லமை பெற்றிருந்தானோ அதே போல் புலம்பெயர்ந்த தேசங்களில் ஒரு கடை முதலாளிக்குத் தன்னைத் தத்துக் கொடுக்க எப்போதும் தயாராய் இருந்தான்.

அதனாலேயே ஒவ்வொரு சாப்பாட்டுக்கடை முதலாளிகளும் தமது வேலையிடங்களில் ஒரு இலங்கைத் தமிழனை எவ்வித முன்னனு பவமும் இன்றி வேலைக்கு அமர்த்தத் தயாராய் இருந்தானர்.

அப்படிப்பட்ட ஒரு காலங்களில் பேர்லினில் உள்ள ஒரு உணவுச்சாலைக்கு வேலைக்குச் சேர்ந்தவர்தான் இந்த நாவலில் வரும் லெனின் சின்னத்தம்பியும்.

இளமையான தோற்றத்துடன் தலையில் மயிருடன் வேலைக்குச் சேரும் லெனின் சின்னத்தம்பி வேலைத்தளம் திவாலாகிப்போய் மண்டையில் மயிரற்று முதுமையாக வெளியேறுகிறார்..

இடையில் பதினைந்து வருடங்கள். ஒரு ரெஸ்ரோரன்ற் எப்படி ஒரு கடை நிலைத் தொழிலாளியை ஏமாற்றியது ஒரு முதலாளித்துவ நாடு இவர்களை ஏமாற்ற சட்டங்களாக முதலாளிகளுக்கு எப்படி வசதி செய்து கொடுத்திருக்கிறது. அந்த சட்டங்களைப் பயன்படுத்தி எப்படி முதலாளிகள் அயோக்கியத்தனம் பண்ணுகிறார்கள். சேர்ந்து வேலை செய்யும் வேற்று இனத் தொழிலாளர்கள் ஒரு கோப்பை கழுபுபவன் கறுப்பன் ஒரு ஆசிய நாட்டவன் என்பதால் வசவுகள் கயமைத்தனம் என்பவற்றால் எப்படி ஒதுக்குகிறார்கள். அவமதிக்கிறார்கள் என்று சொல்லிச் செல்கிறது கதை.

இது கதையல்ல. 

உண்மையில் அகதிகளாய் வந்து ரெஸ்ரோரன்ரில் கோப்பை கழுவிய ஒவ்வொரு இலங்கைத் தொழிலாளர்களின் வாழ்வு.

நான் கடந்த 25வருடங்களுக்கு மேலாக ரெஸ்ரோரன்ற் தொழில் செய்து வருகிறேன். இந்தக் கதையின் ஒவ்வொரு பக்கங்களிலும் நான் இருக்கிறேன். 

எனக்கு இது புனைவு அல்ல. என்னை பெயர் மாற்றி விட்டிருக்கிறான் ஜீவமுரளி.
என்னைப் போன்றவர்கள் அனுபவித்த கதை இது.

இந்தக் கதையின் ஆரம்பத்தில் பெயர் வைத்தல் சம்பவம் ஒன்று வரும். அது அப்படியே எனக்கு நடந்தது.

நான் பிரான்சிற்கு வந்த மறுநாள் எனது அண்ணா வேலை செய்த கடையில் என்னைச் சேர்த்து விட்டு அவர் வேறு வேலைக்குச் சென்றார். அண்ணாவிற்கு அவர்கள் அவரது பெயரை மாற்றி புறினோ என்று அழைத்து வந்தார்கள்.
அவருடைய பெயரோ என்னுடைய பெயரோ உச்சரிப்பிற்கு இடைஞ்சல் இல்லாத பெயர். அப்படியிருந்தும் எங்களுக்கு அவர்கள் எங்களது பெயரை மாற்றினார்கள்.

இவர்களுடைய கடைக்கு  நான் வேலைக்குப் போனதும் எனது பெயரை அவர்கள் கேட்கவில்லை அண்ணாவிற்கு  அழைத்த அதே புறினோ என்ற பெயரைக் கொண்டே என்னையும் அழைத்தார்கள்.

