Tuesday 24 February 2015

பெயர்க்கப்பட முடியாத மொழியும் அதற்குள்ளான இரண்டு கவிதைகளும்


                                                                       கற்சுறா


மறைக்கப்பட்ட ஆழ் மனதின் இருட்டறையில் நிகழ்த்தப்படும் எண்ணற்ற படுகொலைக் கனவுகளை நாம் செயலற்ற வெற்றுச் செயற்பாடாய் அல்லது வெறும் கனவுலகச் சிந்தனையாய் அர்த்த மற்றதாக்குவதன் மூலம் எம்மிலிருந்து எதுவித வன்முறையும் நிகழாத வண்ணம் காப்பாற்றப்படுகிறோம். மறு முனையில் வெளியுலகின் அதிபயங்கரப் படுகொலைக்கும் உச்சக்கட்டச் சித்திரவதைக்கும் ஒவ்வொரு துளியாய்த் துணையிருக்கிறோம் என்பதை நினைப்பதில்லைபிணங்களின் நடுவில் பிறந்து பிணங்களின் நடுவில் தூங்கும் குழந்தைகளாய் நமது காலம் கழிக்கப்படுவதையிட்டு நாம் ஒரு போதும் கவலைப்படுவதில்லை. மரணத்தை இரசிப்பதும் மரணத்துக்காய் வாழ்வதும் கவிதையாய் இருப்பது போல் மரணத்தை வெறுப்பதும் மரணத்தைக் கொல்வதும் கவிதையாய் இருக்கிறது. இக்கவிதைகள் மரணத்தின் இருவேறுபட்ட புலர் நிலையிலிருந்து உரையாடுகிறது.





உடலின் பன்முக வெளியில் பிரையாசைப்பட்டுப் பறந்து திரியும் எனக்குள் உறவுகளின் கொடி படரச் சிக்குண்ட வார்த்தைகளில் வாழ்வை இழந்து கொண்டிருந்தேன். எனது வார்த்தைகளால் உருவான கேள்விகளுக்கு லினோவிடா எப்போதும் ஒரு சரியான பதிலைத் தந்ததில்லை. உறவற்ற, உறவை பொய்ப்பித்த  ஒரு விசாலப் பெருஞ்சுழியில் அலைதலுற்று தனக்கான உறவின் உச்சக்கட்ட நம்பிக்கையில் மிகுதி அத்தனை உறவின் மீதும்


ஒற்றைச் சொல்லால் பேராணி ஒன்றை அறைந்தாள்.
வாழ்வின் உச்சமெனப் போற்றும்
உனது ஒழுக்கம் கரைந்து
எனது யோனியில் வழிகிறது.
உன்னுடைய தீண்டுதலில் திளைத்து
இருட்டறையின் மோக வாசல் வரை
உன்னோடு ஓடிவரும் எனக்கு
நேர்த்தியாய்ப் புணர்வது எப்படி என்பதைச் சொல்.
சாரையாய்ச் சுற்றி ஊர்ந்து வரும் உன் கைகள்
என் மார்புக்குள் நீந்தும் சிலுவையில் தரிக்கிறது.
அது ஒன்றுமில்லை
யேசுவில் அறையப்பட்ட சிலுவை என்று நான் சொன்னதும்
உனது ஒழுக்கம் ஒரு முறை உன்னைச் சுருக்கியது.
நிச்சயிக்கப்பட்ட வாழ்வில்
நிச்சயிக்கப்பட்ட புனிதங்களுடன்
காலந்தள்ளும் உனக்கு
என்னுடைய கலவிக் கூச்சல் இடைஞ்சலாய் எப்போதும் இருக்கட்டும்.

என்று சண்டையிட்டாள்.


லினோவிடாவுக்கு வயது அப்போது பன்னிரண்டு இருக்கும். அவளை நான் பார்த்த போது பாரீஸ் நகருக்கும் அவளுக்கும்
எவ்விதத் தொடர்புமற்ற ஒரு சின்னஞ் சிறுமியாக யாரோ ஒரு முதியவனின் கண்காணிப்பில் தெருவோரம் கீறிய சதுரக் கோடுகளுக்குள் கால்களை விரித்துப் பாய்ந்து பாய்ந்து விளையாடுபவளாகவும் அதற்குள்ளே வாழ்பவளாகவும் இருந்தாள். அவளின் ஆரம்ப நாட்களில் தனது உணவுக்குரிய பிரச்சனைகளை அல்லது பதிலீடைத் தேடுவதில் அதிகம் அவள் சிந்தித்ததாகத் தெரியவில்லை. கை நீட்டிப் பிச்சை கேட்பது, கிடைக்காத போது கடைகளில் புகுந்து சாப்பிடுவது என்பதற்கப்பால் அவளுக்கு குளிர் மட்டுமே கொஞ்சம் கரைச்சல் கொடுப்பதாக இருந்தது

