Tuesday 18 November 2014

திரு. ஆனந்த சங்கரி அவர்களுக்கு …..

கற்சுறா,அசுரா




ஐயா,
வழமையாக நீங்கள்தான் அனைவருக்கும் கடிதம் எழுதுவீர்கள். அதை மீறி நாங்கள் உங்களுக்கு எழுதவேண்டி வந்ததையிட்டு வெட்கப்படுகிறோம். யாழ் உதயன் பத்திரிகையில் நீங்கள் கொடுத்திருந்த செவ்வியே இதனை எழுதத் தூண்டியது.

கடந்த முப்பது வருடங்களாக  இலங்கை நாடு பலத்த இன்னல்களுக்கும் அழிவுகளுக்கும் உள்ளாகியிருந்தது. இன முறுகல் தோன்றிய ஆரம்பகாலங்களில் நீங்கள் இலங்கையின் கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் சாதாரணமக்களுக்குக் கிட்டாத, நினைத்துப் பார்க்க முடியாத மிகப்பெரிய வாசஸ்தலத்தில் வாழ்ந்து வந்தீர்கள். அப்போதும் நீங்கள் த.வி.கூ யின் பா.உ.ஆகவே இருந்தீர்கள். பின்னைய காலத்தில் நீங்களும் கிளிநொச்சியை விட்டோடியவர்தானே. நீங்கள் அரசபாதுகாப்பில் இருந்துகொண்டுதானே பிரபாகரனுக்கு கடிதம் எழுதிவந்த நீங்கள்.

ஆனால் இன்று சுயேட்சையாக தேர்தலில் நிற்கும் புத்திஜீவிகளும், இலக்கியவாதிகளும் இராணுவச்சுற்றி வளைப்பிற்குள்ளும்,  புலிப்பாசிசத்தையும் எதிர்கொண்டு வாழ்ந்தவர்கள். அவர்களுக்கு எந்தப்பாதுகாப்பும் இருந்ததில்லை. ஐயா நீங்களும், உங்கள் மதிப்பிற்குரிய கனவான்களும் வளர்த்துவிட்ட அரசியலை ஆயுதத்துடன் முன்னெடுத்தவர்கள் தானே புலிகள். துரையப்பாவின் கொலையென்பது உங்கள் கனவான் அமிர்தலிங்கத்தின் மனம் குளிரச் செய்யபட்டதுதானே. துரோகிகள் பட்டியலுக்கு பிள்ளையார் சுழி போட்டதும் உங்கள் மதிப்பிற்குரிய கனவான்அமிர்தலிங்கம் என்பதுதானே வரலாறு.

தமிழ் மக்களது பிரச்சனைகளைப் பற்றிப் பேச நேர்மையான தைரியமான ஒருவர் தற்போது இல்லை. அந்தத் தகுதி எனக்கிருக்கிறது அதனால்தான் போட்டியிடுகிறேன் என்று மிகக் கீழ்த்தரமாக ஒரு ‘கடை’ மனிதனாக சொல்லிக் கொள்ளும் நீங்கள் வைத்திருக்கும் ஒரு தகுதியைச் சொல்லுங்கள். உங்கள் அரசியலிலும், சிந்தனையிலும் எந்த மாற்றத்தையும் எங்களால் காணமுடியவில்லை. உங்கள் கனவான்கள் பின்பற்றிய அரசியலும், அவர்களது  சிந்தனையும்தான் இன்றும் உங்கள் புத்தியில் நிலைத்திருக்கின்றது.

தற்போதைய உங்கள் அரசியல் அறிக்கைகளையும் எழுதும் கடிதங்களையும் செயற்பாடுகளையும் பற்றிப் பலரிடம் பேசும்போது ஐயோ பாவம் அவருக்கு அறளைபேர்ந்து விட்டது, விட்டிருங்கோ  என்றுதான் எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். உங்களுக்குத் தமிழ் மக்கள் மீது அக்கறை இருக்குது என்றோ… நீங்கள்தான் சிறந்த அரசியல்வாதி என்றோ… இலங்கை அரசியல் குறித்த சிந்தனைவாதி என்றோ யாருமே பேசுவதில்லை. இலங்கை அரசியலில் இருந்து வலு கெதியில் காணாமற் போகக்கூடியவர்களில் நீங்களும் ஒருவர் என்பது எங்களைப்போலவே அனைவருக்கும் தெரியும்.

