Tuesday 21 April 2015

ஐஞ்சியேத்துக்கு உதவாத கழிவிரக்கமும் உணர்ச்சிவசப்படுதலும். படிவ அட்டவணைக்கூடாக அடையாளப்படுத்தும் குறைந்தபட்ச நியாயம்.


கற்சுறா






கனடாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும் புலிகளைத் தடைசெய்துள்ளது. இந்தியாவில் புலிகள் மீது தடைகள் இருப்பதும் இல்லாமலிருப்பதுமாகவே தோற்றமளித்து வருகின்றது. இந்தத் தடைகளும்  பின் உருவாகும் தடைநீக்கங்களும் தமிழ் மக்களைப் பொறுத்தளவில் ஒன்றும் புதிய விடையமல்ல. இலங்கையிலும் புலிகள் மீதான இந்தத் தடைகள் அவ்வப்போது தோன்றி மறைவனதான். தடையும் தடைசெய்தவர்களோடு தேன்நிலவும் கொண்டாடிய ஞபகங்கள் விடுதலைப்புலிகளுக்கும் ஏராளம் உண்டு.

விடுதலைப்புலிகளை இந்த நாடுகள் தமது தேசங்களில் பயங்கவாத அமைப்பாகக் கருதி அவற்றைத் தடை செய்துள்ளன. இதனை விடுதலைப்புலிகள் மறுப்பதற்கு அப்பால் விடுதலைப் புலிகளை அவர்களது அதீத வன்முறைப் போக்கை பாசிசச் செயற்பாடுகளை நிராகரித்து வந்தவர்கள் விமர்சித்தவர்கள் பலர் புலிகளின் மீதான தடை தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடு என்பதாகவும் தமிழ் மக்களது விடுதலையைப் பின்னுக்குத் தள்ளும்  செயற்பாடு என்பதாகவும் சொல்லிவருகிறார்கள். இங்கே சொல்லப்படும் காரணங்கள் - பிரச்சனைகள்  அளவிலே கூடக் குறைய என்பதை விட எல்லோருமே புலிகள் மீதான தடை தவறு என்பதாகவோ கருதுகிறார்கள். கனடிய அரசோ அல்லது ஐரோப்பிய ஒன்றியமோ தமது நலன்களுக்காவே, தமது ஏகாதிபத்திய சிந்தனையின் வாயிலாகவே தடைசெய்துள்ளது. தமிழ்மக்களின் நலன் அவர்களுக்கு முக்கியமில்லை. அண்மைக்காலத்தில்  புலிகளை அம்பலப்படுத்திய மனித உரிமைகள் கண்காணிப்பு அறிக்கையோ அல்லது இங்குள்ள ஜனநாயகத்தை விரும்பும் மாற்றுக்கருத்தாளர்களது குரலோ இவர்களது தடைக்கு உதவவில்லை. இது எப்பவோ இந்த அரசுகளால் எடுக்கப்பட்ட முடிவு. என்ற விளக்கங்களோடு புலிகள் மீதான தடை பிரியோசனமற்றது என்பதாக நமக்கிடையே நிறையக் கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன.

புலி என்கின்ற அமைப்பு  தமிழ் மக்களுடைய விடுதலையை வேண்டி செயற்படுகின்ற ஒரு அமைப்பல்ல. தமிழ்மக்கள் என்று பொதுவாக சொல்லிவரும் கருத்தாடலும் உண்மையானதல்ல. என்ற எனது நிலைப்பாடே இதுகுறித்து எழுதவைத்துள்ளது.

இதைச்சொன்னவுடன் மிக இலகுவாக கன்னை பிரித்து இவன் அவனுடன் சேர்ந்து விட்டான். அல்லது  இவன் அவன்ர ஆள். என்று ஒற்றைவரியில் விலத்திவிட எனது நண்பர்களுக்கு மிகமிக இலகுவாக இருக்கும். அப்படியான எனது நண்பர்கள் தயவுசெய்து இந்த இடத்திலேயே நிறுத்தி நேராக படிவ அட்டவணையை நிரப்ப செல்லுங்கள்.

