Monday 20 April 2015

அவர்களால் கண்டடைய முடியாத பரவசம் ஒன்றிருக்கிறது.


கற்சுறா




எனது கவிதையை நானே மீளப் புணருகையில் கிடைக்கும் இன்பத்தின்கொள்ளளவு என்ன? ஒரு கவிதையை எழுதுவதும் அதை இன்னொரு தருணத்தில் வாசிப்பதிலும் இருக்கின்ற பரவசம் என்பது ஒன்றாவதில்லை. அது வேறொரு பெயரில் இருக்கும் கவிதையைத் திரும்பப் பார்த்து எழுதுவதற்கு ஒப்பாகும்.


எண்ணற்ற கவிஞர்களுடன் வாழும் கவிதைகளில் இன்னமும் கவிதை குறித்து எழுதிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. ஆனால் எழுத்துக்களில் கவிதை ஒழிந்துகொண்டே ஓடுகிறது ஆங்காங்கே வழியும் சில ததும்பல்களுடன்.


1980களிலிருந்து கிறீஸ் பூதங்களைப்பார்த்த, இந்தா பிள்ளையைப் பிடி இந்த பிள்ளையப் பிடி என்று மல்லாகத்தில் அலைந்த மோகினிப்பிசாசுகளைக் கண்ட கண்களால்தான் நாம்  நமது கவிஞர்களையும் காண்கிறோம். அதனால் எமக்குப் பெரிய ஆச்சரியங்களை அவர்கள் விட்டுவைக்கவில்லை. ஆனால் ஒரு தமிழகத்துக்கார வாசகன்அல்லது வாசகியால் கிறீஸ்பூதத்தை தன் மனதளவிலோ அல்லது புலனளவிலோ புரிந்த கொள்ளவே முடியாதபோது ஈழத்துக் கவிதை அலகை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்? ஆனால் பாருங்கள் ஈழத்தில் வாழ்கின்ற கவிஞனைவிட தமிழகத்து ஆய்வாளர்களுக்கும் அவர்களது பதிப்பகத்தார்களுக்கும் புலம்பெயர்ந்த ஈழத்து கவிஞர்கள் உலகத்தை மாய்க்கின்றவர்களாகத் தெரிகிறார்கள். உன்னதமானவர்களாகத் தெரிகிறார்கள். வாழும் காலநிலை அரசியல் நெருக்கடிகள் என்று எதையும் அருகிருந்து உணராதவர்கள்  பரதேசம் போய் பழஞ்சீலையைக் கிழித்தாலும் பாடிப்பெருவழி கடந்ததாய் எடுத்துரைக்கிறார்கள். பாவம் கணக்கு வழக்குகளுக்குள்ளேயே கவிதையை நெறுத்தெடுக்கிறார்கள்.



1.
யுத்தம் எப்போதும் நிர்வாணத்தை நோக்கியே அசையும். யுத்தத்தில் வெல்வதிலும் தோற்பதிலும் அதிகம் தரிசிக்க முடிவது நிர்வாணமே. இராணுவச்சிப்பாய்க்கு நிர்வாணம் குறித்து இருக்கும் அக்கறைக்கும் அவனால் சிறைப்பிடிக்கப்பட்ட போர்க்கைதிக்கு இருக்கும் அக்கறைக்கும் பெரிய வேறுபாடுகள் இருப்பதில்லலை.  இரண்டுக்கும் உயிரில் இருக்கும் அச்சத்தைப்போலவே ஆசையைப் போலவே நிர்வாணத்திலும் அச்சமிருக்கிறது. ஆசையிருக்கிறது. ஒன்றையொன்று வெற்றி கொள்வதில்தான் அதன் இருப்பிடம் மாறுபடுகிறது.



2.
நிழலை நகர்த்தி 
உயர்த்தியது 
சூரியன்.
நிழல் குளிர
சூடு பட்ட இடத்தில் 
வெளிச்சம்.
வெளிச்சத்தில் சூடற்று
குளிர்ந்து போன 
நிழலுக்குள்
ஒழிவதென்ன
விளையாட்டு?