அந்தப் பெயரைக் கொண்டு அவர்கள் என்னை அழைக்கும்போது ஆழ்மனத்தில் வரும் கவலையை அல்லது அழுகையை நீங்கள் எந்தமொழிக் கவிதையைக் கொண்டும் எழுதிவிடமுடியாது.

உங்களுக்கு நினைவிருக்கலாம் குட்டி திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி. 11வயதில் சிறுமி ஒன்றை தன்னுடைய வீட்டிற்கு வேலைக்குக் கொண்டு வரும் ஒரு பட்டணத்து மனிதன் தன்னுடைய காரிற்குள் அவளை ஏற்றியவுடன்  அந்தச் சிறுமியின் பெயரை மாற்றுவான்.

வன்னியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வேலைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுமிகள் அநேகம் பேர் இதேபோல் யாழ்ப்பாணத்துத் திமிர் பிடித்தவர்களால் உடனடிப் பெயர்மாற்றம்’ செய்யப்பட்டவர்கள்தான்.

இப்படி இந்தப் பெயர் மாற்றும் வலி…
புலம்பெயர்ந்த சூழலில்  ஒரு கொட்டும் பனியை விட அல்லது பனியின் கொடுங்குளிரை விடவும் கொடுமையானது.

இங்கே இந்தப் பெயர் மாற்றம் என்பது ஒரு துவேசத்தின் அடையாளமாக நான் வேறு நீ வேறு நானும் நீயும் ஒன்றல்ல எக்காலத்திலும் நாங்கள் சேரமுடியாதவர்கள் என்பதன் குறியிடாகச் சொல்லப்படுகிறது. 

அந்நியத் தன்மையை  எப்போதும் நினைவுபடுத்தும் விதமான உச்சரிப்புப் பிழைகளோடு நமதுபெயரை உச்சரித்தல் என்பது நீங்கள் எப்போதுமே எங்களுடையவர்களாக மாறமுடியாது என்பதாகக் காட்டப்படுவது.  இதனை மிக நுணுக்கமாக ஜெகதீஸ்வர காந்த சர்மாவின் பாத்திரத்திற்கூடாக முரளி காட்டியிருப்பான்.

இந்த நாவலில் திறப்பு ஒரு அடையாளமாக வருகிறது. வேலையாட்களுக்கு வழங்கப்படும் திறப்பு என்பது ஒரு அதிகாரத்தின் சின்னமாகவும் மறுபுறம் அடிமையின் சின்னமாகவும் நாவலில் வந்து முடிகிறது.
வைத்திருக்கும் திறப்பும் நாவலில் சொல்லப்படும் மூன்று மாடிக்கட்டடங்களின் கதவுகளும் தொழிலாளிக்கும் முதலாளிக்கும் இடையேயான இடைவெளிகளையும் அவர்களிடையே உள்ள 

பரஸ்பரத்தின் அளவுகளையும் கூறுபவையாக நாவல் முடிவு வரையிலும் வந்து போகிறது.

இந்த நாவலில் வருகின்ற சம்பவங்கள் அனுபவங்கள் உங்களில் யாருக்கேனும் சாதாரணமாக ஒரு பிளாஸ்டிக் வாளி செய்யும் கம்பனியில் இங்கு பெற்றிருக்க முடியும். அல்லது ஒரு இராணுவ பயிற்சி முகாமில் நீங்கள் பெற்றிருக்க முடியும்.

இங்கு பிளாஸ்டிக் வாளி செய்யும் கம்பனியில் வேலை செய்த பலரை எனக்குத் தெரியும் அவர்கள் இதில் வந்த லெனின் சின்னத்தம்பியாக இருந்து கங்காணிமாரினால் ஏமாற்றப்பட்ட சில கதைகளை எனக்குச் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனாலும் ஒட்டு மொத்தமாக ஏமாற்றப்படும் / வதை செய்யப்படும் லெனின் சின்னத்தம்பிகள் இன்னமும் ரெஸ்ரோறன்ற்களிலேயே வேலை செய்கிறார்கள்.