1. விடுதலைப் புலிகள் ஒருபோதும் நேசக்கரங்களை நீட்டி கருத்து வேற்றுமை மாற்றுக்கருத்துரிமை பற்றி விவாதித்தவர்கள் கிடையாது. தமது அதீத வன்முறையின் மூலம்  மாற்றுக் கருத்தாளர்களை மற்றைய விடுதலைப் போராட்டக் குழுக்களை அழித்தொழித்தவர்கள். இந்த  அழித்தொழிப்புக் குறித்து வெறும் வரலாற்று பதிவாக மட்டும் எண்ணிக் கொள்பவர்கள் அல்லது தற்போது எழுதிக் கொள்பவர்கள் அல்லது கேட்டுக் கொள்பவர்கள் யாருமே அதன் உள்ளார்ந்த வன்மம் குறித்துப் புரிந்து கொள்ள முடியாதவர்கள். இப்போது புரிந்து கொள்ள முடியாதவர்கள் இனி ஒருபோதும் புரிந்து கொள்ளப் போவதில்லை.அதன் ஒவ்வொரு அலகையும் பட்டுணர்ந்தவர்கள் பார்த்துணர்ந்தவர்கள் நாங்கள். இங்கே மற்றவர்களுக்கான விளங்கப்படுத்தல்களுக்குள் நான் நுழையவில்லை. அது எனது தேவையுமில்லை.

2. விடுதலைப் புலிகள் புலம் பெயர் சூழலில் தமது இருப்பைத் தக்கபடி -தாம் நினைத்தபடி-தக்கவைத்துக் கொண்டவர்கள். வெறுமனே மக்களிடம் பணம் பெற்று அவர்கள் தமது நிலையை வலுப்படுத்திக் கொண்டவர்களல்ல. அவர்கள் வெளிநாட்டு மக்கள் கொடுக்கும் பணத்தில் மட்டும்  தமது யுத்தத்தை வளர்த்துக் கொண்டவர்களுமல்ல என்பது எவருக்கும் இலகுவாகப் புரிவது. மக்கள் கடைகள் கட்டுவது பெரிய வியாபார நிலையங்கள் ஸ்தாபிப்பது என்பது தொடங்கி ஆட்கடத்தல் தூள் கடத்தல் என்று சர்வதேச மாபியா வேலைகள் முழுக்கச் செய்பவர்கள் அவர்கள். அப்படி நீண்டகால பணம் பெறும் சூழலை உருவாக்கும் நிலையை எப்பவோ தொடங்கி விட்டார்கள். (ஒரு இயக்கத்தை நடாத்த என்ன வேலைகளும் செய்யலாம். எத்தனை கொலைகளும் செய்யலாம். என்று பேசிக் கொள்ளும் வழமையான யாழ்ப்பாணிய சிந்தனையுள்ளவர்கள் தயவு செய்து பொறுத்துக் கொள்க) ஆனாலும் இறுதிவரை மக்களிடம் என்ன அடாவடி காட்டி அச்சுறுத்திப் பணம் பெற முடியுமோ அவர்கள் செய்து கொண்டுதான் இருந்தார்கள். அவர்களுடைய மக்கள் போராட்டம் என்பது என்ன வழியிலாவது மக்களை அச்சுறுத்தி  தமது செயற்பாடுகளை முன்னிறுத்துகிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும். இந்த அனுபவம் அண்மைக்காலங்கள் வரை அனைவரும் உணர்ந்திருப்பர். புலிகளை விமர்சிப்பவர்கள் கொலை செய்யப்படுவது, கடத்திக் கொண்டுபோய்த் தாக்கப்படுவது. என்று அவர்களது மரபுவழிப் போர் ஈழத்தில் நடைபெறுவது போலவே புலம் பெயர்ந்த நாடுகளிலும் குறைவின்றி நடந்தது. ஐரோப்பாவில்  சபாலிங்கத்தின் கொலை நமக்குத் தெரிவித்தது என்ன? ஈழத்தில் உள்ளது போல் எத்தனை பேர் வெளிநாடுகளில் புலிகளின் அண்டக்கிறவுண்ட் குண்டர்களால் தாக்கப்பட்டு மிரட்டப்பட்டுள்ளார்கள்? சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்கள். என்பதை நாம் கணக்கெடுத்துப் பார்த்தால் தெரியும்.