3.
நனைந்து கிடந்த ஆற்றின் வாசலில்
இராணுவக் கோடு.
அவனைப் போலவே 
ஊர்ர்ர்ந்து போன ஓணானில் ஒட்டியது பயம்.
காட்டை வழி மறித்து ஊருக்குள் ஓடியது
இராணுவநதி.

சலசலவும் கிறுகிறுவும்
சரீரம் முழுதும்
பரவ
ஆற்றின் திசை நோக்கி அகலும்
உயிர்சதை.

ஆறு வழி வந்த
ஒரு இராணுவத் தாக்குதலில்
இருந்து தப்புவது-

மரணத்திற்கும் வாழ்வுக்கும்
இடையில்
எத்தனை நிமிடம்?








இந்தக்கவிதைகள் ஒரு தமிழக வாசகனுக்கு அல்லது கவிதை விமர்சகனுக்கு எவ்வித சலனத்தைக் கொடுக்கும்? நமது மொழியை அவர்களால் விளங்கிக் கொள்ள முடிந்ததா? எப்பொழுதும் தன்மீதான அதீத கவனக்குவிப்பைக் கொண்ட ஒரு அரசியல்வாதியைப் போன்ற தமிழகத்து எழுத்தாளன் புரிந்து கொள்ளும் முறை நம்மைப் போன்றதல்ல. அது வேறு.


இப்பொழுது ஒரு ஈழத்துத் தமிழ்க் கவிதை ஈழத்தவனுக்கு வாசிப்பில் கிடைக்கும் அனுபவத்திற்கும் தமிழகத்துக்காரனுக்கு கிடைக்கும் அனுபவத்திற்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. நமது மொழியும் பாடுகளும் அதன் பரவசங்களும் வேறு. அது தமிழகத்து இலக்கிய முதலைகளால் கண்டடைய முடியாதது. எப்படி கவிதை மொழிபெயர்ப்பாளர்கள் தமது வசதிக்குரிய கவிதைகளை மொழி பெயர்த்தார்களோ அNதுபோலவே தமது வசதிவாய்ப்புக்குரிய புலம்பெயர்ந்தவர்களது கவிதைகளையே பொருள் கொள்ளுகிறார்கள்.

உண்மையில் பாலஸ்தீனியக் கவிதைகள் என்றும் நிக்கரகுவாக் கவிதைகள் ரசியக் கவிதைகள் என்றும் நாம் தமிழில் வாசித்தவைகள் அந்தப் பிரதேசங்களை அவர்களின் படிப்பினைகளை எங்களால் பூரணமாக உள்வாங்கக் கூடியனவாக இருந்தனவா? உண்மையில் அவை பாலஸ்தீனக் கவிதைகள் என்று அடையாளப்படுத்த முடியுமா?  தமிழ் மார்க்சியர்களால் தமக்கு ஏற்ற கவிதைகளே மொழிபெயர்க்கப்பட்டு அவை பாலஸ்தீனக் கவிதைகள் என்ற பெயரில் வெளிவந்தன. உண்மையில் அவை பாலஸ்தீனக் கவிதைகளல்ல. பாலஸ்தீன அரசியல் கவிதைகள். மேலும் ஈழத்துத் தமிழ்க்கவிதை என்று மாற்றுமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டவைகள் மட்டும் அல்லவே ஈழத்துக் கவிதைகள். தனியே மரணத்துள் வாழ்வோம் தொகுப்பு மட்டுதானா ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்? இந்த மாதிரியான மொழிபெயர்ப்புக்கள் மாற்று மொழிகளில் மொழிபெயர்ப்பவர்களின் அரசியலைப் பொறுத்தே அவை தெரிவு செய்யப்படும். அவை கவிதை குறித்தான அக்கறையின் நிமித்தம் ஒருபொழுதும் செய்யப்படுவதில்லை.

அரை நூற்றாண்டு காலம் பொதுவான வாழ்க்கையை இழந்த ஒரு சமூகத்தின் மொழியை விளங்கிக் கொள்ளல் என்பது அந்த சமூகத்தாலேயே முடியாதபோது அதற்கு வெளியிருந்து பராக்குப்பார்த்த சமூகத்தால் விளங்குதல் சாத்தியமி;லலை. ஆனால் என்னமோ ஒரு ஈழத்து புலம் பெயர்ந்த எழுத்தாளனுக்கு தமிழகத்து பஞ்சவர்ணக்கிளி தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இன்று அதிகமாக தன்னை எழுதுதலை விடுத்து தமிழகத்து ஆசாமிகளுக்கு கதை எழுதிக் காலத்தைத் தள்ளுகிறார்கள் ஈழத்து எழுத்தாளர்கள்.