ரெஸ்ரோறன்ற் ஒன்றில் வேலை செய்கின்ற அத்தனை வேலையாட்களுக் கும் தமது வேலை அடையாளங்களும் வேலையின் தரங்களும் தெரிந்திருக்கும் ஆனால் தனக்குரிய வேலை எதுவென்றும் தன்னுடைய தகுதி எதுவென்றும் கடைசிவரை தெரியாமல் இருந்து தினமும் வேலைக்குச் செல்லுதல் என்பது அங்கு கோப்பை கழுவுகின்ற கடைநிலைத் தொழிலாளிக்கு மட்டுந்தான்.

யாராலும் எந்தநேரத்திலும் பந்தாடப்படுகின்ற வதைபடப்படுகின்ற ஒரு நபராகவே அந்தக் கோப்பை கழுவும் பாத்திரம் இருக்கும். அதற்கு இனம் மொழி மதம் அத்தனையும் கடந்த ஒரு விசித்திரமான வதை கிடைத்துக் கொண்டிருக்கும். அது ஒரு கடை நிலைத் தொழில். அந்தத் தொழிலின் வதை இந்த லெினின் சின்னத் தம்பி என்ற பாத்திரத்தின் மூலம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

இந்த லெனின் சின்னத்தம்பி இரண்டு பிள்ளைகள் மனைவியுடன் இரண்டு தசாப்தங்களாக பேர்லினில் வாழும் ஒரு அகதித் தமிழன். புதிய ஒரு பிரதேசத்தின் கால வேறுபாடுகளைக் கூடப் பொருட்படுத்தாமல் குடும்பச்சூழலின் நிமித்தம் அதிகாலையில் இருந்து நடுச்சாமம் வரை உணவுச்சாலையில் வாழ்வைத் தொலைக்கிறார்.

வேலைத்தளத்தில் கொடுக்கப்படும் அளவுக்கதிகமான அழுத்தம் காரணமாக  மனநிலை குழம்பிப்போய் தூக்கத்தைத் தொலைத்து ஒரு பைத்தியக்கார மனநிலையில் உழன்று திரிகிறார் சின்னத்தம்பி.

ஒரு தசாப்தம் கடந்த பின்னர் கூட வேலையின் சூட்சுமங்களை கைக்கொள்ளமுடியாது இருக்கும். அந்த நிலையிலும் செக்குமாடுபோல் ஒரு இலங்கைத் தமிழன் சுற்றிக் கொண்டிருப்பான். இந்த செக்குமாட்டு நிலை ஐரோப்பிய முதலாளிகளுக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டதொன்று. இதுதான் ஒரு இலங்கைத் தமிழனை அவன் வேலைக்கு அமர்த்த ஆசைகொள்ளும் காரணம்.

இந்தக்காரணத்தை அத்தனை இலங்கை அகதியின் மனநிலையிலிருந்து லெனின் சின்னத்தம்பி இந்த நாவலில் திறம்படச் செய்வார்.

இதில் லெனின் சின்னத்தம்பியின் பாத்திரம் முழுக்கவும் ரெஸ்ரோரன்ற் சுவருக்குள்ளேயே கட்டப்பட்டிருக்கிறது. ஒரு கோப்பை கழுவுவதிலிருந்து அவனது ஒப்பந்தத்தினை இலாவகமாக மாற்றியமைத்து ஒரு சமையற்காரனுக்குரிய  பழுவான வேலைகளைத் திணிப்பதும் அதனை நிராகரிக்கமுடியாதபடி சூழலை உருவாக்குவதும் .வேலையற்றுப்போகின்ற அச்சத்தை எப்போதும் ஏற்படுத்திக் கொண்டிருப்பதும் பாரிய அண்டாக்களும் அதன் சத்தங்களும் மேற்பார்வையாளனின் மிரட்டல்களும் வெளியே போனால் திறபடாத கதவுகளும் என்று லெனின் சின்னத்தம்பியின் கதை மூன்று மாடிகொண்ட நான்கு சுவர்களுக்குள்ளேயே  சொல்லப்பட்டிருக்கிறது.

