Sunday 8 March 2015

கி.பி. அரவிந்தனிற்கு.... அஞ்சலிகள்.


கற்சுறா...

இயற்கை, எத்தனை வழிமறிப்புக்களையும் மீறி.தன் இலக்கை அடையும் அதில் மரணமும் ஒன்றே.
இலக்கியமும் இயக்கமுரண்பாடுபோலவே நீண்ட பகையையும் தொடர் கோபத்தையும் உள்ளடக்கித் தொடர்கிறது. நாம் வாழ்வது என்பது எப்படி இயல்பானதோ அதேபோல் மரணமும் இயல்பானது. ஆனால் மரணம் என்பது வாழ்வின் முடிவல்ல.
அதனால் வாழும் போது முரண்பாடு கொண்டு கருத்து வேறுபாடு கொண்டு வாழ்ந்தவர்களில் ஒருவர் மரணித்த போதும். அந்த முரண்பாட்டை நேரடியாகப் பேசுபவனிடம் அறம் இருக்கிறது என்று நினைப்பவன் நான். எனினும் எவருடைய மரணமும் ஈடு செய்ய முடியாதது என்றபோது எல்லோருக்கும் அது கவலையளிக்கிறது.
அந்தவகையில் கி.பி. அரவிந்தனது மரணம் என்னையும் பாதிப்பிற்குள்ளாக்கியிருக்கிறது. 
ஒரு இயக்ககாரனாய் ஒரு இலக்கியகாரனாய் அவரை நான் அறிந்து வைத்திருக்கிறேன். இது இரண்டிற்கும் அவர் தன் வாழ்நாளைத் தொலைத்திருக்கிறார் என்றும் அறிந்திருக்கிறேன்.
ஆனாலும் அவரை நெருக்கமாக அறிந்த காலங்களில் அருகில் சென்று விடாமல் கொஞ்சம் தள்ளியே இருந்து விடும்படியான கோபத்தை அவர் தந்து கொண்டிருந்தார்.
ஆம். அன்றைய அரசியற் செயற்பாடுகளும் இலக்கியச் செயற்பாடுகளும் பலரை இப்படித் தள்ளியே வைத்திருக்கின்றது. “மௌனம்” இதழ் வந்த காலங்களில் அநாமிகன்(முகிலன்) அண்ணாவுடன் சில நாட்கள் நெருக்கமாகப் பழகியபோதும் கி.பி. அரவிந்தன் அவர்களைக் கிட்ட அணுகியதில்லை. மௌனம் இதழ் அதன் இலக்கிய வடிவமைப்பு பலரை உற்சாகப்படுத்தியது. அதில் நானும் ஒருவன்.
கி.பியின் “முகங்கொள்” கவிதைத் தொகுப்பை 1992 இலக்கியச் சந்திப்பில் வாங்கியதாக ஞாபகம். அதில் பாரீசில் ஒரு அறையில் பலர் வாழும் அகதிகளின் வாழ்வு குறித்த பதிவு என நினைக்கிறேன். (கையில் புத்தகம் இல்லை நினைவில் உள்ளது மட்டும்)
கறிக்கு வதக்கிய வெங்காயம்/
சொக்ஸ்/
கோமணம்/
குசு/
குழைந்து வரும் காற்று,/
என்று பதிவிட்டிருப்பார்.
அங்குதான் தோழர் அருந்ததி அவர்களின் இரண்டாவது பிறப்பு கவிதைத் தொகுதியும் வாங்கினேன். வாங்கிய பின்தான் தோழர் சிவசேகரம் அவர்கள் இரண்டாவது பிறப்பை விமர்சனத்திற்கெடுத்து முற்றுப்புள்ளி அரைக்காற் மாத்திரை பிழை என்று சொல்லிக் கொண்டிருந்தார். டாக்குத்தர்மார் மாறித் தந்த மாத்திரைகளில் தப்பிய எங்களுக்கு தோழர் சிவசேகரத்தின் மாத்திரைகளில் தப்பமுடியாமல் இருந்தது. அருந்ததி தாடியைத் தடவிக் கொண்டிருந்தார்.
கி.பி. அவர்கள் நீண்ட காலத்தின் பின் “கனவின் மீதி” என்று ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டார்.
அது ஈழத்தின் யுத்தகாலம். அவர் ஒரு திசை. நாம் ஒரு திசை. அந்தக் கவிதைத் தொகுதி அவர்மீது என்றுமில்லாத கோபத்தைத் தந்தது. பாதிக்கனவு முன்பு பலருக்கு லண்டன் போவது என்று இருந்தது என்றும் இப்போ திரும்ப நாட்டிற்குப் போகும் கனவே தன்னுடைய மீதிக் கனவு என்றது அந்தத் தொகுப்பு.
அவருடைய இயக்கவாழ்வுக்கும் இலக்கிய வாழ்வுக்கும் உள்மனது எப்போதும் ஒரு கவுரவத்தைக் கொடுத்துக் கொண்டே இருந்தது. நம்மில் எத்தனையோபேர் ஒரு இயக்கத்திலும் ஈடுபடாமல், ஒரு சண்டைக்குள்ளும் மாட்டாமல், ஒரு இராணுவத்தையும் காணாமல் ஈழ அரசியல் பண்ணும் போது அதற்குள் வாழ்ந்து தன்வாழ்வைக் கொடுத்தவர் என்று அறியும் போது இயல்பாய் ஒரு மதிப்பை மனது கொடுத்துக்கொண்டெ இருந்தது. ஆனால் நடக்கும் ஈழ அரசியற் சூதிற்குள் அவர் தன்ன உட்தள்ளியிருந்தார். அதனாலே அவருக்கு அந்த மாதிரி எழுதத் தோன்றியிருக்கும்.  திரும்ப ஊருக்குப் போகும் கனவை தனது மீதிக் கனவாகக் கற்பனை பண்ணியபோது கட்டுக்கடங்கா கோபம் வந்தது. அந்தக்கோபத்தில் அவர்மீது எறியும் ஒரு கல்லாக ஒரு கவிதை எழுதினேன்.