3. புலிகள் என்பது இன்று ஈழத்து மக்களுக்காகப் போராடும் ஒரு அமைப்பு என்ற ஒரு மாயையின் பின்னால் அதனுடைய கொடூர முகம் ஒரு நேர் கோட்டில் மக்களைப் புதைகுழியில் தோண்டிப்புதைத்துக் கொண்டிருக்கிறது என்பதும். தன்னுடைய இருப்பினைத் தக்கவைக்க ஈழத்து மக்களில் அது எத்தனை பேரைப் பலிகொடுக்கவும் தயாராய் இருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஈழத்தில் பிளவுபட்டுப் போயுள்ள  கிழக்கில் தன்னுடைய இலக்குத் தவறிவிட்டதைப் புலிகள் உணர்ந்து கொண்டுவிட்டார்கள். அதிலிருந்து மீளமுடியாத புலிகள் தம்மை நியாயப்படுத்த இன்றுவரை எத்தனை கொலைகள் செய்துள்ளார்கள். இந்தக் கொலைகள் அதாவது வடக்கிலும் சரி கிழக்கிலும் சரி தெற்கிலும் சரி தினம் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் மக்கள் யாருடைய நலன்களுக்காக கொல்லப்படுகிறார்கள் என்பதை நாம் கணக்குப்பண்ண வேண்டும்.

4. இப்போதுகனடிய அரசும் ஐரோப்பிய ஒன்றியமும் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் மீளவும் சேர்த்துள்ளது. விடுதலைப்புலிகளின் மீதான இந்தத் தடை தவறானது. ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் எதிரானது. ஏகாதிபத்திய அரசுகள் தமது நலன்களுக்காக இதனைச் செய்கிறது. புலிகள் மீதான கேள்விகளை முன்வைப்பதற்கு தமிழ்மக்களுக்கு மட்டுமே உரிமையுண்டு தமிழ் மக்களின் விடுதலைக்கு இது தடையாகும். புலிகளே மக்களின் விடுதலைக்கு குரல் கொடுக்கும் கடைசிப் புள்ளி. அதன் மீதான இந்தத் தடை மக்களின் விடுதலையை பின்நோக்கி நகர்த்துகிறது. ஏகாதிபத்திய அரசுகள் ஏற்படுத்திய இந்தத் தடையின் நோக்கம் தவறானது. இந்தத் தடை புலிகளின் எதிரிகளுக்கு மட்டுமே சந்தோசமானது. மற்றப்படி மக்களுக்கு எதிரானது. இது ஈழத்து மக்களுக்கு மட்டுமல்ல வெளிநாடுகளில் வாழுகின்ற ஒவ்வொரு தமிழ்மக்களுக்கும் எதிரானது, பாதிப்பை உண்டு பண்ணக்கூடியது என்று பல முனைகளில் புலிகளின் தடைகள் குறித்து வந்திருக்கின்ற கருத்துக்களை என்னால் தனித்தனியே உடைக்க முடியும். ஒட்டுமொத்த தமிழ் மக்கள் யார்? அவர்களின் விடுதலை என்பது எது? எப்படி புலிகள் மட்டுமே மக்களில் கடைசிக் குரலானார்கள்?புலிகளின் எதிரிகள் அல்லது புல்லுருவிகள் என்பவர்கள் யார்யார்? ஏன் புலிகள் பற்றிய இருப்பை தமிழ் மக்கள் மட்டுமே தீர் மானிக்க  முடியும்?என்று தனித்தனி அலகுகளில் இதனை எழுதிவிட முடியும். அது அல்ல எனது நோக்கம்.