லெனின் சின்னத்தம்பியின் குடும்பம் அகதிவாழ்வு  என அது விரிவுபடுத்தப்படவில்லை. அதைச் சொல்லவந்த கதையல்ல இது. ஒரு முதலாளித்துவ நாட்டில் ஒரு உணவுச்சாலை என்கின்ற வேலைத் தளம் எவ்வளவு கொடுமையாக இயங்குகின்றது எந்த முன் அனுபவமும் அற்ற ஒரு இலங்கைத் தொழிலாளியின் உழைப்பை மட்டுமல்ல மற்றய நாட்டின் கடைநிலைத் தொழிலாளிகளையும் எப்படி நடாத்துகிறார்கள் என்பதனையே கதையாகச் சுற்றியிருக்கிறது. அதனை லெனின் சின்னத்தம்பியை மையாமாக வைத்துச் சொல்லப்படுகிறது.

ஒரு முதலாளி ஒட்டுமொத்தமான தொழிலாளிகளையும் ஏமாற்றி வேலை வாங்கிக் கொண்டிருக்கும் போது அதன் படிநிலைகளில் அடுத்திருக்கும் மேற்பார்வையாளன் தனக்குக் கீழுள்ளவனை ஏமாற்றிக் கொண்டிருப்பான். அத்து மீறிய அதிகாரத்தைச் செலுத்துவான். அப்படியே படிநிலை குறைந்து ஒரு கடைநிலைத் தொழிலாளியை முதலாளியுடன் சேர்ந்து மேலுள்ள அத்தனை பேரும் அதிகாரத்துடன் வேலைப்பழுவையும்  அதிகமாக்கி மனித நிலை என்ற தரத்திலிருந்து தாழ்த்தி  ஒரு சித்திரவதை கூடமாக யோசிக்க வைக்கும் அளவுக்கு அந்த ரெஸ்ரோரன்ற் சூழலை உருவாக்கி விட்டிருப்பார்கள்.   

இயந்திரமயமான நவீனமயப்படுத்தப்பட்ட மிகுந்த தொழில் வல்லமை பெற்ற ஒரு சமையற்கூடத்தில் அதிகாரமையம் எப்படி ஏமாற்றுக்களையும் குழிபறிப்புக்களையும் திட்டமிட்டுச் செய்கிறது என்ற ஒரு பார்வையாக இருப்பதால்

இதில் அநாவசியமான கற்பனைக்கும் அதன் சித்து விளையாட்டிற்கும் இடமளிக்கவில்லை. இது ஒரு நாவலின் செல்நெறிக்குள் அகப்படாமல் பக்கப் பிரிப்புக்களுக்குள் கூட நிற்காது தொடக்கமும் முடிவுமாக ஒரு இறுக்கமான மொழியோடு கதை சொல்லப்படுகிறது.

ஜீவமுரளியின் வாதங்களையும் அவனோடு உரையாடல்களையும் தொடரும் எனக்கு இந்த மொழி ஒரு இடைஞ்சலாக இருக்கவில்லை. ஆனால் பலருக்கு  அந்த இடைஞ்சல் இருக்கக்கூடும். 

ஒரு சிறுகதை வாசகனுக்கு அல்லது நாவல் வாசகனுக்குப் பரீட்சயமான மொழியல்ல இது.  எனினும் ஒரு ரெஸ்ரோரன்ற்  தொழிலாளி அனுபவம் பெற்றவனுக்கு அந்த இடைஞ்சல் இருக்காது. கதையை இந்தவகை மொழிக்குள்ளால் புரியப்படுவதிலும் ஒரு தேவை இருப்பதாகவே உணர்கிறேன்.

கடந்த கிழமை ஜீவமுரளியுடன் பேசினேன். நான் நாவலின் தொடக்கம் முதல் முடிவு வரை வாசித்தேன். 

ரெஸ்ரோறன்ற் ஒன்றில் வேலை செய்யும் ஒரு கடை நிலைத் தொழிலான கோப்பை கழுபுவனது சிக்கல்கள் வலிகள் சட்டத்தின் ஏமாற்றுக்கள் எல்லாவற்றையும் பதிந்திருக்கிறாய். வெள்ளைக்கார முதலாளியிடம் வேலை செய்தால் இந்த ஏமாற்றுக்கள் இலகுவாக வரும் மச்சான். ஆனால் தமிழ் முதலாளிகளிடம் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு வேலை செய்த சம்பளமே வராது.. செய்த முதல்மாதச் சம்பளத்தை எப்படியாவது வாங்கிவிடவேண்டுமென்று தொடர்ந்து வேலை செய்யும் எத்தனையே ஆண்களை அளவுக்கும் அதிகமான பெண்களை இங்கு எனக்குத் தெரியும் என்றேன். 