இதற்குள் நமக்கு பரீட்சாத்தக் கவிதைகள் வேறு எழுதித் தருகிறார்கள் எமது கவிஞர்கள்.  கவிதை எழுதுதல் என்பதற்குள் எதற்கு பரீட்சாத்தக் கவிதை? நமது கவிஞர்கள் என்ன நாசாவிலா வேலை செய்கிறார்கள்?

"உரையாடல்"1

நண்பர் திருமாவளவன்  முகநூலில் என்னிடம் கேட்ட ஒரு கேள்வியும் பதிலும்.


திருமாவளவன் கேட்கிறார்.

மிகநல்ல பதிவு. வாழ்த்துக்கள். இதற்கப்பால் நண்பரிடம் எனக்கொரு கேள்வியுண்டு. நீங்கள் போற்றுகின்ற பாலு மகேந்திரா, பிரமிள் போன்றவர்கள் தமிழ்நாட்டின் அங்கீகாரத்தால் போற்றப்பட்டவர்கள். இவர்கள் இருவரும் இலங்கைக்குள் கட்டுண்டிருந்தால் இன்று அறியப்படாமலே போயிருப்பார்கள். பிரமிளுக்கு எழுத்து பத்திரிகையும் அதுசார்ந்த நன்பர்களும் தான் அவருக்கு களம். தன்னை அடையாளப்படுத்திக்கொண்டபின் முரன்பட்டது வேறுவிடையம். ஆனால் தமிழ்நாட்டின் அங்கிகாரமாகவே அவர்கள் விளங்கினர். இதுதான் யதார்த்தம். இதை ஏற்றுக்கொண்டு பாரட்டுகிற நீங்க, தமிழ்நாட்டில் தங்கள் படைப்புகளை பதிவு செய்யும் சமகால படைப்பாளிகளை சாடுவதுதான் ஏன்? காழ்புணர்வு எனக் கொள்ளலாமா?


கற்சுறா சொல்கிறார்

அவர்களால் கண்டடைய முடியாத பரவசம் ஒன்றிருக்கிறது.
என்னிடம் முதன் முதலாக இரண்டு நண்பர்கள் கேள்வி கேட்டிருந்ததார்கள். அதற்குநான் உடனடியாகப் பதில் அளித்திருந்தேன். அதனை இங்கு பதிவிடுகிறேன்.
இது காத்திருந்த கேள்வி திருமாவளவன்.
பிரமிளும் பாலுமகேந்திராவும் இலங்கைக்குள் கட்டுண்டிருந்தால் இன்று அறியப்படாமலே போயிருப்பார்கள். என நீங்கள் சொல்வது மிகத் தவறு. அவர்கள் எதற்குள்ளும் கட்டுண்டு போகாதவர்கள்.


பிரமிள் எழுத்துக்காகவே வாழ்ந்து மரித்தவர். நீங்கள் சொல்வது போல் அவர் எழுத்தை தன் வாழ்வாய் எண்ணிய காலங்களில் இலக்கிய அவா கொண்டலைந்த இளைய வயதுகளில் கிடைத்தவர்கள் தமிழக இலக்கியவாதிகள்.
ஆனால் அந்த இலக்கியவாதிகளது புனிதங்களை உடைத்து இலக்கியம் என்பதன் பொருள் கொள்ளலை கவிதையிலும் சரி கதைகளிலும் சரி ஒரு வீரியத்துடன் நிகழ்த்திக் காட்டியவர் பிரேமிள். உண்மையில் பிரேமிள் தமிழகத்தில் வாழ்ந்திரா விட்டால் அவருடைய எழுத்தியக்கம் இன்னும் அதிகமானதாக இருந்திருக்கும். வியக்கும் வகையில் இருந்திருக்கும். என்பதுவே எனது எண்ணம்.