திடப்பட்டுப் போனோம்
வெகுவாய்,
செக்கல் இருட்டில்
கனவுகளை மெய்ப்பித்து.

எம்மீது பழி போடாதிருக்க
பாதிக் கனவை காண்பித்து
தவறினோம்.

அச்சாப் பிள்;ளைகள்.

மீதிக் கனவில்
தின்று,
புணர்ந்து,
குடித்து,
கவிதை எழுதி,
குழந்தைகளிடம் காண்பிக்க
இன்னும் இன்னுமாய் சாகுபடி.

சொன்னா குறை நினைக்க வேண்டாம்.

சொகுசாய் படுத்துறங்கி
சுதிபட்ட பூனை
நெரிபட்டு நெருப்பில் விழ
துடிக்குமா? சொல்.

பின் எதுக்காய்,
கனவும்...
கவிதையும்...
மயிரும்...
மீதியும்...

படு.

மல்லாந்த படுக்கை.

கால்விரிய
பதம்பார்த்து
குறி தள்ளும் நாயே!

தெருக்கரையில்
இன்னும் கறள் ஏறாக் கோதுகளின்
துலங்கல் திடுக்கிட்டு
தூக்கம் கலைகிறது.

தொடர் தூக்கம்
இசைவு
அறுந்து போனால்
கனவொன்று வருமா?
கழுதாய்!

இது அவர்மீது நான் எழுதிய இரண்டாவது விமர்சனக்கவிதை. அவர் எப்போதும் போல இப்போதும் என்னால் மிக நெருங்கமுடியாதவராகவே இருக்கிறார். ஆனால் இப்போது இப்படி எழுதமுடியாது. இரத்தம் முன்பு போல அல்ல நிறம் மாறுகிறது.
கி.பி. அரவிந்தனுக்கு எனது இரங்கல் அஞ்சலிகள்.

யுத்தம் தந்த அச்சமும் ஒவ்வொருத்தர் மீதான மறைகொலை முகமும் பீதியையும் சந்தேகத்தையும் கொண்டிருந்த காலங்கள் இலக்கியத்தைத் தின்று கொண்டிருந்தன.  

No comments:

Post a Comment