உண்மையில் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் சோத்துக்கடையில் வேலை செய்த எங்கள் சிறுவர்கள் பற்றிய கதை ஏதாவது எங்கேனும் ஒரு சிறுதையிலாவது பதியப்பட்டிருக்கிறதா? என்று தேடினால் இல்லை. ஏன் பதியப்படவில்லை என்ற காரணத்தைத் தேடினால்
எந்த எழுத்தாளர்களும் அந்தச் சிறுவர்களாய் இருந்து வாழவில்லை. என்பதுடன் அந்த வலிகளைக் கொண்ட சூழலை தமக்கு அருகாமையில் கூட இருத்திப் பார்க்கவில்லை. நினைத்துப் பார்க்கவில்லை.

உதாரணத்திற்குப் பாருங்கள்…
இலங்கையிலிருந்து ஐரோப்பாவிற்கு புலம் பெயர்ந்த ஒரு நபர். இந்த நபர் முதல்நாள் கிளீனிங் தொழிலுக்குப் போய் வந்து அதனை அவமானமாகக் கருதித் தனக்குத் துடைப்பான் என்று அழகாகப் பெயரிட்டார். அப்போது நான் கேட்டேன் அண்ணே நீங்கள் துடைப்பான் என்றால் நான் என்ன எனக்குச் சட்டி பானை அகப்பை என்று பெயர் வைக்கவோ என்று? வாழ்க்கையில் தாங்கள் துடைக்கவும் கழுவவும் வேண்டியவர்கள் அல்ல ஆனால் காலம் நம்மைச் செய்யவைக்கிறது என்ற ஆழ்ந்த துக்கத்தில் சூட்டப்பட்ட பெயரே அந்தத் துடைப்பான் என்பது.

சமூகத்தில் இருக்கும்  அதிகாரங்கள் மீது காறி உமிழ்வதும் அந்த அதிகாரம் செயற்படுத்தும் அவமானங்களைப் புரட்டிப் போடுதலும் ஒரு எழுத்தாளனின் கலைஞனின் முக்கிய செயற்பாடாய் இருக்கவேண்டும். அது தனக்கு நிகழாததாய் ஆயினும்.

அந்தவகையில் லெனின் சின்னத்தம்பி தன்னளவில் கோபங் கொண்டுள்ளது. ஆனாலும்
ஜீவமுரளியின் இந்த லெனின் சின்னத்தம்பி பாத்திரம் உள்ளாரக் கொஞ்சம் புனிதத் தன்மை கொண்டிருக்கிறது.

நானோ எனக்குத் தெரிந்த லெனின் சின்னத்தம்பிகளோ எமது வேலைத்தளங்களில் புனிதமானவர்களாக ஒருபோதும் இருக்கவில்லை.
இருக்கவும் முடியாத சூழல் அது.

லெனின் சின்னத்தம்பியாய் வாழ்ந்த காலத்தில் ஒருமுறை பாரீசில் முதலாளியுடன் ஏற்பட்ட தகராறில் அங்குள்ள தொழிற்சங்கத்தில் முறையிடச் சென்றேன் தொழிற்சங்கவாதியோ என் முதலாளிக்கு போன் பண்ணி உன்னுடைய ஆள் இங்கு வந்திருக்கிறார் நான் என்ன செய்ய என்று எங்களுக்குத் தெரியாமல் என் முதலாளியுடன்  பேரம் பேசினான்.

அன்றிலிருந்து முதலாளிகளுடன் இருக்கும் தகராறினை நேரடியாகவே நாங்கள் எதிர்கொண்டோம். நாங்கள் தோற்றுத்தான் போவோம் என்று நிட்சயம் தெரிந்திருந்தும். எதிர்கொண்டோம்.

எங்களுக்கு ஒன்றே ஒன்று தெரிந்திருந்தது. இந்தச் சட்டங்களில் இருக்கும் ஓட்டைகளை கற்றுக் கொள்ள மொழி விளங்கவில்லை. அதற்கான அறிவும் இருக்கவில்லை. முதலாளிகளுடன் சண்டையிட்டு சட்டரீதியாக நாம் வெல்லமுடியாது என்பது மட்டும் எங்களுக்குத் தெரிந்திருந்தது.
அதற்கான கள்ள வழியைக் கற்றுக் கொண்டோம். அதில் எங்களால் முடிந்தவரை முதலாளிகளை வியாபார ரீதியாகத் தோற்கடித்துக் கொண்டிருந்தோம்.

