Saturday 22 November 2014

2008 புதுவருட வாழ்த்துக்கள் யாருக்கு? சமாதானம் என்ற மெழுகுதிரி ஏன் உருகி எரியுது?




தத்துரூபமான கற்பனைகளையும்

கற்பனைக்கெட்டாத கனவுகளையும்

சுமந்துகொண்டு இன்னும் இன்னும்

கழியும் ஆண்டுகளை

கடந்து போக வேண்டியிருக்கிறது.

உணவு உண்டுகொண்டு

இருப்பதால் மட்டும்

ஜீவன் இருக்கிறது

என்பதற்கப்பால்

நாம் எல்லோரும் கோமா நிலையிலேயே

வாழ்ந்து வருகிறோம்.

இதிலென்ன

நாள் மாறி

வருடம் மாறி…! என்று 2007ம் ஆண்டின் பிறப்பிற்காக அனைவரும் காத்திருந்த போது எழுதினோம். அதையே திரும்பி எழுதவேண்டிய தேவையை உணருவதில் என்ன வெட்கம் என்றால் நமது வாழ்நிலைக்கு எதையும் புதிதாக எழுதிவிடத்தேவையில்லை என்றதுதான். இந்தக் கோமா நிலை கவலையளிப்பதாகத்தானே இருக்கிறது. இலங்கையில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கொலையில் தொடங்குகின்றதாக அனைவரும் கவலைகொண்டுள்ளோம்.

இன்று காலை மகேஸ்வரன் எம்.பி. பொன்னம்பலவாணேஸ்வரத்திற்கு வழிபாட்டுக்குப் போனபோது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சென்பற்றிக் தேவாலயத்தில் வைத்து ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார். (இதுபற்றி அந்த நேரத்தில் கிழக்கில் நடந்த எந்தக் கொலைக்கும் வாய்திறக்காத சுகனே கவலைப்பட்டு எழுதியிருந்தது நீங்கள் அறிவீர்கள்.) இப்படிஒவ்வொருவருடத் தொடக்கத்திலும் யாரையாவது இழந்து விடுகிறோம். நாம் இன்னும் இன்னுமாய் இழப்பதற்கு தயாராய் இருக்கிறோம்.ஒவ்வொரு வருடத் தொடக்கம் என்பதைவிட ஒவ்வொரு விடியலிலும் யாரையாவது தொலைத்துவிட மனம் தயாராய் இருக்கிறது. இதற்கு அப்பால் நமக்குத் தெரியாத ஒரு சமாதானம் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். பாசிசம் பூசிய அந்தச் சொல் குறித்த அனைத்துப் பரிமாணங்களையும் தவிர்த்து விட்டு ஒன்றும் அறியாத குழந்தையைப்போல் சமாதானம் தேடிக்கொண்டிருக்கிறோம்.

புதுவருடப்பிறப்பில் சமாதானம் ஏற்படவேண்டும் என்று பேசிக் கொள்ளும் அனைவரும் அது குறித்து ஒரு விசாரணயற்ற, உரையாடலற்ற தன்மையிலிருந்து வானத்தை நோக்கி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சமாதானம் என்ற நகைப்பிற்குரிய அந்தச்சொல் எம்மிடம் எதாவது ஒரு இடத்தில் குடிகாண்டுள்ளது என்று யாராவது அடையாளம் காட்ட முடியுமா? ஒவ்வொரு சமாதானத்திற்கு முன்னும் பின்னும் தொடர் யுத்தத்தைத்தானே கடந்திருக்கிறோம். யுத்தத்தில் நடந்த கொலைகளை விட சமாதான காலத்தில் நடந்த கொலைகளின் பட்டியல்தானே நம்மிடம் அதிகமாகவுள்ளது. அதைவிட சமாதானம் என்று இதுவரை பேசிய காலங்களில் யார் யாருடன் எல்லாம் பேசியிருக்கிறோம்? ஏன் அவை எல்லாம் சாத்தியப்படாமற் போயிற்று? முதலில் சமாதானம் யாருக்கும் யாருக்குமானது? யார் யாருக்கிடையில் சமாதானம் தேவை? யார் யார் சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்? சண்டையிடாதவர்கள் யார்? சண்டையிடாதவர்களுக்கு ஏன் சமாதானம்? கடந்த சமாதான காலங்களில் நாம் கண்ட படுகொலைகளின் வீரியம் என்ன? வங்காலைப ;படுகொலை, அல்லப்பிட்டிப் படுகொலை, எல்லாம் நம்மை எவ்வளவு பாசிசவாதிகளாக்கி விட்டிருக்கிறது? இதற்கப்புறம் இன்னொரு சமாதானத்தில் நாம் எவ்வளவு படுகொலைகளைச் சந்திக்கப்போகிறோம்? என்று நாம் யோசிக்காத வரையில் சமாதானம் என்ற பாசிசச் சொல் நமக்கு தேவையற்றது. புதுவருடம் என்று ஒவ்வொரு ஜனவரி 1ம் திகதியைக் கொண்டாடுவதும் தேவையற்றது.

கற்சுறா
01.01.2008

No comments:

Post a Comment