5. புலிகளை ஏகாதிபத்திய அரசு தனது நலன்களுக்காக தடை செய்கிறது. அது தவறான செயற்பாடு என்றே வைத்துக் nhகள்வோம். இதே ஏகாதிபத்திய அரசு புலிகளைத் தடை செய்யாது இருந்தால் சரியாகுமா? தடைசெய்யாமலிருந்தால் அது ஏகாதிபத்திய நலன் சார்ந்ததாக இருக்காதா? ஏகாதிபத்திய அரசு புலிகளைத் தடை செய்வதற்கும் தடைசெய்யாமல் இருப்பதற்கும் இடையில் தமிழ் மக்கள் தமது விடுதலையில் பெறக்கூடிய இலாபங்கள் என்ன? - இங்கே தமிழ் மக்களின் விடுதலை என்பது புலிகளின் இலபங்களாகிப் போன நிலையை விளங்கிக் கொள்ள வேண்டும். -என்பதைச் சொல்ல வேண்டும்.  கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் மற்றய வெளிநாடுகளிலும் புலிகளின் வன்முறை என்பது கட்டுக்குள் அடங்காத முறையில் அத்துமீறிப் போய்க் கொண்டிருந்தது என்பதை நாம் பல சந்தர்ப்பங்களில் சொல்லி வந்திருக்கிறோம். புலிகளின் மீதான இந்தத் தடை புலிகளைப் பாதிக்குதோ இல்லையோ புலிகளுக்கு வருமானம் வருமோ அல்லது குறையுமோ என்பது பற்றிய ஆய்விற்கு அப்பால் புலிகளின் சண்டித்தனத்திற்கு ஒரு ஆப்பு என்பதை யாரும் இல்லை என்று சொல்லமாட்டார்கள். சண்டித்தனமற்ற புலிகளாக இருந்து பழக்கப்படாதவர்கள் அவர்கள். ஈழத்தில் மிகவும் இலகுவான முறையில் சாதாரண ஒருவிடையத்திற்கு மக்களாக இருந்து எதாவது ஒரு கேள்வியை புலிகளின் நடவடிக்கைகள் குறித்து கேள்வி கேட்டால் அந்த நபர் அடுத்த கணம் நடமாடக் கூடிய ஒரு சூழல்  இருக்கின்றது என்று யாரும் கூறிவிட முடியுமா? புலிகளை எதிர்த்து வாயளவில் ஒரு சொல்லைத்தானும் சொல்லி விட முடியாத ஒரு வாழ்நிலையைத்தானே ஈழத்தில் புலிகள் வழமையாக்கி விட்டிருக்கிறார்கள். அப்படியொரு நிலையை புகலிடம் தேடிவந்த நாடுகளிலும் புலிகள் நடைமுறையில் வைத்திருந்தார்கள். இப்போதும் கூட வைத்திருக்கிறார்கள். அநேகமான தமிழர்களின் புகலிட நாடுகளில் விடுதலைப் புலிகளின் கொடி பறக்கும் பெரிய வாசஸ்தலங்கள் இயங்கிக் கொண்டுதான் இருந்தது. அந்தக் கொடிகளின் கீழ் புகலிட நாடுகளில் வதிக்கும் தமிழர்களின் குடும்பப் பிரச்சனைகள் தொடக்கம் கப்பம் வாங்குவது வரை எல்லாவிதமான  யாழ்தேசவழமைச்சட்டங்களையும் புலிகள் நடைமுறையில் வைத்திருந்தார்கள். இந்தவகை நடைமுறைக்கு பாதிப்பை உண்டுபண்ணியுள்ளது தற்போதைய புலிகள் மீதான தடை.  புலிகளின் தடை குறித்து நாம் சந்தோசமடைவது அல்லது தடையை விரும்புவது இந்த ஒரே விடையம் குறித்தே.