நாங்கள் முடிந்தவரை அவர்களிடமிருந்து உணவுகளைத் திருடினோம். அவர்களுடைய பொருட்களுக்கு இரகசியமாகச் சேதாரம் விளைவித்தோம். உணவுகளைப் பாவனைக்கொவ்வாததாக பழுதடையச் செய்தோம். அவனைத் தற்காலிகமாகவேனும் தடுமாறச் சேய்தோம். ஆனால் அது ஒரு போதும் முழுமையானதாக இருக்கவில்லை.
ஏமாற்றும் தளத்தில் அவர்களே வென்றார்கள்.

ஆனாலும் ஒரு தமிழ்முதலாளியிடம் வேலை செய்வது என்பது வேறுகதை. அது வெள்ளைக்கார முதலாளியிடம் வேலை செய்வதை விட ஆயிரம் மடங்கு அசிங்கமானது. அவமானமானது.

இங்கே திருடுவதற்கு கூட எதுவுமே இருக்காது. எல்லா உணவுகளும் ஏற்கனவே நாட்சென்றவை.  மிக அதிகமாகப் பழமையானவை. சுகாதாரத் திணைக்களத்தால் மறுக்கப்பட்ட  - தடைசெய்யப்பட்ட உணவுகளையே அவர்கள் பயன்படுத்துவார்கள்.
அதில் நாம் ஒருபோதும் கைநனைக்க முடியாது.

எனக்கும் இங்கு தமிழ் முதலாளிகளிடம் வேலை செய்த அனுபவம் அளவுக்கு மிகுதியாக இருக்கிறது. அங்கே உப்புக் கூடிவிட்டதா என்று பார்ப்பதற்குக் கூட நாக்கில் வைக்க முடியாத உணவுகளை அவர்கள் பயன்படுத்துவார்கள்.

இங்கே பணிபுரியும் தொழிலாளர்கள் பெரும்பாலும் முதலாளிகளின்  கொத்தடிமைகளாக இருக்கிறார்களா என்று கூடச் சந்தேகம் வரும்.
அவ்வளவு அசிங்கமான நடைமுறைகள் உள்ளுக்குள் இருக்கும்.

இங்கு மணித்தியாலத்திற்கு 5டொலர்படி வேலை செய்து 5000டொலருக்கும் மேலால் முதலாளி சம்பளம்  கொடுக்கவேண்டியவர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். ஆனால் முதலாளியோ பென்சிலும் BMW இலும் இன்னமும் வந்து இறங்குகிறான்.
ஒரு தமிழ்க்கடையில் எனக்கு நாலு மாதம் சம்பளம் தருமதி இருக்கும்போது  அவர்கள் குடும்பமாக கியூபா சென்றுவிடுவார்கள். நான் பிள்ளைகளுக்குப் பால் வாங்க பக்கத்திவீட்டிற்குச் சென்று வருவேன்.

கனடாவில் இன்னொரு தமிழ் முதலாளியிடம் வேலை செய்துமுடிய சம்பளம் வாங்குவதற்கு வோடன்& பிஞ்ச் சந்தியில் போய் மணித்தியாலக்கணக்காகக் காவல் நிற்கவேண்டும். நின்றும் ஏமாந்து வீட்டிற்குப் போகவேண்டும். வரமாட்டான். மறுநாள் தருவான் என்றுவிட்டு திரும்பவும் வேலைக்குப் போகவேண்டும்.

அவன் போய்வருகின்ற  பாலியல் தொழிலாளர்களில் வீட்டுவாசலில் போய் நின்று சம்பளம் வாங்கிய அனுபவம் எனக்கு அதிகமாகவுண்டு.