பாலுமகேந்திரா குறித்து நான் அதிகம் சொல்லக் கூடாது. என்னைப் பொறுத்தளவில் அவர் தமிழகத்துக் குரியவரல்ல. தமிழகம் காட்டிய சினிமாவைப் புறக்கணித்துத் தான் அதிக சினிமாவை உருவாக்கியவர். இந்த இருவரையும் தமிழகம் வளர்க்கவில்லை என்பதுதான் உண்மை. அவர்களுடைய ஆழுமையில் ஆக்கிரோசத்தில் அவர்கள் உரு மாறினார்கள். தமிழகம் அவர்களை முடக்கியிருந்தது.

பின் ஈழத்தை விட்டகன்ற கவலையில் , குற்ற உணர்வில் ஈழமக்களுக்கென தேசியகீதத்தை எழுதினார் பிரமிள். தமிழகத்துத் தம்பி என உசுப்பேத்திக் கொண்டலைந்த சீமானை தனது தத்துப் பிள்ளையாக அறிவித்தார் பாலு மகேந்திரா.

ஆனால் பிரமிளும் பாலுமகேந்திராவும் தமது கலைத்துவச் செயற்பாட்டில் தீவிரமாக இருந்தவர்கள். அதற்காக தமது வாழ்நாளை அர்ப்பணித்தவர்கள்.

ஆனால் பெரும்பாலான நமது தற்போதைய ஈழத்து இலக்கியவாதிகள் போன்று தமிழ் நாட்டை மையப்படுத்திய இலக்கிய வியாபாரத்தையும் தமிழகத்து இலக்கிய புருசர்களது அங்கீகாரத்தையும் வேண்டி நின்றவர்களல்ல. அவர்களை தமது படைப்புக்களால் மிதித்து மேவியவர்கள்.

நமக்குள் வாழும் அப்படி ஒருவரை நீங்கள் சொல்லுங்கள் திருமாவளவன்? ஒரு கவிஞன் ஓவியனாய் சிற்பக் கலைஞனாய் நாடக எழுத்தாளனாய் கட்டுரையாளனாய் வாழ்ந்து முடித்த ஒரு ஈழத்து எழுத்தாளனைச் சொல்லுங்கள்?


நம்மவர்கள் எழுதிய கதைகளுக்கு ஜெயமோகனும் கவிதைகளுக்கு வெங்கட்சாமிநாதனும்தானே இன்னும் முன்னுரை விளக்கம் எழுதவேண்டியிருக்கிறது.


தமிழ்நாட்டில் படைப்புக்களைப் பதிவு செய்வதில் யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை திருமாவளவன். அங்கு வருகின்ற பத்திரிகைகளில் எழுதுவதும் யாருக்கும் கவலையில்லை. ஆனால் நம்மவர்களது எழுத்துக்களை விளங்காமலே புகழுவதும் அதற்கு விளக்கமளிப்பதும் அது என்ன குப்பை என்றாலும் அதனை பதிப்பித்துக் காசாக்குவதும் தானே அவர்களது தற்போதைய நிலவரம்.


இதில் ஈழத்துப் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் அவர்களிடம் வெட்கமற்று மண்டியிட்டுக் கிடக்கிறார்கள் என்பதுதான் எனது கோபம். இது காழ்ப்புணர்வல்ல. அவர்கள் உங்களுக்குத் தருகின்ற விருதுகளும் அவர்களுக்கு நீங்கள் திருப்பிக் கொடுக்கின்ற விருதுகளும் இலக்கிய உலகில் அநாதரவானவை.  அவை தற்கால சிலம்பல்கள்.


இறுதியாக, நான் மதிக்கின்ற கலைஞர்கள் நீங்கள் குறிப்பிட்ட இருவர் மட்டுமல்ல என்பதனை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.தமிழகத்தின் இலக்கிய வெளியில் அகப்படாது 1960களிலே பெருந்தீயை வைத்த எஸ்.பொ. மற்றும் புலம்பெயர்ந்து நமக்கிடையில் இலக்கிய ஊழியக்காரராய் வாழும் கலாமோகன் ,சுகன். போன்றோர் என்றைக்கும் எனது பொக்கிசங்களே.





No comments:

Post a Comment