6. மக்களுக்கான கருத்துச் சொல்லும்  அனைத்து வாசல் கதவுகளையும் இந்த நாடுகளிலும் முழுதாக அடைத்து விட்டவர்கள் புலிகள். அதனால்தான் அனைத்து வியாபரிகளும் பத்திரிகையாளர்களும் புலிகளை அண்டிப்பிழைக்கும் நிலையில் இருக்கிறார்கள். என்ன நடக்குமோ என்று பயமுறுகின்ற மனோநிலையிலேயே  புலிகளின் தடைகள் குறித்து எழுதி தமது புலி விசுவாசத்தை புலிகளுக்கு முந்தி வெளிக்காட்டுகிறார்கள். இவர்கள் ஈழமக்கள் குறித்து அக்கறைப்படுபவதாகச் சொல்லிக் கொள்வது எல்லாம் தமது வியாபார நலன் நோக்கியதாகவே இருக்கிறது. புலிகள் மீதான விமர்சனத்தை முன்வைப்பவர்கள் குறித்து  புலி எதிர்ப்பாளர்கள்- துரோகிகள்- புல்லுருவிகள் என்ற பதங்களை இவர்கள் பாவிப்பதனூடாக தமது தீவிரபுலி விசுவாசத்தைக் காட்டி விடுகிறார்கள். இதன் மூலம் இவர்கள் அடைய நினைப்பது தமிழ் மக்களின் விடுதலையை அல்ல.

7. புலிகளின் தடையை ஆதரிப்பதால் அல்லது தடை தேவை என்பதால் நாம் எந்தப் பேயுடனும் சேர தயாராய் உள்ளோம் என்று நீங்கள்; குற்றஞ் சாட்ட முடியும். ஈழத்தில் புலிகளின் சிந்தனையை அழிக்காமல் ஜனநாயகம் பற்றியோ சுதந்திரம் பற்றியோ அல்லது தேசியம் பற்றியோ நாம் பேசிவிட முடியாது. புலிகள் இவை எல்லாவற்றையும் மற்றவர்களுக்கு மறுத்து வந்த தொடர்ச்சி நமது வரலாறாகிவிட்டதை நாம் அறிவோம். இங்கே நான் புலிகளின் சிந்தனை என்று சொல்லிக் கொள்வது குறித்து கவனிக்க வேண்டும். புலிகளும் புலிகளின் சிந்தனையில் யார் இருந்தாலும் நமது எதிர்ப்பு பொதுவானதே. இதில் நீ ஏன் ஈபிஆர்எல்எவ் இனது வன்முறையை எதிர்க்கவில்லை எப்போதும் புலிகள் பற்றி மட்டும் பேசுகிறாய் என்று கேட்டால் என்ன பதில் சொல்லிவிட முடியும்?

8. கனடாவிலும் ஐரோப்பாவிலும் புலம்பெயர்ந்த மக்கள் கூடுதலாக இருப்பவர்கள். இவர்களை கொம்புசீவி விடுவதும் இன்னுமொரு யுத்தம் வரும் அது கடைசி யுத்தம்  என்று கதை விட்டு பணம் பறிப்பதும் புலிகள் தொடர்ந்து செய்து வருவது.ஆனையிறவு யுத்தம் பற்றிய அனுபவம் எல்லோருக்கும் இருக்கும். புலிகளால் தமது படையளவிலோ அல்லது சமூக சூழல் காரணமாகவோ இனியொரு பெரிய யுத்தம்தொடங்கமுடியாத நிலையை மக்களுக்குச் சொல்லிக் கொள்ளப் போவதில்லை. யுத்தமற்ற நிலையில் எந்தத் தமிழ் மக்களுக்கும் புலிகள் வேண்டாதவர்களாகிவிடுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அப்படியொரு நிலையில் அடுத்த கட்டம் என்ன என்பதும் புலிகளுக்கு தெரியாது. அதனால் அந்த நிலையை அவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். குறைந்த பட்சம் புலிகள் அரசு ஒப்பந்தம்  நடைமுறைப்படுத்தினாலே புலிகள் தேவையற்றவர்கள் என்று வந்து விடும்நிலை தான் உண்டு. இந்த நிலையை அவர்கள் ஒருபோதும் சாத்தியப்படுத்தப் போதில்லை. அப்படியொரு நிலை தோன்றக்கூடிய அபாய நிலையில்தான் அல்லப்பிட்டி வங்காலை மக்களின் படுகொலைகள் புலிகளை தமிழ் மக்களிடத்தில் தூக்கிநிறுத்தியது. இதை எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறார்கள் என்று சிந்திக்க மக்களிடம் கொண்டுசெல்ல இன்று யாரும் இல்லை. வெறுமனே உணர்ச்சி வசப்படலிலும் கழிவிரக்கத்திலும் கரைகிறது தமிழ்ப் புத்திசீவிகளின் காலம். இலங்கை அரசோ மற்றும் கருணா அமைப்பினரோ மற்றய மாற்று விடுதலை அமைப்பு என்று சொல்பவர்களோ இந்தப் படுகொலைகளைச் செய்துவிடக் கூடிய தேவையின் சாத்தியம் குறித்து நாம் பேசவேண்டும். அவர்கள் செய்ய முடியாதவர்கள் என்பதல்ல. ஆனால் இந்தமாதிரிப் படுகொலைகள் செய்பவர்களது அரசியல் பின்னணி குறித்து ஆய்வு செய்ய ஆகக் குறைந்தளவு ஒரு பீ~;மரோ கோகர்ணனோ தயாரில்லை.