இங்கே தமிழ் முதலாளிகளுக்கு தமிழ் வேலையாட்களை வைத்திருப்பதில் இருக்கின்ற சாதகமான விடையம் என்னவென்றால் ஒரு தமிழ்த் தொழிலாளியின் குடுப்பக் கஸ்டங்களை அவன் உள்ளாரத் தெரிந்து கொண்டுவிடுவான். அதன் பின் அவனை தன்னால் முடிந்தவரை எப்படியெல்லாம் ஏமாற்றலாமோ அப்படியெல்லாம்  ஏமாற்றுவான்.

இங்கு இயங்குகின்ற தமிழ்க்கடைகளில் வேலை செய்யும் தொழிலாளிகளைக் கேளுங்கள் ஒரு வெள்ளைக்கார முதலாளியிடம் வேலை செய்யும் வலியைவிட ஆயிரம் மடங்கு வலிகள் அவர்களிடம் வேலை செய்வதில் இருக்கும். 

சம்பளத்தைக் கூட விடுங்கள் அங்கே அவர்களை அசிங்கமாக நடாத்தும் விதம் கதைகளில் இல்லாதவை.

என்ன வாயிற்குள் வைத்திருக்கிறாய் ஆ என்று காட்டு என்று ஒரு தொழிலாளியைப் பார்த்து அடிக்கடி அசிங்கமாகக் கேட்கும் தமிழ் முதலாளியை எனக்குத் தெரியும்.

ஒரு பெண் தொழிலாளிக்கு இடுப்பிற்குள் கையை விட்டு என்னத்தை ஒழித்துக்கொண்டு போகிறாய் என்று கேட்ட கயமைத்தனமானவர்கள் நமது தமிழ் முதலாளிகள்.

வேலைக்கு ஆள் தேவை என்று விளம்பரம் போட்டுவிட்டு- அந்த விளம்பரம் பார்த்து மறுநாள் வந்த ஒரு நடுத்தர வயதான பெண்ணை நோக்கி
நாளைக்கு சாகப்போகிறாய் உனக்கு வேலை ஒரு கேடா என்று மற்றய தொழிலாளிகளுக்கு முன்னால் அசிங்கமாய் அந்தப்பெண்ணை நடாத்தியவர்கள் தமிழ் முதலாளிகள்.

ரெஸ்ரோறன்ற்களில் மிகக் குறைந்தளவு சம்பளமே கொடுத்து அந்தச் சம்பளத்திற்கும் மேலால் அவர்களது உழைப்பைச் சுரண்டி வேலை வாங்கும் முதலாளிகள்  தொழிலாளிகளுக்கு ஒரு நாளில் சேர்ந்து வேலை செய்யும் சகபணியாளர்களால் கொடுக்கப்படும்  1வீத டிப்ஸ் காசையும் (இது ஒரு நாளுக்கு 2டொலரோ 2.50 டொலரோ தான் அவர்களுடைய பஸ்காசுக்குக் கூட வராது.)அவர்களுக்குத் தெரியாமல் களவெடுக்கின்ற முதலாளிகள் தமிழ் முதலாளிகள்.

இப்படி இங்குள்ள தமிழ் முதலாளிகளுக்கு மலையகத்திலிருந்து நமது சக தமிழனை வடக்கத்தையான் என்று சொல்லி   கொண்டுவந்து ஏமாற்றி வேலை வாங்கிய மனநிலை இன்னமும் மாறவில்லை. அவர்களுடை மனதில் தங்களுக்கு வேலை செய்கின்ற அத்தனை தொழிலாளர்களும்  இன்னமும் வடக்கத்தையான்களே..

அவ்வளவு கீழ்த்தரமான வசவுகள். வதைகள் இன்னமும் இந்தத் தமிழ் முதலாளிகளிடத்தில்.

வேற்று இனத்து ரெஸ்ரோறன்ற் முதலாளிகளைப்போல் தமிழ் ரெஸ்ரோறன்ற் முதலாளிகள் இருக்கவில்லை. அவர்களில் அதிகமானவர்கள் தமது அறிவீனத்தால் தாங்களாகவே அழிந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் யாழ்ப்பாணத்தின் மரபுகளை ஐரேப்பிய கனடிய நாடுகளிலும் முட்டாள் தனமாகப் பிரையோகித்தார்கள். 