பிரதான அரசியல் கட்சிகள் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை எடுக்கத் தவறின் வரலாறுகாணாத அபத்தம் தமிழ் மக்களுக்கு எற்படும் என்று சொல்கிறீர்கள். எது ஐயா பிரதான அரசியல் கட்சி? சாதிரீதியாகப் பிளவுபட்டுக்கிடக்கும் தமிழ்சமூகத்தில் பையப்பைய எண்ணெய் ஊற்றிய அமிர்தலிங்கத்தை தலைவராகக் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியா? அன்று சங்கானையில் சாதியப் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்தபோது அங்கே நடப்பது சாதியப்போராட்டம் அல்ல அது ‘சங்காய்’ பிரச்சனை கொம்யூனிஸ்ட்டுக்களினால் தூண்டிவிடப்பட்ட பிரச்சனை என்று அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் பேசினாரே அவர்தானே சங்கரி ஐயா உங்கள் மதிப்பு மிக்க கனவான்!! உங்கள் ‘ஈழத்துக் காந்தியும், தந்தையுமான’ செல்வநாயகம் அவர்கள் தனது தொகுதியிலுள்ள ஆலயப்பிரவேசத்திற்காக (மாவிட்டபுர கந்தசுவாமிகோயில்) தலித் அமைப்புக்கள் போராடியபோது என்ன செய்தார்!!  ”நான் ஒரு கிருஸ்தவனாக இருப்பதால் இந்த விடயத்தில் தலையிட முடியாது என்றல்லவா சொல்லி  ஓடி ஒழிந்து கொண்டவர்.  சங்கரி ஐயா அவர்களெல்லாம்  உங்களுக்கு கனவான்களாகவும், தந்தையாகவும், ஈழத்துக் காந்தியாகவும், மதிப்பு மிக்கவர்களாகவும் இருக்கலாம் ஆனால்  தலித் சமூகத்தினர்களுக்கும், மலையக மக்களுக்கும், முஸ்லிம் சமூகத்தவர்களுக்கும், அவர்களது வாழ்வியல் மேம்பாட்டிற்கும் விரோதமாக செயல் பட்டவர்கள்தான் உங்கள் மதிப்பு மிக்க கனவான்கள்.

அமிர்தலிங்கமும் யோகேஸ்வரனும் கொழும்பில் வைத்துப் புலிகளால் கொல்லப்படுவதற்கு ஒருமாதத்திற்கு முன் இரண்டுதடவைகள் யோகேஸ்வரன் மாங்குளம் வழியாகப் பாண்டியன்குளம் வந்து புலிகளைச் சந்தித்து விட்டுப்போவனவர்தான். அப்போது வவுனிக்குளத்தில் வந்து தங்கியிருந்த புலியான விசு தான் அந்த இருவரையும் கொழும்பு சென்று பலியெடுத்தவர். கூட்டிக்கழித்துப் பாருங்கள் என்ன நடந்திருக்குமென்று. அதுசரி கடந்த இரண்டு வருடமாக யுத்தம் உச்சத்திற்குப் போன காலத்திலும் இறுதி மே மாதத்திலும் நடக்காத அபத்தமா இனி நடக்கப் போகுது ஏனய்யா ஒன்றுமில்லாதததிற்குப் பயப்படுகிறீர்கள்.

இதுவரை நீங்கள் செய்த எல்லா அநியாத்தையும் விட மிகக் கேவலமானது இந்தமுறை தேர்தலில் நிற்கும் சுயேட்சைக் குழுக்களை வாபஸ் வாங்கச் சொல்வது. இதுதான் கடந்த 30வருடமாக ஆயுத முனையில் புலி சொல்லி வந்தது. பாவம் உங்களுக்கு வயசாகி விட்டது மன்றாடிக் கேட்கிறீர்கள்.  ஆனால் சூழல் இன்று அப்படியில்லை.  ஒன்பது இடத்திற்காக 320 பேர்கள் தேர்தலில் நிற்கமுடிகிறது. புலிகள் இருந்த காலத்தில்  இது சாத்தியமாகியிருக்காது என்பது யாருக்கும் தெரியும். ஆனால் நீங்களோ அதே பாழ்பட்ட நிலையை இன்றும் விரும்புகிறீர்கள். பின்ன என்ன கோதாரிக்கு பிரபாகரனை ஜனநாயகத்திற்கு வாங்கோ தம்பி என்று ஓயாது கடிதம் எழுதிக் கொண்டிருந்தநீங்கள் ஐயா!!! ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் நாம் எவ்வளவு பேரை இழந்திருக்கிறோம். உங்கள் ஆலால சுந்தரம், தர்மலிங்கம் என்று  வந்து அண்மையில் சறோஜினி, சிவபாலன், சத்தியமூர்த்தி,பரராஜசிங்கம் என்று எத்தனை பேர். யோசித்துப் பாருங்கள்.  இந்தக் கொடுமைகளில் இருந்து விடுபட்டு ஒருவருடமும் அகவில்லை அதற்குள் உங்களது கொடுக்கைத் தூக்கிக் கட்டிக் கொண்டு கிளம்பிவிடடீர்கள்.

1960களில் சாதிவெறிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த சிறுபான்மை மகாசபையினது அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க மறுத்த  சாதிகாப்பாற்றும் பத்திரிகையான உதயன் உங்களிடம் பேட்டி எடுத்துப் போடுகிறது. நீங்கள் தானாம் தமிழ் மக்களுக்கு சேவை செய்ய வந்த கனவான். ‘தூ’…வெட்கமாயில்லை.