9. புலிகளிடம் தகுந்தளவு ஊடகபலம் இருக்கிறது. அதைவிஞ்சி புலிகளை வைத்து வியாபாரம் பண்ணுபவர்களிடமும் இருக்கிறது.  தமிழ் மக்களை எந்தவழியிலும் உணர்ச்சி கொள்ள வைப்பதற்கு இவை போதும். இந்த ஊடகங்களைத் தாண்டி நமது மாற்றுச் சிந்தனையாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் சிந்திப்பதில்லை. இன்றைய திருகோணமலையில் நடாத்திய தேவையற்ற விளையாட்டுக் குட்டியுத்தத்தின் தொடர்ச்சி இன்றுவரை எத்தனை தமிழர்களைப் பலியெடுத்து விட்டுள்ளது. தினமும் புலிகளின் குரங்குச் சேட்டையால் ஒவ்வொரு ஊர்களிலும் அப்பாவி மக்கள் பலியெடுக்கப்படுகிறார்கள். சமாதான காலத்தின் ஆரம்பகாலத்தில் புலிகள் மக்கள் படையை உருவாக்கியதன் பின்னணியைப் புரிந்து கொள்ள வேண்டும். பொதுமக்களப் பிடித்து ஆயுதப்பயிற்சி அழித்து விடுவதன் மூலம் தமது படைப்பலத்தைக் கூட்டலாம்  என்று புலிகள் நினைப்பதைவிட மொத்த மக்களையும் மக்களை இராணுவத்தின் எதிரியாக்கிவிடுவதன் மூலம் தமது இருப்பை தொடர்ச்சியாகப் பேணமுடியும் என்பதுவும் யுத்தமற்ற காலத்தில் மக்கள் இராணுவத்துடன் ஐக்கியமாகிடும் தன்மைகள் அதிகமாக உண்டு என்பதை புலிகள் பலசந்தர்ப்பத்தில் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.  அதைத் தடுக்கும் முயற்சியே புலிகளின் மக்கள் படை. அதில் புலிகள் வெற்றியும் அடைந்துள்ளார்கள்.