யாழ்ப்பாணத்து முதலாளிகளாய் இங்கும் இருக்கவேண்டும் என்று விரும்பினார்கள் அதனால் அவர்களில் பலர்  முழுமையான வெற்றியை அடையவில்லை. கண்முன்னால் அழிந்து போனார்கள்.

இங்கு என்னுடன் வேலைசெய்த ஒரு லெனின் சின்னத்தம்பியைக் நிதமும் கவனித்து வந்தேன். அவர் தான் செய்கின்ற தொழிலுக்கு மிகவும் நேர்மையானவர். முதலாளி தனக்கு என்ன துரோகம்’ செய்தாலும் எப்படி ஏமாற்றினாலும் அதை அவர் அறிந்தாலும் அதற்கு எந்த ஒரு எதிர்வினையையும் ஆற்றமாட்டார். ஜீவமுரளியின் லெனின் சின்னத்தம்பி போல் மிகவும் புனிதமானவர்.

முதலாளி மீதான தனது கோபத்தில் மிகவும் சத்தமாக  “இவர்களுக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்.”  
என்று கொஞ்சம் சத்தமாகக் கத்தியயபடி தனது வேலையைத் திரும்பவும் தொடங்குவார். அவரைப்பார்க்க எங்களுக்குக் கோபம் வரும்.

எங்களை விடவும் தமிழ் முதலாளிகள் மிகவும் புத்திசாலிகள். தமது தொழிலாளிகளின் குடுப்ப நிலையை தினமும் அவதானித்துக் கொண்டிருப்பார்கள். அதில் மாற்றம் வந்துவிடக்கூடாது என்பது அவர்களுடைய மிகப்பெரிய விருப்பமாக இருந்து வருகிறது.
ஆனால் இப்போதோ நிலமை வேறு….

கனடாவைப் பொறுத்தவரை ரெஸ்ரோரன்ற் முதலாளிகளுக்கு இப்போது புதிய லெனின் சின்னத்தம்பிகள் வருவது இல்லை. அப்படி வருபவர்களும் லெனின் சின்னத்தம்பிகளாக இல்லை. ஒரு லெனின் சின்னத்தம்பியைக் கண்டுபிடிப்பது அவர்களுக்குப் பெரும் பாடாக இருக்கிறது.

இப்போது கேரளாவிலிருந்தோ பங்களாதேசிலிருந்தோ புதிதாக வரும்  லெனின் சின்னத்தம்பி ஒன்றிற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்.

ரொரன்ரோவிற்கு சன்சீ கப்பலில் வந்த ஆட்களே கடைசி லெனின் சின்னத்தம்பிகள். அவர்களே லெனின் சின்னத் தம்பிகளாக ரொரன்டோவில் இப்போதும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆக… ஒருகாலகட்டம் வரையிலும் கோப்பை கழுவியவனாக தற்போது தொடர்ந்தும் ரெஸ்ரோரண்டில் வேலை செய்பவனாக எனது அனுபவம் இப்படித்தான் இருக்கிறது.

கதையைக் கதையாக்குவதில் இருக்கும் சவுகரியம் வாழ்வைக் கதையாக்குவதில் இருப்பதில்லை. அது ஜீவமுரளிக்கு வாய்த்திருக்கிறது. எனக்கோ கோபங்களுடனும் துன்பங்களுடனும் கடந்து சென்றுகொண்டிருக்கும் ஒரு கதையை எழுத்தில் கொண்டுவர வாய்க்குதே இல்லை. 

ஏமாற்றம் என்பது எல்லாத்தளத்திலும் இருந்தாலும் அன்றாடம் சந்திக்கும் ஒரே விதமான ஏமாற்றம் என்பதை யாரும் ரசிப்பது இல்லை. எனது நிலையோ இதே போல்தான்.

இதுவரை பலமான முறையில் பதிவாக்காது இருக்கும் ஒரு தளத்தை முரளி பதிவாக்கியிருப்பது மிகுந்த சந்தோசமானது.

ஒரு கோப்பை கழுவுபவன் தன்னளவில் புரட்சிகர லெனினாகவும் உள்ளரா பவ்வியமான சின்னத்தம்பியாகவும் வாழ்ந்து தொலைத்த பழி எங்களோடு முடியட்டும்.
நன்றி


No comments:

Post a Comment