அதிகாலை ஐந்தரை மணிக்கு நான் வேலைக்குப் போகும் போது லினோவிடா அந்த முதியவனின் போர்வைக்குள் புகுந்து கிடந்து தூங்கிக் கொண்டு இருப்பாள். லினோவிடாவுக்கும் அந்த முதியவனுக்கும் உள்ள உறவு முறை என்பது அக்காலப் பொழுதில் தங்கியிருத்தல் என்பதாகத் தான் இருக்க வேண்டும். ஏனெனில் கிழவனை விட்டு பிரிந்து வந்ததில் தனக்காகவோ அல்லது கிழவனுக்காகவோ அவள் கவலைப்பட்டது கிடையாது. என்னதும் லினோவிடாவினதும்  எந்தவொரு உரையாடலிலும் அந்தக் கிழவனைப்பற்றி அக்கறைப்பட்டுக் கதைப்பதில்லை. கிழவனை யாரென்று கூடச் சொல்லவில்லை

இங்கே அவசியப்பட்டு யாரையும் நினைவுபடுத்திக் கொள்ளத்தேவையில்லை

ஒரு புன் சிரிப்பில் மறந்து போகக் கூடிய அளவில் தானே நமது வாழ்வு. இதற்கேன் அவசியமில்லாத நினைவுச் சுமையும்  தேவையற்ற ஒரு பாசாங்குப் பேச்சும்
என்று சட்டென்று நிறுத்தினாள்.

இப்படி என்னுடன் உரையாடும் லினோவிடா

மரணிக்கும் போது நிகழ்த்திய அவளுடைய உரையாடலில் எங்கேனும் மரணம் பற்றி எதுவுமே குறிக்கப்படவில்லை. வாழ்வியலின் இன்பங்கள், அலங்காரங்கள், கிளர்ச்சிய+ட்டும் சோடனைகள் என்று வியாபித்திருந்தது. மரணத்துக்கான ஒருவித வாசனையும் இருக்கவில்லை. கவிதையைப் போல் ஓடி வரையப்பட்ட அந்த உரையாடல் என்னை தனக்குள் பொத்திக் கொண்டது. அங்கு எனக்காக மறைத்து வைக்கப்பட்ட அத்தனை இன்பங்களிலும் என்னைக் கிடத்தி கிளர்ச்சி பொங்க மிதந்து கொண்டிந்தேன்.

ஒரு ஆனந்தக் கூத்தாடியின்
மனம் லயிக்கப்பட்ட இடம் வரைக்கும் சென்று என்னைப் பூசித்தேன்.
மிகவும் அற்புதமான தருணங்களில் எனது உடலின் ஒட்டுமொத்த இன்பத்தையும் தரிசித்து
மவுனத்தை உடைத்த எல்லையற்ற கற்பனைத் திடலில் நான் மூழ்கடிக்கப்பட்டு
கொஞ்சமாக என்னை ஆசுவாசப்படுத்தினேன்.
மவுன மொழி பேசக் கூடிய உடலின் பகுதி என்று என்னில் இருப்பதை நான் வெறுக்கிறேன்.
வாய் மொழியின் ஓசையைப் போலவே எனது உறுப்புக்களும் என்னுடன் எப்போதும் பேசக் கூடியவை
அதற்கான மொழியுடன் பரிச்சயப்பட்ட எனக்கு
குதிக்கால் கிளம்பும் ஆசையை ஊட்டி அவை தம்மோடு வளர்தெடுத்தன.
செப்பனிடப்பட்ட உறுப்புக்களின் துடியாட்டம் எத்தருணமும்
என்னைக் கிளர்ச்சியில் வைத்திருந்தன.


துரோகியாக்கிக் கொல்லப்பட்ட யமுனாவின் மரணமும்கள்ள மவுனத்தின் பின்னிருந்து எழும்பும் வன்முறையும். 


மிகவும் நேர்த்தியானது எனக் குறிக்கப்பட்ட வாழ்வினது
ஒவ்வொரு கோணங்களில் இருந்தும் தொடருகின்ற
வார்த்தைகளின் குறியானது
எமக்கு நீண்ட பெரும் குருதித் தொடர்ச்சியாகவே இருந்து வந்திருக்கின்றது.
பெரும் கவனம் எடுத்து விலத்த முயன்றாலும் முடிவதில்லை.
எம்மைப் பிரட்டிப் போட்டு  எம்முன் பாய்ந்து தன்னை வியாபிக்கின்றது குருதி.
இப்போதோ எமது வாழ்வினுள் வாழுவதை விட வார்த்தைக்குள் வாழவே முன் நிற்கிறது.
குருதி சிவப்பானது என்பதை மறுத்து எம்முன் பச்சையாய்
பலவர்ண வெளிச்சங்களுடன் உள்ளுர ஊர்ந்து செல்லும் குருதி
உடலை நனைத்து ஈரமாய் வைத்திருக்கிறது.
குருதி ஈரம். குருதி பசுமை. குருதி குளிர்மை
என்பதை இரசித்து முன்நிறுத்தும் நான்
மறுகணம் அதன் மறுமுனையில் இருந்து
குருதியை, குருதியின் வெப்பத்தை, குருதியின் பயமூட்டும் கொடுஞ் சிவப்பு வர்ணத்தை,
குருதியற்று உடல் வாழ முடியாது போகும் கோர நிலையை எதிர்க்கிறேன்.