அந்த வெற்றியின் வெளிப்பாடுதான் முல்லைத்தீவு 61 பெண்கள் படுகொலை. இவ்வளவு யுத்த காலத்திலும் புலிகள் தமது படையணிகளை தோற்றுவித்து பயிற்சி அளித்தவர்கள்தான். யுத்தம் என்று தொடங்கி ஈழத்தின் அனைத்துப் பகுதியிலும் பரவலான யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஒரு வெட்டை வெளியில் அத்தனை தொகை இளம் பெண்களுக்கு பயிற்சி அழித்ததை புலிகளின் தற்கால இராணுவ தந்திரோபாயம் என்று சொல்லாமல் வெறென்ன சொல்வது. ஆகக் குறைந்தளவு விமானத் தாக்குதலுக்கு தப்பிக் கொள்ளும் பங்கர் கூட இல்லாது றெயினிங் கொடுத்தவர்கள் எனில் புலிகள் இந்த விடையங்களில் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். புலிகள் தமது பலவீனங்களின் பின்னால் தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் முஸ்லீம் மக்களையும் கொன்றுகுவித்த சம்பவங்கள் தான் இருக்கின்றது. தாம் தோற்றுப் போக வேண்டிய சந்தர்ப்பம் வந்தால் தாம் முழு இலங்கையையும் அழித்துவிடுவதாக அண்மைக் காலங்களில் அறிக்கை விட்டவர்களல்லவா அவர்கள். இதன்பின்பும் மக்களைப்பற்றி அவர்களின் அழிவைப்பற்றி புலிகளுக்கு அக்றை இருப்பதாகச் சொல்பவர்கள், புலிகளின் தடை ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் எதிரானது என்று சொல்லிக் கொள்பவர்கள் குறித்து ஐயமே மேலோங்கி நிற்கிறது.  கடந்த 10 நாட்களில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுளார்கள். ஆனால் இங்கே தமிழ்த்திருமனங்கள்  எல்லாம் பலாலிக்கு ஃபிளைற் அடிச்ச கனவு கலையாது,  வாழும் வரை போராடு... நமது வெற்றியின் நாளை சரித்திரம் சொல்லும் என்று பாடிக்கொண்டிருக்கிறது. அங்கே அப்பாவி மக்கள்  விளையாட்டுப் பொருளாகி புலிகளின் சுயநலத்திற்காய் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். புலிகளோ நமது தமிழ் மக்களின் கழிவிரக்க மனோநிலையை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் தமது தோல்வியை மறைக்க எவ்வகையிலும் மனிதக் குரூரக் கொலைகளைச் செய்து படமாக்கிவிட்டு மக்களிடம் தாம் கொண்டிருக்கும் ஊடகபலத்திற்கூடாக முன்வைத்து தமது இருப்பின் தேவையை சொல்லிவிடுகிறார்கள். நமது புத்திசீவிகளின் சிந்தனையும் புலிகளின் ஊடகத்தையே பார்த்துக் கவலைகொண்டுவருகிறார்கள். தமது தோல்வியின் ஒவ்வொரு கட்டத்திலும் புலிகள் இதனைச் செய்கிறார்கள். மக்களும் இதனை நம்புகிறார்கள். புலிகளின் பினாமி இராணுவ ஆய்வாளர்களும் பினாமிப் புத்திஜீவிகளும் புலிகள் பாலாலிக்கு விமானத்தாக்குதல் செய்தது புலம் பெயர்ந்த தமிழர்களுக்குக் கிடைத்த நற்செய்தி என்று கதைசொல்லிக் கொண்டிருக்கும் நேரம் இலங்கைஇராணுவம் அல்லைப்பிட்டியிலும் முல்லைத்தீவிலும் குண்டு பொழிந்து கொண்டிருக்கிறது. புலிகளின் அர்த்தமற்ற ஆசைகளுக்கும் அதீத அடாடடித்தனங்களுக்கும் வெற்றிகரமான பின்வாங்கல்களுக்கும் அல்லது அண்டன்பாலசிங்கம் சொன்னது போல் பிரபா சிந்தனைக்கும் உள்ளே இன்று ஆயிரம் வன்னிக்குழந்தைகள் சிங்களக் குழந்தைகள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். புலம்பெயர்ந்த புத்திசீவிகளோ அந்தக்குழந்தைகளின் வாழ்வில் தமது அரசியல் விஞ்ஞாபனம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