நீங்கள் சொல்லுகின்ற தமிழ் மக்கள்  என்று சொல்லுக்குள் தாழ்த்தபட்ட சமூகம் வருமா? அவர்களது பிரச்சனைகள் நீங்கள் சொல்லுகின்ற தமிழ் மக்கள் பிரச்சனைகள் என்பதற்குள் அடங்குமா என்று முதலில் சொல்லுங்கள். நீங்கள் ஜேர்மனிக்கு தீர்வுத்திட்டம் குறித்து பேசவந்த போது பார்த்தோம் தானே சாதி ஒடுக்குமுறை குறித்த உங்கள் அறிவை. நாம் யாழ்மேலாதிக்கத்தின் மேட்டுக்குடி அரசியல் பற்றி விவாதிக்கும்போது ‘அங்கு மேடும் இல்லை பள்ளமும்’  இல்லை என்று காமெடி பண்ணிநீங்களே ஞாபகம் இருக்கா?

”ஒரு காலத்தில் நாடாளுமன்றில் கௌரவமான கனவான்கள் அங்கத்துவம் வகித்தார்கள். அத்தகையவர்களோடு சேர்ந்திருந்தது பெருமையாக இருந்தது”.என்று சொல்லுகின்றீர்களே யார் அந்தக் கனவான்கள்? யாருக்காகாக பாராளுமன்றம் சென்றார்கள். தங்கள் நலன்களுக்காகவே இனவாதம் பேசி அரசியல் நடத்தியவர்கள்தான் உங்கள் கனவான்களும் நீங்களும். உங்களுக்கென்ன கொழுப்பு  சுயேட்சையாக போட்டியிடுபவர்களை விலகச்சொல்லிக் கேட்பதற்கு. இதைத்தானே பிரபாகனும் செய்து கொண்டிருந்தார். எந்த அர்த்தத்தில் சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள் என்று கூறுகின்றீர்கள்.  இது உங்கள் சாதிய மேட்டுக்குடி மனப்பான்மையின் வெளிப்பாடுதான் என்பது எமக்குப் புரியாததல்ல. உங்கள் மேட்டுக்குடிக் கனவானகள் 60 களில் நடந்த சாதிய எதிர்ப்புப் போராட்டங்களை எப்படி கொச்சைப்படுத்தினார்கள் என்றும் எமக்குத் தெரியும். கடந்தகாலங்களில் உங்கள் கனவான்களான அப்புக்காத்து அரசியல் வாதிகள் எமது தலித் சமூகத்திற்கும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்காகவும் என்ன அரசியலை வெட்டிப்புடுங்கினவர்கள். தலித் தலைமைகளும்,சிங்கள, தமிழ் இடதுசாரிகளும் மேற்கொண்ட அரசியல் வேலைகளுக்கு மிகஇடையூறு புரிந்துவந்தவர்கள் தானே உங்கள் கனவான்கள். அந்த அனுபவங்களும் ஏமாற்றங்களுமே இன்று தலித் சமூகமான நாங்கள் சுயேட்சையாக போட்டியிடவேண்டிய தேவையைக் கொண்டுவந்தது. நீங்க வேற ‘ஆக்களய்யா’ நாங்க வேற ஆக்களய்யா.

ஐயா ஆனந்த சங்கரி அவர்களே நீங்களும் உங்கள் கனவான்களான செல்வநாயகமும், ஜீ.ஜீ பொன்னம்பலம் போன்றவர்கள் செய்த அரசியல் எனிமேல் எங்களிடம் எடுபடாது. நீங்கள் இன்னமும் சிங்களமக்களையும் தமிழ் மக்களையும் பிரித்தாளும் நோக்கத்தில்தான் தொடர்ந்தும் செயல்பட முனைகின்றீர்கள். பிரபாகரன் எனும் சூரியக் கடவுள் சொன்னார் நான்தான் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதியென்று. அதுக்கு நாங்களும் பயந்தனாங்கள் தான் ஏனெனில் பிரபாகரனிடம் கொடுமையான ஆயுதங்களெல்லாம் இருந்தது. அதனால பிரபாகரனுக்கும் சொல்வதற்கு துணிவு இருந்தது.  என்ன தினாவெட்டு இருந்தால் எனக்குத்தான் பாராளுமன்றம் செல்வதற்கு தகுதி இருக்குகென்று சொல்லுவீர்கள்.   உந்த அப்புக்காத்து அரசியல் எனிமேல் எடுபடாது கண்டியலே. உங்களுக்கு ஒரே ஒரு தகுதி மட்டும்தான் இருந்தது அதுதான் பிரபாகரனுக்கு கடிதம் எழுதுவது. அந்த வேலையும் எனிமேல் உங்களுக்கு இல்லை.

ஐயா  உங்களுக்கு கிடைக்கும் 300⁄400வாக்குகளில் பெரும்பாலான வாக்குகள் எமது தலித் சமூகத்தின் வாக்குகளாகத்தான் இருக்கும் என்று நாம் நம்புகின்றோம்.  திரு. செல்லன் கந்தையா அவர்கள் உங்களுடன் கொண்டிருக்கும் நட்பே அதற்கு காரணமாக இருக்கும்.



உதயன் பத்திரிகைக்கு  திரு. ஆனந்த சங்கரி அவர்கள் வழங்கிய பேட்டி (நன்றி  தேனீ)http://www.thenee.com/html/270310.html

No comments:

Post a Comment