எப்படியும் எதையும் ஒற்றை விம்பமாய் வரிந்து அழிச்சாட்டியம் காட்டி சும்மா சும்மா சொல்லிக் காட்டுவதை விட 

செயல் அதுவே சிறந்த சொல் 

என்பது போல் கண்ணைக் கட்டிப் போட்டுப் படாரெனச் சுட்டாள்

சூடுக்கும் சாவுக்கும் எந்த இடைவெளியும் இருந்ததில்லை. ஒரு துடிப்பும் தெரியவில்லை
வழமையைப் போல் எங்களிடம் அமைதியிருந்தது
அவர்கள் சொன்ன நியாயம் இருந்தது
யமுனாவை பிடரியில்  பிடித்து வைத்திருந்தவள் மெதுவாய்த் தரையில் கிடத்தினாள். நாங்கள் எந்த ஒரு சொல்லையும் அவளுக்குப் பதிலாகச் சொல்லவில்லை. அவளைப் போலவே நாங்கள் கடவுளைத் தியானிக்கவில்லை. எமக்கான நியாயம் அவர்களிடம் இருந்தது. யமுனாவின் பேத்தியோ எமக்குப் பயமூட்டும் படியான வார்த்தைகளைச் சொல்லி அழுதுகொண்டிருந்தாள் யமுனாவைத் தூக்கி தன் மடியில் வைத்து விட்டு அவளின் குருதி பட்ட மணலை  அள்ளி பிசைந்து கொண்டிருந்த கையைத் தூக்கி வானத்தை நோக்கி உயர்த்தி  

என் தாயில்லாப் பிள்ளையை தலைச்ச ஆம்பிளையை பொட்டைக் கள்ளனள் சுட்டுப் போட்டாங்களே என்று மட்டும் சொல்லிக் கத்திக் கொண்டு இருந்தாள்.

புயல் அடங்கிய வெளியின் மேற்பரப்பில் ஊறி
மெலிதாய் பறந்தது குருதி மணல்.
ஒவ்வொருவர் மனத்திலும் பதிந்த
உண்மையை மூடி
இன்னொரு கதை எழுதியது.
யுத்தத்தின் மீது சத்தியம் செய்த புதல்வர்கள்
தமது துப்பாக்கிகளைத் தூக்கி
பெண்களின் முலைகளைத் திருகினார்கள்.
வார்த்தைகளை இழந்த பெண்களோ
மௌனம் குருதியில் உறைய
வாழ்வை அழிக்கிறார்கள்
பெண்ணுடல் மீதெங்கும் விடுதலை


மண் மணக்கும் காட்டு மழையில் ஊறி, விரக வெடில் பாய என்னைத் தொட்டு முகர்ந்து மேவி வளரும் கொடியே! உன் நுனி தீண்டி நுனி தீண்டிப் பிளவுறும் என்னுடற் கொடியில் எத்தனை கோடுகள். சிதிலமெனப் பின்னிக் குறுக்கு மறுக்காய் கால்கள் வளர்ந்தன. கால்களை மறந்தன தெருக்கள். குடிகாரத் தெருவின் எஞ்சிய பொழுதையும் ஞாபகம் காட்டியது குஞ்சுகளை நடத்திப் போன ஒரு குழந்தை வாத்து. பெருந்தெருவின் இரைச்சலை நிறுத்தி வேடிக்கை பார்த்தது குஞ்சு. மரணத்தின் விசாலம் கவ்வாதிருக்க கவனமாய் வேவுபார்த்து வீதியைக் குறுக்கறுக்கும் பாவனையில்  ஒரு கணம் தரித்திருந்தது போல் காட்டாப்புக் காட்டி நேரே குறுக்கறுத்து தினாவெட்டாய் நடந்தது

எப்பொழுதும் நீரற்று ஓடும் புழுதி ஆற்றின் மேற் பரப்பில் உடலைச் சிலிர்த்துப் படுத்திருந்தேன்.



கண் எதிரே கடல்.
ஆழப் புதைந்தெழும் மீன் தடவிய நிலம்
கால்களில் மிதிபடக் கூசியது
மெல்ல மெல்லக் கரையை விடுகிறது கடல்.
மீள மோதும் காலலைகளைப் பிடியெனப் பற்றி விலகாதிருக்க
நுழைந்து அரிக்கிறது நுரை.
இன்னுமென்ன வெட்கம்.
புரட்டிப் பார்த்தால்
கால்களின் கீழே கடல்கள்.

கால்களின் கீழே தீவுகள்.

"மற்றது" (2003)இதழ்

No comments:

Post a Comment