10. நமது தமிழ் சமூகத்தின் எதிர்கால  நிலை குறித்து எழுதிவரும் அநேகர் நமது சிந்தனைக்கு அப்பால் கற்பனாமுறையில் உள்ள சொர்க்கம் ஒன்றைப் படைக்க புலிகள் திருந்த வேண்டும் என்கிறார்கள். புலிகளை எதிர்க்க இலங்கை அரசுக்கோ இந்திய அரசுக்கோ ஐரோப்பிய அரசுக்கோ தகுதியில்லை  அதற்கான முழுத் தகுதியும் இலங்கைத் தமிழ் மக்களுக்கேயுண்டு என்கிறார்கள். புலிகளின் செயற்பாடு இலங்கைத் தமிழ் மக்களுக்குள் மட்டும் நின்று செயற்பட்டால் இந்த விவாதம் சரியானது. புலிகள் என்பது மிகப்பெரிய நச்சுவலை. இதற்குள் இருக்கின்ற முகம் பன்முகமானது. யசூசி அகாசி கிளிநொச்சிக்கு அடிக்கடி வந்துபோகிறார். உலகநாடுகள் கிளிநொச்சியில் ஒருங்கிணையுது என்றால், புலிகள் தமிழ்மக்களின் விடுதலைக்காகப் போராடும் அமைப்பு என்று இன்னும் சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. புலிகள் திருந்த வேண்டும் என்று நாம் கனாக் காணுவதிலும் அர்த்தமில்லை. புலிகளுக்கான இந்தியத்தடை இன்றும் தொடருகிறது என்றால் அது ரஜீவ் காந்தி கொலை தொடர்பானது. ஐரோப்பாவிலும் அமெரிக்கா கனடா போன்றவற்றிலும் தடைசெய்யப்பட்டதற்கு இங்குள்ள தமிழர்களின் அழுத்தம் ஒருகாரணமில்லை என்று தட்டையாகச் சொல்லிவிடமுடியாது. முன்னைய காலங்களை விட இந்த அழுத்தங்கள் மிகவும்பலமடங்காகியிருப்பதும் கவனிக்க வேண்டும். பன்முகமாகியிருப்பதை நோக்க வேண்டும். வெறுமனே ஐயோ புலிகளைத் தடைசெய்துவிட்டார்கள் நாம்தான் அதற்கு குரல் கொடுக்க வேண்டும் என்றும் நாம் ஜனநாயக வாதிகளாக இருக்கிறோம் அதனால் அனைத்தையும் கண்டிக்க வேண்டும் என்று நினைத்து புலிகள்  மாற்று விடுதலை இயக்கங்களை அழித்தது கண்டிக்கப்படவேண்டியது. மாற்று விடுலை இயக்கங்கள் மக்களை அழித்தால் அது கண்டிக்கப்படவேண்டியது. புலிகள் மக்கiளைக் கொன்றால் அது கண்டிக்கப்பட வேண்டியது. புலிகளை கனடிய அரசு தடைசெய்தால் அது கண்டிக்கப்பட வேண்டியது. என்று புனித ஜனநாகவாதியாக இருப்பவர்களுக்கு நாம் ஒன்றையும் சொல்லிவிடப் போதில்லை. இருந்து விட்டுப் போகட்டும். புலிகள் ரஜீவ் காந்தியைக் கொண்டால் ஆதரிப்போம் இந்திய அரசு பிரபாகரனைக் கொன்றாலும் ஆதரிப்போம். புலிகள் சந்திரிகாவைக் கொன்றாலும் ஆதரிப்போம். என்று. மாறிச் சொல்லிக் கொண்டிருப்பவர்களும் இவர்கள்தான். இந்த வாய்ப்பாட்டு முறையில் வாழ்வது தானே நமது பண்பாடு. இங்கே பொதுப்புத்தியென்ன புத்திஜீவிதம் என்ன எல்லாத்திற்குள்ளும் எஞ்சிக்கிடப்பது தமிழத்தேசியமும் யாழ்ப்பாணியமும் தானே.

புலிகளைத் தடைசெய்தது தவறு. புலிகளைத் தடை செய்தது மொத்த தமிழ் மக்களுக்குமான பாதிப்பு.புலித் தடை என்பது, தனிப்பட்ட புலியை மட்டும் குறிப்பாக தடை செய்யவில்லை. மாறாக தமிழ் மக்களின் நியாயமான உரிமையையும் மறுதலிக்கின்றது. என்பவர்கள் கீழேயுள்ள கேள்விகளுக்கு ஆம் அல்லது இல்லை என்று மட்டும் சொல்லுங்கள். ஒவ்வொன்றுக்கும் 10 புள்ளிகள். ஆகக் குறைந்தது பரீட்சையில்  ளு சித்தி எடுத்தாலே நீங்கள் சொல்வது சரியாகிவிடும். நாங்களும் உங்களுடன் சேர்ந்து கோசம் போட வருகிறோம்.
   

   


நன்றி " நம்மொழி" இதழ்
2006


No comments:

Post a Comment